Headlines News :
முகப்பு » , , , , » கொழும்பு நகரசபையின் உருவாக்கம் ( கொழும்பின் கதை - 37) என்.சரவணன்

கொழும்பு நகரசபையின் உருவாக்கம் ( கொழும்பின் கதை - 37) என்.சரவணன்

இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனம் தான் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலை விட பழமையைக் கொண்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலானது முதலாவது இடம்பெற்றது 1911 இல் தான் என்பதை அறிவீர்கள். இலங்கையின் ஆளுநராக 1865 -1872 காலப்பகுதியில் ஆட்சி செய்த சேர் ஹர்கியூலிஸ் ரொபின்சனின் (Hercules Robinson) காலத்தில் தான் இலங்கைக்கான உள்ளூராட்சி நிருவாகம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இலங்கையின் ஆட்சி அதிகார நிர்வாகத்துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பங்காற்றியவர்களில் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் பங்கு முக்கியமானது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் முழு நாடும் ஆவதற்கு முன்னரே; ‘பிரித்தானிய அரசியலமைப்புக்கு ஏற்றார்போல யாப்பு முறை இலங்கையிலும் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பத்தில் கொடுத்தவர் அவர் தான். அவர் பின்னர் இலங்கையின் முதலாவது நீதியரசராக ஆனார்.

1809 இல் அப்போதைய வெளியுறவுத்துறை செயலரிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்து இப்படிக் கூறினார்:

"இந்தத் தீவில் வசிப்பவர்களின் வாழ்க்கை – நடத்தைக்கும், மதச் சூழலுக்கு ஏற்ற, பிரிட்டிஷ் அரசியலமைப்பின்படி இலங்கைக்கு ஒரு ஆட்சி முறை வழங்கப்பட வேண்டும்."

அப்படித்தான் 1833 இல் கோல்புரூக் கமிஷனின் முன்மொழிவுகளும் ஒரு சுதந்திர அரசாங்கத்தின் தேவையை பரிந்துரைத்தன. 1848 இல் இலங்கையில் வெடித்த பிரிட்டிஷ் எதிர்ப்புக் கிளர்ச்சியின் காரணமாக, இலங்கைக்கு ஏதாவது ஒரு சுயராஜ்யத்தை வழங்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. இந்தக் காரணங்களின் விளைவாக, 1850 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் கொழும்புக்கு ஒரு நகர சபை முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

1865 இல் புதிதாக ஆளுநர் பதவியேற்ற சேர் ஹர்கியூலிஸ் அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் இதற்கான யோசனையை அரசாங்க சபையில் சமர்பித்தார். இதன்படி 1865 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் கொழும்பு நகர சபை நிறுவப்பட்டது. அதுமட்டுமல்ல 1866ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இயங்கக் கூடிய வகையில் கொழும்பு, கண்டி ஆகிய இரு நகர சபைகளும் உருவானது அதுபோல நகரசபை எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டது. கொள்ளுப்பிட்டி, கொம்பனிவீதி, கொழும்பு கோட்டை, புனித செபத்தியன் வீதி, புறக்கோட்டை, செயின்ட் போல்ல் பிளேஸ், கொட்டாஞ்சேனை, நியூ பஸார் மற்றும் மருதானை ஆகியவை அதன் அப்போதைய நகர எல்லைகளாகும்.

நகராட்சி உறுப்பினர்களாக தெரிவாக தகுதிபெற்றவர்கள் பற்றிய பட்டியலை தயார் செய்வதற்கான விசேட கூட்டம் 1865 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதி கச்சேரியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏ. எம்.பெர்குசன், டாக்டர். எஃப். டபிள்யூ. வில்ஸ் ஃபோர்டட், சீ.ஏ.லோரன்ஸ், ஜே. டி. அல்விஸ், சி. டயஸ், எஸ்.சண்முகம். ஒசின் லெப்பை, அபுதுல் காதர் மரிக்கார் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள். இந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் 14 நாட்களுக்கு கொழும்பு கச்சேரியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களைத் தெரிவு தெரிவுசெய்வதற்கான கூட்டம் ஏற்பாடாகும் என்றும் பத்திரிகைகளிலும், வர்த்தமானி அறிவித்தலாகவும் அறிவிக்கப்பட்டது.

நகராட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல் கூட்டம் 1866 ஜனவரி 12, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. கூட்டங்கள் எனப்படுகிற இந்தத் தேர்தல்; ஒன்பது தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டன. கொழும்பு நகரில் வரி செலுத்துபவர்கள் வாக்காளர்களாக தகுதி பெற்றிருந்தார்கள். இதற்கு மக்கள் மத்தியில் தனி ஆர்வம் இருந்ததையும் உணர முடிகிறது. கொழும்பு நகர சபைக்கு ஆசன மட்டத்தில் முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு.

 • சி. எல். பெர்டினாண்ட்ஸ் (கொள்ளுப்பிட்டி)
 • கலாநிதி எஃப். டபிள்யூ. வில்ஸ்ஃபோர்ட் (கொம்பனி வீதி)
 • ஜே. டபிள்யூ. வென் (கோட்டை)
 • எஃப். ஜே. த. சேரம் (சென்ட்செபாஸ்தியன்)
 • டாக்டர் ஜே. டபிள்யூ. வான் கேசல் (புறக்கோட்டை)
 • எஸ். தம்பையா (சென்ட் போல்)
 • சி. ஏ. லோரன்ஸ் (கொட்டாஞ்சேனை)
 • ஜே. டி. அல்விஸ் (நியூ பஸார்)
 • எம். சி. லோஸ் (மருதானை)

ஜனவரி 5 , 1866 இல், பின்வரும் ஐந்து பேரை நகராட்சி கவுன்சிலர்களாக ஆளுநர் நியமித்தார்.

 • சி. பி. லெயார்ட் (அரச அதிபர், மேல் மாகாணம்)
 • கலாநிதி டபிள்யூ. பி. சார்லி (தலைமை சிவில் மருத்துவ அதிகாரி)
 • எச். ஏ. எவட் (நெடுஞ்சாலை ஆணையர், தலைமை பொறியாளர்)
 • டி. பெர்விக் (பிரதி சட்ட மா அதிபர்)
 • ஜே. ஜே. கிரின்ளிண்டன் (நில அளவையாளரின் உதவியாளர்)


இதே வேளை அதிகாரப்பூர்வமாக தலைவராக தெரிவானவர் சி. பி. லெயார்ட். அதாவது இலங்கையின் முதலாவது மேயர் அவர். இன்றும் கிராண்ட்பாசில் லெயர்ட்ஸ் புரோட்வே என்கிற வீதி அவரின் நினைவாகத் தான் இருக்கிறது. சாமுவேல் கிரேனியர் செயலாளராக தெரிவானார். இந்த ஐந்து உறுப்பினர்களும் பின்னர் நைட் பட்டம் பெற்றனர். சி. பி. லெயார்ட் இலங்கை சிவில் சேவையின் மூத்த உறுப்பினராக இருந்தார் அது மட்டுமன்றி 30 வருட காலமாக மேல் மாகாணத்துக்கான அரச அதிபராகவும் இருந்தவர். கோல்ப்ரூக் கமிஷனின் உறுப்பினராக இருந்த சி. எச். கமரூனின் மகன் எச். எச். கமரூன் கொழும்பு நகர சபையின் முதலாவது முழுநேரத் தலைவராக ஆனார்.

1887 இல் இயற்றப்பட்ட நகர சபை கட்டளைச் சட்டத்தின்படி ஆங்கில மொழி தெரியாத எவரும் நகர சபை பிரதிநிதியாக நியமிக்கப்படக் கூடாது. மேலும், ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்தின் உரிமை அல்லது ஆண்டுக்கு ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத அசையாச் சொத்தின் உரிமை இருத்தலே; ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தகுதியாக இருந்தது. 1887 ஆம் ஆண்டு ஆணைச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் எழுந்ததால் எழுந்த சர்ச்சையால் மீண்டும் ஒருமுறை அவசரச் சட்டம் திருத்தப்பட்டது . 1910 ஆம் ஆண்டின் நகர சபைச் சட்டம் இல. 06இன் மூலம், தற்போதுள்ள நகராட்சி எல்லைகள் மேலும் விரிவாக்கப்பட்டன.

1935 ஆம் ஆண்டு யாப்பின் பிரகாரம் கொழும்பு நகரை ஆளுவதற்கு முதல் முறையாக மேயர் மற்றும் துணை மேயர் என இரண்டு புதிய பதவிகளை உருவாக்கியது. மேலும், இந்த புதிய யாப்பின் மூலம் நகர்ப்புற பிரிவுகளின் எண்ணிக்கை 20 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, கொழும்பு நகர சபையின் புதிய பிரிவுகள், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, மருதானை வடக்கு, மருதானை தெற்கு, வடக்கு சென்ட் போல் , தெற்கு சென்ட் போல், கிழக்கு புதிய பஸார் , மேற்கு புதிய பஸார், கோட்டை, புறக்கோட்டை, வடக்கு கொம்பனி வீதி, தெற்கு கொம்பனி வீதி, சென்ட் செபஸ்தியான், தெமட்டகொட, திம்பிரிகசாய மற்றும் கறுவாத்தோட்டம் என்கிற நகரசபைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 1943 இல் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு அப்பிரிவுகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டது. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, திம்பிரிகசாய, ஹெவ்லொக் டவுன், தெற்கு வெள்ளவத்தை, கறுவாத்தோட்டம், பொரளை , தெமட்டகொட, முகத்துவாரம், மாதம்பிட்டிய, கிழக்கு கொட்டாஞ்சேனை, மேற்கு கொட்டாஞ்சேனை, நியூ பஸார், கிராண்ட் பாஸ், கொம்பனிவீதி, ஹூனுபிட்டி, வேகந்த, மாளிகாவத்தை, சென்ட் போல், சென்ட் செபஸ்தியான், கொச்சிக்கடை, புதுக்கடை, புறக்கோட்டை போன்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டன.

1946ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம் வாக்காளர், வேட்பாளர் ஆகியோரின் தகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டன. அதன்படி 21 வயதுக்கு குறையாத பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. (அப்போது இலங்கையர்கள் என்றால் பிரித்தானிய முடியாட்சியின் குடிகள் தான்) மீண்டும் 1953 ஆம் ஆண்டின் 25 ஆம் எண் நகரசபைச் சட்டத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்ட போது இலங்கை பிரஜைகளுக்கு மட்டும் வாக்காளர்களாக ஆகும் தகுதியுண்டு என்று மாற்றப்பட்டது. 1963 இல் உள்ளூராட்சி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம் கொழும்பு நகர சபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிக்கப்பட்டது.

1978 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, நகராட்சி நிர்வாக அமைப்பு மற்றும் சட்ட விதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்படி, 1979 ஆம் ஆண்டு விகிதாசார வாக்குப்பதிவு முறையில் தான் மாநகர சபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. அதன் பின்னர் மாநகர சபை சட்டம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.


1866 இல் கொழும்பு மாநகர சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1937 வரை கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாடு 71 வருடங்கள் முழுமையாக ஐரோப்பியர்களின் கைகளிலேயே இருந்தது. கொழும்பு மாநகர சபையின் முதலாவது இலங்கை மேயர் என்ற பெருமை திரு ரட்ணஜோதி சரவணமுத்து அவர்களுக்கே உண்டு. அதுபோல அவரின் மனைவி திருமதி நேசம் சரவணமுத்து இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் பிரதிநிதி ஆவார். பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க 1940 இல் கொழும்பு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் மூன்றாவது சுதேசிய மேயர் எனக் கூறலாம். இந்நாட்டின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது இலங்கையின் ஜனாதிபதியாகவும் , பிரதமராகவும் , அதிகாரமிக்க அமைச்சர்களாகவும் பதவி வகித்த பலர் கொழும்பு மாநகர சபையின் ஊடாகவே அரசியல் களத்திற்கு வந்தவர்கள் என்று கூட கூற முடியும். கொழும்பு மாநகர சபையானது இந்நாட்டின் தேசிய அரசியலில் வலுவான செல்வாக்கு செலுத்திய ஒரு மையம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

1869 இல், கொழும்பு நகர சபையை இல்லாது செய்யும்படி நகரவாசிகள் சிலர் சமர்ப்பித்த மனு காலனித்துவ செயலாளரால் சட்ட சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

1905 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை 256 ஆக இருந்தது. ரிக்ஸாக்களின் எண்ணிக்கை 2369. சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வண்டிகளின் எண்ணிக்கை 1676 ஆகும். குதிரை வண்டிகளின் எண்ணிக்கை 191.

1905 இல் கொழும்பு நகரில் மின்சார டிராம்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 6,555,338 என மதிப்பிடப்பட்டுள்ளது. மைல்களின் அடிப்படையில், அந்த ஆண்டு ஓட்டப்பட்ட மைல்களின் எண்ணிக்கை 814,725 ஆகும். மின்சார டிராம் பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ஒன்றரை மைல்களுக்கு 025 சென்ட் ஆகும். இதேவேளை, வடக்கு கிழக்கிலிருந்து கொழும்புக்கு செல்லும் பிரதான பாதையான விக்டோரியா பாலம், அந்த வருடம் கொழும்பு மாநகர சபைக்கு 92,676 ரூபா வருமானமாகப் பெற்றுள்ளது.

1899 இல், கொழும்பு நகரசபை மாநகர சபையானது, கொழும்பு நகரில் ஒரு விளக்கைப் பராமரிப்பதற்கான கட்டணமாக வருடத்திற்கு 45 ரூபாய் செலுத்தி 2000 விளக்குகளை நிறுவ எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதே ஆண்டில் பொது போக்குவரத்துக்காக மின்சார ட்ராம் போதுப்போக்குவரத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது.

1920 இல் கொழும்பின் மக்கள் தொகை 300,000 ஆக இருந்தது . 1939 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கொழும்பின் சனத்தொகையில் 25% பேர் சேரிகளில் வசிப்பதாகவும், இதேபோன்ற மற்றொரு சதவீதத்தினர் இதேபோன்ற வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டன.

1943 ஆம் ஆண்டில், Bousted நிறுவனத்திற்கு 3,663,443 ரூபாவை செலுத்திய பின்னர் , டிராம் வண்டிச்சேவை கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமானது. 1954 இல், கட்டணப் பேருந்து சேவை தொடங்கப்பட்டவுடன், அதுவரை இருந்த டிராம் ரயில்கள் அகற்றப்பட்டன. 1895 ஆம் ஆண்டில், Baustead நிறுவனம் வணிகரீதியாக மின்சாரம் தயாரித்து, கோட்டைப் பகுதி மற்றும் முக்கியமான அரசாங்க கட்டிடங்களை வெளிச்சமாக்குவதற்கு போதுமான மின்சாரத்தை வழங்கியது. 1927 இல், பவுஸ்டட் நிறுவனத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தை அரசாங்கம் வாங்கியது. அதே நேரத்தில், அரசு மின்சாரத் துறையும் தொடங்கப்பட்டது. 1946 இல் அரசாங்க மின்சார திணைக்களம் 372,848 ரூபாயை இலாபம் ஈட்டியுள்ளது.

கொழும்பில் வாழும் நாய்களும் நகர சபையால் விதிக்கப்பட்ட வரிக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1905 ஆண்டளவில், நாய்களை வளர்க்கும் ஒவ்வொரு வீட்டுக்காரரும் ஒரு நாய்க்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் அந்த வருடத்தில் மாநகர சபையின் வருமானமாக ரூபா 5382/= கிடைத்தது. மேலும் அந்த ஆண்டில் 2072 தெருநாய்கள் மாநகர சபையின் பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டு அவற்றில் 1374 நாய்கள் அழிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர சபையால் தெமட்டகொட மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் இரண்டு இறைச்சிக் கடைகள் இயங்கி வந்தன. 1905 ஆம் ஆண்டு மனித நுகர்வுக்காக இந்தக் கடைகளால் கொல்லப்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை 86,956 ஆகும் . அதிலிருந்து கிடைத்த மாநகர சபையின் வருமானம் 46,614 ரூபாவாகும். மேலும், அந்த ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் அளவு 227,206 இறாத்தல்களாகும்.

1905 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், நகரசபை குப்பைகளை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்ததுடன், அந்த முதல் வருடத்திற்கான செலவு 33,000/= ரூபாவாகும்.

கொழும்பில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, கோடை காலத்தில் நகர வீதிகளை தண்ணீரால் நனைப்பதான் மூலம், நகரின் தூசியை குறைக்கலாம் அப்போது எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக 1905 இல் செலவிடப்பட்ட தொகை 10,799 ரூபாய்கள் ஆகும்.

1879 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினால் விலங்குகளை அறுப்பதற்காக அறவிடப்படும் வரிக் கட்டணத்தை அதிகரித்ததற்கு எதிராக கொழும்பு இறைச்சிக் கடைக்காரர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போதைய நாளிதழ்களில் இது பெரிதாக பேசப்பட்டன. அப்போதெல்லாம் வேலைநிறுத்தங்கள் இலங்கைக்கு அந்நியமானதாக இருந்தது. இலங்கை மக்களும், அரசாங்கமும் அதற்கு எதிர்கொண்டது கிடையாது. “கத்தலிக் மெசேஞ்சர்” நாளிதழ் "தொழில்முறை குழுவொன்று தமது கோரிக்கைக்காக தமது வியாபார ஸ்தலத்தை மூடிய முதல் சந்தர்ப்பம் இது என்றது. 

இலங்கையின் இறைச்சிக் கடைக்காரர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இலங்கையின் வரலாற்றில் பெரிதாக ஆராயப்படாத ஒன்று. அச்சுத் தொழிலாளர் போராட்டம் கூட 1893 இல் தான் நிகழ்ந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். “மகாராணியின் பிரஜைகள் மரக்கறி சொதியுடன் உணவு உன்ன வைத்துவிட்டார்கள்.” என்று சிலோன் டைம்ஸ் பத்திரிகை நையாண்டியுடன் கட்டுரை தீட்டியது.

கொழும்பு மாநகர சபையின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். மாநகர சபைக் கட்டிடம் எங்கே இயங்கியது. எப்படி உருவானது. எப்படியெல்லாம வளர்ச்சி பெற்றது என்கிற சுவாரசியமான தகவல்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி - தினகரன் - 07.08.2022

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates