1948 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டாலும். 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி தான் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒரு சடங்காக நிகழ்த்தப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில், (Torrington Square, டொரிங்டன் சதுக்கத்தில்) க்ளூசெஸ்டர் பிரபுவும், ஆறாம் ஜார்ஜ் மன்னரின் சகோதரருமான இளவரசர் ஹென்றி (Prince Henry, Duke of Gloucester) சம்பிரதாயபூர்வமாக பாராளுமன்றத்தை முறைப்படி இந்த சுதந்திர சதுக்கத்தில் வைத்துத் தான் விழாக்கோலமாக கூட்டி பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்து இலங்கை முதல் அமர்வை ஆரம்பித்து வைத்தார்.
டொரிங்டன் சதுக்கத்தில் அப்போது விமானங்களை உள்ளே வைத்து பாதுகாக்கும் பெரிய விமானக் கூடாரங்கள் (Hanger) இரண்டு இருந்தன. அது கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடமாக இருக்கவில்லை. இரண்டாம் உலக யுத்த காலத்தில் விமானப்படை இதனை பயன்படுத்தியிருந்தது. சுதந்திர சதுக்கத்தின் முன்னால் இன்றும் இருக்கின்ற “சுதந்திர அவேனியு” (Independence Avenue) ஒரு விமான ஓடுப்பாதையாக அன்று இருந்தது.
சேதமடைந்திருந்த அந்த விமான கூடாரத்தைத் தான் பெரிய மண்டபமாக ஆக்கினார் பிரேமரத்ன. இரும்புப் பாலங்களால் ஆன கூரையை இருபதினாயிரம் யார் வெள்ளைத் துணியால் போர்த்தியும் வர்ண நிறங்களில் சோடனைகளை செய்து, சிங்களவர்களின் சிங்கக் கொடி, தமிழர்களின் நந்திக் கொடி, முஸ்லிம்களின் அலங்கார ஓவியங்களையும் (motifs) அதற்குப் பயன்படுத்தினார். மிகப் பிரமாண்டமான அந்த கட்டிடத்தில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வை பிரேமரத்ன வரைந்தார். அந்த ஓவியம் தான் நமக்கு முக்கிய சான்றாக இன்றும் எஞ்சியிருக்கிறது.
பிற்காலத்தில் பிரேமரத்னவின் மகனும் பிரபல வழக்கறிஞரும் எழுத்தாளருமான சந்திரசிறி செனவிரத்ன தனது தந்தை பற்றிய எழுதிய “பாத்திரமான பாத்திரம்” நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“பொதுப்பணித்துறை இயக்குநராக அவர் எதிர்கொண்ட சவாலான கடமைகள் குறித்து அப்பா என்னிடம் நிறைய பகிர்ந்திருக்கிறார். அந்த பொறுப்பை அவர் கையாண்ட விதம் குறித்து சேர் ஜோன் கொத்தலாவல மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அப்போது சேர் ஜோனின் அமைச்சரவையில் தான் அப்பா பணியாற்றியிருந்தார்.. அப்பாவின் அத்தகைய பங்களிப்பு அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று நினைக்கிறேன்.
மூன்று மாதங்களே அவருக்கு இருந்தன. அதுமட்டுமன்றி காலனித்துவ செயலாளரின் வாசஸ்தலத்தை பிரதமர் வாசஸ்தலமாகவும், பழைய தபால் நிலையக் கட்டிடத்தொகுதியை செனற்சபை கட்டிடமாகவும் மாற்றும் பொறுப்பும் அப்பாவிடம் தான் வழங்கப்பட்டிருந்தது.
டொரிங்டனில் இருந்த விமானக் கூடாரத்தை கண்டி ராஜ்ஜிய கலைநுட்பத்துடன் சுதந்திர விழா மண்டபமாக மாற்றினார். அப்பாவின் அந்த திட்டத்தை நிறைவேற்ற இலங்கையின் க்கிதேர்ந்த கலைஞர்கள் பலர் திரண்டு வந்து ஒத்துழைத்தார்கள்.
அந்த இரும்புத் தூண்களின் கூடாக இருந்த hanger ஐ ஒரு பெரிய மண்டபமாக மாற்றினார் அப்பா.”
என்கிறார்.
"அந்த மண்டபம் எப்படி இருந்தது என்பதை நினைவாக ஆக்குவதற்கு வர்ணப் படங்கள் அப்போது இல்லை. புகைப்படங்கள் கருப்பு வெள்ளையில் தான் இருந்தன. எனவே அந்த நிகழ்வு பற்றி வெளிவந்த புகைப்படங்கள் அத்தனையும் கருப்பு வெள்ளையில் தான் இருந்தன. எனவே அப்பா கருப்பு வெள்ளைப் புகைப்படமொன்றை பிரதி செய்து மீண்டும் வர்ணங்களால் வரைந்தார். அந்த ஓவியத்தை ஜே.ஆர்.ஜெயவர்தன அப்பாவிடம் பணம் கொடுத்து வாங்கி ஜனாதிபதி மாளிகையில் காட்சிக்கு வைத்தார்."
முதலாவது சுதந்திர தினப் பிரகடன நிகழ்வு
சுதந்திர தினப் பிரகடன நிகழ்வின் போது இங்கே முதலில் இளவரசர் ஹென்றி அமர்ந்ததன் பின்னர் இலங்கைக்கான ஆங்கிலேய ஆளுநரின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து, பிரதமரும் உரையாற்றினார்கள். விழாவானது புதிதாக கட்டப்பட்ட இந்த சதுக்கத்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 5000 பேர் சுதந்திர மண்டபத்திலேயே அமர்ந்திருந்தனர். இதன் போது அரசரின் பிரதிநிதியாக கலந்துகொண்ட இளவரசரால் அங்கிருந்த உயர்ந்த கொடிமரத்தில் இங்கிலாந்தின் யூனியன் ஜேக் கொடி இறக்கப்பட்டு சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. இலங்கைக்கான புதிய ஆளுநரும் அங்கே பதவிப் பிரமாணம் செய்தார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியான சேனநாயக்க இலங்கை சுதந்திரம் பெற்றதன் நினைவாக இங்கே ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பியாக வேண்டும் என்று தீர்மானித்து அப்பொறுப்பை போக்குவரத்து அமைச்சராக இருந்த ஜோன் கொத்தலாவலவிடம் ஒப்படைத்தார். ஆனால் அந்தக் காணி குதிரைப்பந்தய கழகத்துக்கு சொந்தமாக இருந்தது. அதில் ஒரு பகுதியைத் தான் விமானப்படையும் தற்காலிகமாக பயன்படுத்திவந்தது. இறுதியில் ஐந்து லட்சம் ரூபாவை செலுத்தி அக்காணியை அரசாங்கம் வாங்கியது.
இதனை அலங்காரபூர்வமாகவும், பண்பாட்டு கலையம்சம் கொண்டதாகவும் அமைக்கவேண்டும் என்று எட்டு பேர் கொண்ட கட்டுமானக் கலைஞர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டது. டீ. என். வினே ஜோன்ஸ் அந்தக் குழுவின் தலைவராக இயங்கினார். எஃப். எச். பிலிமோரியா, ஷர்லி த அல்விஸ், ஒலிவர் வீரசிங்க, எச். ஜே. பிலிமோரியா, ஜே.சமரசேகர, எம். பி.மோரேனா ஆகியோர் அந்தக் குழுவில் செயற்ப்பட்டனர். அவர்கள் உத்தேச மாதிரி வரைபடத் திட்டங்களைக் கையளித்தனர். டீ.எஸ்.சேனநாயக்கவைக் கவர்ந்த அமைப்பு தான் கண்டி “மகுல் மடுவ”வை ஒத்த கலைத்துவமான அமைப்பு.
கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் சிம்மாசனம் அமைக்கப்பட்டிருக்கும் “மகுல் மண்டபய” என்கிற மண்டபத்தின் வடிவத்தை நினைவுபடுத்தும் கட்டிட அமைப்பு இது. ஆங்கிலேயர்கள் 1815இல் இலங்கையை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் கண்டி ஒப்பந்தத்தை “மகுல் மண்டபய” வில் தான் செய்தார்கள்.
1949 ஆண்டு முதலாவது சுதந்திர தின நிகழ்வை இங்கு கொண்டாடிய போது தான் பிற்பகல் 4.30க்கு இந்த மண்டபத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆரம்பத்தில் இது “டொரிங்டன் சதுக்கம்” என்கிற பெயர் கொண்டு தான் அழைக்கப்பட்டது. இதைப் பற்றி பதிவு செய்த பத்திரிகைகள் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளன. அழைப்பிதழிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மாலை 4 மணிக்கு பிரதமர் வந்தடைந்ததும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது... நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிங்களத்திலும், அரபி மொழியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் தேசத்தின் செய்தியை வாசித்தார்கள். அதன் பின்னர் சுதந்திர சதுக்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 133 வருட காலனித்துவத்தை நினைவுபடுத்தும் வகையில் 133 புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் உரையைத் தொடர்ந்து அணிவகுப்புகள் நிகழ்ந்தன. பிற்பகல் 5.15க்கு சிங்களத்தில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்யப்பட்டது.”
ஆனால் அந்த கட்டிடத்தை பிரதமர் சேனநாயக்க காண முதல் திடீர் என இறந்தார். ஆனால் அதன் பின்னர் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அந்தப் பணியை பூர்த்தி செய்தார். 1956 ஆம் ஆண்டு புத்தரின் 2500 புத்தஜயந்தி விழா கோலாகலமாக அரசாங்கத்தில் கொண்டாடப்பட்டது. வெசாக் தினத்தன்று பண்டாரநாயக்கவின் பிரதான அந்த முக்கிய உரை இங்கு தான் நிகழ்த்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் கிழக்கை கைப்பற்றி அரச கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்துவிட்டதை பெரிய விழாவாக மகிந்த கொண்டாடியதும் இங்கே தான்.
“மகுல்மடுவ”வை விட பிரமாண்டமாக கருங்கற்களாலும் கொங்கிரீட்டாலும் பலமாக கட்டப்பட்டது. சுதந்திர மண்டபத்தின் தரைத் தளத்தின் பரப்பளவு மாத்திரம் 10,000 சதுர அடிகளைக் கொண்டது. அதுவும் சுவர்கள் இல்லாமல் சுற்றிவர திறந்த வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல பாரம்பரிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 30அடி உயரத்தைக் கொண்ட பல கருங்கற் தூண்கள் உள்ளே உள்ளன. வெளியில் சிங்கச் சிலைகளும் உள்ளன. அது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பஹுவ ஆட்சிக்காலத்து கலை நுட்பத்தைக் கொண்டவை. மிக உயரமான கொடிக்கம்பமும் அருகில் “தேசபிதா” டீ.எஸ்.சேனநாயக்கவின் பெரிய சிலையும் உள்ளதைக் காணலாம்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டேவில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்படும் வரை இது தான் செனட் சபை, அரசாங்க சபை என்பவற்றின் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளை நடத்தும் மண்டபமாக திகழ்ந்தது.
ஆண்டுதோறும் இலங்கையின் சுதந்திர தின வைபவங்கள் பிரதானமாக மூன்று இடங்களில் கொண்டாடப்படும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பழைய பாராளுமன்றத்தின் அருகில் உள்ள காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம், கண்டி தலதா மாளிகை பட்டிருப்பு. அதிக தடவைகள் சுதந்திர சதுக்கத்தில் நிகழ்ந்ததாகக் கொள்ளலாம்.
கலாசார திணைக்களம் தரும் இணையத்தள தகவலின் படி. பிரதான சுதந்திர மாளிகையானது பிரதமர் அமைச்சர்கள், மேற்சபை, கீழ்சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் என 224 பேர் உள்ளே இருக்கக் கூடிய வகையிலும் திறந்த வெளியில் சுமார் 25,000 பேர் அமர்ந்திருந்து பார்க்கக் கூடியவகையிலும், சூழ ஒரு லட்சம் பேர் கூடியிருக்கக் கூடிய வகையிலும் இந்த சுதந்திர சதுக்கம் நிர்மாணிக்கப்பட்டது என்கிறது. உள்ளே மேற் சுவரில் இலங்கையின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்தும் சித்திரங்கள் வரிசையாக இருப்பதை இன்றும் காணலாம். விஜயனின் வருகையிலிருந்து சுதந்திரம் வரையிலான ஓவியங்கள் அவை.
20 ஏப்ரல் 1983 ஆம் ஆண்டு ஜே.அரசாங்க அமைச்சரவை எடுத்த முடிவின் பிரகாரம் இது கலாசார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பில் அது இருக்கிறது. உல்லாசப் பிரயாணிகளை கவரும் கொழும்பின் முக்கிய தேசியச் சின்னங்களில் ஒன்றாக இதனைக் கூற முடியும்.
பின்னேரங்களில் இளைப்பாறிச் செல்லவும், அமைதியாக தியானம், உடல் அப்பியாசம் செய்வதற்கும் நாளாந்தம் பின்னேரங்களில் பலர் கூடிச் செல்வதைக் காணலாம். இலங்கையின் செல்வந்த பிரதேசமாகவும் பல முக்கிய சின்னங்கள், அடையாளங்கள், காரியாலயங்கள் அமைந்திருக்கிற கறுவாத் தோட்ட பகுதியில் (கொழும்பு 7இல்) அமைந்திருப்பது அதன் இன்னொரு சிறப்பு எனலாம்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் இங்கே எடுத்துக் கொண்டார். ரணசிங்க பிரேமதாச, காமினி திசாநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமர், டபிள்யு.டீ.அமரதேவ, விஜயகுமாரதுங்க, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், கங்கொடவில சோம ஹிமி போன்றோரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் கீழ் மண்டப உள் அறை ஒரு நூதனசாலையாக இயங்கிவருகிறது. வார நாட்களில் வேலை நேரத்தில் அதனை பார்வையிட முடியும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...