ராகுல சாங்கிருத்தியாயன் (09.04.1893 – 14.04.1963) என்கிற பெயரை அறியாத ஆழமான தமிழ் வாசகர்கள் எவரும் இருக்க முடியாது. அவரை இந்திய அறிஞராக மட்டுமே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரை ஆய்வெழுத்தாளராக ஆக்கியதில் இலங்கையின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அவரைப் பற்றி வெளிவந்த எந்த நூலிலும் இலங்கைப் பின்னணி குறித்த விபரங்கள் ஓரிரு வரிகளுக்குள் மாத்திரமே சுருங்கி விட்டிருப்பதை காண முடிகிறது. இக்கட்டுரை அவரின் பல நூல்களையும், அவரைப் பற்றிய பல நூல்கள், ஆவணங்கள் என்பவற்றில் இருந்தும் தேடித் திரட்டி எடுக்கப்பட்டவற்றின் தொகுப்பாகும்.
இதில் உள்ள ஆச்சரியமும், வேதனையுமான விடயம் என்னவென்றால் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரின் நூல்கள் எதிலும்; அவரைப் பற்றிய சுயசரிதைக் குறிப்புகளில்; இக்கட்டுரையில் வெளியிடப்பட்ட இலங்கையுடனான தொடர்பு பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் இல்லாதது தான்.
அவருக்கு ராகுல சாங்கிருத்தியாயன் என்கிற பெயர் சூட்டப்பட்டதே இலங்கையில் தான் என்பதும், அவர் பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டு பௌத்த ஆய்வுகளில் முன்னணி அறிஞராக ஆனதிலும் அவரது இலங்கைப் பயணம் தான் என்பதையும் அறிகிற போது வியப்பே மேலிடுகிறது. அவரின் படைப்புகளில் ஓரிரு நூல்களைத் தவிர எஞ்சிய அனைத்தும் இலங்கையில் இருந்து அவர் திரும்பிய பின்னர் வெளிவந்தவை தான்.
ராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. அவர் 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம், பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். கேதார்நாத் பாண்டே என்கிற இயற்பெயருடன் இவர் தனது பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்தததன் பின் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார்.
ஆரம்பப் பள்ளிப்படிப்பை மட்டுமே முறையான கல்வியாகக் கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்கிற பட்டமும் பெற்றவர். தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழையும் அறிந்து கொண்டார்.
அவர் காசியில் சமஸ்கிருதம், அரபு, பர்சிய மொழிகளை மரபுரீதியாகக் கற்றுக்கொண்டார். ஏனைய 30க்கும் மேற்பட்ட மொழிகளை அவர் சுயமாகவே கற்றுக்கொண்டார். அவர் எழுதியுள்ள நூல்களைப் பட்டியலிட இக்கட்டுரை போதாது. அவர் எழுதிய எண்ணற்ற டயரிக் குறிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.
தமிழில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் வாசிக்கத் தவறியிருக்காத நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை”. “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல் அது. அது மட்டுமன்றி மேலும் பல முக்கிய நூல்களை நமக்குத் தந்தவர். இந்த நூல் இந்திய, இலங்கை மொழிகளில் மாத்திரமல்ல ரஷ்ய, செக், போலிஷ், சீன மொழி உள்ளிட்ட பல அலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்ட நூல்.
1920களின் ஆரம்பத்தில் அவர் தீவிர அரசியல் பணிகளில் இணைத்துக்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு வடிவமான ஒத்துழையாமை இயக்கத்திற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு 31.01.1922 அன்று அவரை பிரிட்டிஷார் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தும் கைதிகளை விழிப்புணர்வூட்டுவதற்காக பாடல்கள், கவிதைகள், நாடகங்களை எழுதினார். அவரின் எழுத்துக்கள் சிறைக்கு வெளியில் இரகசியமாக அனுப்பப்பட்டது பிரசுரமும் செய்யப்பட்டன. அடிக்கடி கைதாகி சிறையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஜில்லா செயலாளராகவும் இருந்திருக்கிறார்.
அநாகரிக தமபால தொடர்பு
இந்தக் காலப்பகுதியில் தான் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இருக்கின்ற “புத்தகயா” ஆலயத்தை இந்துக்களிடம் இருந்து மீட்டு பௌத்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களின் படையெடுப்பைத் தொடர்ந்து முன்னர் இருந்த பௌத்த ஆலயம் சின்னாபின்னமாக்கப்பட்டு பிற் காலத்தில் அங்கே இருந்த புத்தரை சிவனென்று வழிபட்டு ஒரு இந்துக் கோவிலாகவே மாற்றிவிட்டிருந்தனர்.
இன்று பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாக கொண்டாடப்படும் அநகாரிக்க தர்மபால அப்போது இலங்கையில் இருந்து அங்கு சென்றவேளை இதனைக் கண்ணுற்று இந்துக்களிடம் இருந்து அதை மீட்பதற்காக “மகாபோதி சங்கம்” என்கிற இயக்கத்தை ஆரம்பித்து தீவிரமாக இயங்கிவந்தார். (அந்த இயக்கத்தின் அந்த முயற்சி பின்னர் வெற்றிபெற்றது. இந்த மீட்பில் ராகுலின் பங்கும் கணிசமானது.)
புத்தகயா அமைந்துள்ளதும் பீகாரில் தான். அங்கே சாப்ரா (Chhapra) என்கிற பிரதேசத்தின் காங்கிரஸ் கொமிட்டியை ராகுல் கூட்டி அங்கே புத்தகயாவை மீட்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த பரிந்துரைகளை காங்கிரசின் வருடாந்த தேசிய மாநாட்டில் ஒரு தலைப்பாக சேர்க்கப்பட்டது. அங்கே அநகாரிக்க தர்மபாலாவும் தனது சார்பில் பிக்குமார்களை அனுப்பிவைத்தார். அங்கு நிகழ்ந்த பல தரப்பட்ட மொழியிலான விவாதங்களை ராகுல் மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் இது குறித்து ஆராய்வதற்காக அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அமைத்த கொமிட்டியில் ராகுல் முக்கிய பங்காற்றினார். புத்தகயாவை மீட்கும் முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இலங்கைக்கு புறப்பட்டார்.
இலங்கை விஜயம் – பௌத்த தீட்சை – பெயர் மாற்றம்
அநகாரிக்க தர்மபாலவின் சிஷ்யரும் மகா போதி சங்கத்தின் செயலாளருமான பிரமச்சாரி தேவபிரிய வலிசிங்க இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். வித்தியாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த நாராவில் தர்மரத்ன தேரர் ஒரு தந்தியின் மூலம் அவருக்கு அழைப்பையும் வழிச்செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தார். அவர் லுனுபொகுனே ஸ்ரீ தம்மானந்த தேரரின் சிஷ்யர்.
ராகுல் 16.05.1927 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார். கல்கத்தாவில் மகாபோதி சங்கம் அவருக்கு உதவியது. வித்தியாலங்கார பிரிவெனாவில் அவர் சுமார் 19 மாதங்கள் (16 May 1927 to 1 December 1928) பௌத்த கல்வியைக் கற்றார்.
அவர் தேரவாத பௌத்தத்தால் மேலும் ஈர்க்கப்பட்டு லுனுபொக்குனு ஸ்ரீ தம்மானந்த தேரரின் கீழ் வித்தியாலங்கார பிரிவெனாவிலேயே பௌத்த தீட்சை பெற்று காவியுடை அணிந்து பௌத்த பிக்குவாக ஆனார். 1923 ஆம் ஆண்டு 20 வது வயதில் அவர் வைஷ்ணவ துறவு நிலைக்குச் சென்ற போது அவர் கேதார்நாத் பாண்டே என்கிற தனது இயற் பெயரை பாபா ராம் உதார் தாஸ் என்கிற பெயரை சூட்டிக் கொண்டார். பின்னர் 1930 ஆம் ஆண்டு பௌத்த துறவியாக தீட்சை பெற்றபோது அப்பெயரையும் மாற்றி “ராகுல சாங்கிருத்தியாயன்” என மாற்றிக்கொண்டார். ராகுல என்பது புத்தரின் மகனின் பெயர். இலங்கையில் பல பிக்குமார்கள் தமக்குச் சூட்டிக்கொண்ட பிரபலமான பெயர். இலங்கையில் சிங்கள மொழியில் ராகுல என்றே அழைப்பார்கள். ஆனால் அவர் தன்னை “ராகுல்” என்றே அழைத்துக்கொண்டார். சாங்கிருத்தியாயன் என்பது அவரின் குடும்ப கோத்திரப் பெயர். அவரின் மூல நூல்களில் எல்லாம் “Rahul Sankrityayan” என்றே இருப்பதைக் கவனிக்கலாம். அவரின் வாழ்நாள் முழுதும் இந்தப் பெயரிலேயே அவர் இயங்கினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கேணல் ஒல்கொட், ரஷ்யாவைச் சேர்ந்த பிலாவட்ஸ்கி, இந்தியாவைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் போன்றோர் கூட இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து பௌத்த தீட்சை பெற்று பௌத்தர்களாக ஆன நமக்குத் தெரிந்த பிரபலமானவர்கள்.
அவர் முறைசார் கல்வியை இலங்கையில் தான் கற்றார். பல பௌத்த நூல்களைப் படித்தார். இந்திய கலாச்சார வரலாறு பற்றிய தனது அறிவையும் விரிவுபடுத்தினார். இலங்கையில் Pali text society வெளியீடுகளிலும் லண்டன், பம்பாய், வங்காளம் இலங்கை ஆகிய கிளைகளைக் கொண்டிருந்த ரோயல் ஏசியாடிக் சொசைட்டியின் பருவ இதழ்களிலும் அவர் ஆர்வம் கொண்டு எழுதினார். இலங்கையில் ராகுலுக்கு தேவைப்பட்ட நூல்களை வாங்கிக் கொடுத்து உதவியர் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக, அரசபை உறுப்பினராக, அமைச்சராக எல்லாம் இருந்த சேர் டி.பி.ஜெயதிலக்க. ராகுல் இலங்கையில் சிங்களத்தையும் கற்றுக்கொண்டார்.
அவர் எழுதிய “இந்திய கலாச்சாரமும் பௌத்த விமர்சன பாதையும்” (භාරතීය සංස්කෘතිය හා බෞද්ධ විචාර මාර්ගය) என்கிற தலைப்பில் ஒரு சிங்களக் கட்டுரையைக் காணக் கிடைத்தது. அதில் இந்தியாவில் பௌத்தம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து நாம் இதுவரை அறியாத விபரங்கள் அளவற்றை தந்திருக்கிறார். இக்கட்டுரை எங்கே எப்போது வெளிவந்தது என்கிற விபரங்களை அறிய முடியவில்லை. சிங்களத்தில் வெளிவந்திருப்பதால் அது சிங்களத்தில் எழுதப்பட்ட ஒன்றா அல்லது சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒன்றா என்பதையும் அறிய முடியவில்லை.
பிற்காலத்தில் இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியாக ஆன ராஜேந்திர பிரசாத் இந்திய காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக இருந்த காலத்தில் 1927 டிசம்பரில், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்குப் சென்று விட்டு அங்கிருந்து இலங்கைக்கு விஜயம் செய்தார். அவருக்கு வழிகாட்டியாக ராகுல் இருந்தார். அவரின் பயண அறிக்கையை பத்திரிகைளுக்கு எழுதினார். அப்போது அலகாபாத்தில் இருந்து வெளியாகும் “சரஸ்வதி” என்ற ஹிந்தி மாத இதழில் இலங்கையைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இலங்கையில் சில உள்ளூர் மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுத்தார். இலங்கையில் இருந்து அவர் செல்லும் போது பௌத்த ஆய்வுகளுக்காக திபெத்துக்குச் செல்ல வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் 1931 இல் இந்தியா திரும்பினார். இந்தியாவில் சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டு மீண்டும் 1931 இல் இலங்கை வந்து ஓராண்டு தங்கி இருந்தார்.
இலங்கையில் இருந்து சென்றதன் பின்னரும் இலங்கைக்கு அடிக்கடி வந்தார். சீன, நேபாள், தீபெத் பகுதிகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது அதுவரை கண்டுபிடிக்கபடாத முக்கிய புராதன பௌத்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அவற்றை வெளியில் கொண்டுவந்தார்.
திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வந்து சேர்த்தார். இவை முன்னர் இந்தியாவில் அழிந்துபோன நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும்.
லுனுபொக்குனு ஸ்ரீ தம்மானந்த தேரரின் கீழ் ராகுல் பௌத்த உயர் பட்டப்படிப்பை வித்தியாலங்கார பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவருக்கு அப்பல்கலைக்கழகத்தில் பௌத்த திரிபிடகம் பற்றிய கற்கையை முடித்துக் கொண்டதால் அவருக்கு திரிபீடகாச்சார்ய மகா பண்டித பேராசிரியர் என்கிற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் தந்தையாக ஆகியிருந்த நிலையில் இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் (இன்றைய களனி பல்கலைக்கழகம்) அவரை தம்மோடு பணியாற்றும்படி அழைத்தது. 1959 இலிருந்து 1961 வரை அவர் அங்கே பேராசிரியராக பணியாற்றினார். அது மட்டுமன்றி வித்யாலங்கார பல்கலைக்கழகம் 1959ஆம் ஆண்டு ஆரம்பித்த “தத்துவம் மற்றும் ஆராய்ச்சி” பீடத்தின் முதல் பீடாதிபதி ராகுல சாங்கிருத்தியாயன் என்பதையும் இங்கே பதிவு செய்யவேண்டும்.
பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட ராகுல் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
“ஹீனயான-மகாயான இருவகையான பெளத்தங்கள் முறையே வடக்கு பௌத்தம் - தெற்கு பௌத்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, இலங்கையில் பௌத்த துறவிகள் மத்தியில் நடந்த ஆழமான கோட்பாட்டு விவாதங்களில் பாரம்பரிய இந்திய தத்துவம் கிட்டத்தட்ட முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. பௌத்த பிக்குமார் இந்திய தத்துவத்துக்கு மாறாக கவிதை அழகியல் மற்றும் ஜோதிடம் என்பவற்றை சமஸ்கிருதத்தின் மூலம் கற்றனர். அந்த விவாதங்களில் இருந்து சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது தம்ம அறிவியல் (scholastic) அல்லது சமஸ்கிருத இலக்கிய மரபே. இலங்கையின் தற்கால தேரவாத மரபில் உருவாகியிருந்த இந்தத் தத்துவத் தனிமை வித்யாலங்காரத் துறவிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வித்யாலயங்காரவில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தில் அந்த சமச்சீர் தத்துவத்தை இணைத்த இரண்டு முன்னோடிகளைக் குறிப்பிட வேண்டும். அந்த இருவர் வித்யாலயங்காரா பிரிவெனவின் அதிபர் ஸ்ரீ தம்மானந்த தேரர், அடுத்தவர் இந்தியாவிலிருந்து வந்திருந்த அப் பிரிவெனவின் சமஸ்கிருத ஆசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன்.
வித்யாலங்கார பிரிவெனாவில் வெளிநாட்டு அறிஞர்களின் சேவைகளை சரியான முறையில் பயன்படுத்தியதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவில் இருந்து சமஸ்கிருதம் கற்பிக்க வந்த அறிஞர் ராகுல சாங்கிருத்யாயனாரே சிறந்த உதாரணம். அவர் 1927 ஆம் ஆண்டு பிரிவெனாவில் சேர்ந்தார். வித்யாலங்கார பிரிவெனாவில் மூன்று வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். மேலும் வித்யாலங்கார பிரிவெனாவின் பௌத்த துறவிகள் மத்தியில் இருந்து எழுந்த “அதிருப்தி அறிவுசார் இயக்கம்” (විසම්මුතික බුද්ධි ව්යාපාරය) தொடங்கிய காலமும் அதுதான். சாங்கிருத்யாயன் சமஸ்கிருத அறிஞர் மட்டுமல்ல, மேற்கத்திய தத்துவமும். பண்டைய இந்திய தத்துவம் மற்றும் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு செயல்பாட்டாளராகவும் இருந்த ஒரு அறிவுஜீவி. வித்யாலங்கார பிரிவெனாவில் பாலி மொழி மற்றும் பௌத்த தத்துவத்தை மேலும் கற்று, சமஸ்கிருத மொழி மட்டுமன்றி மேலதிகமாக வித்யாலங்கார பிரிவெனா வகுப்புகளின் இளம் துறவிகளுக்கு ஐரோப்பிய தத்துவம், பாரம்பரிய இந்திய தத்துவம் மற்றும் மார்க்சியம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதாக நாரவில தம்மரதன தேரர் குறிப்பிடுகிறார்.”
இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் பேராசிரியராக வைத்துக் கொண்டது, சோவியத் யூனியனில் லெனின்கிராட் பல்கலைக்கழகம் பௌத்த அறிஞராக (Scholar) அவரை அழைத்து அவரின் அறிவைப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் அவரின் பட்டத்தை முறையான பட்டமாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை எந்தப் பல்கலைக் கழகமும் கல்வி நடவடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இறுதிவரை அவரை எந்த இந்தியப் பல்கலைக்கழகமும் உரிய கௌரவித்தை அவருக்கு கொடுக்கவுமில்லை. அவர் காலமானதன் பின் அதே ஆண்டு அவருக்கு இந்திய உயர் விருதான பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது.
ஊர் சுற்றியின் யாத்திரைகள்
பயணங்கள் தருவது போன்ற அனுபவங்களையும் படிப்பினைகளையும் உலகில் வேறெதுவும் தந்துவிடாது என்பது வரலாற்று உண்மை. ராகுலும் ஒரு நாடோடியைப் போல ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். சாதாரண பயணம் அல்ல. தன் வாழ்நாளில் 50 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர். அவரின் பயண அனுபவங்களைப் பற்றி அவரே தனியாக எழுதிய “ஊர்சுற்றிப் புராணம்” என்கிற நூல் அனைவரும் வாசித்து இன்புற வேண்டிய நூல். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என்று இன்றும் அழைக்கப்படுபவர் ராகுல்.
அவர் எழுதிய பயணக் கட்டுரை தொகுப்பு நூல்களில் ஊர்சுற்றிப் புராணம் மட்டுமே தமிழில் வெளிவந்திருக்கிறது என்பதையும் இங்கே கூறியாக வேண்டும். இதை விட கின்னர் தேஷ் (Kinnar Desh) என்கிற நூலை எழுதினார். அது ஹிமாலய பகுதிகளுக்கு பயணம் செய்து அவர் கண்டெடுத்த தொல்லியல் ஆதாரங்களையும், அனுபவங்களையும் வைத்து எழுதப்பட்ட நூல். அதை விட அவர் திபெத் பயணம் செய்து அதுபோன்றே பலவற்றை கண்டு பிடித்த அனுபவங்களை திபெத் யாத்ரா (Tibbati Yatra) என்கிற நூலை எழுதினார். சோவியத் யூனியன் பயணம் பற்றிய அனுபவத்தை (Soviyat Bhumi) என்கிற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். இரண்டு தொகுதிகளும் சேர்ந்தே சுமார் 1200 பக்கங்கைக் கொண்டது. இதை விட அவர் "ராகுல் யாத்ராவளி” (Rahul Yatravali) என்கிற இரண்டு பெரிய தொகுதிகளைக் கொண்ட நூலை வெளியிட்டார். இது 1949 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நூலின் முதலாம் பாகம் இந்திய உபகண்டத்தில் அவர் பயணித்த இடங்களைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளை எழுதியுள்ளார். 425 பக்கங்களைக் கொண்ட அந்நூலில் பல அத்தியாயங்களும் அவற்றுக்குள் பல உட் தலைப்புகளையும் கொண்டிருக்கிறது. இந்த நூலில் இரண்டாவது அத்தியாயத்தில் அவர் அதற்கு முன்னர் எழுதிய “லங்கா” நூலின் உள்ளடக்கத்தை அப்படியே உள்ளடக்கியிருக்கிறார்.
ராகுல் யாத்த்ராவளி நூலின் இரண்டாம் பாகத்தில் பயணவியல் தொடர்பான தத்துவக் கட்டுரைகளின் தொகுப்பாகும்.
இதுவரை வெளிவராத “லங்கா” நூல்
“லங்கா” நூலை அவர் இலங்கைக்கு முதல் தடவை வந்த அதே ஆண்டிலேயே வெளியிட்டார் என்பதையும் கவனிக்குக. இலங்கையில் அவர் பெற்ற அனுபவங்களை விபரித்து “லங்கா” (लंका) நூலை அவர் எழுதி முடித்தார். இக்கட்டுரைக்காக அந்த நூலை தேடிக்கண்டுபிடிக்க முடிந்தது. 1935 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் ஹிந்தி எழுத்துக்களில் சமஸ்கிருத மொழியில் 240 பக்கங்களைக் கொண்டது. அதில் உள்ள பக்கங்களை தோராயமாக மொழிபெயர்த்து அதன் உள்ளடக்கத்தை அறிந்துகொள்ள முடிந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை கொழும்பு இடங்களைப் பற்றிய விபரிப்புகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பல புகைப்படங்களையும் உள்ளடக்கிய அந்த நூல் இதுவரை தமிழ், சிங்கள அல்லது வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை என்பதையும், இலங்கை எழுத்துலகில் அதைப் பற்றி எங்கும் அறியப்படவில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. 1950 இலிருந்து வெளியான அவரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்கிற தலைப்பில் வெளியான 6 தொகுப்புகளில் முதலாவதில் “லங்கா” உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
உலகப் பிரசித்தி பெற்ற நூலாக பிற்காலத்தில் ஆன “ஊர்சுற்றிப் புராணம்” போன்ற பயண அனுபவ நூலை எழுதிய அவர்; இலங்கையில் அவர் வாழ்ந்த சொற்ப காலத்துக்குள் அவர் பயணித்த இடங்களையும் அவற்றின் பின்னணி, வரலாறு மக்களின் வாழ்வியல் என்பவற்றையும் அழகாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பின்வரும் ஏழு தலையங்களில் அவர் அதனை எழுதியுள்ளார்.
1. அனுராதபுரம் : இலங்கையின் தலைநகரம்
2. பொலன்னறுவை அலது புலஸ்தியபூர் (புலஸ்திகம)
3. கண்டி
4. கொழும்பு சுற்றுப் பயணங்கள்
5. இலங்கை மக்களும், பௌத்த துறவிகளும்
6. இலங்கையில் இந்துக்கள்
7. Adam’s peak (சிவனொளிபாதமலை)
பண்டைய இலங்கை நாகரிகம், பௌத்த மரபு, காலனித்துவம், மக்களின் வாழ்வியல், தென்னிந்தியத் தொழிலாளர்கள், அன்றைய அரசியல் சூழல் என பலவற்றை அவர் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்துக்கு ஏராளமான படைப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பது உண்மை. இந்தி என்பதாலோ என்னவோ இது வரை “லங்கா” கண்டுகொள்ளப்படவில்லையோ தெரியவில்லை.. அது மட்டுமன்றி ராகுல் பற்றி சிங்களத்தில் இதுவரை ஒரு சிறிய கட்டுரையைக் கூட என்னால் இனங்காண முடியவில்லை. இலங்கையைப் பொறுத்தளவில் தமிழர்களை விட சிங்கள பௌத்தர்களால் கொண்டாடப்படவேண்டியவர் ராகுல். வால்காவிலிருந்து கங்கை வரை நூல் மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை கவனிக்க முடிகிறது.
“சிங்கள வீர புருஷர்கள்”
இதை விட “சிங்கள வீர புருஷர்கள்” என்கிற இன்னொரு இந்தி மொழி நூலையும் அவர் எழுதியிருப்பதை அறிய முடிகிறது. “சிம்ஹல் கே வீர் புருஷ்” (सिंहल के वीर Simhal ke Vir Purush) என்கிற அந்த நூலின் பிரதியை தேடி எடுக்க முடியவில்லை; ஆயினும் அந்நூல் இந்தி மொழியில் இன்றும் ஒன்லைனில் விற்பனைக்கு உண்டு என்பதை அறிய முடிகிறது. இந்த நூலில் பிரதானமாக- துட்டகைமுனு மன்னன்: இலங்கையை ஒருங்கிணைத்து சோழர்களின் படையெடுப்பை முறியடித்தவர்.
- முதலாம் பராக்கிரமபாகு: சிங்களப் பேரரசை விரிவுபடுத்தி பொற்காலத்தை நிறுவிய சக்திவாய்ந்த அரசன்.
- விஜயபாகு I: போர்த்துக்கேயர்களுக்கு எதிரான சிங்கள எதிர்ப்பை வழிநடத்தியவர்
போன்ற விடயங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்த நூல் வெளிவந்த ஆண்டு 1961 என்பதால் இந்த காலத்தில் தான் அவர் இலங்கையில் பேராசிரியராக பணியாற்றிய காலம் என்பதையும் கருத்திற் கொண்டால் இந்த நூல் இலங்கையில் இருந்து போது எழுதபட்டிருப்பதை நம்மால் அனுமானிக்கலாம்.
வர்னாசிரமதர்ம எதிர்ப்பு, வர்க்க விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு, பிற்காலத்தில் பொதுவுடைமை கொள்கையில் தீவிரம், அம்பேத்காருக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டு விடயத்தில் காந்தியின் மீது கடுப்பு, பாகிஸ்தான் பிரிவினை தொடர்பில் “அம்மக்களின் கருத்துக்கே முன்னுரிமை” போன்ற அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இன்றும் வியக்கவைப்பவை.
தனது பத்து வயதிலேயே காசியை விட்டுக் கிளம்பும் ராகுல சாங்கிருத்தியாயன் அதிலிருந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் பெரும் பயணங்களில் தனது வாழ்வைக் கழித்தார். அவரின் காலத்தில் அவரளவு பயணங்களை மேற்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. அதுவும் அந்தப் பயணங்கள் அவரை புடம்போட்ட விதத்தை அவரின் எழுத்துக்களில் வாயிலாக அறியமுடியும். தத்துவம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், ஆன்மிகம், அரசியல் விஞ்ஞானம், மெய்யியல் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் அவரது எழுத்துக்கள் விரிந்திரிப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். அவர் எழுதி பதிப்பிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியலே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதேவேளை அவரின் வெளிவராத எழுத்துக்கள் இன்னும் எத்தனையோ உண்டு. அவர் இந்தி, சமஸ்கிருதம், பாளி, ஆங்கிலம் என இன்னும் பல மொழிகளை கற்றிருந்தாலும், அவரின் எழுத்துக்கள் பெரும்பாலும் இந்தி மொழியிலேயே வெளிவந்திருக்கிறது. அவற்றில் பல நூல்கள் வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில நூல்கள் இந்தி எழுத்துக்களின் மூலம் சமஸ்கிருத மொழியில் எழுதியிருக்கிறார்.
இலங்கையில் இருந்து அவர் பௌத்தராக திரும்பியதன் பின்னர் அவர் முக்கிய ஆறு பௌத்த நூல்களை முதன்முதலாக இந்தி மொழியில் எழுதி வெளியிட்டார்.
1. Buddha-Charya (பௌத்த சரியா) 1930
2. Dhammapada (தம்மபதம்) 1933
3. Majjhima-Nikaya (மஜ்ஜிம நிக்காய) 1933
4. Vinaya Pitaka (வினய பீடகம்) 1934
5. Dirgha Nikaya (தீர்க நிக்காய) 1935
6. Tibbat mein Bauddha Dharma (திபெத்தில் பௌத்தம்) 1935
7. Bauddha Sanskriti (பௌத்த கலாசாரம்) 1952
இப்பட்டியலில் மஜ்ஜிம நிக்காய உள்ளிட்ட நூல்கள் பிரகிருதி மொழியில் இருந்து ராகுலால் இந்தி மொழியில் கொண்டு வரப்பட்டவை என்பதை கவனிக்குக.
அநகாரிக தர்மபாலவால் தொடங்கப்பட்ட “The Maha – Bodhi” சஞ்சிகையில் 1936 ஆம் ஆண்டு இதழ்களில் ராகுல சாங்கிருத்தியாயன் பற்றிய விபரங்களைக் காண முடிகிறது. அவரை “Tiripitakachariya Bhikshu Sri Rahula Sankrityayana” என்றே அவ்விதழ் விளிப்பதைக் காண முடிகிறது. காஷ்மீர் ஸ்ரீநகரில் அவர் செய்த பௌத்த உரைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதில் மெச்சுகிறது.
இன்னோர் இடத்தில் “வஜ்ஜிரயான” அறிமுகப்படுத்தப்பட்டதனாலேயே இந்தியாவிலிருந்து பௌத்தம் இல்லாமல் போனமைக்கான காரணம்” என ராகுல விபரித்திருப்பதை குறிப்பிடுகிறது.
பிக்கு ஜகதிஷ் காஷ்யப (Bhikkhu Jagadish Kasyapa, M.A.) என்பவர் எழுதிய கட்டுரையொன்றில்
“நம் ஹிந்தி இலக்கியம் இத்துறையில் கிட்டத்தட்ட வெறுமையாகவே ஆகி விட்டமை பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. நான்கு அல்லது ஐந்து வருடங்கள் ராகுல சாங்கிரித்யாயன் அவர்களின் கடினமான உழைப்பின் விளைவாக தீக நிக்காய, மஜ்ஜிமா நிக்காய, புத்தச்சரிய, வினய பீடகம் போன்ற பல மதிப்புமிக்க புத்தகங்கள் எங்களிடம் இப்போது உள்ளன. அவர் தம்மத்துக்கும் இந்தி இலக்கியத்துக்கும் பெரும் சேவை செய்துள்ளார்.” என்கிறார்
(தீக நிக்காய என்பது திரிபீடகத்தின் ஒரு பகுதியாகும். 34 சூத்திரங்களைக் கொண்ட அந்த நூல் புத்தரின் சமகாலத்து தத்துவ ஞானிகளின் கருத்துகளை உள்ளடக்கியதாகும் )
அதே 1936 டிசம்பரில் வெளியான இதழில் திபெத்துக்கு போகும் வழியில் (On way to Tibet) என்கிற ஆங்கிலக் கட்டுரை ஒன்றை எழுதியிருப்பதைக் காண முடிகிறது. அக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே “நேபாளில் இருந்த இரண்டு மாதங்களில் “தீக நிக்காய” நூலின் எழுத்து சரிபார்ப்பை நிறைவு செய்துவிட்டேன். அதில் தவரவிடப்பட்டிருந்த மூன்று அத்தியாயங்களும் இப்போது அதில் சேர்க்கப்பட்டுவிட்டது.” என்கிறார். மொத்தம் பத்து பக்கங்களைக் கொண்ட அந்த பயண அனுபவக் கட்டுரையின் இறுதியில் “தொடரும்...” என்று காணப்படுகிறது. மீண்டும் அடுத்த இதழில் 16 பக்கங்களில் அந்தக் கட்டுரையின் அடுத்த பாகம் வெளிவந்திருக்கிறது.
ஒரு மாக்ஸியவாதியாக
பிற்காலத்தில் அவர் மாக்ஸிய இலக்கியங்களைக் கற்று ஒரு மாக்சியவாதியாக ஆனார். இந்திய பல்கலைக்கழகங்கள் அவரைக் கண்டுகொள்ளாத காலத்தில் அவரின் புலமையைக் கண்டு லெனின்கிராட் பல்கலைக்கழகம் இரு தடவைகள் அவரை பணியாற்ற அழைத்தது.
ராகுல் தனது தொடர்ச்சியான சமூக விஞ்ஞானத் தேடல்களுக்கு ஊடாக மாக்ஸிய சிந்தனையால் கவரப்பட்டார். மாக்சியவாதியாகவே ஆனார். பீகார் சோசலிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தராக அவர் இருந்தார். அன்றைய பிரிட்டிஷ் ஆரசு இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தபோது அதை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி சிறை வாழ்க்கை அனுபவித்தார். அதன்பின்னர் அவர் பௌத்தத்தை மாக்சியத்துக்கூடாக எப்படி அணுகவேண்டும் என்று “மாக்சிய அணுகுமுறையில் பௌத்தம்” (Buddhism: The Marxist Approach) என்கிற நூலை எழுதினார். அதை விட மேலே குறிப்பட்ட “சோவியத் தேசம்” என்கிற பெரு நூலும் முக்கியமானது. மேலும் அவர் ஸ்டாலின் (1954), லெனின் (1954), கார்ல் மார்க்ஸ் (1954) மாஓ சேதுங் (1954) ஆகிய மாக்சிய தலைவர்களைப் பற்றிய சுயசரிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். அவரின் மாக்சிய பாத்திரம் குறித்து பல கட்டுரைகளும் ஆய்வுகளும் உள்ளன. அந்த வரிசையில் “Rahula Sankritayan: The Buddhist-Marxist Dialogue” என்கிற கட்டுரை குறிப்பிடத்தக்கது..
இலங்கையில் இருந்த காலமே அவரின் உடல்நிலை குன்றிப் போன காலமாக அமைந்தது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என ஒன்றன்பின் ஒன்றாக வந்து இறுதியில் அவர் நினைவாற்றலையும் இழந்தார். ஏழு மாதங்கள் சோவியத் யூனியனில் சிகிச்சை பெற்று 1963 ஏப்ரல் 9 ஆண்டு நாடு திரும்பினார். இந்தியா திரும்பி ஐந்து நாட்களில் ஏப்ரல் 14 அன்று அவர் டார்ஜிலிங்கில் காலமானார். இறுதி இரண்டாண்டுகள் அவர் நினைவாற்றலை இழந்தே இருந்தார்.
ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய சுமார் பதினைந்து நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம். குறைந்தபட்சம் அவர் இலங்கை பற்றியும், பௌத்தம் பற்றியும் எழுதிய எஞ்சிய நூல்களாயினும் முதலில் தமிழ் மொழியில் வெளிக்கொணர முடியுமாயின் தமிழ் ஆய்வுலகுக்கு இன்னும் பேருதவியாக அமையும்.
மேலதிக உசாத்துணை
- Prabhkar Machwe, Rahul Sankrityayan, Sahitya Akademi, 1978
- Johannesbeltz, Mahar, Buddhist And Dalit, Religious Conversion and Social-Political Emancipation in Contemporary Maharashtra, Manohar Publishers, 2005
- Alaka Atreya Chudal – “Rahul Sankrityayan and the Buddhism of Nepal” - European Bulletin of Himalayan Research 46: 62-87 (2015)
- The Buddhist Vol – VI-VII, Krishta Kunj, 1937
- பிரபாகர் மாச்வே- இந்திய இலக்கிய சிற்பிகள் ராகுல் சாங்கிருத்யாயன் – ராகுல் சாங்கிருத்தியாயன் – 1986
- Rahul Sankrityayan – “Lanka” – Sahitya sevak sangam, 1935
- கலாநிதி கஹாவத்தே சிறி சுமேத ஹிமி – “புராதன இந்தியாவின் முதல் பௌத்த விகாரை” – திவயின (01-10.2014)
- Ven. Dr. Khammai Dhammasami, "The Twentieth century: Early Efforts" - Rahula Sankritayan: The Buddhist-Marxist Dialogue, (Teaching Dhammain New Lands), Academic Papers presented at the 2nd IABU Conference Mahachulalongkornrajavidyalaya University, Main Campus Wang Noi, Ayutthaya, Thailand, 2012
- මහාචාර්ය ජයන්ත අමරසිංහ, “සොමිබර පවර නිසයුර නුවණ සුරගුර ලුණුපොකුණේ ශ්රී ධර්මානන්ද නා හිමියෝ”, සිළුමිණ, 27.01.2024
- Anoop Tiwari, Rahul Sankrityayan – The Forgotten Musafir of India, https://medium.com/
- https://medium.com/@anoop_tiwari/rahul-sankrityayan-the-forgotten-genius-10768ae7a8e3
- Maya Joshi, Rahul Sankrityayan's Journeys of the Self, Studies in Humanities and Social Sciences, 2009, Indian Institute of Advanced Study Rashtrapati Nivas, Shimla.
- ලුණුපොකුණේ ශ්රී ධර්මානන්ද නා හිමි (1869-1945) - ආචාර්ය උදය මල්ලවාරච්චි (இக்கட்டுரை வெளிவந்த நூல் எது என்பதை அறிய முடியவில்லை.)
- ஜனவரி 08, 2020 அன்று களனிப் பல்கலைக்கழகத்தின் 60வது ஆண்டு விரிவுரைத் தொடரின் 1வது விரிவுரையாக வரலாற்றுப் பிரிவில் ஆற்றிய உரையின் திருத்தப்பட்ட வடிவமே இந்தக் கட்டுரை. இதை சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) பின்னர் நூலாக வெளியிட்டது.
- The Maha-Bodhi - Vol 44, December, 1936
- ஆர்.பார்த்தசாரதி, ராகுல சாங்கிருத்தியாயன் (ராகுல்ஜி) வாழ்க்கைக் குறிப்பு, சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
பிற்குறிப்பு:
இன்னொரு சுவாரஷ்யமான தகவலையும் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழிலோ ஆங்கிலத்திலோ கூட அத்தகவல் இல்லை. ராமர் கோவில் பற்றிய உரையாடல்கள் நிகழும் இந்த நேரத்தில் இதைப் பகிர்வது பயனுள்ளது.கரப்பாத்ரி என்கிற ஒரு இந்து வெறியர் “மார்க்சியமும் ராமராஜ்யமும்” என்கிற ஒரு நூலை வெளியிட்டதாகவும் அதை எதிர்த்து ராகுல்ஜியும் “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” என்கிற நூலை எழுதியதாக ஆர்.பார்த்தசாரதியின் “ராகுல சாங்கிருத்தியாயன் வாழ்க்கைக் குறிப்பு” என்கிற நூலில் காணக் கிடைத்தது.
இதைப் பற்றி அறிவதற்காக தேடினால் முதலில் கரப்பாத்ரி என்பதை ஆங்கிலத்தில் எப்படி எழுதித் தேடுவது. எப்படி எல்லாமோ தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த “மார்க்சியமும் ராமராஜ்யமும்” நூலை ஆங்கிலத்தில் தேடித் பார்த்தேன். “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” அப்படி ஆங்கிலத்தில் தேடித் பார்த்தேன் எதுவும் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் இதனை மொழிபெயர்ப்பு உதவியுடன் இந்தியில் அச்சொற்களை எடுத்து தேடினேன். இதோ கிடைத்துவிட்டது. அந்த இரு இந்தி மொழி நூல்களையும் pdf இல் தரவிறக்கிக் கொண்டேன். (Ramrajya Aur Marksvad (रामराज्य और मार्क्सवाद), Marxvad Aur Ramarajya (रामराज्य और मार्क्सवाद)).இதற்காகத் தான் எனது நூல்களில் நபர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் போன்றவற்றை நிச்சயமாக ஆங்கிலத்திலும் அடைப்புக் குறிக்குள் இட்டு விடுவேன். அடுத்த கட்ட ஆய்வாளர்களுக்கும் தேட விரும்புபவர்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.
பின்னர் கரப்பாத்ரி என்பவரின் பெயரை ஆங்கிலத்தில் Karpatri என்று அறிந்து கொண்டேன். அவரைப் பற்றித் தேடினால் அவரை சுவாமி கர்பாத்ரி என்று அழைப்பதை கண்டுகொள்ள முடிந்தது. மிகத் வெறித்தனமான இராம பக்தர். இந்து மத சாஸ்திரங்கள் சார்பாக பல சமய கண்டன விவாதங்களை நடத்தியவர். ஆனால் சுமார் 900 பக்கங்களைக் கொண்ட அவரின் “மார்க்சியமும் ராமராஜ்யமும்” நூலில் அது வெளிவந்த ஆண்டு இருக்கவில்லை. அதேவேளை சாங்கிருத்தியாயன் அதற்கு வினையாற்றி கண்டன விவாதமாக கொண்டுவந்த “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” என்கிற நூல் 1959 இல் வெளிவந்திருக்கிறது. எனவே தீவிர தேடலின் பின் கரப்பாத்ரியின் நூல் 1956இல் வெளிவந்திருப்பதை கண்டு பிடிக்க முடிந்தது.ராம ராஜ்ஜியம் குறித்த கருத்தாக்கத்துக்கு எதிராக அதுவும் முக்கிய இந்துத் தலைவரின் நூலுக்கு எதிராக 70 ஆண்டுகளுக்கு முன்னரே ராகுல்ஜி எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சுமார் 100 பக்கங்களுக்குள் அடங்கிய இந்த நூல் தமிழில் வெளிவரவில்லையே என்கிற ஆதங்கமே மிஞ்சுகிறது.
ராகுல் சாங்கிருத்யாயன் படைப்புகள்
இலக்கியம் - இந்தி
நாவல்கள்
1. பய்ஸ்வின் சாதி 1923?
2. ஜினெ கே லியே 1940
3. சிம்ஹ சேனாபதி 1944
4. ஜெய் யவ்தேயா 1944
5. பாகோ நஹீன், துனியா கோ பாத் லோ 1944
6. மதுர் ஸ்வப்ன 1949
7. ராஜஸ்தானி ராணிவாஸ் 1953
8. விஸ்ம்ரித் யாத்ரி 1954
9. திவா தாஸ் 1960
சிறுகதைகள்
10. சாத்மி கே பச்சே 1935
11. வால்கா ஸே கங்கா 1944
12. பகுரங்கி மதுபுரி 1953
13. கனெய்லா கி கதா 1955-56
சுயசரிதை
14. மேரி ஜீவன் யாத்ரா (5 பாகங்கள்) I-1944, II-1950 (3 பாகங்கள் அவரது மரணத்திற்குப்பின் பிரசுரமாயின.)
வாழ்க்கை வரலாறு
15. சர்தார் பிருத்வி சிங் 1955
16. நயே பாரத் கே நயா நேதா 1942 (2 பாகங்கள்)
17. பச்பன் கி ஸ்மிரிதியான் 1953
18. அதித் ஸே வர்த்தமான் (முதல் பாகம்) 1953
19. ஸ்டாலின் 1954
20. லெனின் 1954
21. கார்ல் மார்க்ஸ் 1954
22. மா – சே-துங் 1954
23. கூமாக்கார் சஸ்வாமி1956
24. மேரா ஆஷாயோக் கே ஸாதி 1956
25. ஜின்கா மேய்ன் கிரிதாஜ்னா 1956
26. வீர் சந்திரசிங் கார்வாலி 1956
27. சிங்கள கூமாக்கார் ஜெய்வர்தன் 1960
28. கப்தான் லால் 1961
29. சிங்கள கே வீர் புருஷ் 1961
30. மகா மானவ் புத்த 1956
பயணநூல்
31. மேரி லடாக் யாத்ரா 1926
32. லங்கா 1926-27
33. மேரி யுரோப் யாத்ரா 1932
34. மேரி திபெத் யாத்ரா 1937
35. யாத்ரா கே பன்னே 1934-36
36. ஜப்பான் 1935
37. ஈரான் 1935-36
38. ரூஸ் மே பச்சீஸ் மாஸ் 1944-47
39. கின்னர் தேஷ் 1948
40. திபெத் மே ஸவா வர்ஷ் 1931
41. கூமாக்கார் சாஸ்த்ரா 1949
42. ஆசியா கே துர்காம் பூ-கந்தோன் மே 1956
43. சீன் மே க்யா தேக்கா? 1960
கட்டுரைகள்
44. சாகித்ய நிபந்தாவளி 1949
45. புரதத்வ நிபந்தாவளி 1986
46. திமாகி குலாமி 1937
47. துமாரி க்ஷாயா 1937
48. ஆஜ் கி சமஸ்யாயன் 1944
49. சாம்யவாத் ஹாய் க்யோன்? 1934
50. அதித் ஸே வர்த்தமான் (2-ம் பாகம்) 1953
போஜ்புரி
51. தீன் நாடக் 1942
52. பாஞ்ச் நாடக் 1942
திபெத் மொழி
53. திபெத்தி பால் சிக்ஷா 1933
54. பதாவளி (1,2,3 பாகங்கள்) 1933
55. திபெத்தி வியாகரண் 1933
இதர நூல்கள் இந்தி
அறிவியல்
1. விஸ்வ கி ரூப்ரேகா 1942
சமூகவியல்
2. மானவ் சமாஜ் 1942
அரசியல்
3.சோவியத் நியாய1939
4. ராகுல்ஜி கா அப்ராத் 1939
5. ஆஜ் கி ராஜ்நீதி 1949
6. கம்யூனிஸ்ட் க்யா சாஹ்தே ஹைன்? 1953
7. க்யா கரேன்? 1937
8. சீன் மே கம்யூன் 1960
9. சோவியத் கம்யூனிஸ்ட் பார்டி கா இதிஹாஸ் 1939
10. ராம்ராஜ்யா அவுர் மார்க்ஸ்வாத்
தத்துவம்
11. வைஞ்னானிக் பௌதிக்வாத் 1942
12. தர்சன் - திக்தர்சன் 1942
13. பௌத்த தர்சன் 1942
சமயம்
14. புத்த சரியா 1930
15. தம்மபத 1933
16. மாஜ்ஹிம—நிகாய 1933
17. விநய பீடக 1934
18. தீர்க நிகாய 1935
19, திபெத் மே பௌத்த தர்ம 1935
20. பௌத்த சன்ஸ்கிருதி
21. இஸ்லாம் தர்ம கி ரூப்ரேகா 1923
பயண நூல்
22. சோவியத் பூமி
23. சோவியத் மத்ய ஆசியா
24. டார்ஜீலிங் பரிச்சய 1950
25. குமாயுன் 1951
26. கார்காவால் 1952
27. ஜாவ்ன்சார் -டேராதுன் 1955
28. ஆஜாம்கார் கி புராகதா
29. இமாசல் பிரதேஷ் 1954 (பிரசுரமாகவில்லை)
30. நேபாள் 1953
அகராதி மற்றும் லெக்சிகள்
31. ஷாஸன்-ஷப்த- கோஷ் 1948
32. திபெத்தி-இந்தி கோஷ் (முதல் பாகம்) 1974
இலக்கிய வரலாறு
33. இந்தி காவ்யதாரா (அப்பிரம்ஷா) 1944
34. தாக்கினி காவ்யதாரா 1952
நாட்டார் பாடல்
35. ஆதி இந்தி கி கஹானியா அவுர் கீதன் 1950
ஆய்வு
36. சாராஹ்பாத் கிரித் தோகா கோஷ் 1954
வரலாறு
37. மத்ய ஆசியா கா இதிகாச (1,2 பாகங்கள்) 1952
38. ரிக்வேதிக் ஆரிய 1956
39.அக்பர்
40. பாரத் மே ஆங்ரேஸி ராஜ்ய கா ஸன்ஸ்தாபக் 1957
41. பாலி சாகித்ய கா இதிகாஸ்
தொகுப்பு
42. துளசி ராமாயண் சங்க்ஷேப் (தொகுத்தது) 1957
43. சூத்ர கிரிதங்கா (பதிப்பித்தது) சம்ஸ்கிருதம்
44. சம்ஸ்கிருத காவ்யதாரா 1955 சம்ஸ்கிருதம்
45. பாலி காவ்யதாரா (வெளிவரவில்லை) பாலி
மொழிபெயர்ப்பு
46. சைத்தான் கி அங்க் 1923
47. விஸ்மிரிதி கி கர்ப் மே 1923
48. ஜாடு கா முல்க் 1923
49.சொனே கி தன் 1923
50. தாகுந்தா 1947
51. ஜோ தாஸ்தே 1947
52. அநாத் 1948
53. ஸன்விதான் கா மஸவ்தா 1948
54. ஆதினா 1951
55. சுத்கோர் கி மௌத் 1951
56. ஷாதி 1952
சமஸ்கிருதம் பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வு
57. சம்ஸ்கிருத பதமாலா (5 பாகங்கள்) 1928
58. அபிதர்ம கோஷ் 1930
59. விஜ்னாப்திமாத்ரத சித்தி 1934
60. ஹேது பிந்து 1944
61. சம்பந்த பரிக்க்ஷா 1944
62. நிதான – சூத்ர (பரிக்க்ஷா) 1951
63. மகா பரிநிர்வாண சூத்ர 1951
64. வாத-நியாய
65. பிரமாண-வார்திக 1935
66. பிரமாண-வார்திக பாஷ்ய 1935-36
67. பிரமாண-வார்திக விருத்தி 1936
68. பிரமாண-வார்திக ஸ்வவிருத்தி 1936
69. பிரமாண-வார்திக-ஸ்வவிருத்தி-திகா 1937
70. அத்யார்த்த-சாதக 1935
71. விக்ரக வியாவர்த்தினி
72. விநய சூத்ர 1943
மேற்படி நூல்கள் பற்றிய பட்டியல் ஆதாரம்
Prabhakar, Machwe Rahul Sankritiyayan – Sahitya Akademi, New Delhi, 1978
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...