'4 வருசமா கொழும்பில காமென்ட் இலதான் வேலை செஞ்சேன். அம்மா, அப்பா தோட்டத்திலதான் வேலை செய்றாங்க. குடும்ப கஸ்ரத்தை போக்கதான் நான் கொழும்புக்கு வேலைக்கு போனன். இப்ப அங்க கொரோனா வந்ததால இங்க வந்தன். என்னோட யாரும் பேசுறாங்க இல்ல...என்னய கண்டாலே தள்ளிபோறாங்க. ஏண்ட 'பிறன்சும்' என்னோட கதைக்கிறாங்க இல்ல." என்கிறார். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (24). கொழும்பில் கொரோனா காரணமாக காமென்ட் மூடியதால் மூன்று மாதங்கள் விடுதியில் தங்கியிருந்தவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது அவர் எதிர்கொண்ட பிரச்சினை அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. சாதாரணமாகவே பெண்கள் என்றாலே இரண்டாம்பட்சமாக நோக்கும் இந்த சமூகம், அந்தப்பெண் வேலைக்கென்று வெளியில் சென்று வரத்தொடங்கினால் இன்னும் அதிகமாகவே துன்புறுத்துகிறது.
இலங்கையில் 1820 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் சொற்ப சலுகைகளுக்காக ஏமாற்றப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்டவர்கள். இத் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளும் காலனித்துவவாதிகளால் வழங்கப்படவில்லை. இன்றும் இந்த தோட்டமக்கள் கீழ்மட்ட வாழ்க்கைத்தரம், குறைந்த ஊதியம், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் உள்ளனர். இவ்வாறு பெருந்தோட்ட தொழில்துறையில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்களாவர். குடும்ப பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுபவர்களாக இந்தப்பெண்கள் உள்ளனர்.
தனியார் துறையினரின் இலாப நோக்கத்துடன் கூடிய சிந்தனை போக்கினால் மலையக பெருந்தோட்ட தொழில்துறை முகாமைத்துவம் சுரண்டல் மிகுந்ததாக மாறியது. இந்நிலைமையும் 1992 இல் ஏற்பட்ட தனியார் துறையினரின் தொழில் கொள்கைகளில் மாற்றமும் பெருந்தோட்ட பெண்களை தோட்ட தொழில் சாராத ஏனைய தொழில்களின் பக்கம் நகரத் Àண்டியது. இவ்வாறு ஏனைய வாய்ப்புகளை தேடிய பெருந்தோட்ட பெண்களுக்கு நாட்டின் மற்றைய கைத்தொழில் துறையான ஆடை உற்பத்தி துறையும், தொழிற்சாலைகளும் தொழில் வழங்கக் கூடியனவாக இருந்தன. தோட்டத்தை விட்டு பெண்கள் வெளியேறத் தொடங்கினர். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பாக அன்னியச் செலாவணியைப் பெற்றுத்தரும் துறையில் (தேயிலை, ஆடை) பெண்களின் பங்கு கணிசமானதாக மாறியது. ஆயினும் வீட்டிலும் சமூகத்திலும் பெண்களுக்கான இடம் குறிப்பிடும்படி இல்லை என்பதே கவனிக்கத்தக்கது.
இவ்வாறு பெருந்தோட்ட வாழ்க்கை முறையில் காணப்பட்ட பெண்களின் சமூக அந்தஸ்;து இன்மை, அவர்கள் ஏனைய தொழில்துறைகளுக்கு சென்றாலும் அங்கும் அவர்களின் நிலை அதுவாகத்தான் உள்ளது. மாறாக அவர்களை மேலும் கீழான கண்ணோட்டத்துடன் அவதானிக்கும் சமூக மனப்பான்மையே உருவாகியுள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில்தான் கொவிட் - 19 தாக்கம் பரவலடைய ஆரம்பித்ததும் அதன் இரண்டாவது அலை ஆடைத்தொழிற்சாலைகளில் இருந்து வரத்தொடங்கியதும் பெண்கள் மீது கவனம் குவிந்தது. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணை இனங்கண்டபின் அவருடன் தொடர்புபட்டவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதன்போது இன்னும் அதிகமான முகாமைத்துவ ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்றியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடயத்தை பெரிதுபடுத்தி ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளர்களின் நடத்தை தொடர்பாக வெறுக்கத்தக்க வகையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனால் பெண்கள் மீதான வெறுப்பு பேச்சுக்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டன. சமூக ஊடகங்களில் அவை வெளிப்பட ஆரம்பித்தன. இது மீண்டும் பெண்கள் மீதான சமூகக் கண்ணோட்டத்தை கருத்துருவாக்கம் செய்தது. அதன் ஒரு வெளிப்பாடுதான் மாலதியின் கூற்று. இவை பெண்களின் உளவியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.
இவ்வாறு குடும்பத்துக்கான பொருளாதார ஆதாரமாகவும் நாட்டின் பொருளாதார காரணிகளாகவும் இருக்கும் இந்தப் பெண்களை சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கக்கூடிய வெறுப்புப் பேச்சுக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப் படுவதன் காரணமாக அவர்கள் மீண்டும் அவ்வாறான தொழிலுக்கு செல்வதற்கு தயக்கம் கொண்டுள்ளனர். குறைவான கல்வித்தகைமைகள், அதிகமான காலத்தை தேர்ச்சி அடைய முடியாத தொழிற்துறைகளில் முதலீடு செய்தமை உள்ளிட்ட காரணங்களால் இவர்களின் எதிர்கால தொழில்சார் வாய்ப்புக்கள் கேள்விக்குறியாகியமை அனுபவங்களின் ஊடாக அறிய முடிகின்றது.
பொதுவாகவே ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட பாரிய தொழிற்துறைகள் தனியாரின் முதலீடுகளில் தான் இயங்குகின்றன. இங்கு சர்வதேச தொழில் நியமங்களோ, உள்ளுர் தொழில் நியமங்களோ பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாக இங்கு பணிபுரியும் பெண்களின் உளவியல் ஆற்றுப்படுத்தல்கள், உரிமை மீறலின் போது அதற்கான நியாயம் என்பன கேள்விக்குறியாகியுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக நிறுவனத்துக்குள் உழைப்புச் சுரண்டல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், அடக்குமுறை என்பன காணப்படுகின்றமையை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களான பெண்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் தன் சமூகத்தினுள்ளேயே இவ்வகையான வெறுப்புப் பேச்சுகள், பாரபட்சம் என்பன கண்டு பெண்கள் விரக்தி மனநிலைக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக சர்வதேச தொழிற்துறை சம்மேளனத்தின் மத்தியக்குழு உறுப்பினரும், சுதந்திர வர்த்தக வலய தொழில் மற்றும் பொதுச்சேவை தொழிற்சங்கத்தின் இணைந்த செயலாளருமான என்டன் மார்க்கஸ் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, 'நாட்டின் கைத்தொழில் துறையே இன்று பிரதானமான மொத்த தேசிய உற்பத்தியாகும். ஆயினும் தனியார் முதலீட்டாளர்களே இன்று கைத்தொழில் துறையை முகாமைத்துவம் செய்கின்றனர். எனினும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுய கௌரவம் பேணப்பட வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கடமையை அவர்கள் சரியாகச் செய்யாத காரணத்தினால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.
முக்கியமாக சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்டவற்றில் சேவையாற்றும் மலையக யுவதிகள் பிறப்பிரதேசங்களில் இருந்தே வருகைத் தருகின்றனர். வாடகை வீடுகளில் தங்கி தொழில் புரியும் இவர்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் இரண்டாம் பட்சமாகவே கவனிக்கப்படுகின்றனர். பாதுகாப்பற்ற உரிமைகள் மறுக்கப்பட்ட தொழிலாளர்களாகத்தான் இவர்கள் இருக்கினறனர். தனியார் தங்குமிடங்களிலும் இவர்கள் தவறான நோக்கங்களுடன் அணுகப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்கு காரணம் இவர்களின் தொழில் சார்ந்து இவர்களை மதிப்பிடுவதும், தவறான சமூக அபிப்பிராயம் காலங்காலமாக வேரூன்றியுள்ளதுமாகும்.
இவர்கள் தொழில் புரியும் பிரதேசங்களில் இவர்களுக்கான வாக்குரிமை இல்லை. எனவே இவர்களின் நலனிலோ, அல்லது உரிமை சார்ந்த விடயங்களிலோ பிரதேச அரசியல்வாதிகள் கரிசனை கொள்வதில்லை. இவர்களின் சொந்த பிரதேசங்களிலும் இவர்களுக்கான உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் இவர்கள் ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவினராகவே உள்ளனர். இவையும் இவர்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் சமூகத்தில் தோன்றுவதற்குக் காரணங்களாகும்.
குடும்ப வறுமை, தொழிலின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலகுவாகக் கிடைக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு இவர்கள் வருகின்றனர். இங்குள்ள சூழல் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் தம்மீதான அத்துமீறல்களின் போது அந்த விடயங்களை முறையிடுவதற்கு உள்ள தயக்கம், போதிய வலுëட்டலின்மை போன்ற காரணங்களினால் இவ்வாறான விடயங்கள் மறைக்கப்படுகின்றன. இந்த நிலை தனியே தோட்டப்புற பெண்களுக்கு மட்டும் ஆனதல்ல. ஏனைய பெண்களின் நிலையும் இதுதான். இலங்கையில் 75 வீதமான பெண்களுக்கு சுயகௌரவம் என்பது தொழில் ரீதியாக வழங்கப்படுவதில்லை." என்று கூறினார்.
மாலதி தன் நிலை பற்றி மேலும் கூறுகையில், 'தோட்டத்தில் எங்களை போல் காமென்டில் வேலை செய்பவர்களை ஏளனமாகத்தான் பார்க்கிறாங்க. கொரோனா காமென்டில் பரவியதால் நாங்கள் தோட்டத்துக்கு வருவதையும் பலர் விரும்பவில்லை. இதனாலும் எம்மீது வெறுப்பு பேச்சை சமூக ஊடகங்களினூடக வெளிப்படுத்துகின்றனர். இது எமது குடும்பத்தையும் பாதிக்கின்றது." என்கிறார்.
இவ்வாறான வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக மலையக பெண்களை திறனுட்படுத்தும் அமைப்பின் தலைவி திருமதி.தேவகி இராஜகோபால் அவர்களிடம் வினவப்பட்டது. மலையகப் பெண்கள் மீது கடுமையான அழுத்தங்களும் அவÀறுகளும் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரப்பட்டிருக்கின்றன. இப்போது கொரோனா தொடர்பில் தமது சமூகத்தினுள்ளேயே வெறுப்பு பேச்சுகளுக்கு பெண்கள் ஆளாகியுள்ளனர். கொரோனாவை பரப்புபவர்களாக, தோட்டத்தை விட்டு தேவையற்று வெளியில் போகிறார்கள் என்றும் அவர்களது பொருளாதார தேவையின் முக்கியத்துவத்தை உணராது கூறுகின்றனர். ஏற்கனவே புரையோடிப் போயிருந்த பெண்களுக்கான அங்கீகாரமின்மை மீள நிறுவப்பட்டது போன்று உணரப்பட்டது. இது ஒரு ஆபத்தான நடைமுறையாகும். எமது யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்படுகின்றது. எவ்வித ஆதாரமுமின்றி பொதுப்புத்தியுடன் சமூகம் இதனை எதிர்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் அவர்களை தனிமைப்படுத்தும் விடயங்களாகும்.
மேலும் பெருந்தோட்ட பிரதேசங்களில் பாரம்பரிய தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. இவை அம்மக்களின் உரிமை சார்ந்த விடயங்களை சமூகமயப்படுத்துவதற்கு வழங்கிய பங்களிப்புக்கள் போதாது. அச்சமூகங்களில் இருந்து தொழிற்துறைக்கு வெளியில் வரும் ஏனைய தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கான பயிற்சிகள், நீதித்துறை வழிகாட்டல்கள், மறுவாழ்வு முயற்சிகள் என்பன வழங்குவதற்கான முயற்சிகளை எமது ஒன்றிணைந்த தொழிற்சங்கம் மேற்கொள்கின்றது. இதற்கூடாக வெறுப்பு பேச்சு கலாசாரத்தை மாற்றியமைக்க முடியும்" என்று நம்பிக்கை வெளியிட்டார்.
ஒரு தனிநபர் வெறுக்கத்தக்க வகையில் சமூகத்தில் பரிகாசம் செய்யப்படும் போது அது பெரிதாக அதிர்வுகளை
ஏற்படுத்துவதில்லை. எனினும் அவர் ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்திருந்தால் வெறுப்புப் பேச்சு பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் போது அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எமது ஒருங்கிணைந்த தொழிற்சங்கம் அவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களை எதிர் கொண்டுள்ளது. (புநனெநச டீயளந ஏழைடநnஉந) என்று சொல்லக் கூடிய பாலியல் சார் வன்முறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடமுடியும். அதேப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை, மற்றும் ஆற்றுப்படுத்தல் சேவைகளும் அவசியமாகும்" என்று குறிப்பிட்டார்.
அதேநேரம் தோட்டப்புற பெண்களின் தொடர் பின்னடைவுக்கு காரணமாக இருப்பது தமது இளவயதுக் காலங்களை இவ்வாறான தொழிற்துறைகளில் முதலிடும் இவர்கள் தேர்ச்சியடையாத தொழிலாளர் படையாகவே தொடர்ந்தும் இருப்பதாகும். அதாவது இவர்கள் ஆடைத்தொழிற்சாலை அனுபவங்களை கொண்டு இவர்கள் பிறிதொரு தொழிலைத் தேட முடியாதது.
மேலும் இவர்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு பல்வேறு உட்கூறுகளை நாங்கள் அபிவிருத்திச் செய்ய வேண்டிள்ளது. குறிப்பாக இவர்களின் பாடசாலைக் கல்வியை வலுëட்டுவதும், தொழிற்பயிற்சிகளை வழங்குவதும் அவசியம். மலையக பெண்களை திறனுட்படுத்தும் அமைப்பு இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். எனினும் இவை பெண்களின் பக்கம் பாதிக்கப்பட்டோர் சார்ந்தது. ஆனால் வெகுசன சமூகம் அதிலும் குறிப்பாக சொந்த சமூகம் இவர்களை பார்க்கும் வெறுப்புப் பார்வையை மாற்றுவதற்கு அவர்கள் பால்நிலை சமத்துவ அறிவைப் பெறவேண்டும். முதலில் தமது வீட்டுக்குள் இருக்கும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்." என்றார்.
இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் தாம் வேலைக்கு போக விரும்பவில்லை என்பதையும் கூறுகின்றனர்.
'சமூகம் எங்களை இழிவான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றது. இதனை மாற்றுவது கஸ்ரம். எங்கள் மூலமாக ஊருக்குள் கொரோனா வந்துவிடும் என்று பயப்படுகின்றனர். இதனால் நான் யார் வீட்டுக்கும் இதுவரை போனதில்லை. எங்கள் வீட்டுக்கும் கூட யாரும் வருவதில்லை. இந்த அனுபவம் மிகவும் மோசமானதாக இருக்கின்றது. நாம் வேறு வேலை தேடவேண்டும்" என்கிறார் மாலதியின் நண்பி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை).
வீட்டின் நாட்டின் பொருளாதார தூண்களாக மட்டுமல்லாமல் சமூக உற்பத்தியின் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் பெண்களின் உடல், உள நலத்தை பாதுகாத்து வளமான சமூகத்தை கட்டி எழுப்ப நாம் ஒவ்வொருவரும் முயலவேண்டும். பெண்கள் தொடர்பில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொய்மைகளை உடைத்து உண்மைகளையும் தேவைகளையும் உணர்ந்து மக்கள் செயற்படவேண்டும். அதுதான் சமூகத்தை முன்னேற்றும்.
'பொதுவாகவே ஆடைத்தொழிற்சாலையில் மட்டுமல்ல வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களையுமே தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக பிறப்பிரதேசங்களில் இருந்து தொழிலுக்கு வரும் யுவதிகள் தனியார் தங்குமிடங்களிலேயே இருக்கின்றனர். எல்லா முடிவுகளையும் அவர்களே எடுக்கவேண்டியவர்களாகின்றனர். தன்னிச்சையாக இயங்கவேண்டி மனபலம் அவர்களுக்க வேண்டும். தற்துணிபு, தற்பாதுகாப்பு என அவர்கள் மனபலம் அடையவேண்டும். ஆனால் மற்றவர்களின் கண்ணோட்டத்தில் இவர்கள் குடும்பத்தின் பாதுகாப்பு, ஆண்களின் துணை இல்லாமல் இருப்பதன் காரணமாக இவர்கள் தவறான நடத்தையுடையவர்களாக பார்க்கப்படுகின்றனர். இது எமது சமூகத்தின் கீழ்த்தரமான கண்ணோட்டமாக அமைந்துள்ளது.
இவ்வாறான நிலைமை இப்பெண்களின் எதிர்கால குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. இது எல்லா சமூகத்தினர் மத்தியிலும் இவ்வாறான கருத்து நிலையே உள்ளது. இந்த மனநிலையை மாற்றாமல் இவ்வாறான சமூக அபிப்பிராயத்தை மாற்ற முடியாது." என்கிறார் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு செயற்பாட்டாளர் எஸ். மோகனதர்~pனி.
இனங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற இக்காலகட்டத்தில் அரசியல் லாபங்களுக்காக சமூகங்களை கூறுபோட்டு வைத்துள்ள இக்காலத்தில் தமது சமூகப் பெண்களை தாமே புறந்தள்ளாது பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் அவர்களின் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை மதித்து செயற்பட ஒவ்வொரு சமூகத்திற்கும் கடப்பாடு உண்டு.
நன்றி - தினக்குரல்
+ comments + 1 comments
Thanks anna
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...