இன்று கொழும்பின் பதினைந்து வலயங்களில் 13 வது வலயமாக கொட்டாஞ்சேனையும், கொச்சிக்கடையும் சேர்த்து அழைக்கப்படுகிறது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என பல்லின மக்கள் கலந்து வாழும் இந்தப் பகுதியில்; பரதவர், மலையாளிகள், கொழும்பு செட்டி போன்ற சமூகங்களும் குறிப்பிடத்தக்க செல்வாக்கையுடைய சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பில் தமிழர் செறிவாக வாழும் வாழிடங்களில் கொட்டாஞ்சேனை முக்கியமானது. தமிழ் தியேட்டர்கள், கோவில்கள், தமிழ் பாடசாலைகள், தமிழில் பெயரிடப்பட்ட கடைகள் போன்றவற்றை சான்றுகளாகக் கூறலாம்.
1856 The Ceylon Almanac and Annual Register for the Year of our lord, ஆண்டறிக்கையில் 49 வது பக்கத்தில் கொழும்பு நகரத்தில் இருந்த இடங்களின் விபரங்களையும், அங்கே இருந்த வீடுகளின் எண்ணிக்கையையும் பட்டியலிட்டிருக்கிறது. அதன் பிரகாரம் கொட்டாஞ்சேனையில் அன்று 253 வீடுகள் இருந்ததாக தெரிவிக்கிறது. அதேவேளை அன்றும் அதன் பெயர் கொட்டஹேன அல்ல. அதில் Cotanchina என்று தான் இருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். கொட்டாஞ்சேனையில் கொட்டாஞ்சினா மில்ஸ் (Cottanchina Mills) என்கிற பெயரில் ஒரு ஆலையும் john F.Baker, T.W.Hall ஆகியோரால் நடத்தப்பட்டிருப்பதை 1887 இல் வெளியான சிலோன் டிரெக்டரி குறிப்பிடுகிறது.
கொட்டாஞ்சேனையை இப்போது Kotahena என்று அழைத்தாலும் சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் கொட்டாஞ்சினா “Cottanchina” என்றே அரச பதிவுகளிலும் காணப்படுகின்றன. 1866 இல் வெளியான The Ceylon Directory ; Calender என்கிற நூலில் கொழும்பில் உள்ள பிரதேசங்களின் எல்லைகளைப் பற்றிய விபரங்களைக் காண முடிந்தது. அதில்
“கொட்டாஞ்சினாவின் மேற்கில் கடல் எல்லையில் உள்ளது; வடக்கில், கடல், களனி கங்கை, நதி; கிழக்கு மற்றும் தென்கிழக்கு, களனி ஆற்றின் மூலம், ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியாக, வேந்தர்மெய்டன் போல்டரில் (Vandermeyden's Polder) உள்ள கால்வாயிலிருந்து புனித ஜோசப் தெருவுக்குச் செல்லும் வீதி வழியாக; தெற்கில், பார்பர் வீதி, ஆண்டர்சன் வீதி என்பவற்றை எல்லையாகக் கொண்டிருந்தது.” என்று குறிப்பிடுகிறது.
Twentieth century impressions of Ceylon நூலில் இருந்து |
சிங்கள மொழியில் கொட்டாஞ்சேனையை “கொட்ட + ஹேன” என்பார்கள். அதாவது “கட்டையான மரங்கள்” என்று பொருள் படலாம். அதேவேளை தமிழிலும் “கொட்டான் + சேனை” என்பதற்கு நேரடி தமிழ் வடிவம் அசல் அர்த்தத்தை தருகிறது. 1690களில் வரையப்பட்ட டச்சு வரைபடமான Kaart van het Kasteel De Stad en omstreken van Colomboகொழும்பு கொட்டாஞ்சேனை Coutenchene என என்று குறிப்பிடுகிறது. ஆங்கிலேயர் கால குறிப்புகளில் கொட்டான் சீனா (Cottan China) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அது மட்டுமன்றி டச்சு மொழியில் “Korteboam” என்றால் கட்டையான மரங்கள் என்று அர்த்தம். கொட்டாஞ்சேனையில் தற்போதைய இராமநாதன் வீதியின் முன்னைய பெயர் “Korteboam Street” என்பதையும் கருத்திற் கொள்க.
இந்தப் பிரதேசம் கொட்டாங்காய் மரத்துக்கு பிரபலமாக இருந்ததாலும், கொட்டாங்காய் உள்ளே இருந்து எடுக்கப்படும் கொட்டை உள்ளூர் “பாதாம் பருப்பு” போல பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக கொட்டாஞ்சேனை என்று பெயர் வந்திருக்கக் கூடுமென்றும் சில குறிப்புகள் கூறுகின்றன. எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் கொட்டாஞ்சேனையின் பொன்ஜீன் வீதி சந்தியில் அப்படி கொட்டாங்காய் மரமொன்று இருந்ததைக் கண்டிருக்கிறேன். கொலேஜ் வீதியிலும், இன்னும் பல இடங்களிலும் சிறு வயதில் கொட்டங்காய் பறித்திருக்கிறோம். அவை அந்த மரங்களின் எஞ்சிய எச்சமா என்கிற சந்தேகமே எழுகிறது.
1868 இல் வெளியான Medical Times and Gazette இல் புனித லூசியாஸ் தேவாலயம் “கொட்டன் சீனா” (CottonChina) வில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
கொட்டாஞ்சேனை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பரபரப்பான பிரதேசங்களில் ஒன்றாக இருந்தது. மேலும் மிகவும் பழமையான வரலாற்றையும் கொண்டது.
1618இல் வெளியான “Conquista temporal, e espiritual de Ceylão” என்கிற நூலில் குவேரஸ் (Fernaõ de Queyroz) கொட்டாஞ்சேனையில் அன்று இருந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் பற்றியும், பிரபலம் பெற்றிருந்த கிறிஸ்தவப் பணிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
இயேசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமஸ் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வந்ததாக பிரபலமான கதையுண்டு. அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்திருந்தபோது இந்தப் பகுதியில் பிரசங்கங்கள் நடத்தியதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அந்த இடத்தில் தான் இன்றைய ஜிந்துபிட்டி புனித தோமஸ் தேவாலயம் இருப்பதாக பல நூல்களிலும் கூறப்படுகின்றன. புனித தோமஸ் பின்னர் சென்னை மயிலாப்பூரில் இறந்ததாகவும் அந்தக் கதை தொடர்கிறது. இதன் நம்பகத்தன்மைக்கப்பால் இந்த விபரம் பல நூல்களிலும் பதிவு பெற்றிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மேலும் இந்தப் பிரதேசம் அப்போது மீனவர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர்த்துக்கேயர் ஐநூறு வருடங்களுக்கு முன் வந்த போது இங்கே மிகப் பழமையான நெஸ்டோரியன் சிலுவையை (Nestorian Cross) கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.
1855 இல் வெளியான The Ceylon Almanac அறிக்கையில் அன்று கொழும்பில் இருந்த முக்கிய வீதிகளில் இருந்த வீடுகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் கொட்டாஞ்சேனையில் 253 வீடுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
கொட்டாஞ்சேனை - தீபதுத்தமாறாமய விகாரை பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விகாரை. பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இந்த விகாரையிலிருந்து தான் தொடங்கியது. இலங்கையின் முதலாவது கலவரத்துக்கு காரணமான விகாரையும் இது தான். இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கேர்னல் ஒல்கொட் முதலில் வந்தது குணானந்த தேரரை சந்திக்கத்தான். அது இங்கு தான் நிகழ்ந்தது. அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்கு தான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான் அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான். தாய்லாந்து இளவரசர் பௌத்த மத பிக்குவாக ஆனதும் இங்கு தான். இப்படி பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தம் இந்த விகாரை.
கொச்சிக்கடை
கொழும்பானது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே ஒரு துறைமுகமாக பலரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
1874 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நீராவிக் கப்பல்கள் நங்கூரமிடும் அளவுக்கு இட வசதி பெருப்பிக்கப்பட்டது. கொழும்பின் அமைப்பையே மாற்றும் வல்லமையை துறைமுகம் பெற்றது. 1890 இல் கப்பல்கள் தரித்து நின்று பழுதுபார்த்து செல்லும் இடமாகவும் மாறியது. எனவே துறைமுகத் தொழிலுக்கு ஆளணியின் அவசியம் உணரப்பட்டது. துறைமுகத்துக்கு வெளியில் கோட்டையில் வட பகுதியில் துறைமுகத்தோடு அண்டிய பகுதியான கொச்சிக்கடையில் தொழிலாளர்களைக் குடியேற்றினார்கள். ஆங்கிலேயர் மேற்கொண்ட நகர்ப்புற தொழிலாளர் குடியேற்றங்களில் மிகப் பழமையான குடியேற்றமாக கொச்சிக்கடைக் குடியேற்றத்தைக் குறிப்பிடலாம். கொச்சிக்கடை என்கிற இடப்பெயர் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே வந்துவிட்டதை அறிவீர்கள்.
அந்த கோட்டையின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த கொச்சிக்கடை பல தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டார்கள். இந்தக் குடியேற்றம் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு வரை நீண்டது.
கொச்சிக்கடை குடியேற்றம் மட்டுமல்ல கொழும்புத் துறைமுகத்தின் அன்றைய திடீர் கட்டமைப்பால் தான் இலங்கையின் முதலாவது “இலங்கை வங்கி” (Bank of Ceylon) 1841 இல் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமன்றி கொழும்பு நகரின் மையமான கோட்டைப் பகுதி இலங்கையின் பொருளாதார மையமாக மாறியதும் துறைமுகத்தை மையமாக வைத்துத் தான்.
கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடைப் பகுதிகளில் நெடுங்காலமாக தமிழர்கள் செறிவாக வாழும் பகுதி. அதுபோல புறக்கோட்டைப் பகுதியில், நகை வியாபாரம், புடவை வியாபாரம், பலசரக்கு மொத்த விற்பனை, இரும்புகே கடைகள் உட்பட பெரிய கம்பனிகள் வரை தமிழர்களிடம் இருந்தது. 1983 கலவரத்தின் போது இதனால் தான் இந்தப் பகுதிகள் கொள்ளையர்களின் இலக்காக மாறியது. தமிழர்கள் அதிக சொத்திழப்பை எதிர்கொண்ட பிரதேசங்கள் இவை. ஆனால் இனவாதக் காடையர் கும்பல் இலங்கையிலேயே அடிவாங்கி பின்வாங்கி ஓடியதென்றால் அது கொச்சிக்கடையில் தான். கொச்சிக்கடையில் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
கொட்டாஞ்சேனை இலங்கையின் வரலாற்றில் முக்கிய பதிவுகளை வலுவாக பதித்த இடங்களில் ஒன்று. குறிப்பாக காலனித்துவ கால வரலாற்றுப் பதிவுகளைக் குறிப்பிடலாம். இத்தொடரில் வேறு பல இடங்களில் அவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
நன்றி - தினகரன் 03.04.2022
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...