என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து...
ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும் அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட நாடு. இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்சங்கள் பற்றியதுமான நூலாக “சிங்கள பண்பாட்டிலிருந்து” நூல் அமையபெற்றுள்ளது.
இந்நூல் நம்ப முடியாத, ஆனால் நிதர்சனமான விடயங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவரை தமிழர்களால் அறியப்படாத சிங்களவர்களின் கலாசார முறைமையை மிகத்தெளிவாகவும் சரளமாகவும் இந்நூலில் அறியமுடிகின்றது. மொத்தமாக பதின்மூன்று ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது அவற்றிலிருந்து சுவாரஸ்யமான சில கட்டுரைகள் பற்றி இங்கே பகிர்கிறேன்.
சிங்கள சமூக அமைப்பில் கன்னித்திரை பரிசோதனையில் என்ற அம்சத்தில் தொடங்கி, சிங்கள பெயர்களின் சாதிய செல்வாக்கில் நிறைவுறுகிறது.
மிகவும் அந்தரங்கமானதும், ஆதர்சமானதுமே தாம்பத்திய உறவு. இதில் பெண்ணிடம் மாத்திரம் அவளின் கன்னித்தன்மையை பரிசோதிப்பது எந்தளவில் சரியானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. கன்னித்திரை பரிசோதனை ஒரு சமூக வழக்கில் எந்தளவிலான ஒரு பாரதூரமான விடயம் என்பதை தெளிவுப்படுத்துவதுடன், ஆணாதிக்க சமூகத்தின் அதிகாரத்தை வலியுறுத்தும் விதத்தையும் வெளிப்படுத்துகின்றது. பெண்ணின் ஒழுக்கம் இதன் மூலம் மட்டும் அறியப்படக்கூடிய ஒன்றல்ல.
பெண் தமது கற்பை திருமண நாளிலேயே இழக்கவேண்டும் என்பது ஒரு பாரம்பரிய எதிர்பார்ப்பாக இங்குகொள்ளப்படுகின்றது. சிங்கள சமூக அமைப்பில் அந்த எதிர்ப்பார்ப்பை எப்பேர்பட்ட நடைமுறைகளைக் கொண்டு கையாள்கின்றனர் என்பது பற்றியது அக்கட்டுரை. ஆசிரியர் ‘கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே ஆண்கள் கையிலிருந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பார்க்க முடிந்தது.” என்கின்றார்.
சிங்கள குடும்பமொன்றில் கன்னிப்பரிசோதனையின்போது அப்பெண்ணின் கற்புநிலையில் ஐயம் ஏற்பட்டால் அவள் மறுபடியும் தமது பிறந்த வீட்டிற்கே அனுப்பிவைக்கப்படுகின்றாள். ஆனால் கற்புத்தன்மையை வெறுமனே இதை வைத்துக்கொண்டு நோக்க இயலாது. கடினமான வேலைகள், விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கு பெண்ணுறுப்பின் சவ்வு கிழிய வாய்ப்புண்டு. அதற்காக அவர்கள் கற்பிழந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாதல்லவா? இதை ஆணாதிக்க சமூகமும், இளவயதினரும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும். இக்கட்டுரையின் மூலம் அதை அறியக்கூடிய வாய்ப்பும் பலருக்கு ஏற்படும். இக்கட்டுரையின் இறுதியில் ஆசிரியர் சிறியாணி பஸ்நாயக்க அவர்களின் கூற்றில் கேட்கப்பட்டிருக்கும் வினா ஆணாதிக்க சமூகத்தை தலைகுனிய வைக்ககூடியதுதான்.
தொடர்ந்து, சாதிய அமைப்பில் தீண்டாமையின் செயற்பாடு எவ்வாறானது கோத்திர சபைகளின் இறுக்கமான சட்டங்கள் பற்றியும் அறியமுடிகின்றது. இதுவரை வரலாற்று இலக்கியங்களின் வாயிலாக மட்டுமே அறிந்திருந்த பல் கணவர் முறை சிங்களப் பாரம்பரியத்தில் மிகச் சமீப காலம் வரை இருந்திருப்பதை இந்நூலின் வழி அறிந்தேன். அது “ஒரே வீட்டில் புசித்தல்- பல கணவர் முறை” சொத்திற்காக ஒரே பெண்ணை சகோதரர்களே மணந்துக்கொள்ளும் பண்பாடு இச்சமூகத்தில் இருந்து வந்துள்ளமை மிக அதிர்ச்சியான விடயம் . ஆசிரியர் இதனை குறிப்பிடும்போது“ பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்துக்கொள்வதை ஆணாதிக்க சமூக அமைப்பு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் கலாசார சீர்கேடாகவும் பார்க்கின்றது” என்கின்றார்.
ஆணாதிக்கத்தை தனிசொத்துரிமையில் பாதுகாக்க பண்பாட்டு கலாசார தளத்தை அதி உச்ச நிலையில் இருந்து வந்திருப்பதனை வரலாறு முழுவதும் காணமுடிகின்றது. ஆணாதிக்கத்துக்கு முன் பெண் பெற்றிருந்த உயர்ந்த மதிப்புக்கான காரணங்களால், தனிசொத்துரிமையின் பின்னால் கேவலப்படுத்தப்பட்டு அடிமையானாள். இதை ஏங்கல்ஸ் “ தாயுரிமை தூக்கியெறியப்பட்டது”என ஆணாதிக்கத்தை மொத்தவடிவை தெளிவுப்படுத்துகிறார்.
ஆணாதிக்கத்திற்குள்ளான பெண்மீதான அடிமைத்தனத்தை இயற்கைக்கு வெளியில் தனிசொத்துரிமை சுரண்டல் ஆதிக்க கருத்தில் கொண்டுள்ளது. தனிசொத்துரிமை என்பது இயற்கை சமூகச்சூழல், மற்றைய உயிரினங்கள், மனித இனம் எதையும் மறுத்து உருவாகும் போக்கில் உருவானவை என்பதால், அவை தன்னளவில் பெண் மீதான பாலியல் ஆதிக்கத்தை கோரியது. பெண்ணின் தேர்வுக்கும், உணர்வுக்கும் பதில் பெண்ணை தனிச்சொத்துரிமை ஆதிக்கத்திற்குள்ளான தீர்மானகரமான விடயமாக தனிசொத்துரிமை பார்க்க தொடங்கியது.
இதையடுத்து சிங்கள சாதியம் தொடர்பாக இங்கு அவதானிக்கமுடிகின்றது. சாதியம் வெறுமனே நேற்று இன்றைய பேசுப்பொருள் அல்ல. இந்த நவீன காலத்தில் கூட இந்தியா, இலங்கையில் இன்னும் சில நாடுகளிலும் ஜாதியின் சமூக பங்களிப்பு மிகமுக்கியமானதாக அமைகின்றது. இந்திய சாதியமைப்பின் கொடுமைகளையே அதிகமாக அறிந்து வைத்திருக்கிற எம் போன்றவர்களுக்கு சிங்கள சாதியமைப்பின் கட்டமைப்பும், அதன் நிறுவனமயப்பட்ட தன்மையும் இந்த நூலின் மூலம் வேறொரு வடிவத்தில் அறியக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இவற்றைத் தாண்டி சிங்கள பண்டைய சமூகத்தில் சாதிய கட்டமைப்பை பாதுகாப்பதற்காகவே பலமான ஒரு அமைப்பு இருந்திருக்கிறது என்பது புதிய - வியக்கத்தக்க தகவலாகவே அமைந்தது. இந்தியா போன்ற நாடுகளில் அதிகளவில் பஞ்ஞாயத்துகள் இருப்பதை போன்றுதான் இச்சபைகளும் ஆனால் இதில் மாறுபட்ட ஒரு விடயம் என்னவெனில் இலங்கையின் கோத்திர சபைகள் என அழைக்கப்பட்ட அவைகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தமையே ஆகும். நூலாசிரியர் “இக்கோத்திர சபைகள் கூட இலங்கையின் இனத்துவ சிந்தனை தளைத்தோங்க ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்” என்கிறார்.
இன்று சமூகங்களில் காணப்படும் அதே சாதிய கட்டுப்பாடுகள் பண்டைய சிங்கள சமூகத்திலும் நிலவி வந்துள்ளன. எடுத்துக்கட்டாக, பிறசாதியில் திருமணம் முடித்தல், கணவர் இறந்ததும் இன்னொரு வெளியில் ஆணுடன் தொடர்புற்று கர்ப்பமடைதல், சபைகளில் கைகால் உயர்த்தி கதைத்தல் போன்றவற்றை குறிப்பிலாம். ஆனால் இக்கட்டுரையின் சிறப்பம்சம் ஒரு வழக்கு தொடர்பாக அதில் விளக்கமாக குறிப்பிட்டப்பட்டிருப்பது மட்டுமன்றி, அந்த வழக்குகளில் கிராமத்தில் நடைமுறையில் இருந்த பாரம்பரிய வறிக சபைக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டது தொடர்பான செய்திகள் விபரிக்கப்பட்டுள்ளன. சில கிராம குழுக்கள் போன்று இது வெறுமனே ஒரு பிரச்சினையை தீர்க்கும் சக்தியாக மட்டுமன்றி தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தை கொண்டிருந்ததை அறியமுடிகிறது. அத்தோடு நன்றாக உற்றுநோக்கின் மிக நுணுக்கமான முறையில் இக்கோத்திர அமைப்பின் மூலம் சாதியம், கோத்திர பிரிவுகள் என சமூகப் பிரிவுகளும், சமூகப் பாகுபாடுகளும் வளர்த்தெடுக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட காரணமாக இருந்துள்ளமையை அவதானிக்க முடியும்.
அடுத்த மிக முக்கியமான கட்டுரையாக நாம் எமது நாட்டின் வேடுவ இனகுழுமத்தை பற்றிய தகவல்களை அறியகூடியதாக அமைகின்றது. அதைப் பற்றி இந்நூலிலாசிரியரின் ஒரு கூற்று மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. “அருகி வரும் வேடுவர் இனமானது தமது சுய அடையாளத்தை பேணல் என்பது இனிவரும் காலங்களில் போதியளவு சாத்தியம் இல்லை என உணரத்தொடங்கியது. தமது வேடுவ அடையாளம் அவமானமாக பார்க்கும் ஒரு சந்ததிக்கூட தழைக்கத் தொடங்கியிருக்கின்றது.” இந்த மேற்கோளின் ஊடாக வேடுவ வாழ்க்கை முறை எவ்வாறானதொரு மாற்றத்தை இன்று கண்டுள்ளது என்பது தெளிவாக அறியலாம் . எமது அடுத்த சந்ததியினருக்கு வேடுவர்கள் தொடர்பான ஆதாரங்களைத் தவிர வேறு எந்த அடையாளங்களும் நேரடி ஆதாரங்களும் அற்ற நிலை வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு இனத்தின் அடையாளம் வேறு இனத்தினால் மறுக்கப்படுவதை காட்டிலும் அதே இனத்தால் ஏற்கமுடியாவிடின் அங்கு அவர்களின் சுயம், இறைமை, உரிமை என்பன அடியோடு இல்லாதொழிக்கப்படுகின்றது. அந்த இனமே அதன் அழிவை உறுதிப்படுத்துவதாக இது அமைகின்றது. பாரம்பரியம், உணவு கலாசார, மொழி, பழக்கவழக்கங்கள் மரபுகள், என்பன அடுத்த சந்ததியினருக்கு ஏதோவொரு வழியில் கடத்தப்பட்டவேண்டியதே தவிர அழிக்கப்பட வேண்டியவையல்ல என்று கூறுகிற பேராசிரியர் கணநாத ஒபயசேகர; வேடுவர்களை ஆய்வு செய்த முக்கிய ஆய்வாளரான “செலிக்மன்” கூட தனது ஆய்வுக்கான போதியளவு தூய வேடுவர்களை சந்திக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றார்.
நூலாசிரியரின் மொழியாற்றலின் ஊடாக இலங்கையின் பண்டைய சிங்கள சமூக அமைப்பின் பேசப்படாத வியப்புக்குரிய விடயங்களை இந்நூலில் பகிரங்கப்பட்டுத்தியுள்ளமை இந்நூலின் முக்கிய சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி அவரின் ஏனைய நூல்களும் இது போன்றே ஆச்சரியங்களை உள்ளடக்கியவை தான்.
சமகாலத்தில் ஓரினசேர்க்கை பற்றிய கருத்தாடல்கள் சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேசுபொருளாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பண்டைய சிங்கள சமூகத்தில் பண்பாட்டளவில் அது எத்தகைய நிலையில் காணப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை முன்வைப்பதுடன், ஓரின சேர்க்கை குறியீடாக மாற்று பதங்களும் இருந்து வந்துள்ளதனையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தாண்டி நான் மேற்கத்தேய நாவல்களில் குறிப்பாக ரஷ்ய நாவல்களில் அறிந்திருந்த ஒரு விருந்தோம்பல் முறைமை, இலங்கையிலும் பின்பற்றப்பட்டிருந்திருப்பதை அறிந்துக்கொண்டேன். அந்த நாவலில் ஒரு நண்பன், அவனை சந்திக்க வந்த கதாநாயகனுடன் தன் மனைவியை பகிர்ந்துகொள்கின்றான். சில ஐரோப்பிய சமூகங்களில் தமது துணைவியை விருந்தினருடன் பாலுறவுக்கு பகிரும் வழக்கங்களும் இருந்துள்ளதை அறிந்திருக்கிறோம். இதை சிங்கள பண்பாட்டிலும் விருந்தினருக்கான விருந்தோம்பலில் தமது மனைவியைப் பகிர்தல் என்பது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்துவதுடன், பெண் வெறும் ஆணின் இன்பவேட்கைக்கான பொருள் மாத்திரமாக இருந்து வந்திருப்பதை காணமுடிகின்றது. இவற்றுக்கடுத்து பாலியல் வசியம் மற்றும் பௌத்த விகாரைகளிலும் சில துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்ற போக்குகளையும் நூலில் குறிப்பிடத் தவறவில்லை.
என்.சரவணனின் “அறிந்தும் அறியாதவை” நூலில் இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும், இந்திய தோட்ட தொழிலாளர்களுக்கும் மேலாடை அணிவது தடைசெய்யப்பட்டிருந்த விபரங்களை சில வலிமையான ஆதாரங்கள் மூலமாக உறுதிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமன்றி இவை தொடர்பாக பல ஆய்வுகள் இடம்பெற்றுவந்துள்ளமையையும் அறியமுடிகின்றது.
காலனித்துவ காலப்பகுதியில் வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறையில் இருந்த வரி விதிப்பைப் பற்றி நாமறிவோம். மஹபத்த , உடல்வரி, சாவுவரி, மீன்பிடி வரி, தென்னை வரி, இஸ்தோப்பு வரி, நெருப்பு வரி, நாய்வரி, போன்றனவற்றை விட முலைவரி என்ற புதிய வகை வரியையும் அறிமுகப்படுத்தியிருந்திருக்கின்றனர். இவ்வாறான வரிகள் சமூக மத்தியில் வெறுக்கத்தக்க ஒன்றாகவே காணப்பட்டிருக்கின்றது. இவ்வரி தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை ஆசிரியர் தெளிவுப்படுத்துகின்றார். அப்படியான ஒரு குரூரமான எதிர்ப்பலைக்கு பின்னரே இவ்வரியும் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்து சிங்கள பெயர்களில் சாதியத்தின் பங்கு தொடர்பான கட்டுரையை நோக்குவோம். தமிழ், இஸ்லாமிய பெயர்களை விட சிங்கள பெயர்களின் இவ்வாறானதொரு பாரிய பின்னணி இருக்குமென்று யாரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. எனது சகோதர மொழி நண்பர்களின் பெயர்களும் இவ்வாறானதொரு விரிவை கொண்டு காணப்பட்டிப்பதை அறிந்திருகிறேன், ஆனால் அதன் பின்புலம் இக்கட்டுரையின் பின்பே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. சிங்களப்பெயர்களின் பின் அதன் வர்க்கம் , சாதி, குலம், பெருமை, பட்டம், பதவி போன்ற பல அம்சங்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் என எதிர்ப்பார்க்கவில்லை.
இலங்கையை ஆண்ட போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் செல்வாக்கின் ஊடாகவும் மதப்பரப்புகையின் ஊடாகவும் அதிகளவில் இந்த பெயர்கள் கரையோர பகுதிகளில் புழக்கமாகியுள்ளது. காலப்போக்கில் இவற்றிற்கான பார்வை, அர்த்தங்கள் வேறு வகையில் புனையப்பட்டு, அவை சாதி, குலம், வர்க்கம் என அவற்றை பரம்பரையாக தக்கவைப்பதாக ஆனதை தெளிவாக ஆசிரியர் புலப்படுத்துகின்றார். அவைமட்டுமன்றி, அந்த காலப்பகுதியில் ஐரோப்பியருக்கு ஏற்றாற்போல பௌத்தர்கள் பெயர்களை மாற்றியது சூழலுக்கு தகவமைந்தசந்தர்ப்பவாத நடைமுறையாகவே கருத வேண்டியுள்ளது.
பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதியில் பௌத்தத்தை மீள உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளின் போது பெயரிடலையும் ஆதிக்க சிந்தனா முறையிலேயே அமைத்திருப்பதைக் கவனிக்க முடியும். பிற காலங்களில் பல பெயர்களை கொண்டு சிங்களவர்களிடையே சாதி வாரியாக பிரித்து நோக்க இலகுவாக அமைந்ததை காணமுடிகின்றது. இக்காலப்பகுதியில் சில ஐரோப்பிய கலாசாரத்தை மறுதலித்து, பௌத்த ஒழுக்கவிதிகளுக்குள் உட்புகுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றதில் பலர் தமது ஐரோப்பிய பெயர்களை மாற்றியுமுள்ளனர்.
உலகில் இரண்டு முக்கியமான பௌத்த சமயம் பிரதான இரு கூறுகளாக பிளவுபட்டிருப்பதை நாமறிவோம். ஒன்று மகாயான பௌத்தம் மற்றையது தேரவாத பௌத்தம். தேரவாதம் நிலையாமை, முக்தி என்பவற்றையே வலியுறுத்துகின்றது. தேரவாத பௌத்ததை பின்பற்றும் நாடுகளில் ஒன்றே இலங்கை. ஆனால் இலங்கையின் பௌத்த பீடங்கள் கூட சாதியைத் தூக்கிபிடிக்கின்ற நிலையினை அவதானிக்கமுடிகின்றது.
பௌத்த மதத்தின் பேரால் இலங்கையின் “புனித” வரலாற்று நூலான மகாவம்சத்தை ஒரு பேரினவாதத்தை நிலைநிறுத்த பயன்படுத்தும் கருவியாக ஆக்கி வைத்திருக்கிற நிலையில் அபேர்பட்ட பேரினவாதத்தை ஸ்தூலமாக்க பண்பாட்டம்சங்களும் அதற்கு தோதாக வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதையே இக்கட்டுரைகளின் மூலம் காண முடிகிறது.
இந்த நூல் சிங்களப் பண்பாட்டின் அதிசயிக்கத்தக்க பல கூறுகளை பகிரும் ஒன்றாக இருக்கிற போதும், அதற்கும் பேரினவாதத்துக்கும் இடையிலான உறவையும் இனங்காட்டத் தவறவில்லை என்றே கூற வேண்டும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் தொகுப்பாக இந்நூல் வாசகர்களின் கைகளில் வலம்வருகின்றது. இன்னொரு இனத்தின் மத கலாசார பண்பாட்டை அறிந்துக்கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு சுவையான நூலாக அமையும். இதுவரை தமிழில் வெளிவராத தகவல்கல்களையே தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல். வெறுமனே ஆய்வுகளாக மட்டும் நாம் அறிந்துகொள்வதை தாண்டி அதனது உண்மைத்தன்மை வெளியிடும் வகையில் உசாத்துணைகளும் அடிக்குறிப்புகளும் மேலும் இந்நூலின் உண்மைத்தன்மையை மெருகூட்டுவதாக அமைந்துள்ளது. உசாத்துணைக்காக ஆங்கில நூல்கள், ஆவணங்கள் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் நூல்களையும், ஆவணங்கள் பலவற்றையும் பயன்படுத்தி சொல்லவந்த கருத்தை நிறுவியிருப்பது இந்நூலின் முக்கிய சிறப்பென்றே கூறலாம். குறிப்பாக பல சிங்கள, ஆங்கில நூல்கள் ஆய்வுக்கு பயன்படுத்தி தமிழில் வெளிவராத புதிய வியக்கத்தக்க வகையான தகவல்களை நம் முன் சமர்ப்பித்து இருப்பதில் நூலாசிரியர் வெற்றிக்கண்டுள்ளார். இன்றைய சமூகத்தேவையையும், வாசகர்களின் மனநிலையையும் புரிந்து இவ்வாறான பல புதிய தகவல்கள் வெளிகொணர்ந்திருக்கும் இந்நூல் வரலாற்றை அறியும் ஆர்வலர்களுக்கு மட்டுமன்றி மானுடவியல் சார்ந்த கற்கைகளை செய்பவர்களும், ஆர்வலர்களுக்கும், தேடலாளர்களுக்கும் ஒரு சிறந்த தீனி எனலாம்.
"வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள்" - என்.சரவணனின் "சிங்களப் பண்பாட்டிலிருந்து" நூல் விமர்சனம் -... by SarawananNadarasa on Scribd
+ comments + 1 comments
சிறப்பான பதிவு மா.பவித்திரா அவர்களுக்கும், தாய்வீடு இதழிற்க்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் கூறுகின்றேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...