மகாவம்சத்தின் 6வது தொகுதியில் உள்ள தமிழர் விரோதப் போக்குகள் குறித்து ஆராய்கிறபோது அதை ஆக்கியவர்களைப் பற்றியும், ஆக்கியவர்களின் தரப்பு கருத்துக்களையும் அறிவதே தார்மீக பொறுப்பு. மேலும் அதுவே ஆய்வு முறையியலுக்கு உகந்த அறிவியல் மார்க்கமும் கூட.
6வது மகாவம்ச தொகுதிக்கான குழுவின் தலைவியாக செயல்பட்டவரும், சுமார் 45 வருடகால மகாவம்ச எழுத்தாக்கத்தில் ஈடுபட்டுவருபவருமான பேராசிரியர் மாலனி எந்தகமவின் நேர்காணலை இங்கே பதிவிடுகிறோம். நூறுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட இந்த மகாவம்ச குழுவுக்கு தலைவராக இருப்பவர் இலங்கையின் தொல்லியல் சக்கரவர்த்தி என்று கொண்டாடப்படும் பேராசிரியர் எல்லாவல மெத்தானந்த தேரர். இன்று தமிழர் பிரதேசங்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தொல்லியல் போரின் சிருஷ்டியாகவும், வழிகாட்டியாகவும் அவரைக் கூறலாம். அவரின் தலைமையில் வெளியான மகாவம்சம் எப்பேர்பட்ட ஒன்றாக இருக்கக் கூடும் என்பதை நாம் கணிக்கலாம். அவர் தற்போது சுகவீனமுற்றிருப்பதால் அவரின் பணியையும் சேர்த்து ஆற்றி வருபவர் மகாவம்சம் 6 வது தொகுதியாக்கக் குழுவின் செயலாளரான பேராசிரியர் மாலனி எந்தகம.
மகாவம்சத்தின் 5ஆம் தொகுதியிலும் அங்கம் வகித்தவர் மாலனி எந்தகம. 1956 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை பதிவு செய்த 5வது தொகுதியை எழுதுவதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன குழுவை அமைத்த வேளை அதன் ஆக்கக் குழுவில் பணியாற்றியவர். பின்னர் 6வது மகாவம்ச ஆக்கக்குழுவை தலைமையேற்று வழிநடத்தியவர். அவர் ஒரு சிரேஷ்ட வரலாற்று அறிஞராக கருதப்படுவதால் அவரை பயங்கரவாதம் பற்றிய குழுவில் சேர்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. சிங்களத்தில் பல வரலாற்று நூல்களை எழுதியிருப்பவர். அவரின் நூல்கள் பாடப்புத்தகங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகாவம்சம் தொடர்பிலான அறிஞராக கருதப்படுவதால் மகாவம்சம் பற்றிய பல்வேறு உரையாடல்களுக்கும் அழைக்கப்படுபவர். அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட பௌத்த உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக இயங்கியவர்.
அவரின் சிங்கள பௌத்த தேசியவாத சார்புப் பின்புலம்; அவர் பக்கசார்பான போக்குக்கு தலைமையேற்றிருக்கிறார் என்றே விமர்சிக்க முடிகிறது. இதனை அவர் நேர்காணலில் கொடுக்கின்ற பதில்களில் இருந்து உறுதி செய்து கொள்ளவும் முடியும்.
சுமார் ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருந்து பேராசிரியர் மாலனி எந்தகம அவர்களுடன் 15.05.2023 ஒரு பின்னேரப் பொழுது வட்ஸ்அப் மூலம் தொலைவழியில் மேற்கொண்ட உரையாடல் இது. அவரின் கருத்து நமது இந்த ஆய்வுகளுக்கு மிகவும் அவசியமான விளக்கங்களைத் தருவதுடன் பல முடிச்சுகளையும் அவிழ்க்கின்றன. இந்த நேர்காணலுக்கு முன்னர் அவர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய விபரங்கள் நாம் கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்தன. அதனை அடியாகக் கொண்டே அவரிடம் பின்னர் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமன்றி அவர் இந்த நேர்காணல்களில் பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் பற்றி குறிப்பிட்ட விபரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தியதால் இறுதியில் அவரிடமும் இக்கருத்துக்களின் மீதான எதிர்வினைகளை நேர்காணலாக பெற்றுக்கொண்டேன். அதுவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நவீன மகாவம்ச உருவாக்கம் பற்றி?
1936 வரையான மகாவம்சம் மூன்று தொகுதிகளாக அதுவரை எழுதப்பட்டிருந்தது. அதுவரை காலம் பௌத்த பிக்குகளால் எழுதப்பட்டுவந்த மகாவசத் தொடர் தொகுதிகள் அதற்குப் பின்னர் மகாவசமத்தை உருவாக்கும் குழுவொன்றை அரசு நியமித்து அதற்கு ஊடாக இவை மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பொறுப்பை கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய கலாசார திணைக்களமே மேற்கொண்டது. இவ்வாறு நான்காவது தொகுதி 1936 தொடக்கம் 1956 வரை மேற்கொள்ளப்பட்டது. 1956ஆம் ஆண்டு தான் முதன்முதலில் கலாசார அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவிக்கு வந்த போது; முன்னர் எழுதப்பட்டுவந்த மகாவம்சத்தை ஏன் தொடர்ந்தும் எழுத முடியாது என்று, கலாசார அமைச்சின் கீழ் மகாவம்ச ஆக்கக் குழுவை ஏற்படுத்தினார். 1956 தொடக்கம் 1978 வரையான காலப்பகுதியைக் கொண்ட 5வது தொகுப்பை எழுதுவதற்கான குழு பல பௌத்த பிக்குமார்களையும் கொண்டு அமைக்கப்பட்ட போது அதன் ஆக்கக் குழுவில் கட்டுரை சமர்ப்பிக்கும் பணியில் நானும் இடம்பெற்றேன்.
பின்னர் 1978 இலிருந்து 2010 வரையான காலப்பகுதியைக் கொண்ட 6ஆவது தொகுப்பை எழுதுவதற்கான குழு அமைக்கப்பட்டபோது அதில் நானும் முக்கிய அங்கம் வகித்தேன்.
தமிழில் மகாவம்சம்?
தமிழில் மொழிபெயர்க்கும் பணியை செய்வதற்கு சரியான அறிஞர்கள் கிடைக்கிறார்கள் இல்லை. இறுதியில் தற்போது களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் யோகராஜா அவர்கள் அதனை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். அவரின் தலைமையில் தான் அந்தக் குழு அப்பணியை மேற்கொண்டு வருகிறது.
6வது தொகுதி முடிந்த நிலையில் அடுத்த கட்ட தொகுதியை ஆக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்னமும் வெளியிடப்படாததால் அப்பணிகளைத் தொடங்காமல் இருக்கிறோம். அது வெளியிடப்பட்டதன் பின்னர் அதன் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியும் தொடங்க முடியும்.
முதலாவது தொகுதியை மாத்திரம் இதுவரை தமிழில் ஐந்து பேர் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.
உண்மையாகவா. நான் அறிந்திருக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பௌத்தத் துறவி தமிழுக்கு மொழிபெயர்த்த ஒரு பிரதி எங்களிடம் உள்ளது. ஆனால் அது இதுவரை வெளியிடப்படவில்லை. அதை சரிபார்த்து திருத்தும் பணிகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதை திருத்துவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த பௌத்த துறவி அதனை பழைய தமிழ் மொழியில் எழுதி இருக்கிறாராம். இன்றுள்ளவர்களுக்கு அது சிரமமாக இருக்கிறதாம். அதை அப்படியே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்பதே பேராசிரியர் யோகராஜா அவர்களின் கருத்தும் கூட. இதுவரை அவர்கள் இரண்டு அத்தியாயங்களைத் தான் முடிக்க முடிந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.
இறுதியாக வெளிவந்த 6வது மகாவம்சத் தொகுதியை மொழிபெயர்ப்பதன் அவசியத்தை உணர்ந்து நான் மொழிபெயர்க்க முற்பட்டேன். ஆனால் கலாசார திணைக்களத்தினர் அதனை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்த கிடைத்த தகவலில் காரணமாக அம்முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் முன்னைய தொகுதிகளை மொழிபெயர்ப்பதைவிட 6வது தொகுதியை மொழிபெயர்ப்பது இலகுவானதும் கூட என்பதை நான் அடையாளம் கண்டேன்.
உண்மை. அத் தொகுதியில் மொழிப் பாவனை மிகவும் எளிமையானது. முன்னைய மூன்று தொகுதிகளிலும் பாலி கலப்பு அதிகம் என்பதும் ஒரு காரணம்.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். முதல் மூன்று தொகுதிகளும் முதல் தொகுதி ஆக்கும் போது அக்காலத்தில் ஆட்சி செய்தவர்களை மையப்படுத்தியே எழுதுவது மகாவம்ச மரபு. அரசர், ஆளுநர், பிரதமர், ஜனாதிபதி என்கிற அடிப்படையில் தான் எழுதப்பட்டது. ஆனால் நான்காவது தொகுதியில் இருந்து அந்த மரபில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. உதாரணத்துக்கு ஆட்சியாளரை மையப்படுத்தாமல் ஒரு பண்பாட்டுக் கட்டுரைகளின் தொகுதி போல அது ஆக்கப்பட்டிருந்தது. நாங்கள் மீண்டும் அம்முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தோம். மகாவம்ச மரபின் படியே நாங்கள் இப்போது எழுதி வருகிறோம். அதுபோல நான்காவது தொகுதியையும் அம்மரபுப் பிரகாரம் கொண்டு வருவதற்காக திருத்தும் பணிகளையும் தற்போது செய்து வருகிறோம். குறிப்பாக அத் தொகுதியில் கட்டாயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை அடையாளம் காண்கிறோம். அதையும் முடித்ததன பின்னர் தான் தமிழுக்கு அதனை மொழிபெயர்க்க முடியும்.
ஏற்கெனவே வெளிவந்த மகாவம்சத்தை பின்னர் திருத்துவது சரியா? அவ்வாறு இதற்கு முன்னர் திருத்தப்பட்டிருக்கிறதா?
மகாவம்சம் என்பது அதில் உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும்படி சொல்லும் நூலல்ல. அதன் மீது விமர்சனம் வைக்க முடியும். அதனைத் திருத்தவும் முடியும். நீங்கள் அறிவீர்களா தெரியாது; முதலாவது மகாவம்சத்தை 12ஆம் நூற்றாண்டில் திருத்தப்பட்டு மொக்கலான மகாவம்ச பிரதி என்று என்கிற ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் சிறப்பு என்னவென்றால் முன்னைய பிரதியை விட மேலதிகமான பல விபரங்களைக் கொண்டிருக்கிறது மொக்கலான பிரதி.
நீங்கள் குறிப்பிடுவது கம்போடிய மகாவம்சத்தைத் தானா?
சரியாக சொன்னீர்கள் அதே தான்.
அடுத்த மகாவம்சத் தொகுதியை ஆக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதா?
இதில் ஒரு சிக்கல் உண்டு. இதற்கு முனனர் எல்லாம் ஆட்சித் தலைவர்கள் இறந்தததன் பின்னர் தான் அவர்களின் ஆட்சிக் காலத்தை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தொகுதி தான், ஆட்சியாளர் உயிருடன் இருக்கும்போதே எழுதப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு விதி இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது இவற்றை சேர்க்கவில்லை, அவற்றை சேர்க்கவில்லை என்று பலவித விமர்சனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாக நேரிடும்.
எனவே இப்போது எமது குழு தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிகளையும், நான்காவது தொகுதியை திருத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
பல ஆண்டுகளாக அரசே பொறுப்பேற்று கலாசார திணைக்களத்தின் கீழ் அதற்கென ஒரு பிரிவையும் உருவாக்கி மேற்கொள்ளப்படும் மகாவம்சத்தை அரசின் அறிக்கையாக, அல்லது அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா?
இல்லை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நான் வரலாற்றுத் துறையை சேர்ந்தவர். அதுபோல இதன் ஆக்கக் குழுவில் இருந்த அத்தனை பெரும் பல்வேறு துறைகளில் புலமையாளர்கள். முதலில் அவர்களை அழைத்து நாங்கள் கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்தோம். மகாவம்ச ஆக்க மரபு என்னவென்பது குறித்து முதலில் வழிகாட்டினோம். அதில் அவர்களுக்கு கொடுத்த வழிகாட்டல் என்னவென்றால், அவர்கள் தகவல்களைத் தான் திரட்ட வேண்டும். ஒருபோதும் அவர்களின் சொந்தக் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் அதனை செய்யக் கூடாது. எனவே அரச தலையீடுகள் எங்களுக்கு கிடையாது.
அப்படியென்றால் இந்தக் குழுவுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வது யார்? ஏதேனும் புலமைசார் நிறுவனமா? அல்லது குழுவா?
இல்லை, கலாசார அமைச்சின் செயலாளர், இயக்குனர் ஆகியோரால் கலாச்சார அமைச்சரின் அங்கீகாரத்துடன் தான் இக்குழுவினர் நியமிக்கப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட மகாவம்சக் குழுவில் ஏன் சிங்கள பௌத்தர்களை மாத்திரம் கொண்டிருக்கிறது. ஏன் பன்முகத்தன்மைகொண்டவாறு மற்ற இன மதத்தவர்களை உள்ளடக்கப்படவில்லை?
நான் ஏற்கெனவே கூறியது போன்று இக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் தமது கருத்துக்களை எழுதவில்லை. தகவல்களைத் தான் தொகுத்து தந்திருக்கிறார்கள். அதன் பின்னர் மூன்று மொழியிலும் மொழியாக்கம் செய்யப்படும். பின்னர் தேவைப்படும் விமர்சனங்களை எவரும் வெளியிடலாம்.
வெவ்வேறு இனத்தவர்களை இணைத்துக் கொண்டால் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். பௌத்தத் துறவிகளால் எழுதப்படுகிற மரபொன்று தான் மகாவம்சத்துக்கு அதுவரை இருந்து வந்தது. இப்போது அதற்கென ஒரு சபை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் எழுதப்பட்ட எதுவும் பக்கசார்பாக எழுதபட்டதில்லையே.
மகாவம்ச உள்ளடக்கத்தின் மீது ஏற்கெனவே இருக்கிற குற்றச்சாட்டுகளின் காரணமாகவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்!?
நீங்கள் அறிந்தீர்களா தெரியவில்லை. இறுதியாக வெளிவந்த மகாவம்சம் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா; தன்னைப் பற்றி போதிய அளவு எழுதவில்லை என்று பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு என்ன பதிலைக் கூறுவது என்று என்னிடம் அமைச்சின் செயலாளர் கேட்டிருந்தார். மகாவம்சம் என்பது நபர்களைப் பற்றி எழுதுவதல்லவே. அது சம்பவங்களைப் பற்றியா பதிவு. நபர்கள் ஆற்றிய பாத்திரம் பற்றிய பதிவுகள் வரும் ஆனால் அப்பாத்திரங்களின் பணிகள் சரியா பிழையா என்பதைப் பற்றிய விமர்சனங்களை பதிவதில்லை. தகவல் பிழைகள் இருந்தால் எவரும் சுட்டிக்காட்ட முடியும். அப்படி இருந்தால் அதனை நாங்கள் பரிசீலிக்க முடியும். ஆனால் அவரைப் பற்றி குறைவாக எழுதபட்டிருக்கிறது, ஷவேந்திர சில்வா பற்றி அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
யுத்தம் நடத்தப்பட்ட அந்த ஒழுங்கில் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கிறோம். யுத்தத்துக்கு தயாரான விதம், திட்டமிடப்பட்ட விதம், வடக்கை நோக்கிய படை நடவடிக்கைகள் என்பவற்றை கவனமாக பதிவு செய்திருக்கிறோம்.
உங்களுக்கு தெரிந்திருக்கும், முதலாவது விஜயபாகு அரசரின் போர்த்தந்திரோபாய வழிமுறைகளைத் தான் இறுதி யுத்தத்தில் பயன்படுத்தபட்டிருக்கிறது. அதாவது மேற்குப் பக்கத்தில் இருந்தும் நுழைந்தார்கள். கிழக்குப் பக்கத்திலிருந்தும் நடுவிலிருந்தும் ஊடறுத்து நுழைந்தார்கள். விஜயபாகுவின் போர்ப் பாதை பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளிலும் தெளிவாக உள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக விஜயபாகு அரசன் முதலாவது தடவை போர்தொடுத்து வெற்றி ஈட்டினார். ஆனால் தக்கவைக்க முடியவில்லை. மீண்டும் பின் வாங்கி திரும்பவேண்டி வந்தது. இவ்வாறு மூன்று முறை கைப்பற்றியும் தக்கவைக்க முடியாமல் பின் வாங்க நேரிட்டது. இது தான் இங்கே நம்மவர்களுக்கும் ஏற்பட்டது. இதற்கு தீர்வு என்னவென நிதானமாக சிந்தித்தார் மன்னர் விஜயபாகு இறுதியில் அவர் தீட்டிய திட்டத்தின் படி படைகளை வழிநடத்தினார். அனுராதபுரத்துக்கு இடது பக்கத்தில் ஒரு படையை நிலை நிறுத்தி அங்கிருந்த நகர்த்தினார். வடக்கிலிருந்து படைகள் வந்தால் அதை தடுத்து நிறுத்தி சமர் புரிவதற்காக வவுனியா பக்கத்தில் ஒரு படையை நிறுத்தினார். அதன் பின்னர் சோழப் படைகள் தென்னிந்தியாவில் இருந்து வந்த இன்னொரு கடல் மார்க்கமான கிழக்கில் திருகோணமலை பகுதியில் அவர்களைத் தடுப்பதற்காக அங்கே ஒரு படையையும் நிலை நிறுத்தினார். இந்த தயாரிப்புகளுடன் நடுவில் ஊடறுத்து சென்றதுடன், சுற்றிவளைத்து சோழர்களை வெற்றிகொண்டு விரட்டியடித்தார் விஜயபாகு மன்னர்.
அத தெரண நேர்காணலில் பேராசிரியர் மாலனி எந்தகம
அத தெரண தொலைக்காட்சியில் “Talk with Chathura” என்கிற வாராந்த உரையாடல் நிகழ்ச்சியில் மகாவம்ச உருவாக்கக் குழுவின் பிரதம செயலாளர் பேராசிரியர் மாலனி எந்தகமவுடன் ஒரு மணித்தியாலமும் 12 நிமிடங்களைக் கொண்ட ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அதில் இப்படி ஒரு கருத்தை கூறுகிறார்.
கீழ் வகுப்புகளில் அதிக ஆழமான, விரிவான வரலாற்றுக் கதைகளைச் சொல்ல முடிவதில்லை. இப்படித்தான் எல்லாள மன்னனைப் பற்றிய விபரங்கள் குறைவு என்கிற குற்றச்சாட்டை தமிழர் தரப்பில் இருந்து அரசியல் தலைவர்களும், பல்கலைக்கழக மட்ட விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்கள்.
மகாவம்சத்திலும் துட்டகைமுனுவின் அத்தியாயத்தில் தான் எல்லாளனின் விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட குற்றச்சாட்டை அமைச்சருக்கு ஊடாக பரிந்துரைகளாக மகாவம்ச கமிட்டியிடம் சேர்க்கப்பட்டது. சுமார் பதினைந்து பேரைக் கொண்ட அக்குழுவில் நானும் இருந்தேன். பிரபல தமிழ் பேராசிரியர் பத்மநாதனும் எம்முடன் இருந்தார். அவர்கள் குறிப்பிட்ட அந்த 6 ஆம் ஆண்டுக்கான நூலில் சிறு பகுதி தான் எல்லாளன் பற்றி இருக்கிறது. 6 ஆம் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அதற்கு மேல் நாம் அதிகமாக உள்ளடக்கவும் முடியாது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர் பரிந்துரையாக இரண்டு பக்கங்களுக்கு எல்லாளனைப் பற்றிய விபரங்களை எழுதிக் கொண்டு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த பேராசிரியர் பத்மநாதன் “இவற்றை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? இங்கே துட்டகைமுனுவைப் பற்றியும் இந்த அளவே இருக்கிறது. அப்படியிருக்கும் போது எல்லாளனைப் பற்றி அதைவிட அதிகமாக புகுத்துவது எப்படி. மேலும் 6 ஆம் வகுப்புக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் அதில் உள்ளது..” என்று அப்பேராசிரியர் அவருக்கு விளங்கப்படுத்தி அந்தப் பிரச்சினையைத் தீர்த்தார். எனவே சில குற்றச்சாட்டுக்கள் அந்தளவு பொருத்தமானதல்ல. அத்தமிழ் பேராசிரியர் இதனை சரியாகக் கையாண்டதால் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து நாம் தப்பித்தோம்... தமிழினத்தைப் பற்றி அதிகமாக பதிவு செய்வது தமிழர்களுக்கு விருப்பம், அதுபோல சிங்களவர்களுக்கும் அதிகமாக தம்மை பற்றி பதிவு செய்வது விருப்பம். முஸ்லிம்களும் அதுபோலவே விரும்புவார்கள். ஆனால் மாணவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தான் கொடுக்கலாம்” என்கிறார்.
அடுத்த இரு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இவை.
“கடந்த மகாவம்சத் தொகுதிகளில் ஒரு முக்கிய பாத்திரம் கதாநாயகராக முன்னிறுத்தும் போக்கைக் காண்கிறோம். மகாவம்சத்தின் 6 ஆம் தொகுதியில் யார் அப்பேர்பட்ட கதாநாயகன்? இறுதிப்போரை முடித்து வைத்தவர்கள் யார்? பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உரிய இடம் என்ன?”
இதை ஒரு இனப்பிரச்சினையாக நாங்கள் பதிவு செய்யவில்லை. இது ஒரு பிரிவினைவாதப் பிரச்சினையாகத் தான் பதிவு செய்திருக்கிறோம். பயங்கரவாதப் பிரச்சினைகளைத் தான் வரைவிலக்கணப்படுத்திக்கொண்டு எழுதினோம்.
மகாவம்சத்தின் முதல் பகுதியில் துட்டகைமுனு பற்றி கூறுகையில் அந்தப் போரில் பிரதான பாத்திரம் வகித்த தளபதிகளான பத்து இராட்சகர்கள் குறித்து விரிவாக இருக்கிறது. அதுபோல இறுதி யுத்தத்தை வெள்ளவைத்தவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா?
ஆம், நிச்சயம் இருக்கிறது. மகாவம்சத்தின் 6வது தொகுப்பை ஆக்கும் போது அதற்கான அத்தனை கூட்டங்களிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன். யுத்தம் பற்றிய விடயங்களை எழுதும்போது இராணுவத் தரப்பைச் சேர்ந்த பல முக்கிய அதிகாரிகளுடனும் நாங்கள் உரையாடியிருக்கிறோம். அவர்களின் பல ஆவணங்களைத் பரிசீலித்தோம். அதன்படி
மகிந்த ராஜபக்ஷ : அவர் தான் இந்த யுத்தத்துக்கு தேவையான வளங்களையெல்லாம் பெற்றுக் கொடுத்தவர். அதை அவர் சரியாகச் செய்தார். பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய இராஜபக்ச மிகவும் திறம்பட யுத்தத்தை திட்டமிட்து வழிநடத்தினார். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு சிறந்த இராணுவ வீரர். அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு யுத்தத்தை நடத்தினார். வளப் பகிர்வு, திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் இந்த மூன்று தளத்திலும் இம்மூவரின் கூட்டுப் பலத்துடன் தான் இந்த யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது.
மாவிலாறில் இருந்து இந்த யுத்தம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக முக்கிய மேஜர் ஜெனரல் ஒருவர் எம்மோடு எப்போதும் இந்தப் பணியில் ஒத்துழைத்திருந்தார். அவர் கூறும்போது இந்த யுத்தத்தை துட்டகைமுனு மன்னன் பொலன்னறுவை கைப்பற்றிய பாணியல் தான் யுத்த வியூகங்களை வகுத்ததாகக் குறிப்பட்டிருந்தார்.
விஜயபாகு மன்னர் சோழர்களிடம் இருந்து பொலன்னறுவயைக் கைப்பற்ற முயற்சித்து பல தடவைகள் பின்வாங்கி வர நேரிட்டது. இறுதியில் விஜயபாகு மன்னர் மூன்று படைகளை உருவாக்கி பொலன்னறுவைக்கு மேற்கினூடாக ஒன்று படையையும் கிழக்குக்கு ஊடாக அடுத்த படையையும், நடுவில் ஊடறுத்து ஒரு படையையும் அனுப்பினார். அதற்கூடாக இந்தியாவில் மேற்குக்கு படையுதவிகள் வருவதும் தடுக்கப்பட்டன. கிழக்கில் இருந்தும் சமர்களால் நடுவுக்கு வர முடியவில்லை. நடுவில் ஊடறுத்துச் சென்ற விஜயபாகு மன்னர் இறுதியில் பொலன்னறுவையில் கைப்பற்றினார். அதே வழியில் அந்த முன்னுதாரணத்தை வழிகாட்டலாகக் கொண்டு தான் இறுதி யுத்தம் வெல்லப்பட்டது.
மகாவம்சத்துடன் எனக்கு தொடர்பில்லை
பேராசிரியர் சி.பத்மநாதன்
பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களிடம் மேற்படி கருத்துக்கள் குறித்து உறுதி செய்வதற்காக ஒரு நேர்காணலைக் கண்டேன். அவர் தான் அக் குழுவில் இருக்கவில்லை என்றும் ஆனால் கட்டுரைகளை சமர்பித்தேன் என்று கூறினாலும், அவர் எழுதிய பகுதிகளை மகாவம்சம் எங்கும் தனியாக பதிவு செய்யவில்லை. மாறாக அவர் கொடுத்ததாகக் கூறுகின்ற கட்டுரைகளையும் மகாவம்சக் குழு தமக்குத் தேவையானவற்றைத் தரம்பிரித்து எடுத்தாண்டிருக்கிறது என்றே நாம் பொருள்கொள்ளலாம். அதன் அடிப்படையில் பேராசிரியர் பத்மநாதன் அவர்களும் இந்த மகாவம்சத் தொகுதியின் பங்காளராகவே பதிவு செய்துள்ளது மகாவம்சம். ஏற்கெனவே மனோ கணேசன் 2017ஆம் ஆண்டு அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்த காலத்தில் வெளியிட்ட People of Sri lanka என்கிற நூலில் முதல் கட்டுரை மாலனி பேராசிரியர் எந்தகம எழுதிய “சிங்கள சமூகம்” (The Sinhala Community) என்கிற கட்டுரை. இக்கட்டுரை குறித்து ஏற்கெனவே பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் தனது விசனத்தை தெரிவித்திருக்கிறார்.
பேராசிரியர் பத்மநாதன் அவர்களுடனான இந்த நேர்காணல் 2021 ஆம் ஆண்டு யூலை 26 ஆம் திகதி தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டது. நீண்ட நேர்காணலில் இந்த விடயத்துடன் சம்பந்தமில்லாத விடயங்கள் நீக்கப்பட்டு சுருக்கப்பட்ட நேர்காணல் இது.
மகாவம்சம் குழுவில் நீங்கள் அங்கம் வகித்ததாக அந்நூலில் காணக்கிடைகிறது அது சரிதானா?
இல்லை நான் அக்குழுவில் இருக்கவில்லை.
அந்நூலில் காணப்படுகிற பேராசிரியர் பத்மநாதன் நீங்கள் இல்லையா?
நான் அந்தக் குழுவில் இருக்கவில்லை. மகாவம்சத்தை அவர்கள் இப்போதும் எழுதி வருகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதிக்குள் சைவ சமயம் பற்றி அவர்கள் என்னிடம் எழுதச் சொல்லி கேட்டதற்கிணங்க அதற்கு நானும் கட்டுரைகளை எழுதிக் கொடுத்தேன்.
இந்து சமயத்தைத் தவிர வேறெதைப் பற்றியும் நீங்கள் எழுதிக் கொடுக்கவில்லையா?
மகாவம்சக் குழுவில் அங்கம் வகிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அதற்கு உடன்படவில்லை. மகாவம்சத்தோடு தொடர்புபட்ட ஆவணங்கள் பல்வேறு இலங்கை, பிரித்தானியா, நெதர்லாந்து, கோவா, ஜகார்த்தா போன்ற ஆவணக்காப்பங்களில் பரந்து உள்ளன. அங்கெல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் உள்ளன. அனால் இவர்கள் எழுதுவது ஒரு அரசாங்கத்தின் வரலாற்றை எழுதுவது போன்றது. இதைப் போய் பழைய மகாவம்சத்தொடு தொடர்புபடுத்தக் கூடாது.
எல்லாள மன்னனைப் பற்றிய விபரங்கள் குறைவு என்கிற குற்றச்சாட்டை தமிழர் தரப்பில் இருந்து அரசியல் தலைவர்களும், பல்கலைக்கழக மட்ட விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்கள் என்றும் அவர்களே இரண்டு பக்கங்களுக்கு எழுதிக் கொண்டு வந்து தந்ததாகவும் பத்து பதினைந்து பேரைகொண்ட தமது குழுவில் வைத்து இதனை ஆராய்ந்ததாகவும் அந்தக் குழுவில் நீங்களும் இருந்ததாக பேராசிரியர் மாலனி எந்தகம தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார்?
பாடப்புத்தகங்களில் உள்ளவை பற்றி டக்ளஸ் தேவானந்தாவுக்கு முறையிட்டதைத் தொடர்ந்து அவர் தான், தேசிய கல்வி நிருவகத்துடனும், கல்வி அமைச்சுடனும் உரையாடலை ஏற்படுத்தினார்.
அப்படியென்றால் நீங்கள் மகாவம்ச குழுவின் சார்பாக கலந்துகொள்ளவில்லையா?
இல்லை இல்லை. டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டின் பேரில் அதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் கலந்துகொண்டோம். மகாவம்ச குழுவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இது பாட நூல் பற்றியது.
இந்த உரையாடலில் என்னோடு பேராசிரியர் கிருஷ்ணராஜாவும் பேராசிரியர் புஷ்பரட்ணமும் வந்திருந்தார்கள். புஷ்பரட்ணம் அவ்வளவு பேசவில்லை ஆனால் கிருஷ்ணராஜா அதிகம் கதைத்தார். அதில் அவர் பிழையாக சில விடயங்களை கூறிவிட்டார்.
மாலனி எந்தகமவை ஒரு சரியான வரலாற்று ஆசிரியர் என்று கூற முடியாது. அவர் சிஹல உறுமய இயக்கத்தின் முக்கிய ஆதரவாளர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் இருக்கிற போதும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் இவரைத் தான் இதில் வைத்திருக்கிறார்கள். வரலாற்றை புரட்டி பிழையாக எல்லாம் எழுதுகிறார்.
இவற்றை எதிர்த்து நீங்கள் ஒருபோதும் குரல் கொடுத்ததில்லையா?
கூட்டங்களுக்குப் போனால் தானே அதைப் பற்றி கதைக்க.
பாடப்புத்தகங்களில் சரியான அளவு கணக்குகளில் தான் எல்லாளனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் விளக்கியதாக மாலனி எந்தகம கூறுகிறாரே.
அங்கே கதைத்த விடயம் அதுவல்ல. எல்லாளனுக்கு ஒதுக்கிய இடம் போதும் என்றும் நான் கூறவில்லை. கிருஷ்ணராஜா சில பிழைகளை சொல்லி இருந்தார். எள்ளங்குளம் என்று ஒன்று வடமாராட்சியில் இருக்கிறதென்றும் அது எல்லாளனுடைய கட்டுமானம் என்றும் கூறினார். அதைத் தான் நான் அவ்வாறு எழுதப்படாது என்று மறுத்தேன். அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் எல்லாளன் ஆண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லையே. துட்டைகைமுனு ஆண்டதற்கான ஆதாரமும் அங்கு இல்லை. ஆனால் துட்டகைமுனு தான் இந்த தேசத்தை ஒரே நாடாக ஆக்கினார் என்கின்றனர்? இது வெறும் ஐதீகம் அல்லவா. எங்கே கல்வெட்டுண்டு? எங்கே வரலாற்று ஆதாரம் இருக்கிறது? அவர் ருகுணவையும், அனுராதபுரத்தையும் இணைத்து ஆண்டார் சரி, மலைநாட்டை ஆண்டதற்கு என்ன ஆதாரம் உண்டு? மேற்கு கரையோரத்தை ஆண்டதற்கான ஆதாரம் என்ன இருக்கு? வடக்கிலே என்னே ஆதாரம் இருக்கிறது? இவையெல்லாம் புத்தகத்தில சொல்றது அல்லோ... நீங்கள் அவர்களின் மாகாவம்சத்தை பொருட்படுத்தப்படாது!
தமிழருக்கு தாயகம் இல்லையென்று காசு கொடுத்து தான் எழுத வைக்கினம். தமிழர்கள் வரலாறு படிப்பதுமில்லை. ஈடுபாடு காட்டுவதுமில்லை. வரலாறு படிக்காவிட்டால் எமது தாயகத்தை நிரூபிக்கவும் முடியாது.
அதற்கு டச்சு, ஆங்கில ஆவணங்களையெல்லாம் படிக்கவேண்டும். அன்றைய அறிக்கைகள், குடித்தொகை அறிக்கைகள் போன்ற அறிக்கைகளையெல்லாம் படிக்க வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இதில் எதையும் செய்யவில்லை.
ஒரு மூத்த வரலாற்று அறிஞராக மகாவம்சம் பற்றிய உங்கள் எதிர்வினைகளை நீங்கள் செய்ததில்லையா?
எங்களிடம் கேட்டால் தானே அதைப் பற்றி சொல்லலாம். மகாவம்சத்தை இப்படி எழுதுவது பொருத்தமில்லை என்பதால் அதைச் சொல்லி அந்தக் குழுவில் இடம்பெறுவதை நான் மறுத்துவிட்டேன்.
நேர்காணல் - என்.சரவணன்
நன்றி - ஜீவநதி
மகாவம்ச மாலனி எந்தகம by SarawananNadarasa on Scribd
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...