“ஒரே நாடு ஒரே சட்டம்” என்கிற வேலைத்திட்டம் இப்போது நேரடியாக சட்டமாக்கப்படப்போவதை அரசு அறிவித்திருக்கிறது. அதுவும் வர்த்தமானி அறிவித்தலின் மூலம்; அதுவும் அது ஞானசார தேரர் தலைமையில்.
இலங்கையில் இந்த வார உச்ச பேசுபொருள் அது தான். அப்படி உச்ச பேசுபொருளாவது தான் அரசின் உடனடி இலக்கும். அந்த இலக்கு வெற்றியளித்திருக்கிறது. சகல ஊடகங்களின் கவனமும் இதை நோக்கி குவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினை, விவசாய உர ஊழல், ஆசிரியர்களின் போராட்டம், விலைவாசிக்கு எதிரான போராட்டங்கள், பல அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை போன்ற பிரதான பேசுபொருள் அத்தனையையும் இந்த “ஒரே நாடு, ஒரே சட்டம்” சர்ச்சையின் மூலம் அடுத்த நிலைக்கு தள்ள முடியும் என்று அரசு திடமாக நம்புகிறது. இதனால் பெருவாரி சிங்கள பௌத்தர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று நம்பியிருக்கிறது. எதிர்வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கோத்தபாய அரசு இனவாதத்தைத் தான் கையிலெடுக்கும் என்பதை கோத்தபாய வெற்றியடைந்ததுமே நாம் எதிர்பார்த்தது தான். இதன் மூலம் பெருவாரி சிங்கள பௌத்தர்களை ஓரளவு திருப்திகொள்ளச் செய்யலாம் ஆனால் பட்டினியின் முன்னால் அந்த கைங்கரியம் நிலைக்காது. அதுபோல இந்த கைங்கரியம் வெளிநாட்டு உதவிகளை முடக்கவும் வல்லது என்பதை அறியாதர்வர்களும் அல்லர்.
தற்போது அரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து தற்காலிகமாகவாவது இடைவேளையை அடைவதற்கான தந்திரோபாயமாகவே இதனை தென்னிலங்கை அரசியல் விமர்சகர்களும் கணிக்கிறார்கள். ஆனால் அது மட்டுமா? இதன் எதிர்கால விளைவு என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
கடந்த ஒக்டோபர் 26 வெளியிடப்பட்ட 2251/30 இலக்க வர்த்தமானியின் மூலம் ஜனாதிபதி வெளியிட்டுள்ள பிரகடனத்தில்
ஒரு தரப்புக்கான சட்டம்
“ஒரே நாடு ஒரே சட்டம்” வேலைத்திட்டத்துக்கான செயலணியை தாபித்து அதில் அங்கம் வகிக்கும் 13 பேரின் பெயர்களை அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி. அவர்களில் 9 சிங்கள பௌத்தர்களையும். நான்கு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களையும் நியமித்திருக்கிறார்கள். இச்செயலணியில்
- ஒரு தமிழரும் இல்லை.
- ஒரு கிறிஸ்தவரோ, இந்துவோ இல்லை
- ஒரு பெண் கூட இல்லை
- இளம் தலைமுறையினர் எவரும் கிடையாது
ஆக இது தான் “ஒரே சட்டத்தை” உருவாக்கப் போகும் செயலணியா? இச்செயலணியில் இவர்கள் இல்லையே என்று விசனப்படுவதற்கும் எதுவும் கிடையாது ஏனென்றால் இச்செயலணியின் திட்டமே இனவாத, மதவாத, பால்வாத, வலதுசாரி நலன்களைக் கொண்டது அல்லவா? அதில் தமிழரோ, கிறிஸ்தவர்களோ, பெண்களோ இருந்தாலும் ஒன்று தான் இல்லாது விட்டலும் ஒன்று தான். அவர்களின் உள்நோக்கத்தில் மாற்றங்களை நிகழ்த்தப்போவதில்லை. தற்போது அங்கம் வகிக்கும் நான்கு முஸ்லிம் இனத்தவர்களும் கூட வெறும் போடுதடிகள் தான் என்பதை விளங்கிக் கொள்ள விசேட அறிவு நமக்கு அவசியப்படாது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு முன்னர் இதே ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி 2248/57 இலக்க வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டிருந்தது. அது பொருளாதார புத்தெழுச்சி, வறுமையொழிப்பு என்பவற்றுக்கான 29 பேரைக் ஜனாதிபதி செயலணி. அரச அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளையும் கொண்டது அச்செயலணி. அதிலும் ஒரு தமிழர் முஸ்லிம் இனத்தவரும் இல்லை. தமிழ், மலையக, முஸ்லிம் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இல்லை. எனவே எந்த மக்களுக்கான “வறுமையொழிப்பு” என்பதை அவர்கள் இலக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியத்தேவையில்லை.
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்கிற கருத்தாக்கமானது மேலோட்டமான பார்வையில் ஏதோ சமத்துவத்தை பிரதிபலிப்பது போல உலகுக்கு தோணக்கூடிய ஒன்று. ஆனால் “ஒரிலங்கை”, “ஒற்றையாட்சி”, “ஒருமித்த ஆட்சி” என்கிற கருத்தாக்கத்தின் இன்னொரு வடிவம் என்பதை இதன் நீட்சியை அறிந்த எவருக்கும் புரியும். அதுமட்டுமன்றி “சிங்கள பௌத்தத்துக்கு அடங்கி வாழல்” என்பதே அதனுள் பொதிந்துள்ள மறைமுக நிகழ்ச்சித்திட்டம் என்பதே நிதர்சனம்.
ஒரே மதம் பௌத்தம், ஒரே இனம் சிங்களம், ஒரே மொழி சிங்களம், என்கிற தத்துவத்தின் மீது தான் இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற திட்டம் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது சொல்லித்தெரியத் தேவையில்லை. சிங்கள பௌத்தம் தவிர்ந்த எதுவும் புறக்கணிப்புக்கும், பாரபட்சத்துக்கும், அநீதிக்கும் உள்ளாகும் நாடாக இலங்கை மாறி எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டன. மாபெரும் யுத்தத்தையும் தான்
கொல்வின் ஆர் டீ சில்வா இதைத்தான் அன்றே ஒரு மொழியானால் இரு நாடு, இரு மொழியானால் ஒரே நாடு (One language, two nations; Two languages, one Nation) என்றார்.
முஸ்லிம் எதிர்ப்பின் வழித்தடம்
2009 இல் தமிழீழப் போராட்டத்தை முற்றுமுழுதாக நசுக்கிவிட்டதாக கொக்கரித்துகொண்டிருந்த சிங்களத் தரப்புக்கு 2009 க்குப் பின்னர் தமிழ் தரப்பு ஒரு சவாலான தரப்பாக இல்லை என உறுதியாக நம்பத் தொடங்கியது. பேரம் பேசும் வல்லமை உள்ள தரப்பாகக் கூட தமிழ் தரப்பை கண்டுகொள்ள சிங்கள அரச தரப்பு தயாராக இல்லை. எஞ்சிய எச்சசொச்ச விடயங்களையும் அழிக்க கைவசம் “தமிழ் (புலி) டயஸ்போரா” என்கிற ஒரு பீதியை கையாண்டுகொண்டே இருந்தது. எனவே தான் சிங்களப் பேரினவாத தரப்பு அடுத்ததாக முஸ்லிம்களை இலக்கு வைத்தனர்.
ஒரே நாடு, ஒரே நீதி என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் பேரினவாத சக்திகள். குறிப்பாக ஞானசாரர் தேரருக்கு இதில் பாரிய பங்குண்டு. இந்தக் கருத்தாக்கம் நேரடியாக முஸ்லிம்களை இலக்கு வைத்துத் தான் உருவாக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக, இனப்பெருக்க பீதி, கருத்தடை சதி பற்றிய பிரச்சாரம், மதராஸாக்களின் அதிகரிப்பு பற்றிய பிரச்சாரம், காதி நீதிமன்ற கட்டமைப்பு சர்ச்சை, பாரம்பரிய முஸ்லிம்கள்/வஹாபிய முஸ்லிம்கள் என்கிற வரைவிலக்கணப்படுத்தல், ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரச்சாரம், தொல்பொருள் இடங்களை ஆக்கிரமித்து அழிக்கிறார்கள் என்கிற பிரச்சாரம், மாட்டிறைச்சித் தடை, ISIS பீதி, ஹிஜாப் எதிர்ப்பு, குவாசி (Quazi Court) நீதிமன்றத்துக்கு எதிர்ப்பு என கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புகளை பல முனைகளிலும் ஏற்படுத்தி அந்த எதிர்ப்புணர்வலையை சிங்கள மக்கள் மத்தியில் சமூகமயப்படுத்தியது ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா தான். அதனைத் தொடர்ந்து ராவண பலய, “ராவண பலகாய” (ராவண படை), சிஹல ராவய, சிங்களே இயக்கம் “மகாசென் 969” உள்ளிட்ட பல இயக்கங்களுக்கு முஸ்லிம் வெறுப்புணர்ச்சிக்கான கருத்தாக்கங்களை கட்டமைத்து, அதை பரப்பி வெகுஜன வெறுப்புக்கு பாதை போட்டு தலைமை கொடுத்தவர் ஞானசாரர் தான். எனவே அதே ஞானசாரர் இந்த செயலணிக்கு தலைமை தாங்க பொருத்தமானவர் தான்.
இந்த வரிசையில் பேரினவாத நிகழ்ச்சித்திட்டக் களத்தில் முஸ்லிம் சட்டங்களையும் கையிலெடுத்த சிங்களத் தரப்பு “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற பிரச்சாரத்தை முன் வைத்தது. முஸ்லிம் விவாக சட்டத்தினால் வயதில் குறைந்த சிறுமிகள் பலர் திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை சுமத்தி ஆகவே முஸ்லிம் சட்டத்தை நீக்கி அனைவருக்கும் “ஒரே சட்டம்” கொண்டுவரப்படவேண்டும் என்கிற கோஷத்தை முன்வைத்தார்கள். ஒரே நாட்டில் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்றார்கள்.
பேரினவாத தரப்பு தயாரித்து வைத்திருந்த அக்கருத்தாக்கத்தை அப்படியே கோத்தபாய 2019 ஜனாதிபதித் தேர்தல் களத்தில் கோத்தபாய அணியினர் பிரதான கருப்பொருளாக தூக்கிப் பிடித்தார்கள். அதற்கான சித்தாந்த வழித்தடத்தை நேரடியாக உருவாக்கிக் கொடுத்தவர்கள் கோத்தபாயவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக உருவான உலகளாவிய சிங்கள பௌத்த புத்திஜீவிகளைக் கொண்ட “வியத்மக” இயக்கம். “சிங்கள டயஸ்போரா”வைச் சேர்ந்த சிங்கள பௌத்த நிபுணர்கள் இதற்காகவே வந்திறங்கி தேர்தலையும் வெல்லச் செய்து, தேர்தலின் பின்னரும் நிபுணர் குழுவாக இயங்கி வருகின்றனர். இன்றளவில் “வியத்மக” பல சிதைவுகளைக் கொண்டிருகிறது என்கிற போதும் இந்த பின்புலத்தையும் சேர்த்துத் தான் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற நிகழ்ச்சிநிரலை நாம் நோக்க வேண்டும்.
இலங்கை போன்றதொரு பல்லின நாட்டில் ஏனைய சமூகங்களின் தனித்துவமான சில பாரம்பரிய உரிமைகளுக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் ஏலவே உள்ளன.
அத்தகைய தனியாள் சட்டங்களாக கண்டியச் சட்டம், இஸ்லாமியச்சட்டம், தேச வழமைச் சட்டம் போன்றன நடைமுறையில் உள்ளன. அது மட்டுமன்றி 13 வது திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்குக்கான விசேட பட்டியல் மாகாண சபையின் நியதிச் சட்டமாக உள்ளது. மாகாண சபை முறையையும் இல்லாதொழித்து ஒரே அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அனைத்தையும் கொண்டுவருவது என்பதே பேரினவாத நிகழ்ச்சிநிரல். ஆக முஸ்லிம் சட்டத்தின் மீதான பாய்ச்சல் என்பது வெறும் அச்சட்டம் சம்பந்தப்பட்டது அல்ல. அது சிறுபான்மை இனங்களின் எஞ்சிய உரிமைகளையும் பறிக்கும் இலக்கைக் கொண்டது. சிங்கள பௌத்த மையவாதத்தை பலப்படுத்தும் திட்டம்.
மேலும் இன்னொன்றையும் இங்கே குறிப்பட வேண்டும். முஸ்லிம் சட்டத்தால் தான் இலங்கையில் அதிக சிறுவர் திருமணங்கள் நிகழ்கின்றன என்பது வெறும் புனைவே என்பதை டொக்டர் துஷார விக்கிரமநாயக்க தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் நிரூபித்தார், அவர் சுட்டிக்காட்டிய தரவுகளில் சனத்தொகை விகிதத்தின்படி இலங்கையில் அதிகமாக சிறு வயது திருமணங்கள் மலையக சமூகத்தில் தான் நிகழ்கின்றன என்றும் விளிம்பு நிலை சமூகமாக மலையக மக்களின் நிலை அவ்வாறு இருப்பதற்கு காரணங்களை அவர் முன்வைத்திருக்கிறார். அடுத்ததாகத் தான் முஸ்லிம் சமூகம் காணப்படுகிறது. அதேவேளை எண்ணிக்கை அளவில் அதிகளவில் சிறுவர்கள் திருமணம் முடிக்கிற சமூகமாக சிங்கள சமூகமே இருப்பதை அவர் விலாவாரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே முஸ்லிம் சட்டத்தால் தான் இது நிகழ்கின்றது என்பதும், முஸ்லிம்களில் தான் இது நிகழ்கின்றது என்பதும் சுத்த அபத்தம்.
ஞானசார என்கிற குற்றவாளி
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்கான சட்டவரைவை உருவாக்குவது இந்த செயலணியின் பணியென ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் குறிப்பிடுகிறது.
ஞானசாரருக்கு தெரிந்த சட்டம் எது? அவர் சட்ட வல்லுனரும் கிடையாது, சட்டத்தை மதிக்கவும் தெரியாது அதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும்.
ஞானசார தேரர் இன்று சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கவேண்டியவர். ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தையே அவதூறு செய்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் 2019 ஆம் ஆண்டு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர். பின்னர் அத் தண்டனையில் இருந்து விடுபட கெஞ்சி, மன்னிப்பு கோரி ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலையானவர். அவ்வாறு சட்டத்தை கேலி செய்து தண்டனை வதிக்கப்பட்ட ஒருவரிடம் சட்டவாக்க உரிமையை எந்த தார்மீகத்தின் பேரில் ஒப்படைக்கலாம்? எத்தனையோ வழக்குகளில் இருந்து தப்பி வந்த ஞானசார தேரர் நீதிமன்ற அவதூறு வழக்கில் மட்டும் தான் தண்டனை விதிக்கப்பட்டார். அதிலிருந்தும் ஜனாதிபதி மன்னிப்பு பெற்றார்.
2015 ஆம் ஆண்டு அளுத்கம, திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் சூத்திரதாரியாக அறியப்பட்டவர். அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக (பாதுகாப்பு அமைச்சர் மகிந்தவை விட அதிக அதிகாரம் கொண்டவராக இயங்கியவர்) இருந்து ஞானசாரர் மீது எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்க விடாதபடி பாதுகாத்தவர் கோத்தபாய. அந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பினரும் தான் என்பதையும் நினைவில் கொள்வோம். இனவாத சிவில் தரப்பும், அரச அதிகாரமும், படைத்தரப்பும் சேர்ந்து நடத்திய கூட்டு நடவடிக்கை அது என்பதை பலரும் அறிவோம். ஒரு நாடு ஒரே சட்டம் என்கிற கொள்கையைக் கொண்டவராக இருந்திருந்தால் அன்றே ஞானசார தேரர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு எதிராக விசாரணை கூட நடக்கவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் 30வது அத்தியாயத்தில் முடிவுரை வரிசையாக குறிப்பிடப்படுகிறது. 475 ஆம் பக்கத்தில் 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமான நான்கு உள்ளூர் முஸ்லிம் அமைப்புகளையும், ISIS என்கிற சர்வதேச இஸ்லாமிய அமைப்பையும் உள்ளூர் இனவாதக் குழுவான பொதுபல சேனாவையும் குற்றம் சாட்டியுள்ளது. அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்துள்ளது. இனவாத அமைப்பென சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த பொதுபல சேனாவின் பெருமூளை, தத்துவாசிரியர், தலைவர், வழிநடத்துனர் தான் இந்த ஞானசார தேரர்.
அது மட்டுமன்றி மொத்தம் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கைகளில் பொது பல சேனாவுக்கும், ஞானசாரதேரருக்கும் எதிரான பல சாட்சியங்கள் உள்ளன. அப்படிப்பட்ட இயக்கத்துக்கு தலைமை வகிக்கும் ஞானசாரரை இச்செயலணிக்கு தலைமை தாங்க வைத்திருப்பது அறியாமையால் அல்ல. மோசமான உள்நோக்கத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்.
ஞானசார தேரர் வாகனமொன்றை வேகமாக, கட்டுப்பாடின்றி, வாகனம் செலுத்தி, வீதியில் வெல்லம்பிட்டிய வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு முச்சகர வண்டியில் மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். துமிந்த என்கிற முச்சக்கர வண்டி சாரதி கடும்காயங்க்ளுக்கு உள்ளாகியுள்ளார். நள்ளிரவு இரண்டு மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னோர் இடத்தில் பொலிசார் அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். ஞானசார தேரர் அப்போது குடிபோதையில் இருப்பதை அறிந்து அவரை போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மதுவருந்தியிருக்கிறாரா என்பதை உறுதிசெய்யும் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்ததில் சிகப்பு நிறக் கோட்டையும் தாண்டிச் சென்றுள்ளது. போலீசார் நீதிமன்றத்துக்கு கொடுத்த அறிக்கையில் அவர் குடிபோதையில் இருந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். (வழக்கு இலக்கம் 6315-2000). 12 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் செலுத்தி அவ்வழக்கில் இருந்து விடுதலையானார் ஞானசாரர். இப்பேர்பட்ட சட்டமீறல்களில் ஈடுப்பட்ட ஒருவரிடம் சட்டவுருவாக்கப் பொறுப்பைக் கொடுக்க எந்த அறிவாளி முன்வருவார்.
ஞானசாரர் செய்த அடாவடித்தனங்கள், சண்டித்தனங்கள், மிரட்டல்கள் எல்லாமே பட்டியல் பல சர்வதேச அறிக்கைகளில் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.
அப்பேர்ப்பட்ட ஞானசாரருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்ததானது நரியிடம் கோழியை பாதுகாக்கக் கொடுத்தது போன்றது.
கோத்தபாய – ஞானசார கூட்டு
2013 இல் பொதுபல சேனா உருவாக்கப்பட்டதன் பின்னணியல் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக அன்று பல தகவல்கள் வெளிவந்த வேளை அதை இரு தரப்பும் மறுத்தன. ஆனால் ஆரம்பத்தில் பொதுபலசேனாவின் நிகழ்சிகளில் கோத்தபாய கலந்துகொண்டது பற்றிய செய்திகளும் படங்களும் கூட வெளியாகியிருந்தன. ஆனால் இன்று அந்த ஞானசார தேரர் மீது இருக்கிற பக்தியையும், நம்பிக்கையையும் ஜனாதிபதி கோத்தபாய வர்த்தமானியில் கீழ்வரும் வரிகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி பதவியை வகிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், தங்களின் விவேகம், திறமை மற்றும் பற்றுறுதி என்பவற்றின்மீது மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு, மேற்சொல்லப்பட்ட உஙகளை ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான சனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்துவதற்காக இத்தால் நியமிக்கின்றேன்...”
இலங்கையில் சமத்துவத்துக்காக பணிபுரியும் எவ்வளவோ சட்ட வல்லுனர்கள் இருக்கும் போது சட்டம் தெரியாத, சட்டத்தை அவமதித்த, நீதிமன்றம் விதித்த தண்டனையில் இருந்து குறுக்குவழியில் தப்பிவந்த, சட்டத்தை தன் கையிலெடுத்து வன்முறையில் இறங்கிய அனுபவங்களைக் கொண்ட, அத்தகைய வன்முறைகளுக்கு சிங்கள பாமரர்களைத் தூண்டிய, தூண்டி வருகிற ஞானசாரரை இச்செயலணிக்கு நியமித்ததன் அடிப்படை நோக்கம் என்னவாகத் தான் இருக்க முடியும். அதுவும் தலைவராக.
வர்த்தமானியின் படி நீதியமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை ஆராய்ந்து திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை செய்யும் அதிகாரத்தை இக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டிருகிறது என்றால்; அப்பேர்பட்ட சட்டவரைபை தயாரித்த சட்டநிபுணர்களை விட அதிகமான துறைசார் நிபுணத்துவம் ஞானசாரருக்கு என்ன இருக்கிறது. அதுசரி.... சட்டவாக்கம் சம்பந்தப்பட்ட ஒரு செயலணிக்கு மதகுருமார் ஏன்? பௌத்த பிக்குவும், மௌலவிமாரும் ஏன்?
ராஜபக்சக்களுக்கான நாடும், சட்டமும்
இதைஎல்லாவற்றையும் விட கோத்தபாயவுக்கு இருக்கிற “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற திட்டத்தை ஏற்படுத்தும் தார்மீகம் தான் கோத்தபாயவுக்கு உண்டா. கோத்தபாய மீது நீதிமன்றங்களில் தொடக்கப்ப்ட்டிருந்த அனைத்து வழக்குகளும் ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்களின் பேரில் நீக்கிக் கொண்டவர் அவர். அது மட்டுமன்றி தனது சகோதரர்கள் மீதும், தனக்கு நெருக்கமானவர்கள் மீதும் தொடுக்கப்பட்டிருந்த பல வழக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த ஒரு வருட காலத்தில் நீக்க வழி செய்தவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தனது ஆதரவாளர் துமிந்த சில்வாவை தனது தற்துணிவின் பேரில் விடுவித்ததுடன் அந்தக் குற்றவாளிக்கு அரச பதவியும் வழங்கினார். அதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்ற அவதூறு வழக்கில் தண்டனை பெற்றபோது தன்னை தொடர்ந்து விமர்சித்தவர் என்பதால் பலர் கோரியும் மன்னிப்பு வழங்காதவர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூட உருக்கமான கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்தும் மன்னிப்பு வழங்க முன்வரவில்லை. ஜனாதிபதிப் பதவியை பழியுணர்ச்சிக்கும், துஷ்பிரயோகங்களும், தன்னையும், தன் குடும்பத்தை ஊழல் வழக்குகளில் இருந்து பாதுகாப்பதற்கும் பயன்படுத்தும், தனது குடும்ப நலனுக்காக அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவந்த கோத்தபாயவிடம் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற ஒரு நீதியை எந்த அறிவாளியாலாவது எதிர்பார்க்கத் தான் முடியுமா?
ஞானசார தேரர் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒரு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். உள்ளே சென்று வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் கேள்விகள் கேட்க பல ஊடகங்கள் காத்திருந்தன. வந்த வேகத்தில் அவர் ஒன்றைக் கூறினார்
“தேசவழமை, ஷரியா சட்டம், அந்தச்சட்டம், இந்த சட்டம் எல்லாம் இந்த நாட்டில் செல்லுபடியாகாது. இது சிங்கள பௌத்தர்களின் நாடு. அந்த கலாசாரங்களை ஏற்றுக்கொண்டு இருக்கக் கூடியவர்கள் இருங்கள், முடியாது என்பவர்கள் உங்கள் பைகளை சுருட்டிக்கொண்டு உங்கள் இடங்களுக்கு ஓடிவிடுங்கள்...இந்த நாட்டின் மக்கள் யார்...? மொழி என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த நாட்டில் இருக்கவேண்டும் என்றால் சிங்களத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். "
என்றார்.
சிங்கள - பௌத்த – கொவிகம – ஆணாதிக்க – உயர்வர்க்கத்துக்கான நாடும், அவர்களுக்கான சட்டத்தைத் தான் அவர்கள் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோமா என்ன? இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பட்டறிவால் இதைக் கணிக்க முடியாதா என்ன?
நன்றி - தாய் வீடு - நவம்பர் 2021
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...