Headlines News :
முகப்பு » , , , , , » போர்த்துகேய கல்வெட்டு எங்கே? (கொழும்பின் கதை – 29) என்.சரவணன்

போர்த்துகேய கல்வெட்டு எங்கே? (கொழும்பின் கதை – 29) என்.சரவணன்

ஆண்டு 1875. இடம் கொழும்பு துறைமுகம்:

கொழும்புத் துறைமுகத்தின் தென்மேற்குப் பகுதியை இணைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். அவர்கள் அங்கிருந்த மணல் மேடுகளை அகற்றிக்கொண்டிருந்த போது விசித்திரமான கல்வெட்டொன்றின் அடையாளங்களைக் கண்டார்கள். உடனடியாகவே அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதனைத் தெரியப் படுத்தினார்கள். கட்டுமானப் பணிகளுக்கான தோண்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

பின்னர் சில மேலதிக அதிகாரிகளின் கண்காணிப்பில், அவர்களின் ஆலோசைனைக்கிணங்க அது கவனமாக சுத்தப்படுத்தப்பட்டது. அதிலிருந்த மணல் தூசு அனைத்தையும் அப்புறப்படுத்தினார்கள். கொழும்பு துறைமுகப்பகுதியில் இருந்த அந்த மேடுக்குள் ஒரு பெரும் பாறை. அந்தப் பாறையில் செதுக்கபட்டிருந்தது போர்த்துகேய சின்னம். அந்த சின்னம் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்து சமுத்திரத்தை நோக்கிய திசையில் பார்த்தபடி இருந்தது.

தொல்லியல் நிபுணர்களும், பத்திரிகையாளர்களும், அதிகாரிகளும் வந்து பார்த்து வியப்பாகவும் பல குழப்பகரமான ஐயங்களுடனும் திரும்பிச் சென்றார்கள்.

இந்தச் சின்னத்தின் தொல்லியல் பெறுமதியை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1898 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி அந்தச் சின்னம் பொறிக்கப்பட்ட 20 டன் எடையுள்ள பாறையைத் தகர்த்து துறைமுக சுங்கக் கட்டிடத்தின் முன் வைத்தனர். 1912 ஆம் ஆண்டு, இதை கொழும்பு கோட்டையில் உள்ள இராணி மாளிகையோடு உள்ள கோர்டன் பூங்காவுக்கு அன்றைய காலனித்துவ செயலாளர் சேர் ஹியுஜ் கிளிபோர்ட்டால் (Sir Hugh Clifford) வெட்டிக் கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது. “அந்தக் கல்வெட்டு அப்போது வந்திறங்கியவர்கள்  வந்திறங்கியதன் நினைவாக அதனை செதுக்கியிருக்கவேண்டும்” என அவர் கருத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கோர்டன் கார்டனிலிருந்து அகற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கேயர்கள் வந்திறங்கியது 1505 ஆண்டு இறுதியில் ஆம் ஆண்டாக இருந்தாலும், இந்த கல்வெட்டு 1501 ஆம் ஆண்டே நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறுகிற சில வரலாற்று சர்ச்சைகள் நீண்டுகொண்டே இருந்தன.

இந்த கல்வெட்டுச் சின்னம் பற்றி அதிகம் கவனமெடுத்தவர்களில் முக்கியமானவர்கள்; அன்று சமூக விஞ்ஞானிகளின் கேந்திர அமைப்பாக திகழ்ந்த ஆசிய இராஜரீக சங்கத்தினர் (Royal Asiatic Society Ceylon Branch) தான். இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொல்லியல், என பன்முகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த சந்ததியினருக்கு பல ஆய்வு மூலங்களை விட்டுச் சென்றவர்கள் அவர்கள் தான். ஆளுனரிலிருந்து, அரசியல்வாதிகள், துறைசார் அறிஞர்கள் என பல கல்விமான்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கிய நாட்டின் தலையாய புத்திஜீவிகளின் அமைப்பு அது.

கொழும்பு ஜனாதிபதி மாளிகையோடு அமைந்துள்ள கோர்டன் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த போது...
இந்த தொல்லியல் பெறுமதி கொண்ட பாறையையும் அதன் கல்வெட்டையும் பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். அதன் பிரகாரம் 1889 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி கூடிய கூட்டத்தில் அதைப் பற்றிய விபரங்களை சமர்பித்து உரையாடினார்கள். அங்கு உரையாடியவற்றையும் அங்கே சமர்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அவர்கள் 1901 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுச் சஞ்சிகையில் (Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society - 1899 -1900- vol-16) வெளியிட்டார்கள். இந்தக் கட்டுரைக்காக அந்த உரையாடலில் கலந்துகொண்டவர்கள் பற்றி தேடி அறிந்த போது மிகவும் வியப்பாக இருந்தது. A. E. Buultjens, D. W. Ferguson, G .A. Joseph, F.H.D. Vos, Ladislaus Michael (பேராயர்) மட்டுமன்றி ஆளுநரும் கலந்துகொண்டிருந்தார்.

இந்த உரையாடலில் தான்  அந்த கல்வெட்டு பற்றிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அந்தக் கல்வெட்டை 1501 ஆம் ஆண்டு செதுக்கியதாக இருப்பதால் போர்த்துகேயர் 1501 இலேயே வந்து விட்டார்களா என்கிற வாதம் எழுப்பப்பட்டபோது அது 1501 அல்ல 1561 என்று விளக்கப்பட்டது. அப்படி என்றால் அதன்படி லோரன்ஸ் அல்மேதாவால் அவரின் காலத்தில் இது செதுக்கப்படவில்லை என்றல்லவா பொருளாகும் என்கிற கேள்வி வந்தது.

அந்தக் கல்வெட்டில் உள்ள பிரதான சின்னம் உள்ளிட்ட அத்தனையையும் செதுக்கியவரும், ஆண்டை செதுக்கியவரும் ஒரே நபரல்ல என்றும், ஒரே காலமும் அல்ல என்றும் நிரூபிக்கப்பட்டது. அதாவது 1505 இல் இது செதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 1561 இல் இந்த வருடம் வேறு நபரால் செதுக்கப்பட்டிருக்கிறது என்பதை நிறுவினார்கள்.

இந்த விடயத்தில் அதிகம் சிரத்தையெடுத்து அக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த பெர்குசன் (Donald William Ferguson) பின்னர் “ 1506 இல் போர்த்துகேயரால் இலங்கை கண்டுபிடிப்பு” (The Discovery of Ceylon by the Portuguese in 1506) என்கிற தலைப்பில் ஒரு பெரும் ஆய்வுக் கட்டுரையை 1907 ஆம் ஆண்டு ஆசிய ராஜரீக சங்கத்தின் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அதில் போர்த்துக்கேயரின் வருகை பற்றியும், இந்த கல்வெட்டு பற்றியும் விரிவான குறிப்புகள் உள்ளடங்கியுள்ளன. அது 1908 ஆம் ஆண்டு 135 பக்கத்தில் நூலாக வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 

அதில் இந்த ஐயங்களுக்கும், சர்ச்சைகளுக்கு எல்லாம் பல முடிவுகளைத் தந்திருக்கிறார் பெர்குசன்.

இதில் போர்த்துக்கேய மன்னரின் அரச கிரீடமும் சிலுவையும் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னரின் கிரீடத்தின் உருவத்தைக் கொண்ட போர்த்துக்கேய Coat-of-Arms சின்னம் அது. மேலும் பிரதான கேடயத்தின் உட்புறத்தில் சிலுவை வடிவத்தில் ஒரு சிறிய கவசம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து கேடயங்களின் உள்ளே தலா 5 தங்க நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உடலில் ஏற்பட்ட ஐந்து காயங்களை இது காட்டுகிறது. ஐந்து கேடயங்களும் அபோன்சோ பிரபுவை போரில் தோற்கடித்த ஐந்து தளபதிகளை அடையாளப்படுத்துகின்றன. இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக யூதாஸ் எடுத்த 30 காசுகளை அடையாளப்படுத்தும் வகையில் தங்கக் காசுகள் காண்பிக்கின்றன.

போர்த்துகேயரின் முதல் நான்கு தசாப்த காலத்தில் சமய நடவடிக்கைகள் பற்றிய போதிய அடையாளங்கள் கிடையாது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் துறைமுகத்துக்கு அண்டிய பகுதியில் சிறிய புனித லோரன்ஸ் தேவாலயம் (St. Lawrence church) கட்டப்பட்டிருந்தது. இன்னொன்று கோட்டை அரசின் தலைநகரில் 1528 இல் இருந்து இருந்திருக்கிறது.  இவை போர்த்துகேய படையினரின் வழிபாட்டுக்காக இருந்தனவே அன்றி மத விஸ்தரிப்பாக அப்போது இருந்திருக்கவில்லை. இதில் புனித லோரன்ஸ் தேவாலயம் இருந்த பகுதி கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் உள்ள; கோர்டன் பூங்காவுக்கு அருகாமையில் இருந்திருக்கிறது. அதன் அருகில் தான் இந்தக் கல்லும் இருந்திருக்கிறது. 

தற்போது கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் வைக்கப்பட்டிருக்கிற விதம்

உறுதிபடுத்தல்

1506 இல் போர்த்துகேயர் கோட்டை அரசனின் அனுமதியுடன் கொழும்புக்கு அண்மையில் ஒரு தொழிற்சாலைக் களஞ்சியத்தையும், கத்தோலிக்க தேவாலயத்தையும், நினைவுச் சின்னத்தையும் நிறுவினர். 

1506 இல் போர்த்துகேயர் இலங்கையைக் கண்டுபிடித்தல் என்கிற நூலில் டொனால்ட் பெர்குசன் முக்கியமான பல விபரங்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் தொன் பிரான்சிஸ்கோ த அல்மேதா (D. Francisco de Almeida); போர்த்துகேய அரசர் மனுவலுக்கு 1508ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் அனுப்பிய கடிதங்களைப் பரியும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் இப்படி இருக்கிறது:

"சிலோனைப் பற்றி அங்கே சென்று திரும்பியவர்களின் மூலம் தங்களுக்கு தகவல்களை அறியத் தந்திருக்கிறேன். என் புதல்வன் அங்கே நிறுவிய கல்வெட்டு நினைவுச் சின்னத்தையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள்.  தெற்கிலிருந்து, அதாவது மலாக்கா, சுமாத்திரா, வங்காளம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் அனைத்து கப்பல்களும் வடக்குப் திசையாக செல்லும்போது இந்த இலங்கையைக் கடக்காமல் செல்ல முடியாது. மேலும் அரை டஜன் கப்பல்கள் இங்கே நிறுத்தலாம். அவற்றை கவனிப்பதற்காக ஒரு கோட்டையை எந்தவித சிக்கலும் இல்லாமல் உருவாக்க முடியும். உங்களின் சேவையை அதிகரிக்க கடவுள் எங்களை வழிநடத்திச் செல்லட்டும்.” 

பர்னவோ லோபேஸ் த காஸ்தன்ஹேதா (Castanheda  1528 அளவில்) இப்படி எழுதுகிறார்

“அரசனின் அனுமதியுடன் அவர் (தொன் லோறன்சோ த அல்மேதா) கடற்கரையோரத்தில் பாறையின் ஒரு மூலையில் போர்த்துகேய அரச சினத்தையும், இன்னொரு மூலையில் வாள் சின்னத்தையும் உடைய கல்வெட்டை நிறுவ ஆணையிட்டார்.” 

இந்த கல்வெட்டுடன் சேர்த்து JSOI என்கிற எழுத்துக்கள் பெரிதாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் விரிவை ஆங்கிலத்தில் (Jesus Salvator Orientalium Indiorum) என்று அர்த்தப்படுத்துகிறார்கள். அதாவது கிழக்கிந்திய மீட்பரான இயேசு கிறிஸ்து என்று அர்த்தப்படும். போர்த்துகேயரால் கீழைத்தேய நாடுகளில் கத்தோலிக்க விஸ்தரிப்பின் போது பயன்படுத்தப்பட்ட சுலோகம் அது. அப்படியான நாடுகளில் எல்லாம் இப்படியான கல்வெட்டை நிறுவியிருப்பதை அறிய முடிகிறது. அங்கெல்லாம் ஒரு சிலுவையுடன் நினைவுத் தூபி. அரச இலட்சனை என்பன நிறுவப்பட்டுள்ளன.

போர்த்துகேயர் இலங்கை வந்தது பற்றிய இன்னும் புரியாத புதிராக இருகின்ற இரு சர்ச்சைக்குரிய விவாதங்கள் பலமாகவே உள்ளன. முதலாவது அவர்கள் வந்திறங்கிய உறுதியான ஆண்டு, அடுத்தது அவர்கள் வந்திறங்கிய இடம்.

போர்த்துகேயரின் வருகையும் கொழும்புத் துறைமுகமும்

16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியப் பெருங்கடலில் வளமான தீவுகள் இருப்பதை போர்த்துகேயர்கள் அறிந்திருந்தனர். அத்தகைய தீவுகளைக் கண்டுபிடிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இந்தியாவின் கொச்சியில் முகாமிட்டிருந்த தளபதி பிரான்சிஸ்கோ த அல்மேதா இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார். பிரான்சிஸ்கோ அல்மேதா தனது மகன் லோரென்சோ த அல்மேதாவின் தலைமையில் ஒரு இராணுவத்தை இந்தப் பணிக்காக அனுப்பினார்.  லோரென்சோவும் அவரது இராணுவமும் புதிய தீவுகளைத் தேடிக் கப்பலில் சென்றுகொண்டிருந்த வேளை காலி பகுதியில் ஏற்பட்ட அலைகளின் பேரெழுச்சியாலும், புயலாலும் சிக்கி கொழும்பில் அக்கப்பல்கள் கரையொதுங்கியன.  கம்போடியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏற்றப்பட்டிருந்த கறுவா, குட்டி யானைகள் என்பவற்றைக் கொண்ட கப்பல்கள் அப்போது துறைமுகத்தில் நங்கூரமிடபட்டிருந்தன. லோரென்சோவும் அவரது ஆட்களும் முஸ்லிம்களை பயமுறுத்தி அவர்களை விரட்டினர். கப்பலில் இருந்து வந்த மாலுமிகள் கரையோரத்தில் கண்ட சுதேசிகளிடம் அனுமதி பெற்று ஒரு கல்லில் தாம் வந்திறங்கியதன் நினைவாக தமது நாட்டின் அரச இலட்சினையை செதுக்கினார்கள். அதை செதுக்கிய கோன்சலேஸ் கொன்ஸ்வலேஸ் (Goncalo Goncalves) என்கிற போர்த்துக்கேய படையினன் தனது பெயரையும் அதில் பொறித்தார். 

இந்தப் புகைப்படம் கொழும்பு வரைபடங்களில் மிகவும் பழமையான (1526) வரைபடம் இது எனலாம். Lendas da Ïndia என்கிற போர்த்துகீச மொழி நூலில் வெளிவந்த புகைப்படம் இது. இந்த நூல்கள் 12 தொகுதிகளாக வெளிவந்தன. இதை எழுதியவர் கெஸ்பர் கொறையா (Gaspar Correia 1492–1563 ). கெஸ்பர் கொறையா போர்த்துக்கேய வரலாற்றாசிரியர். போர்த்துகேயர் கோவாவில் நிலைகொண்டிருந்த போது இளம் வயதில் போர்த்துக்கேய படையுடன் இந்தியா வந்து சேர்ந்து பணி புரிந்தவர். இந்தியாவில் இருந்த காலத்தில் அவர் இந்தியா பற்றியும் சூழ உள்ள பிரதேசங்களைப் பற்றியும் எழுதிய 3500 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகள் அவரின் இறப்புக்குப் பின்னர் கோவாவிலிருந்து போர்த்துக்கலுக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதியெடுத்து முக்கியமானவர்களுக்கு மட்டுமே சில பிரதிகள் விநியோகிக்கபட்டிருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டு வரை அது நூலாக வெளியிடப்படவில்லை.

அப்போதைய இலங்கை மன்னர் ‘கோட்டே’யில் இருப்பதை அறிந்த போர்த்துகேயர்கள் பின்னர் மன்னரைச் சந்திக்க கோட்டே சென்றனர். போர்த்துகீசியர்களைப் கண்ட சுதேசிகள் 8வது வீரபராக்கிரமபாகுவிடம் சென்று பின்வருமாறு கூறினார்கள்.

“அரசே, ஒருவித விசித்திரமான மனிதர்கள் கொழும்பில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் இரும்பு தொப்பிகளையும் இரும்பு கவசங்களையும் அணிந்திருக்கிறார்கள். கற்களைத் தின்று இரத்தம் குடிப்பதை நாங்கள் பார்த்தோம்.”

அதைக் கேட்ட அரசன் அவர்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டான். அரசரின் கட்டளைப்படி போர்த்துகீசியர்கள் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் வழமையான வழியில் அல்ல. தூரப் பாதையால் அரச மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இப்படி வேடிக்கையாக அழைத்துச் செல்லப்பட்ட கதை சிங்களத்தில் பிரபல்யம். எனவே "பறங்கி கோட்டே சென்றது போல" என்கிற சொலவடை உருவானது. பின்னர் அரண்மனைக்கு வந்த மன்னருக்கும் போர்த்துகேயர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி போர்த்துக்கேயருக்கு ஆண்டுதோறும் 400 பஹார் கறுவாவை மன்னர் வழங்குவதாகவும் அதற்குப் பதிலாக போர்த்துக்கேயர் அரேபியர்களிடம் இருந்து இலங்கைத் துறைமுகங்களை பாதுகாப்பதாகவும் உடன்பாடு கண்டனர். இப்படித் தான் கொழும்பு துறைமுகம் வளர்ச்சி பெற்றது. 

லோறன்சோ த அல்மேதா

இலங்கையில் உள்ள துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் கப்பல்களை நிறுத்தி கொழும்பு நகருக்கு அருகில் ஒரு கப்பல் துறையை நிறுவ முடிவு செய்தனர். அதன்படி, போர்த்துகீசியர்கள் கப்பல்துறைக்கு கொழும்பு கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய மேட்டைப் பயன்படுத்தினர். இன்று அந்த இடம் தான் கொழும்பு துறைமுகமாக உருவாகியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் ஒரு போர்த்துகேய எழுத்தாளர் ஒருவர் கொழும்பு நகருக்கு அருகிலுள்ள துறைமுகத்தைப் பற்றி இப்படி எழுதினார்:

“துறைமுகத்திற்குள் நுழைய ஒரு பெரிய வாயில் உள்ளது. இப்பகுதிக்கு அருகே கால்வாய் ஒன்றும் ஓடுகிறது. துறைமுகத்தின் முனை ஒரு மீன்பிடி கம்பியின் முனை போல் உள்ளது. இது தரைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. அது ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் கல்லை எறியும் அளவுக்கு சிறியது. போர்த்துகேய வணிகர்களும் மாலுமிகளும் அந்த இடத்தைச் சுவரால் எழுப்பி தங்கள் வணிகத்தின் மையமாக மாற்றினர். போர்த்துகேயர்கள் 1517 இல் இருந்து இந்த துறைமுகத்தில் வர்த்தகம் செய்யத் தொடங்கினர். பின்னர் சுமார் 139 ஆண்டுகள் போர்த்துகீசியர்களால் இலங்கை ஆளப்பட்டது. இருப்பினும், 17 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் ராஜசிங்க மன்னரின் உதவியுடன், டச்சுக்காரர்கள் போர்த்துகீசியப் பகுதிகளைக் கைப்பற்றினர். அதன்படி 1656 இல் கொழும்பு துறைமுகம் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

போர்த்துகேயர்களால் இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் நினைவுச்சின்னமும் இதுவே. காலனித்துவத்தின் முதல் அடையாளமும் இது தான்.

காலனித்துவத்தின் அடையாளமாக இருக்கும் அதி பழமையான ஒரே கல்வெட்டு இது தான். 500 ஆண்டுகளையும் கடந்து இன்றும் எஞ்சியிருப்பது வியப்பான விடயம். அது மட்டுமல்ல போர்த்துகேயர் முதலாவது வந்திறங்கியது காலியிலா, கொழும்பிலா என்கிற குழப்பத்துக்கும் இந்த கல்வெட்டின் மூலம் நமக்கு விடை கிடைக்கிறது.

நன்றி - தினகரன் 29.05.2022

பி.கு: இக்கட்டுரைக்கு பயன்படுத்திய உசாத்துணைப் பட்டியல் இது நூலாக வெளிவரும்போது இணைத்துக்கொள்ளப்படவிருக்கிறது

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates