Headlines News :
முகப்பு » , , , , » ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் உயர் நீதிமன்ற வளாகம் (கொழும்பின் கதை – 32) - என்.சரவணன்

ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் உயர் நீதிமன்ற வளாகம் (கொழும்பின் கதை – 32) - என்.சரவணன்

ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் இன்று இலங்கையின் நீதித்துறை வலையமைப்பின் மையமாக விளங்குகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் உருவான இந்த ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் நகரம் அன்றைய இலங்கைத் தீவின் கரையோரப் ஆட்சிப் பகுதிகளின் பகுதிகளின் நீதி மையமாக இருந்தது. உண்மையில் அதன் பெயரே அதன் டச்சுத் தோற்றத்திற்கு சான்றாக உள்ளது, ஏனென்றால் ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் என்பது ஒல்லாந்தரின் மொழியில் "ஹல்ஃப்ட்ஸ்டொர்ப் கிராமம்" ('Hulfts Village') என்று பொருள்படும். கொழும்பை முற்றுகையிடும் போது நடவடிக்கையில் கொல்லப்பட்ட டச்சு ஜெனரல் ஜெரார்ட் ஹல்ஃப்ட் என்பவரிடமிருந்து அதன் பெயரைப் பெறுகிறது.

போர்த்துக்கேயரின் வசம் இருந்த கொழும்பைக் கைப்பற்றும் பொறுப்பை டச்சு கிழக்கிந்தியக் கம்பனி  ஹல்ஃப்ட்ஸ் தலைமையிலான படையணியிடம் தான் ஒப்படைத்திருந்தது. பத்தாவியாவிலிருந்து 14.08.1655 ஆம் ஆண்டு 12 கப்பல்களில் 1200 படையினருடன் மொத்தம் 9800 ஐரோப்பிய படையினருடன் அவர் கொழும்பை முற்றுகை இட்டார். அவருக்கு துணையாக போர்த்துகேயரை நாட்டை விட்டுத் துரத்துவதற்காக கண்டி மன்னர் இரண்டாம் இராஜசிங்கன் 16,000 படையினரையும் அனுப்பினார். முதலில் நீர்கொழும்பை கைப்பற்றி அதன் பின் தொலைவில் உள்ள களுத்துறையையும் கைப்பற்றியபின்னர் இரண்டு பக்கங்களாலும் வந்து முற்றுகையிட்டு நவம்பர் 12ஆம் திகதி கொழும்பின் மீதான தாக்குதல் தொடங்கியதுஎப்ர. மே மாதம் கொழும்பு முழுவதும் கைப்பற்றுவிட்டது. அந்த முற்றுகையின் போது கொழும்பு கோட்டையின் அரண்களை படை நகர்வுக்காக கவனிப்பதற்கான சிறந்த இடமாக இருந்தது தான் இந்த புதுக்கடை குன்று.

1656இல் ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் கைப்பற்றியபோது கொழும்பின் தோற்றம்

டச்சு கவர்னர் ஹல்ஃப் (General Gerard Pieterszoon Hulft) இங்கு குடியேறிய முதல் டச்சு கவர்னர், எனவே ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் (Hulftsdorp) என்று அழைக்கப்படுகிறது. "டார்ப்" (Dorp) என்றால் கிராமம். இரண்டாம் ராஜசிங்க மன்னரின் உதவியுடன் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கொழும்புத் துறைமுகத்தை வெற்றிகரமாகத் தாக்கிக் கைப்பற்றிய ஹல்ஃப்ட்ஸ் (Hulft) இன் மரணத்திற்குப் பிறகு “ஹல்ஃப்ட்ஸ்” என்கிற பெயர் இப்பகுதிக்கு சூட்டப்பட்டது.

இந்தக் குன்றின் மீது ஜெனரல் ஹல்ஃப்ட்ஸ் தனது கட்டளைப் படையணியை நிலைநிறுத்தி வைத்திருந்தார். இங்கிருந்து பார்த்தால் புறக்கோட்டை வழியாக கோட்டை வரை பார்வையிடக்கூடியதாக இருந்ததால் இந்த குன்றை அவர் அன்று தெரிவு செய்திருந்தார் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. முற்றுகையைத் தொடங்குவதற்கான சிறந்த உயரமான இடமென தேர்வு செய்திருந்தார். 1656 மே மாதம் எஞ்சியிருந்த சில போர்த்துகீசியர்கள் சரணடைந்ததால் டச்சுப் படை பலமடைந்திருந்தது.

ஹல்ஃப்ட்ஸ்டோர்ப்

டச்சு எழுத்தாளர் பிலிப்பஸ் பால்டேயஸ் தனது 1672இல் தனது நூலில் அந்த துரதிர்ஷ்டமான நாளைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். "ஹல்ஃப்ட்ஸ் தனது மார்புச் சட்டையை திறந்துகொண்டு கேலரியின் நடுவில் மும்முரமாக தனது கடமையைச் செய்வதில் இருந்தபோது, திடீரென்று ‘ஓ நல்ல பிதாவே எனக்கு உதவுங்கள் என்று கூக்குரலிடுவதைக் கேட்டார்! கேப்டன் போச்சிம் ப்ளாக் (Boachim Block) அதைக் கேட்டுக் விரைத்துப் போய் நின்றார். அவர் இரத்தம் தோய்ந்தவராக இருப்பதைக் கண்டு, மேஜர் வான் டெர் லானின் (Major Van Der Laan)  உதவியுடன் அவரை அங்கிருந்து ஒரு படுக்கைக்குத் தூக்கிச் சென்றார். அங்கு அதற்குமேல் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவர் இறந்துபோனார். அவர் பட்ட காயத்தை ஆராய்ந்தபோது அது ஒரு மாஸ்க்வெட் ரக தோட்டா அவரின் உயிரைக் குடித்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்".

1655 இல் போர்த்துகேயரிடமிருந்து கொழும்பை கைப்பற்றுவதற்கு தலைமை தாங்கிய டச்சு ஜெனரல் கெராட் ஹல்ஃப்ட்ஸ் 1656ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று கைமன் வாசலில் வைத்து போர்த்துகேயரால் சுட்டுகொல்லப்பட்டார்.  அவரின் நினைவாகத் தான் அவர் முகாமிட்டிருந்த மேட்டுப் பகுதிக்கு ஹல்ஃப்ட்ஸ் டொப் (Hulfts-dorp,) என்று வைக்கப்பட்டது. அங்கே தான் இன்றைய கொழும்பு உயர்நீதிமன்ற வளாகம் அமைந்திருக்கிறது.

இப்பகுதியைப் பற்றிய ஆரம்பகால பதிவுகளில் ஒன்று; யொஹான் வொல்ஃப்காங் ஹெய்ட் (Johann Wolffgang Heydt) என்பவரின் பதிவாகும். 1744 இல் வெளியான Allerneuster Geographisch Und Topographischer Schau-Platz von Africa Und Ost-Indien என்கிற அவரின் நூலில்; இல் ஹல்ஃப்ட்ஸ்டார்ப் பற்றிய பல குறிப்புகளுடன் அன்றைய காட்சிகளைக் கண் முன் கொண்டுவரக்கூடிய இப்பிரதேசத்தின் கோட்டோவியங்களும் அடங்கியுள்ளன. கொழும்பில் இருந்த நீதியரசரின் இல்லத்தைப் பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த இல்லமானது கொழும்பு கோட்டையில் இருந்து ஆட்சி செலுத்தும் ஆளுநரின் ஆட்சி நிர்வாகத்தைப் போலவே அன்றைய நீதி நிர்வாகத்தில் பங்கெடுத்த உள்ளூர் நீதிபதி, திசாவ போன்றோரின் இல்லமாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஜேம்ஸ் ஸ்டேபநோப் (JAMES STEPHANOFF 1778-1874) என்கிற பிரபல பிரிட்டிஷ் ஓவியர் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வரைந்த இலங்கை உயர்நீதிமன்றத்தில் வழக்காடுவதை சித்திரிக்கும் ஓவியம்.


அந்த இல்லம் இரண்டு மாடிகளைக் கொண்டது, முன்னால் ஒரு சுவர் உள்ளது, அதன் அருகில் ஒரு காவலர் வீடும், முற்றத்திற்குப் பின்னால் சமையலறையும் அதற்கப்பால் அடிமைகளின் குடியிருப்புகள் போன்ற கட்டிடங்களால் சூழப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஹல்ஃப்ட்ஸ்டார்ப்பில் இடைவிடாமல் இரவிரவாக அப்பகுதியை கண்காணித்து வருவதுடன், சுற்றி ரோந்து செல்லும் சுமார் 30 சிப்பாய்களுக்கான ஒரு பாதுகாப்பு அறையைத் தவிர விசேடமாக வேறு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக குடிபோதையில் அனாவசியமான தகராறுகளில் ஈடுபடும் களியாட்டக்காரரர்கள், அசாதாரண நிலைமைகளை ஏற்படுத்தி வரும் சுற்றித் திரிபவர்கள், சிறு வியாபாரங்களில் ஈடுபடும் முஸ்லிம்கள் போன்றோர் மத்தியில் ஏற்படும் அசம்பாவிதங்கள் என்பவற்றை கண்காணிப்பதற்கும், கையாள்வதற்கும் தான் இந்த ரோந்து அதிகம் தேவைப்பட்டிருந்தது என்கிறார்.

ஹெய்ட்டின் கருத்தின்படி டச்சு ஆட்சிக் காலத்தில் இங்கே முக்கியமான நீதிமன்றச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இடமாக இருந்ததைக் குறிப்பிடுகிறார்.


ஜோன் கெப்பர் (John Capper) 1877 இல் வெளியான தனது Old Ceylon நூலில் ஹல்ஃப்ட்ஸ்டர்ப் பற்றிய தனியான ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். பிரபல ஓவியர் வான் டோர்ட் (Van dort) வரைந்த நீதிமன்ற வளாக கோட்டோவியம் ஒன்றையும் அந்த அத்தியாயத்தில் இணைத்திருக்கிறார். நீதிமன்றத்துக்கு வெளியில் படியிலும், வாசலிலும், மர நிழலிலும் குழு குழுக்களாக கூடி நிற்கும் மக்கள் கூட்டத்தை அந்த ஓவியம் சித்திரிக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியும், போர்த்துக்கேய, டச்சு, தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளைப் பேசும் மக்கள் தமது சட்டத் தேவைகளை அங்கே நிறைவேற்றிக்கொள்வதை பதிவு செய்திருக்கிறார்.

டச்சுக் காலத்தில் இந்த நீதிமன்றங்கள் ஹல்ஃப்ட்ஸ்டார்ப்பிற்கு மாற்றப்பட்டன என்று நம்புபவர்களும் உள்ளனர், ஆனால் அது மிக உயர்ந்த நீதிமன்றமா என்பது சந்தேகமே என்று ஜோன் கெப்பர் குறிப்பிடுகிறார். "இந்த உயர் நீதிமன்றம் கொழும்பு கோட்டையில் அரண் சுவர்களுக்குள் அமர்வுகள் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த போது அப்போதைய ஆளுநர் ரிப் வான்; உத்தியோகபூர்வமாக அக்கறை கொண்டிருந்த சில வழக்குகளில் நீதிபதிகளை மிஞ்சும் வகையில் தலையீடுகளை செய்து வந்ததாக கருதியதால் அவர்கள் நெதர்லாந்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்து சுவர்கள் இல்லாமல் அமர்வுகளை நடத்தும் உரிமையைக் கோரினர் என்றும் கூறப்படுகிறது. பின்னர் அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் தான் இங்கேயும் நீதிமன்ற வழக்குகளை ஏனையோரும் பார்வையிடும் வாய்ப்புகள் கிட்டின.


இலங்கையின் நீதித்துறை பாரம்பரியம்

இலங்கை நாட்டில் ஒரு முறையான சட்ட அமைப்புக்கான அடித்தளம் பண்டைய மன்னராட்சிக் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இவற்றில் கிடைக்கப்பெற்றது “நீதி நிகண்டுவ” என்கிற நூல் தான். அது கண்டி ராஜ்ஜிய காலத்தில் குறிப்பாக 1769 தொடக்கம் 1815ஆம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயர்களிடம் முற்றாக பறிபோகும் வரை நடைமுறையில் இருந்தது. கண்டியச் சட்டம் என்றும் இதை நாம் அழைக்கிறோம். இலங்கையில் இயங்கிய ராஜ்ஜியங்களில் பல்வேறு வடிவங்களில் நீதித்துறை இயங்கிய போதும் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டமாக “நீதி நிகண்டு” தான் காணக்கிடைக்கிறது. அதேவேளை அது முழு இலங்கைத் தீவுக்குமான சட்ட நூலாக இருக்கவுமில்லை. கண்டி ராஜ்ஜியத்துக்குள் மாத்திரம் இயங்கிய சட்டம் தான் அது. அச்சட்டம் பற்றிய பல பெரிய ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன.

கண்டியில் “மகுல் மடுவ” என்கிற கட்டிடத்தில் வழக்குகளும் அதற்கான தீர்ப்புகளும் வழங்கப்பட்டதை ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டொயிலி போன்றோரின் குறிப்புகள் நமக்கு சாட்சி பகிர்கின்றன. இதன் பிரகாரம் அன்று அரச அவையின் நெருக்கமான அங்கமாக நீதித்துறை இயங்கியிருப்பதையும் நாம் இனங்காணலாம்.

1505 ஆம் ஆண்டில், போர்த்துக்கேயர்கள் இலங்கையக் கைப்பற்றினார்கள். ஆனால் அவர்கள் நாட்டில் போர்த்துகேய நீதிமன்ற கட்டமைப்பை நிறுவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. டச்சுக்காரர்கள் 1656 இல் இலங்கையின் கரையோரன்களைக் கைப்பற்றினர், பின்னர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி டச்சு சட்ட அமைப்பை நீதித்துறையாக ஆக்கினர்.

அவர்கள் லான் ராத் (Lan Raad), சிவில் ராத் (Civile Raad), ராத் வான் ஜஸ்திதி (Hof Van Justitie) போன்ற நீதித்துறைப் பிரிவுகளைக் கொண்டு இயங்கியது  ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர். டச்சு நாட்டின் உயர் நீதிமன்றமான ராத் வான் ஜஸ்டதிதிய, டச்சு கவர்னரால் நியமிக்கப்பட்ட ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்டிருந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைக் கொண்டிருந்தது அந்த உயர் நீதிமன்றம். காணி நீதிமன்றம் (Lan Raad), சிவில் நீதிமன்றம் (Civile Raad) ஆகியன காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்தன. உயர் நீதிமன்றம் கொழும்பில் இயங்கியது. இது மற்ற நீதிமன்றங்களின் இறுதி மேல்முறையீட்டு அதிகார வரம்பையும் அத்துடன் மிக உயர்ந்த குற்றவியல் அதிகார வரம்பையும் கொண்டிருந்தது.

1796 ஆம் ஆண்டில், பிரித்தானியர்கள் இலங்கையைக் கைப்பற்றியதும் அவர்கள் தமது சொந்த ஆங்கிலேய நீதிமன்ற முறைக்கு நிகரான நிதிமன்றத்தை நிறுவினார்கள். செப்டம்பர் 23, 1799 அன்று வெளியிடப்பட்ட ஒரு பிரகடனத்தின் மூலம் அந்த கட்டமைப்பை ஏற்படுத்தினர். அப்போது அவர்கள் இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க்கவுமில்லை. 16 ஆண்டுகள் கழித்து 1815 கண்டியைக் கைப்பற்றிய பின்னர் தான்  1801 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி  "மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க உச்ச நீதிமன்றம் இலங்கையில் நிறுவப்பட்டது. பிரித்தானியா, அயர்லாந்து ஆகிய அரச முத்திரைகளின் இலட்சினைகளின் கீழ் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இந்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வுகள் பிப்ரவரி 08, 1802 அன்று தொடங்கின.

1833 பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்ட அரச சாசனத்தின் மூலம் தீவு முழுவதும் உச்ச நீதிமன்றம் அதிகாரபூர்வமாக இயங்கத் தொடங்கியது. உச்சநீதிமன்றமானது தலைமை ஒரு நீதிபதியையும் இரண்டு நீதிபதிகளையும் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டனர். நீதிபதிகள் பெரும்பாலும் இங்கிலாந்தில் பணியமர்த்தப்பட்டனர். இந்த நீதிபதிகள் உயர்ந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். பிரித்தானிய தலைமை அதிகார கட்டமைப்பு இவ்வாறு இருந்தது.

  • ஆளுநர்
  • ராஜரீக கடற்படைத் தளபதியும், இராணுவத்தின் தளபதியும்.
  • தலைமை நீதிபதி
  • ராஜரீக கடற்படையின் கேப்டன்
  • நிர்வாக கட்டமைப்பின் உறுப்பினர்கள் (Executive Council)
  • நீதிபதிகள்

தலைமை நீதிபதியும், ஏனைய நீதிபதிகளும் சிறப்பு அதிகாரத்தின் கீழ் அரச ராஜரீக சாசனத்தின் மூலம் நியமிக்கப்பட்டனர்.

1883 ஆம் ஆண்டின் கட்டளை எண். 01இன் பிரகாரம் 1884 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சட்ட மா அதிபர் பதவியையும் நிறுவியது பிரித்தானிய அரசு.

இலங்கையின் உச்ச நீதிமன்றம் 1804 இல் கொழும்பு கோட்டையிலிருந்து புதுக்கடைக்கு கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இருந்த இடம் அப்போது டச்சு ஆளுநர்களின் வசிப்பிடமாக இருந்தது. பழைய உச்ச நீதிமன்ற கட்டிடமானது 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட ஒரு வரலாற்று பெருமை வாய்ந்த கட்டிடமாகும்.

1656 முதல் 1796 வரை இந்த கட்டிடம் நாட்டின் டச்சு கவர்னர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக மாறியிருந்தது. இலங்கையின் முதல் ஆளுநரான ஃபிரடெரிக் நோர்த், 1805 ஆம் ஆண்டு வரை இந்த மாளிகையை தனது உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தினார். அந்தக் காலப்பகுதியில் தான் இலங்கையின் உச்ச நீதிமன்றம் மேலே குறிப்பிட்டபடி அதிகாரப் பத்திரத்தின் மூலம் நிறுவப்பட்டது. இலங்கையின் முதலாவது பிரதம நீதியரசர் சேர் கொட்ரிங்டன் எட்மண்ட் கெரிங்டன் (Sir Codrington Edmund Carrington), ஈ.எச்.லுஷிங்டன் (E. H. Lushington) ஆகியோர் அடங்கிய இலங்கையின் முதலாவது உச்ச நீதிமன்றம் கோர்டன் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டிடத்தில் கூடியது. இந்த கட்டிடம் இன்று கோட்டை புனித பீட்டர் சர்ச் (St. Peter Church)என்று அழைக்கப்படுகிறது. 1680 இல் கட்டப்பட்ட இந்த இல்லம், டச்சு ஆளுநர்களால் தங்களுடைய வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இந்த இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் உச்ச நீதிமன்ற அமர்வுகளை அப்போது நடத்தினர். 1804 இல் இது புதுப்பிக்கப்பட்டு முற்றிலும் தேவாலயமாக மாற்றப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு ஆங்கிலிகன் புனிதரான பீட்டரின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

கவர்னர் நோர்த் 1805 இல் ஹல்ஃப்ட்ஸ்டோர்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தைக் கைவிட்டு வேறிடத்தில் குடியேறினார். அன்றிலிருந்து அந்தப் பெருமை வாய்ந்த கட்டிடம் உத்தியோகபூர்வமாக இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்காக ஒதுக்கப்பட்டது.

தற்போதைய உச்ச நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அமைந்துள்ள புதிய கட்டிடம் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது. சீன அரசின் நிதி உதவியுடன் அது கட்டப்பட்டது. ஆர். 1988 செப்டெம்பர் 17 ஆம் திகதி பிரதம நீதியரசர் பாரிந்த ரணசிங்க தலைமையில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது நீதித்துறை நூலகமும் வழக்கறிஞர்களுக்கான அறைகளும் உள்ள கட்டிடம் 1958 இல் திறக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட இக்கட்டிடம் முன்னாள் நீதி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவினால் திறக்கப்பட்டது. சீன அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டதால் அக்கட்டிடமும் வளாகமும் சீன கட்டிட அமைப்பின் சாயலைக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். சீன அரசு அக்கட்டிடத்தின் மீது தொடர் அக்கறை காட்டி வருவதால் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த உயர் நீதிமன்ற கட்டிடத்தை மேலும் விஸ்தரிக்கவும், அதனை சரிபார்த்து திருத்துவதற்கும் மேலும் நிதிகளை இலங்கைக்கு ஒதுக்கியது.

நன்றி - தினகரன் 26.06.2022

Share this post :

+ comments + 1 comments

சிறந்த தகவல்கள் நன்றி

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates