Headlines News :
முகப்பு » , , , » தஹாநாயக்கவின் கோவணமும் அரசியலும் - என்.சரவணன்

தஹாநாயக்கவின் கோவணமும் அரசியலும் - என்.சரவணன்

முன்னால் பிரதமர் டபிள்யு தஹாநாயக்க என்றாலே உடனடியாக அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர் கோவணத்துடன் பாராளுமன்றத்துக்கு நுழைய முற்பட்ட அந்த சம்பவம். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அரசியல் களத்தில் இருந்தவர். அவரின் வாழ் நாள் காலத்துக்குட்பட்ட அவர் சம்பந்தப்பட்ட அரசியல் சம்பவங்களும், சர்ச்சைகளையும் சாராம்சமாக நினைவுக்கு கொண்டு வருவதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த மாதம் அவரின் 120 வது பிறந்த வருடம். 

அவர் இலங்கையின் ஐந்தாவது பிரதமர். இலங்கையின் வரலாற்றில் மேலும் குறைந்தளவு காலம் பிரதமராக இருந்தவரும் அவர் தான். 1959 ஆண்டு 26 செப்டம்பர் தொடக்கம் 1960ஆம் ஆண்டு 20 மார்ச்  வரையான சுமார் ஆறு மாதங்களுக்கும் குறைவாக மட்டுமே அவர் பிரதமராக இருந்தார். கூடவே அவரிடம் தான் பாதுகாப்பு, கல்வி, வெளிவிவகாரம் போன்ற முக்கிய அமைச்சுக்களும் அந்த இடைக்கால ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இரட்டைச் சகோதர்கள் - கல்யாணப் பிரியவுடன்

1902 ஒக்டோபர் 22 ஆம் திகதி காலியில் இரட்டையர்களில் ஒருவராகப் பிறந்தார் தஹாநாயக்க. அவரின் சகோதரரின் பெயர் கல்யாணப் பிரிய. இருவருமே பார்க்க ஒரே தோற்ற ஒற்றுமையில் இருப்பார்கள். உயர் கல்லூரிக் காலம் வரை இருவரின் பயணமும் ஒரே மாதிரியாகத் தன இருந்தது. தஹாநாயக்க காலி ரிச்மன்ட் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் அவர் கல்கிஸ்ஸ புத்த தோமஸ் கல்லூரியில் கற்று அதன் பின்னர் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் கற்றார். அங்கே அவரின் இலக்காக இருந்தது ஆசிரியர் தொழில் தான். தனது கல்விக் காலம் அங்கே முடிந்ததும்  அதே கல்லூரியில் ஆசிரியராக மூன்றாண்டுங்கள் பணியாற்றினார்.

இளம் தாஹாநாயக்கவின் புரட்சிகரக் காலம்

கிங்ஸ்வூட்டில் கற்பித்த காலமானது அவரின் துணிச்சலான இளமைக் காலம். இலங்கையின் வரலாற்றில் பிரம்மச்சாரியாகவே மறைந்த பிரதமராக தஹாநாயக்கவை நாம் குறிப்பிடுவதுண்டு. ஆனால் அவர் கிங்ஸ்வூட்டில் கற்பித்தபோது வாழ்க்கையில் முதன்முறையாக, தனது இதயத்தைக் கவர்ந்த பெண்ணை சந்தித்தார். அவர் சைமன் டி சில்வாவின் மகள் ரோனி லீலாவதி டி சில்வா. ஆனால் அந்தக் காதல் அவருக்கு கைகூடவில்லை. பின்னர் அக்கல்லூரியில் இருந்து அப்பெண் விலகிச் சென்றுவிட்டபின்னர்  அதன் பின்னர் அவர் அப்பெண்ணைக் காணவில்லை.

இரட்டைச் சகோதர்கள் - கல்யாணப் பிரியவுடன் காலியிலுள்ள தனது வீட்டு வளவில்

இளைஞனான விஜயானந்த தன் சகோதரனுடன் அரச ஆசிரியர் கல்லூரி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று கொழும்பு தர்ஸ்டன் வீதியில் அமைந்திருந்த ஆசிரியர் கல்லூரியில் நுழைந்தார்கள். சிறுவயதில் இருந்தே கவிதையில் ஆர்வம் கொண்ட அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சரளமாக கவிதைகளை எழுதி வந்த காலம் அது. விஜயானந்த தனது முதல் ஆசிரியர் நியமனத்தை பலப்பிட்டிய சித்தார்த்த வித்தியாலயத்தில் பெற்றார். பின்னர் 1928 இல் காலி புனித அலோசியஸ் கல்லூரியில் நியமனம் பெற்றார். அங்கு அவர் அனைத்து மாணவர்களிடையே பிரபலமடைந்திருந்தார்.

1933 இல், அவர் "ருஹுனு ஹன்ட" (ருஹுனுவின் குரல்) என்ற பத்திரிகையை வெளியிட்டார். அவர் அதன் ஆசிரியராகவும், சரிபார்ப்பவராகவும், வெளியீட்டாளராகவும் மட்டுமன்றி அதன் விநியோகத்தையும் அவரே கவனித்துக் கொண்டார்.

இந்தக் காலப்பகுதியில் தான் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் தோன்றி தீவிரமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்தன. “சூரியமல் இயக்கத்தின் மூலம் உருவான இலங்கை சமசமாஜக் கட்சியுடனும் அதன் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தஹாநாயக்க 1935ல் காலனித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணிகளில் ஈடுபட்டார். இங்கிலாந்தில் ஜார்ஜ் மன்னரின் மௌலி திருமண நிகழ்வின் போது அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.சோல்பரி பரிந்துரைகளைத் தொடர்ந்து அரசாங்க சபயில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது அதற்கு ஆதரவாக டீ.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட 51 உறுப்பினர்கள் அதற்கு ஆதவளித்தார்கள். அதனை எதிர்த்தவர்கள் மூவர் மட்டும் தான். இருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அடுத்தவர் தஹாநாயக்க. அதை எதிர்த்த ஒரேயொரு சிங்களத் தலைவர் தஹாநாயக்க என்றும் கூற முடியும். “கேக் தரவில்லை என்பதற்காக பாணையும் சேர்த்து நிராகரிக்கக் கூடாது.” என்று தஹாநாயக்க போன்றோருக்கு பதிலளித்தார் சேனநாயக்க. 

லங்கா சம சமாஜக் கட்சி பிளவுற்ற போது அவர் கொல்வின் ஆர் டி சில்வா தலைமையிலான போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியுடன் சென்று விட்டார். இலங்கையில் கல்வி சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காக சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கர நாடெங்கிலும் கையெழுத்து சேகரித்த போது அப்பணிகளில் தீவிரமாக தஹாநாயக்க பங்கெடுத்துக்கொண்டார்.

1939ல் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று காலியின் முதல் மேயரானார். அது மட்டுமல்ல இலங்கையில் முதலாவது சிங்கள - பௌத்த மேயர் என இன்றும் அவரை அழைக்கிறார்கள். 1942ல் வேளை நிறுத்தமொன்றுக்கு தலைமை தாங்கியதற்காக கைது செய்யப்பட்டு கண்டி போகம்பர சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அப்போது கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்தன, என்.எம்.பெரேரா போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் மூலம் அரசியல் புகட்டப்பட்டார். 1943 இல் அவர் பிபிலை தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோதும் தோல்வியடைந்தார். ஆனால் அதற்கு எதிராக தேர்தல் முறைப்பாடு செய்து அந்த வழக்கில் வென்றார். அதனால் 1944இல் காலி மேயராக இருந்த தஹாநாயக்க பிபிலை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அரசாங்க சபைக்கு முதற் தடைவையாக தெரிவானார்.

சட்டமன்ற வாழ்வின் ஆரம்பம்

விஜயானந்தாவின் சட்டமன்ற வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் 1944-1947 காலப்பகுதியாகும். 

1947 இல் நடந்த இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் 16,588 வாக்குளைப் பெற்று காலி தொகுதியில் போல்ஷெவிக் லெனினிய கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலுக்காக ஒரு சதத்தையும் அவர் செலவழித்ததில்லை என்பார்கள்.

அந்த அரசாங்கத்தின் வரவு செலவின் மீதான விவாதத்தின் போது நீண்ட உரையை ஆற்றினார். இலங்கையின் சட்டமன்ற வரலாற்றில் மிக நீண்ட உரையை ஆற்றியவராக அவர் கொள்ளப்படுகிறார். 13 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக அவர் உரையாற்றியிருந்தார். அதன் பின்னர் அவர் மீண்டும் லங்கா சம சமாஜக் கட்சியில் இணைந்தார்.

1952 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தெரிவானார். இடதுசாரிக் கட்சியில் நீண்டகாலம் நீடிக்கவில்லை. காலியில் புதிய நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்துவதற்காக வந்திருந்த டட்லி சேனநாயக்கவை வரவேற்றதற்காக அவர் லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து அவர் “பாஷா பெரமுன”வை (மொழி முன்னணி) அமைத்தார். இந்த அமைப்பு தான் ஈற்றில் “சிங்களம் மட்டும்” என்கிற சித்தாந்தத்துக்கு அவர்களை வழிநடத்திச் சென்றது. அடிப்படையில் “பாஷா பெரமுன” காலனித்துவ எதிர்ப்பின் அடியையொற்றி இருந்தாலும், ஆங்கிலத்தை எதிர்த்து சுதேசிய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க நிர்ப்பந்திக்கும் அரசியல் இயக்கமாக கட்டியெழுப்பப்பட்டாலும், இனவாத அணிகள் அந்த கூட்டணியில் மையப்பட்டு அதன் போக்கை சிங்கள பௌத்த வழியில் திசைதிருப்பின. அந்நிய ஆங்கிலத்துக்குப் பதிலாக சுதேசிய சிங்களத்தையும் தமிழையும் முன்மொழிவதற்குப் பதிலாக வெறும் சிங்களத்தை மாற்றீடாக முன்வைத்ததன் விளைவு தமிழ் மொழியும், தமிழர்களும் ஓரங்கட்டப்பட்டார்கள்.

அதேவேளை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நேரடியாக ஆதரவு அளிக்காவிட்டாலும் தஹாநாயக்கவை ஒரு இனவாதியாக யாராலும் குற்றம்சாட்ட முடிவதில்லை. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பலமாக இருந்த காலத்தில் தஹாநாயக்கவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து உரையாற்ற வைத்தவர் அன்றைய அதன் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம்.

1948ஆம் ஆண்டு மலையக மக்களுக்கு எதிரான பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து வாக்களித்த வெகு சிலரில் தஹநாயக்கவும் ஒருவர். அந்த விவாதங்களின் போது “இலங்கையில் பிறந்தவர்கள்” என்கிற பதத்தை இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்று திருத்துக என்று திருத்தங்களை பரிந்துரைத்தத்தையும் ஹன்சாட்டில் காண முடிகிறது. பல விதிகளின் மீது அவர் தனது கருத்துக்களை துணிச்சலாக வைத்ததையும் காண முடிகிறது. அவர் அப்போது அரசாங்க சபைக்கு முதற் தடவை தெரிவாகி ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது. அவ்விவாதத்தில் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் வாதங்களின் மீது பல இடங்களில் கேள்வி எழுப்புகிறார்.

56 தேர்தல் கூட்டணியில் பண்டாரநாயக்கவுடன்

பாஷா பெரமுனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், பிலிப் குணவர்தன தலைமையிலான விப்லாவகாரி சமசமாஜக் கட்சியும் இணைந்து தான் 1956 இல் மக்கள் ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்து பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சியை அமைத்ததையும் இங்கே நினைவு படுத்த வேண்டும்.

அத் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு காலி தொகுதியில் வெற்றி பெற்றார் தஹநாயக்க. அந்த ஆட்சியில் சிரேஷ்ட அரசியல் தலைவர் என்கிற வகையில் தஹநாயக்கவுக்கு  பண்டாரநாயக்க உரிய இடத்தை வழங்க வேண்டியிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவராக இருந்த சீ.பி.டி சில்வாவை சபைத் தலைவராக நியமித்ததுடன், தஹநாயக்கவுக்கு கல்வி அமைச்சுப் பதவியை வழங்கினார் பண்டாரநாயக்க. அந்த அரசில் மூன்றாவது தலைவராக அவர் இருந்தார். கல்வி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இலங்கையில் அனைவருக்கும் கல்வி வழங்கும் செயற்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமாயின் இலவசக் கல்வி மட்டும் போதாது; உணவு இன்மையால் பாடசாலையை தவிர்க்கும் நிலையை மாற்றுவதற்காக மாணவர்களுக்கு பாடசாலையில் சிற்றுணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

அதன் படி இலங்கை முழுவதுமான சகல பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அமெரிக்க கெயார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் பனிஸ் வழங்கும் திட்டத்தை அவர் ஏற்பாடு செய்தார். மதியம் ஒரு பணிஸ்சுடன் ஒரு கோப்பை பால் வழங்கப்பட்டது. இதனால் அவர் “பனிஸ் மாமா” என்கிற செல்லப் பெயர் கொண்டு பலராலும் அறியப்பட்டார். அழைக்கப்பட்டார். அதுமட்டுமன்றி “வித்தியோதய”, “வித்தியாலயங்கார” ஆகிய பிரிவேனாக்களை பல்கலைக்கழகமாக்கினார். ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் கற்போர் அனைவருக்கும் “சம்பளம்” வழங்கியதும் தஹாநாயக்கவின் முயற்சியால் தான். இன்று வரை அது தொடர்கிறது.

பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் உட்கட்சி மோதல் தலைதூக்கியபோது பண்டாரநாயக்கவுக்கு எதிரான அணிக்கு தஹாநாயக்க தலைமை தாங்கியது உண்மை. அந்த அமைச்சரவையில் பிலிப் குணவர்தன எதேச்சாதிகாரமாக நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பத்து அமைச்சர்கள் பிலிப் குணவர்த்தன அமைச்சரவையில் தொடர்ந்தாள் தாம் அனைவரும் விலகப்போவதாக பண்டாரநாயக்கவிடம் அறிவித்தார்கள். அந்த பத்து பேர் கொண்ட அணிக்கு தஹாநாயக்கவும், ஸ்டான்லி டீ சொய்சாவும் தலைமை தாங்கியிருந்தார்கள்.  இதை சரி செய்வதற்காக பண்டாரநாயக்க அமைச்சரவையிலும், அவற்றுக்கு கீழான நிறுவனங்களிலும்  சில மாற்றங்களை செய்தார். இறுதியில் பிலிப் குணவர்தன உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து விலகினார்கள். இதன் எதிரொலி சுதந்திரக் கட்சியின் தான் குருணாகல் மாநாட்டிலும் எதிரொலித்தது.

1959 இல் நடந்த சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாநாட்டில் பண்டாரநாயக்கவை அகற்ற முக்கிய தலைவர்கள் முயற்சித்தார்கள். போதாததற்கு மேலும் 6 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் சென்று அமர்ந்தார்கள். உண்மையில் பண்டாரநாயக்கவின் இறுதிக் காலத்தில் பண்டாரநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை பலம் இல்லாது போயிருந்தது. அரசாங்கத்தில் 46 பேர் மட்டுமே இருந்தார்கள். எதிர்க்கட்சியில் 54 பேர் இருந்தார்கள்.

1959ஆம் ஆண்டு சீ.பி.டி.சில்வா மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்ற போது அவருக்குப் பதிலாக சபைத்தலைவராக தஹாநாயக்கா நியமிக்கப்பட்டார். செப்டம்பர் மாதம் நிவ்யோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக பண்டாரநாயக்க செல்லவிருந்தார். அவரின் அந்தப் பயணக் காலப்பகுதியில் தனக்குப் பதிலாக தஹாநாயக்கா பதில் பிரதமராக கடமையாற்றுவார் என்று கவர்னருக்கு பண்டாரநாயக்கா அறிவித்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லுமுன்னரே பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

பண்டாரநாயக்கவின் மரணச் சடங்கு

1959 செப்டம்பர் 26 ஆம் திகதி பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க  படுகொலைசெய்யப்பட்டதும் சில மணித்தியாலங்களில் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஆக்கப்பட்டார். பிரதமராக பதவியேற்றதும் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனம் செய்தார். பண்டாரநாயக்க படுகொலை குறித்து பலவித வதந்திகள் பரவியிருந்ததால் செய்தித் தணிக்கையையும் அமுல் படுத்தினார்.

அவர் பிரதமராக பதவியேற்றபோது ஆற்றிய உரை தனிச்சிங்களத்தில் இருந்ததையும், அவரின் உரையில் நமது இனம், நமது மதம்,  என்று குறிப்பிட்டவை சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் தான் என்று விமர்சித்தார் சீ.சுந்தரலிங்கம். சிங்கள அரசு என்கிற சித்தாந்தத்துடன் இயங்கினால் தனித் தமிழ் அரசு என்பது தவிர்க்கமுடியாமல் ஆகிவிடும் என்று அவர் 1959 இல் அந்த விமர்சனத்தில் வலியுறுத்தினார். 

பண்டாரநாயக்கவின் படுகொலையைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒருமாதமாகக் கூடவில்லை. மீண்டும் ஒக்டோபர் 27ஆம் திகதி கூடியவேளை இந்த அரசாங்கம் சபையின் முழுமையான நம்பிக்கையை இழந்துள்ள நிலையில் ஆள்வதற்கான எந்தத் தார்மீகமும் கிடையாது என்று என்.எம்.பெரேரா சபையில் உரையாற்றினார். அதற்கு பதிலளித்த தஹாநாயக்க தனக்கு அந்தத் தார்மீகம் கிடையாததை ஒத்துக்கொண்டதுடன் தற்போதைய அரசியல் சூழலில் இந்தத் தற்காலிகப் பணியை தான் சுமக்க நேரிட்டுள்ளதை விளக்கினார். அந்த அரசாங்கத்தின் பதவிக்  காலம் 1961 ஏப்ரல் மாதம் முடியும்வரை இந்த ஆட்சியை தொடர அனுமதிக்கும்படியும் தஹாநாயக்க கேட்டுக்கொண்டார். ஆனால் என்.எம்.பெரேரா தஹானாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் கொண்டுவந்தார். அந்த வாக்கெடுப்பில் 48 வாக்குகள் தஹாநாயக்கவுக்கு ஆதரவாகவும், 45 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. மூன்று வாக்குகளால் அவரின் ஆட்சி தப்பியது.

ஆளுநருடன்

அதுமட்டுமன்றி பண்டாரநாயக்கவின் கொலை விசாரணை திருப்திதராததால் நீதி அமைச்சருக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. அதில் 46 வாக்குகள் அரசுக்கு ஆதரவாகும் 45வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஒரே ஒரு வாக்கில் அரசாங்கம் மீண்டும் தப்பியது.

1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சர் வேறு காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, நிதியமைச்சராக இருந்த திரு.ஸ்டான்லி டி சொய்சா நவம்பர் 23 ஆம் திகதி பதவி விலகினார். அந்த இருவரும் தஹநாயக்கவின் ஆதரவாளராக இருந்தபோதும் எதிர்க்கட்சியினரின் நெருக்கடி காரணமாக அம்முடிவை எடுத்தனர்.

ஆனால் இப்படியான நெருக்கடிகள் மத்தியில் எதையும் தொடரமுடியாது என்பதை தஹாநாயக்க விளங்கிக்கொண்டார். எனவே அவருக்கு இருந்த நெருக்கடிகள் காரணமாக அவர் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்தும்படி டிசம்பர் 5ஆம் திகதியன்று கவர்னரைக் கோரினார். அதன்படி பாராளுமன்றத்தைக் கலைத்த ஆளுநர் மார்ச் 19 தேர்தலை நடத்துவதாக அறிவித்தார். தேர்தல் முடியும்வரை காபந்து அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும்படி தஹநாயக்கவைக் கோரினார்.

இந்த நிலையில் டிசம்பர் 7 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகுவதாக இராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்த சுதந்திரக் கட்சி, அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

இவற்றின் விளைவாக தனக்கு ஆதரவளிக்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார். 1959 நவம்பர் 8, அன்று தொழில் அமைச்சர் எம்.பி. த சொய்சா பதவி நீக்கப்பட்டார். டிசம்பர் 8ஆம் தேதி நள்ளிரவில் உள்துறை அமைச்சர் டி.பி. இலங்கரத்ன, சுகாதார அமைச்சர் ஏ.பி. ஜயசூரிய, போக்குவரத்து மற்றும் மின்சக்தி அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க, கலாசார அமைச்சர் பி.பி.ஜி. களுகல்ல ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். லண்டனில் இருந்து மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு திரும்பிய சி.பி. டி சில்வா இந்த போக்கை எதிர்த்து நின்ற அமைச்சர்களோடு இருந்ததால் அவரும் நீக்கப்படுவதற்கு வாய்ப்பிருந்ததால் அதற்கு முன்னர் அவரே தான் வகித்து வந்த காணி, விவசாய அமைச்சர் பதவியில் இருந்து டிசம்பர் 12 இல் இராஜினாமா செய்து கொண்டார்.

1960 ஜனவரி 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள் அவர் இலங்கை ஜனநாயகக் கட்சி (LPP) என்ற புதிய கட்சியை உருவாக்கியதாக அறிவித்தார். இதனை தஹாநாயக்கவுக்கு எதிரான தரப்பினர் “லங்கா பிஸ்டல் கட்சி” என்று அழைத்தார்கள். அதாவது பண்டாரநாயக்கவை கொலை செய்வதற்கு உதவியோர் என்கிற அர்த்தத்தில் அப்படி அழைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார். தேர்தல் வரை தனது கடமைகளை நேர்த்தியாக செய்து முடிப்பது என்று முடிவெடுத்தார். அதன்படி முதலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்களை பதவி நீக்கிவிட்டு அமைச்சரவையை சிறிதாக்கினார். தீர்மானம் எடுப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்ததன் மூலம் அரசாங்க முடிவுகளைன் மீதான வீண் விவாதங்களை தவிர்க்க அவரால் முடிந்தது. பண்டாரநாயக்கவின் நெருங்கிய நம்பிக்கையான சகாவாக இருந்த அவரால் பண்டாரநாயக்கவின் மறைவின் பின்னர் சுதந்திரக் கட்சியில் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. பண்டாரநாயக்க கொலை விசாரணையில் தஹாநாயக்க போதுமான அக்கறையை காட்டவில்லை என்கிற சந்தேகத்தையும் எழுப்பினார்கள் சுதந்திரக் கட்சியினர்.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் என்.எம். பெரேரா கடுமையாக குற்றம் சாட்டினார். இதனால் தஹாநாயக்கவுக்கு எதிராக பல நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. புதிதாக, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Internal Security) என்ற ஒன்று நிறுவப்பட்டு, அதன் செயலாளராக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிட்னி டி சொய்சா நியமிக்கப்பட்டார். அது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரதும் விசனத்துக்கு உள்ளானது. பல எம்.பி.க்களின் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டார்கள். பண்டாரநாயக்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிகி சொய்சாவின் சகோதர் தான் சிட்னி சொய்சா. அதுமட்டுமன்றி குருநாகல் மாநாட்டில் பண்டாரநாயக்கவை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றி; தஹநாயக்கவை கட்சித் தலைமைக்குக் கொண்டுவரப் போராடிய பிரதான நபர் தான் பண்டாரநாயக்க கொலையின் பிரதான சூத்திரதாரியான களனி விகாரையின் தலைவராக இருந்த புத்தரக்கித தேரர். இந்தக் காரணிகளை இணைத்து தஹாநாயக்கவை பலர் சந்தேகித்தனர்.


இறுதியில் அவர் சுதந்திரக் கட்சியின் பகையாளியாகவே ஆகிவிட்டார். செல்வந்த பின்னணி, பரம்பரை செல்வாக்கு, அரசியல், பணம் போன்ற பின்னணியின்றி பதவிக்கு வந்த முதலாவது அரச தலைவர் அவர். அவரின் தந்தை முகாந்திரம் பதவியை வகித்தவர் என்றபோதும் தஹாநாயக்கவின் வருகைக்கு இந்தப் பதவிப் பின்னணி காரணமாக இருந்ததில்லை. இலங்கையின் “வளவ்வ” பிரபுத்துவ பின்னணியில் இல்லாமல் சாதாரண குடும்பத்திலிருந்து  வந்ததும் அவரின் மீதான அரசியல் வெறுப்புணர்ச்சிக்கு காரணம் என்று சிங்களத் தரப்பினர் குறிப்பிடுவது வழக்கம்.

வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த எம்.பி.டபிள்யூ. மெதிவல, உணவு, வர்த்தகத்துறை அமைச்சர் ஆர்.ஜி. சேனநாயக்க, கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஜே.சி.டபிள்யூ. முனசிங்க மற்றும் அரச பணித்துறை அமைச்சர் ஹென்றி அபேவிக்ரம ஆகியோர் 1959 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி நள்ளிரவில் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1960 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று பண்டாரநாயக்கவுக்காக ஹொரகொல்லையில் சமாதிக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டபோது, அதில் பங்கேற்றிருந்த பிரதமர் தஹாநாயக்கவை எவரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அங்கு உரையாற்றிய பலர் மத்தியில் தஹாநாயக்கவுக்கு உரை நிகழ்த்த வாய்ப்பளிக்கவில்லை. 

இந்த அரசியல் நாடகங்களின் பின்னர் தஹாநாயக்க ஒரு இடதுசாரி எதிர்ப்பாளராகவே ஆகிவிட்டார். வலதுசாரி முகாமோடு கைகோர்த்து இடதுசாரித் தலைவர்களோடு மோதுவது அவரின் வாடிக்கையாகியிருந்தது. 1960 தேர்தலில் அதை வெளிப்படையாகவே செய்தார். 

1960 தேர்தல்

1960ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் முதற் தடவையாக 18 வயதிலிருந்து வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1931 டொனமூர் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை காலத்திலிருந்து 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. எனவே வாக்காளர்களின் தொகையும் அதிகரித்தது.

அதுமட்டுமன்றி 1959 ஆம் ஆண்டு வோல்டர் தல்கொடபிட்டிய தலைமையிலான ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை 89 இலிருந்து 145ஆக உயர்த்தப்பட்டது. எனவே தெரிவு செய்யப்படவேண்டியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. 

இந்தத் தேர்தலில் தஹாநாயக்கவினால் தொடங்கப்பட்ட இலங்கை ஜனநாயக கட்சியும் களத்தில் இறங்கியது.

அத்தேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் களமிறக்கிய வேட்பாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

  1. ஐக்கிய தேசியக் கட்சி - டட்லி சேனாநாயக்க - 127 வேட்பாளர்கள்
  2. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - சி. பி. டி சில்வா - 108 வேட்பாளர்கள்
  3. இலங்கை சமசமாஜ கட்சி -  என்.எம். பெரேரா - 101 வேட்பாளர்கள்
  4. இலங்கை ஜனநாயகக் கட்சி - விஜயானந்த தஹநாயக்க - 101 வேட்பாளர்கள் 
  5. மக்கள் ஐக்கிய முன்னணி - பிலிப் குணவர்தன - 89 வேட்பாளர்கள்


தஹாநாயக்கவின் இலங்கை ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட 101 வேட்பாளர்களில் சேனபால சமரசேகர (அக்மீமன), சேர் ராசிக் ஃபரீட் (கொழும்பு மத்திய)  காரியப்பர் (கல்முனை) மற்றும் ஜே.டி.வீரசேகர (கொத்மலை) ஆகிய நால்வர் மட்டுமே வெற்றி பெற்றனர். தஹாநாயக்க 483 வாக்குகள் வித்தியாசத்தில் டீ.எஸ்.அபேகுணவர்த்தனவால் தோற்கடிக்கப்பட்டார். அவரின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு இது தான் பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால் அப்பின்னடைவும் நான்கு மாதங்கள் மட்டுமே.

அத் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை ஐக்கிய தேசியக் கட்சி – 50. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 46, இலங்கைத் தமிழரசுக் கட்சி – 15, இலங்கை சமசமாஜக் கட்சி – 10, மக்கள் ஐக்கிய முன்னணி – 10, இலங்கை ஜனநாயகக் கட்சி – 4, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி- 3 என்கிற வகையில் முடிவுகள் அமைந்தன.

1960ஆம் ஆண்டு மார்ச் 21இல், புதிய அரசாங்கத்தின் பிரதமராக டட்லி சேனநாயக்க பதவியேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் சபாநாயகர் தெரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் டி. பி. சுபசிங்க வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. சபாநாயகர் பதவியை அரசாங்கம் இழந்திருந்ததால் அரசின் ஆயுட்காலம் குறையும் என கணிக்கப்பட்டது. அந்த கணிப்புகளை உண்மையாக்கும் வகையில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற சிம்மாசன பிரசங்கத்தின் போது ஆளுங்கட்சி 25 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 86 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி ஏப்ரல் 23ஆம் திகதி டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் கலைக்கப்பட்டது.

அதே ஆண்டு நான்கு மாத இடைவெளியில்; யூலை மாதம் தேர்தல் நடந்தது. அதில் 10,902 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று எதிர்க்கட்சியில் அமர்ந்தார் தஹநாயக்க. 1963இல் பண்டாரநாயக்க கொலை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் அவரின் சாட்சிகளும் பதிவாகின. அதே ஆண்டு வித்தியோதய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் (D. Lit) பெற்றார்.

கோவணத்துடன் பாராளுமன்றத்துக்கு


கோவணத்துடன் பாராளுமன்றத்துக்கு

1960ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் சில பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதன் அங்கமாக ஆடைகளுக்கான துணியின் விலை 10 சதத்தால் அதிகரிக்கப்பட்டது. துணி வகைகளை அப்போது சதொச நிறுவனம் தான் விற்பனை செய்து வந்தது. இந்த விலையேற்றம் மக்கள் மத்தியில் கடுமையான விசனத்துக்கு உள்ளானது. எதிர்க்கட்சியினர் இந்த விலையேற்றத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். எதிர்ப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக முன்னாள் பிரதமர் தஹாநாயக்க காலி முகத் திடலில் உள்ள பாராளுமன்றத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்கிற செய்தி ஏற்கெனவே வந்திருந்தது. அது ஆனால் அவர் காரில் வந்து இறங்கும் போது கோவணத்துடன் இறங்கியது தான் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏற்கெனவே அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் கூட இதை எதிர்பார்த்து இருக்கவில்லை. கூடியிருந்த புகைப்படப் பிடிப்பாளர்கள் அக்காட்சியை சுற்றி சுற்றி படம் பிடித்தார்கள். தனக்கு வழங்கப்பட்ட கூப்பனுக்கு இவ்வளவு துணியைத் தான் வாங்க முடிந்ததென்றும் அதைக் கோவணமாக மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று பத்திரிகையாளர்களிடம் அவர் கூறினார். அடுத்த நாள் பத்திரிகைகளில் முதற் பக்க பெரும் செய்தி படத்துடன் வெளிவந்திருந்தது. இன்று வரை இலங்கையின் புகழ் பெற்ற அரசியல் படங்களின் வரிசையில் அப்புகைப்படம் முன்னிலையில் இருக்கிறது.

சம்பவத்தை அறிந்த பாராளுமன்றக் காவலர்கள் உசாராக ஓடிவந்து குவிந்தார்கள். பாராளுமன்ற ஒழுங்கு விதிகளின் பிரகாரம் அவரை கோவணத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று அவருடன் வாக்குவாதம் செய்தனர்.

சிறிமாவின் அரசாங்கம் முழுமையாக நிறைவு பெறுமுன்னரே அந்த ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கும் தஹாநாயக்க தான் காரணமாக இருந்தார்.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் சிம்மாசனப் பிரசங்க விவாதத்தின் போது தஹநாயக்க அந்த உரையின் மீது திருத்தங்களை கொண்டு வரும் யோசனையை பரிந்துரைத்தார் அவரின் அந்தத் யோசனைக்கு ஆதரவாக 74 வாக்குகளும் எதிராக 73 வாக்குகளும் பதிவாகின. ஒரு வாக்கு வித்தியாசத்தில் தஹநாயக்கவின் யோசனை வெற்றி பெற்றதன் மூலம் அரசாங்கம் தோற்றதால் 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி அரசாங்கம் கலைக்கப்பட்டது.

மீண்டும் அமைச்சராக

மீண்டும் 1965 ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1970 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு 3802 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். ஆனால் சில வாரங்களில் ஐ.தே.க விலிருந்து விலகி சுயாதீன உறுப்பினராக  பாராளுமன்றத்தில் இயங்கினார். 1977 ஆம் ஆண்டு தேர்தல் கிட்டும் வேளையில் மீண்டும் ஐ.தே.க சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக ஆவதற்கு அவர் பிரயத்தனம் கொண்டார். ஆனால் ஜே.ஆர் தஹாநாயக்கவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். அத்தேர்தலில் ஐ.தே.க விலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றார். அந்தத் தேர்தலில் 5009 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்த டீ.ஜீ.எல்பட் சில்வாவின் நியமனத்தை இரத்துச் செய்யச் செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தஹாநாயக்க தோற்றது மட்டுமல்லாமல் எதிராளிக்கான வழக்குச் செலவையும் செலுத்தும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஹாநாயக்க சளைக்காமல் மீண்டும்  மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்று தனக்காக தானே வாதாடி வெற்றி பெற்றார். அவரின் தர்க்கங்களே வெற்றி பெற்றன.  1979 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று மீண்டும் காலி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. எல்பட் சில்வா மீண்டும் அவருடன் போட்டியிட்டார். பெரும் செல்வந்தர். ஏற்கெனவே அதிகப்படியான வாக்குகளில் தஹானாயக்கவை தோற்கடித்தவர். கட்சியின் ஆதரவும் செல்வாக்கும் கூட அவரின் பக்கமே இருந்தது. எனவே தேர்தலில் தனது வெற்றியில் அவருக்கு சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் அந்த கனவையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு தஹாநாயக்க 13,012 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது மட்டுமன்றி மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் ஆனார். 


அதிலிருந்து 1989 வரை ஜே.ஆரின் ஆளுங்கட்சியில் இருந்தார். 1979-1986 வரை சாதாரண உறுப்பினராகத் தான் அவர் இருந்தார். 1986இல் தான் கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆக்கினார் ஜே.ஆர். அப்பதவியை ஏற்கும் போது அவருக்கு 84 வயது. 1988 வரை அவர் அப்பதவியை வகித்தார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் தேசியப் பட்டியலில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தபோதும் அவர் நியமிக்கப்படவில்லை.

பிராட்மன் வீரக்கோனின் நூலில் இருந்து.

இலங்கையின் ஒன்பது பிரதமர்களின் கீழ் செயலாளராக பணியாற்றியவர் பிரபல சிவில் உத்தியோகத்தர் பிராட்மன் வீரக்கோன். அவர் இந்த ஒன்பது பிரதமர்களின் கீழ் கடமையாற்றிய அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார். 2004 ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியான அந்த நூல் பல பதிப்புகளைக் கடந்து விட்டது. பல எழுத்தாளர்களுக்கும் அது ஒரு ஆதார நூல். மிகவும் சுவாரசியமான விபரங்களைக் கொண்ட நூலும் கூட. அதில் தஹாநாயக்க பற்றிய சுவாரசியமான விபரங்களும் உண்டு.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை தனக்கு மிகவும் பெரியது என்று கூறி அதற்குள்ளேயே தனக்கான அறையாக பலகையில் ஒரு அறையை அமைத்துக்கொண்டு தங்கி வந்தவர் தஹநாயக்க.


அவர் பேருந்திலும் ரயிலிலுல் பயணம் செய்த ஒருவர். திடீரென பிரதமராக ஆனதும் தனது ஓரிரு பனியன்களையும், சட்டைகளையும், ஒரு சோடி செருப்பையும் ஒரு சூட் கேஸில் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி அலரி மாளிகைக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் பிரதமரின் செயலாளரான பிரட்மன் வீரகோனை அழைத்து;

“பிரட்மேன் எனது அறையைக் காட்டுங்கள்” என்று கேட்டதும் பிரட்மன் வீரகோன் அவரை பிரதமர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அது மிகவும் விசாலமான அறை. தஹநாயக்க ஒரு கணம் திகைத்துப் போனார்.

படுக்க ஒரு சிறிய படுக்கை, உண்பதற்கு ஒரு தட்டம், அருந்துவதற்கு ஒரு கோப்பை, அணிவதற்கு சில உடைகள் போதுமல்லவா? இவ்வளவு பெரிய மாளிகை தேவையா என்று கேட்ட போதும் பிரதமருக்கென்று சில ஒழுங்குகளை ஏற்படுத்தி ஆகவேண்டுமல்லவா ஏற்கநேர்ந்தது.

வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையால் வெளிநாட்டு தலைவர்களையும், அமைச்சர்களையும், வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பதற்கும் இந்த அலரி மாளிகைதான் உங்களுக்கு உகந்தது என அவரின் செயலாளராக பிரட்மன் வலியுறுத்தினார்.

"பிராட்மேன், இது பெரிய மண்டபமாக இருக்கிறது. எங்கள் வெளி வரவேற்பறை கூட இதை சிறியது. என்னால் இங்கு தங்க முடியாது. தச்சர் ஒருவரை அழைத்து வந்து இந்த அறையைப் பிரித்து ஒரு சிறிய அறையை உருவாக்க முடியாதா?" கேட்க

"முடியும், ஐயா" என்று பதிலளித்த பிராட்மன் வீரகோன் உடனடியாக தச்சர் ஒருவரை வரவழைத்து அந்த பெரிய அறைக்குள் மரச் சுவர்களால் பிரித்து ஒரு சிறிய அறையை  உருவாக்கிக் கொடுத்தார். தஹநாயக்க பிரதமராக பதவிவகித்த அந்த ஆறு மாதங்களும் அந்த சிறிய அறையில்தான் வாழ்ந்தார்.

1960 மார்ச் அலரிமாளிகையில் இருந்தவாறு பிரதமர் தஹநாயக்க வானொலியில் தேர்தல் முடிவுகளை அறிந்துகொண்டிருந்தார். அதிகாலை விடிவதற்குள் அதுவரையான முடிவுகளின்படி அவரது தோல்வி நிச்சமாகிவிட்டிருந்தது.

சபாநாயகருடனும் ஆளுனருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது பதவிக்காலம் முடிந்துவிட்டது என்றும் ஊருக்குப்புறப்படுகின்றேன் என்று அறிவித்தார்.

“இன்றும் நீங்கள்தான் காபந்து அரசின் பிரதமர். தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான பின்னர் தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும் வரையாவது அங்கேயே இருங்கள். இப்போதே ஊருக்குச்செல்ல வேண்டாம்” என்று அவர்கள் கோரினார்கள். 

ஆனால் அவர்களின் வேண்டுகோளை ஏற்காமல் ‘மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள். நான் போகிறேன்’ என்று தனது பழைய தகர சூட்கேசுடன் பஸ்ஸில் வீடு போய் சேர்ந்தார் அவர்.

அலரிமாளிகையில் பணிபுரிந்த சேவகர்களிடம், “மங் என்னாங் புதாலா” (நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிவிட்டு அலரி மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து வெளியேறி, காலி வீதியைக் கடந்து எதிர்ப்பக்கம் சென்று கொழும்பு புறக்கோட்டைக்குச்செல்லும் பொதுப் போக்குவரத்து பஸ்ஸில் ஏறிச்சென்று, அங்கிருந்து காலிக்குச்செல்லும் பஸ் தரிப்பை சென்றடைந்தார்.

லேக்ஹவுஸ், வீரகேசரி, ரைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகை நிறுவனங்களிலிருந்து தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டு எழுதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள், பிரதமர் தஹநாயக்கவின் நிலையை அறிவதற்காக அலரிமாளியுடன் தொடர்பு கொண்டார்கள் ஆனால், “ஐயா ஊருக்குப்போயிட்டார்” என்று பதில் அளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் உடனடியாக புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு விரைந்தார்கள். தஹநாயக்க பஸ் நடத்துனரிடம் டிக்கட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தன்னைத்தேடி வந்த ஊடகவியலாளர்களிடம், “இனித்தான் உங்களுக்கு அதிகம் வேலை இருக்கும். எதற்காக வீணாக என்னைத்தேடி வந்தீர்கள். திருப்பிப்போய், செய்யவேண்டிய வேலைகளை கவனியுங்கள்,” எனக் கூறிவிட்டு பஸ்ஸில் ஏறி விடைபெற்றார்.

பிரட்மன் வீரக்கோனைப் பொறுத்தளவில், அலரி மாளிகையைப் பயன்படுத்திய இலங்கையின் பிரதமர்களிலேயே தஹநாயக்க மிகவும் எளிமையான பிரதமரும் உண்மையான பிரதமரும் என்கிறார்.


விடியற்காலையில் எழுந்து புல்வெளிகளில் நடப்பது அவரது வாடிக்கை. 7 மணிக்கு பணிகளை ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை ஓயாமல் இயங்குவார். மிகவும் திட்டமிட்டு தனது பணிகளை முடிப்பார். அவரின் கையெழுத்து தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். அவர் எழுத ஆரம்பித்தால் W.Dahanayake என்று கையெழுத்திடும் வரை எங்கும் நிற்காது. இடையில் வசனங்களைத் திருத்த வேண்டிய அவசியமே ஏற்படாது. என்கிறார் பிரட்மன்.

வெளியே அவரை வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம், “மங் என்னாங் புதாலா” (நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிக்கொண்டு விடைபெற்றார் தஹாநாயக்க.

அவர் கறைபடாத, ஊழலற்ற நேர்மையான அரசியல்வாதியாக இலங்கை வரலாற்றில் இன்றும் அறியப்படுபவர்.

சிங்கள மக்கள் மத்தியில் அவர் “கலாநிதி” விஜயானந்த தஹாநாயக்க என்று அழைக்கப்படுவதை காண முடியும். ஆனால் தமிழ்ச் சூழலில் அவர் அவ்வாறு அறியப்பட்டிருக்கவில்லை. தஹாநாயக்கவைத் தவிர இலங்கையின் வேறெந்த பிரதமரும் கலாநிதி பட்டம் பெற்ற கல்விமானாக இருந்ததில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.


அவர் ஒருபோதும் ஊழல் செய்யாதவர். தனது குடும்பத்தினரையோ நண்பர்களையோ ஊழல் செய்ய அனுமதித்ததில்லை. அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் கட்சி, நட்பு பாராமல் உதவி செய்தார். அதிக காலம் பேருந்திலும், இரயிலிலும் தான் பயணம் செய்தார். 1960 தேர்தலில் தோல்வியடைந்த அன்று காலையிலேயே தனது பழைய தகரப் பெட்டியை எடுத்துக்கொண்டு காலிக்கு பொதுப் போக்குவரத்து பஸ்ஸில் தான் சென்றார். அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. அதுமட்டுமன்றி இருந்த அமைச்சுக்களின் எண்ணிக்கையைக் கூட குறைத்தார். பாரபட்சமின்றி பல அமைச்சர்களை மாற்றினார். அமைச்சரவை 10 ஆகக் குறைந்திருந்தது அவரின் காலத்தில் தான். ஒரு பௌத்தராக புலால் உண்ணாமையை இறுதி வரை கடைபிடித்தவர். மரண தண்டனையை இரத்து செய்யும் சட்டத்தையும் அவர் தான் கொண்டு வந்தார்.

தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியை அரசாங்கம் விடுமுறை தினமாக ஆக்குமுன்னமே காலி நகரசபையில் அதனை நிறைவேற்றிக் காட்டியவர் அப்போது மேயராக இருந்த தஹாநாயக்க. அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அரசு மே தினத்தை பொது விடுமுறையாக ஆக்கியது.

ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்கும் முறையையும் அவர் தான் அறிமுகப்படுத்தினார். பல நாட்கள் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் அரச கஜானா வீணாக விரயம் செய்யப்படுவதாக அவர் கூறினார். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில் இருந்து தான் அந்த முறை அறிமுகமானது. அதுபோல வேட்பாளர்கள் வானொலியின் வாயிலாக வாக்காளர்களிடம் உரையாடுவதற்கான ஏற்பாட்டையும் அவர் முதற் தடைவையாக உருவாக்கிக் கொடுத்தார். 
காலியில் எந்த இறப்பு நிகழ்வுகளிலும், மரண நிகழ்வுகளிலும் பஸ்ஸிலேயே சென்று கலந்து விட்டு வந்தவர். ரிச்மன்ட் ஹில் வீதியில் இருந்த அவரின் அலுவலகத்தில் பொதுமக்கள் எப்போதும் கெடுபிடி இன்றி இலகுவாக சந்தித்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. அது மட்டுமன்றி அந்த அலுவலகத்தில் இருந்த தொலைபேசியை எவரும் எந்த அவசரத்திலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வசதி செய்து கொடுத்திருந்தார்.

இலங்கைக்கு வெளியே வெளிநாடு செல்லாத ஒரே பிரதமர் அவர். காலியில் அரசாக அதிபராக இருந்த நவரட்ணராஜா ஒரு முறை தஹாநாயக்கவிடம் “சேர்! வெளிநாடு செல்லாத ஒரு மூத்த அரசியல்வாதி நீங்கள் என்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு “சாக்ரடீஸ் ஏதென்ஸை விட்டு வெளியே சென்றதில்லை” என்றாராம் தஹாநாயக்க. 

இறுதிக் காலம்

1988 ஆம் ஆண்டு அவரின் 86வது வயது வரை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். ஆனால் அவர் இறக்கும் வரை பொது வாழ்க்கையில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொள்ளவில்லை. குளியலறையில் இருந்து விழுந்து இடுப்பு எலும்பு முறியும் வரை அவர் வெளியில் ஓடியோடி அரசியல் பணிகளை செய்து வந்தார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏழ்மையான பின்னணியில் இருந்த வந்த இரண்டு பிரதமர்களைக் கூற முடியும் ஒருவர் தஹாநாயக்க, மற்றவர் ரணசிங்க பிரேமதாச. இவர்களில் தஹாநாயக்க எளிமையாகவும், ஏழ்மையாகவும் இறுதிவரை வாழ்ந்த ஒருவராகக் கொள்ளலாம். இறுதிக் காலத்தில் அவர் காலியில் இருந்த தனது வீட்டில் வாழ்ந்து வந்தார்.

அப்படி இருந்தும் தனது ஓய்வூதியத்தை கூட மக்களுக்கே திருப்பிக் கொடுத்தார். 1997 ஆம் ஆண்டு மே 4, அன்று தனது தொண்ணூற்றைந்தாவது வயதில் காலமானார்.

தஹாநாயக்கவின் இறுதிச் சடங்கில்


இலங்கையின் அரசியலில் முன்னுதாரணத் தலைவராக வாழ்ந்து காட்டியவர் அவர்.

விஜேயானந்த தஹநாயக்க கீழ்வரும் தேர்தல்கள் அனைத்திலும் காலி மாவட்டத்தில் இருந்து தான் தெரிவானார்.


தஹாநாயக்கவின் கோவணமும் அரசியலும் - என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates