Headlines News :
முகப்பு » , , , , , » சீதனச் சொத்து ஜனாதிபதி மாளிகையாக ஆன கதை! (கொழும்பின் கதை – 28 ) என்.சரவணன்

சீதனச் சொத்து ஜனாதிபதி மாளிகையாக ஆன கதை! (கொழும்பின் கதை – 28 ) என்.சரவணன்

கொழும்பின் பழமையான மரபுரிமை கட்டிடங்களில் ஒன்று இன்றைய ஜனாதிபதி மாளிகை.

ஒரு காலத்தில் அது இராணி மாளிகை (Queen’s House), அரச மாளிகை, கவர்னர் மாளிகை (Governor’s house) என்றும் அழைத்தார்கள். பின்னர் ஜனாதிபதி மாளிகை (President’s House) என்று இன்று அழைக்கப்படுகிறது. அது அமைந்திருக்கும் வீதியும் கூட அன்று இராணி வீதி என்று அழைக்கப்பட்டது. இப்போது ஜனாதிபதி மாவத்தை (Janadhipathi Mawatha) என்று அழைக்கப்படுகிறது. 

1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பு தோன்றும்வரை இலங்கையில் அரச மாளிகை மூன்று இருந்தது. கொழும்பிலும், கண்டியிலும், நுவரேலியாவிலும் அவை இருந்தன. 

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாவத்தையில் உள்ள கோர்டன் பூங்காவில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் வரலாறு டச்சு காலத்தில் இருந்து தொடங்குகிறது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகை. இந்த இடத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய போர்த்துக்கேய புனித பிரான்சிஸ் (St Francis's Church) தேவாலயம் ஒன்று இருந்திருக்கிறது. அதை இடித்துவிட்டுக் கட்டப்பட்ட மாளிகை இது. பின்னர் இது 1785 ஆம் ஆண்டு பெரிதாக கட்டப்பட்டது. 

17.செப்டம்பர்.1795 டச்சுக் காரர்கள் ஆங்கிலேயர்களிடம் இலங்கையை எழுதிக்கொடுத்த ஆவணம்.
நாட்டின் கடைசி டச்சு ஆளுநரான யொஹான் வான் அன்கெல்பீக்கின் (Johan Gerard van Angelbeek-15.07.1794 – 16.02.1796) தனிப்பட்ட இல்லமாக இருந்தது. அவரின் ஆட்சி காலத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (hoofdadministrateur) இருந்தவர் அவரின் புதல்வன் கிறிஸ்தியான் வான் அன்கெல்பீக் (Johan Christiaan van Angelbeek). இந்த கிறிஸ்தியான் தான் இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதும் 17.செப்டம்பர்.1795 அன்று அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் டச்சு தரப்பின் சார்பில் கையெழுத்திட்டவர். (இந்த ஆவணம் டச்சு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்தது.)

வான் அன்கெல்பீக் (Johan Gerard van Angelbeek)

இது பிரிட்டிஷ் கவர்னர்களின் உத்தியோகபூர்வ "அரச இல்லமாக" மாறியதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதை உள்ளது.

ஆளுநர் பிரெடரிக் நோர்த் மாளிகையைக் கைப்பற்ற செய்த சதி

பிரடெரிக் நோர்த் 1798 ஆம் ஆண்டு ஓக்டோபர் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு இலங்கையின் ஆளுநராகப் பதவியேற்றார். இலங்கையில் முதலாவது தேசாதிபதியாக அவர் பதவியேற்று ஆட்சி செலுத்த தலைப்பட்ட போது, அதற்கான நிர்வாக செலவுகளை வழங்குவதற்கு பிரிட்டிஷ் தயாராக இருக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் இருந்தார் நோர்த். கொழும்பைக் கைப்பற்றும் போரில் பிரிட்டிஷ் அரசாங்கம்  12,000 பவுண்டுகளை செலவிட்டிருந்தது. எனவே இனி வரும் செலவுகளை இலங்கையிள் இருந்து வரி வசூலிப்பதன் மூலமே நிறைவு செய்ய வேண்டும் வருமானத்துக்கான வாய்ப்புகளைக் கண்டு பிடிக்கவேண்டும் என்றும், மகாராணி இனி மேலதிக செலவுகளை செய்ய மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. காலனித்துவ செயலாளரின் இந்த அறிவிப்பால் திருமணமாகாத, வேடிக்கை மிகுந்த ஆளுநரான ஃபிரடெரிக் நோர்த், குழப்பம்டைந்திருந்தார்.  இலங்கையின் அருமைபெருமைகளை அறிந்திருந்த நோர்த் தனக்கு ஒரு சிலிங்கு கூட செலவில்லாமல் விநோதங்களைப் புரியலாம் என்கிற எதிர்பார்ப்பு நிறைந்திருக்கக் கூடும்.

பிரடெரிக் நோர்த்
ஆனால் காலனித்துவ செயலாளர் 'பவுண்ட்'களை அனுப்ப மறுத்ததால், பிரடெரிக் நோர்த் கடினமான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில், டச்சுக்காரர்களின் சொத்துக்களை ஆங்கிலேயர்கள் பறிமுதல் செய்ய முடியாது என்கிற ஒப்பந்தத்துடன் தான் அவர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்திருந்தனர்.  ஆளுநருக்குக் கூட வாழ தகுதியான வீடு இருக்கவில்லை. அவர் ஒரு அநாதையைப் போல பல்வேறு இடங்களில் வசித்து வந்தார், மேலும் யோர்க் வீதியில் ஒரு மர வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார் என பதிவுகளில் உள்ளன. இலங்கை வங்கி கட்டிடத்தின் தற்போதைய இடம் தான் அது. அந்தக் காலத்தில் கொழும்பு கோட்டையில் அதிக எண்ணிக்கையிலான அடம்பர டச்சு வீடுகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் அவ்வழியே செல்லும் போது பல்லைக் கடித்துக்கொண்டனர். 'பிரிட்டிஷ் சட்டம்' கவர்னர் மாளிகையைக் கூட கையகப்படுத்தத் தவறியதால் காலனித்துவச் செயலாளருடன் ஃபிரடெரிக் நோர்த் ஆத்திரம் கொண்டிருந்தார். டச்சு மாளிகைகளில் ஆளுநருக்கு ஒரு தனி விருப்பம் இருந்தது. 

பிரடெரிக் நோர்த் தனது நிர்வாகத்தை நடத்த 20 அரசு ஊழியர்களை நியமிக்க விரும்பினார். அப்போது இந்தியாவின் மெட்ராஸில் பணிபுரிந்த பல அரசு ஊழியர்களும் இதற்காக வரவழைக்கப்பட்டனர். ஜார்ஜ் மெல்விக் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியராகவும் இருந்தார். அவர் ஒரு அழகான இளைஞர். அவர் இங்கிலாந்தின் லெவன் பிரபுவின் ஒரே மகன். இவரது முழுப்பெயர் ஜார்ஜ் மெல்வின் லெஸ்லி. அவர் 1802 இல் இலங்கைக்கு வந்தார். அவருக்கு PAYMASTRR (Pay Master) பதவி வழங்கப்பட்டது. இராணுவத்தினருக்கு சம்பளம் கொடுக்கும் பதவி என ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், நிதியமைச்சர் பதவிக்கு நிகரான அரசாங்க களஞ்சிய முகாமையாளர் பதவி என இன்னொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் இலங்கையை கைப்பற்றிய பின்னர், பல டச்சுக்காரர்கள் தங்கள் சொந்த நாடான ஒல்லாந்துக்கே குடிபெயர்ந்துவிட்டனர். ஆனால் இலங்கையில் சொத்துக்களை சேகரித்து வைத்திருந்த பல டச்சுக்காரர்கள் இங்கேயே குடியிருந்துவிட்டனர். இங்கேயே சில சந்ததிகளாக வாழ்ந்து விட்டவர்களும் இங்கேயே தங்கிவிட்டனர். இப்படி ஒரு உயர் வர்க்க டச்சு குழாமினர் ஆங்கிலேயர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும், வந்தேறிகளாகவும் பார்த்தது உண்மையே. அவர்களுக்கு ஆங்கிலேயே அதிகாரிகளும் புதிய அதிகாரத்துவ வர்க்கமும் சவாலாக இருந்தன.

பிரம்மச்சாரியாக இருந்த ஆளுநர்; மனதை தேற்றிக் கொள்ளவும் ஆறுதல் தரவும் இருந்த ஒரே விஷயம், மாலையில் ஒரு மது அருந்தி கொண்டாடுவது தான். அப்போது கொழும்பில் சுமார் நூறு ஆங்கிலேய அதிகாரிகள் நிலை கொண்டிருந்தாலும் அவர்களில் இருபதுக்கும் குறைவான இளம் பெண்களே இருந்தனர். கவர்னர் பலே நடனங்கள் புரிந்த அழகு நங்கைகளை அரவணைக்க மிகவும் பேராசைப்பட்டார். அதனால்தான் கொழும்பில் உள்ள டச்சு மாளிகைகளில் வசிக்கும் அழகிகள் குறித்து விசாரித்த கவர்னர், பொம்மைகள் போல் அழகாக இருந்த பெண்களை தனது விருந்துகளுக்கு அழைத்தார். எப்பொழுதும் குடிப்பழக்கம் மற்றும் விருந்துகளுக்கு அடிமையான இந்த ஒல்லாந்து இளம் பெண்கள் இத்தகைய விருந்துகளுக்கு முன்பாகவே கலந்து கொள்வதைக் கண்டு ஆளுநர் நோர்த் மகிழ்ச்சியடைந்தார்.

இத்தகைய விருந்துகள் ஆங்கிலேய – டச்சு பகைமை உணர்வுகள் தளர்ந்து போவதற்கு வேகமாக வழிவகுக்கும் என்று அவர் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

ஜோர்ஜ் மெல்வில் லெஸ்லி ஆளுநரின் விருந்துகளில் தவறாது கலந்து கொள்ளும் பிரமுகராக இருந்தார். பிரிட்டிஷ் அரச குடும்பத்துடனான அவரது உறவே அதற்கான முக்கிய காரணியாக இருந்தது. விருந்துகளில்  ஃபிரடெரிக் நோர்த் போதையில் இருந்தபோது, அவர் லெஸ்லியை ஒரு நடனத்திற்கு அழைத்தார். அவர் நடனத்துக்காக தெரிவு செய்யப்போகும் அந்த மங்கையை அறியும் ஆவலில் அனைவரும் காத்திருந்தனர். லெஸ்லி ஒரு நாள் விருந்தொன்றில் கண்ட அழகான பெண் நினைவுக்கு வந்தாள். அவள் டச்சு அழகி லகோம்னா கெர்ட்ரூட். அப்பெண் முன்னாள் டச்சு ஆளுநர் வான் ஏஞ்சல்பெக்கின் பேத்தி ஆவார். ஆளுநர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது.

அவளது அழகில் மயங்கிய லெஸ்லி, அவளது சண்டையில் தோற்றுப்போன ஒரு நாட்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காலில் விழுந்து தனது பிரபுத்துவ செருக்கையும் தூர எறிந்துவிட்டு காதலுக்காக கதறி அழுதார். ஆனால் இறுதியில் அந்தத் திருமணத்திற்கு ஆளுநர் பிரடெரிக் நோர்த்தின் அனுமதி தேவைப்பட்டது. இது அரச குடும்பத்து சமாச்சாரம் என்பதால் ஆளுநர் நோர்த் இந்த விவகாரத்தில் ஆதரவளிக்க இயலவில்லை. ஆளுநரின் தவறு என்னவென்றால், லெஸ்லியின் காதலியும் கூட பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் போல உயர்ந்த டச்சு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை உணராது இருந்தது தான். இறுதியில் ஏர்ல் பிரபு பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பி அந்த விவாகத்துக்கு ராஜரீக அனுமதி பெறப்பட்டது.

லெஸ்லியின் அரச அங்கீகாரத்திற்குப் பிறகு கவர்னர் ஃபிரடெரிக் நோர்த்; ஒரு 'சுடு வாங்கிய பன்றி' போல் தோன்றினார். லெஸ்லி - லகோமினாவின் திருமணம் மணமகளின் தாத்தாவின் சகோதரர் கிறிஸ்டியன் வீட்டில் நடந்தது. கொள்ளுப்பிட்டியில் உள்ள கம்பீரமான மாளிகையானது அன்றைய இலங்கையில் வாழ்ந்த பிரித்தானிய உயர்குடியினராலும், டச்சுப் பிரபுக்களாலும் நிறைந்திருந்தது. இந்த திருமணத்தில் ஆளுநர் பிரடெரிக் நோர்த் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார். புதுமணத் தம்பதிகள் இந்த “அரச மாளிகை” (koningspaleis) மாளிகையை தற்போதைய ஜனாதிபதி மாளிகையை வரதட்சணையாகப் பெற்றனர்.  

திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதிகள் மாளிகைக்கு வசிக்கச் சென்றனர். அப்போது இந்த மாளிகையில் இருந்த பூங்கா தற்போதைய தலைமை தபால் நிலையம் வரை நீண்டிருந்தது என ஆவணங்கள் காட்டுகின்றன. பூங்காவில் சிறிய நீர்த் தொட்டிகளும் அவற்றுக்கு இடையிலான இருக்கைகள் பளிங்குகளால் செய்யப்பட்டவை. அவற்றில் பல நெதர்லாந்திலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டவை. லெஸ்லியும் லகோம்னாவும் திருமணமானவர்கள் என்றாலும், கவர்னர் ஃபிரடெரிக் நோர்த் இந்த மாளிகையைப் பார்க்கும்போதெல்லாம் அது எப்போது தனது அதிகாரப்பூர்வ இல்லமாக மாறும் என்று கனவு கண்டார். கொனிங் பூங்காவில் புதுமணத் தம்பதிகள் உல்லாசமாக இருந்த விதம் கவர்னருக்குப் பிடிக்கவில்லை. இலங்கையின் தலைமைக் குடிமகனாக இருந்தும் தனது அதிகாரத்துவத்தைக் காட்ட இது போன்ற மாளிகையொன்று இல்லையே என்கிற அதிருப்தியில் புதுமணத் தம்பதிகளின் காதல் விவகாரம் ஆளுநரின் உள்ளத்தில் வெறுப்பாக வெடித்தது.

இனிய மணவாழ்க்கையை அனுபவித்து வந்த இந்த ஜோடியால் நீண்ட நாட்கள் காதலை அனுபவிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பை ரிக்ஸ் சரியாக ஆவணப்படுத்தாததால் லெஸ்லி கவர்னரால் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆளுநரிடம் கொண்டு வரப்பட்ட லெஸ்லி, காவலில் வைப்பதற்கு முன் இந்தத் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த சதியின் பின்னால் ஆளுநர் நோர்த்தின் வகிபாகம் உண்டு என சதேகிக்கப்பட்டது. இறுதியில், ஜார்ஜ் மெல்வின் லெஸ்லிக்கு வேறு வழியின்றி அந்த மாளிகையை ஆளுநருக்கு ஊடாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பத்தைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

1864 ஐச் சேர்ந்த கொழும்பு கோட்டையின் வரைபடம் இது சிகப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பது இராணி மாளிகை

இறுதியில் பிரித்தானிய அரசால் அன்று மதிப்பிடப்பட்டிருந்த 35,000 பவுண்களுக்கு இந்த டச்சு அரண்மனையை 1804ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி 10,000 பவுண்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பற்றிய தகவல்களை ப்ரூக் எலியட் (Brooke Elliott) தனது நூலில் (Real Ceylon 1937)விபரங்களைத் தந்திருக்கிறார்.

அதிலிருந்து ஆரம்பத்தில் இது அரச மாளிகை (Kings House) என்றும் பின்னர் விக்டோரியா இராணியின் ஆட்சிக் காலம் தொடங்கிய போது (1837-1901) இராணி மாளிகை (Queen 's House) என்றும் அழைக்கப்படத் தொடங்கிற்று. 

ஜனவரி 7, 1804 இல், இந்த “கொனிங் ஹவுஸ்” அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த மாளிகையில் குடியேறினார் நோர்த். சட்டப்பூர்வமாக அதை ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்று அழைத்தார். இறுதியில், லெஸ்லி தனது மனைவியையும் இளம் மகளையும் அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்கே  புறப்பட்டுச் சென்று விட்டார்.


அவர் தனது உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமுன், ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள வுல்பெண்டால் தேவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சில தளபாடங்களை இன்றும் காணலாம். லெஸ்லி பின்னர் கடுமையான குடிப்பழக்கத்துக்கு ஆளாகி இளம் வயதிலேயே இறந்தார், ஆனால் அவரது மகள் 1892 வரை வாழ்ந்தார்.

இந்த தனியார் பங்களாவானது இலங்கையின் முதலாவது ஆங்கிலேய ஆளுனர் நோர்த் இதனை அரசின் உடமையாக ஆக்கிக்கொண்டாலும் இதனை ஆளுநரின் இல்லமாக “அரச மாளிகை”யாக ஆக்கிக்கொண்டவர் அவருக்குப் பின்னர் 1805 இல் ஆளுநராக வந்த தோமஸ் மெயிட்லன்ட். அவர் கவர்னருக்கான இன்னொரு மாளிகையையும் மெயிட்லன்ட் கட்டினார். அது தான் இன்றைய கல்கிஸ்ஸ ஹோட்டலாக ஆகியிருக்கிறது.

போர்த்துகேய, டச்சு காலத்தில் பெரு மதில்களுடன் இருந்த கோட்டை எல்லைக்குள் இருந்த மைய கட்டிடங்களில் ஒன்று இது.

ஜேம்ஸ் கார்டினர் தனது நூலில் (Description of Ceylon - 1807) ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் காலமான டச்சு ஆளுநர் வான் ஏஞ்சல்பீக்கின் அந்த இல்லத்தைப் பற்றிக் கூறுகிறார்:


"இது கொழும்பு கோட்டையின் மிகப்பெரியதும், சிறந்த வசிப்பிடமாகும். இப்போது தீவின் ஆளுநரான மேஜர் ஜெனரல் கௌரவ தோமஸ் மெயிட்லாண்ட் அவர்களின் வசமாக்கப்பட்டிருக்கிறது. இது பிரதான பாதையில் அமைந்திருக்கிறது, இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த இல்லத்தின் ஒரு பக்கத்தில் மேல் பால்கனியில் இருந்து கடல், சாலை, துறைமுகம் என்பவற்றை விசாலமாகப் பார்க்க முடியும். மறுபுறம், ஏரி, புறக்கோட்டை, கறுவாத் தோட்டங்கள் போன்றவற்றை காண முடியும்" என்கிறார்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்த மாளிகையில் பல உயர் அதிகாரிகளின் ஆடம்பர களியாட்டங்கள் நிகழ்த்தப்பட்ட இடமாக இருந்தது. 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கையைத் தொடர்ந்து ஆளுநர் சேர் ரொபர்ட் பிரவுன்ரிக் வெற்றியுடன் கொழும்புக்குத் திரும்பியபோது இங்கே பெரு விழாவாக களியாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புறக்கோட்டையில் பிரதான வாயிலான கைமன் வாயிலில் (Kayman’s Gate) ஆங்கிலேயர்களின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக வாயில்வளைவு அமைக்கப்பட்டு, கவர்னர் அங்கிருந்து தனது துருப்புக்களைக் கடந்து சென்றார். மெயின் வீதியிலிருந்து அரச மாளிகைக்கு செல்லும் பாதை நெடுகிலும், கோட்டையில் பீரங்கிகளும் துறைமுகத்தில் தரித்து நின்ற போர்க்கப்பல்களில் இருந்த பீரங்கிகளும் முழங்கி அவருக்கு வணக்கம் செலுத்தின.ஆளுநர் அரச மாளிகையில் இறங்கியதும், குடியிருப்பாளர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். பாணும் சூப்பும் வழங்கி அன்றைய இரவு உணவு பகிரப்பட்டு கொண்டாடப்பட்டன.

ஆளுநர் ரொபட் ஹோர்ட்டனின் காலத்தில் (1831-1837) 700 பவுண்டுகள் செலவில்  பழுதுபார்க்கப்பட்டது. அதன் பின்னர் 1852ல் ஆளுநர் ஜார்ஜ் ஆண்டர்சனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அந்த மாற்றங்கள் தான் நீண்ட அகாலம் நிலைத்திருக்கிற இந்த கட்டிட அமைப்பு.

ஃபிட்ச் டெய்லர்  (Fitch Waterman Taylor) தனது பயணக்குறிப்பில் கவர்னர் மாளிகையை விசாலமான மாளிகை என்று அழைத்தார்:

“நான் வராந்தாவில் உலாவினேன்.., வெகுநேரம் நான் மேல் அறைகளைக் கடந்து சென்றேன். வராந்தாவின் தரைவரை வெகுதூரத்தில், ஜன்னல்கள் வழியாக, கடற்பரப்புடன் வீசும் ஒவ்வொரு காற்றின் சுவாசத்தையும் மகிழ்ச்சியுடன் பெறுவதற்குத் தயாராக இருந்தேன். ஆழமாக உருளும் கடலலை சத்தமும், அழகான, உன்னதமான, நித்திய கடல், அமைதியாகவும், கொந்தளித்தும் காற்றைப் பரப்பியும் கொண்டிருந்தது.”
1875 ஆம் ஆண்டைச் சேர்ந்த படம் இது. இராணி மாளிகை

அவர் மேலும் கூறுகிறார்: "நான் மேல் வராந்தாவுக்கு படிக்கட்டுகளின் வழியாக ஏறியபோது, ஆளுநர் என்னை அணுகினார்; எங்களுக்கு முன்னால் இருந்த காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நாங்கள் கைப்பிடியின் மீது சாய்ந்தபோது, கவிதையாக வெளிப்படுத்த முனைவதை அவர் கண்டுகொண்டார். சிறிது நேரம், நாங்கள் இந்த இனிமையான பால்கனியில் உலாவினோம், கடற்கரைக்கும் பூங்காவுக்கும் இடையில் உள்ள மைதானங்களைப் பார்த்தோம், முன்னோக்கில் வெள்ளை கலங்கரை விளக்கம் இருந்தது. பிரகாசமான சந்திரன், தெளிவான மற்றும் ஆழமான நீல வானத்தின் வழியாக தனது அழகான பாதையில், இரவு முழுவதும் நகர்ந்து கொண்டிருந்தது, அந்த மென்மையான பிரகாசத்தில், அங்கும் இங்கும் மட்டுமே கவர்ச்சியான மேகங்களின் தோற்றம் புதிய அழகைச் சேர்த்தது ". என கவித்துவமாக விளக்குகிறார்.

விக்டோரியா மகாராணியின் இரண்டாவது புதல்வனான இளவரசர் அல்பிரட் இலங்கை வந்தது 1870 இல். இலங்கைக்கு முதற்தடவையாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் விஜயம் அது தான். அவருக்கு வரவேற்பு உற்சவம் இங்கே தான் நிகழ்ந்தது. இங்கே தான் தங்கியுமிருந்தார். அது ஆளுநர் ரொபின்சன் காலத்தில் (Sir Hercules Robinson 1865-72).

அதன் பின்னர் 1875 ஆம் ஆண்டு இளவரசர் எட்வர்ட் (பின்னாளில் 7வது எட்வர்ட் அரசர்) விஜயம் செய்தபோது வில்லியம் கிரகெரி (William Gregory 1872-77) ஆளுநராக இருந்தார்.

டச்சுக்காரர்கள் விட்டுச் சென்ற பல கட்டடங்களை ஆங்கிலேய உயர் அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திக் கொண்ட போதும் மிகவும் உயரிய தரத்தில் கொழும்பில் இருந்த அரண்மனை இதுவாகத் தான் இருந்ததால் பிரிட்டிஷ் ஆளுநர்களின் இல்லமாக இது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. அதாவது இலங்கையின் முதற் பிரஜையின் இல்லமாக இது தொடர்ந்தது. இலங்கையை ஆண்ட 29 ஆளுநர்கள் இதில் வசித்திருக்கிறார்கள்.

இந்த ஆளுநர்கள் இந்த மாளிகையின் பெருமைகளைப் பற்றி பல குறிப்புகளை எழுதியுள்ளனர். ஆளுநர் கிரகெரி எழுதும் போது,

“பெரிய மற்றும் காற்றோட்டமான படுக்கையறைகள், ஒவ்வொன்றிலும் பிரமாண்டமான சொந்த குளியல் அறைகள், நீந்துவதற்கு போதுமான அளவு தொட்டி; எழுபத்தைந்து அடி நீளமுள்ள வரவேற்பறை, கடலையும் பூங்காவையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதில் மரங்கள் அனைத்தும் பூக்களால் நிரம்பியிருந்தன, அவற்றில் சில மிகவும் அழகாக இருந்தன, நான் இதுவரை பார்த்திராதவை. இந்த மாளிகை அரசு செலவில் விளக்கேற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடிகளும் மண்பாண்டங்களும் அரசால் வழங்கப்பட்டன. எனது பயன்பாட்டுக்காக ஐந்து சதவீத செலவை செலுத்த வேண்டியிருந்தது. எனக்கான தனிப்பட்ட ஊழியர்களுக்கான சம்பளத்தை நானே வழங்கினேன். தோட்டத்தைப் பராமரிக்கவும் சேர்த்து 12 ஊழியர்கள் சீருடையில் பணியாற்றினார்கள்.” 

1948 சுதந்திரத்துக்குப் பின்னரும் இலங்கையின் ஆளுநர் மாளிகையாகத் தான் அது தொடர்ந்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது ஆளுநர் நாயகம் ஹென்றி மூரின் பதவிப் பிரமாணம் 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி இங்குதான் இடம்பெற்றது. 1954 ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியின் ராஜரீக வருகையின் போதுஅவரின் கணவரோடு இங்கே தங்கியிருந்தார்.


1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டது. டொமினியன் அந்தஸ்திலிருந்து இலங்கை மீண்டதன் மூலம் பிரித்தானிய முடியிடம் இருந்து நிரந்தரமாக விடுதலையானது. அந்த யாப்பின் மூலம் ஆளுநர் ஆளுநர் நிலை கிட்டத்தட்ட ஜனாதிபதி பதவியாக மாறியது. அன்றிலிருந்து இராணி மாளிகை ஜனாதிபதி மாளிகையாக மாறியது. ஒலிவர் குணதிலக்க 1962 மார்ச் 2 ஆம் திகதி வரை இங்கு வசித்தார். அப்போதைய இராணுவ அரச கவிழ்ப்புச் சதியில் சந்தேகிக்கப்பட்ட அவர் நாட்டை விட்டு ஓடிவிட்ட நிலையில் அந்த இடத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட வில்லியம் கொபல்லாவ இரண்டு தடவைகள் ஆளநராக பதவி வகித்த போது இங்கே தான் வசித்தார். 1972 ஆம் ஆண்டு அவர் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக தெரிவாகிய போது இது ஜனாதிபதி மாளிகையாக அழைக்கப்பட்டது. ஜே.ஆர், பிரேமதாச, கோத்தபாய போன்ற ஜனாதிபதிகள் தமக்கான இல்லமாக தமது சொந்த இல்லங்களை பெரும்பாலும் பயன்படுத்திய போதும் உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கான அரண்மனையாக இதைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இங்கே அவர் வசிக்கவில்லை.

இந்த மாளிகையை பழுது பார்க்கும் தேவை 80 களில் உணரப்பட்டது. அடுத்த பத்தாண்டுகள் அதன் பழுதுபார்ப்புக்காக செலவிடப்பட்டது. அதனை இலங்கையில் மிகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞரான கொப்ரி பாவா (Geoffrey Bawa) அந்தப் பணியை அற்புதமாக செய்து முடித்தார். இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி ஜே.ஆர் .ஜெயவர்த்தன அவரின் சொந்த இல்லமான ப்றேமரில் (Braemar). ஆனாலும் இந்த இடைக்காலத்தில் முக்கிய அரச சந்திப்புகளுக்கு இந்த மாளிகையைப் பயன்படுத்தினார். 1987 ஆம் ஆண்டு ராஜீவ் ஜே.ஆர் உடன்படிக்கைக்கான சந்திப்புகள் இங்கே தான் நிகழ்ந்தன. இந்த மாளிகைக்கு வெளியில் தான் ராஜீவ் காந்தி இராணுவ மரியாதை ஏற்பு நிகழ்வில் கடற்படை சிப்பாயால் தாக்கப்பட்டார்.

1993 இல் ஜனாதிபதி பிரேமதாச தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதும் அவருக்குப் பதிலாக டீ.பி விஜேதுங்க ஜனாதிபதியாகி இந்த மாளிகையில் அவரின் ஓராண்டு கால ஆட்சியின் போது வசித்தார். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிகா குமாரணதுங்க ஆட்சியமைத்த வேளை அவர் ஜனாதிபதியின் வாசஸ்தலமாக அலரி மாளிகையைப் பயன்படுத்தினார். பிரதமராக சிறிமா பண்டாரநாயக்க அவருடன் அங்கேயே வசித்து வந்தார். ஆனால் 1999 ஆம் ஆண்டு அவரின் பதவிக் காலம் நிறைவுறும் வரை அங்கேயே தங்கிய போதும். மீண்டும் அவர் தெரிவு செய்யப்பட்ட போது ஜனாதிபதி மாளிகையில் வசிக்கத் தொடங்கினார்.

இந்த மாளிகையைச் சூழ அழகான பூங்காவை அமைத்தவர் 1883 –1890 காலப்பகுதியில் இலங்கையின் ஆளுநராக ஆட்சி செய்த ஹெமில்டன் கோர்டன் (Sir Arthur Hamilton Gordon). 1887 ஆம் ஆண்டு விக்டோரியா இராணியின் பொன் விழா கொண்டாட்டம் நிகழ்ந்த போது, மாளிகையோடு அண்டிய நான்கு ஏக்கர் நிலத்தில் தனது சொந்தச் செலவில் அந்தப் பூங்காவை அவர் அமைத்தார். அன்றிலிருந்து அந்தப் பூங்கா கோர்டன் கார்டன் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதை ஒரு இரகசியப் பூங்கா என்றும் சிலர் அழைப்பதைக் கண்டிருக்கிறோம். பல்வேறு அரிதான மரங்களும், தாவரங்களும் அங்கே உள்ளன. 1970கள் வரை அந்தப் பூங்காவை பொதுமக்களும் அனுபவித்தார்கள். அதன் பின்னர் அது இந்த மாளிகையோடு இணைக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது.

1920 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்டு இங்கே வைக்கப்பட்டிருந்த விக்டோரியா மகாராணியின் வெண்கலச் சிலை 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அகற்றப்பட்டு கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டது. மேலும் 1505 ஆம் ஆண்டு போர்த்துகேயர் இலங்கைக் கைப்பற்றிய போது கொழும்பு துறைமுகத்தின் அருகில் 20 தொன் எடையுள்ள ஒரு கல்லில் தமது சின்னத்தை அடையாளமாகப் பொறித்தார்கள். 1875 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் துறைமுகத்தை மீள்நிர்மாணம் செய்தவேளை இந்தக் கல் அவர்களுக்கு கிடைத்தது. அதனை அவர்கள் கொண்டு வந்து இந்த இராணி மாளிகையின் பூங்காவில் வைத்தார்கள். ஆனால் அதற்கு என்ன ஆனதென இன்றும் தேடுகிறார்கள்.

இலங்கையின் நில அளவையைக் குறிக்கும் போது. இந்த இராணி மாளிகையில் இருந்து தான் சகல பிரதேசங்களின் தூரங்களும் அளவிடப்பட்டு வருகின்றன. 1830 இல் கொழும்பு - கண்டி வீதி அமைக்கப்பட்டதிலிருந்து இந்த வழிமுறை பின்பற்றத் தொடங்கியது.

இந்த மாளிகையை எவரும் இலகுவில் செல்ல முடியாத ஒன்றாகவே ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. ஆளுநர்களும், காலனித்துவ அதிகாரிகளும், மாளிகைப் பணியாளர்களும் மட்டுமே அங்கு சென்று வரும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். 


1996 ஆம் ஆண்டு இந்த மாளிகையின் அருகில் இருக்கும் இலங்கையின் மத்திய வங்கியின் மீது நிகழ்ந்த பாரிய குண்டு வெடிப்பின் பின்னர் ஜனாதிபதி மாவத்தை (வீதி) மூடப்பட்டது. பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு “நல்லாட்சி அரசாங்கத்தின்” போது தான் திறக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இது ஒரு வார காலத்துக்கு போது மக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டது. பல பாடசாலை மாணவர்களும் போது மக்களும் நீண்ட வரிசையில் இந்த மாளிகையைப் பார்த்து வியந்து சென்றனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்த மாளிகையின் அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. சுமார் மூன்று பில்லியன் ரூபாய்கள் அதற்காக செலவிடப்பட்டன. யுத்த பீதியின் காரணமாக நிலக்கீழ் இரகசிய அறைகளும் கட்டப்பட்டன. அவரின் குடும்பத்தினரின் ஆடம்பர மாளிகையாகவும் மாற்றப்பட்ட செய்திகள் அப்போது வெளிவந்தன. மாதாந்த மின்சார பாவனைக்கான கட்டணம் மாத்திரம் மூன்று மில்லியன்கள் செலுத்தப்பட்டன.

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் 2013 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போது ராஜபக்ஸ குடும்பத்தினரை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த வேளை

டச்சு, பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் கலவையான அம்சங்களை ஒருங்கிணைத்து, இந்த இரண்டு மாடிக் கட்டிடம் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. கட்டிடத்தின் உட்புறம் பல உறுதியான மர வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நேர்த்தியான தளபாடங்கள் மற்றும் தளபாடங்கள் கட்டிடத்தின் பிரமாண்டத்தை அலங்கரித்து நிற்கிறது. இந்த மாளிகையின் தளபாட அமைப்புகளைப் பற்றி ரொபின் டி ஜோன்ஸ் (Robin D.Jones) எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் விரிவான விபரங்களை உள்ளடக்கியது.


கொழும்பு கண்டி வீதியை அமைப்பதற்கு வழி வகுத்த ஆளுநர் சேர் எட்வர்ட் பார்ன்ஸின் வெண்கலச் சிலை அரண்மனையின் முன் வாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகையில் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி பிற்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த அரச விருந்தினர்களும் பல பிரமுகர்களும் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த மாளிகையின் நுழைவாயிலில் ஒரு பாரிய இரும்பு வாசல் உண்டு. அங்கிருக்கும் சாவடியில் காவலாளிகள் ஆயுதமேந்தி பாதுகாக்கின்றனர். லண்டனில் உள்ள மகாராணியின் அரண்மனைக் காவலாளிகளைப் போல இவர்கள் விசேடமான சீருடை அணிந்து உரிய நேரத்துக்கு அணிவகுத்து வந்து கடமையில் மாறுவதை பலர் வந்து பார்வையிடுவார்கள்.

நன்றி - தினகரன் - 20.05.2022

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates