ஐரோப்பாவின் இலக்கியச் சந்திப்பு மலையக இலக்கியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. மலையகத் தமிழர்களின் நிலை, தாயகம் திரும்பிய தமிழர்களின் நிலை பற்றி பெர்லின் இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல் முக்கியமானது.
நடேசையர் நூற்றாண்டு நிறைவையொட்டி பெர்லினில் அப்பெரியார் நினைவு கூரப்பட்டமை மலையகம் பற்றிய சிந்தனையை புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உதவிற்று.
மலையகத்தின் சிறுகதைச் சிற்பியான அமரர் என்.எஸ்.எம்.ராமையா அவர்களின் 'கோயில்' என்ற சிறுகதை இலக்கியச் சந்திப்பில் கலைச்செல்வனால் வாசிக்கப்பட்டு, அக்கதை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதையும் நினைவு படுத்துவது பொருந்தும்.
பாரிசில் நிகழ்ந்த என்.எஸ்.எம்.ராமையாவின் நினைவுப்பேருரையும், 'மலையகப் பரிசுக்கதைகள்' நூல் வெளியீடும் பாரிசில் இடம்பெற்ற முக்கிய மலையக இலக்கிய நிகழ்வுகளாகும். நெதர்லாந்திலும் 'மலையகப் பரிசுக்கதைகள்' வெளியீடு நிகழ்த்தப்பட்டு , மலையக எழுத்தாளர்கள் பரந்த அறிமுகம் பெறுவதற்கான வாய்ப்பை நல்கியது.
லண்டனில் மாத்தளை சோமுவின் நூல்களை புதினம் ராஜகோபால் வெளியிட்டு, அவரது பல நூல்களை லண்டனில் அறிமுகப்படுத்த உதவியிருந்தார். மலையக இலக்கியம் பற்றிய மாத்தளை சோமு அவர்களின் இலக்கிய உரையும் பொருள் பொதிந்ததாக இருந்தது.
லண்டனில் நடைபெற்ற 'மலையகப் பரிசுக்கதைகள்' நூல் வெளியீட்டில் பேராசிரியர்.சிவசேகரம், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், நடிகர் சிலோன் சின்னையா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
'மலையகத்தின் நூற்றாண்டுத்துயர்' என்ற தொனிப்பொருளில் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் தெளிவத்தை ஜோசப், விஜயசிங்கம், வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் பங்காற்றி சிறப்புச் சேர்த்தனர்.
லண்டனில் இர.சிவலிங்கம் அவர்களின் மறைவிற்கான அஞ்சலி நிகழ்வில் எஸ்.முத்தையா, எஸ்.வி.ராஜதுரை, எம்.நேமிநாதன், என்.சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை மலையக்கல்விமான் ஒருவருக்கு புகலிட தமிழர் சமூகம் அளித்த பெருங்கௌரவமாக அமைந்தது.
நோர்வேயில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு நிகழ்வில் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50 ஆண்டு நிறைவு நிறைவு குறித்த உரையாடல் ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் வி.நடராஜா தலைமையில் சிறப்புற நிகழ்ந்தது.
லண்டனில் நடைபெற்ற 'கூலித்தமிழ்' வெளியீட்டு நிகழ்வில் அம்ஷன்குமார், வழக்கறிஞர் செ.சிறிக்கந்தராசா, இரா.ராமலிங்கம், மாதவி சிவலீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
'மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரம்' என்ற நூலின் வெளியீட்டுவிழா ராம்ராஜ் அவர்களின் தலைமையில் லண்டனில் நடைபெற்றபோது, இலங்கையிலிருந்து எச்.எச்.விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலையகம் குறித்த இந்நிகழ்வுகளின் உச்ச கட்ட வளர்ச்சியின் வெளிப்பாடாக ஜூன் மாதம் 11 ஆம் திகதி விம்பம் அமைப்பு ஒழுங்கு செய்திருக்கும் முழுநாள் மலையக இலக்கிய மாநாடு திகழ்கிறது.
காத்தாயி, கோகிலம் சுப்பையா, இர.சிவலிங்கம், சோ.சந்திரசேகரம் சி.வி.வேலுப்பிள்ளை,தமிழோவியன்,சாரல்நாடன் ஆகியோரின் நினைவரங்குகளில் மலையகம் சார்ந்த 26 நூல்கள் அறிமுகம் பெறுகின்றன. நாவல், சிறுகதை, கவிதை, கூத்து, அரசியல், சமூகவியல், சட்டம் சார்ந்த பல்துறை நூல்கள் இந்த மாநாட்டில் ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
நோர்வே, டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து உரைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
ந.சரவணன், க.ஆதவன், கரவைதாசன், சுகன், டாக்டர்.தம்பிராஜா, யமுனா ராஜேந்திரன்,வழக்கறிஞர் செ.சிறிக்கந்தராசா, வி.சிவலிங்கம்,பால சுகுமார், ப.சந்தோஷ், எஸ்.தினேஷ்குமார், எம்.என்.எம்.அனஸ், எம்.பௌசர், ராகவன்,பெ.சிவஞானம் , மாதவி சிவலீலன், நவஜோதி யோகரட்னம்,தோழர் வேலு, கோகுலரூபன்,நா.சபேசன், மாஜிதா,அஞ்சனா, பாரதி சிவராஜா, வேணி சதீஸ், பூங்கோதை, மீனாள் நித்தியானந்தன் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து அணி சேர்க்கிறார்கள்.
சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' என்ற நூல் வெளியீடு இம்மாநாட்டின் பிரதான நிகழ்வாக அமைகிறது.
சாம் பிரதீபனின் 'மெய்வெளி' நாடக அரங்கின் தயாரிப்பில் 'காத்தாயி காதை' நாடகம் மாநாட்டின் முக்கிய கலை நிகழ்வாக மேடையேறுகிறது. றஜீதா பிரதீபன் நாடகத்தில் பிரதம பாத்திரமேற்றுச் சிறப்பிக்கிறார்.
இலங்கையிலிருந்து மலையக இலக்கிய செயற்பாட்டாளர் எச்.எச்.விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பிக்கவிருக்கிறார்.
ஓவியர் கே.கே.ராஜா விம்பத்தின் சார்பில் மாநாட்டு நிகழ்சிகளை ஒருங்கிணைத்து வழங்குகிறார்.
(நன்றி - லண்டனிலிருந்து கே.கிருஷ்ணராஜா)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...