Headlines News :
முகப்பு » , , , , , » மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன்

மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன்

ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான  சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது.

உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள்,  சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை.

அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அறிஞர்கள்.

அதிலிருந்து பலர் பாளி மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். முதன் முதலில் 1837 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோதும் அதன் பின்னர் அதில் உள்ள குறைகளின் காரணமாக இன்னும் சிலரால் வெவ்வேறு காலங்களில் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இறுதியில் 1908 ஆம் ஆண்டு வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஜேர்மன் மொழிபெயர்ப்பு பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பே இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியாக உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியும் கூட.

1877 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் சிங்களத்தில் வெளிவந்தது. 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார். ஆனால் டேர்னரின் பிரதி எவ்வாறு பொதுவில் எற்றுக்கொள்ளப்படவில்லையோ அதுபோலவே அதை ஆதாரமாகக் கொண்ட இவர்களின் பிரதியும் பொதுவில் சிங்கள வரலாற்று அறிஞர்களால் மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆனால் மிகச் எனது தேடல்களில் போது புதுத் தகவல் ஒன்றை சமீபத்தில் கொண்டுபிடிக்க முடிந்தது. அதாவது முதன்முதலில் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டது இலங்கையிலோ இலங்கை மொழியிலோ இல்லை. தாய்லாந்தில் சியாமிஸ் மொழியிலேயே மொழிபெயர்க்கபட்டிருக்கிறது என்கிற தகவல் தான் அது. அதை தனியான கட்டுரையாக பின்னர் தருகிறேன்.

இந்த வரிசையில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன என்பது தான் இக்கட்டுரையின் அடிபட்டை நோக்கம்.

மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைத் தவிர வேறெந்தத் தொகுதியும் தமிழில் மிகச் சமீபகாலம் வரை வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த முதலாவது தொகுதியை மாத்திரம் ஐந்து வெவ்வேறு நபர்களால் கொணரப்பட்டிருக்கிற போதும் அவை எதுவும் முழுமையானவை அல்ல. அவையும் கூட உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. சுருக்கிய பொழிப்புரையாகவோ, அல்லது சொந்த விளக்கவுரையாகவோ, புதினக் கதைகளாகவோ அமைந்துள்ளவை.

தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். 

அவ்வாறு இதுவரை தமிழில் வெளிவந்த நூல்களை இனி பார்க்கலாம்.

மகாவம்சம் – சங்கரன்  – 1962

இன்று நம்மிடையே தமிழில் காணக்கிடைக்கிற முதல் பிரதி 1962 ஆம் ஆண்டு “மகாவம்சம்” இலங்கைத் தீவின் புராதன வரலாறு என்கிற தலைப்பில் சங்கரன் வெளிக்கொணர்ந்த நூல் பிரதியே. சென்னையில், மல்லிகை வெளியீடாக 410 பக்கங்களில் இது வெளிவந்திருக்கிறது.  இப்பிரதியில் மகாவம்சத்தின் மொத்த விபரங்களும் வெளியாகவில்லை. ஆனால் சுருக்கிய விபரங்கள் இதில் அந்தந தன இலக்கங்களின் பிரகாரம் வெளியாகியுள்ளதைக் காணலாம். தனக்கு பாளி மொழி தெரியாது என்றும், இலங்கை சர்க்காரால் அதிகாரபூர்வ நூலாக வெளியிடப்பட்ட வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஆங்கிலப் பிரதியிலிருந்தே தமிழ்படுத்தியுள்ளேன் என்று சங்கரன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஈழத்தின் கதை – கே.வி.எஸ்.வாஸ் – 1959

1956 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பௌத்தம் மீழெழுச்சி கொண்ட காலத்தில் மீண்டும் மகாவம்சக் கதையாடல் களத்துக்கு வந்த காலம். அதே காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆனந்தவிகடனில் கே.எஸ்.வாஸ். ஈழத்தின் கதை என்கிற தலைப்பில் தொடராக ஒரு புதினத்தை எழுதிவந்தார். மகாவம்சம், ராஜாவலிய போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு அது எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்ட போதும் அது மகாவம்ச சாரத்தை அடியொற்றி ஜனரஞ்சகப்படுத்தி எழுதப்பட்ட புதினக்கதை என்று கூறிவிடலாம். 1959இல் இது 260 பக்கங்களில் நவலட்சுமி புத்தகசாலையின் வெளியீடாக வெளிவந்தது. முதலாவது அத்தியாயத்தின் தலைப்பே “சிங்கன் பிறந்தான்” என்று தொடங்கும். அதேவேளை கல்கி கிர்ஷ்ணமூர்த்தி எழுதிய அணிந்துரையின் அடியில் அது 1950 இல் எழுதப்பட்டதாக காணபடுகிறது. இந்நூல் அதன் பின்னர் பல்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறது.


மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் – கலாநிதி க.குணராசா – 2003

செங்கை ஆழியான் என்கிற பெயரில் ஏராளமான நூல்களை எழுதிய எழுத்தாளர் க.குணராசா அவரது சொந்த பதிப்பகமான கமலா பதிப்பகத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்த 150 பக்கங்களைக் கொண்ட நூல் இது. அந்த நூல் மகாவம்சத்தின் உள்ளடக்கங்களை சுருக்கமாக தன்நுணர்தலின் அடிப்படையில் சுவாரசியமாக தர முயற்சிக்கப்பட்ட நூல் எனலாம். புனைகதைத் துறையிலும் அவருக்கிருந்த அனுபவத்தாலும் ஆளுமையாலும் மகாவம்சத்தையும் சுருங்க சுவாரசியமாக தர முற்பட்டிருக்கிறார். அந்நூலின் ஆரம்பத்திலேயே அவர் தந்திருக்கிற உசாத்துணை நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது அது மகாவம்சத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட நூல் இல்லை என்பது இன்னும் ஊர்ஜிதமாகும். பதிப்புரையிலேயே ஒப்புக்கொண்டதுபோல  போல அது “இலங்கை சரித்திரம் குறித்து சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறும் நூல்”. 

இதைவிட அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூளவம்சத்தையும் தமிழில் தந்திருக்கிறார். அவரின் “சூளவம்சம்” 2008 ஆம் ஆண்டு வெளியானது கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. ஆங்கில சிறிய எழுத்துக்களில் மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. கி.பி 362 இலிருந்து 1815 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. குணராசா இதையும் தன்முனைப்பில் மிகச் சுருக்கிய அறிமுகத்தையே செய்திருக்கிறார். ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்கவுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன.

சூளவம்சம் என்கிற பேரை அதை முதன் முதலில் தொகுத்த கைகர் வைத்த பெயரேயோழிய அப்படியொன்று இருந்ததில்லை. மகாவம்சத்தை அவர் தொகுத்து முடித்த பின்னர், எஞ்சிய காலத்தை பின் வந்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த பிக்குமார்களால் எழுதிமுடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஒன்றாக்கிய பொது அவர் வைத்த பெயரே சூளவம்சம். இந்தப் பிரதியை தவிர மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியானது வேறெவரும் வெளிக்கொணர்ந்ததில்லை.


மகாவம்சம் – உதயணன்  – 200?

உதயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஜனரஞ்சக வரலாற்று புனைகதை எழுத்தாளர் எனலாம். அவ்வாறு ஏராளமான ஏராளமான அவர் எழுதியிருக்கிறார். மகாவம்சத்தில் உள்ள கதைகளையும் அவர் தன்னார்வத்தில் சுவைபட புதினக் கதையாக எழுதிருக்கிறார். அதுவும் இரண்டு தொகுதிகளாக கிடைக்கின்றன. முதலாவது தொகுதி 438 பக்கங்களிளும் இரண்டாவது தொகுதி 402 பக்கங்களிலும் சேர்த்து  மொத்தம் 90 அத்தியாயங்களாக வெளியிட்டிருக்கிற போதும் மூல மகாவம்சத்தின் அத்தியாயங்களுக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவர் மூல மகாவம்சத்தின் உள்ளடக்கத்தையும் முழுமையாக புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு அந்நூலின் முன்னுரையில் “வட பாரதத்தினனான விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தை துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மண்ணுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர்” என்கிறார். ஆனால் மகாவம்சத்தின்படி விஜயன் மணமுடித்த பாண்டிய இளவரசிக்கு எந்த வாரிசுகளும் பிறக்கவில்லை என்கிறது. இப்படியான அடிப்படையான தகவல்களில் அவர் தவறிழைத்திருக்கிறார் என்பதை அவரின் முன்னுரை விளக்கத்தில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இதைத்தவிர அவர் மகாவம்சத்தின் கதைகளில் இருந்து துட்டகைமுனுவின் தாயாரை கதாநாயகியாகக் கொண்டு “விகாரமகாதேவி” என்கிற 1028 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலையும் 2015ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் “சிங்களத்துப் புயல்” எனும் 200 பக்க நாவலொன்றையும் 2012 இல் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் ஒரு தடவை இலங்கை அரசனின் படையெடுப்பில் பாண்டிய நாடு கைப்பற்றப்பட்டதாக பதிவுண்டு. 1166 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்வோடு ஒட்டிய தகவல்களைக் கொண்டு அவர் ஒரு புனைகதையை ஆக்கியிருக்கிறார். இக்காலப்பகுதியானது மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூலவம்சமே பதிவு செய்திருக்கிறது. அதேவேளை தனது முன்னுரையில் பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரிகள், சதாசிவ பண்டாரத்தார் ஆகியோரின் நூல்களில் இருந்த தகவல்கள் இந்நூலுக்குப் பயன்பட்டதாக குறிப்பிடுகிறார் அவர். 

மகாவம்சம் – ஆர்.பி.சாரதி – 2007

ஆர்.பி.சாரதி பல நூல்களை மொழிபெயர்த்தவர். கொடோவே பலரின் வாழ்க்கை சரிதங்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்ட ஒரு எழுத்தாளர். அவர் 2007 ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நூலே இந்த “மகாவம்சம்”. ஆனால் இந்த நூலும் மகாவம்சத்தை சுருக்கமாக 238 பக்கங்களில் விளக்கமுயன்ற  ஒரு சாராம்ச நூலே. மூல நூலின் அதே 37 அத்தியாயங்களைக் கொண்டிருந்தாலும் இந்த சாராம்ச சுருக்க நூலில் செய்யுள் இலக்கங்கள் எதுவுமின்றி நிறைவடைந்துவிடுகின்றன.

மகாவம்சம் : ஸ்ரீலங்கா வரலாறு – சாந்திபிரியா – 2008

இந்த நூலை எழுதியவரின் உண்மைப் பெயர் ஜெயராமன். ஒரு ஓய்வு பெற்ற அரச ஊழியர். பவந்த பெரேரா என்கிற ஒரு சிங்கள நண்பரின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த நூலை எழுதி முடித்ததாக அந்நூலில் குறிப்பிடுகிறார். மூல மகாவ்மசத்தின் அதே 37 தொகுதிகளைக் கொண்ட 344 பக்க நூலாக இது காணப்படுகிறது. நூல் வடிவில் அமைந்திருந்தாலும் ஒரு மின்னூல் (ebk) வடிவித்திலேயே இது கிடைத்திருக்கிறது. அச்சில் பதிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணவில்லை. எவ்வாறாயினும் இதுவும் ஏனையவற்றைப் போல மிக சாரம்சப்படுத்தப்பட்ட ஒரு பிரதியாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி அதன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது இயந்திர மொழிபெயர்ப்பின் வாடை தெரிகிறது. பல சிங்கள கலைச்சொற்களை கூகிள் மொழிபெயர்ப்புகளின் போது தருகிற பிழைகளை அப்படியே காணமுடிகிறது. விகாராக்கள், தடுசேனா (Dhatusena), தூபவம்சா (Thupavamsa), ததுவம்சா, (Dhatuvamsa), வில்ஹம் கீஜர் (Wilheml Geiger), யக்கா இனத்தினர் போன்ற சொற்களை உதாரணத்துக்குக் குர்பஈடலாம்.

மகாவம்சம்- சிங்களர் கதை – எஸ்.பொ, 2009

ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. சிங்கள ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் எவருக்கும் புரியும். அந்த ஐந்து தமிழ் பிரதிகளில் ஓரளவு தேறிய பிரதி என்றால் அது எஸ்.பொ. அவர்களின் “சிங்களர் கதை” என்கிற பிரதி எனலாம். அதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால் குறைந்தபட்சம் மகாவம்ச மூலப்பிரதியிலுள்ள செய்யுள்களின் அதே இலக்கத்தொடர்களுடன் அது ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதே. அதேவேளை அவரின் சொந்த அரசியல் நம்பிக்கைகளை அதில் புகுத்தியிருப்பது அதன் பாதகங்களில் ஒன்று. அதன்படி மகாவம்சத்தின் மீது வினையாற்றுபவர்கள் ஈற்றில் எஸ்.பொவுக்குத் தான் வினையாற்ற நேரிடும். மூல மகாவம்சத்தின் மீது வினையாற்றுவதற்கான வாய்ப்பு அற்றுப் போய் விடுகிறது. மேலும் மூல மகாவம்ச பிரதியுடன் பார்த்தால் இதுவும் சாரம்சப்படுத்தப்பட்ட பிரதியே.

இதுவரை எந்தப் பிரதியும் பாளி, சிங்களம், ஆங்கிலம் என எந்த மொழியிலிருந்தும் தமிழ் மொழிக்கு முழுமையான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்ததில்லை. மேற்படி பிரதிகளும் கூட கைகரின் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டவை.

ஈற்றில் தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை.

இதைவிட தமிழில் வெளிவந்த மகாவம்சத்தோடு தொடர்புடைய சில நூல்களையும் இங்கே குறிப்பிட முடியும்.

  • “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத் தன்மை”, வில்ஹெம் கைகரின் மகாவம்சத்தின் முன்னுரை விரிவான ஒன்று. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அதனை மொழிபெயர்த்து 2002இல் வெளியிட்டார்.
  • “எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்” என்கிற நூலை கலாநிதி ஜேம்ஸ் டீ இரத்தினம் ஆற்றிய உரையொன்றை எ.ஜே.கனகரட்னா தமிழில் மொழிபெயர்த்து 1981 இல் ஒரு நூலை வெளிக்கொணர்ந்தார். மகாவம்சத்தில் கூறப்படுகிற எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவின் சமாதியாக மாற்றுகிற மோசடியை எதிர்த்து ஆதாரங்களுடன் தர்க்கிக்கிற முக்கிய நூல்.
  • “கமுனுவின் காதலி” என்கிற ஒரு நாவலை மு கனகராசன் எழுதி 1970 இல் வெளியிட்டார். மகாவம்சத்தில் துட்டகைமுனு பிரதான கதாநாயகன். பிரதான வில்லனாக எல்லாளனை சித்திரித்திருப்பார்கள். வயதான எல்லாளனுடன் போர்புரிந்து துட்டகைமுனு வென்றாதாக அது கூறுகிறது. அந்த எல்லாளனின் மகளை துட்டகைமுனு காதலித்ததாக ஒரு வாய்மொழி வரலாறு உண்டு. அதையே கனகராசன் ஒரு நாடகமாக எழுதி அதை நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளைத் தவிர அடுத்த மூன்று பாகங்கள் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை.

என்.சரவணனின் - 6வது தொகுதி

முதற்தடவை உள்ளதை உள்ளபடி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது என்.சரவணனால் மொழிபெயர்க்கப்பட்ட 6வது “மகாவம்சம்” தொகுதியாகும். 1978-2010 காலப்பகுதியைக் கொண்டிருக்கிற இந்த மொழிபெயர்ப்பானது மகாவம்ச வரலாற்றில் உள்ளது உள்ளபடி எந்தவித மேலதிக உட்புகுத்துகையின்றி அப்படியே கொண்டுவரப்பட்ட முதல் மகாவம்சப் பிரதி எனலாம். அதுபோல வரலாற்றில் மூலமொழியில் எழுதப்பட்ட பிரதியிலிருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட முதல் தொகுதியும் இதுவேயாகும். கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகாவம்சக் குழுவினால் 2012 ஆம் ஆண்டு இறுதி பாகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழன் பத்திரிகையில் தொடராக கடந்த ஆண்டு வெளியானது. பின்னர் குமரன் பதிப்பகம் சென்ற ஆண்டு மொத்தம் 700 பக்கங்களில் பெரிய நூலாக வெளியிட்டது.

இதற்கு முன்னர் தமிழில் கொணரப்பட்ட மேற்படி மகாவம்சத்தின் முதலாவது தொகுதியின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியிலான வில்ஹெம் கைகரின் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

சிங்களத்தையும் தமிழையும் அரச மொழியாக அரசியலமைப்பு ரீதியில் அதிகாரபூர்வமாகக் கொண்ட அரசு; இலங்கையின் வரலாற்று நூலை தமிழில் இதுவரை வெளியிட்டதில்லை என்பதை கவனிக்குக. தற்போது கலாசார திணைக்களம் தொடங்கியிருக்கும் மொழிபெயர்ப்பு முயற்சியும் முதலாவது தொகுதியைத் தான் செய்யத் தொடங்கியிருக்கிறது. அது முடியவே இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். அதன் பின்னர் அடுத்து ஐந்து தொகுதிகளும் எமது வாழ்நாளுக்குள் வெளிவருமோ என்னவோ.

மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் ஒவ்வொன்றும் விரிவாக ஒப்பிட்டு ஆராயப்படவேண்டியவை. இங்கே அதற்கான அறிமுகத்தை மட்டுமே செய்திருக்கிறேன்.

இதுவரை எந்தெந்த  மொழிகளில் முதன் முதலில் மகாவம்சம் வெளியானது என்று சேகரித்த பட்டியல் இது.

  • மொழி ஆண்டு
  • சியாமிஸ் (தாய்லாந்து) 1796
  • லத்தீன் 1826
  • ஆங்கிலம் 1837
  • சிங்களம் 1877
  • ஜேர்மன் 1905
  • இந்தி 1942
  • நேப்பாளி 1950
  • தமிழில் 1962
  • பெங்காலி 1963
  • சமஸ்கிருதம் 1971

நன்றி - தினகரன் - சாளரம் - 12.10.2025



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates