Headlines News :
முகப்பு » , , , , , » 71 ஏப்ரல்! கிளர்ச்சி, எழுச்சி, வளர்ச்சி! - என்.சரவணன்

71 ஏப்ரல்! கிளர்ச்சி, எழுச்சி, வளர்ச்சி! - என்.சரவணன்

சோவியத் புரட்சியின் ஆரம்பம் அரோரா கப்பலின் பீரங்கிக் குண்டிலிருந்து ஆரம்பித்தது. 71 எழுச்சி வெல்லவாயவிலிருந்து ஆரம்பித்தது. 1818 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட அதே ஊவா பிரதேசத்தில் வெள்ளவாய போலிஸ் நிலையத்தின் மீது திட்டமிடப்பட்டபடி அந்தத் தாக்குதல் 1971 ஏப்ரல் 5 அன்று ஆரம்பமானது.

சுதந்திர இலங்கையின் முதலாவது ஆயுதப் போராட்டம் அது. இலங்கையின் வரலாற்றில் வடக்கிலும் தெற்கிலும் ஆயுதப் போராட்டத்துக்கு தள்ளப்பட்ட இரு தரப்பினரும் அரச பயங்கரவாத போக்கின் அடாவடித்தனங்களில் இருந்து பிறந்தவை. 

ஜனநாயக வெளியில் கிடைக்கிற அரசியல் அவகாசத்துக்குள் அரசியல் செயற்பாடுகளை செய்யவிடாது இயக்கங்களைத் தடை செய்தததன் விளைவே இரகசிய தலைமறைவு அரசியலுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட அரசியலாகும். ஜேவிபி 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடத்திய மாபெரும் கூட்டத்தைக் கண்டு பயந்தது சிறிமா அரசாங்கம். அக்கூட்டத்தில் ஜேவிபியின் தலைவர் ரோகண விஜேவீர ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஆற்றிய உரை அக்கூட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. அது ஒரு வரலாற்று சிறப்பம்சம் கொண்ட உரை. இந்த கூட்டம் நடத்தப்பட்டு 20 நாட்களில் அதாவது மார்ச் 16ஆம் திகதி சிறிமாவோ அரசாங்கம் ஜேவிபி மீதான தடையை பிரகடனப்படுத்தியது.

சிறிமா அரசு தடை செய்ததன் விளைவு 71' ஏப்ரல் கிளர்ச்சி. அதுபோல 1983 கலவரங்களுக்கு ஜேவிபியே பொறுப்பு என்று குற்றம்சுமத்தி ஜேவிபியை  தடை செய்து தலைமறைவுக்கு தள்ளியதன் விளைவு 87-89 கிளர்ச்சிகள்.

71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற  எடுக்கப்பட்ட முயற்சி அது. இளைஞர்கள் பலர் மோசமாக அரச பயங்கரவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட அக்கிளர்ச்சி நிகழ்ந்து நேற்றைய தினத்துடன் 54 ஆண்டுகளை எட்டிவிட்டன. 

பாம்பரிய இடதுசாரிகளின் வீழ்ச்சி 

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலங்கையின் வரலாற்றில் முற்போக்கு பாத்திரம் வகித்து வந்த இடதுசாரிகட்சிகள் ஒரு காலக்­கட்டத்தின் பின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை காரணிகளாலும் துண்டு துண்டாக பிளவுபட்டன. ஆளும்கட்சிகளோடு சேர்ந்து கரைந்தே போயின. 

1960இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிரு­ந்த வேலையில்லாத் திண்டாட்டப் பெருக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, விவசாயிகளின் வருமானத் தேக்கம், சம்பளக் குறைப்பு போன்ற உடனடிக்காரணங்கள் அரசை எதிர்த்து நிற்கின்ற அணியினை உருவாக்கியது. இவ்வணிக்கு ஜே.வி.பி. தலைமை கொடுத்தது.


ஜே.வி.பி.யின் உருவாக்கம் 

சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1966இல் ரோஹண விஜேவீர உள்ளிட்ட குழுவினர் வெளியேற்றப்பட்டனர். ஏற்கெனவே அக்கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் மாணவர் பிரிவை கட்டியெழுப்பி அதனை தலைமை தாங்கி நடத்தி வந்த விஜேவீர, அம்மாணவர் பிரிவில் அங்கம் வகித்த இளைஞர்களைக் கொண்டு கட்சிக்கும் தெரியாமல் இரகசிய அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். குறிப்பாக அரசியல் கலந்துரையாடல் நடத்தச் சென்ற இடங்களில் பண்ணைகளை அமைத்தார். பின்னொரு காலத்தில் ஆயுதங்களை அங்கு களஞ்சியப்படுத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை கட்சித் தலைமை அறிந்தது. இதனால் விஜேவீரவுக்கும் சண்முகதாசனுக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு இறுதியில் விஜேவீரவின் அரசியல் பணிகள் கட்சிக்குள் தடைசெய்யப்பட்டதுடன் முழுநேர ஊழியத்திலிருந்தும் விலக்கப்பட்டார். இறுதியில் கட்சியின் அனுமதியின்றி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி டட்லி-செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஊர்வலத்தில் கலந்து கொண்டதன் காரணமாக கட்சியிலிருந்து விஜேவீர விலக்கப்பட்டார். 

விலக்கப்பட்ட விஜேவீர தன்னுடன் கட்சியிலிருந்த தோழர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு 1967இல் ஜே.வி.பி.யை (மக்கள் விடுதலை முன்னணியை) உருவாக்கினார். 


ஏனைய இடதுசாரிக் கட்சிகளோடு ஒப்பிடும் போது ஆயுதப் போராட்டத்தை முற்றாக ஜே.வி.பி. மட்டுமே அங்கீகரித்தது. ஆயுதப் போராட்டமின்றி தமது இலக்கை அடைய முடியாது என்பதை ”அரசியல் வகுப்புகள் 5” மூலமாக இளைஞர்களுக்கு ஊட்டியது. அரசியல் வகுப்பை முடித்த இளைஞர்களுக்கு முதற் கட்டமாக உடற்பயிற்சி வழங்கப்பட்டது. 1969 காலப்பகுதியில் ஆயுத சேகரிப்பில் ஈடுபடும்படி முன்னணி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. 

இதே காலப்பகுதியில் ஏனைய பாராளுமன்ற இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி போன்றவை ஜே.வி.பி.யை காட்டிக் கொடுக்கத் தொடங்கின. குறிப்பாக அக்கட்சிகளின் பத்திரிகைக்கு ஊடாக ஜே.வி.பி.யின் இரகசிய செயற்பாடுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அப்போதைய டட்லி அரசாங்கம், ”சேகுவரா பியுரோ” (Chegura Bureau) எனும் பெயரில் ஜே.வி.பி.யைக் கண்காணிப்பதற்காக விசேட பிரிவொன்றை உருவாக்கியது. இப்பிரிவின் செயற்பாடுகள் காரணமாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இடப்பட்டார்கள். தலைமறைவாக இருந்த விஜேவீரவும் 1970 மே மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதே மாதம் நடந்த பொதுத் தேர்தலின் மூலம் ஆட்சியும் மாறியது. 


ஒடுக்குவதற்கான தயாரிப்புகள்

ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. இவ் ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி ,லங்கா சமசமாஜக் கட்சி கூட்டு சேர்ந்திருந்ததையும் இங்கே கவனிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து யூலையில் விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். விஜேவீரவின் விடுதலையால் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. இரகசிய வேலைகளுக்கு முன்னுரிமை அளித்த அதே வேளை பகிரங்க அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதாக கட்சி முடிவெடுத்தது. கட்சியின் அரசியல் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டபோது அதில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக மக்கள் பெருந்தொகையாக கலந்து கொண்டார்கள்.

ஜே.வி.பி.யின் வளர்ச்சி குறித்து ஆளும் கட்சி கலக்கமுற்றது. அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இரத்தினவேல் ”சேகுவாரா இயக்கம் அரசின் பிரதான எதிரியாக தலை தூக்கியுள்ளது. அதனை ஈவிரக்கம் இன்றி கலைத்து அழித்தொழிக்க வேண்டும். அதற்கேதுவாக சட்டதிட்டங்கள் கொண்டு வருவதில் அரசு கவனம்செலுத்த வேண்டும்” என 1970 ஒகஸ்டில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து (அவசரகால சட்டத்தின் கீழ்) மரண பரிசோதனையின்றி சடலங்களை எரிப்பதற்கான சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட்டது.

பாரிய அடக்கு முறைக்கான ஆயத்தங்களை அரசு செய்து வருவதை இனம் கண்ட ஜே.வி.பி, ஆயுத சேகரிப்பு வேலைகளையும் துரிதப்படுத்தியது. வெடி குண்டு தயாரிப்புக்கான தீர்மானத்தையும் அரசியல் குழு எடுத்தது. வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் ஜே.வி.பி. விநியோகித்தது.


புரட்சியும் எதிர்ப்புரட்சியும் 

1971 ஜனவரியில் விஜேவீர தொடர்ச்சியாக நாடு பூராவுமுள்ள மாவட்ட கமிட்டி முழு கூட்டத்தில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியுள்ள தருணம் இதுவென்றும் மார்ச் மாத இறுதியில் உறுப்பினர்களை ஆயுதபாணிகாளாக்கும் வேலைகளைப் பூரணப்படுத்தும் படியும் கூறினார். தான் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி பேச வருவதாகவும் கூறிச் சென்றார். 

1971 பெப், 27ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போரெச்சரிக்கை விடப்பட்டது. மார்ச் 13ம் திகதி விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு விட்டார். 1971 மார்ச் 16ம் திகதி நாடு முழுவதும் அவசரக்காலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபடி தாக்குதலுக்கான தீர்மானத்தை எடுக்கும் படி விஜேவீரவிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி மத்தியக்குழு (அப்போது முரண்பட்டு இருந்த தரப்பும் கூட்டாகச் சேர்ந்து ) ஏப்ரல் 5ம் திகதி விடியற்காலை 11.30க்கு நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் தீர்மானத்தை எடுத்தது. ஆனால் அத்தீர்மானம் 5ஆம் திகதி இரவு தாக்குதலை ஆரம்பிப்பதென மாற்றப்பட்டது.

ஆனால் அத் தீர்மானம் மாற்றப்பட்ட தகவல் மொனறாகலைக்கு போய்ச் சேரவில்லை. எனவே தான் ஏப்.5ம் திகதி 5.20க்கு மொனறாகலை-வெல்லவாய பொலிஸ் நிலையம் முதலில் தாக்கப்பட்டது. இது ஒரே நேரத்தில் நாடு பூராவும் உள்ள பொலிஸ் நிலையங்களை தாக்கும் திட்டத்தை குழப்பியது. இதற்கிடையில் தாக்குதல் பற்றி அறிந்த பாதுகாப்புப் படையினர் உசாராயினர். ஏப்.5ம் திகதி 92 பொலிஸ் நிலையங்கள் கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டன. பல பொலிஸ் நிலையங்களை கைவிட்டு விட்டு பொலிஸார் பின்வாங்கினர். இக்கிளர்ச்சியை எதிர்கொள்ள பலமில்லாத நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் உலக நாடுகளிடம் உதவி கோரியது. 


அடக்குமுறை 

இவ்வேண்டுகோளைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய படையினர் பெருமளவு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் அனுப்பினர். 18 யுத்த பீரங்கிகளையும் 6 ஹெலிகப்டர்களையும் அமெரிக்கா வழங்கியது. எகிப்தும் பெருந்தொகையான ஆயுதங்களை வழங்கியது. இந்தியா விமான ஓட்டிகள் உள்ளிட்ட 7 விமானங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் 159 கூர்க்கா படைகளையும் அனுப்பியது. சோவியத் யூனியன் அன்டோனோவ் எனப்படும் இராட்சத விமானங்களையும் மிக்-15 ரக விமானம் ஒன்றையும் இரு ஹெலிகப்டர்களையும் சிறந்த விமான ஓட்டிகளையும் அனுப்பியது. 

எந்தவித ஈவிரக்கமுமின்றி 15,000 தொடக்கம் 20,000 வரையிலான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 40,000த்துக்கும் மேற்பட்டோர் பிடிக்கப்பட்டு சிறைச்சாலைக்கும் வதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை 1972 யூனிலிரு­ந்து 1974 டிசம்பர் வரை விசேட ஆணைக்குழு மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் விஜேவீர உள்ளிட்ட பலர் சிறைத் தண்டனை பெற்றனர்.

மீளுருவாக்கம். 

தண்டனை அனுபவித்து வந்தவர்களில் மூன்று பிரிவினர் இருந்தனர். அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து முற்றாக வெளியேறியவர்கள், தம்மால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் மாற்று அரசியல் ஸ்தாபனத்தை கட்டியெழுப்புவதாகக் கூறி வெளியேறியவர்கள். எஞ்சிய மிகச் சொற்பமான சிலர் தத்துவார்த்த கருத்தாடலில் ஈடுபட்டு வந்தார்கள். மூன்றாவது தரப்பினர் ஜே.வி.பி.யின் அரசியலில் எந்தத் தவறுமில்லை என்ற கருத்துடையோரும், ஒருசில விடயங்களை திருத்திக் கொண்டு முன்செல்லலாம் என்ற கருத்து­டையோரும் அடங்கிய குழு. இக்குழுவே பின்னர் விஜேவீர தலைமையில் ஜே.வி.பி.யை மீளக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி. சிறைக்குள்ளேயே மீளுருவாக்கம் பெற்றது. 

1977 முற்பகுதியில் பொதுத் தேர்தல் நெருங்கியதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜே.வி.பி. யினர் பலர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை அடைந்ததுமே ஜே.வி.பி. முதல் தடவையாக சட்டபூர்வமாக அரசியல் ஸ்தாபனமாக இயங்கத் தொடங்கியது. பதிவு செய்யப்படாததன் காரணமாக 1977ல் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டது.

1979 உள்ளூராட்சி தேர்தலின் போது அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்த போதும் அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத் தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டது. 1981 மாவட்ட சபைத் தேர்தலிலும், 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டது. ஜனாதிபதி தேர்தலின்போது ஜே.வி.பி. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலின் மூன்றாவது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஜே.வி.பி. திகழ்ந்தது. ஜே.வி.பி.யின் இவ்வளர்ச்சியானது ஆளும் ஐ.தே.க.வை கலக்கமடையச் செய்த விடயமாக அமைந்தது ஆனாலும் இத் தேர்தலின் மூலம் ஜே.வி.பி.யின் பலத்தின் அதிகரிப்பை காண முடிந்ததே ஒழிய அதிகார பிரதிநிதித்துவம் வளர்ச்சி காணவில்லை. 

தடையும் தலைமறைவும் 

1983 மே தின கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தி விஜேவீர உரையாற்றியிருந்தார். 1983 யூலைக் கலவரத்தைத் தூண்டி தலைமையேற்று நடத்திய அன்றைய ஆளும் ஐ.தே.கட்சி அக்கலவரத்தின் பழியை ஜே.வி.பி. மீதும் ஏனைய இடதுசாரி கட்சிகள் மீதும் சுமத்தியது. 1983 யூலை 30 ம் திகதி ஜே.வி.பி, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகிய மூன்றையும் 83 கலவரத்துக்கு காரணமெனக் குற்றம் சுமதி ஐ.தே.க அரசாங்கம் தடைசெய்தது. இத்தடையின் காரணமாக ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்குத் தள்ளியது.


இந்நியாயமற்ற தடையை நீக்கும் படி ஜனாதிபதி உட்பட சர்வதேச ஸ்தாபனங்கள் பலவற்றுக்கு வேண்டுதல் விடுக்கப்பட்ட போதும் அது சாத்தியமற்றுப் போனது. தலைமறைவு அரசியல் தற்காப்புக்கான தேவையையும் ஏற்படுத்தியது. அரசியல் அழுத்தங்களை பகிரங்கமாக செலுத்த வாய்ப்பில்லாத நிலையில் ஆயுத ரீதியான செயல்களுக்கும் வித்திட்டது. கிடைத்த தலைமறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிகள், குண்டுகள் தயாரித்தல், ஆயுத சேகரிப்பு என்பவற்றில் ஈடுபட்டது. அரசியல் வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தியது. 

வடக்கு கிழக்கு பிரச்சினை காரணமாக இராணுவத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்ட போது அத்தருணத்தைப் பயன்படுத்தி அமைப்பின் உறுப்பினர்களை இராணுவத்திற்குள் ஊடுருவ விட்டது. இதற்கூடாக இராணுவ பயிற்சியையே ஜே.வி.பி. பிரதான நோக்காக கொண்டிருந்தது. ஆயுத சேகரிப்புக்காக சில படை முகாம் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1987ல் இலங்கை-இந்திய உடன்படிக்கையும் அதனைத் தொடர்ந்து வந்த இந்திய அமைதி காக்கும் படையையும் ஜே.வி.பி. வன்மையாக எதிர்த்தது. அதனை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் போக்காகக் கருதியது. தமது இராணுவ நடவடிக்கைகாக அன்று தேச பக்த மக்கள் இயக்கம் (D.J.V.P.) என்ற ஒன்றை ஜே.வி.பி. உருவாக்கியது. அதில் வேறு சில அரசியல் ஸ்தாபனங்களும் இணைந்திருந்தன. D.J.V.P. யின் பேரில் ஆயுத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம், (ஜே.ஆர், ஜே.ஆரைத் தொடர்ந்து பிரேமதாசா) அதே D.J.V.P. பேரில் அரசியல் படுகொலைகளைப் புரிந்தது. இப்படுகொலைகள் பற்றிய விபரங்கள் பட்டலந்த ஆணைக்குழு விசாரணைகளின் போது பல உண்மைகள் அம்பலமாகின.


மீண்டும் வன்முறை 

1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி. பயங்கரவாதம் என்னும் பெயரில் ஏறத்தாள ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் டயர்களுக்கும், ஆறுகளுக்கும், புதைகுழிகளுக்கும் பலியாகினர். அரசாங்க தகவல்களின் படி 60,000 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் என்றே கூறப்படுகின்றது. பலர் வதைபுரியப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். 1989ல் விஜேவீரவும் பிடிக்கப்பட்டு கொலை செய்யபட்டார். மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட ஜே.வி.பி. மீள எழப்போவதில்லை எனப் பலர் எதிர்ப்பார்த்தனர். ஆனால் 90களின் ஆரம்பத்தில் பலர் விடுதலையாகி வந்ததும் கட்சி புனரமைக்க­ப்பட்டது. மீண்டும் பகிரங்க அரசியல் பணிகளைத் தொடங்கினர். 

மீண்டும் மீளுருவாக்கம் 

நாடெங்கிலும் சந்திரிக்கா அலையும் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்து கொண்டிருந்தன. ஜே.வி.பி.யும் இலங்கை முற்போக்கு முன்னணியும் இணைந்து தேச மீட்பு முன்னணியை கட்டியெழுப்பின. இலங்கை முற்போக்கு முன்னணியின் பேரில் தேர்தலிலும் இறங்கியது. ஒரு உறுப்பினர் பதவியையும் வென்றெடுத்­தது. 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும் தமது வேட்பாளரையும் நிறுத்தியது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்காகவே தாம் அத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் நீக்குவதாக சந்திரிகா வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்தது. சந்திரிகா தாம் பதவிக்கு வந்தால் 1995 ஆம் ஆண்டு யூன் 15 ம் திகதிக்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதி அளித்தார். இதனால் ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் நிஹால் கலப்பத்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

1997 உள்ளூராட்சித் தேர்தலில் 101 உறுப்பினர்களை வென்றது. 98 மாகாண சபைத் தேர்தலில் 25 உறுப்பினர்களை வென்றது. 2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்தலில் 10 உறுப்பினர்களை வென்றது. 2001 தேர்தலில் அது 16 ஆக உயர்ந்தது. 2004 ஆம் ஆண்டு அது 39 ஆக உயர்ந்தது. 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிட்டதில் 4 உறுப்பினர்களை மட்டுமே வெல்ல நேரிட்டது. கட்சிப் பிளவைத் தொடர்ந்து பலவீனமடைந்திருந்த நிலையில் 2015 தேர்தலில் 6 உறுப்பினர்களாக ஆனது. 2020 தேர்தலிலும் 3ஆக அது குறைந்தது. ஆனால் நான்கே ஆண்டுகளில் மீண்டும் மக்கள் சக்தியாக எழுந்து ஜாந்திபதித் தேர்தலிலும் வென்று பாராளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களை வென்று மொத்தம் 152 ஆசனங்களை வென்றது.


அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 71 ஏப்ரலிலும் 87-89 இலும் கொடுக்கப்பட்ட விலைக்கு இன்று உரிய வெற்றி கிடைத்திருக்கிறது. 71 ஆயுதக் கிளர்ச்சியிலிருந்து ஜனநாயகப் பாதை வரையான கடினமான பயணம் பல வடுக்களைக் கொண்டது. பல தவறுகளையும் கொண்டது. பல சாதனைகளையும் கொண்டது. ஆனால் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் வெளியில் அதற்கேயுரிய அமைப்பை ஏற்றுக்கொண்டு லட்சிய மாற்றங்களை நிகழ்த்துவதன் சவால்களை இன்றைய ஜேவிபி அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.

"கஜபாகு கப்பல் அரோராவாக ஆகட்டும்! எடலின் சதுக்கம் ஒரு பெட்ரோகார்ட் முகாமாக ஆகட்டும்!"

என்று அன்று ஹைட்பார்க் மைதானத்தில் ஆற்றிய ஆக்ரோஷம் நிறைந்த விஜேவேரவின் உரை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கான அறைகூவல். அந்த பிரபலமான உரை ஏப்ரல் எழுச்சிக்கான பலமான வித்து. 

நன்றி - தினகரன் 06.04.2025
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates