Headlines News :
முகப்பு » , , , , , » தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்! - என்.சரவணன்

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்! - என்.சரவணன்

இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு வைத்து தேர்தல் வியூகங்களை இத்தேர்தலில் முன்னெடுத்துவரும் ஆளும்கட்சி; சிங்கள பௌத்தர்களை திருப்திபடுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கம் தான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தில் உள்ள தொல்லியல் விவகாரம்.

இதெற்கென்று யூலை மாதம் ஜனாதிபதி கோத்தபாய அமைத்த தனிச்சிங்களவர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்துக்கான செயலணி போதாதென்று இப்போது கடந்த  யூலை 29 அன்று பிரதமர் ராஜபக்ச நாடளாவிய ரீதியில் இயங்கக் கூடிய 20 தனிச்சிங்களவர்களைக் கொண்ட ஒரு செயலணியை ஆரம்பித்திருகிறார். இது தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான வெளிப்படையான தொல்லியல் போர் பிரகடனம் என்றே உறுதி செய்துகொள்ள முடிகிறது.
 1. பொலன்னறுவை சொலஸ்மஸ்தான ரஜமகா விகாராதிபதி, மகாவிகாரை வம்சிகா ஷியாமோபாலி மகா நிகயாவின் அஸ்கிரிய மகா விகாரை தரப்பு வெண்டருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி தேரர்
 2. தக்ஷித இலங்கையின் பிரதான சங்கநாயக்க பண்டிதா மெட்டரம்ப ஹேமரதன தேரர்
 3. அனுராதபுர ருவன்வேலி சே விஹாரதிகாரி கலாநிதி பல்லேகம ஹேமரதன தேரர்
 4. தொல்லியல் சக்கரவர்த்தி  சக்ரவர்த்தி எல்லவாலா மெத்தானந்த தேரர்
 5. அலிக்கேவெல சீலானந்த தேரர்
 6. அஸ்கிரிய தரப்பின் பெலிகல் கோரளையின் தலைமை சங்க நாயக்க யடிகல் ஒலுவே விமலரதான தேரர்
 7. சோமாவதி ராஜமஹா விஹாரதிபதி கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர்
 8. பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர்
 9. கலாநிதி மதுருஓயா தம்மிஸ்ஸர தேரர்
 10. தொல்லியல் திணைக்கள முன்னாள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஷிரான் தெரனியகல
 11. தொல்லியல் பேராசிரியர் டி.ஜி.குலதுங்க
 12. கலாநிதி காமினி விஜேசூரிய
 13. சிரேஷ்ட பேராசிரியர் நிமல் டி சில்வா
 14. வித்யஜோதி பொறியாளர் கெமுனு சில்வா
 15. சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க
 16. வாஸ்து சாஸ்த்திரர் ஆஷ்லி த வோஷ்
 17. சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ
 18. டபிள்யூ.எம்.எஸ் வீரசேகர
 19. சிரினிமல் லத்துசிங்க
 20. பேராசிரியர் முனிதாச பத்மசிறி ரணவீர

இவர்களில் கலாநிதி காமினி விஜேசூரியவைத் தவிர எஞ்சிய அனைவரும் இனவாதத்தின் பிரதிநிதிகளாக இயங்கிவருபவர்கள்.

13ஆம் நூற்றாண்டில் இரண்டாம் புவனேகபாகு ஆட்சியில் குருநாகல் நகரில் கட்டப்பட்ட ராஜ மண்டபத்தை சில நாட்களுக்கு முன்பு மகிந்த தரப்பினரால் இடித்துத் தள்ளப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானதால் தொல்லியல் விடயத்தில் தமது அதீத நம்பகத்தன்மையை சிங்களவர்களுக்கு நிரூபிக்கும் நோக்கில் இந்த செயலணியை மகிந்த ராஜபக்ச அவசர அவசரமாக அமைத்ததாகவே தெரிகிறது. 

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் கருவிகளாக புத்தர் சிலைகளும், அரச மரங்களுக்கும், பௌத்த விகாரைகளும் தான் பேரினவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. யுத்தத்தின் பின்னர் "தொல்பொருள்" பேரால் பாரிய அளவில் நேரடியாகவும், உத்தியோகபூர்வமாகவும் அரச அனுசரணையுடன் அவ்வாக்கிரமிப்புகள் பேரெடுப்பாக கிளம்பியுள்ளன. "கோணமலை கோவில்" அல்ல "கோகர்ண விகாரை" அது என்கிற உரிமை கொண்டாடல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லி வருவது தான். ஆனால் இப்போது அம் முன்னெடுப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

கோணேஸ்வரம் கோவிலின் பூர்வீகம் பற்றியோ, அது பற்றிய வரலாற்று தொல்லியல் தகவல்களுக்குள் இக்கட்டுரை நுழையாது. ஏனென்றால் அதைப் பற்றி தாராளமாக பல நூல்களும், பல கட்டுரைகளும் வெளிவந்து விட்டன. ஆனால் சிங்கள அரசும், சிங்கள பௌத்த பேரினவாத தரப்பும் தமிழர்களின் தேச அடையாளத்தை சிதைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முனைப்புகளில் தொல்லியலுக்கு உள்ள பாத்திரம் பற்றி கவனிக்கப்படாத / கவனிக்கப்பட வேண்டிய பகுதிகளை கவனிக்கப்பண்ணுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சிங்கள அரசும், சிங்கள பௌத்த பேரினவாத தரப்பும் தமிழர்களின் தேச அடையாளத்தை சிதைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முனைப்புகளில் தொல்லியலுக்கு முக்கிய வகிபாகம் உண்டு.

ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிராக தொல்லியல் போர் தொடங்கியாயிற்று. தொல்லியல் ஒரு பண்பாட்டு வன்முறையாகவும் அணுகத் தொடங்கியாயிற்று. இம்மாதம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக “தொல்லியல் செயலணி” ஒன்றை ஆரம்பித்தார். தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான அந்த செயலணியில் தமிழ், முஸ்லிம் சமூகத்தவர் எவரையும் பிரதிநிதித்துவப்படுத்தாத தனிச் சிங்கள பௌத்தர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியாக அது உருவாக்கப்படிருக்கிறது.

கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்திலேயே தொல்லியல் சாட்டில் பிக்குமார் மேற்கொண்ட பல்வேறு நில ஆக்கிரமிப்புகளுக்கும் கோத்தபாயவைத் தான் பயன்படுத்தினார்கள். துட்டகைமுனுவுக்குப் பின்னர் இலங்கையை ஐக்கியப்படுத்திய நவீன துட்டகைமுனுவாக கோத்தபாய சிங்கள பௌத்தர்களால் கொண்டாடப்படுபவர். அந்த வெற்றிக்காகவே எத்தனை அராஜகங்களையும் பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் வெற்றியைக் கொடுக்க தயாராக உள்ள மக்கள் சிங்கள மக்கள். அதற்கு கைமாறாக சிங்கள பௌத்த பாரம்பரியங்களை காப்பாற்றும் மீட்பனாக தன்னை தொடர்ந்து நிறுவும் முயற்சியில் ராஜபக்ச குடும்பம் ஈடுபட்டுவருகிறது. அந்த நீட்சியின் ஒரு அங்கமே கோத்தபாய தொல்லியல் விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை பேரினவாத சக்திகளுக்கு வழங்குவது.

கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவானதும் அமைச்சரவை அமைக்கப்பட்டதும் அதில் செய்த முதல் வேளை இந்து, முஸ்லிம் விவகார அமைச்சுகளை கலைத்துவிட்டு புத்தசாசன அமைச்சை மட்டும் வைத்துக்கொண்டது தான். ஏனைய மதங்களையும் “இலங்கையின் புத்தசாசன அமைச்சரிடமே பொதுவாக சமய விவகார அமைச்சு என்கிற பேரில் கொடுத்தாயிற்று, அந்த புத்தசாசன, சமய விவகாரங்களை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமே ஒப்படைத்தாயிற்று. அது போல முன்னர் அரசகரும மொழிகள் அமைச்சையும் கலைத்து தமிழ் மொழி அமுலாக்கல் சம்பந்தமாக பணிகளை முடக்கினார். 

மகிந்த ராஜபக்சவிடம் தான் கலாசார அமைச்சும் உள்ளது.  அந்த அமைச்சின் கீழ் தான் தொல்லியல் திணைக்களமும் உள்ளது. “பௌத்த ஆலோசனை சபை” என்கிற ஒரு உயர் குழுவொன்று அரசாங்கத்துக்கு வழிகாட்டவென இயங்கி வருகிறது. மகாசங்கத்தினர் அனைவரும் இதில் அங்கம் வகிக்கின்றனர். இந்த சபைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் எந்தளவு என்று கூறுவதாயின் மாதாந்தம் மூன்றாவது வெள்ளி நாட்களில் ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இந்த சபை கூடி வருகிறது.

அப்படி மே மாதம் 22 ஆம் திகதி கூடிய வேளை அன்றைய கூட்ட நிகழ்ச்சிநிரல் படி கிழக்கு தொல்லியல் செயலணியை அமைப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதற்கான விளக்கங்களை விரிவாக அங்கு பேசினார் எல்லாவல மெத்தானந்த தேரர். இந்த கூட்டத்தில் இலங்கையின் பிரபல இனவாத பிக்குமார் பலரும் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அமரபுர தர்மரக்ஷித்த பிரதான சங்க நாயக்க தேரரான திருகோணமலையைச் சேர்ந்த ஆனந்த தேரரும் கலந்துகொண்டிருந்தார். (1)

செயலணியின் உருவாக்கம்
இதனைத் தொடர்ந்து அதற்கான வேலைகள் மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் இது தொடர்பான பிரகடனம் 2178/17 இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜெயசுந்தரவினால் யூன் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டது. 

இந்த 11 பேரில் துறைசார் நிபுணர்கள் கூட ஒரு சிலரே மற்றவர்கள் அனைவரும் இராணுவ, பொலிஸ், புலனாய்வுத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், கோத்தபாயவுக்கு வேண்டப்பட்ட ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும் தான்.

தமிழ் பேசும் சமூகத்தவரும் இந்த செயலணியில் இணைக்கவேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி தமிழ் பேசும் ஒருவர் தெரிவாகிவிட்டால் தமிழ் பேசும் சமொகங்களின் அபிலாசைகள் அங்கு நிறைவேற்றப்படுமா, அதற்கான பலம் தான் அவர்களுக்கு இருக்குமா என்பது வேறு கதை. சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகத் தான் அவர்களாலும் இயங்க முடியும் என்பது வெளிப்படை. இங்கு நபர்களை நியமிப்பதல்ல முக்கியம் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தைக் கொண்ட அடிப்படை உள்நோக்கமே நமக்கு பிரச்சினையானது.

2019 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் போது தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, துறைசார் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டுமென்கிற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச 2019 நவம்பரில் பதவியேற்றதும் அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டு முற்றுழுமுதாக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள பௌத்தர்களை மட்டுமே கொண்ட ஒரு ஆபத்தான குழு. இராணுவத் தளபதி, பிக்குமார், ஆகியோரை தலைமையாகக் கொண்ட அந்தக் குழு ஒரு இராணுவவாத, இனவாத குழுவென்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான சனாதிபதி செயலணி” என்கிற பெயரில் அந்த குழு நியமிக்கப்பட்டது. பின்வரும் 11 பேர் அதற்கு நியமிக்கப்பட்டார்கள்.

தொல்பொருள் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த நாயக்க தேரர் 
இவரைப் தனியான தலைப்பில் உள்ள குறிப்பைப் பார்க்கவும்

பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர்
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களின் மற்றும் தமன்கடுவ பிரதேசத்தின் பிரதம சங்கநாயக்க அரிசிமலை ஆரணியத்தைச் சேர்ந்தவர். 1980 ஆம் ஆண்டு அன்றைய தொழில் அமைச்சர் சிறில் மெத்தியு வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பௌத்த பிக்குமார்களை அழைத்துக்கொண்டு சென்று அங்குள்ள நூற்றுக்கணக்கான இடங்கள் பௌத்த தொல்பொருள் இடங்கள் என்று அடையாளம் காட்டினார். அது பற்றிய ஒரு நூலையும் வெளியிட்டார். அந்த பகுதிகளை கைப்பற்றுவதாயின் அங்கு பௌத்த விகாரைகளை நிறுவ வேண்டும் என்கிற திட்டத்தை வகுத்து கொடுத்தது சிறில் மெத்தியு தான். இதனை நிறைவேற்ற “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” (රාජ්‍ය කර්මාන්ත බෞද්ධ සංගම) என்கிற பெயரில் ஒரு அமைப்பையும் நிறுவினார். அதன் மூலம் நூறு பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் சீர்திருத்தி தெற்கில் ஒரு பிரகடனமொன்றாக வெளிப்படுத்தினார். அந்த நூறில் ஒரு விகாரை தான் திருகோணமலையில் கடலை அண்டி காணப்படும் அரிசிமலை விகாரை. விடுதலைப் புலிகளின் காலத்தில் கடற்புலிகளின் தளமாக இருந்தது. 2009இல் யுத்தம் முடிந்ததன் பின்னர் அந்த விகாரையின் பிரதம பிக்குவாக வந்து சேர்ந்தவர் தான் பனாமுரே திலகவங்ச தேரர். அதனை சீர்திருத்தி பாதுகாக்கும் பணிகளை அருகில் இருக்கும் இலங்கையின் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டார்கள். PERL என்கிற அமைப்பு இந்த பௌத்த ஆக்கிரமிப்பு குறித்து மனித உரிமைகள் கவுன்சிலுக்கு முறைப்பாடும் செய்திருந்ததது. பனாமுரே தேரர் இனவாத அணிகளோடு சேர்ந்து தமிழர் – முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத முன்னெடுப்புகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார். (2)

மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன (செயலாளர், பாதுகாப்பு அமைச்சு)
இறுதி யுத்தத்தில் மூர்க்கமான படுகொலைகளைப் புரிந்த 53 வது படைப்பிரிவின் தளபதி. இப்படைப்பிரிவு தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை கண்டெடுத்ததாக அறிவித்தது. ஆனால் பிரபாகரனை கொன்றது தாமே என்று உத்தியோகபூர்வமற்றமுறையில் கூறித்திரிபவர்கள். தனது யுத்தகள அனுபவங்களை திரட்டி இதுவரை மூன்று நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் “போர்ப்பதையில் நந்திக்கடல்” என்கிற 850 பாகங்களைக் கொண்ட விலையுயர்ந்த நூல் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட “வியத்மக” என்கிற இயக்கத்துக்கு தலைமை தாங்கியவர். கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் வேன்றதுமே முதலில் தான் முதலில் வகித்த அதே பாதுகாப்பு செயலாளர் பதவியை கமல் குனரத்னவுக்கு அவர் எதிர்பார்த்தபடி வழங்கினார். போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முக்கிய இருவர் கமல் குனரத்ன, அடுத்தவர் சவேந்திர டி சில்வா. அவருக்கு இராணுவத் தளபதி பதவியை வழங்கினார் கோத்தபாய. இன்றைய முக்கிய இராணுவவாத திட்டமிடல்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்பவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்.

கலாநிதி செனரத் பண்டார திசாநாயக்க (தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்)
இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்துவரும் இவர் ஒரு துறைசார் நிபுணராக இருக்கிறார். கோத்தபாய ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தான் 2020 ஜனவரியில் இப்பதவியை ஏற்றார். இவர் பல சிங்கள பௌத்த தேசியவாதிகளின் அதிருப்தியாளராக இருந்து வருகிறார். சிங்களத் தலைவனாக இராவணனை முன்னிறுத்தும் புனைவுகள் அனைத்தையும் மறுத்து வருகிறார். எதிர்த்து வருகிறார். இராவணன் வாழ்ந்ததற்கான எந்தவித தொல்லியல் சான்றுகளும் இதுவரை கிடைத்ததில்லை என்று உறுதியாக கூறுகிறார். இராவணன் என்பது இராமாயணக் கதா பாத்திரம் மட்டுமே என்று துணிச்சலாக கருத்து வெளியிட்டு வருபவர் (3)

திருமதி சந்திரா ஹேரத் 
அரச காணிப் பணிப்பாளர் நாயகம் 

திருமதி ஏ. எல். எஸ். சி. பெரேரா 
நில அளவையாளர் நாயகம், நிலஅளவையாளர் திணைக்களம்

பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ
களனிப் பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். இலங்கையில் இன்று முன்னணி தொல்பொருள் நிபுணராக கணிக்கப்படுபவர். வரலாறு விடயத்தில் கூர்மையான பார்வை உடையவர். வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் “மகாவம்சம் ஐந்தாம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்டபோது இந்தத் தீவில் பௌத்தர்கள் இருந்தார்கள். சிங்களவர்கள் இருக்கவில்லை.” என்கிற தொனியில் விக்னேஸ்வரன் பேசிய பேச்சு சமீபத்தில் சர்ச்சைகளை தோற்றுவித்தது. அதை எதிர்த்து கருத்து வெளியிடுவதற்கு இனவாத தரப்பினர் ராஜ் சோமதேவவைத் தான் பயன்படுத்திக்கொண்டார்கள்.  பேரினவாத முகாமுடன் நேரடியாக கைகொர்க்காவிட்டாலும். ஆங்காங்கு பேரினவாதிகள் தமக்கு தேவையான போதெல்லாம் இவரை பயன்படுத்திவருவதை அவதானிக்க முடிகிறது. 

பேராசிரியர் கபில குணவர்த்தன 
பேராதனை பல்கலைக்கழகம் வைத்திய பீடம்

தேசபந்து தென்னக்கோன் 
சிரேட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிழக்கு மாகாணம். கோத்தபாயவுக்கு மிகவும் நெருக்கமானவர். அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பவர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்தவர்.

திரு.எச்.ஈ.எம்.டப்ளிவ்.ஜி.திசாநாயக்க 
இவர் கிழக்கு மாகாண காணி ஆணையாளர். சமீப காலமாக கிழக்கு மாகாணத்தில் இடபெறும் காணிப் பிரச்சினைகளின் போது தலையிட்டு சிங்களத் தரப்புக்கு சாதகமான தீர்மானங்களை நிறைவேற்றி வருபவராக குற்றம் சாட்டப்படுபவர். 

திரு.திலித் ஜயவீர
திலித் ஜெயவீர இந்த தொல்லியல் செயலணிக்கு ஏன் கொடு வரப்பட்டார் என்கிற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. இத்துறைசார் எந்த அறிவோ அதிகாரமோ, தகுதியோ இல்லாதவர். ஆனால் பெரும் கறுப்புப் பண தொழிலதிபர் என்று அழைக்கப்படுபவர். தெரண ஊடக வலையமைப்புக்குச் சொந்தக்காரர். தெரண தொலைகாட்சி, தெரண தொலைக்காட்சி இலங்கையின் இன்று முன்னணி சிங்கள-ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அவர்களின் செய்திகள் ஏனைய செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டிருக்கிறது திலித் ஜயவீர ஒரு ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவரும் கூட.  மகிந்த ஆட்சிகாலத்தில் வருணி அமுனுகம (அமைச்சர் சரத் அமுனுகமவின் மகள்) வுடன் கூட்டுசேர்ந்து திலித் ஜயவீர தெரணவை ஆரம்பித்தார். அதற்கான (Derana Macro Entertainment (Pvt) Ltd) அனுமதியை மகிந்த இலவசமாகவே வழங்கினார் என்கிறது newsofcolombo.com என்கிற இணையத்தளம். ஒரு விளம்பர நிறுவனமாகவும் இந்த நிறுவனம் இயங்கிய நிலையில் திடீரென பெரும் பணக்கார நிறுவனமாக குறுகிய காலத்தில் ஆனது எப்படி என்கிற சந்தேகம் இன்றும் உண்டு. ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர். "தெரண" ராஜபக்ச கும்பலின் முக்கிய பிரச்சார ஊடகமாகவும் மகிந்தவின் எதிரிகளையும், அரசாங்கத்தையும் தாக்குவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொல்லியல், சிங்களப் பாரம்பரியம் சார்ந்த பல நிகழ்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இராவணனை சிங்களவர்களின் தலைவராகப் புனையும் ஒரு தொடர் நாடகத்தையும் தெரண சொந்தமாக இயக்கி வெளியிட்டு வருகிறது. தொல்லியல் சார் பணிகளை முன்னெடுப்பதற்கும் சிங்கள பௌத்தர்களை மூளைச்சலவை செய்து தூண்டி அணிசேர்க்கும் வேலைக்கு இவர்களின் ஊடக வலைப்பின்னல் அதிகமாக இந்த செயலணிக்குத் தேவைப்படலாம்.
ஜனாதிபதி செயலாளரால் யூலை 07 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட “அதிவிசேட” வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் இராணுவத்தைச் சேர்ந்த மேலும்  ஒருவர் இந்த செயலணிக்கு இணைக்கப்பட்டார். அவர் ரியல் அத்மிரல் ஆனந்த பீரிஸ். இவர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இருப்பவர்.

இந்த தொல்லியல் செயலணிக்கு தலைவராக எந்த அரச அதிகாரிகளோ, அல்லது துறைசார் நிபுணர்களோ நியமிக்கப்படவில்லை. மாறாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைவராக நியமிக்கப்பட்டார்.

திருகோணமலையை இலக்கு வைத்து
இப்போது திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கத் தொடங்கியிருக்கிறது சிங்களப் பேரினவாதம். ஈழப் போராட்டக் காலத்தில் சகல இயக்கங்களுமே எதிர்காலத் தமிழீழத்தின் தலைநகராக யாழ்ப்பாணத்தை முன்னிறுத்தவில்லை. மாறாக திருகோணமலையைத் தான் குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதான நகரம் மட்டுமல்ல அது வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரதேசம். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். திருகோணமலைத் துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் இந்து உபகண்டத்தைஎ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு சமம் என்று மகா அலெக்சாண்டர் அப்போது கூறியதாகக் கூறுவார்.

திருகோணமலையை மையமாக வைத்தே இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அரசியல் சதுராட்டம் நடத்தி வந்திருகிறார்கள். தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை உடைப்பதாயின் திருகோணமலைக்கு ஊடாகவே துண்டாடவேண்டும் என்கிற திட்டத்தை சுதந்திரம் அடைந்தபோதே சிங்கள அரசாங்கம் போட்டுவிட்டது. கல்லோயா திட்டம் உட்பட பல்வேறு குடியேற்ற திட்டங்களை ஏற்படுத்தி சிங்களவர்களை குடியேற்றி குடிப்பரம்பலின் சமநிலையை சிதைத்தது. 1827 ஆம் ஆண்டு குடித்தொகை கணக்கெடுப்பின்படி திருகோணமலையில் வெறும் 1.53% வீதம் மட்டுமே இருந்த சிங்களவர்கள் 1981 ஆம் ஆண்டு அளவில் 25.4% வீதமாக உயர்ந்துள்ளனர். அதே வேளை 1827 ஆம் ஆண்டு அளவில் 81.52%  வீதமாக இருந்த தமிழர்கள் 2007 ஆம் ஆண்டு 28.7% வீதத்துக்கு அதல பாதாளமாக இறங்கியுள்ளனர். திருகோணமலையில் இன்று மூன்றில் ஒரு பகுதியினர் கூட தமிழர்கள் இல்லாத நிலை தோன்றியிருக்கிறது. திருகோணமலை மாவட்டத்தில் ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதியைத் தெரிவு செய்வது கூட கடினமாக ஆக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட சனத்தொகை இன ரீதியில்

1968 ஆம் ஆண்டில் திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம் கோவில் அமைந்துள்ள திருகோணமலை கோட்டைப் பகுதியை புனித இடமாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக போராடியது. இதற்கு அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கா உடன்பாட்டிருந்தார். புனித நகராக ஆக்குவதை ஆராய்வதற்கென்று ஒரு குழுவையும் டட்லி நியமித்திருந்தார்.

தமிழரசுக் கட்சி டட்லியின் அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்தது. ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் அவ் அரசில் திருச்செல்வம்  உள்ளூராட்சி அமைச்சராகவும் இருந்தார்.

இதன்போது புனிதப் பிரதேசமாக ஆக்குவதை எப்படியும் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்று சிங்களத் தரப்பு கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டது. இந்த எதிர்ப்புக்கு அணியை அப்போது தலைமை தாங்கியவர் தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளராக இருந்த சீ.ஈ.கொடக்கும்புர (C.E.Godakumbura). அங்கே இருக்கும் கோகண்ண விகாரையை ஆக்கிரமித்து நிர்மூலமாக்கும் முயற்சி இது என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார், திருகோணமலையில் ஒரு இந்து புனிதப் பகுதி அமைவதன் மூலம் இந்திய ஆக்கிரமிபுப் படையெடுப்புக்கு வழிகோலும் என்கிற பீதியைக் கிளப்பிவிட்டார்கள். ஐந்தாவது கட்டுரையாளராக மாறும் என்று வாதிட்டார்

இத்தகைய சிங்கள பௌத்த தரப்பின் எதிர்ப்பைத் தொடர்ந்து இறுதியில் தேசிய பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை பிரதமர் சேனநாயக்க கைவிட்டார். புனித நகராக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவையும் கலைத்தார். பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் இந்த நடவடிக்கைகளை அடுத்து  அமைச்சர் திருச்செல்வம் பதவியில் இருந்து விலகினார். திருமலை துறைமுகத்தை தேசியமயமாக்குவது தொடர்பிலான விடயத்தின் போதும் திருச்செல்வம் கட்சியாயும் மீறி அமைச்சு பதவியைத் துறக்கத் தயாரானார். ஆனால் மாவட்ட சபைகள் விடயத்தில் டட்லி ஒப்புக்கொண்ட விடயங்களின் காரணமாக தனது விலகலைக் கைவிட்டார். ஆனால் புனித நகர் விவகாரத்தின் பொது விலகிய வேலை கட்சியின் சம்மதத்துக்குக் கூட அவர் காத்திருக்கவில்லை. ஜே.ஆர்., சுகததாச போன்றோர் அவரின் விலகலை தடுத்து நிறுத்த முயற்சித்த போதும் திருச்செல்வம் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. 
ஆனால் தமிழரசுக் கட்சி டட்லி – செல்வா ஒப்பந்தம் அமுலாகும் என்கிற நம்பிக்கையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக தொடர்ந்து இருந்தது. இறுதியில் அந்த உடன்படிக்கையும் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து டட்லி அரசில் இருந்து தமிழரசுக் கட்சி விலகியதையும் இங்கு நினைவுகொள்வோம்.

இந்த நிகழ்வு குறித்து  அன்று தமிழரசுக் கட்சியின் ஏடான “சுதந்திரன்” பத்திரிகையில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
“இந்நாட்டுத் தமிழ் மக்களின் தன்மானத்துக்கு விடுக்கப்பட்ட ஓர் சவால் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இச்செயல் மூலம் திரு டட்லி சேனநாயக்க பௌத்தர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மட்டுமே தாம் பிரதமராக இருக்கத் தகுதியுள்ளவர் என்பதை ஐயந்திரிபுக்கிடமின்றி எடுத்துக் காட்டிவிட்டார்.
எனினும் பிரதமராது இந்த நடவடிக்கை ஓரளவு தமில் பேசும் மக்களின் உள்ளங்களில் எல்லாம் மெல்ல மெல்ல மங்கி மறைந்து வந்த சிங்கள ஏகாதிபத்தியப் பிரச்சினையின் பின் இன்று பொங்கி பிரவாக்கிக்கத் தொடங்கியிருக்கிறது. நீறு பூத்த நெருப்பாக இருந்த விடுதலைக்கனல் தமிழ் பேசும் இளைஞர்களின் உள்ளங்களிலெல்லாம் இன்று மீண்டும் வீறு கொண்டு பற்றிப் பிடித்து விட்டது.
ஈழத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக் கனலை அன்றும் இன்றும் அணையாது மூட்டிவிட்ட பெருமை திருமலைக்குத் தான் சேரும். அன்று 1956ஆம் ஆண்டு இந்நாட்டுத்தமிழ் மக்கள் பாதயாத்திரை நடத்தி வெள்ளம்போல் கூடி விடுதலைத் தீர்மானத்தை நிறைவேற்றியதும் திருமலையில் தான். அடுத்து 1957ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி கொடி காப்பதற்காக குண்டடி பட்டு இன்னுயிரைப் பலிகொடுத்து ஈழத்தமிழினத்தின் விடுதலைக் காவியத்தை இரத்தத்தினால் எழுதினான் திருமலைத் தியாகி நடராசன்.” (4)

யார் இந்த எல்லாவல மெத்தானந்த தேரர்
திருக்கோனேஸ்வரர் கோவில் அங்கு ஏற்கெனவே இருந்த கோகன்ன என்கிற பௌத்த விகாரையை இடித்துத் தான் கட்டப்பட்டது என்றும் கோணேஸ்வரம் என்பது கோகன்ன விகாரையே என்றும் எல்லாவல மேத்தானந்த தேரர் யூலை மாத முற்பகுதியில் “தமிழன்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வெளியிட்டிருந்த கருத்து தமிழ்ச் சூழலில் சலசலப்புக்குள்ளானது. அதேவேளை அவர் இக்கருத்தை புதிதாக சொல்லவில்லை சிங்கள சூழலில் பல ஆண்டுகளாக சொல்லிவந்த கதை தான் அது. (5)

சிங்களவர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சத்தில் மகாசேனன் சைவக் கோவில்களை அழித்து பௌத்த விகாரைகளைக் கட்டினான் என்கிறது. அப்படி கட்டப்பட்டதில் கோகன்ன விகாரை, எறகவில்ல விகாரை, கலந்த விகாரை என்பனவற்றை குறிப்பிடுகிறது. (6)

தொல்லியலின் பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பின்னணியில் எல்லாவல மேத்தானந்த தேரரின் நீண்ட கால பங்களிப்பு உண்டு. இப்படிப்பட்ட நிர்ப்பந்தத்துக்கு முக்கியமான காரணகர்த்தா அவர். கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் 64 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த தொல்பொருள் ஆய்வுகள், பணிகள் என்பவற்றை காட்சிப்படுத்தும் கண்காட்சியொன்று எஹெலியகொட – நாபாவல சுமங்கலாராமய விகாரையில் நடத்தப்பட்டது. அவர் கண்டெடுத்த கல்வெட்டுகள், அவரின் நூல்கள், கட்டுரைகள் என்பன மட்டுமன்றி யுத்த காலத்தில் அவர் இராணுவத்துடன் சேர்ந்து ஆற்றிய பணிகள் பற்றிய புகைப்படங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதுவரை இவர் தொல்லியல், வரலாறு சார்ந்து 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இதுவரை எவரும் கண்டுபிடிக்காத 500 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் கண்டெடுத்தவர் என்கின்றனர்.

“தொல்லியல் சக்கரவர்த்தி எல்லாவல” என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். தொல்லியல் திணைக்களம் நூற்றாண்டு விழாவைக் அரசு கொண்டாடியபோது அவருக்கு தொல்லியல் சக்கரவர்த்தி என்கிற பட்டம் சூட்டப்பட்டது.  இலங்கையில் அப்பட்டம் சூட்டப்பட்ட ஒரே ஒருவர் அவர் தான். அவர் இன்றைய இனவாத சக்திகளின் முக்கிய ஆயுதம். குறிப்பாக இது சிங்கள நாடு, தமிழர்கள் அன்னியர்கள், தமிழர்களுக்கு என்று ஒரு தாயகமும் கிடையாது அங்கெல்லாம் சிங்கள பௌத்த தொன்மைகளே உள்ளன என்று தொல்பொருள் ஆதாரங்களுடன் புனையும் பணியை நீண்ட காலமாக ஆற்றி வருகிறார்.

மகாவம்சத்தை இன்றும் தொடர்ந்து இயற்றுவதற்காக அரசால் நிறுவப்பட்டுள்ள சபையில் பல வருடங்கள் உறுப்பினராக கடமையாற்றியிருக்கிறார். அரச தொல்லியல் ஆலோசனைச் சபையின் உறுப்பினரு கூட.

மெத்தானந்த தேரர் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட “வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள பௌத்த பாரம்பரியம்” (නැගෙනහිර පළාත හා උතුරු පළාතේ සිංහල බෞද්ධ උරුමය) என்கிற நூல் சிங்கள பௌத்தர்களை இனவாத ரீதியில் தூண்டிவிட்ட முக்கியமானதொரு நூல். 479 பக்கங்களைக் கொண்ட இந்த நூலுக்கு 2003  ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருதும் கிடைத்தது. அதன் பின்னர் பல மறு பதிப்புகளையும் கண்டது இந்த நூல். இந்த நூலில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல பிரதேசங்களை சுட்டிக்காட்டி அங்கெல்லாம் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் மேலும் அவை விரிவாக தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இந்த நூலின் விரிவாக்கித் தான் பலரும் சிங்கள பௌத்த வரலாற்றுப் புனைவுகளை  பரப்பி வருகின்றனர். வடகிழக்கை உரிமை கோரி சிங்களவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உந்திய முக்கிய நூல் இது.

ஒரு முறை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் இந்த நூலின் ஆங்கிலப் பிரதியை வாசித்துவிட்டு அது குறித்து விடுதலைப் புலிகளுக்கு அறிவித்ததாகவும் அதனால் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் மெத்தானந்த தேரரின் பெயரும் இருந்ததாகவும் எல்லாவல தேரர் பற்றி கடந்த ஜனவரியில் வெளிவந்த சிங்களக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. (7) அதே கட்டுரையில் இன்னொரு குறிப்பும் இருந்தது. ஒரு தடவை கிழக்கில் கொஸ்கொல்ல என்கிற பிரதேசத்தில் தொல்லியல் ஆய்வுகளை தன்னந்தனியாக சென்று தேடிவிட்டு மீண்டும் திரும்பமுடியாமல் வழிதவறி திரிந்தாராம். அப்போது புல்லுமலை பகுதியின் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் அவரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து குடியிருப்பொன்றில் மக்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்களாம்.
மேற்படி நூலைப்போன்ற பாத்திரத்தை அன்று சிறில் மெத்தியுவின் நூலும் ஆற்றியிருந்தது.. 1981, 1983 இனப்படுகொலைகளின் போது முக்கிய பங்காற்றிய சிறில் மெத்தியு என்கிற இனவாதி “An appeal To Unesco to safeguard and preserve the cultural property in Sri lanka endangered by racial prejudice un lawful occupation of willful destruction” என்கிற நூலை எழுதினார். அதில் வடக்கு கிழக்கில் உள்ள பல பிரதேசங்களை படங்கள் எடுத்து வெளியிட்டு இவை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று வாதிட்டார். 70களின் இறுதியிலும் 80களின் ஆரம்பத்திலும் பல சிங்களவர்களை இனவாத ரீதியில் தூண்டிவிட்ட நூல் இது.
1980 இல் சிறில் மெத்தியு எழுதிய "சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!" என்கிற நூலில் வடக்கு கிழக்கில் இலக்கு வைக்கப்பட்ட தொல்லியல் இடங்களைக் குறிக்கும் வரைபடம். இப்படம் அப்போதைய தொல்லியல் திணைகளத்தின் பணிப்பாளர் M.H.சிறிசோம தயாரித்தது.
அதன் பின்னர் பீ.வீரசிங்க எழுதிய “சிங்கள சிங்கமும் மன்னாரின் தொல்லியலும்” (සිංහල සිංහයා සහ මන්නාරමේ පුරාවස්‌තු) என்கிற நூலும் அந்த வரிசையில் முக்கியத்துவம் பெற்றது.

மெத்தானந்த தேரோ ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர். அக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 

பல ஜனநாயக அம்சங்களைக் கொண்ட 19வது திருத்தச் சட்டம் 28.04.2015 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது மொத்த 225 உறுப்பினர்களில் 212 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். 10 பேர் சமூகமளிக்கவில்லை. அந்த 10 பேரில் ஒருவர் மெத்தானந்த தேரர். அதற்கடுத்த இரண்டு மாதங்களில் அவர் அரசியலிலிருந்து முற்றாக விலகுவாத அறிவித்து விலகினார். அவர் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவராக இருந்தவர். 10 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எல்லாவெல மெத்தானந்த  தேரர் பிக்குமார் அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்பதே நல்லது என்று பொது அறிவுரையும் கூறி முற்றிலுமாக “சிங்கள தேசிய இயக்க”ப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் பின்னர் ராஜபக்ஷ அணியோடு சேர்ந்து இயங்கத் தொடங்கினார்.

1983 இனப்படுகொலை சம்பவங்களைத் தொடர்ந்து சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மீது கடும் எதிர்ப்புகள் தொடங்கியவேளை அந்த எதிர்ப்பை எதிர்த்து அதற்கு சித்தாந்த ரீதியில் நியாயம் கற்பிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக பணியாற்றியவர்களாக மெத்தானந்த தேரோ, நளின் த சில்வா, குணதாச அமரசேகர, எஸ்.எல்.குணசேகர போன்றோரைக் குறிப்பிட முடியும். நளின் த சில்வா எழுதிய  “அபே பிரவாத” (අපේ ප‍්‍රවාද) மெத்தானந்த தேரோ எழுதிய “சிங்கள மீட்பன் மகாராஜா துட்டகைமுனு” (‘සිංහලයේ විමුක්තිදායකයා දුටුගැමුණු මහරජතුමා’) ஆகிய நூல்களில் 83 க்கான சிங்கள பேரினவாத தரப்பு நியாயம் கற்பிக்கின்ற கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். இவை பல புனைவுகளையும் ஐதீகங்களையும் அடிப்படையாகக் கொண்ட சிக்கல் வாய்ந்த நூல் என்கிறார் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி. (8)

ஒரு முறை செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அங்கே பௌத்த சிலைகளும், விகாரைகளும் கட்டப்படுவதாக உரையாற்றியபோது அதற்கு கடும் எதிர்ப்பை எல்லாவல தேரர் பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

“கோவிலை உடைத்து பௌத்த விகாரை கட்டிய ஒரு இடத்தைக் குறிப்பிட முடியுமா? ஆனால் பௌத்த விகாரைகளை இடித்து கோவில்கள் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான இடங்களை நான் காட்ட முடியும் என்று வாதிட்டார். பாராளுமன்ற உரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்க்கும். தமிழர் தரப்பில் மேற்கொள்கின்ற முறைப்படுகளையும், தர்க்கங்களையும் எதிர்த்து - மறுத்து தவிடுபொடியாக்குவதற்கு மெத்தானந்த தேரர் போன்றார் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டார்கள்.

சமீப காலமாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் மெத்தானந்த தேரரும் வரலாற்று விபரங்கள் குறித்து மாறி மாறி ஒருவரை ஒருவர் எதிர்த்தும் மறுத்தும் அறிக்கைகள் வெளியிட்டு வந்ததை அறிவீர்கள்.

இலங்கையில் 99.99% வீதமானவை  பௌத்த தொல்லியல் இடங்களே
மெத்தானந்த தேரர் இந்த செயலணியின் பின்னணி பற்றி சமீபத்தில் அரச பத்திரிகையான தினமினவுக்கு எழுதிய கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“வடக்கு கிழக்கில் தொல்லியல் பகுதிகள் நிறையவே உள்ளன. அவற்றில் 10% வீதம் கூட இன்னும் ஆராயப்பட்டதில்லை. குறைந்தபட்சம் அவற்றைப்பற்றிய ஆரம்ப அறிக்கைகள் கூட இல்லாதது வருந்தத்தக்க செய்தி. எனவே தான் நான் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே போலீசார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் அப்பகுதிகளுக்குச் சென்று விபரங்களை தொல்லியல் சான்றுகளை சேகரித்தேன். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதன் மூலம் வடக்கு பகுதிகளில் உள்ள 98% வீதமான தொல்லியல் பகுதிகளை ஆராய்ந்து அவற்றை கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதி வெளியிட்டேன்.

யுத்தத்தை வெற்றிகொண்ட வீரப் படையினர் நமக்கு உள்ளார்கள். யுத்த காலத்தில் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்த முக்கிய தொல்லியல் இடங்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் யுத்தத்தை முன்னெடுத்தவர்கள் அவர்கள். அவர்களின் ஒத்துழைப்பு தற்போதைய “ஜனாதிபதி தொல்லியல் செயலணி”க்கு அவசியம். வடக்கு கிழக்கு தொல்லியல் விடயங்களை அணுகும் போது பகுதி பகுதியாக அப்பிரதேசங்களை பிரிக்கவேண்டும். அவை ஒவ்வொன்றையும் பாதுகாப்பதற்கு இராணுவக் குழுக்களை நியமிக்க வேண்டும். இலங்கையில் காணப்படும் 99.99% வீதமான தொல்லியல் இடங்கள் பௌத்த தொல்லியல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அப்பகுதிகளில் எல்லாம் பௌத்த விகாரைகளை கட்ட முடியாது. அது சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் தெரிவு செய்யப்பட்ட முக்கிய இடங்களில் அவ்வாறு பௌத்த விகாரைகளைக் கட்டலாம் அல்லது புனரமைக்கலாம். இந்தக் காரியத்துக்காகவே தேசப்பற்று, இனப்பற்றுள்ளவர்களைக் கொண்ட “ஜனாதிபதி செயலணி” உருவாக்கப்பட்டிருக்கிறது.” (9)
சாராம்சத்தில் இப்படி விளங்கிக்கொள்ளலாம்: இலங்கை முழுவதும் சிங்கள பௌத்தர்களின் நிலங்களே, ஏனையோர் அந்நியர்களே என்பதை நிறுவுவதற்கும், அதன் மூலம் நில ஆகிமிப்பையும், பண்பாட்டு ஆக்கிரமிப்பையும் முழு அளவில் அரச அனுசரணையில் மேற்கொள்வதை நியாயப்படுத்தி விளக்குகிறார் மெத்தானந்த தேரர். தொல்லியல் பணிகள் இராணுவமயப்படுவதையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

மாகாண சபை அதிகாரம்
13 வது திருத்தச்சட்டத்தில் உள்ள மாகாண சபைகளுக்கான பட்டியலில் பட்டியல் பிரகாரம் தொல்லியல் சம்பந்தமான அதிகாரங்கள் மாகாண சபைக்கு உள்ளது. ஆனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள் மீது மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு.

13 வது திருத்தச்சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வந்த அதிகாரங்களை இல்லாமல் செய்யும் முயற்சிகள் இப்போது மேற்கொள்வதை அறிவீர்கள். 2020 பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் “13, 19 ஆகிய அரசியலமைப்பு திருத்தச்சட்டங்களை நீக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று” பகிரங்கமாக சிங்கள பௌத்தர்களிடம் கோரி வருகிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. அதன்படி மாகாண சபைகள் முறை கலைக்கப்பட்டு, இல்லாமல் செய்யப்பட்டால் தொல்லியல் உட்பட குறைந்தபட்சம் இருக்கிற சகல அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிடும் ஆபத்து இருக்கவே செய்கிறது.

தயான் ஜயதிலக்க இலங்கையின் மைய அரசியலில் முக்கியமான அரசியல் நிபுணராக கருதப்படுபவர் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலொன்றில் இந்த செயலணி பற்றி முக்கிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
“மூன்றில் இரண்டு பகுதியினர் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்போகும் தொல்லியல் ஆய்வுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் தமிழ் பேசும் எவரும் பிரதிநிதித்துவப்படுத்தாமல் இப்பணியை செய்துவிடத்தான் முடியுமா? இதுவொரு சுத்தமான இராணுவவாத நடவடிக்கை. இதுவா முன்னுதாரணம். இதன் மூலம் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. இன-மத பிரச்சினைகள் இதனால் உக்கிரமடையவே செய்யும். பொருளாதாரமும் வீழ்ச்சியுறும். கோத்தபாயவினால் இனத்துவ நிலைமைகள் மேலும் மோசமடையும்.” (10)
தற்போதைய ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதன் பின்னர் பிக்குமார்களும், அதிகாரிகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாரம்பரிய வணக்கஸ்தலங்களுக்கு விரைந்து அவற்றை பார்வையிடுவதும், மக்களுக்குத் தடை செய்வதும் தொடர்கிறது. தமது பண்பாட்டு முதுசங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதை எதிர்த்து மக்களும் ஒன்று கூடி கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் முறுகல் நிலை கொதிநிலையை எட்டியிருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்நிலை மோசமடைய வாய்ப்புகள் உண்டு. யூலை 4ஆம் திகதி கிழக்கில் வேத்துசேனை பகுதியில் பிக்குமார் இராணுவத்தினருடன் வந்து அங்கிருந்த புளியடி வைரவர் ஆலயத்தையும் அதன் சூழலையும் காட்டி தொல்லியல் பகுதியாக அறிவிக்க தலைப்பட்டார்கள். மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்டியடித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சிங்களத் தரப்பில் மேற்கொள்ளப்படும் கர்ஜனைகளை காண முடிகிறது. இனி அவர்கள் வேறு அராஜக வடிவத்தில் நிச்சயம் மீண்டும் வருவார்கள் என்பது உறுதி.

இதுபோல 2014 ஆம் ஆண்டு புல்மோட்டை அரிசிமலையில் புனிதபூமித் திட்டத்தின் கீழ் தோட்டக் காணிகளை அபகரிக்க முற்பட்டபோது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த மக்களை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னை பிணையில் தான் விடுதலையானார்கள். சென்ற ஆண்டு செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று தான் அனைவரும் திருகோணமலை நீதிமன்றத்தினால் விடுதலையானார்கள்.

தமிழ் மக்களின் பூர்விக வழிபாட்டுப் பகுதியான கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தை எப்போதோ ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள். அது பௌத்த பிரதேசம் என்று உரிமைகோரி ஒரு பௌத்த பிக்கு 2009 இல் இருந்து அங்கேயே பலாத்காரமாக தங்கியிருக்கிறார். அங்கு பௌத்த தாதுக்கொபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அங்கே ஒரு விகாரையும் கட்டப்பட்டு தொல்லியல் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டு வெந்நீருற்றை பார்வையிட வருபவர்களிடம் டிக்கட் கொடுத்து பணம் வசூலிக்கப்பட்டுகிறது. அந்த டிக்கட் கூட சிங்களத்தில் தான் இருக்கிறது.

இன்று பேசுபொருளாக இருக்கும் திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல கட்டுமானங்களையும், தொல்பொருளியல் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வருகிறது. 1981 ஜனவரி 16 இலக்கம் 124ஐக் கொண்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அப்பிரதேசம் தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு 372 ஏக்கர் நிலப்பரப்பை தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.

தொல்லியல் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உத்தப பணிப்பாளர் W.H.A.சுமனதாச
“இந்தக் கோவில் பகுதியில் கட்டப்பட்டுள்ள 99 வீதமானவை சட்டவிரோதமானவை. நுழைவாயில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான சிவனின் சிலையும் கூட சட்டவிரோதமானது தான்.” (11)
என்கிறார். 

குறிப்பாக இந்தக் கோவில் வளாகத்தில் இருக்கின்ற கட்டுமாணங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்றும் அறிவித்து இருக்கிறார்கள். 

அதே போல பிரதேசபை நிருவாகத்தில் இருந்த கன்னியா வெந்நீர்  ஊற்றுக்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தின் போது  மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டு இருந்தன. 

தமிழர் வாழ்வியலையும் தொன்மையையும் சிதைக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த கொடூரங்கள் கோத்தபாயா ராஜபக்ச ஆட்சி காலத்தில் உக்கிரம் பெற தொடங்கி இருக்கின்றன.  மரபுரிமைச் சின்னங்களை அகற்றுவதன் மூலமும், சிதைப்பதன் மூலமும் பண்பாட்டுப் பெறுமதியை மதிப்பிழக்கச் செய்யும் கைங்கரியம் கவனமாக ஒப்பேற்றப்படுகிறது. இவ்வாறு மரபுமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் இறந்த காலத்தை கட்டுப்படுத்த முடியும். புனைய முடியும். இருட்டடிப்பு செய்ய முடியும். எதிர்காலத்தில் அச் சமூகத்தின் அடையாளங்களே இல்லை என்றும் வாதிட முடியும். ஈற்றில் அரசியல் அதிகாரத்துக்கு தகுதியற்றவர்கள் என்கிற வாதத்துக்கும் அவர்களால் வர முடியும். இந்த அணுகுமுறை ஏற்கெனவே தொடங்கியாயிற்று. தேச நீக்க சதி என்பது திடீரென்று எழுவதல்ல. அதற்கென்று பல்முனை, பல்வடிவ, பல்பண்புளைக் கொண்ட, பல கட்ட நீட்சியுள்ளது. தொல்லியல் அதில் முக்கியமான அங்கம்.
சிங்கள நிகழ்ச்சிநிரலின் அங்கம்
சிங்கள பௌத்தர்களை ஓரணியில் திரட்டி மையப்படுத்தி வாக்கு திரட்டும் சூத்திரத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய மாநாட்டைக் கூட்டி விரிவாக விளக்கப்படுத்தியவர் ஞானசார தேரர். நாடு முழுவதும் உள்ள பௌத்த விகாரைகளை அதற்கான மையங்களாக ஆக்க முடியும் என்று கூறியவரும் அவர் தான். 2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அச்சூத்திரத்தை பிரயோகித்து பரீட்சார்த்தமாக வெற்றி கண்டவர் கோத்தபாய. 2020 ஓகஸ்ட் பொதுத்தேர்தலுக்கும் அதே சூத்திரத்தைத் தான் விரிவுபடுத்தியது ராஜபக்ச அணி.

வெல்வதற்கு சிங்கள பௌத்த வாக்குகள் தாராளமாக தமக்குப் போதும் என்கிற முடிவுக்கு வந்திருப்பதை இனங்கான முடிகிறது. இல்லையென்றால் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து 1987 ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறையையே நீக்கிவிடுகிறோம் வாக்கை எங்களுக்குத் தாருங்கள் என்று சிங்கள பௌத்தர்களிடம் கேட்கத் துணிய முடியுமா?

அப்படி சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை கவர்ந்திழுப்பதற்கும், அவர்களை திருப்திபடுத்துவதற்குமான நடவடிக்கையின் ஒரு அங்கமே இந்த தொல்லியல் செயலணியின் உருவாக்கம்.

ஜனாதிபதியின் அதிகார மீறல்.
அரசியலமைப்பின் 33 வது பிரிவின் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்தி  ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டாலும் அப்படியொரு அதிகாரம் ஜனாதிபதிக்கு சட்டரீதியில் வழங்கப்படவில்லை என்று “நில உரிமைகளுக்கான மக்கள் கூட்டணி” என்கிற வெகுஜன அமைப்பொன்று சமீபத்தில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தது.
"நமது அரசியலமைப்பின் 33 வது பிரிவுக்கு ஜனாதிபதி செயலணியை நிறுவுவதற்கு திட்டவட்டமான அதிகாரம் எதுவும் இல்லை. மாறாக, 1978 ஆம் ஆண்டின் 09 ஆம் ஆண்டின் விசாரணைச் சட்டம் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. ஒரு செயலணியை அமைக்கும் விசேட அதிகாரங்கள் எதுவும் ஜனாதிபதிக்கு இல்லை. "
அரசியலமைப்பின் படி இதுபோன்ற அனைத்து செயல்களையும் நிறைவேற்ற ஜனாதிபதி 33.2 (h) பிரிவின் விரிவான வரைவிலக்கணம் வாய்ப்பை வழங்குகிறது என்று எவரும் நம்பக்கூடும் என்று நில உரிமைகளுக்கான மக்கள் கூட்டணி அறிவித்திருந்தது.

தொல்லியலின் பேரால் எந்தவொரு மக்களும் தமது நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதை நியாப்படுத்திவிட வாய்ப்பு இதனால் திறக்கிறது என்றும் சிறுபான்மைச் சமூகங்களின் நிலங்களின் மீது கை வையாதே எச்சரித்தது அவ்வமைப்பு. (12)

இவ்வமைப்பு நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களின் காணி தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறியும்முயற்சியாக ஒரு விசாரணைக்கு குழுவை அமைத்து அமர்வுகளை நடத்தியது. முல்லைத்தீவில் இடம்பெற்ற அமர்வின் போது, அங்கு பேசிய ஒருவர்
“தொல்பொருளியல் திணைக்களத்தினைச் சேர்ந்தோர் இரவு வேளைகளில் வருவார்கள். அப்போது எதையாவது புதைத்து விட்டுச் செல்வார்கள். அடுத்த நாள் அதனைக் கிண்டி எடுத்துவிட்டு, அந்தப் பிரதேசம் பௌத்தர்களின் புனித பூமி என்று செல்லுவார்கள்.”
என்று கூறுகிறார். 

ஆக்கிரமிப்புக் கருவியாக தொல்லியல்
2009 ஆம் ஆண்டு யுத்த முடிவின் பின்னர் தமிழர்களை பலவீனப்படுத்திவிட்டதாக நம்பும் சிங்களத் தரப்பு முஸ்லிம் சமூகத்தை ஒடுக்குவதற்காக இலக்கு வைத்து நகர்வதை அவதானிக்க முடிகிறது. அதற்கு சாதகமாக கடந்த வருட ஈஸ்டர் குண்டுவைப்பு சம்பவங்களை ஆக்கிக்கொண்டது. அச்சம்பவங்களைக் காரணம் காட்டி தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களை ஒடுக்குகின்ற பணிகள் தொடர்ந்து வருகின்றன. கிழக்கில் தொல்லியல் செயலணி தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல முஸ்லிம் மக்கள் மீதும் அதே அளவு பாதிப்பை ஏற்படுத்த வல்லவை. செயலணி அமைக்கப்பட்டதும் முதல் நடவடிக்கையாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் கடற்கரையை அண்டிய பகுதியைச் சூழ உள்ள காணிகளை அபகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 

அங்கே முகுது விகாரை (கடல்விகாரை) உள்ள பகுதியில் கடந்த மே 14 ஆம் திகதி சென்ற பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அதிகாரிகளைக் கூட்டி அவ்விகாரைப் பகுதியின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துமாறு ஆணையிட்டுவிட்டுச் சென்றார். பதிதாக அமைக்கப்பட்ட தொல்லியல் செயலணியின் முதலாவது கூட்டம் யூன் 10 ஆம் திகதி கூட்டப்பட்டபோது அங்கே உரையாற்றிய கமல் குணரத்ன முகுது விகாரைப் பகுதியில் நிரந்த கடற்படை துணைத்தளம் ஒன்றை ஏற்படுத்திவிட்டதாக அறிவித்தார்.

இலங்கையின் தொல்லியல் என்பது மானுடவியல் சார் தேடலுக்குப் பதிலாக மதத்தின் வாயிலாக வரலாற்றை நிறுவ முனையும் தொல்லியல் தேடல்களாக சுருங்கிவிட்டிருக்கிறது. அதுவும் பௌத்த மதத் தேடலுடன் மாத்திரம் அது வரையறுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் பரவுவதற்கு முன்னர் சைவ சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். வேறு இயற்கை வழிபாட்டு முறைகளைக் கொண்ட இனத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் ஆனால் இலங்கை அரச அனுசரணையுடனான தொல்லியல் ஆய்வுகள் அவற்றை புறக்கணிக்கின்றன. அதன் மூலம் ஏனைய மத நம்பிக்கை கொண்டவர்களின் வரலாறுகளை உத்தியோகபூர்வமாக புறந்தள்ளிவிடுகிறது.

வடக்கு கிழக்கில் பௌத்த எச்சங்களைத் தேடும் அரசு வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள சைவ எச்சங்களைத் தேட எத்தனித்ததுண்டா. அல்லது தமிழ் தொல்லியல் ஆய்வாளர்கள் அதனை மேற்கொள்ள வழி தான் விடுவார்களா என்ன?

இலங்கையின் இனப்பிரச்சினை தமிழ் – சிங்கள பிரச்சினையோடு மட்டு நின்றுவிடவில்லை. மாறாக “சிங்கள – பௌத்த” x “தமிழ் – சைவ சிக்கலாகவே” அடையாளங்கொண்டு இருந்து வந்திருக்கிறது. தமிழர்களையும் சைவர்களையும் ஆக்கிரமிப்பு சமூகமாகவே சிங்கள தரப்பு புனைந்து பரப்பி வந்திருக்கிறது. சைவத்துக்கு எதிராக பௌத்தத்தை முன்னிறுத்துவதும் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களை முன்னிறுத்துவதும் சமாந்திரமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் தொல்லியல் புனைவுகளும் அதன் வழியான ஆக்கிரமிப்பும் முதன்மை இடத்தில் உள்ளன.  எனவே சிறுபான்மைச் சமூகங்களின் அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளது.

கிழக்கில் பௌத்த தொல்லியல் இடங்கள் உள்ளன என்பது மறுப்பதற்கில்லை. அவை இலங்கையின் பண்பாட்டு, மரபுரிமைக்கு உரியது என்பதும் உண்மையே. ஆனால் அவை சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சிங்கள - பௌத்த ஆக்கிரமிப்பு வடிவத்தில் நுழையத் தொடங்கியுள்ளன. ஆக்கிரமிப்பின் சூழ்ச்சியாக நுழைகின்றன. கடந்த கால அனுபவங்கள் இந்த முஸ்தீபுகள் மீது ஐயம்கொள்ள வைக்கின்றன.

கூடவே இன்றைய சைவத் தமிழர் தரப்பு பௌத்தத்தை தமதல்லாததாக பார்ப்பதால் அவற்றை சிங்கள பௌத்தர்கள் கொண்டோடி விடுகின்றனர். “எங்கள் தமிழ் பௌத்த மூதாதையரின் தொல்லியல் சான்றுகளே இவை" என்கிற வாதத்தை எங்கேயும் காணோம். இங்கே தமிழர்கள் சைவர்களாகவும், பௌத்தர்களாகவும் வாழ்ந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மதப்பெருமிதம் இடம்கொடுக்குதில்லை. இது சிங்கள பௌத்தர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. அந்த பௌத்தர்கள் நாங்கள் தான் என்று சிங்கள பௌத்தர்கள் தமது மரபுரிமையாக பிரகடனப்படுத்திக்கொண்டு செல்லும் போது அதை மறுப்பதற்கோ, எதிர்ப்பதற்கோ தார்மீகமற்றவர்களாகவும், கையாலாதவர்களுமாக தமிழர் ஆகிவிடுகின்றனர்.

அடிக்குறிப்புகள்:

 1. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமான முகநூல் பக்கத்தில் நாளாந்தம் மேற்கொள்ளும் பணிகள் படங்களுடன் விபரங்கள் பகிரப்படுகின்றன. மே 22 அன்று இந்த விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. தொல்லியல் தொடர்பாக ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகள் பற்றிய பதிவுகளின் கீழ் இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் கோத்தபாயவை வாழ்த்துவதோடு பெரும்பாலும் மோசமான இனவாதமுடையதாகவும் காணப்படுகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் எங்கெல்லாம் கைவைக்கவேண்டும் என்கிற விபரங்களை கொடுத்து நிர்பந்திக்கிற பின்னூட்டங்களை அங்கு காண முடிகிறது.
 2. பனாமுரே திலகவங்ச நாயக்க தேரரோடு பெட்டி கண்டு ஒரு கட்டுரை திவயின பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கட்டுரை இணையத்தளங்களில் உள்ளது. http://www.colombotoday.com/ என்கிற இணையத் தளத்தில் வெளியான “பிறந்த பூமியிலேயே அநாதரவான இனமொன்ரைப் பற்றி கிழக்கில் கேட்கும் துயரக் கதை” (උපන් බිමේම අසරණ වූ ජාතියක් ගැන නැගෙනහිරින් ඇසෙන දුක්ඛිත කතාව) அக்கட்டுரையின் விபரங்களில் இருந்து தொகுக்கப்பட்டது இத் தகவல்.
 3. NU1's VLOG என்கிற யூடியுப் சானலுக்காக நுவன் மேற்கொண்ட நேர்காணலில் கலாநிதி செனரத் திசாநாயக்க கூறிய கருத்துக்கள். (18.05.2020)
 4.  சுதந்திரன் – 29.09.68 ப.4
 5.  “தமிழன்” பத்திரிகை – 12.07.2020
 6.  C.S.Navaratnam - Tamils and Ceylon – Saiva prakasa press Jaffna - 1958
 7. தர்மஸ்ரீ திலகவர்தன - விக்னேஸ்வரனின் கேள்விகளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே பதிலலித்துவிட்ட எல்லாவல தேரர். (විග්නේෂ්වරන්ගේ ප්‍රශ්නයට වසර 20කට පෙර පිළිතුරු දුන් එල්ලාවල හාමුදුරුවෝ) – 07.01.2020
 8. நிர்மால் ரஞ்சித் தேவசிறி - “கருத்தியலும் அரசியலும்: 1983 க்குப் பின்னரான இலங்கையைப் புரிந்து கொள்ள ஒரு அறிவுசார் முயற்சி” (දෘෂ්ටිවාදය හා දේශපාලනය: 1983න් පසු ලංකාව තේරුම් ගැනීමට බුද්ධිමය වෑයමක්) நியுட்டன் குணசிங்க நினைவுப் பேருரை – 16.03.2015. (https://www.colombotelegraph.com/)
 9. எல்லாவல மெத்தானந்த தேரர் – பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி – (தினமின 03.06.2020)
 10. தயான் ஜயதிலக்க இலங்கையில் முக்கிய புத்திஜீவியாக கருதப்படுபவர். இலங்கையின் பிரசித்தி பெற்ற பத்திரிகையாளரான மேர்வின் டி சில்வாவின் புதல்வர். அதுமட்டுமன்றி ஒரு இடதுசாரியாக வளர்ந்து விரிவுரையாளராக கடமையாற்றிய காலத்தில் ஜே.வி.பியின் மாற்று இடதுசாரி அணியாக 80 களில் இயங்கிய “விகல்ப கந்தாயம” (மாற்று இயக்கம்) என்கிற அமைப்பில் இயங்கினார். அது தடை செய்யப்பட்ட போது இரண்டு வருடங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் தலைமறைவாக இருந்தார். இந்த காலபகுதியில் தமிழீழ விடுதலை இயக்கங்களுடன் நெருன்க்கமானார். குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்கு நெருக்கமாக இருந்தார். ஜே.ஆரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதன பின்னர் மீண்டும் விஜய குமாரணதுங்கவின் கட்சியான “இலங்கை மக்கள் கட்சி”யில் இணைந்து அதன் மத்திய குழுவில் பணியாற்றினார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாண சபைகள் 1988 இல் அமைக்கப்பட்டபோது அந்த முதலாவது வடகிழக்கு மாகாண சபையில் திட்டமிடல், இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். வடக்கு கிழக்கு மாகாண சபை 1989 இல் கலைக்கப்பட்டதன் பின்னர் பிரேமதாசவின் ஆலோசகராக ஆனார். இந்தக் காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஜே.வி.பி.யினர் கொல்லப்பட்டதன் பின்னால் தான் ஜயதிலக்கவின் ஆலோசனைகளும், திட்டமிடல்களும் இருந்தன என்று கூறப்படுவதுண்டு. பிரேமதாச கொல்லப்பட்டதன் பின்னர் மீண்டும் சில காலம் தலைமறைவாக இருந்து விட்டு ஒரு புலமைத்துவம் சார் பணிகளில் ஈடுபட்டார். மகிந்த ராஜபக்ச காலத்தில் 2007-2009 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார். இந்த காலப்பகுதியில் சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளை நசுக்குவதற்கான நிபுணத்துவத்துடன் தயான் பங்காற்றினார். பல்வேறு சர்வதேச பதவிகளை வகித்து வந்தார். யுத்தம் முடிந்தவுடன் தென்னிலங்கையில் மாகாண சபைக்கு எதிராகவும், 13 வது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் இனவாதிகள் மகிந்த அரசை நிர்பந்தித்தார்கள். ஆனால் மாகாணசபை முறையை எப்போதும் ஆதரித்து வந்த தயான் ஜெயதிலக்கவின் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி பதவியிலிருந்து நீக்கி இலங்கைக்கு வரவழைத்தார் மகிந்த. பின்னர் மகிந்த தயான் ஜெயதிலக்கவை சரிகட்டுவதற்காக பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராக நியமித்தார். சில வருடங்களின் பின்னர் அதிலிருந்தும் நீக்கப்பட்டார். வாராந்தம் பல பத்திரிகளுக்கு எழுதிவருபவர். சர்வதேச கற்கை உள்ளிட்ட பல துறைகளில் விரிவுரையாளராகவும் இருந்து வருகிறார். அவரின் உரைகளும், கருத்துக்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளால் எப்போதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருபவை.
 11. லங்காதீப செய்தி – 17.12.2015
 12. https://sinhala.srilankabrief.org/ உள்ளிட்ட பல இணையத்தளங்களில் வெளிவந்த விரிவான அறிக்கையின் சாராம்சம் இது.

நன்றி - காக்கைச் சிறகினிலே
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates