Headlines News :
முகப்பு » , , , , » கொழும்பு இரயில் நிலையத்தின் ஆரம்ப அமைவிடம் எது? (கொழும்பின் கதை - 33) என்.சரவணன்

கொழும்பு இரயில் நிலையத்தின் ஆரம்ப அமைவிடம் எது? (கொழும்பின் கதை - 33) என்.சரவணன்

இலங்கைக்கு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது 1858இல், மண்வெட்டியால் வெட்டிஅதற்கான பாதையை ஆரம்பித்து வைத்தவர் அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி வார்ட். முதல் ரயில் பயணம் 1864ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி ஒட்டப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 1865, அக்டோபர் 12 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்றைய இலங்கையின் “சாலைகளின் ஸ்தாபகர்” என்று அழைக்கப்பட்ட ஆளுநர் சேர் எட்வர்ட் பார்ன்ஸ் பதவி விலகியபோது, நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் நெடுஞ்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. 1822 முதல் 1825 வரை கொழும்பு-கண்டி நெடுஞ்சாலை கிட்டத்தட்ட முழுமையடைந்தது. 1832 இல் முதல் 'மெயில் கோச்' அல்லது குதிரை வண்டி தபால் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இரயில் சேவை ஆரம்பிக்கப்படும் வரை அது தொடர்ந்தது.

கொழும்பில் இருந்து மலையகப் பகுதிகளுக்கான இரயில் பாதைகளை அமைப்பதற்கு இந்திய வம்சாவளி மக்கள் கொடுத்த விலை தனியான கதைத் தொடர்கள். பாரிய இயந்திர வசதிகள் இல்லாத காலத்தில் மலைகளைக் குடைந்தும், தோண்டியும், வெட்டியும் தமது கடின உழைப்பை செலுத்தி உருவாக்கியவர்கள் அவர்கள். இந்த காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறைக்காக இந்தியாவில் இருந்து இறக்கப்பட்ட ஒப்பந்தக் கூலிகளை விட, கொழும்பு துறைமுகப் பணியாளர்களாகவும், நாடளாவிய நகரசுத்தித் தொழிலுக்காகவும் இறக்கப்பட்டதுடன், கொழும்பு – கண்டி இரயில் பாதை அமைப்பதற்கான பணிக்காகவும் ஒப்பந்தக் கூலிகளாக இறக்கப்பட்டனர். முதலில் மூன்று வருட காலத்துக்கான ஒப்பந்தத்துக்கு இறக்கப்பட்டார்கள். இந்த இரயில்வே பாதையமைப்பு தொழிலாளர்கள் பற்றிய கடும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக ஒப்பந்தத்தை மீறியவர்களுக்கு எதிரான சட்டங்கள் கவனிக்கப்படவேண்டியவை. அவற்றில் 1861ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கச் சட்டம். 1863ஆம் ஆண்டின்  16ஆம் இலக்கச் சட்டம் போன்றவற்றைக் குறிப்பிட முடியும். 

ஆளுநர் ஹென்றி ஜோர்ஜ் வார்ட் (Henry George Ward)

இலங்கையின் இரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான பிரதான காரணியாக அமைந்தது; அன்றைய கோப்பி, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தமது உற்பத்தியை கொழும்புக்கு கொண்டுபோவதற்கான போக்குவரத்துக்கான தேவை குறித்து அரசுக்கு கொடுத்த அழுத்தம் தான். அரசின் பிரதான வருமானமீட்டும் துறையாக அது மாறியிருந்த காலமாதலால். இரயில் சேவை தமது மூலதனத்தை பாதுகாத்து, பன்மடங்கு பெருக்க முக்கிய காரணியாக அமையும் என்று உறுதியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லை.

கொழும்பு கண்டி புகையிரத சேவையை 1842 ஆம் ஆண்டு வலியுறுத்தியது அன்றைய கோப்பித் தோட்ட முதலாளிகள் தான். அதன் பிரகாரம் 1845 ஆம் ஆண்டு இலங்கை இரயில்வே கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. 

ஐரோப்பாவில் இரயில் சேவை தொடங்கப்பட்டதன் பின்பு கண்ட அதிவேக வளர்ச்சியையும், மாற்றங்களையும் குறிப்பிட்டு இலங்கையில் அதன் அவசியத்தையும், அதனால் காணக்கூடிய நலன்களைப் பற்றியும் ஒரு சிறப்பரிக்கையை 1856 ஆம் ஆண்டு அரசாங்க செயலரிடம் அன்றைய ஆளுநர் ஹென்றி வார்ட் (Henry Ward) சமர்ப்பித்தார். அது எற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவாக அதே ஆண்டு ஜூலை மாதம், இலங்கையில் ரயில் சேவையை தொடங்க “சிலோன் ரயில்வே நிறுவனம்” (Ceylon Railway Company) என்ற தனியார் நிறுவனத்திற்கு 800,000 பவுண்டுகள் செலவில் நிர்மாணிப்பதற்கு வழங்கி அரசாங்க சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் முதல் இரயில் நிலையம் டெர்மினஸ் புகையிரத நிலையம் (Terminus Railway Station). இன்று மருதானை தொழிநுட்பக் கல்லூரிக்கு எதிரில் இரயில்வே நூதன சாலையாக இயங்கி வருகிறது

1858ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 5.30 மணியளவில் இலங்கையில் இரயில்வே போக்குவரத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கையின் ஆளுநர் ஹென்றி வார்ட் மண்வெட்டியால் பாதை வெட்டி ஆரம்பித்து வைத்தார். மருதானை தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னால் தற்போதைய புகையிரத களஞ்சிய திணைக்களத்திற்கும் சரக்கு களஞ்சியசாலைக்கும் இடையில் அமைந்துள்ள இடமே அன்று அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட புகையிரத பாதையின் தொடக்கம். அதுமட்டுமல்ல அங்கே தான் இலங்கையின் முதலாவது இரயில் நிலையமும், கொழும்பு மத்திய இரயில் நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது. அன்று டெர்மினஸ் புகையிரத நிலையம் (Terminus Railway Station) என்று அழைத்தார்கள். இங்கிலாந்தில் மான்செஸ்டர் இரயில் நிலையத்தை (Manchester Railway Station) நிர்மாணித்த வில்லியம் பிரெடெரிக் (William Frederick Faviell 1822-1902) தான் 1858-1865க்கு இடையில் கொழும்பின் முதல் இரயில் நிலையத்தையும் வடிவமைத்தவர்.

இலங்கையின் முதல் ரயில் சேவைக்கு பாதை வெட்டப்பட்ட நாள் கொழும்பு மாநகருக்கு ஒரு திருவிழா போல் இருந்தது. நகரம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கான அழைப்பிதழை சிலோன் ரயில்வேயின் தலைமைப் பொறியியலாளர் டபிள்யூ.டி.டோய்ன் (W.T.Doyne) அனுப்பிருந்தார். 560 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக அறிய முடிகிறது. இலங்கையின் மிக முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.

1858 ஆகஸ்ட் 5, அன்று ஓப்சர்வர் நாளிதழ் இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி இப்படி எழுதியது:

"அனைத்து விருந்தினர்களும் மாலை 4.30 மணிக்கு வந்திருந்தனர், ஆளுநர் மாலை 5.00 மணிக்கு வருகை தந்தார், அங்கு அவரை தலைமைப் பொறியாளர் வரவேற்றார். 5.30 க்கு மண் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த மண்ணை ஒரு தள்ளுவனடியில் எடுத்துச் சென்று அப்பால் கொட்டினார் தலைமைப் பொறியாளர் டொயின். இந்த வரலாற்று தருணத்தின் நினைவுகளைப் படம்பிடிக்க புகைப்படக் கலைஞர்கள் வந்திருந்தனர், மேலும் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரர் பார்டின் (Partin). (இலங்கைக்கு புகைப்படக் கலையை அறிமுகப்படுத்தியாவர் அவர் தான்) தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர், அவர்களில் பலர் ஐரோப்பியர்கள்" என்று ஓப்சர்வர் தெரிவித்தது.

உணவு விருந்துக்கான இடமும் பிரேத்தியமாக ஏற்பாடாகியிருந்தது. அதற்கான பிரமாண்டமான கூடம் தெமட்டகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தில் அழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 மேஜைகள் இருந்தன. ஒரு மேசையில் சுமார் 40 பேர் அமரும் வகையில் ஏற்பாடாகியிருந்தது. A முதல் P வரை எழுதப்பட்ட மேசை வரிசை அமைகப்பட்டிருன்தது. விருந்தினர்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். இந்த விருந்தில் பங்கேற்பவர்களின் முழுமையான பட்டியல் சிலோன் ரயில்வே (The Ceylon Government Railway) என்கிற நூலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த உணவு விருந்தில் இராணி சார்பில் காலனியச் செயலர் சி. ஜே. மெக்கார்த்தியும், அரச குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த மேல்மாகாணத்தின் அரசாங்க அதிபர் சீ.பி.லேயார்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கிய பின், அதற்கான பாதை வழித் திட்டங்கள் பற்றி வேறுபட்ட பல கருத்துகள் எழுந்ததால், அசல் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியதாயிற்று. இதன் காரணமாக ரயில் பாதை அமைக்கும் செலவு, ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆகிவிட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன் விளைவாக, 1860 இல் சட்டமன்றம், மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, புதிய உத்தேச செலவீனத்தை வெளியிட்ட்டது. ஆளுநர் சார்லஸ் ஜஸ்டின் மக்கார்த்தியின் (Charles Justin Maccarthy) தலையீட்டின் பேரில், ரயில் பாதையின் கட்டுமானப் பணி; குறைந்த ஏலத்தில் விண்ணப்பித்த ஜெபியேல் என்ற தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஏலத்தின் மதிப்பு 873,039 ரூபாய். 1863 ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் அவர் ரயில்வே பணிகளைத் தொடங்கினார்.

1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான 54 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்ட முதலாவது ரயில் பயணம்; ரயில்வேயின் முதல் இயக்குனரான ஜீ.எல்.மோல்ஸ்வத் தலைமையில் தொடங்கியது. இந்த முதல் பயணத்தில் பெல்ஜியத்தின் பட்டத்து இளவரசரும் பங்கேற்றார்.

கொழும்பில் இருந்து கண்டி வரையிலான ரயில் பாதை ஏப்ரல் 25, 1867 இல் நிறைவடைந்தது. இதை நிறைவு செய்ய நான்கு வருடங்களுக்கும் மேலாக எடுத்தது. இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அன்று தேயிலை உற்பத்தி ஆனபோது இந்த இரயில் போக்குவரத்து தான் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது. ஏப்ரல் 26 அன்றிலிருந்து கொழும்பு - கண்டி புகையிரத சேவை பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.


களனி இரயில் பாதை தொடர்பாக பொறியாளர் எப்.பி.வேர்னன் தலைமையிலான குழுவின் அறிக்கை 1895 பெப்ரவரி 15ஆம் திகதி ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் “களனி மணல் புகையிரதப் பாதை” எனப் பெயரிட்டார். இந்தப் புதிய பாதை கட்டுமானப் பணிகள் 1900 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்றிலிருந்து தொடக்கப்பட்டது. 1902 செப்டம்பர் 15 ஆம் திகதி மருதானையிலிருந்து அவிசாவளை வரையான இரயில் பாதை திறக்கப்பட்டது. இந்தக் களனி வழிப் பாதைக்காக அப்போது ரூ.55, 43, 879 ரூபா செலவிடப்பட்டிருந்தது.

கொழும்பில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையான முதலாவது பயணிகள் ரயில் சேவை 1865 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. முதல் பயணம் 84 பயணிகளுடன் காலை 7.00 மணிக்கு கோட்டையிலிருந்து ரயில் புறப்பட்டது. இரயில் பயணம் பற்றி அன்றைய செய்தித்தாள்களில் கூட விளம்பரப்படுத்தப்பட்டது.

தற்போதைய கோட்டை பிரதான இரயில் நிலையம் அமைந்துள்ள இடம் 1877 காலப்பகுதியில் “பேறை ஏரி”யின் நீரால் மூடப்பட்டிருந்த பகுதியாக இருந்தது. இன்றைய லேக் ஹவுஸ் கட்டிடம் அமைந்துள்ள பகுதியும் இந்தக் காலப்பகுதியில் காலத்தில் பேறை ஏரியின் எல்லைக் கரையாக இருந்தது. “லேக் ஹவுஸ்” நிறுவனப் பத்திரிகைகளை இன்றும் ‘ஏரிக்கரை பத்திரிகைகள்’ என்று அழைக்கப்படுவதை அறிவீர்கள். 

புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தற்போதைய கோட்டை புகையிரத நிலையமும் மருதானை புகையிரத நிலையமும் அதே பகுதிகளில் இருக்கவில்லை. இவற்றின் பெரும்பகுதிகள் பேறை வாவியால் பரவியிருந்தது. தற்போதைய தொழில்நுட்பக் கல்லூரிக்கு எதிரில் தான் இலங்கையின் முதலாவது கொழும்பு இரயில் நிலையம் அமைந்திருந்தது. இந்தப் பகுதி பேறை வாவியின் எல்லையில் அப்போது இருந்தது. அன்றைய கொழும்பின் அமைப்பும் இயல்பும் இன்றைய தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை உங்களால் ஓரளவு கற்பனை செய்து பார்க்க முடியும். அம்பேபுஸ்ஸ நோக்கிய முதலாவது புகையிரத சேவை தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்னால் உள்ள இந்த நிலையத்திலிருந்து தான் இயங்கியது. இன்று அது புகையிரத நூதனசாலையாக ஆக்கப்பட்டிருக்கிறது. 1897 ஆம் ஆண்டளவில் இந்த நிலையத்தில் 197 பணியாளர்கள் கடமையாற்றியதாக குறிப்பிடப்படுகிறது. இந்த முதல் ரயில் நிலையம் 1908 ஆம் ஆண்டு மருதானை இரயில் நிலையம் திறக்கப்பட்டதும் மூடப்பட்டது.

1873 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி செனட் சபையில் உரையாற்றிய ஆளுநர் வில்லியம் கிரகரி, கொழும்பிலிருந்து களுத்துறை வரையான புகையிரத சேவையை ஆரம்பிப்பதன் மூலம் இரயில் சேவையை பரவலாக விரிவாக்கி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அதன்படி பல பொதுச் சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்கி அதனை மேற்கொள்வது பெரும் செலவு ஆகும் என்பதால்; காலிமுகத்திடலின் குறுக்காக கொள்ளுப்பிட்டி கடலை அண்மித்து தண்டவாளப் பாதைகளை நிர்மாணிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.  காலி முகத்திடலுக்கு குறுக்கே புகையிரத பாதையை அமைக்க அரசாங்கம் தீர்மானித்தது. ஆனால் காலி முகத்திடலைப் பாதுகாக்க வேண்டுமென அரசாங்கத்தின் பிரேரணைக்கு எதிராக பொதுமக்களிடையே கண்டனங்கள் எழுந்தன. ஆர். வி. டன்லப், டி.ஹெல்மர், எச்.குரோஸ் போன்றோர்; “கொழும்பின் பெண்கள், சிறுவர்கள் பேரால்” என்கிற பெயரில் உருவாக்கிய அமைப்பின் சார்பில் பெப்ரவரி 1875ஆம் ஆண்டு 24ஆம் திகதி அன்று ஆளுநரைச் சந்தித்து தமது எதிர்ப்பத தெரிவித்தார்கள். பெண்கள், குழந்தைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஓய்வு, பொழுதுபோக்கிடமாக திகழும் காலிமுகத்திடலை அழித்து விட வேண்டாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இறுதியில் ஆளுநர் ஹென்றி வார்டினால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

1874 நாவலப்பிட்டி பாதை, 1877 கொழும்பில் இருந்து மொரட்டுவ பாதை, 1879 களுத்துறை பாதை, 1884 ஹட்டன் மற்றும் தலவாக்கலை பாதை, 1893 பலாங்கொடை மற்றும் ஹப்புத்தளை பாதை, 1894 காலி பாதை, 1902 அவிசாவளை முதல் களனிபாதை, 1903 இல் அனுராதபுர, நநுவரெலிய ஆகிய பாதைகள், 1905இல் பளை வரையிலான வடக்குக்கான பாதை,  1908 இல் ஜா எல வரையிலுமான பாதைகள் திறக்கப்பட்டன. 1912 இல் ஆளுநர் சேர் ஹென்றி மெக்கலம் அவர்களால் இரத்தினபுரி வரையிலான பாதை திறக்கப்பட்டது. 1914 இல் இந்தோ-இலங்கை ரயில்சேவையும், 1916 இல் சிலாபம் வரை, 1924 இல் ஆளுநர் சேர் வில்லியம் மனிங் அவர்களால் பதுளை வரையிலும் 1927 இல் திருகோணமலை வரையிலும் ரயில் பாதைகள் திறக்கப்பட்டது. கொழும்பு – யாழ் இரயில் பாதை 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

தற்போதைய கொழும்பு கோட்டை புகையிர நிலையம் 1917 ஆம் ஆண்டு தான் திறக்கப்பட்டது.

நாளாந்தம் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அனுபவிக்கும் முக்கியமான போக்குவரத்து சாதனம் தான் நாட்டின் இரயில் சேவை. இலங்கைத் தீவில் பரவலான இரயில் பாதையின் வலைப்பின்னல் கொழும்பில் இருந்து விரிகிறது எனலாம்.

உசாத்துணை

Papers relating to the affairs of the Ceylon Railway. Presented to both houses of Parliament by command of Her Majesty, 1871. London, Printed by W. Clowes & Sons, for H.M. Stationery Off., 1871.

George J. A. Skeen, A Guide to Colombo: With Maps : a Handbook of Information, Useful Alike to the Visitor and the Resident, A.M. and J. Ferguson, 1906 – Colombo

NIHAL PERERA, Society and Space Colonialism, Nationalism, and Postcolonial Identity in Sri Lanka, Westview Press, Boulder San Francisco, Oxford, 1997

https://www.historyofceylontea.com/pdf/article-extracts/45.ceylon-railway-figures.pdf

நன்றி - தினகரன் 03.07.2022

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates