முதலாம் உலகப் போர் முடிந்ததும் அதன் நினைவாக 120 அடிகள் உயரமுள்ள வெற்றிக் கோபுரம் ஒன்று 1923ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cenotaph War Memorial என்று அழைப்பார்கள். செனடேப் (Cenotaph) என்பது கிரேக்கச் சொல். வெற்றுக் கல்லறை என்பது அதன் அர்த்தம். போரில் இறந்தவர்களை அங்கிருந்து சடலங்களை மீட்டு வர முடியாத நிலையில் அருகில் எங்கேயாவது புதைத்து விட்டு வருவது வழக்கம். அவ்வாறு அவர்களின் உடல்கள் இல்லாமல் அவர்களின் நினைவாக எழுப்பப்படும் நினைவிடங்களைத் தான் செனடேப் என்பார்கள்.
உலக நாடுகள் எங்கிலும் போரின் வடுக்களையும், போர் வரலாற்று நினைவுகளையும் கடந்து வந்துள்ளன. இதில் எந்தவொரு நாடும் விதிவிலக்கில்லை என்றே கூறலாம். போரின் வடிவங்களும், காலங்களும், காரணங்களும் மாறினாலும் போர்களைக் கடந்து வராத நாடு என்றொன்றில்லை.
இலங்கையில் அவ்வாறு முடியாட்சி காலத்துப் போரின் நினைவுகள் நிறையவே உள்ளன. எல்லாளனுக்காக துட்டகைமுனு அனுராதபுரத்தில் கட்டிய “தக்கின நினைவுத் தூபி” அவற்றில் முக்கியமானதாகக் கொள்ளலாம். அதுபோல, ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் நினைவாக உள்ள நினைவுத் தூபிகள், முதலாம், இரண்டாம் உலக யுத்த கால நினைவுத் தூபி, ஜே.வி.பி கிளர்ச்சி நினைவாக அமைக்கப்பட்ட தூபிகளையும் கூட கூறலாம். 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தபோது இலங்கையில் கொல்லப்பட்ட IPKF படையினருக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கொட்டேவில் அமைந்துள்ள நினைவுத் தூபியை வணங்கிச் சென்றதையும் கூறலாம். முப்பது வருட யுத்தத்தில் கொள்ளப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் நினைவாக நாடெங்கிலும் நினைவுத் தூபிகளும், நினைவிடங்களும் அரசால் உருவாக்கப்பட்டிருப்பதையும் அறிவீர்கள். இவை அனைத்தும் போரிலும், சமர்களிலும் வெற்றி பெற்ற தரப்பாலும், அதிகாரமுள்ள தரப்பாலும் நிறுவப்பட்ட நினைவிடங்கள் என்பதையும் அறிவீர்கள். இந்த வரிசையில் இலங்கையில் தமிழர் தரப்பில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நினைவுத் தூபிகள் ஒன்று விடாமல் அழிக்கப்பட்டுவிட்டதையும் சேர்த்தே நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது.
இந்த வரிசையில் காலனித்துவ ஆட்சிக் காலத்து நினைவுத் தூபிகளில் முக்கியமானதாக இந்த “வெற்றிக் கோபுர”த்தைக் கொள்ளலாம்.
உண்மையில் வெற்றி கோபுரமானது இந்து மகா சமுத்திரக் கடலில் வெகு தொலைவில் இருந்து காணக்கூடிய மெல்லிய தூபி என்று கூறலாம். லுடியன்ஸ் முதலில் கோபுரத்தின் உயர உச்சியில் பகலில் புகையும், இரவில் நெருப்பும் வரத்தக்க வகையில் வடிவமைத்திருந்தார். அவரது மனைவி, எமிலி அம்மையார் 1925 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வரும் வழியில் கொழும்பில் இருந்தபோது அதைப் பார்த்து தனக்கு அந்த அமைப்பு பிடிக்கவில்லை என்று லுடியன்ஸிடம் கூறியிருக்கிறார். " இது ஒரு சுடர் என்கிற அர்த்தத்தில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இது ஒரு ஊசியின் கண் போல் இருகிறது. வெளிச்சம் இல்லாமல் அது மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. எனக்கு அது அவ்வளவு பிடிக்கவில்லை.” என்றிருக்கிறார்.
முதற் தடவை இந்த செனடேப் கோபுரம் லண்டனில் உள்ள வைட்ஹாலில் தான் “போர் நினைவுக் கல்லறை”யாக நிறுவப்பட்டது. இந்தியாவின் இன்றைய ஜனாதிபதி இல்லமான ராஷ்டிரபதியின் அருகிலும் இதே போன்று அன்று நிறுவப்பட்டது.
ஆளுநர் பிரிகேடியர் ஜெனரல் சர் வில்லியம் ஹென்றி மனிங் அவர்களால் டிசம்பர் 7, 1921 அன்று நாட்டப்பட்டதை அடிக்கல் பொறிக்கப்பட்ட பலகை உறுதிப்படுத்துகிறது. அதே நாளின் சிலோன் டெய்லி நியூஸ் 'சிலோனின் போர் நினைவுச் சின்னம், அடிக்கல் நாட்டுதல்! காலி முகத்திடலில் இன்று வைபவம்' என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் பற்றியும் அதன் வடிவமைப்பு குறித்தும் விரிவான விபரங்களுடன் அந்த செய்து காணப்படுவதுடன், இதற்கான சிறந்த கிரானைட் கற்கள் மெட்ராஸுக்கு வடக்கே 30 மைல் தொலைவில் உள்ள பிரதேசமான சோளிங்கரிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. 119 அடி உயரத்தையும் ஏழு அடி விட்டத்தையும் இது கொண்டிருக்கிறது. என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1920ஆம் ஆண்டு 11,ஆம் திகதி வெளியான “The Ceylon Independent” பத்திரிகையின்படி இந்த கோபுரத்தை நிறுவ அப்போதே 150,000 ரூபா செலவழிந்திருக்கிறது.
காலிமுகத்திடலில் இந்தக் கோபுரம் இருந்தபோது |
பின்னர் ஒக்டோபர் 27, 1923 ஆம் நாள் “வெற்றிக் கோபுரம்” (Victory tower) என்கிற பெயரில் இது திறக்கப்பட்டது.
இதன் பின்னர் சிலோன் டெய்லி நியூஸ் அக்டோபர் 27, 1923 அன்று வெளியிட்டுள்ள பதிவுகளின்படி இந்த நினைவுதூபி ஆளுநர் மானிங்கால் காலை 7.45 மணிக்கு திறக்கப்பட்டது. அச்செய்திகளின் படி இந்தியாவில் இருந்து 'ஸ்டீமர்களின்' மூலம் கொண்டுவரப்பட்ட ஒன்று முதல் நான்கு டன் வரை எடையுள்ள பெரிய கற்கள் அனைத்தும், திறமையான இந்திய பணியாளர்களால் நிலைநிறுத்தி, வடிவமைத்து, நிறைவுசெய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டிய ஆளுநர் மானிங் அன்றைய தினம் கூட்டத்தில் உரையாற்றுகையில், “அந்த மாபெரும் போராட்டத்தில் இலங்கை, பிரித்தானிய ஆண்கள் ஆற்றிய பங்கிற்கு இது சாட்சியாக இருக்கும். போரிட்டு மடிந்த அந்த வீரர்கள் அமைதியாக ஓய்வெடுக்கும் அனைவரினதும் நினைவிடமாக இது திகழும்.”
ஜப்பான் தாக்குதல்
ஜப்பான் 1941 டிசம்பரில் அமெரிக்க பேர்ல் துறைமுகத்தின் மீது பாரிய விமானத் தாக்குதல்களை நடத்தி உலகையே அதிரவைத்துக் கொண்டிருந்த காலம். ஜேர்மன், ஜப்பான், இத்தாலி கூட்டு உலக நாடுகளில் பரவலான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ நாடுகளின் மீதெல்லாம் அடி விழுந்தன. இலங்கை எந்த வேளையிலும் அப்பேர்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை கொண்டிருந்தது.
1942 ஏப்ரல் 5ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினத்தன்று அது நிகழ்ந்தது. ஜப்பானிய விமானங்கள் இலங்கைக்கு மேலாக பறந்தன. பேர்ல் துறைமுகத்தின் மீதான தாக்குதலில் 360 ஜப்பானிய விமானங்கள் பங்குபற்றியிருந்ததையும் இங்கு கூறவேண்டும். இலங்கை இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதை ஜப்பானும் அறியும். பிரித்தானியாவின் பலத்தைக் குறைக்க இலங்கையைத் தாக்குவது முக்கியமானதாக இருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை, கொழும்பு ஆகினவற்றையும், ஆசியாவின் பெரிய கடல்விமானத் தளமான கொக்கல கடல்விமானத் தளத்தையும், இரத்மலான சிவில் விமானத் தளத்தையும் தாக்கியழிக்க திட்டமிட்டிருந்தது ஜப்பான். ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பையும் 9ஆம் திகதி திருகோணமலையையும் ஜப்பான் தாக்கியது.
இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், உள்ள வெற்றித் தூண் எதிரி விமானங்களுக்கு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கும் என்றும், ஜப்பானின் வான்வழித்தாக்குதலுக்கு இலகுவாக அடையாளம் காணப்படக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாக அதை இடம் மாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதை எங்கு மாற்றுவது என்பது குறித்து நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, இறுதியாக விக்டோரியா பூங்கா என்று அழைக்கப்படும் தற்போதைய இடத்தில் அதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
விகாரமகாதேவி பூங்காவில் நிறுவல்
அந்தக் கோபுரம் காலி முகத்திடலில் இருந்து கழற்றப்பட்டு விகாரமகாதேவி பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட 440 பேரின் பெயர்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளன. இன்றும் அது விகாரமகாதேவிப் பூங்காவின் பின்னால் அமைந்துள்ள கொழும்பு பொதுநூலக நுழைவாயின் அருகில் காணலாம். அது அப்போது எங்கு இருந்தது என்பதை சரியாகச் சொல்வதானால்; இன்று பண்டாரநாயக்கவின் பெரிய சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் அந்த நினைவுக் கோபுரம் இருந்தது என்கிறார் வரலாற்றாசிரியர் பேராசிரியர் கே.டி.பரணவிதான. அதை உறுதி செய்யக் கூடிய படங்களும் நமக்கு கிடைத்துள்ளன.
1939 - 1945 க்கு இடையில் நிகழ்ந்த இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை இணைக்கும் யோசனையை பிற்காலத்தில் ஆளுநர் சோல்பரி முடிவு செய்தார். அதன் பிரகாரம் இந்த தூபி அகற்றப்பட்டு மீண்டும் விகாரமகாதேவி பூங்காவின் ஒரு பகுதியில் (இன்றைய பொது நூலகத்துக்கு அருகில்) அப்படியே நிறுத்தப்பட்டது. அந்தத் தூபியை சுற்றி மேலதிக தூண்களுடன் அழகாக நிறுவப்பட்டது. ஆனால் அது முதற் தடவை கட்டப்பட்டதற்கு எடுக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலத்தை இதை மீள நிறுவ எடுத்தது. அது மட்டுமன்றி இலங்கைக்கு சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது.
மீண்டும் திறக்கப்பட்டது பற்றி பிப்ரவரி 6, 1952 அன்று வெளிவந்த சிலோன் டெய்லி நியூஸ் இப்படி தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. 'போர் நினைவுச்சின்னம் நிறைவடைந்தது'. இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இளவரசி எலிசபெத் மலர்வளையம் வைப்பார்' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், மன்னர் ஆறாம் ஜார்ஜ் திடீரென இறந்தபோது எதிர்பாராத நிகழ்வுகளின் காரணமாக இலங்கைக்கான அரச குடும்பத்து விஜயம் இரத்து செய்யப்பட்டது. 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் சிலோன் டெய்லி நியூஸ் தலைப்புச் செய்தியாக “அரசர் நித்திரையில் இறந்துவிட்டார், இளவரசி எலிசபெத் இங்கிலாந்தின் அரியணை ஏறுகிறார்' என்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த கோபுரத்தின் ஒரு பக்கத்தில் கவிதையொன்றின் ஒரு பகுதி பொறிக்கப்பட்டிருக்கிறது.
“நாம் முதுமை அடைவது போல
அவர்கள் முதிர்வடைய மாட்டார்கள்:
வயதினால் அவர்களைச் சோர்வடையச் செய்யவும் முடியாது.
வருட ஓட்டங்கள் அவர்களைப் பாதிக்காது.
சூரியன் உதிக்கிற காலையிலும்,
அஸ்தமிக்கிற மாலையிலும் கூட
நாம் அவர்களை நினைவு கூர்வோம்.”
இந்த மூலக் கவிதையை எழுதியவர் பெனியோன் (Robert Laurence Binyon) என்கிற பிரிட்டிஷ் கவிஞர். முதலாவது உலக யுத்தம் 1914 ஓகஸ்ட்டில் தொடங்கிய போது, ஜேர்மன் படையினரால் கொல்லப்பட்ட பிரித்தானிய படையினரின் நினைவாக அடுத்த மாதம் செப்டெம்பர் மாதம் எழுதப்பட்ட நெடுங்கவிதையின் ஒரு பகுதி இது.
இதே கவிதையின் கீழ் இன்னொரு கவிதையின் வரிகளும் காணப்படுகிறது அதை எழுதியவரும் புகழ் பெற்ற பிரிட்டிஷ் கவிஞரும், இலக்கியவாதியுமான ஜோன் மெக்ஸ்வெல் எட்மன்ட்ஸ் (John Maxwell Edmonds).
நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது,
அவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்,
நாளைய உங்கள் நாளுக்காக
எங்கள் இன்றைய நாளைக் கொடுத்தோம் என்று.
உலக யுத்தத்தின் நினைவாக ஆண்டு தோறும் நவம்பர் 11 ஆம் நாளை போரில் இறந்தவர்களுக்காக நினைவு கூறப்படுகிறது. அவ்வாறு உலகெங்கும் நினைவு கூறப்படும் அதே நாளில் இலங்கையிலும் இந்த இடத்தில் இராணுவ மரியாதையுடன் தேசிய வீரர்கள் தினம் நினைவு கூறப்படுவது வழக்கம்.
தொல்லியல் பெறுமதி மிக்க இந்த போர் நினைவுச்சின்னம் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தினால் (SLESA) இலங்கை கடற்படையின் உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நினைவுச்சின்னத்தை இரவில் ஒளிரச் செய்ய வான வெளிச்ச விளக்குகளும் நிறுவப்பட்டன.
ஒரு பாரிய நினைவுச் சின்னமொன்று 80 ஆண்டுகளுக்கு முன்னரே சிதைவுறாமல் பெயர்த்து எடுத்துச் சென்று இன்னோரிடத்தில் நிறுவப்பட்ட சாதனையையும் கொண்ட இந்தத் தூபி அடுத்த வருடம் நூற்றாண்டு வயதைக் கொண்டாட இருக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...