Headlines News :
முகப்பு » , , , , » காலிமுகத் திடல்: அன்றைய மயானம்! (கொழும்பின் கதை -1) - என்.சரவணன்

காலிமுகத் திடல்: அன்றைய மயானம்! (கொழும்பின் கதை -1) - என்.சரவணன்

கொழும்பைப் பற்றிய வரலாற்று வழித்தடத்தை தேடும் ஆய்வு இது. சற்று விரிவாக கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும், அதன் மானுடப் பண்பாட்டைப் பற்றியும் பல சுவாரசியமான கதைகளுடனும், ஆதாரங்களுடன் தொடராக இத்தொடரில் நீங்கள் சுவைக்கலாம்.

கோல் பேஸ் (Galle face) என்று நாம் அழைக்கும் காலிமுகத்திடலை அனுபவித்திராத இலங்கையர் அபூர்வம் எனலாம். இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் கொழும்பில் காலிமுகத்திடலுக்கு ஒரு தடவையாவது சென்று வரவேண்டும் என்று நினைப்பார்கள். கொழும்பில் பிரதான மையப் பகுதியில் மிகப்பெரிய விஸ்தீரணம் கொண்ட கடற்கரைப் பகுதியாக அது இருப்பதாலும், பழைய பாராளுமன்றக் கட்டிடம், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய கேந்திர மையங்களை ஒருங்கே அருகாமையில் உள்ள பகுதியாக இருப்பதாலும் அது மேலும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காக பின்னேரம் பலர் நிறைந்திருப்பார்கள். அதிகாலையில் உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, கடும் வெய்யிலிலும் காதலர்கள் ஒன்று கூடுவது, மாலையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒன்றுகூடுவது, பட்டம் பறக்கவிட்டு, பற்பல விளையாட்டுக்களை விளையாடி, உண்டு, களித்துச் செல்லும் இடம் அது.

கொழும்பில் பெரிய விஸ்தீரணத்தைக் கொண்ட வேற்று நிலமாக பேணப்படுகின்ற ஒரே இடமாக இதைச் சொல்லலாம். சுதந்திர தினம், இராணுவ அணிவகுப்புகள், இராணுவக் கண்காட்சி உள்ளிட்ட பல முக்கிய அரச நிகழ்வுகள் அங்கே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. மாபெரும் மே தின நிகழ்வு, மாபெரும் அரசியல் பொதுக் கூட்டங்களும், மட்டுமன்றி ஒரு காலத்தில் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் செய்யும் இடமாகவும் இது இருந்தது. ஒரு காலத்தில் தமிழரசுக் கட்சியின் பிரபல சத்தியாக்கிரக போராட்டங்களும் அங்கே தான் நடந்தன.

இன்றைய காலிமுகத்திடல் ஐந்து ஹெக்ராயர் பரப்பைக்கொண்டது. ஆனால் இன்று காண்பதை விட மிகப் பெரிதாக ஒரு காலத்தில் அது இருந்தது. அப்போது கிரிக்கெட், ரக்பி, கொல்ப், உதைப்பந்தாட்டம் மட்டுமன்றி, குதிரையோட்டம், காரோட்டப் பந்தயப் போட்டிகளும் நிகழ்த்தப்பட்ட இடம் அது.

காலிமுகத்திடல் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பு கோட்டையைப் பாதுகாப்பதற்கான இராணுவ தந்திரோபாய இடமாக பேணப்பட்டு வந்தது. போர்த்துக்கேயர்கள் கடல்வழி ஆக்கிரமிப்பை நடத்தினால் அதை எதிர்கொள்வதற்காக பீரங்கிகளை கொண்டு வந்து வரிசையாக இங்கே நிறுத்தினார்கள். இன்றும் காலிமுகத்திடலின் கரைகளில் கடலை நோக்கியபடி காணப்படும் பீரங்கிகள் ஒரு காலனித்துவ காலத்தில் எப்பேர்பட்ட போர்களையும், போர் தயார் நிலையிலும் இது இருந்திருக்கிறது என்பதை நமக்கு விளக்கும்.

முன்னர் கொழும்பு கோட்டையின் வாயிற் பகுதியாக காலிமுகத்திடல் இருந்தது. டச்சு மொழியில் Gal என்றால் Gate அல்லது வாயில் என்று பொருள். அதுபோல faas என்றால் முகப்பு என்று பொருள். இரண்டும் சேர்ந்து Galle face காலிமுகத் திடல் என்று தமிழில் பின்னர் அழைக்கப்பட்டது. சிங்களத்திலும் கூட தமிழில் உள்ள அதே அர்த்தத்துடன் ගාලු මුවදොර පිටිය என்றே அழைக்கப்படுகிறது. இன்னொரு பெயர்க் காரணமும் கூறப்படுகிறது. அதாவது “கல் பொக்க” (கல் வாயில்) என்கிற சிங்களச் சொல் தான் ஆங்கிலத்துக்கு Galle face என்று ஆனது என்கிற கதையும் உண்டு.

காலிமுகத்திடல் பற்றிய பல உண்மைகள் புதைந்தே போய்விட்டன. இல்லை... இல்லை... அது சடலங்களின் புதைகுழியாகவே ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. காலிமுகத்திடல் ஒரு காலத்தில்; மரணித்தவர்களை புதைக்கின்ற மயானமாக இருந்தது என்றால் நம்ப சிரமப்படுவீர்கள். ஆனால் அது தான் உண்மை.

பேறை வாவியோடு ஒட்டியிருக்கும் பகுதியே மயானம் (Galle Face Burial Ground) இருந்த சரியான இடம். 1865-75 அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எந்தக் கட்டிடங்களும் இல்லாத காலம்.

சடலங்களை புதைக்கின்ற மயானமாக

ஆங்கிலேயர்கள் இலங்கையின் கரையோரங்களை ஒல்லாந்தர்களிடம் இருந்து 1796 இல் கைப்பற்றியபோதும் கண்டியை 1815 இல் கைப்பற்றியபின் தான் முழு இலங்கையையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த இடைக்காலப் பகுதியில் கண்டியுடன் கடும் போர் நடத்தியிருந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் இரு தசாப்தங்கள் தான் அதிக பிரிட்டிஷார் கொல்லப்பட்ட காலம். இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தான்  கண்டியுடனான முதல் போர் 1803 இல் ஆரம்பமானது. அந்தப் போர்களில் எல்லாம் கடும் தோல்வியை சந்தித்தது பிரிட்டிஷ் படைகள். அதில் கொல்லப்பட்ட உயர் இராணுவ அதிகாரிகள் பலரது சடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றன. காலிமுகத்திடலை 1803 ஆம் ஆண்டிலிருந்து மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. 1805 ஆம் ஆண்டு தான் அதற்கான எல்லை மதில்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. முதல் கல்வெட்டு 1809 இல் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை ஜெபித்து புனிதப்படுத்த 1821 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து பேராயர் (Middleton) வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

1809 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இராணுவத்தைச் சேர்ந்த டேவிட் டேன் (David Dunn) என்கிற 24 வயது இளைஞன் கொழும்பு பேறை (Beira Lake) வாவியில் தற்செயலாக மூழ்கி இறந்துள்ளார் அவ்விளைஞனின் பிரேதம் தான் முதலாவது தடவையாக காலி முகத்திடலில் புதைக்கப்பட்டிருகிறது. 

இதே 1821 ஆம் ஆண்டு தான் அன்றைய தேசாதிபதி எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) காலி முகத்திடலை பரந்துபட்ட நில அமைப்புடன்  “Galle Face Green” திட்டம் என்கிற பெயரில் அமைத்தார். ஒரு குதிரைப் பந்தயத் திடலை அந்த இடத்தில் அமைப்பதை இலக்காகக் கொண்டே இந்தத் திடலை அவர் அமைத்தார். குதிரைப்பந்தயப் போட்டி விளையாட்டு இலங்கையில் இங்கிருந்து தான் அறிமுகமானது. எட்வர்ட் பார்ன்ஸ் இலங்கையில் பிரதான பெருந்தெருக்களை அமைத்ததில் முன்னோடியானவர். “இலங்கைக்கு முதலாவது தேவையானது தெருக்கள் தான். இரண்டாவது தேவையானதும் தெருக்கள் தான். மூன்றாவது தேவையானதும் தெருக்கள் தான்” என்று 1819 அவர் இலங்கை வந்த வேளை கூறியவர். அவர் இலங்கையின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தெருக்களால் ஒன்றினைத்தார். கொழும்பில் அவர் பெயரிலும் ஒரு வீதி (Barnes place) இன்றும் உள்ளது. கொழும்பு – கண்டி வீதி அமைக்கப்பட்டதன் பின் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இலங்கையில் 1823இல் கோப்பித்தோட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் பெருந்தோட்டத்துறையை அறிமுகப்படுத்தியவர் எட்வர்ட் பார்ன்ஸ். இந்தியத் தொழிலாளர்களை தோட்டத்தொழிலுக்காக இலங்கையில் முதலில் இறக்கியவரும் அவர் தான்.


அதற்கு முன்னரே காலிமுகத் திடலோடு இருக்கிற வீதி 1814 இல் அமைக்கப்பட்டது. இன்றும் அது அமைக்கப்பட்டதற்கான கல்வெட்டு இன்றைய தாஜ் சமுத்திரா ஹோட்டலின் பாதையோர மதிலோடு அது பற்றிய ஒரு கல்வெட்டு இருப்பதைக் காணலாம்.. பிற்காலத்தில் தென்னிலங்கையில் காலி வரை நீள்கிற A2 பாதையின் ஆரம்பம் காலிமுகத்திடலில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

1830 களில் ஒன்றரை மைல் தூரத்துக்கு இது குதிரையோட்டப் போட்டி நடத்தும் இடமாகவும் காலிமுகத்திடல் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதனை கொள்ளுப்பிட்டி குதிரைப் பந்தயத் திடல் Colpetty Race Course என பெயர் பெற்றிருந்தது. 22.09.1835 ஆம் ஆண்டு தான் முதல் குதிரைப் பந்தயம் அங்கு நிகழ்ந்திருக்கிறது.(1) 1893 ஆம் ஆண்டு கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதிக்கு (Cinnamon Garden) பகுதிக்கு அது மாற்றப்படும் வரை இங்கே தான் அந்தப் பந்தயங்கள் நிகழ்ந்தன. பிற்காலத்தில் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இறப்பதற்கு காரணமான குதிரை சவாரி விபத்து இங்கு தான் நிகழ்ந்தது என்பதையும் இங்கே கொசுறாக நினைவுக்கு கொண்டு வரலாம்.

அந்தக் காலத்து குதிரைப்பந்தையத் திடல் (1865-75 கால படம்)

பசுமை காலிமுகத்திடல் திட்டம்

1856 ஆம் ஆண்டு அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி ஜோர்ஜ் வார்ட் (Sir Henry George Ward - 1797–1860) காலிமுகத்திடலின் கடற்கரையோடு அண்டிய பகுதியை ஒரு மைல் தூரம் அளவுக்கு பசுமையான திடலாக புதுப்பிக்கும் இன்னொரு Galle Face Green திட்டத்தை ஆரம்பித்தார். அவரது அத்திட்டம் 1859 இல் நிறைவடைந்தது. காலி முகத்திடல் இன்றைய தோற்றத்தை அடையப்பெற்றது இந்தத் திட்டத்தின் மூலம் தான். இன்றும் காலிமுகத்திடலில் அதன் நினைவுக் கல்லை காணலாம். முற்றிலும்  பெண்களும் குழந்தைகளும் காற்று வாங்கி கூடிக் களிக்கும் இடமாக மாற்றுவதே அவரின் திட்டமாக இருந்தது. கூடவே குதிரைச் சவாரி செய்வதற்கும், கோல்ப் விளையாடுவதற்குமான பெரிய திடலாக அமைப்பது தான் அவரின் நோக்கம்.

ஒரு புறம் பேறை வாவியை (Beira lake) எல்லையாகக் கொண்டு தான் அந்த மயானம் இருந்தது என்று லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். அதாவது சில ஆண்டுகள் வரைக்கும் இராணுவத் தலைமையகம் இருந்த இடமாகவும் இப்போது பிரபல சங்கிரில்லா ஓட்டல் கட்டப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து தொடங்குகிறது அந்த காலிமுகத்திடல் மயானம்.

சங்கிரில்லா ஓட்டல் கட்டுவதற்கான பணிகளுக்காக தோண்டும் போது அங்கிருந்து எலும்புக் கூடுகளும், சவப்பெட்டிகளின் எச்சங்களும், சவப்பெட்டிகளின் இரும்புக் கைப்பிடிகளும் கண்டெடுக்கப்பட்டது பற்றி செய்திகளில் வெளிவந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். அந்த எச்சங்களை ஆராய புறக்கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ போன்றார் அங்கே சமூகமளித்திருந்ததையும் அச்செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

1866 ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பின்னர் வுல்பெண்டால், ஸ்லேவ் ஐலன்ட் ஆகிய இடங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயம்,  ஸ்லேவ் ஐலன்ட்டில் உள்ள மலே மயானம் என்பவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும், காலிமுகத்திடல் மயானத்தை தனித்து ஐரோப்பியர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தும்படியும் ஒரு தீர்மானம் 1866 யூன் 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.(2)

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அது மயானமாக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு இராணுவப் பாவனைக்காக அது பயன்படுத்தப்பட்டது.

அடுத்த இதழில்...

உசாத்துணை :
  1. Colombo Landmarks, Sunday Times, 06.08.2006
  2. CEYLON BLUE BOOK FOR THE YEAR, 1866,  COLOMB0: WILLIAM SKEEN, GOVERNMENT PRINTER, CEYLON. 1867.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates