//சென்னை பல்கலையின் பாடத் திட்டத்தில் இருந்து, எழுத்தாளர் புதுமைப் பித்தனின், "துன்பக்கேணி, பொன்னகரம்" ஆகிய இரு சிறுகதைகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இரண்டு சிறுகதைகளையும் நீக்கி விட்டு புதிதாக, இரண்டு கதைகளை சேர்க்க சென்னை பல்கலை., முடிவெடுத்தது. கடந்த சனிக்கிழமை, பல்கலை., கல்விக்குழு ஒப்புதலுடன் இந்த சிறுகதைகள் நீக்கப்பட்டன. இதில், "பொன்னகரம்" சிறுகதைக்கு பதில், "ஒரு நாள் கழிந்ததது" என்ற புதுமைபித்தனின் சிறுகதை சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது
"துன்பக்கேணி" சிறுகதையானது, தலித் மக்களை, மோசமாக சித்தரித்துள்ளதாகவும், "பொன்னகரம்" சிறுகதை தன் கணவனுக்காக, ஒரு பெண், உடலை விற்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கள் தற்போதைய மாணவர்களுக்கு உகந்ததல்ல என்பதை காரணம் காட்டி பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.- செய்தி தினமலர்//
புதுமைப்பித்தனின் குறிப்பிடத்தக்க சிறுகதை களில் துன்பக்கேணி என்ற சிறுகதையும் ஒன்று. இதைக் குறுநாவல் என்றுகூடக் குறிப்பிடலாம். இக்கதை ஓர் ஆழமான சமூக வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுள்ளது.
மூன்றாவது மைசூர் யுத்தத்தை அடுத்து, தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1858-இல் ஆங்கிலேயப் பாராளுமன்றத்தின் நேரடி ஆட்சியின்கீழ் இந்தியா வந்தது. இவ்விரு ஆட்சி களிலும் தமிழ்நாட்டின் கிராமப்புற வேளாண்மை உறவுகளில் பின்வரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
- நீர்ப்பாசன வசதி புறக்கணிக்கப்பட்டது.
- ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டு புதிய நிலக்கிழார்கள் உருவாயினர்.
- தொடர்ச்சியாகப் பஞ்சங்கள் பல ஏற்பட்டன. இதன் உச்சகட்டமாக 1878-இல் ‘தாது வருடப் பஞ்சம்’ என்ற கொடிய பஞ்சம் நிகழ்ந்தது.
- நிலக்கிழார்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகி யோரின் பிடியில் சிக்கிய சிறு நிலக்காரர்கள் தம் நில உரிமையை இழந்து, விவசாயத் தொழிலாளர்களாக மாறினர் அல்லது நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
- ஏற்கனவே நில உரிமை அற்றிருந்த விவசாயத் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் மாறினர்.
- தானியமாகச் செலுத்தி வந்த நில வரியைப் பண வடிவில் செலுத்த வேண்டியதாயிற்று.
- விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயி இழந்தான். இவ்வுரிமை இடைத்தரகரிடம் சென்று அடைந்தது. உற்பத்தியாளனைவிட இடைத் தரகர்களே அதிக ஆதாயம் அடைந்தனர்.
இவற்றின் விளைவாகத் தமிழகக் கிராமப் புறங்களில் வாழ்ந்த, சிறு நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழி லாளர்கள் குறிப்பாகத் தலித் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிராமங்களை விட்டு வெளி யேறி உயிர் பிழைக்கலாம் என்ற உணர்வு அவர் களிடம் உருவாகத் தொடங்கியது.
pudhumaipithan 290தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்ரீலங்காவின் மலையகப் பகுதி களிலும் தேயிலை மற்றும் காப்பித் தோட்டங் களையும், பர்மாவில் (மியான்மர்) ரப்பர் தோட்டங் களையும், மொரிசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டங் களையும் 19-ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் உருவாக்கினர். இவ்வாறு புதிதாக மலைத் தோட்டங் களை உருவாக்க, காடுகளைத் திருத்தி அமைக்க வேண்டியதிருந்தது. அடுத்து இங்குப் பயிரிடப் பட்ட காப்பி, தேயிலை, ரப்பர் ஆகிய பணப் பயிர்களைப் பராமரிக்கவும், இவற்றின் பலனைச் சேகரிக்கவும் மிகுதியான அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
இலங்கையின் மலையகப் பகுதியின் தலை நகராக விளங்கிய கண்டியை 1815-இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதன் பின்னர் 1824-இல் இம் மலைப் பகுதியில் காப்பி பயிரிடத் தொடங்கினர். 1828-இல் ஜோர்ஜ் பேர்ட் என்ற ஆங்கிலேயர் இப்பகுதியில் காப்பியும் கொக்கோவும் பயிரிடும் தோட்டங்களை உருவாக்கினார். இதையடுத்து வேறு சில ஆங்கிலேயரும் மலைத் தோட்டங்களை உருவாக்கினர். 1869-1880ஆம் ஆண்டுகளில் ஒரு வகையான நோய்த் தாக்குதலுக்கு, காப்பிப் பயிர் ஆளாகியது. இதன் பின்னர் காப்பி மட்டுமின்றி, தேயிலை, கொக்கோ, சிங்கோனா ஆகிய பயிர் களையும் வளர்த்தனர். பின்னர் ரப்பரும் பயிரிடத் தொடங்கினர். என்றால் ‘தேயிலைத் தோட்டங்கள்’ என்று அழைக்கப்படும் அளவிற்குத் தேயிலையே பிரதானப் பயிராக இங்கு விளங்கியது. இத் தோட்டங்களை உருவாக்க சிங்களக் குடியிருப்புகள் பல அழிக்கப்பட்டன. தங்கள் குடியிருப்பு உரிமையை அழித்தவர்கள் என்ற வெறுப்புணர்வின் காரண மாக வெள்ளையர்களின் தோட்டங்களில் பணி புரிய அவர்கள் விரும்பவில்லை. மேலும் செங்குத் தான மலைச்சரிவுகளிலும் அடர்ந்த காட்டுப் பகுதி களிலும் கடினமாக உழைக்க அவர்கள் முன்வர வில்லை.
இதனால் இலங்கைக்கு வெளியிலிருந்து தொழிலாளர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை வெள்ளையர்களுக்கேற்பட்டது. இச்சூழலில் வெள்ளை அரசின் தவறான வேளாண்மைக் கொள் கையால் பாதிக்கப்பட்ட தமிழகக் குடியான வர்கள் தம் வாழ்வுக்கான புதிய ஆதாரங்களைத் தேடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந் தார்கள்.
இத்தகைய சமூகச் சூழலில் வெள்ளையர் களால் உருவாக்கப்பட்ட மலைத்தோட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு, பாலைவனச் சோலையாக அமைந்தன. இவர்கள் மட்டுமன்றி, கடன்பட்டு, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள், சாதி மீறிக் காதலித்தவர்கள், கிரிமினல் குற்றங் களைச் செய்தவர்கள் ஆகியோரின் புகலிடமாகவும் மலைத்தோட்டங்கள் அமைந்தன.
வெள்ளை முதலாளிகளின் இத்தேவையை நிறைவேற்றும் வகையில் ‘ஒப்பந்தக் கூலி முறை’ ((Indentured Labour System) என்ற முறை உருவாக்கப் பட்டது. இதன்படி கிராமப்புற ஏழைக் குடியான வர்கள், தோட்ட முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவு, அத்தோட்டங்களில் பணிபுரிவதாக ஒப்பந்தம் பத்திரத்தில் கையெழுத்தோ, கைநாட்டோ போட்டுக் கொடுத்துவிடுவர். ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் அவர்கள் மலைத்தோட்டங்களை விட்டு வெளியேற முடியாது. திருட்டுத்தனமாகச் சிலர் தாயகத்திற்குத் திரும்பி விடுவதும் உண்டு. தோட்ட முதலாளிகள் கொடுக்கும் புகாரின் அடிப் படையில் இங்குள்ள காவல்துறை அவர்களைக் கைது செய்து அவர்கள் பணிபுரிந்து வந்த தோட்டத்திற்குத் திருப்பி அனுப்பிவிடும்.
ஒரு கட்டத்தில் இம்முறையால் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலையில் ‘கங்காணி முறை’ என்ற முறையை அறிமுகப்படுத்தினர். கங்காணி என்பவர் ஏற்கெனவே வெள்ளையர்களுக்கு உரிமையான மலைத்தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளிதான். முரட்டுத்தனமும், வாக்கு சாதுர்யமும், பொருளாசையும், ஒருசேரப் பெற்றவர்களாகவும் வெள்ளை முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங்கியவர்களே கங்காணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கங்காணிகள், Tine Ticket எனப்படும் அடையாளத் தகடுகளுடன் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலிருந்து புறப்படுவர். அவர்கள் கொண்டு வரும் அடையாளத் தகடில், தோட்டத்தின் பெயர், அது இருக்கும் பகுதி, தகடின் வரிசை எண் ஆகியன குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டப்பகுதிகளுக்கே கங்காணிகள் புறப்பட்டு வந்தனர். தங்களது பூர்வீகக் கிராமம், உறவுக்காரர்கள் மற்றும் தன் சாதிக்காரர்கள் வாழும் ஊர் எனத் தமக்கு அறிமுகமான பகுதிகளையே கங்காணிகள் தேர்ந் தெடுத்துக் கொண்டனர்.
திக்கற்று நிற்கும் கிராம மக்களிடம், இலங் கையின் மலையகத் தோட்டங்களை, சொர்க்க லோகம் என வருணித்து, தோட்டத் தொழிலாளர் களாகப் பணிபுரிய அவர்களைக் கங்காணி அழைப் பான். அதை ஏற்றுக்கொண்ட மக்களிடம், தான் கொண்டு வந்த தகடை, இரண்டரை ரூபாய்க்கு விற்றுவிடுவான். சிலர் குடும்பத்துடன் புறப்படு வார்கள். இவர்களது பயணச் செலவை முதலில் கங்காணியே ஏற்றுக்கொள்வான். பின் இவர்கள் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கும் மணியாச்சி இரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள தட்டப் பாறை அல்லது இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் என்ற ஊர்களில் உள்ள தொழிலாளர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
இம் முகாம்கள் இலங்கை அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்டன. இங்கு நுழையும் போது கங்காணி கொடுத்த தகடைக் கயிற்றில் கோத்து, கழுத்தில், தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். காலரா, அம்மை, ஆகிய நோய்களுக் கான தடுப்பூசிகளை ஒவ்வொரு தொழிலாளர் களுக்கும் போடுவர். இவ்விரு நோய்களும் அவர் களிடம் இல்லை என்று உறுதி செய்த பின்னரே இவர்கள் இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கிருந்து கப்பல் வாயிலாக இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கு அல்லது கொழும்பு நகருக்குச் செல்வர். தலை மன்னாரிலிருந்து கால்நடையாக ஆடு, மாடுகளைப்போல் கூட்டம்கூட்டமாக கங்காணி அழைத்துச் செல்வான். வழிநடைக் களைப்பினாலும், போதுமான உணவில்லாமை யாலும் நடைப் பயணத்தின் போதே சிலர் இறந்து போவதும் உண்டு. இத்தொழிலாளர்களைக் ‘கூலி’ என்ற இழிவான சொல்லாலேயே குறித்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ‘கூலிச் சம்பளம்’ என்றே குறிப்பிடப்பட்டது. இவர் களிடையே மதப்பிரச்சாரம் செய்ய உருவாக்கப் பட்ட கிறித்தவ மிஷன்கூட ‘கூலி மிஷன்’ என்றே பெயர் பெற்றது. இவர்கள் தமிழர்களாக இருந்த மையால், ‘கூலித் தமிழன்’ தோட்ட காட்டான்’ என்று குறிப்பிட்டு, இவர்களைவிட தாங்கள் உயர் வானவர்கள் என்று யாழ்ப்பாணத் தமிழர்களும், கொழும்பில் வாணிபம் செய்து வந்த இந்தியத் தமிழர்களும் தம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.
‘கூலிலயன்கள்’ என்றழைக்கப்படும், குதிரை லாயம் போன்ற வரிசையாக உருவாக்கப்பட்டிருந்த தகரக் குடிசைகளில் இவர்கள் குடியேற்றப்பட்டனர். காலையில் கொம்பு ஊதியதும் அல்லது தப்பு அடித்ததும் எல்லோரும் பிரட்டுக்களத்தில் கூட வேண்டும். ஆங்கிலத்தில் ‘‘Parade Ground’ என்று வெள்ளையர்கள் குறிப்பிட்டதையே ‘பிரட்டுக் களம்’ என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். இங்கிருந்து அவர்கள் தோட்டப் பயிர் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். தேயிலைக் கொழுந்தெடுத்தல், காப்பிப் பழம் பறித்தல், செடி களைக் கவ்வாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடு திருத்தல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். குழுக்களாகப் பிரிந்து இவர்கள் வேலை செய்வர். ஒவ்வொரு குழுவையும் கண்காணிக்க ஒரு ‘கங்காணி’ உண்டு இவர்கள் ‘சில்லரைக் கங்காணி’ என்றழைக்கப் பட்டனர்.
கடற்பயணத்திற்கும் செலவான தொகையை, தொழிலாளர்கள் கங்காணிக்குக் கொடுக்க வேண்டும். கூலிகளின் ஊதியத்திலிருந்து தவணை முறையில் இதைப் பிடித்தம் செய்வர். கம்பளி மற்றும் வேட்டிக்கான தொகைக்குக் கங்காணி எவ்வாறு கணக்குச் சொல்லி, ஊதியத்திலிருந்து கழிப்பான் என்பதை சாரல் நாடன் (1988-49)பின் வருமாறு குறிப்பிடுவார்.
“கம்பளி மூன்று ரூபாய், கருப்புக் கம்பளி மூன்று ரூபாய், வேஷ்டி மூன்று ரூபாய், வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”.
இவர்களை ஈவு இரக்கமின்றி வேலை வாங்கு வதற்காக வெள்ளை முதலாளிகள் ‘தலைக்காசு’ அல்லது கங்காணிக் காசு என்ற பெயரால் கூலி யாட்களின் கூலியிலிருந்து ஒரு சிறு பகுதி பிடித்தம் செய்து அதைக் கங்காணிக்கு வழங்கி வந்தனர். இது குறித்து சாரல் நாடன் (1993: 75-75) தரும் விளக்கம் வருமாறு:
அவர் தன்னோடு அழைத்துச் செல்லும் அத்தனை போரும், தோட்டத்தில் அவர் ‘கணக்கில்’ பேர் பதியப்படுவார்கள். அவ்விதம் பேர் பதியப் படும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலுக்கு வரும் நாளைக்கு மூன்று சதவீதம் என்று கணக்கிடப் பட்டு அந்தப் பணம் கங்காணிக்குக் கொடுக்கப்படும்.
இந்த வகையில் ஊதியத்தைவிட, ‘கங்காணிக் காசு’ என்ற பெயரால் கங்காணிக்கு அதிக வருவாய் கிட்டும். தேயிலை அல்லது காப்பிப் பழம் சேகரித்து முடிந்த பின், அது எடை போடப்படும். இது கணக்கர்களின் பணியாகும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது இருப்பதாகக் கணக்கன் கூறினாலோ, நாள் ஊதியத்தில் சரிபாதி குறைக்கப்படும். இதற்கு ‘அரைப்பேர் போடுதல்’ என்று பெயர், இவ்வாறு கூலியாளுக்குக் கிடைக்கும் கூலி குறைந்துவிட்டால், கங்காணிக்கு, தலைக்காசு கிடைக்காது. ஆகவே அவன் மிகவும் கோபப்படுவான். இதனைப் பின்வரும் நாட்டார் பாடல்கள் உணர்த்துகின்றன.
‘அரைப் பேராலே- ஏலேலோ- கங்காணிக்கு- ஐலசா
தலைக்காசு - ஏலேலோ தவறிப்போச்சு- ஐலசா
கோபத்தோடே - ஏலேலோ கங்காணியும்- ஐலசா
குதிக்கிறானே- ஏலேலோ கூச்சல் போட்டு - ஐலசா
ஆண்கள் பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே - ஐலசா
அவனைப் பார்த்து - ஏலேலோ அரளுமே - ஐலசா’.
...
கூடை எடுக்கலாச்சு- நாங்க
கொழுந்து மல பார்க்கலாச்சு
கொழுந்து குறைந்த தன்னு
கொரைபேரு போட்டார்கள்
...
அறுவா எடுத்த தில்ல
அடைமழையும் பார்த்த தில்ல
அரும்பு கொரைஞ்சதுன்னு
அரைப்பேரு போட்டார்கள்
...
“பொழுதும் எறங்கிருச்சி
பூமரமும் சாஞ்சிருச்சி
இன்னமும் இரங்கலையோ
எசமானே ஓங்க மனம்
அவசரமா நான் போறேன்
அரபேரு போடாதீங்க”
...
வெள்ளைக்கமிஸ், கறுப்புக்கோட்டு, சரிகைத் தலைப்பாகை, கோட்டின் இடப்புறத்து மேல் பொக்கெட்டுக்கு மேலே வெள்ளிச் சங்கிலி, தொங்கும் பொக்கெட் உருலோசு* இவைதான் கங்காணியின் உருவ அமைப்புக்கான அலங்காரம்.
காதிலே கடுக்கன்- குண்டலம் என்பர். கழுத்திலே தங்க வளையம்- கெவுடு என்பர். கையிலே பிரம்பு- கொண்டை என்பர்- இவைகள் கங்காணியின் அத்தியாவசிய அணிகலன் எனலாம்.
என்று கங்காணிகளின் ஆடை அணிகலன்களை வர்ணிக்கும் சாரல் நாடன் (1993: 40)
“தோட்டப்புறங்களில் தொழிற்சங்கங்கள் ஊடுருவும் வரை கங்காணிமாரின் நிலை இந்தியக் கிராமத்து ஜமீன்தாரிகளின் நிலையிலேயே இருந்தது” என்று குறிப்பிட்டு, கங்காணிகள் எத்தகைய வல்லமை படைத்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கங்காணிகள் ஈவு இரக்க மின்றி வேலை வாங்குவதை,
“எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சி நிக்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே
வேலையைத்தக் கங்காணி”
“கொண்டைப் பிரம்பெடுத்து
கூலியாளைப் பிரட்டெடுத்து**
துண்டுகளைக் கொடுத்து
துரத்துராரே கங்காணி”
“அடியும் பட்டோம் மிதியும் பட்டோம்
அவராலே மானங் கெட்டோம்
முழி மிரட்டிச் சாமியாலே
மூங்கிலாலே அடியும் பட்டோம்”
என்ற மலையக நாட்டார் பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு, வெள்ளைத் துரையைவிடக் கங்காணியே முக்கிய காரணம் என்று கருதிப் பின்வருமாறு பாடியுள்ளார்.
“தோட்டம் பிரளியில்லே
தொரே மேலே குத்தமில்லே
கங்காணி மாராலே
கனபிரளி யாகுதையா”
மேலும் பழக்கமில்லாத குளிரான மலைப் பகுதி, அட்டைக்கடி, கொசுக்கடியினால் ஏற்படும் மலேரியாக் காய்ச்சல் என்பனவற்றிற்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கும் தோட்டத் தொழி லாளர்கள் ஆளாகி வந்தனர்.
இத்தமிழர்களிடம் உரையாடுவதற்காகத் தோட்ட முதலாளிகள் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது. இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெல் என்பவர் எழுதிய ‘கூலித் தமிழ்’ என்ற நூல் 1922-இல் வெளியானது. இந்நூலில் தோட்டத்துரைக்கும் கூலியாளுக்கும் நிகழும் உரையாடல் பயிற்சிகள் இடம் பெற்றிருந்தன. சான்றாக சில பகுதிகளைக் குறிப்பிடலாம்.
கூலி : ஐயா எனக்கு காசு வேணும்.
துரை : இல்லை. அதுக்கு நான் இப்போ கேழ்க்க ஏலாது
கூலி : நான் இப்போ போயலாமா?
துரை : இல்லை நீ இன்று போ ஏலாது.
இவ்வாறு தன்னிடம் பணிபுரியும் கூலியிடம் உரையாடக் கற்றுக்கொடுப்பதுடன் அவனைத் திட்டவும் கற்றுக்கொடுக்கிறது. கூலித் தமிழ்.
“சின்னசாதி குடித்துவிட்டு பயல், நீ குடிக்கிறது பக்தி
உனுக்கு யொப்போதும் சொல்ற புத்தி கேழ்க ஏலாது”
‘செந்தமிழ்’, ‘வண்டமிழ்’, ‘பால்வாய்ப் பசுந்தமிழ்’, ‘முத்தமிழ்’ என்றெல்லாம் தமிழ் மொழிக்கு அடை மொழியிட்டு மகிழ்ந்த எந் தமிழருக்கு, இக்கூலித்தமிழ்ப் புத்தகத்தை அறிமுகப் படுத்திய ஏ.கே. செட்டியார்,
“கூலித்தமிழ்ப் புத்தகம் தோட்டக்காரத் துரைகளுக்குக் கூலிகள் பேசும் தமிழை மட்டும் போதிக்கவில்லை. கூலிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையையும் போதிக்கிறது”.
என்று மிகச் சரியாகவே மதிப்பிட்டுள்ளார். இவற்றிற்கெல்லாம் மேலாக, கங்காணி, கணக்கன், ஸ்டோர் கீப்பர், கம்பௌண்டர் எனத் தம் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவோரின் பாலியல் வன்முறைக்குப் பெண் தொழிலாளர்கள் ஆளாக வேண்டிய அவலம் நிலவியது. கங்காணி களின் துணையோடு தோட்டத் துரைகள், பெண் தொழிலாளிகளிடம் முறைகேடாக நடந்து கொள்வதனை,
‘காலுச்சட்டை போட்டுக்
கையை உள்ளேவிட்டுக்
கண்ணை நல்லாச்சிமிட்டிக்
கங்காணி மாரைத்தான்
கைக்குள்ளே தான் போட்டுக்
காசு களையிறைச்சு
காடுண்ணு மில்லை
மேடுண்ணு மில்லை
வீடுண்ணு மில்லையம்மா
கண்ட இடமெல்லாம்
கண்ட கண்ட பெண்ணைக்
கையைப் பிடிச்சிழுப்பார்’.
என்று நாட்டார் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கங்காணிகளின் பாலியல் ஒழுக்கக்கேட்டை
“செம்புச்சிலை போல பொண்டாட்டிய
சிம்மாசனத்தில வச்சிப்பிட்டு
வேலைக் கிறங்கிற கங்காணிக்கு
ஏழெட்டுப் பேராம் வைப்பாட்டிக”. 2
என்ற பாடலின் வாயிலாக அறிய முடிகிறது.
இவ்வரலாற்றுப் பின்புலத்தில்தான் புதுமைப் பித்தனின் ‘துன்பக்கேணி’, கதையை நோக்க வேண்டும். ‘கூலித் தமிழன்’, ‘தோட்டக் காட்டுக் காரன்’ என்ற இழிவான முத்திரையுடன் வாழ்ந்து மடிந்த இந்தியத் தமிழர்களைக் குறித்த ஓர் இலக்கியப் பதிவாகவும், சமூக ஆவணமாகவும், துன்பக்கேணி கதையைப் புதுமைப்பித்தன் உரு வாக்கியுள்ளார். பிஜித் தீவில் உருவாக்கப்பட்ட கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப் பெண் தொழிலாளர்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் “பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை 1916 வாக்கில் பாரதி எழுதியுள்ளார். அதில்,
‘துன்பக் கேணியிலே யெங்கள் பெண்கள் அழுதசொல்
கேட்டிருப்பாய் காற்றே’
என்று காற்றை நோக்கிப் பாரதி பாடுகிறார். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ‘துன்பக்கேணி’ என்ற சொல்லையே புதுமைப்பித்தன் தம் சிறு கதையின் தலைப்பாகக் கொண்டுள்ளார்.
1935 மார்ச் 31-ஆம் நாள் ‘மணிக்கொடி’ இதழில் தொடங்கி, ஏப்ரல் 14-ஆம் நாள் இதழிலும், ஏப்ரல் 28-ஆம் நாள் இதழிலும் வெளியாகி ‘துன்பக்கேணி’ முற்றுப் பெற்றுள்ளது. மணிக் கொடி இதழில், ஐந்து பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு வெளியான இக்கதை, பின்னர் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்ற தலைப்பில், 1940 ஆம் ஆண்டில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பில் சில மாறுதல் களுடன் இடம்பெற்றுள்ளது.
1947-இல் இத்தொகுப்பின் இரண்டாம் பதிப்பு வெளியானபோது, தனிநூலாகவும் ‘துன்பக் கேணி’ வெளியாகியுள்ளது. (வேங்கடாசலபதி, ஆ. இரா. 2000: 806- 807). 3
“வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்கும்கூடத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவித் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின் மதிப்பிற்குக்கூடக் குறைந்த ஒரு சிறு கிராமம்” என்ற அறிமுகத்துடன் கதை தொடங்குகிறது. இவ் வூரில் உள்ள கோவில்களையும், ஜாதிவாரியாக மக்கள் வாழும் பகுதிகளையும் தொடக்கத்தில் அறிமுகம் செய்கிறார். கிராமம் என்றால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவர் இருக்க வேண்டுமே? வாசவன்பட்டியிலும், நல்ல குற்றா லிங்கம் பிள்ளை என்ற பண்ணையார் இருக்கிறார். ‘பண்ணைப்பிள்ளை’ என்றும் இவரைப் புதுமைப் பித்தன் அழைக்கிறார். பறையர் சமூகத்தைச் சேர்ந்த மருதி என்ற பெண்ணின் கணவன் வெள்ளையன். மாடு வாங்குவதற்காக இவரிடம் கடன் வாங்கிய வெள்ளையனால், அதைத் திருப்பித் தர இயலவில்லை.
எனவே அவன் வாங்கிய மாடு களைப் பண்ணைப் பிள்ளை கைப்பற்றிக்கொண் டார். இதன் பின்னர் பண்ணையாரின் மயிலைக் காளைகள் இரண்டைக் காணவில்லை. அவருக்கு வெள்ளையன் மீது சந்தேகம். ஆனால் அவனைக் காணவில்லை. அவனைத் தேடிய தலையாரித் தேவன் ‘மருதியின் தலை மயிரைப் பிடித்திழுத்து, அவளைக் கீழே தள்ளி, உதைக்க ஆரம்பித்தான். தேவனுக்கு மருதியை உதைப்பதில் ஒரு குஷி’. பனங்காட்டில் குடித்துவிட்டுக் கிடந்த நிலையில், வெள்ளையனைப் பிடித்து விட்டார்கள். அவன் உண்மையில் திருடாமல் இருந்தாலும் என்ன? விஷயம் வெகு எளிதில் போலீஸ் கேசாக மாறி, வெள்ளையன் சிறைக்குச் சென்றான். மாடுகள் கிடைக்கவில்லை. பண்ணைப் பிள்ளையைப் பொருத்த வரையில், ‘வெள்ளையன் சிறைக்குப் போனதில் பணத்திற்குப் பதிலாக ஒரு திருப்தி’ இரண்டு மாதக் கர்ப்பிணியான மருதி அப்பன் வீடு சென்றாள். அவள் போன நேரத்தில் சாலையில் கப்பி போட்டுக் கொண்டிருந்தார்கள். மருதிக்குக் கப்பி போடும் வேலை கிடைத்தது. ‘எப்பொழுதும் சாலையில் கப்பி போட்டுக்கொண்டேயிருக்க ஜில்லா போர்டிற்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது?’ மருதி வேலை இழந்தாள். இந் நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் கங்காணி அங்கு வர, மருதி தன் தாயுடன் கொழும்புக்குப் பயணமானாள். புதுமைப் பித்தனின் கூற்றுப்படி ‘பறைச் சேரியில் தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையின் மோட்சம் போலத் தோன்றியது’.
மணிக்கொடி இதழில் இக்கதை வெளிவந்த போது, முதல் மூன்று பகுதிகளின் தொடக்கத்தில், சில பாடல் வரிகளைப் புதுமைப்பித்தன் கொடுத் திருந்தார். ஆனால் சிறுகதைத் தொகுப்பில் இக் கதை இடம்பெற்ற போது அவற்றை நீக்கிவிட்டார். மேற்கூறிய பகுதியின் தொடக்கத்தில்,
“உழவையும் தொழிலையும் நிந்தனை செய்வோம்
உண்டுகளித் திருப்போர்க்கு வந்தனை செய்வோம்”
என்ற கவிதை வரியை வெளியிட்டு தமிழகக் கிராமப்புறங்களின் அவலத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாசவன் பட்டியிலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டம் ஒன்றிற்குக் கதை நகர்கிறது. ‘வாட்டர் பால்ஸ்’ என்ற அத்தேயிலைத் தோட்டத்தை, பாட்ரிக்ஸன் ஸ்மித் என்ற 45 வயது, வெள்ளைப் பிரம்மச்சாரி நடத்தி வந்தார். அவர் எத்தகைய குணாம்சம் உடையவர் என்பதைப் புதுமைப்பித்தன் பின்வருமாறு அறிமுகப்படுத்து கிறார்.
‘அவருக்கு இரண்டு விஷயங்கள் சந்தேக மில்லாமல் தெரியும். ஒன்று, இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பிரம்மச்சாரியாக இருப்பது என் பதன் அர்த்தம்; இரண்டாவது, தேயிலை உற்பத்தியில் கருப்பு மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது. இதற்கு மேலாகக் கறுப்பு கூலிகளின் பாஷையும் நன்றாகத் தெரியும்’
‘கூலிகளின் காரைக் குடிசைகள் கோழிக் கூடுகள் மாதிரி’ என்று வருணிக்கும் புதுமைப் பித்தன், அங்குப் பணிபுரியும் இந்திய அதிகாரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, ‘அதிகாரிகளோ தோலைத் தவிர மற்ற எல்லா அம்சத்திலும் துரைகளின் மனப்போக்கையுடையவர்கள்’ என்று அறிமுகப்படுத்துகிறார்.
இத்தோட்டத்தில்தான், மருதி கூலியாகச் சேருகிறாள். தன் தாய்க்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து வாங்க மருத்துவமனைக்குப் போனாள் மருதி. அதன் பின் நடந்தவைகளைப் புதுமைப் பித்தனின் கூற்றாகவே கேட்போமே!
அப்பொழுது தேயிலை ஸ்டோர் மானேஜர் அவளை ஆஸ்பத்திரியில் கண்டார். ‘புது உருப்படி’ என்பதால் அவர் ‘குளித்துவிட்டு வா!’ என்றதின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை. கூலிகளின் சம்பிரதாயத்தைப் பற்றி, காரியம் மிஞ்சிய பிறகு தான் அறிய முடிந்தது. கிழவிக்கு வயிற்றில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. பக்கத்தில் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் இது மிகவும் சாதாரண மான காரியம் என்று ஆயிற்று. அதற்கப்புறம் அவள் அந்தத் திசையிலேயே எட்டிப் பார்ப்ப தில்லை. ஆனால் ஸ்டோர் மானேஜர் லேசானவரா? விலக்க முடியாத பழக்கம். வேறு விதியில்லாமல் தலை கொடுக்க வேண்டியிருந்தது. தன் வெள்ளை யனை நினைத்துக் கண்ணீர் வடித்தாள் மருதி. வெள்ளையன் இருந்தால்...’
நாட்கள் ஓடின. மருதியின் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை. பெண் என்று தெரிந்ததுமே தாங்க முடியாத துக்கமாக இருந்தது. பெரிதானால் அதற்கும் அந்தக் கதிதானே...?
‘எண்ணிக்கையில்லாமல் பிறக்கும் மலேரியாக் கொசுக்களைப் போல்’ கூலிகளை மடியச் செய்யும் மலேரியா பரவ, மருதியின் தாய் இறக்கிறாள். வாழ்வின் தனிமை மருதியைப் பயமுறுத்துகிறது. இதன் பின்னர் அவள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங் களையும் அதற்குக் காரணமானவர்களையும் தனக்கே உரிய நையாண்டி மொழியில் புதுமைப் பித்தன் பின்வருமாறு எழுதுகிறார்.
தெய்வத்தின் கருணை அவ்வளவு மோச மாகப் போய்விடவில்லை. கண்ணைக் கெடுத் தாலும் கோலையாவது கொடுத்தது. ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகத்தைச் சேர்ந்த பேர்வழி. தனது இஷ்ட தெய்வத்திற்குத் தான் ருசித்துப் பார்த்துத்தான் சமர்ப்பிப்பார். தற் செயலாக வருவது போல் திரு.பாட்ரிக்ஸன் ஸ்மித் அவர்களை அழைத்து வந்தார். ஸ்மித்தினுடைய ரசனையும் அவ்வளவு மட்டமானதன்று. மருதியும் குழந்தையுடன் பங்களாவின் பக்கத்தில் தோட்டக் காரியாக வசிக்க ஆரம்பித்தாள்.
இப்பகுதி மணிக்கொடியில் வெளியான போது பின்வரும் வரிகளைத் தொடக்கப் பகுதியில் புதுமைப் பித்தன் குறிப்பிட்டுள்ளார்.
“ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடியக்
காண்பது நங்கையர் உள்ளம்”.
இரண்டு ஆண்டுகள் கழிந்தன. சிறையில் இருந்து விடுதலையான பின், மருதியைக் காண் பதற்குத் தேயிலைத் தோட்டத்திற்கு வருகிறான் வெள்ளையன். தகர விளக்கின் மங்கிய ஒளியில் மருதியைக் காண்கிறான். அவள் மேலெல்லாம் ‘பரங்கி புண்’ (சிபிலிஸ்). அதிர்ச்சியடைந்த அவனிடம் “இங்கே இதுதான் வளமொறை!” என்கிறாள் மருதி. அது தன் குழந்தை தானா என்று ஐயமுற்ற வெள்ளையனிடம் “கண்ணானை” உன் குழந்தைதான் என்று ஆணையிட்டுச் சொன்ன மருதி, ரூபாய் 200ஐயும், வெள்ளச்சி என்று பெயரிட்ட தன் குழந்தையையும் அவனிடம் கொடுத்துத் திருப்பி அனுப்புகிறாள். இப்பகுதி மணிக்கொடி இதழில் வெளியானபோது கதையின் தொடக்கத்தில்,
புண் பூத்த மேனி, புகைமூண்ட உள்ளமடா - அவள்
மண்பூண்ட பாபம், நம் மதிமூத்த கோரமடா
என்ற பாடல் வரிகளை பு.பி. குறிப்பிட்டிருந்தார். பரங்கிப் புண் மருதியின் உடலை மட்டுமின்றி அவள் வேலையையும் மாற்றியது. துரையின் பங்களாத் தோட்டக்காரி என்ற நிலைமாறி மீண்டும் தேயிலைக் கூலியாக மாறுகிறாள். வியாதியின் காரணமாகக் கூலி வேலையில் இருந்து மருதி நீக்கப்பட்டு, தாய் மண்ணுக்குப் பயணமாகிறாள். தான் வாழ்ந்த சேரிக்குள் நுழைந்த அவள், மணஊர்வலத்தில் மணமகனாக வரும் வெள்ளையனைப் பார்த்துவிட்டு, ஓரமாக நின்று, பாளையங்கோட்டை திரும்புகிறாள். புல்வெட்டி விற்று வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொண்டு, பாளையங்கோட்டை மருத்துவமனையில் தன் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள். பொருனை ஆற்றுநீரும். மருந்தும் அவள் நோயைக் குணப்படுத்துகின்றன. குழந்தையின் நினைவு வாட்ட வாசவன்பட்டி செல்கிறாள். வெள்ளையனின் புது மனைவி, தன் குழந்தையைத் திட்டி அடிப்பதைக் கண்டு, குழந்தையை வாரியெடுத்து, அவள் கன்னத்தில் ஓங்கி அடிக்கிறாள். இருவருக்கு மிடையே அடிதடி நடக்கத் தொடங்கியது. இவளை அடையாளம் காணாத சேரி மக்கள் துரத்திவிடு கின்றனர். அன்று மாலையில் குழந்தை வெள்ளச்சி காணாமல் போய்விட்டது.
“என்றும் உதையும் திட்டும் வாங்கிக் கொண் டிருக்கிற குழந்தை, பொரி கடலையும் தின் பண்டமும் வாங்கிக் கொடுக்கும் ஒருவரைக் கண்டால் உடன் வருவதற்குச் சம்மதியாமலா இருக்கும்?”
என்று வெள்ளச்சியை மருதி தூக்கிச் சென்றதை நயமாகக் குறிப்பிடுகிறார் பு.பி. குழந்தையுடன், வெகுதூரத்திற்குச் சென்று விட வேண்டும் என்ற முடிவுடன் காத்திருத்த மருதி, கங்காணி சுப்பனைச் சந்திக்கிறாள். வாட்டர் பாலம் தோட்டம் நோக்கி அவளது பயணம் மீண்டும் தொடங்கியது.
மருதியின் தேயிலைத் தோட்ட வாழ்க்கையில் கங்காணி சுப்பனின் மனைவி என்ற நிலை கிடைத்தது. 14 ஆண்டுக்கால வாழ்வில் வெள்ளச்சி பருவடைந்துவிட்டாள். வாட்டர் பாலச் சூழலில் “கருவாட்டைக் காக்கிற மாதிரி” அவளைக் காத்து வந்தாள் மருதி.
வாட்டர் பாலத்தில் புதிதாக உருவாக்கப் பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் இராமச்சந்திரன் என்ற இளைஞன். அப்பள்ளியில் படிக்கச் சென்ற வெள்ளச்சிக்கும் இராமச்சந்திரனுக்கும் இடையில் காதல் உருவா கிறது. மருதியைக் கெடுத்த ஸ்டோர் மேனேஜருக்கு வெள்ளச்சியின் மீதும் கண் விழுந்தது. துரையின் பங்களாவில் வேலை செய்யும் குதிரைக்கார சின்னானுக்கு, வெள்ளச்சியை மணம் முடிக்க முடிவாயிருந்தது. கங்காணி வேலையின் மேல் நாட்டம் கொண்டிருந்த சின்னான், அதை அடைய வெள்ளச்சியை, ஸ்டோர் மானேஜர் அனுபவிக்க ஒத்தாசை செய்ய முடிவெடுத்தான். கொழுந்து பறிக்கச் சென்ற வெள்ளச்சியை மரத்தில் கட்டி வைக்கிறான் சின்னான். தற்செயலாக அங்கு வந்த இராமச்சந்திரன் சின்னானைத் தாக்க, சின்னான் திருப்பித் தாக்க இராமச்சந்திரன் மயங்கி விழு கிறான். இந்த இடைவெளியில் ஸ்டோர் மானேஜர், தான் நினைத்ததை முடித்துவிட்டான். செய்தி யறிந்த மருதி “என்னைக் கெடுத்த பாவி, என் மகளையும் குலைத்தாயே!” என்று கூறி ஒரு கல்லைத் தூக்கி ஸ்டோர் மானேஜர் மீது வீச, அது நெற்றிப் பொருத்தில் பட்டு, அவன் உயிரைப் பறித்துச் சென்றது.
நடந்த நிகழ்வுகளைத் தோட்டத் துரையிடம் இராமச்சந்திரன் குறிப்பிட்டான். தொழிலாளர் களின் ஆவேசத்தையும், குற்றம் அதிகாரிகளின் பக்கம் இருப்பதையும் உணர்ந்த துரை, தோட்டத்தின் பெயர் பத்திரிகைகளில் இடம்பெறுவதைத் தவிர்க்கும் வழிமுறையாகக் கொலை நிகழ்வைத் தன் செல்வாக்கால் அமுக்கிவிட்டார். பைத்தியம் பிடித்த மருதியை அழைத்துக்கொண்டு வெள்ளச் சியும் இராமச்சந்திரனும் எங்கோ சென்று விட்டார்கள்.
போகிற போக்கில் என்பது போல் சில சமூக எதார்த்தங்களை இக்கதையில் கூறிச் செல்கிறார் பு.பி.வாசவன் பட்டி கிராமத்தின் சேரியில் வாழும் மக்களது வருவாய் யாரிடம் போய்ச் சேர்கிறது என்பதனை,
கோடைக்காலம் ஆரம்பமாகி அறுப்பும் தொடங்கிவிட்டது. அறுப்புத் தொடங்கிவிட்டது என்றால் ஒட்டப்பிடாரம் பிள்ளைக்கும் அதை விட, சேரியின் பக்கத்தில் கள்ளுக்கடை வைத் திருக்கும் இசக்கி நாடாருக்கும் கொள்ளை. சாயங் காலம் ஐந்து மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணி வரை பிள்ளையவர்களின் கடை முன்பு சந்தை இரைச்சலாக இருக்கும்.
என்று குறிப்பிடுகிறார். சேரி மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையான சொல்லாடல் களையும்,
“இரு சவமே, அண்ணாச்சி கிட்ட பேசுறது தெரியல்லே - வர வர பறக் களுதைகளுக்கும் திமிறு ஏறுது!”
“அங்கே நிக்கது மருதியா - ஏ மூதி! தொளூவிலே மாட்டுக்கு ரெண்டு செத்தை எடுத்துப் போட்டுட்டு வா!”
“ஏ மூதி புல்லுகட்டு என்ன விலை”
என்று பதிவு செய்துள்ளார். நல்ல வெயில் நேரத்தில் வாசவன் பட்டிக் குளக்கரை வழியாகச் செல்கிறாள் மருதி. வெயிலின் உக்கிரத்தை, “வெள்ளிக்கிழமை மத்தியானம் வெய்யிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது” என்று வருணிக்கிறார்.
பு.பி. பிறந்து வளர்ந்த அன்றையத் திருநெல் வேலி மாவட்டத்திலிருந்து ஏராளமானவர்கள் பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்றனர். அவர் களை இரண்டு வகையாகப் பகுக்கலாம். முதல் வகையினர் இலங்கையின் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றனர். இந்நகரில் வாணிபம், தரகு வேலை, சமையல் வேலை, முடிதிருத்தல், கணக்கு வேலை என்பனவற்றை மேற்கொண்டு வாழ்க்கை நடத்தினர். இவர்கள் அனைவரும் வருவாய் ஈட்டுவதில் ஒரே தரத்தவர் அல்லர் என்பதால் இவர்களது வாழ்க்கைத் தரமும் ஒரே தரத்தில் அமைந்திருக்கவில்லை. “ஐவருக்கு நெஞ்சும் அரண்மனைக்கு வயிறும்” என்று விதுரனை நோக்கி, துரியோதனன் கூறியது போல, இவர்கள் இலங்கையில் வாழ்ந்து பொருளீட்டினாலும் அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, நிலமாகவும் வீடாகவும் மாற்றுவதில் கருத்தாய் இருந்தனர். ஆனால் மலையகத் தமிழர்களில் பெரும்பாலோர் தம் பூர்வீகக் கிராமங்களுடன் மட்டுமின்றி, தம் சாதிய உறவுகளையும்கூடத் துண்டித்துக் கொண்டு, பல கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு, மலையகத்தையே தம் தாயகமாக மாற்றிக் கொண்ட வர்கள்.
பு.பி. பிறந்த சைவ வேளாளர் சமூகத்தினர் முதல் வகையைச் சார்ந்தவர்கள். ஏதேனும் ஒரு வழியில் பு.பி.க்கு இவர்களுடன் தொடர்பு இருந் திருக்க வாய்ப்புண்டு. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை “கொழும்பு சம்பாத்தியம்”, “கொழும்புச் செட்டியார்”, “கொழும்புப் பிள்ளை”, “கொழும்புப் பண்ணையார்” என்ற சொற்கள் இம்மாவட்டத்தில் பரவலாக வழக்கில் இருந்தன. துன்பக் கேணியை அடுத்து 1937-இன் இறுதியில் எழுதிய ‘நாசகாரக் கும்பல்” என்ற சிறுகதையில், திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புக் களிடையே கொழும்பு என்றால் இலங்கையின் ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் என்றுதான் பொருள். உயர்ந்த வேளாள வகுப்புக்களிடையே தான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்று அர்த்தம்.
என்று எழுதியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிழைப்புக்காகக் கடல் கடந்து சென் றாலும், சாதி அடிப்படையிலேயே தொழில் வாய்ப்புகள் கிடைப்பதை பு.பி. அறிந்துள்ளார் என்பதை மேற்கூறிய செய்தியின் வாயிலாக உணரலாம். இது மட்டுமின்றி இலங்கைத் தேயிலைத் தோட்ட வாழ்வின் கொடூரங்களை அவர் மிக நுட்பமாக அறிந்து தம் சிறுகதையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதன் விளைவாகவே நம் மனதை உறுத்தும் அவலப் பாத்திரமாக மருதி காட்சியளிக்கிறாள்.
1940-இல் வெளியான “புதுமைப்பித்தன் கதைகள்” என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில், “துன்பக்கேணி” ஒரு குறுநாவல் திட்டத்திற்கு வளர்ந்து போனாலும் அதில் ஒருமை நிற்கிறது. எல்லா நிகழ்ச்சிகளும் சோகப் பூச்சைப் பூசிக் கொண்டு தோன்றுகின்றன” என்று ரா.ஸ்ரீ. தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.
புதுமைப்பித்தன் தமது ‘துன்பக்கேணி’ என்னும் சிறுகதையில், இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர் களைப் பற்றியும், அவர்கள் தமிழகத்திலே தமது தாயகத்திலே சமூகப் பொருளாதார ரீதியாக எத்தகைய கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கி ஒதுக்கப்பட்டிருந்தனர் என்பதையும் மிக நாசூக்காகவும், அதே சமயம் மிகத் துல்லியமாகவும் காட்டியுள்ளார்.
“...துன்பக்கேணி என்னும் கதையிலே தமிழர் சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களிலுள்ள ஒரு பகுதி மக்களின் அவல வாழ்வையும், வாழ்க்கைப் போராட்டத்திற் சிக்கித் தவித்து அவஸ்தைகளுக் குள்ளாகி அவர்கள் இடும் ஓலங்களையும், பண்ணை யாளர்கள்- தோயிலைத் தோட்ட அதிகாரிகள் போன்ற பெரிய மனிதர்களின் சிறுமைத் தனங் களையும், மனப் பொருமலுடனும் ஆத்திரத் துடனும், எரிச்சலுடனும் வேதனைச் சிரிப்புடனும் எலும்பின் குருத்துக்களையே சிலிர்க்க வைக்கும் சோகக் குரலுடனும் திரைப்படக் காட்சிபோற் காட்டியுள்ளார்”.
என்ற மலையகத் தமிழர்கள் குறித்த வரலாற்று நூலின் கலாநிதி அருணாசலம் குறிப்பிடுகிறார்.
இக்கூற்றுகள் முற்றிலும் உண்மையானவை என்பதை இச்சிறுகதையைப் படித்து முடித்த வர்கள் உணர்வர். தம் சம காலத்துப் படைப் பாளிகள் தொடாத ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையைப் படைப்பாக்கியதன் வாயிலாக, தமிழ்நாட்டின் டி. செல்வராஜ், கு. சின்னப்ப பாரதி ஆகியோருக்கு முன்னோடியாக அமைந்து பு.பி. வழிகாட்டியுள்ளார்.
* * *
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 12-02-2006இல் நடத்திய புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கில் படிக்கப் பெற்றது. - “புதுவிசை” 2006
துணை நூல்பட்டியல்:
- அருணாசலம் கலாநிதி, க. 1994. இலங்கையின் மலையகத் தமிழர்
- சாரல் நாடன், 1988. தேசபக்தன் கோ. நடேசய்யர்
- சாரல் நாடன், 1990. மலையகத் தமிழர்
- சாரல் நாடன், 1993. மலையக வாய்மொழி இலக்கியம்
- சாரல் நாடன், 2000. மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்
- நவஜோதி, க. 1971. இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும், நாட்டுப்புறப் பாடல்களும் வேங்கடாசலபதி ஆ. இரா. 2000. புதுமைப்பித்தன் கதைகள் முழுத் தொகுப்பு
- Betram Bastiampillai, 1968, Social Conditions of the Indian Immigrant Labourer inCeylon in the 19th century.
- Langa Sundaram, Indian Overseas
- Panchanan Saha, 1970. Emigration of Indian Labour (1834- 1990).
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...