கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் உள்ள லிப்டன் சுற்று வட்டத்துக்கு அருகில் உள்ள தெவடகஹ ஜும்மா மஸ்ஜித் கொழும்பு நகரின் மிக முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றாகும். கொழும்பின் மையத்தில், பலரால் கவரக்கூடிய முக்கிய பிரதேசத்தில் இது அமைந்திருக்கிறது. மிகப் பழமையான பள்ளிவாசலும் கூட. முஸ்லிம்கள் மட்டுமன்றி வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் பலரும் கூட ஒன்றுகூடி வணங்கிச் செல்லும் இடமாக அது திகழ்கிறது. பல அரசாங்க பெரிய ஆஸ்பத்திரிகளும் இதைச் சூழ இருப்பதால் பலர் நோய்கள் தீர வேண்டி வணங்கிச் செல்லும் இடமாகவும் இது இருக்கிறது. எனவே பௌத்தர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட இந்த பள்ளிவாசலுக்கு வந்து செல்கிறார்கள்.
1802ஆம் ஆண்டு இங்கே முஸ்லிம் புனித யாத்திரிகரான ஷேக் உஸ்மான் வலிஉல்லாஹ் அவர்களின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டதாக பல முஸ்லிம் மூல தகவல்கள் தெரிவிக்கின்றன. அரேபியாவில் உள்ள அராஃபத்திலிருந்து ஆதாமின் சிகரத்திற்கு புனித யாத்திரையாக வந்த வேளையில் அவர் மறைந்தார். அவர் இங்கே தான் அடக்கம் செய்யப்பட்டார். இந்த பள்ளிவாசலின் முக்கிய அம்சமாக அதனைக் குறிப்பிட முடியும்.
"தெவட்டகஹ பள்ளிவாசல்" என்று அழைக்கப்படுவதைப் போல “ஷேக் உஸ்மான் வலிஉல்லாஹ் தர்கா மஸ்ஜீத்” (Sheik Usman Vali-ulah Darga Mosque) என்றும் இன்று இதனை அழைக்கிறார்கள். அதிசயம் நிகழ்ந்ததாக நம்பப்படும் கதைகளைக் கொண்ட தர்காக்கள் இலங்கையில் சிலவற்றைக் குறிப்பிட முடியும் அவற்றில் இது முக்கியமானது.
இந்தப் பள்ளிவாசலைக் கடந்துசெல்லும் “எந்த முஸ்லிம்களும் தமது மரியாதையை செலுத்தாமல் தாண்டுவதில்லை.” என்கிற பொது அப்பிப்பிராயமும் உண்டு.
அரேபியாவின் அரபாத்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்து; ஆதாமின் சிகரத்திற்குச் (அதாவது பௌத்தர்கள் சிறிபாத என்றும், இந்துக்கள் சிவனொளிபாத மலை என்றும் அழைக்கப்படும் மலைக்கு) சென்று, பின்னர் இலங்கையில் தங்கிவிட்ட முஸ்லிம் சமயத் துறவி செயிதினா அஸ்-ஷேக் உஸ்மான் சித்திக் இப்னு அப்துர்ரஹ்மானின் கல்லறை இருக்கும் 150 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் அது. இந்த மஸ்ஜித் உருவான வரலாறு பற்றி ஒரு சுவாரஸ்யமான பின்னணி கதையொன்று உள்ளது. வாய்மொழிக் கதையாக இந்த கதை மிகவும் பிரபலமானது.
200 ஆண்டுகள் பழமையான கதை அது.
1820 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த கறுவாத்தோட்டப் பகுதி மரங்கள் நிறைந்த வனாந்திரப் ஒரு எண்ணெய் விற்கும் சிங்களப் பெண், தனது குடும்பத்தை உழைத்துக் காக்கும் ஒரே ஒரு பெண்.அவர் நாளாந்தம் பம்பலப்பிட்டியிலிருந்து கறுவாத்தோட்ட காட்டு வழியாக மருதானைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் இந்த காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த வேளை அவர் ஒரு முந்திரி மரத்தின் வேரில் தடுக்கி விழுந்தார். அப்படி விழுந்ததில் அவரின் மண் பானை துண்டு துண்டாக உடைந்தது. அதைத் தாளாமல் கதறி அழுதார். “என் குடும்பத்திற்கு இன்று உணவு இல்லை. என்னுடைய ஒரே வருமானம் அழிந்து விட்டது. ஐயோ! எனது குடும்பம் இன்று பட்டினி கிடக்க வேண்டுமே” என புலம்பி அலுத்துக் கொண்டிருந்தார். அந்த அழுகையிலேயே களைத்துப் போய், அங்கேயே அயர்ந்து தூங்கி விட்டார் அந்தப் பெண். அப்போது ஒரு குரல் அவரை எழுப்பியது. அது ‘விரக்தியடைய வேண்டாம்..,விரைவில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று அவருக்கு உறுதியளித்தது. அப்பெண் நிமிர்ந்து பார்த்தார், அங்கே யாரையும் காணவில்லை, விரக்தியில் மீண்டும் கண்ணீர் வடித்து அழுதுகொண்டிருந்தார்.
மீண்டும் அந்தக் குரல் உறுதியளிக்கும் அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொன்னது. அப்பெண்ணால் இதை நம்பமுடியாததாக இருந்தது. ஏனென்றால் அந்த அடர்ந்த காட்டில் அவர் எந்த மனிதனையும் அங்கே காணவில்லை. திடீரென்று பச்சை நிற ஜிப்பா அணிந்த ஞானி போன்ற தோற்றத்தில் ஒரு முதியவரைக் அப்பெண் கண்டார். அம்மனிதனின் தோற்றத்தால் அப்பெண் உற்சாகமாக நோக்கினார்.
"நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை," என்று அவர் அப்பெண்ணிடம் கூறினார். “உன் எண்ணெயை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். எனக்கு ஒரு பானை மட்டும் கொண்டு வா” என்றது அந்தக் குரல்.
அந்தப் பெண் மருதானை நோக்கிப் புறப்பட்டு, வழக்கமான தனது வாடிக்கையாளரான மாமினா லெப்பை என்ற முஸ்லிம் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, அவரது தாயிடம் ஒரு புதிய பானையைக் தரும்படிச் சொன்னார். வழக்கத்துக்கு மாறான இந்த வேண்டுகோளைக் கேட்ட மமினா லெப்பை அதுபற்றி அப்பெண்ணிடம் வினவியபோது; அவர்களிடம் "நான் திரும்பி வந்து நடந்ததைச் சொல்கிறேன்" என்று கூறி பானையுடன் காட்டிற்குத் திரும்பிய அப்பெண் முதியவர் ஒரு `தெவட்ட' மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். தேவதா மரம் என்பதை தமிழில் “அந்திமிரியம்” என்கிற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். முதலில் உடைந்த இடத்தில் பானையை வைக்கச் சொன்னார். அம்மனிதர் தன் பாதத்தை தரையில் அழுத்தினார் அத்தரையில் இருந்து எண்ணெய் குமிழியாக பொங்கி வழிந்தது வெளிவந்தது.அந்தப் பெண் திகைப்புடன் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு முந்திரி மரத்திலிருந்து சில இலைகளைப் பறித்து, அவற்றைக் கொண்டு எண்ணெயை அள்ளி அப்பானையை பானையை நிரப்பச் சொன்னார். அந்தப் பானை நிரம்ப எண்ணெய் கிடைத்தது. "இனி உன் தொழிலைச் செய்யலாம்," என்று அவர் அப்பெண்ணிடம், மேலும் அம்முதியவர் இதைப் பற்றி முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும்படியும், அவர் அங்கே தோன்றிய இடத்தை அவர்களுக்குக் காட்டவும் கேட்டுக் கொண்டார். நன்றி அப்பெண் அந்தப் பெரியவருக்கு வணக்கம் செலுத்தி அவரது ஆசீர்வாதங்களைப் பெற்று விடைபெற்றார்.
இந்தச் சம்பவத்தை கூறுவதற்காக அப்பெண் மருதானையிலுள்ள மமினா லெப்பையின் வீட்டுக்குக்கு விரைந்தார். அவர் உடனே பெரிய பிச்சை, மீரா கனீ ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு கறுவாத்தோட்டத்துக்கு விரைந்தார். அங்கு அந்த அற்புத அடையாளங்களை அவர்கள் நேரிலேயே கண்டனர். அதாவது உடைந்த குடம், சிந்திய எண்ணெய், மரமுந்திரிகை மரம், எண்ணெய்யை அள்ளியெடுத்த இலைகள், தெவட்டமரம் என்பன அங்கே காணப்பட்டன.
அந்த ஞானி யார் என்று அவர்களால் அறியமுடியவில்லை. ஆனால், “யாஸீன் சூறா” வையும், “பாத்திஹா” வையும் ஓதிய பின் “வொலியுல்லாஹ் அவர்களே! தங்கள் அற்புதங்களை காணச் சந்தர்ப்பம் அளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் எங்களுக்குத் தாங்கள் யார் என்பதைக் காட்டித்தருவானாக.” என்று அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அங்கே சூழ வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அந்த இடத்தில் அறங்காவலராக மமினா லெப்பை நியமிக்கப்பட்டார்.
இந்தக் வாய்மொழிக் கதையின் நம்பகம் ஒருபுறம் இருக்க அதனை மறுப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். மேலும் சமாதி வழிபாடுகளை மறுக்கும் முஸ்லிம் சமூகத்து பிரிவினரும் இந்த பள்ளிவாசலை விமர்சிக்கவே செய்கிறார்கள்.
1847 இல், இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்துக்கு மொரோக்கோ - மஃரிப் தேசத்தைச்சேர்ந்த அஷ்ஷெய்கு அலி ஜபருத் மெளலானா என்னும் மார்க்கப்பெரியார் இலங்கை வந்தார். கொழும்பு மருதானை மசூதியிலேயே அவர் தங்கினார். தவட்டகஹா அதிசயம் பற்றியும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையன்று, ஜும்மா தொழுகைக்குப் பிறகு, கதீப் ஹஸன் லெப்பை, ஷெய்கு அப்துல் காதிர், போன்ற சிலருடன் ஸயாரத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பாத்திஹா ஒதினார்கள். அலி ஐபரூத் மௌலானா அவர்கள் அந்த வலியுல்லாஹ் சமாதிக்கு முன்னால் தன்னை ஒரு அவர் தனது ஜுப்பா' (அங்கி) மூலம் தன்னை மூடிக்கொண்டு, கல்லறையில் மண்டியிட்டு, தொழுதார். இறுதியில் அவர் போர்வையிலிருந்து வெளிப்பட்டபோது அவரது முகம் தெய்வீக ஒளியால் பிரகாசித்தது. கூடியிருந்த முஸ்லிம்களுக்கு அவர் இப்படி உபதேசித்தார்கள்.
"ஓ, எல்லாம் வல்ல அல்லாஹ், இது மிகவும் மரியாதைக்குரிய புனிதர். அவரது பெயர் செயத் உஸ்மான் சித்திக் இப்னு அப்துர்ரஹ்மான், ஆதாமின் சிகரத்திற்கு புனிதப் பயணமாக இந்தத் தீவுக்கு வந்து சில காலம் அருகாமையில் வாழ்ந்த பிறகு இங்கேயே மரணமடைந்தார். பின்னர் கதீப் தம்பி லெப்பை பக்கம் திரும்பி, “இது எந்த மாதம்?” என்றார்.
பெண்கள் இந்த பள்ளிவாசலின் பிரதான தொழுகை மண்டபத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்களுக்கென தனியான தொழுகைப் பிரிவு அங்கு உள்ளது. இது இலங்கை முழுவதும் உள்ள மசூதிகளில் பொதுவான அம்சமாகும்.
பள்ளிவாசலின் கட்டட வரலாறு
இந்தப் பள்ளிவாசல் இருந்த நிலம் ஆரம்ப காலத்தில் ஒரு கண்ணகி கோவில் (சிங்களத்தில் பத்தினி தெய்யோ) இருந்த இடம் என கூறும் சிங்களவர்கள் உள்ளார்கள். அதற்கான பழங்கால ஓவியங்கள், பாடல்கள் என்பவற்றையும் கூட கட்டுரைகளாகவும், நூல்களிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இருக்கலாம். அப்படியே இருந்தாலும் கூட அது அழிக்கப்பட்டுத் தான் இது கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. மேலும் இது மமினா லெப்பையின் காலத்திலேயே ஆங்கிலேய ஆட்சியாளர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒன்று என்பதற்கான ஆதாரங்களும் உண்டு.
1848 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசாங்கம் வீதி அபிவிருத்திக்காக சில நிலங்களை கையகப் படுத்தியது. அதில் மமினா லெப்பையின் நிலமும் அடங்கும். அதற்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்க ஒத்துக் கொண்டது. அப்போது மரணப் படுக்கையில் இருந்தார். இழப்பீடாக தற்போது பள்ளிவாசல் உள்ள நிலத்தைத் தரும்படி மமீனா லெப்பை கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அன்றைய ஆங்கிலேய ஆளுநர் சேர் சார்ல்ஸ் ஜஸ்டின் மெக்கார்த்தியால் (Sir Charles Justin McCarthy)1863 ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி இந்த நிலம் அக்கோரிக்கையின் பேரில் வழங்கப்பட்டது. (கொழும்பு கச்சேரி பதிவிலக்கம் No.A/16/381)
பிரதான வீதியோடு சேர்ந்தார் போல் அமைந்திருக்கும் இந்த பெரிய பள்ளிவாசல் முகலாய கட்டட அமைப்பின் சாயலில் வட்டக் கூரை வடிவத்திலான கோபுரங்களைக் கொண்டதாக கட்டப்பட்டிருக்கிறது.
இந்த குவிமாடம் 1885 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, 1905 ஆம் ஆண்டு ஒரு தமிழ் ரத்தின வியாபாரி தனது திருடப்பட்ட நகைகளையும் ரத்தினங்களையும் கண்டுபிடிக்க நேர்த்திக் கடன் வைத்து அது நிறைவேறியதும் 1905 ஆம் ஆண்டில் மசூதியை ஒட்டி யாத்ரீகர்களுக்கான தங்குமிடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.
இரு உயரமான பெரிய வட்டக் கோபுரங்களில் ஒன்று 500 துளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது அவற்றில் பல புறாக்கள் வந்து தங்குவதைக் காணலாம். நாளாந்தம் கூடும் பெருமளவு புறாக்களுக்கு அங்கே தீனி போடும் வழிபாட்டாளர்களையும் அங்கே காணலாம். அங்கிருக்கும் நீர் தடாகத்தில் அவை நீர் அருந்திக் குளித்துச் செல்வதையும் காணலாம்.
அருகிலேயே இருக்கிற கொழும்பு நகரசபை மண்டபக் கட்டிடத்தை ஆங்கிலேயர்கள் கட்டும் போது இந்த குவிமாடத்தின் சாயலில் தான் கட்டினார்கள் என்கிற ஒரு நம்பிக்கையும் கூட பரவலாக இருக்கிறது.
தம்பிலிங்கம் செட்டியார் சமாதிக்கு அருகில் நிரந்தரமாக எரியும் எரிவாயு விளக்கை அமைத்துக் கொடுத்தார். எஸ்.தம்பி முதலியார் இந்த பள்ளிவாசலின் வாயில் பகுதிகளை அமைத்துக் கொடுத்தார். பல முஸ்லிம் தனவந்தர்கள் இதன் கட்டுமானப் பணிகளுக்காக நிறைய உதவியிருக்கிறார்கள்.
1983 ஆம் ஆண்டு அன்றைய போக்குவரத்து, முஸ்லிம் அலுவல்கள் கலாசார அமைச்சராக இருந்த எம்.எச் முஹமட் அவர்களால் இந்த மஸ்ஜீத்தின் முன்னர் இருந்த தோற்றம் புதுப்பிக்கப்பட்டு பல மாற்றங்களுக்கு உள்ளானது. ஆனால் பிரதான கட்டிடம் அதன் வரலாற்று முக்கியத்துவம் மாற்றப்படாமல் அப்படியே பேணப்பட்டு வருகிறது. கொழும்பு வரும் உல்லாசப் பிரயாணிகள் பலர் இதனை தேடிக் கண்டு அனுபவித்துச் செல்கின்றனர்.வெள்ளிக்கிழமைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் இந்த மசூதியில் கூடுகிறார்கள்.
இந்த பள்ளிவாசலின் கட்டடக் களையும், அங்கே உள்ள மொசைக் கற்களின் அலங்காரமும் சிறப்பாக பேசப்படுகின்றன.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...