Headlines News :
முகப்பு » , » தோழர் 'TAMIL TIMES' ராஜநாயகம் - நா.ஸ்ரீகெங்காதரன்

தோழர் 'TAMIL TIMES' ராஜநாயகம் - நா.ஸ்ரீகெங்காதரன்

சென்று வாருங்கள் தோழரே!

1936ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ம் திகதி சுன்னாகத்தில்  பிறந்தவர் பெரியதம்பி ராஜநாயகம். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்வியில் சிறந்ததுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். கிரிக்கட்டில் ஆரம்ப பந்து வீச்சாளனாக பல வெற்றிகளின் பின்னால் இருந்ததுடன் பாட்மின்ரன் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். கல்லூரியில்  என் எஸ் கந்தையா, அதிபர் ஒரேட்டர் சுப்ரமணியம் ஆகியோரின் விருப்பத்துக்குரிய மாணவன். கல்லூரி மாணவனாகவே லங்கா சமசமாஜ கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து வேலை செய்தார். 

1957இல்  போட்டிப் பரீட்சையில் தேறி இலங்கை அரசாங்க சேவையில் சேர்ந்தார். GCSU  எனப்படுகின்ற அரசாங்க லிகிதர் சேவை சங்கத்தில் இணைந்து தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டார். அப்போது GCSU அரச சேவையாளர்கள் எல்லோருக்கும் பொதுவான, பெரிய சங்கமாக இருந்தது. இவர் சேர்ந்த வேளையில் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சங்கம் பண்டாரநாயக்கா அரசுக்கு எதிராக இடம்பெற்ற வேலை நிறுத்தப் போராட்ட  தோல்வியின் பின்பாக சமசமாஜ கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அன்றிலிருந்து கட்சியை விட்டு விலகும்வரை கட்சியின் சார்பிலேயே தீவிரமாக தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டார். 

லங்கா சமசமாஜ கட்சி தமிழர்களுக்கு சம அந்தஸ்து என்றும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்றும் கொள்கை கொண்டவர்களாக இருந்தார்கள். பண்டாரநாயக்க கொண்டுவந்த சிங்களம் அரசமொழி என்ற சட்டதுக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவர்கள் பெரிய போராட்டங்களை நடாத்தினார்கள். பாராளுமன்றத்தில் 'பிரஜா உரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டம், சிங்களம் அரசமொழி சட்டம்  ஆகியவற்றுக்கு எதிராக வாக்களித்தவர்களில் இவர்களே பெரும்பான்மையானவர்கள். இன்றைய தமிழ் அரசியல் சந்ததி தெரிய விரும்பாத சரித்திரம்.

தோழர் ராஜநாயகம்  இந்த வேளையில் இலங்கை அரசியலின் மூன்றாவது பெரிய சக்தியாக இருந்த லங்கா சமசமாஜக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். இவருடைய அண்ணர் காலம்சென்ற Dr அரசரட்ணம் (அரசர்) அவர்களும் கட்சியின் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். 

லங்கா சமசமாஜ கட்சி 1960 மார்ச் மாதம் இடம்பெற்ற இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய சகல தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசைக் கைப்பற்றும் தீர்மானத்துடன் கடுமையாக வேலை செய்தனர். அவர்களின் எண்ணம் எதிர்காலத்தில் சாத்தியப்படும் சூழ்நிலை இல்லாத வகையிலேயே தேர்தல் முடிபுகள் இருந்தன. கட்சித் தலைமை 'கூட்டணி அரசியல்' என்ற புதிய சிந்தனைக்குள் வரத் தொடங்கியது.

இந்த சிந்தனையை கட்சியின் திட்டமாக மாற்றும் எண்ணத்துடன் 1963 ஆரம்பத்தில் கொழும்பு நகரசபை மண்டபத்தில் சமசமாஜ கட்சியின் பொதுக் குழு கூடியது. 1000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தமாநாட்டில் கட்சித் தலைமையின் இந்த தீர்மானத்துக்கு எதிராகப் பேசி வாக்களித்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறியவர் மரணிக்கும் வரை கட்சியின் பக்கம் போகவில்லை. 1970இல் இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிபெற்று சிறிமாவோ ஆட்சியின் முக்கிய உறுப்பாக என் எம் பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா போன்றவர்கள் இருந்த வேளையிலும் அவர்கள் வேண்டியும் அந்த அரசியலைத்திரும்பிப் பார்க்கவில்லை. 

அனால் இவரின் அண்ணர் காலம்சென்ற Dr அரசரட்ணம் அந்த மாநாட்டில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து கட்சியில் தொடர்ந்தும் இருந்ததுடன் அரசுகளையும் ஆதரித்து நின்றார். இவரின் கடைசித் தம்பி காலம்சென்ற பெரி சண்முகம் இவர்களின் அரசியலுக்கு எதிராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து வேலைசெய்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்து இளம் வயதில் காலமாகிவிட்டார். தம்பியார் பெரி சண்முகத்தின் எழுத்தாற்றலையும் பங்களிப்பையும் தெரியாதவனாகவே இருந்துவிட்டேனே என்று வருந்துவார்.

1958ம் ஆண்டு அக்குயனாஸ் பல்கலைக்கழக கல்லூரியின் மூலம் லண்டன் பல்கலைக்கழகத்தின் BSc பட்டதாரியானார். இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1st Class Honours 1968 இல் சட்டத் தரணியானார்.

இலங்கையில் அரசியல், தொழிற்சங்க வேலைகளுடன் சட்டத் தரணியாகவும் சிலகால வேலை செய்தார்.  

இலங்கையில் இருந்து வெளியேறும்வரை சமமஜாக் கட்சியில் இருந்து இவருடன் பிரிந்து வந்த பாலா தம்பு வுடன் சேர்ந்து வேலை செய்தார். அவருடைய தொழிற் சங்க வேலைகளிலும் அரசியல் வேலைகளிலும் உதவி செய்து வந்தார். 1971இல் ரோஹன விஜயவீரா தலைமையில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவர்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன் விளைவான நிலைமைகளினால் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு வந்தார். லண்டன் வந்தவர் சிலகாலம் சட்டத் தரணியாக வேலைசெய்தபின் Bexley Councilஇல் இணைந்து சிரேஷ்ட சட்ட ஆலோசகராக ஓய்வு பெற்றார். 

இங்கு வந்த காலம் முதல் இலங்கை சம்பந்தமான அரசியல், சமூக, மனித உரிமை அமைப்புக்களில் கடந்த 45 ஆண்டுகள் தனது பங்களிப்பை  வழங்கி வந்தார் 

Ceylon Solidarity Campaign

Campaign for the Release of Eelam Political Prisoners 

Eelam Solidarity Campaign 

SCOT Human Rights Council  

Campaign for Democracy & Justice in Sri Lanka 

Sri Lanka Democracy Forum 

என்கின்ற அரசியற்பிரச்சார, மனித உரிமை அமைப்புக்களின் காத்திரமான செயற்பாடுகளின் பின்னணியில் இவரின் பங்களிப்பு காத்திரமானது.

SCOT  என்கின்ற அமைப்பின் செயற்பாடுகளை தன்னை இணைத்துக் கொண்ட தோழர் ராஜநாயகம் அதனது செயலாளராகவும் தலைவராகவும் செயலாற்றியதுடன் அதன் கீழ் மனித உரிமை அமைப்பு ஒன்றை உருவாக்கி  (SCOT Human Rights Council) அதன் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார். அதன் மூலம் எம்மவர் யாரும் போகாத, நினைக்காத காலத்தில் ஜெனிவாவில் இடம்பெறும் UN  மனித உரிமைக் கழக மாநாடுகளில் பங்குபற்றினர். அங்கு இலங்கையின் மனித உரிமை அவலங்களை பாகுபாடின்றி எடுத்துரைத்தார். இது சம்பந்தமான இரண்டு நூல்கள் வெளிவந்தன.

  1. Law and Practice of Arbitrary Detention in Sri Lanka    
  2. Arbitrary Killings in Sri Lanka (Reports)  என்பன அவை.

தனது பாடசாலையான ஸ்கந்தவரோதய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஒன்றை தனது ஆசிரியர் என் எஸ் கந்தையா அவர்களுடன் இணைந்து உருவாக்கி அதன் செயலாளராக நீண்ட காலம் செயற்பட்டார். இந்த மண்ணின் பெருமைக்கு உரிய அமைப்பு TSSA எனப்படுகின்ற தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம். இன்று ஏறக்குறைய 100  இலங்கையின் தமிழ்ப் பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்களை உள்ளடக்கி இருக்கும் இதன் நிர்வாகத்தில் ஆரம்ப காலங்களில் செயற்பட்டார். TSSA UK வருகிற புதன்கிழமை (22.06.22) அன்று தனது  30வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது. அதன் யாப்பை (Constitution) எழுதி நீண்டகாலவெற்றிகரமான  செயற்பாட்டுக்கு வித்திட்டவர் தோழரே. இந்த மண்ணில் இடம்பெறுகின்ற முற்போக்கு கலை, இலக்கிய முயற்சிகளின் ஆதரவாளராக இருந்துவந்தார்.

தோழர் ராஜநாயகம் அவர்கள் இலங்கையின் வரலாறு நாயகர்களாக கருதப்படும் தோழர் என் எம் பெரேரா, தோழர் கொல்வின் ஆர் டி சில்வா, தோழர் பாலா தம்பு, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா, மஹிந்தா, தோழர் வாசுதேவ நாணயக்கரா போன்ற பலருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். ஆனால் அந்த நட்பு தனிப்பட்ட இலாபங்கள் எதற்கும் பயன்படுத்தாமல், அவர்களுடைய அரசியலை முழுமையாக ஏற்காமல் கவனமாகப் பேணிவந்தார்.

இத்தகைய பெறுமதிமிக்க மனிதன் ஒருவனின் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது எமக்குப் பெருமை. அதனோடு அவருடன் நீண்ட காலம் இணைந்து பயணித்து இருக்கிறோம் என்பதும் மிகப் பெருமையான விடயம்.

இந்த இனிமையான நினைவுகளுடன்  

சென்று வாருங்கள் தோழரே என்று தலைசாய்த்து 

செவ்வஞ்சலியை செலுத்துகிறோம்.

(முகநூலில் இருந்து நன்றியுடன் பகிர்கிறோம்)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates