இலங்கையில் பௌத்தத்தைக் கொண்டு வருவதற்காக தமிழ் பௌத்தத துறவிகள் பாரிய பங்காற்றியிருக்கிறார்கள். கண்டி ராஜ்ஜிய காலத்தில் பௌத்தத்தைப் பாதுகாத்ததில் தமிழ் நாயக்க மன்னர்களின் வகிபாகம் பற்றி பல நூல்கள் உள்ளன. அது போல பிற்காலத்தில் போயா தினம், வெசாக் தினம் என்பவற்றை ஏற்படுத்துவதில் இரு தமிழர்கள் ஆற்றிய பங்கை இங்கே நினைவு கொள்வோம்.
வெசாக் நாள் என்பது புத்தர் பிறந்த நாள். அவர் பண்டைய இந்தியாவின் கபிலவஸ்து என்கிற இடத்தில கி.மு. 623 பிறந்தார். வெசாக் என்பது இறந்த நாளும் கூட. அதேவேளை புத்தர் விஜயனிடம் அடுத்த 5000 வருடங்களுக்கு இலங்கை தான் பௌத்தத்தைக் காக்கும் என்று கூறி விஷ்ணு கடவுளுக்கு ஊடாக விஜயனுக்கு பிரித் நூலைக் கட்டி பௌத்தத்தை ஒப்படைத்த நாளாகவும் வெசாக் நாளை குறிப்பிடுகிறார்கள். அன்றிலிருந்து தான் “சிங்கள பௌத்த” இனம் தோற்றம் பெற்றதாகக் சிங்கள பௌத்தர்களால் கூறப்படுகிறது. அப்பேர்பட்ட “சிங்கள பௌத்த புனித நாள்” சிங்களத்தையும் பௌத்தயும் இணைக்கின்ற ஒரு சிங்கள – பௌத்த பண்பாட்டு மரபு நாளாக பொருள் கொள்ளப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் மகாவம்ச காப்பியத்தின்படி “தம்மதீப” கோட்பாட்டாக்கம் பெற்ற நாளென இந்த நாளை நாம் பொருள்கொள்ளலாம். கௌதம புத்தர் துறவறம் பூண்டு எட்டாவது ஆண்டில் இலங்கைக்கான தனது மூன்றாவது விஜயத்தை செய்து களனியை வந்தடைந்ததும் இத்தகைய வெசாக் நாளில் என்கிறது அதே மகாவம்சம்.
புத்தர் பிறந்த தினத்தை எவராலும் அறுதியிட்டு கூற முடியாத நிலையில். அதுவொரு பௌர்ணமி நாள் என நம்பப்படுவதால் பௌர்ணமியில் அது கொண்டாடப்படுகிறது.
வெசாக்கின் ஆரம்பம்இலங்கையில் வெசாக் நாளானது தேவநம்பியதீச மன்னர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் வெசாக், பொசன், எசல போன்ற பௌர்ணமி தினங்களையும் பௌத்தர்கள் நினைவுகூறுவது மரபாக்கப்பட்டது. நெடுங்காலமாக தொடரப்பட்ட இந்த மரபை போர்த்துகேயர் ஆக்கிரமித்தபோது சகல பௌத்த மத சடங்குகளையும், திருவிழாக்களையும் தடை செய்தனர். ஒல்லாந்தர் காலத்தில் மத இறுக்கங்களில் சற்று தளர்வு இருந்தது. ஆனால் 1770 ஆம் ஆண்டு நவம்பர் அன்றைய டச்சு கவர்னர் போல்க் (Falk) போயா விடுமுறை, வாராந்த ஞாயிறு விடுமுறை என்பவற்றை தடை செய்தார். ஞாயிறு நாட்களில் பௌத்த உபதேசங்கள் பூஜைகளை செய்யும் மரபு இருந்து வந்தது. ஆங்கிலேயர் இலங்கையை கைப்பற்றியபின்னர் மீண்டும் ஞாயிறு நாளை விடுமுறை தினமாக அறிவித்தார்கள்.
நூறு வருடங்களுக்கு முன்னர் 1815 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் பௌத்தத்தை பாதுகாப்பதற்கும் பௌத்த மதத் திருவிழாக்களை இடையூறின்றி நடத்துவதற்கான உடன்பாடும் காணப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் தமது நாட்காட்டியில் வெசாக் தினத்தையும் குறித்து வந்தார்கள்.
1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்தபோது பௌத்தர்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கோரி 1884 இல் இங்கிலாந்து சென்ற கேணல் ஒல்கொட் பெப்ரவரி மாதம் அங்கே 6 கோரிக்கைகளை காலனித்துவ செயலாளரிடம் முன்வைத்தார். அதில் ஒன்று தான் வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்க வேண்டும் என்பது. இதன் மூலம் புத்தரின் பிறந்த நாளான வெசாக் பௌர்ணமி தினத்தை பொது விடுமுறையாக்குவதற்கும், பௌர்ணமி பெரஹரக்கள் நடத்துவதற்கும் வழிசமைக்கப்பட்டது.
இலங்கையில் இராமநாதனின் வகிபாகம்
இதற்கான விவாதங்கள் அரசாங்க சபையில் நடைபெற்றன. 100 வருடங்களுக்கு முன்னர் சேர் பொன் இராமநாதன் பௌத்தர்களின் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்கும்படி இலங்கையின் அரசாங்க சபையில் போராடியதை இன்றும் பல சிங்களத் தலைவர்கள் போற்றி வருவதைக் காண்கிறோம்.
இராமநாதன் வெசாக் விடுமுறைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த வேளை கரையோரச் சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தார்கள். இறுதியில் 1885இல் விடுமுறைச் சட்டத்தின் மூலம் வெசாக் தின விடுமுறை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் இராமநாதன் இந்துக்களின் நாளொன்றிலும் அப்படியொரு விடுமுறை வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்க சபையில் உத்தியோகபற்றற்ற உறுப்பினராக இருந்த பறங்கி இன பிரதிநிதி ஜே.ஆர். வைன்மேன் (J. R. Weinman) ஏப்ரல் 11ஐ இந்துக்களுக்கான விடுமுறையாகவும், ஏப்ரல் 28 ஆம் திகதியை பௌத்தர்களுக்கான வெசாக் நாள் விடுமுறையாகவும் முன்மொழிந்தார். வைன்மேன் பிரம்மஞான சங்கத்தின் செயற்பாட்டாளராக ஒல்கொட்டுடன் சேர்ந்து பணியாற்றி வந்தவர்.
அதுவே பின்னர் 1886 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்கச் சட்டமாக அரச விடுமுறைச் சட்டத்தை பிரகடனப்படுத்தியது. அந்த ஏப்ரல் 11 தான் பின்னர் சிங்கள – தமிழ் புத்தாண்டு விடுமுறையாக பின்னர் ஆனது. இராமநாதன் பின்னர் 1888ஆம் ஆண்டு பன்சலைகளையும், வெஹர விகாரை ஆகியவற்றையும் பாதுகாப்பதற்கான அழுத்தங்களை பிரயோகித்து அதனை வெற்றி பெறச்செய்திருந்தார்.
ஆனால் கரையோர சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.எல்.அல்விஸ் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த வெசாக் விடுமுறைக்கு ஆதரவாக அன்று பொன்னம்பலம் இராமநாதன் முக்கிய உரையை ஆற்றியிருந்தார். “அரசாட்சி காலத்திலிருந்து புத்தர் பிறந்த வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக அனுஷ்டித்து வந்தார்கள். மீண்டும் அந்த நாளை அரச விடுமுறை நாளாக்க வேண்டும்.” என்று சேர் பொன் இராமநாதன் உரையாற்றினார். கூடவே பௌத்தர்களுக்காக மட்டும் இப்படி விடுமுறை அளிக்கும் அதேவேளை இந்துக்களுக்கும் விடுமுறை நாளொன்றை வழங்க வேண்டும் என்றும அன்றைய Times of ceylon (11.08.1885) பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் 15.01.1886 அன்று சட்டசபையிலும் ஒலித்தது. அந்த காரசாரமான விவாதத்தின் விளைவாக தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினமும் உருவானது. இந்துக்களுக்கு விடுமுறை வேண்டும் என்று உறுதியாக குரல் கொடுத்தவர்கள் பலர் அன்றைய ஆங்கில பிரதிநிதிகளே.
28.04.1885 அன்றிலிருந்து வெசாக் பௌர்ணமி தினம் அரச பொது விடுமுறையாக ஆனது. அது உத்தியோகபூர்வமாக 1886 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க சட்டமாக (No. 4 of 1886. An Ordinance to provide for Public and Bank Holidays) பிரகடனப்படுத்தப்பட்டது.
கேணல் ஒல்கொட் ஒரு முன்னோடி
வெசாக் தினத்தன்று பௌத்த கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்கான ஒரு கொடியை உருவாக்குவது என்றும் பௌத்த பாதுகாப்பு சபை தீர்மானித்தது. பௌத்த கொடியை உருவாக்கும் குழுவில் சுமங்கல தேரர், குணானந்த தேரர், கரோலிஸ் ஹேவவிதாரன (அநகாரிக்க தர்மபால) போன்றோரும் உள்ளடக்கம். ஒல்கொட்டின் வழிகாட்டுதலில் கரோலிஸ் குணவர்தன என்பவரால் பௌத்த கொடி தயாரிக்கப்பட்டது.
கேணல் ஒல்கொட்டின் தலைமையில் உருவாக்கப்பட்ட பல்வர்ண பௌத்த கொடி இன்றும் சர்வதேச பௌத்த கொடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1885 மார்ச் 27 அன்று அன்றைய ஆளுநர் ஹெமில்டன் கோர்டன் வெசாக் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தார். அடுத்த மாதம் 1885 ஏப்ரல் 28 அன்று வெசாக் தினம் கொண்டாடப்பட்ட அதே நாள் முதலாவது தடவையாக அந்த பௌத்த கொடி ஏற்றப்பட்டது.
முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956இல் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.
சிங்களப் பத்திரிகையான 'சரசவி சந்தரெச' இவ்வாறு எழுதியது: "ஒரு தேசிய இனக் குழுமம் என்ற வகையில் பௌத்தர்கள் திரு.இராமநாதனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். வெசாக் விடுமுறை மற்றும் பௌத்த விகாரைகள் சட்டமூலம் (Buddhist Temporalities Ordinance) பற்றிய பிரச்சினையில் அவர் கொண்டிருந்த ஆர்வம், பாலி கல்லூரி மற்றும் பிரம்மஞான சங்கத்த்துக்கு ஊடாக பௌத்த பாடசாலைகளை அமைப்பதற்கு அவர் செய்த நன்கொடை, பௌத்த மதத்திற்கான ஆற்றிய பிற சேவைகள் ஆகியவை அவரை இலங்கையின் பௌத்தர்கள் அதிகம் நேசிக்கச் செய்தன.”
வெசாக்கை சர்வதேச நாளாக்கிய லக்ஷ்மன் கதிர்காமர்
1998 நவம்பர் மாதம் இலங்கையில் உலக பௌத்த மாநாடு நடைபெற்றது. அங்கே வருடந்தோறும் மே மாத பௌர்ணமி நாளை சர்வதேச வெசாக் நாளாக பிரகடனப்படுத்தினார்கள். ஆனால் அதற்கு சட்டபூர்வமான சர்வதேச அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையே வழங்க முடியும். அதனைத் தொடர்ந்து லக்ஷ்மன் கதிர்காமர் ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் பௌர்ணமி தினத்தை சர்வதேச விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தும்படி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். 1999 செப்டம்பர் 23 அன்று அவர் ஐ.நா.பொதுச்சபையில் இது குறித்து உரையாற்றினார். அங்கிருந்த ஏனைய நாட்டு பிரதிகளைச் சந்தித்து அந்தப் பிரேரனைக்கு ஆதரவு திரட்டினார். டிசம்பர் 13 அன்று பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, சிலி, சைப்ரஸ், கிரெனடா, ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு, மாலைத்தீவு, மங்கோலியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், கொரிய குடியரசு, ரஷ்யா, சீஷெல்ஸ், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், இலங்கை, சுரினாம், தாய்லாந்து, உக்ரைன். கிரீஸ், மொரீஷியஸ், நோர்வே, துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தம்மை இக்கோரிக்கைக்கான ஆதரவு நாடுகளாக இணைத்துக்கொண்டன. அந்நாட்டுத் தலைவர்களில் பலர் ஆதரித்து ஆற்றிய உரைகள் ஐ,நா. வின் 54 வது கூட்டத் தொடரின் கூட்ட அறிக்கையில் முழுமையாக உள்ளன.
இறுதியில் கதிர்காமரின் கடும் முயற்சியால் வெசாக் நாளை சர்வதேச விடுமுறை நாளாக்கும் பிரேரணை 1999 டிசம்பர் 15 அன்று ஐ.நா. வில் எந்த வாக்கெடுப்புமின்றி நிறைவேறியது. இந்தப் பிரேரணையின் படி விரும்பிய நாடுகள் அந்த விடுமுறையை அமுல்படுத்தலாம். இந்த வெற்றியினால் சிங்கள பௌத்தர்கள் கதிர்காமரை இன்றும் கொண்டாடுகிறார்கள்.
இலங்கை மட்டுமன்றி மலேசியா, மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, ஹொங்கொங், தைவான் ஆகிய நாடுகள் வெசாக் தினத்தை பொது விடுமுறை தினமாக அனுஷ்டிக்கின்றனர்.
மொத்தத்தில் வெசாக் நாளை இலங்கையிலும், சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெறச் செய்தவர்கள் பௌத்தர்கள் அல்லாதவர்களே. கேணல் ஒல்கொட் கத்தோலிக்க மதத்தவராக இருந்து பௌத்தத்துக்கு மாறி பின்னர் சர்வமதத்தவராக ஆனவர். அதேவேளை சேர் பொன் இராமநாதன் சைவ மதத்தை சேர்ந்தவர். லக்ஸ்மன் கதிர்காமர் ஒரு கத்தோலிக்கர். இலங்கையின் பன்முகத் தன்மைக்கும், பன்மத உறவுகளுக்கும் இது ஒரு வரலாற்று ரீதியிலான எடுத்துக்காட்டு எனலாம்.
நன்றி - தினகரன் - சாளரம் பகுதி - 11.05.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...