குடியரசு பொன் விழா நினைவாக (1972 - 2022)
இலங்கையில் இருந்த முடியாட்சிகளை கைப்பற்றி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மாறி மாறி அவர்களின் முடியாட்சிக்குள் இலங்கைத் தீவை 450 ஆண்டுகளுக்கும் மேல் வைத்திருந்தார்கள். இலங்கை முடியாட்சிலிருந்து முற்றாக நீங்கி குடியாட்சிக்கு மாறிய நாள் தான் குடியரசு நாளான மே.22. சரியாக 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் 1505 – 1948 வரையான 443 ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டாலும், உண்மையில் 443 ஆண்டுகள் அல்ல. மொத்தமாக 467 ஆண்டுகள் என்றே கூற வேண்டும். ஏனென்றால் இலங்கை பிரித்தானிய முடியிடம் இருந்து முழுமையாக விடுதலை அடைந்தது 1972 குடியரசாக ஆனதன் பின்னர் தான். அதுவரை பிரித்தானிய முடியின் கீழ் தான் இலங்கை ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறினாலும் பிரித்தானியா டொமினியன் அந்தஸ்தைத் தான் வழங்கியது. பூரண சுதந்திரத்தை அல்ல. “சுதந்தர”த்தின் பின்னர் 24 ஆண்டுகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் தான் இலங்கை இருந்தது. 1795 – 1948 வரை பிரித்தானிய ஆண்டது என்பது பிழையான கணக்கு. 1795 – 1972 வரை பிரித்தானியாவின் முடியின் கீழ் இருந்தது எனும் போது மொத்தம் 178 ஆண்டுகள் என்று தான் கூற முடியும்.
இந்து சமுத்திரத்தில் பிரித்தானியாவின் பெரிய காலனித்து நாடான இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது அப்படியல்ல. டொமினியன் அந்தஸ்தைத் தான் இந்தியாவுக்கும் 1947 ஆம் ஆண்டு கொடுத்தார்கள். பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தான் இந்தியா டொமினியன் அந்தஸ்திலிருந்து முழுமையாக விடுதலை அடைந்தது. இந்தியா ஆண்டு தோறும் ஓகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாகவும், ஜனவரி 26ஐ குடியரசு தினமாகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள்.
ஆனால் இலங்கை அவ்வாறு குடியரசாவதற்கு அதை விட காலம் எடுத்தது. இந்தியா பூரண சுதந்திரம் வேண்டி கடுமையான சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நாடு. ஆனால் இலங்கையில் பூரண சுதந்திரம் என்பது வீரியமாக இருக்கவில்லை. அரசியல் சீர்திருத்தங்களைத் தான் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கோரினார்கள். சுதேசிகளுக்கு அதிக அதிகாரங்களுடனான பிரித்தானிய முடியின் ஆட்சியை ஏற்றிருந்தார்கள். எனவே பிரிட்டிஷாருக்கும் இலங்கையின் மீதான வல்லாதிக்கத்தை இன்னொரு முகமூடியுடன் தொடர வாய்ப்பு கிட்டியது. அது தான் டொமினியன். டொமினியன் என்பது முடியின் அதிகாரத்தின் கீழான ஆட்சியைத் தான்.
பிரித்தானிய முடியின் கீழான ஆளுநரின் பிடி இருந்தது. அரச தலைவராக பிரித்தானிய மகாராணி தான் இருந்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநரின் கையெழுத்துடன் தான் சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இலங்கையின் உச்ச நீதிமன்றம் என்பது பிரித்தானியாவின் கொமரைக் கழகம் (பிரிவிக் கவுன்சில்) தான் இருந்தது. பிரிட்டன் படைகள் வரலாம், அனுமதியின்றி வான் பரப்பை பயன்படுத்தலாம் என்பது உட்பட பல நடைமுறைகள் அமுலில் இருந்தன.
1948 இல் பூரண சுதந்திரம் அடையவில்லை
இவ்வாறு இலங்கையில் பிரித்தானியாவிடமிருந்து முழுமையாக விடுதலையடைந்த குடியரசு நாளை ஆண்டு தோறும் குடியரசு நாளாகவும், தேசிய வீரர்கள் தினமாகவும் விமரிசையாக 1973 - 1977 வரை கொண்டாடப்பட்டது. அது அரச பொது விடுமுறையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை இக்காலப்பகுதியில் பெப்ரவரி 4ஆம் திகதியை சுதந்திர தின விழாவாக கொண்டாடுவதை நிறுத்தியிருந்தது.
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததும் மே 22 குடியரசு கொண்டாட்டத்தை நிறுத்தினார். விடுமுறை நாளையும் இரத்து செய்தார். அதற்குப் பதிலாக மீண்டும் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதியையே சுதந்திர நாளாக விமரிசையாக கொண்டாடும் வழிமுறையைத் தொடர்ந்தார். இதனால் பலருக்கு குடியரசு தினமே மறந்து போனது. இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம் எப்பேர்பட்ட கொண்டாட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
முடியின் கீழ் 1972 வரை
72 வரையான அரசு பிரித்தானிய இராணியின் கீழான அரசாக இருந்ததால் 1962 ஜனவரி 24 அன்று இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் சில அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த அரச கவிழ்ப்புச் சதியைக் கூட இராணியின் ஆட்சிக்கு எதிரான சதியாகவே அது உலகெங்கும் அழைக்கப்பட்டது. அந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்தது. அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் அது தொடர்பான மேன்முறையீடு பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் நடந்தது. அங்கே இராணியின் நீதிமன்றத்தில் (பிரிவிக் கவுன்சிலில்) அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்வது முக்கியம்.
1971 கிளர்ச்சியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய போது கூட இராணியின் சட்டத்தை மீறியமைக்காக தண்டனை அளிக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டது.
அதுவரையான அரசாங்கமும், அமைச்சரவையும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் போது மகாராணிக்கு விசுவாசமாக இருப்பதாகவே உறுதிமொழி எடுத்தனர். 1972 குடியரசின் பின்னர் தான் இலங்கை ஜனநாயக சோசலிசக் “குடியரசுக்கு” விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்கும் சந்தர்ப்பம் வரலாற்றில் முதல் தடவை வாய்த்தது.
இந்த தோல்வியுற்ற சதியில் சந்தேகநபராக க்ருதப்பட்டவர்களில் ஒருவர் அன்றைய பிரித்தானிய ஆளுநர் ஒலிவர் குணதிலக்க. அவருக்குப் பின் அந்த இடத்துக்கு ஆளுநராக தெரிவான வில்லியம் கொபல்லாவ நியமிக்கப்படுவதை 26.02.1962 அன்று இங்கிலாந்தில் பகிங்க்ஹோம் மாளிகையில் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தான் இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும் அதே அறிவித்தல் விடுக்கப்பட்டது. இப்படித்தான் டொமினியன் ஆட்சி இலங்கையில் இயங்கியது.
சகல இராணுவ பொலிஸ் அதிகாரிகளின் சீருடை களிலும், தொப்பியிலும் பிரித்தானிய அரச சின்னம் கட்டாயமாக அணியப்படிருந்தது. கடும் மழையில் கூட எந்தவொரு இராணுவத்தினரும், பொலிசாரும் குடையொன்றை வைத்திருக்கும் அனுமதியைக் கூட கொண்டிருக்கவில்லை. அது பிரித்தானிய அரச முடியை அகௌரவப்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டது.
1970 ஆம் ஆண்டு தேர்தல்
1970 ஆம் ஆண்டு 7வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமமாசக் கட்சி போன்ற இடது சாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தேர்தலில் களம் இறங்கியது.
ஐக்கிய முன்னணிக் கூட்டணியை உருவாக்கிக் கொள்வதற்காக 06.06.1968 அன்று கண்டி போகம்பரை மைதானத்தில் வைத்து அக்கட்சிகள் மூன்றும் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுக் கொண்டனர். 27 விடயங்களைக் கொண்ட அந்த கொள்கைத் திட்டத்தில் ஒன்று தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பிரித்தானியாவிடமிருந்து பூரணமாக விடுதலை பெறுவது என்கிற ஒப்பந்தம். 1935 இல் என்.எம்.பெரேரா தலைமையில் நவ சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கபட்டபோதே இலங்கையை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நீக்குவது என்கிற கொள்கையுடன் தான் ஆரம்பித்தார்கள் என்பதையும் இங்கே நினைவுக்கு கொண்டு வரலாம்.
1970 தேர்தலில் வெற்றி ஈட்டினால் இங்கிலாந்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்கிற வாக்குறுதியை அந்தக் கூட்டணி மக்களுக்கு அளித்திருந்தது. இறுதியில் ஐக்கிய முன்னணி மூன்றில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால்
இந்தத் தேர்தலில் ஐக்கிய முன்னணி நாடளாவிய எடுத்த வாக்குகள் 49 வீதம் மட்டும் தான். அதிலும் சுதந்திரக் கட்சி 36.86 வீத வாக்குகளை எடுத்து 91% ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அதை விட அதிகமாக அதாவது 37.91% வீத வாக்குகளை எடுத்து வெறும் 17 ஆசனங்க்லாய் மட்டும் தான் பெற்றிருந்தது. தொகுதிவாரித் தேர்தல் என்பதால் இது நிலைமையாக பாராளுமன்றத்தில் அதிக ஆசனத்தைக் கொண்டிருந்தாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாத ஒரு அரசாங்கத்துக்கு எவ்வாறு ஒரு அரசியலமைப்பை மாற்றும் அதிகாரத்தைக் கையிலெடுக்கலாம் என்கிற வலுவான கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது உண்மை.
அத் தேர்தலில் ஐக்கிய முன்னணி 116 ஆசனங்களைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களையே பெற்றது. தமிழரசுக் கட்சி 13ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றது. சுதந்திரத்தின் பின்னர் முதலாவது தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த முதல் தடவை இதுவாக இருந்தது. சிறிமா பண்டாரநாயக்க பிரதமராக தெரிவானார்.
குடியரசின் அரசியலமைப்புருவாக்கம்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1970 ஆம் ஆண்டு யூலை 19 ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியின் நவ ரங்கஹால மண்டபத்துக்கு வரும்படிசகல பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். சகல உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்கினார். அதற்கு நீதி அமைச்சரான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவை தலைவராக நியமித்தார்.
அடுத்த பத்தாவது நாளான யூலை 29 ஆம் திகதியும் அச்சபை கூடியது. இடையில் யூலை 22ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையின் விவாதத்தில் அவர் உரையாற்றும் போது
“ பிரித்தானிய முடியுடன் எவ்வித தொடர்பும் இன்றி எமது நாட்டில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஆட்சி முறையை நிறுவுவதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள. இந்த ஆண்டின் இறுதிக்குள், சுதந்திரமான, இறையாண்மையுள்ள ஒரு தேசமாக நாம் அங்கீகரிக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்.” என்றார்.
இலங்கை பொதுநலவாய உறுப்பு நாடாக செயற்பட்ட போதிலும் இறைமையும் சுதந்திரமும் கொண்ட நாடாக இருந்தது. குடியரசாக ஆனதிலிருந்து இலங்கை அரசியல் ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு தலைமை தாங்கிய கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, அரசியலமைப்புச் சபையை உருவாக்குவது தொடர்பாக கருத்து கூறியபோது
“இதுவரை காலம் மக்களாக நாம் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்நிய சக்தியான பிரித்தானியாவும் இராணியும் தான் அந்த வீட்டை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பதிலாக இன்று நாம் முழுமையாக புதிய அத்திவாரமிட்டு நமக்குத் தேவையான வீட்டைக் கட்டி அதில் குடிபுகுவதற்கான கட்டமைப்பைத் தான் இந்த அரசியலமைப்பு உருவாக்கச் சபையின் மூலம் மேற்கொள்ளப் போகிறோம்” என்றார்.
இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்தம் 35 தடவைகள் கூடி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் என்பவற்றின் அபிப்பிராயங்களையும் அறிந்தது..
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான இந்தக் கமிட்டியில் சட்டவாக்க அலுவல்கள் அமைச்சர் டொக்டர் கொல்வின் ஆர்.டி சில்வா, சபைத் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, கல்வி அமைச்சர் பதியுதீன் மொஹமட், உள்ளூராட்சி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, வர்த்தக அமைச்சர் டி.பி. இளங்கரத்ன, வீடமைப்பு அமைச்சர் பீட்டர் கெனமன், காணி அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவ, நிதி அமைச்சர் கலாநிதி என்.எம். பெரேரா, மீன்பிடி அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்ஷ, சமூக சேவைகள் அமைச்சர் டி.பி. சுபசிங்க, கலாசார அமைச்சர் டி.பி தென்னகோன், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் டி. அக்ஸ் மார்டின்ஸ், தெடிகம பாராளுமன்ற உறுப்பினர் டட்லி சேனாநாயக்க, காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.வி.ஏ. செல்வநாயகம் ஆகியோர் அங்கம் வகித்தார்கள்.
பின்னர் இதில் இருந்து சிலர் வெளியேறினார்கள். உதாரணத்துக்கு ஜே.ஆர். “இலங்கை சுதந்திர இறையாண்மையுள்ள சுயாதீன ஜனநாயக சோஷலிச குடியரசு” என அழைக்கப்பட வேண்டும் என்று யோசனை சொன்னார். ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. “ஸ்ரீ லங்கா குடியரசு” என்றாலே போதும் என்றார்கள். 1971 யூலை 10ஆம் திகதி அரசியலமைப்பு முழுவதும் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டும் விட்டது. அதனை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தி அறிவிக்கும் நாளாகத் தான் 1972 மே 22ஐத் தெரிவு செய்திருந்தார்கள்.
புதிய அரசியலமைப்பை உருவாக்க உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. 1972 மே 4 ஆம் திகதி இந்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மே 22, 1972 இல் "குடியரசு அரசியலமைப்பு" தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இவர்களில் யாழ்ப்பாணப் பிரதிநிதி சி.எக்ஸ்.மார்ட்டின், நல்லூர் பிரதிநிதி சி.அருளம்பலம், வட்டுக்கோட்டைப் பிரதிநிதி ஆ.தியாகராஜா, மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி ராஜன் செல்வநாயகம், நியமனப் பிரதிநிதி எம்.சி.சுப்பிரமணியம், தபால் தந்தி அமைச்சர் செல்லையா, குமாரசூரியர், ஆகிய தமிழ் பிரதிநிதிகளும், ஜனாப் ஏ.அஸீஸும் ஆதரித்து வாக்களித்தார்கள்.
இந்த அரசியலமைப்பை ஏன் ஏற்கமுடியாது என்று முன்னால் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான டட்லி சேனநாயக்க பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அரசியலமைப்பை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்த போதும் அவர்கள் அனைவரும் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.
குடியரசு அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பின் திருத்தம் அல்ல, அது ஒரு புதிய அரசியலமைப்பாகும். சோல்பரி சட்டத்தின் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த 29வது பிரிவை நீக்கியது தொடர்பாக தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்த போது, அதற்குப் பதிலளித்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா; அப் பிரிவுக்குப் பதிலாக புதிய அரசியலமைப்பின் 6வது அத்தியாயம் அடிப்படை உரிமைகள் கொண்டு வரப்படுகிறது என்றும் அவற்றின் மூலம் அவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.
“சுப முகூர்த்தத்தில்” குடியரசு
குடியரசுக் கட்சியின் அரசியலமைப்பை கொழும்பு ரோயல் கல்லூரி “நவ ரங்கால” மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்கவும், அரசியலமைப்பு வரைவு அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவும் வருகை தந்தனர்.
அன்றைய தினம் மதியம் சரியாக 12.43 மணியளவில் புதிய அரசியலமைப்பை முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவித்த அரசியலமைப்பு நிர்ணயச் சபையின் தலைவர் ஸ்டான்லி திலகரத்ன 12.43க்கு கையெழுத்திட்டு அறிவித்தார். மங்கள மேளதாள பேரிகை முழக்கங்களுடன் இது நிகழ்ந்தது. அதன் பின்னர் புதிய அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது குடியரசின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க பகல் 12.56க்கு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சோதிடரின் பஞ்சாங்கத்தின் பிரகாரம் அந்த நேரத்தை அவர் தெரிவு செய்திருந்தார் என்று அன்று பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. சுபநேரம், சுபமுகூர்த்தம் பார்த்து பக்தி சிரத்தையுடன் அது நடைபெற்றது உண்மை. அரசியலமைப்பின் கீழ் தனது முதல் கடமையை நிறைவேற்றியதாக அறிவித்து, வில்லியம் கோபல்லவவை குடியரசின் முதல் ஜனாதிபதியாக நியமித்தார் பிரதமர்.
புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொண்டதன் மூலம், பிரித்தானியாவின் பல காலனி நாடுகளைப் போலவே இலங்கையும் குடியரசாக மாறியது. குடிகளின் ஆட்சியாக ஆனது.
1956 இல் பண்டாரநாயக்கவின் முயற்சி
காலனி ஆதிக்கத்தில் இருந்து நாட்டை விடுவித்து நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவது இதன் நோக்கமாக இருந்தது. 1956ல் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது பிரதமர் எஸ் டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையில் கட்டுநாயக்கா விமானத்தளமும் கொழும்பில் உள்ள பிரித்தானிய கடற்படைத் தளங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அதுவரை இலங்கையின் விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் பிரிட்டிஷ் முடியின் கட்டுப்பாட்டில் தான் (Royal Navy) இருந்தன. அப்போதிருந்தே காலனி ஆதிக்கத்தில் இருந்து முற்றாக விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை மீண்டும் தலைதூக்கியிருந்தது. ஆனால் அது பத்தாண்டுகளுக்கு பின்னர் தான் பண்டாரநாயக்கவின் துணைவியின் தலைமையிலான ஆட்சியில் சாத்தியப்பட்டது. பிரதமர் பண்டாரநாயக்க மூன்றில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்காத போதும் சோல்பரி அரசியலமைப்பை திருத்தி குடியாட்சி அரசிலமைப்பை உருவாக்குவதற்காக செனட் சபை, பிரதிநிதிகள் சபை என்பவற்றின் கூட்டுக் குழுவொன்றை 07.11.1958 அன்று நியமித்தார். ஆனால் ஓராண்டு ஆவதற்குள் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அம்முயற்சியானது பண்டாரநாயக்காவின் படுகொலையின் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் சுருக்கப்பட்ட ஆட்சியால் வெற்றியளிக்கவில்லை. குடியரசு தின வைபவத்தை கொண்டாடுமுகமாக 24 ஆம் திகதி புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் விசேட ஆராதனைகளை செய்து விட்டு வெளியே வந்து உரையாற்றிய பிரதமர் சிறிமா,
“எனது கணவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் குடியரசு எப்போதோ உதயமாகியிருக்கும். 1956 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் இலங்கைக் குடியரசாக்கும் அபிப்பிராயத்தை அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். அதன் பின்னர் அவர் கஷ்டப்பட்டு எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை. அதைத் தான் 1970 ஆம் ஆண்டு எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்திருந்தோம். இன்று அவரின் கனவு நனவாகியுள்ளது. இக்குடியரசின் மூலகர்த்தாவான அவருக்கு கிடைக்கவேண்டியது இந்தக் கௌரவம்...” என்றார்.
1972 வரை, மேல்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலால் தான் தீர்மானிக்கப்பட்டன. குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நிலையும் மாறியது.
அதுவரை சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கை அதிலிருந்து ஸ்ரீ லங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. இதன்பிரகாரம் இலங்கையானது தன்னாதிக்கமும், இறைமையும் கொண்ட சுயாதீன குடியரசாக உதயமானது.
பாரிய விவசாயப் போர்
இலங்கை சுதந்திரக் குடியரசாக மாறியதும், போகல சுரங்கத் தொழிற்சாலை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு அரச மாணிக்கக்கல் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டு அதற்காக முதற்தடவை கொண்டுவரப்பட்ட கப்பலுக்கு “லங்கா ராணி” என்று பெயரிடப்பட்டது. சரசவி மண்டபம் அரசுடமையாக்கப்பட்டது. வித்யோதயா, வித்யாலங்கார மற்றும் கட்டுபெத்த ஆகிய பல்கலைக்கழக வளாகங்களை ஒன்றிணைத்து இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
இலங்கைக் குடியரசின் முதலாவது கொள்கை அறிக்கை 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் தேசிய அரசுப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு “உற்பத்தி ஆண்டாக அறிவிக்கப்பட்டது. உலகப் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஒன்று உருவாகத் தொடங்கியிருந்ததால்; நாடும் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து அந்த நிலைமையை எதிர்கொள்ள தயார் செய்ய வேண்டியிருந்தது. இதனால் ஒரு பாரிய பெரிய விவசாயப் போர் ஒன்று தொடங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்காகவும், தன்னிரைவுக்காகவும் அன்று எடுக்கப்பட்ட முடிவுகளும், முயற்சிகளும் அன்று விமர்சிக்கப்பட்டது. 77ஆம் ஆண்டு தேர்தலிலும் தோல்வியடைய அதுவே ஒரு பெரும் காரணமானது. ஆனால் அந்த திட்டங்கள் தொடர்ந்திருந்தால் நிச்சயம் இன்று நாடு எதிகொண்டிருக்கும் நிலை நேர்ந்திருக்காது.
சிலோன் ஸ்ரீ லங்கா ஆனது
குடியரசு தினம் பிரகடனப்படுத்தப்பட்ட அன்று சிலோன் என்கிற காலனித்துவம் சூட்டிய பெயரை நீக்கியதன் நினைவாக 15 சத பெறுமதியுள்ள ஒரு முத்திரையும் வெளியிடப்பட்டது. அது வரை சிலோன் என்று இருந்த முத்திரைகள் அன்றிலிருந்து ஸ்ரீ லங்கா என்று மாறியதன் நினைவாக அதில் ஸ்ரீ லங்கா என்று குறிக்கப்பட்டது.
சிறிமாவின் அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு நிறைவடைந்திருக்கவேண்டும். ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதனை சாட்டாக வைத்து தமது ஐந்தாண்டுப் பதவியை மேலதிகமாக இரண்டு ஆண்டுகளைச் சேர்த்து 7 ஆண்டுகள் ஆட்சிபுரியும் வகையில் சட்ட ஏற்பாடுகளை கொண்டு வந்தது சிறிமா அரசாங்கம். அதன்படி 1977 வரை சிறிமா அரசாங்கம் ஆட்சி செய்தது. பதிலுக்கு 1977 இல் ஆட்சியேறிய ஜே.ஆறும் 1978இல் புதிய குடியரசு அரசியலமைப்பைக் கொண்டு வந்து புதிய பொதுத்தேர்தலுக்குப் பதிலாக பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான விருப்பைக் கோரி டிசம்பர் 22, 1982ஆம் திகதி ஒரு தேர்தலை நடத்தி வெற்றி பெற்று; 1989 வரை பொதுத் தேர்தலை நடத்தாமல் ஆட்சியை நீடித்துகொண்டத்தை அறிவீர்கள்.
1972 குடியரசு யாப்பும் சிறுபான்மை இனங்களும்
மே 22 ஆம் திகதியை குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்ற போதும் தமிழர்கள் அதனை பொருட்டாக மதிப்பதில்லை என்பதுடன் அந்த நாள் ஒரு கரி நாளாகவே கொள்கின்றனர்.
குடியரசு பிரகடனப் படுத்தப்பட்ட நாள் தமிழ்ப் பிரதேசங்களில் கடைகள் மூடப்பட்டு, கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் மேற்கொண்ட பகிஸ்கரிப்பால் பாடசாலைகள் பல இயங்கவில்லை. 75 வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.குடியரசு தினத்தன்று 40 பஸ்களும், அடுத்த் நாள் நான்கு பஸ்களும் சேதமாக்கப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் 15 பேர் கைதாகியுள்ளதாகவும், 24 ஆம் திகதி வெளியான ஈழநாடு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த குடியரசு யாப்பின் மூலம் தான் இலங்கை பௌத்த மதம் அரச மதமானது.
பறிக்கப்பட்ட உரிமைகள்.
இந்த அரசியமைப்புக்கு தமிழர் தரப்பில் இருந்து நெருக்கடி தரக்கூடிய ஒரு வழக்கை சி.சுந்தரலிங்கம் மட்டுமே தொடுத்திருந்தார். அதற்கான தீர்ப்பை வழங்கிய ஜே.அலஸ், ஜே.சில்வா ஆகியோர் 1972க்கு முன்னர் சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது அதிகாரப் பரவலாக்கம் அல்லது அலகுகள் கொடுக்கக் கூடிய தகுதி அல்லது வலிமை இருந்தது என்றும் கூறியிருந்தனர்.
இந்த அரசியலமைப்பைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தமது எதிர்காலம் பற்றிய சோகத்துடன் ஆத்திரமாக கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள். இந்த அரசில் இனிமேல் வாழ முடியாது தனி நாடே ஒரு தீர்வு என இளைஞர்களும் தங்களுக்குல் சபதமெடுத்துக் கொண்டார்கள்.
சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட வேளை இனி இலங்கையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை எவரும் பெறப்போவதில்லை என்று சோல்பரி கருதியிருந்தார். அதையெல்லாம் பொய்க்கச் செய்தது இலங்கையின் இனவாத அரசியல் கள நிலைமை.
பேரினவாதிகளுக்கு உரத்தையும், உற்சாகத்தையும் ஊட்டிய தேர்தல் வெற்றி பேரினவாதத்தின் கூட்டுச் சிந்தனையை வலிமைப்படுத்தியது. அவர்களின் அபிலாசைகளுக்கு சட்ட வடிவத்தையும், நடைமுறை வடிவத்தையும் முழுமையாக்க காலம் கனிந்தது.
சோல்பரி அரசியல் யாப்பில் வழங்கியிருந்த குறைந்தபட்ச ஏற்பாடுகளையும் நீக்கி பேரினவாத அரசைப் பலப்படுத்துவது அவர்களின் இலக்காக இருந்தது. சோல்பரி அரசியல் யாப்பில் பெயரளிவிலேனும் இருந்த சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பேணும் உத்தரவாதங்களை நீக்கினார்கள்.
- 29 (2) பிரிவு
- செனற்சபை
- நியமன உறுப்பினர் முறை
- கோமறைக் கழகம்
- அரசாங்க நீதிச் சேவை ஆணைக்குழு
ஆகியவை பெயரளவுக்காவது சிறுபான்மையினரை பாதுகாக்கும் ஏற்பாடுகளாக இருந்தன. உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவற்றின் அடிப்படியிலேயே சட்ட ரீதியில் எதிர்கொள்ள வாய்ப்பு கிட்டியிருந்தன. இவை அனைத்தும் புதிய யாப்பில் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.
அரச மதம் பௌத்தம்
இந்த அரசியலமைப்பின் மூலம் முதன் முதலாக பௌத்த மதம் அரச மதமாக முதல் தடவை ஆக்கப்பட்டது. 6ஆம் பிரிவு பௌத்த மதத்தைப் பற்றி இப்படி கூறுகிறது.
“இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மைதானம் வழங்குதல் வேண்டும். ஏனைய மதங்களின் உருமைகளுக்கு உத்தரவாதமளிக்கின்ற அதே வேளை பௌத்த மதத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாதல் வேண்டும்.”
பல்லின, பல்மத நாட்டில் தனியொரு மதத்தை அரச மதமாக பிரகடனம் செய்தது மட்டுமன்றி ஏனைய மதங்களுக்கு அதன் மத உரிமைகளோடு மாத்திரம் மட்டுப்படுத்துகின்ற சதியை கச்சிதமாக முடித்தது இந்த யாப்பு.
சிங்கள மொழி
சிங்கள மொழிக்கு அதுவரை சட்ட ரீதியில் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவரை சிங்கள மொழி சட்டம் சாதாரண பெரும்பான்மையுடன் மாற்றும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் 9, 10, 11 ஆகிய சரத்துக்களின் மூலம் சிங்கள மொழிக்கு அரசியமைப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டதன் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி அந்த சிங்கள மொழி ஏற்பாட்டை மாற்றும் வாய்ப்பை இழந்தனர் தமிழர்கள். இதன் விளைவாக வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழியில் தமது கருமங்களை ஆற்றும் உரிமைகளை இழந்தனர். அரச சேவைகள் நடைமுறையில் சிங்களமயப்பட இந்த யாப்பு முழு வாய்ப்புகளையும் கொடுத்தது.
சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டவற்றை மட்டுமே சட்டமாக கொள்ளுதல் வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் இருந்தால் கூட சிங்களத்தில் உள்ள சட்டங்களே மேலானதாக கருதப்படும் என்றும் ஏற்பாடானது. தமிழ் மொழிக்கு வெறும் மொழிபெயர்ப்பு அந்தஸ்து மாத்திரமே வழங்கப்பட்டதால் சட்டபினக்குகளின் போது மொழிபெயர்க்கப்பட்ட சட்டங்கள் வலு குறைந்ததாகவே கருதப்பட்டது.
நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள், கட்டளைகள், சட்ட நிர்வாகச் செயல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருத்தல் வேண்டும் என்றும் ஏற்பாடானது. வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழில் நடாத்த முடியாத நிலை உருவானது. வடக்கு கிழக்கில் சில பிரதேசங்களில் மட்டும் விதிவிலக்கு இருந்தது.
சிங்கள – பௌத்தம்
சிங்கள மொழி ஏற்பாட்டின் மூலம் பன்மொழித் தன்மையை நிராகரித்தும், பௌத்த மதம் அரச மதம் என்பதன் மூலம் பன்மதத் தன்மையையு நிராகரித்ததன் மூலம் இந்த யாப்பு இலங்கை குடியரசை ஒரு “சிங்கள – பௌத்த” நாடாக பிரகடனப் படுத்தியது என்றே கூற வேண்டும்.
அரசாங்க சேவை, நீதிச்சேவை என்பனவற்றில் நியமனம், இடமாற்றம்,பதவி உயர்வு, பதவி நீக்கம் என்பவற்றை மேற்கொள்ளும் போது இன மத மொழி பாரபட்சம் காட்டுவதை தடுக்கு வகையில் அரசாங்க சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, என்பன சோல்பரி யாப்பில் உருவாக்கபட்டிருந்தன. 1972 யாப்பில் அவற்றை மேற்கொள்ளும் பணிகளை அமைச்சரவைக்கு வழங்கியது. அந்த ஆணைக்குழுக்கள் வெறும் ஆலோசனை சபைகளாக மாற்றப்பட்டன. அரசியல் வாதிகளிடம் ஒப்படக்கப்பட்ட இந்த பணிகளால் என்ன நியாயம் கிடைத்திருக்கும்.
பல வருடங்களின் பின்னர் யுத்தமும் தொடங்கிவிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் கொல்வின் ஆர்.டீ.சில்வா “29(2)க்கு மாற்று ஏற்பாடு 1972 யாப்பில் இடம்பெறாத போதும் அந்த யாப்பில் கொண்டுவரப்பட்ட அடிப்படை உரிமை ஏற்பாடு மேலும் பாதுகாப்பை வழங்கக்கூடியது” என்றார். (1986 நவம்பரில் கார்ல் மாக்ஸ் நினைவு கூட்டமொன்றில் விரிவுரையாற்றிய போது) இந்த கருத்து எத்தனை அபத்தமான கருத்து என்பது அந்த அரசியலமைப்பு நடைமுறையிலிருந்த ஐந்தே ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த தமிழர்களுக்கு எதிரான அநீதிகளே சாட்சி.
இலங்கைக் குடியரசுக்கு என ஒரு புதிய அரச இலட்சினையை உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு தலைவராக நிஸ்ஸங்க விஜயரத்ன நியமிக்கப்பட்டார். தேசியக் கொடியையும் உருவாக்குவதற்கான கமிட்டியின் தலைவராகவும் அவர் தான் நியமிக்கப்பட்டார். இலங்கையின் தேசியக் கொடியின் நான் மூலைகளிலும் அரச மர இலையைப் புகுத்தி தேசியக் கோடிக்கு பௌத்த முகத்தைக் கொடுத்தவரும் இவர் தான்.
குடியரசின் அரச இலட்சினை
இவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் ‘மாபலகம விபுலசார தேரர்’ அரச இலட்சினையை வடிவமைத்தார். அது ஒரு சிங்கள பௌத்த இலட்சினையாகவே அமைக்கப்பட்டது. தேசியக் கொடி சிங்கள பௌத்த கொடியென விமர்சிப்போர் பலரின் கண்களுக்கு படாத ஒன்று அந்த அரச இலட்சினை. இன்று வரை அது தான் அரச இலட்சினை. கலாசார அமைச்சின் செயலாளராகவும் அப்போது அவர் இருந்தார்.
இலட்சினையை உருவாக்கும் தனிச்சிங்களக் குழுவில் அப்போதைய கலாசார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர, செனரத் பரணவிதான, எம். ஆர். பிரேமரத்ன, ரோலண்ட் சில்வா, மெக்கி ரத்வத்த உள்ளிட்டோர் அங்கம் அங்கம் வகித்தனர்.
அரச இலட்சினையில் உள்ளவற்றின் அர்த்தம்: சிங்கம் (தேசியக் குறியீடு), சிங்கத்தின் வாள் (தேசிய இறைமை), சிகப்பு பின்னணி (சிங்கள இனம்), தாமரை மொட்டு (புனிதம்), பூச் சாடி (தன்னிறைவு), நெல்மணி (செழிப்பு), தர்ம சக்கரம் (பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த தர்மம்), நடுவில் இருக்கும் பெரிய சக்கரம் (இலங்கை), சூரியன், சந்திரன் (இருப்பின் உறுதித்தன்மை), சந்திரனை இடது புறமாக வைத்திருத்தல் (மென்மை), இலட்சினையை சுற்றி இருக்கும் எல்லைக் கோடு (இவை அனைத்தும் ஒற்றையாட்சிக்குள் இருப்பதை உறுதி செய்வது).
குடியரசு கீதத்துக்கு ஆனதென்ன?
இலங்கையின் தேசிய கீதம் சுதந்திர தினத்திற்காக உருவாக்கப்பட்டது போல குடியரசு கீதம் என்கிற கீதத்தையும் சிறிமா அரசு உருவாக்க எத்தனித்தது. அதற்காகவே ஒரு குழுவையும் நியமித்தது. ஆனால் அதன் பணிகளில் திருப்தியுறாத அரசு; நாட்டின் பிரபல கவிஞர்களுக்கு அதற்காக அழைப்பு விடுத்தது.இறுதியில் பிரபல சிங்களப் பண்டிதர் மஹாகமசேகர இயற்றிய “ரத்ன தீப ஜன்ம பூமி” என்கிற பாடல் தெரிவானது. ஆனால் அப்பாடலில் குடியரசு பற்றிய எந்த விபரத்தையும் காணோம் என்று கலாசார அமைச்சின் உயர் மட்டத்தினர் கருத்து தெரிவித்தனர். “அப்படியானால் குடியரசு அரசியலமைப்புக்கு ஒரு ட்யூன் போட்டுக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்து விட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாராம் மஹாகமசேகர. ஆனாலும் பேராசிரியர் அனுராத செனவிரத்ன குடியாயரசுக்காக இயற்றி, பண்டித் டபிள்யு.அமரதேவ இசையமைத்த “ஜயது, ஜயது ஸ்ரீ லங்கா...” என்கிற பாடல் ஒன்று உள்ளது. அந்த மூலப் பாடலைப் பாடியவரும் அமரதேவ தான்.
இதில் தமிழர்களும் சம்பந்தப்படவில்லை. தமிழ் பேசும் மக்கள் கண்டுகொள்ளபடவுமில்லை. தமிழில் மொழிபெயர்ப்பு கூட கிடைத்ததில்லை. எப்படியோ அப்படியொரு கீதத்தை இறுதிவரை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றிவிடவும் முடியவில்லை.
குடியரசு தினம் தமிழர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் சுதந்திர தினமும் கூட அவர்களுக்கு பொருட்டாக இருந்திருக்கவில்லை.
ஆனால் இலங்கை முடியாட்சியில் இருந்து முற்றாக விடுபட்ட நாள் எனும் அர்த்தத்தில் இலங்கை மக்களுக்கு குடியரசு தினம் ஒரு முக்கியமான தினம். அது அரசியல் சித்து விளையாட்டுகளின் காரணமாக இலங்கை மக்களால் மறக்கடிக்கப்பட்டது. அந்த மறக்கடிப்பு அதன் 50வது பொன் விழாவைக் கூட கணக்கிற்கொள்ள முடியாத அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
2022 அதன் பொன்விழா கொண்டாடப்படாமைக்கு இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடியைக் காரணமாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் அந்த நாளுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச முக்கியத்துவத்தை ஊடகங்கள் கூட கொடுக்கவில்லை.
வழித்தடம்
- 15.08.1947 டொமினியன் அந்தஸ்தின் கீழ் முதல் தேர்தல் நடத்தப்பட்டது
- 26.09.1947 அமைச்சரவை நியமிக்கப்பட்டது
- 25.11.1947 பாராளுமன்றம் திறக்கப்பட்டது
- 13.02.1950 தேசிய கொடி உருவானது
- 07.11.1958 அரசியலமைப்பு சீர்திருத்த குழுவொன்று பண்டாரநாயக்கவால் உருவாக்கம்.
- 24.01.1962 இராணுவ அரச கவிழ்ப்புச் சதி
- 26.02.1962 புதிய ஆளுனர் வில்லியம் கொபல்லாவ நியமனம்
- 06.06.1968 கண்டி போகம்பரையில் ஐக்கிய முன்னணி தோற்றமும், குடியரசாக ஆக்கும் பிரகடனமும்
- 23.04.1970 ஏழாவது பாராளுமன்றத்துக்கான வேட்மனு தாக்கல்
- 27.05.1970 பொதுத் தேர்தல்
- 19.07.1970 அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கம்
- 10.07.1971 அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது.
- 04.05.1972 அரசியலமைப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
- 22.05.1972 குடியரசு தின பிரகடனம்
நன்றி - தாய்வீடு
குடியரசு பொன் விழா நினைவாக (1972 - 2022) - என்.சரவணன் by SarawananNadarasa on Scribd
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...