கொழும்பின் அதிகம் அறியப்படாத வரலாற்று நினைவுச்சின்னங்களில், புறக்கோட்டையில் உள்ள பழைய நகர மண்டபம் (Old Town Hall) முக்கியமான வரலாற்று பின்புலத்தைக் கொண்டுள்ளது. பழைய கோதிக் தேவாலயம் போன்ற மாளிகையின் தோற்றத்தில் அது காணப்படுகிறது. இலங்கையிலேயே அதிக சனநெரிசல் கூடிய மையமான இந்தப் பகுதியைக் கடக்கும் சுதேசிகளும் சுற்றுலாப் பயணிகளும் இதனை ஒரு தடவை நிமிர்ந்து பார்க்காமல் எவரும் கடந்திருக்க மாட்டார்கள். ஆனால் பெறுமதிமிக்க பண்டைய வரலாற்றின் சின்னமாக இது திகழ்கிறது.
இந்த பழைய நகர மண்டபம் தான் மாநகர சபைக் கூட்டங்களை நடாத்தும் நகர மண்டபமாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவானது. ஆம் 2023 இல் இதன் வயது ஒன்றரை நூற்றாண்டை எட்டுகிறது.
1865 இல் கொழும்பு மாநகர சபை உருவான கதையை ஏலவே பார்த்தோம். மாநகர சபைக் கூட்டத்தை நடாத்துவதற்கு நிலையான ஒரு கட்டிடத்தின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாக இந்தக் கட்டிடம் 1873 இல் அப்போதைய ஆளுநர் வில்லியம் கிரகரி ஆட்சியில் கட்டப்பட்டது, இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஜே.ஜி. ஸ்மித்தரால் (J. G. Smithers) வடிவமைக்கப்பட்டது, அவர் இந்த நகர சபை தரத்துக்கு பொருந்தக்கூடிய தளபாடங்களையும் வடிவமைத்தார், மேலும் இது கொழும்பில் திறக்கப்பட்ட முதலாவது பொதுக் கட்டிடமாகும் (Civic Building). ஒரு இடைக்கால ஐரோப்பிய தேவாலயத்தின் சாயலில் இருக்கிறது. இந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 1924 வரை நகராட்சி தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது. இந்த நகர சபைக் கட்டடத்தோடு ஒரு மண்டபமும் ஒரேயடியாக கட்டப்பட்டது.
1870 இல் இலங்கைக்கு பிரித்தானிய எடின்பர்க் அரச குடும்பத்தினர் வருகை தந்திருந்தார்கள். ஏப்ரல் 22, 1870 அன்று இந்த எடின்பர்க் சந்தைக்கான அடிக்கல்லை எடின்பரோவின் அல்பிரட் டியூக் (Alfred Duke of Edinburgh) நாட்டினார். இந்த சந்தை தொடங்கிய காலத்தில், கட்டிடத்தின் உட்புறம் எரிவாயு விளக்குகளின் மூலம் வெளிச்சம் பெறப்பட்டது. எடின்பர்க் பிரபுவின் ததால் அதன் நினைவாக இந்த மண்டபத்துக்கு எடின்பர்க் மண்டபம் (Edinburgh Hall) என்று பெயர் சூட்டப்பட்டது.
அதில் தெரு நாடகங்கள், நாடகங்கள், நடன நிகழ்வுகள் என பல கலை நிகழ்ச்சிகளும் இங்கே இடம்பெற்றன. கலை வளர்ச்சிக்கு அப்போது அதிகம் பயன்படுத்தப்பட்ட மண்டபம் இது. மிகவும் நேர்த்தியான கட்டிடக்கலை அம்சங்களுடன் கட்டப்பட்ட அந்தக் கட்டிட அமைப்பின் கலை வடிவத்தை இன்றும் பார்க்கலாம். அது மட்டுமன்றி இந்த மண்டபம் அன்று நீதவான் நீதிமன்றமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்த ஜி. பர்ட்டன் (G. Burton) வழங்கிய ஒரு வடிவமைப்பை முதலில் சபை ஏற்றுக்கொண்டது. ஒரு அருங்காட்சியகம், நூலகம், மண்டபம், நீதிமன்ற இல்லம், தரைத்தளத்தில் நீதவாங்களுக்கான அறை, ஒரு சபைக் கூட்ட மண்டபம். குழு அறைகள், மேல் மாடியில் செயலாளருக்கும் பணி கண்காணிப்பாளருக்குமான அலுவலகங்கள் போன்றவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்டிடத்தைக் கட்டுவது தான் ஆரம்ப யோசனையாக இருந்தது. இதைக் கட்டுவதற்காக பர்ட்டனால் மதிப்பிடப்பட்டிருந்த செலவு 15,400 பவுன்களாகும். ஆனால், இந்தத் தொகை அதிகம் என்று முடிவு செய்த அரசு, திட்டத்தை சுருக்க வேண்டியதாயிற்று.
இறுதியில் அரசாங்க கட்டிடக் கலைஞர் ஜே.ஜி. ஸ்மித்தர் வழங்கிய 7000 பவுன்களில் முடிக்கப்படக் கூடிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் கொழும்பு மியூசியத்தையும், கொழும்பு துறைமுகத்துக்கு முன்னால் அமைந்திருக்கும் கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் (The Grand Oriental Hotel) போன்ற கட்டடங்களை வடிவமைத்தவர் ஜே.ஜி. ஸ்மித்தர். இந்த நகர சபைக் கட்டடம் 1873 ஆம் ஆண்டில் ஆளுநரால் திறக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடம் பற்றி அப்போதைய பிரதமர் பிரேமதாசவின் கவனத்திற்கு வந்தது, அவர் 1984 ஆம் ஆண்டளவில் அதனை புனரமைத்து கொழும்பின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாற்றினார். பிற்காலத்தில் எடின்பர்க் மண்டபம்; பழைய நகர சபையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதன் நாளா பக்கங்களிலும் திறந்த வளாகமாக அது இருந்தது. நகர சபைக் கட்டிடமானது “பழைய நகர மண்டபம்” (Old Town Hall) என்று அழைக்கப்பட்டது. அக்கட்டிடத்தில் போது மக்களுக்கும், போது நிறுவனங்களுக்கும் கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என்பவற்றை நடத்துவதற்கு இடமளிக்கப்பட்டது. இன்று வரை அது தொடர்கிறது. மேலும் எடின்பர்க் மண்டபத்தைச் சூழ சந்தை பெருகியதால் அதை எடின்பர்க் சந்தை என்று அழைத்தார்கள்.
இந்த மண்டபத்தை சுற்றிக் காட்ட பராமரிப்பாளர் ஒருவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் உங்களை மாடிக்கு அழைத்துச் செல்வார். நீங்கள் படிக்கட்டுகளின் உச்சியை அடைந்ததும், மையத்தில் ஒரு மாநாட்டு மேசை உள்ள ஒரு பெரிய திறந்த அறையில் இருப்பீர்கள். இங்கே 15 ஆண்கள் (மாதிரிப் பொம்மைகள்) மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல சுதேசிய பல்லின உருவங்களையும் உடையவர்களின் உருவங்கள் அந்தக் கதிரைகளில் சுற்றி வர அமர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
கீழே அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்கள் உள்ளன; பழங்கால இயந்திரங்கள், பழைய மரக் கம்பத்தில் பொருத்தப்பட்ட பழைய உலோகத் தெருப் பலகைகள், பழங்கால கொதிகலன்கள், கடிகாரம், பழைய நூலக வாகனம் போன்றவற்றைப் பார்வையிடலாம்.
புதிய நகர சபை கட்டிடம்
இட நெருக்கடியாலும், வாகனப் போக்குவரத்துக்களின் சத்தங்களாலும், சந்தைப் பகுதியில் அதிகரித்த தூசுகளின் பெருக்கத்தாலும் இந்த நகர மண்டபம் கைவிட ஆலோசிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக கட்டவேண்டிய கட்டிடத்தையும் இதனைச் சூழ எங்கேயும் கட்ட வாய்ப்பிருக்கவில்லை. அதற்கான காணியும் இருக்கவில்லை. அமைதி நிறைந்த சூழலும் இருக்கவில்லை. வேறு இடத்தில் புதிய டவுன்ஹால் கட்டப்பட வேண்டும் என்று 1907 டிசம்பர் 13ஆம் தேதி நகர சபைக் கூட்டத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. 1914 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்தது. விவாதங்களும் நீண்டன.
முப்பத்துநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மாநகர சபையின் தலைவர் இ. எம். டி கோர்சி ஷோர்ட் (E. M. de Courcy Short), 1907 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில், நகரத்தின் தேவைகள், நகராட்சி அலுவலகங்கள், உச்சபட்ச திறன் வரை நீண்டு, வழங்கக்கூடிய இடவசதியை முற்றிலுமாக விஞ்சிவிட்டது என்று குறிப்பிட்டார். ஒரு புதிய நகர சபைக் கட்டிடத்துக்கான தேவை மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது என்று அவர் வலியுறுத்தினார். 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், புறக்கோட்டை பிரதேசத்தில் இதனை விரிவுபடுத்துவது சாத்தியமற்றது என்பதுடன், ஒரு புதிய இடத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை மாநகர சபை அங்கீகரித்தது.
"கொழும்பு மாநகரசபையின் அலுவல்கள்" பற்றி விசாரிப்பதற்காக ஆளுநரால் 1914 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இப்பிரச்சனையை முழுமையாக ஆராய்ந்து தனது பரிந்துரையை வழங்கியது. ஆர். ஸ்கெல்டன் (R. Skelton) தனது சாட்சியத்தின் போது, ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டுவது அவசரமான விடயம் என்று கூறினார். தலைவர், செயலாளர், நகர துப்புரவு பொறியாளர், கணக்காளர் போன்றோர் கட்டிடத்தில் நிறைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். மதிப்பீட்டாளர் பொறுப்பில் இருந்தவர் கட்டிடத்துக்கு வெளியே உள்ள கடையொன்றில் இருந்தபடி தனது கடமைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இன்னும் சில அலுவலகர்கள் மாளிகாகந்தையில் அலுவலகம் நடத்தி வந்தார்கள்.
புறக்கோட்டை கட்டிடம் ஒரு நகரசபைக்கு பொருத்தமற்ற இடமாக இருந்தது. அதே வேளை ஒரு மதிப்புமிக்க நிலமாகவும் இருந்தது. விற்கப்பட்டால் ஒரு புதிய நகரசபைக் கட்டிடத்துக்கான செலவையும் ஈடு செய்து மிகுதி பணமும் மிஞ்சும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவின்படி பணிகள் திட்டமிடப்பட்டன. ஆனால் அதற்குள் முதல் உலகப் போர் வெடித்ததால், இக்கட்டிடப் பணிகள் சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால் போர் முடிந்ததும் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
1921 ஆம் ஆண்டில், கொழும்பு நகரத்தின் திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்த உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரும் நகர திட்டமிடலாளருமான பேராசிரியர் பெட்ரிக் கெடிஸ் (Patrick Geddes), தற்போது கொழும்பு நகர சபைக் கட்டிடம் அமைந்திருக்கும் பகுதி அதற்கு ஏற்றது என்று பரிந்துரைத்தார். அதற்கு அவர் விரிவான விளக்கத்தைக் கொடுத்தார். மக்கள்தொகை கொண்ட பகுதியின் மையத்தில் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட நகரத்தின் மையத்தில் இருந்தது விக்டோரியா பூங்கா. இந்த மக்கள் செறிவில்லாத நிலம் அதற்கு ஏற்றது என்று அரசும் ஒப்புதல் அளித்ததால், பேராசிரியர் கெடியின் முன்மொழிவின்படி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்பின் எழுந்த பிரச்சினை, டவுன்ஹால் கட்டுவதற்கான திட்டம் தயாரிப்பது. அதற்கான போட்டியும் நடத்தப்பட்டது. மொத்தம் 32 வடிவமைப்புத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இறுதியில் மூன்று பெரிய வெளிநாட்டு கம்பனிகள் இப்போட்டியில் தகுதி பெற்றிருந்தன. அந்த கம்பனிகளில் சிங்கப்பூரின் ரல்ப் பூட்டி கம்பெனி (S J. Edwards of Ralph Booty & Co. of Singapore) சிறந்த வடிவமைப்பை கொடுத்து முதலிடத்தைப் பெற்றது. சமர்ப்பித்த திட்டமும், கட்டிடத் திட்டத்தின் தனித்தன்மையும், உள்ளே இருக்கும் அலுவலகங்களின் விசாலமான தன்மையும், உச்சியில் அரைக்கோளக் கோபுரத்துடன் கூடிய கட்டிடத்தின் கவர்ச்சியும் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படையாக இருந்தது.
இன்று கொழும்பின் மிகவும் அழகானதும், பிரமாண்ட மிடுக்கோடும் நகர சபைக் கட்டிடம் கொழும்பின் கவர்ச்சிகரமான அடையாளமாகவும், அமெரிகாவில் வோஷிங்க்டனில் உள்ள கெப்பிடல் கட்டிடத்தின் சாயலில் நிற்கிறது.
உசாத்துணை
- H. A. J. Hulugalle, Centenary Volume of the Colombo Municipal Council, 1865-1965, Colombo Municipal Council, 1965 - Colombo (Ceylon)
- CEYLON Report of the Commission on the Constitution Presented by the Secretary of State for the Colonies to Parliament by Command of His Majesty, July, 1928, Printed And Published By His Majesty's Stationery Office, LONDON: 1928.
- Lopamudra Maitra Bajpai, Stories of the Colonial Architecture: Kolkata-Colombo Doshor Publication, 2019
- ආර්. මහීෂ්වර, ලක්ෂ පහළොවක වියදමින් ඉදි වුණු කොළඹ නගර සභා ගොඩනැගිල්ල දිනමිණ, (16. 07. 2021)
- හර්ෂිනී පුෂ්පමාලා ආරච්චිගේ, කොළඹ යනු ඓතිහාසික පුරවරයකි, දිනමිණ, (08. 10. 2011)
- Tuan M. Zameer Careem, Ceylon’s First Royal Tour, (https://www.colombotelegraph.com/index.php/ceylons-first-royal-tour/) 21,07.2019
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...