'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையில் (Sunday Observer - 30-07-95 ) வெளியான இந்தக் கட்டுரை அதன் பின்னர் 1995ஆம் ஆண்டு யூலையில் வெளியான "தேர்ந்த கட்டுரைகள்" என்கிற விடுதலைப் புலிகளின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. "தேர்ந்த கட்டுரைகள்" சஞ்சிகையில் இப்படி பல முக்கிய நல்ல கட்டுரைகள் அப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருகிறது.
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திரு.டபிள்யூ.ரி.ஜயசிங்க அவர்களினால் தற்போது எழுதப்பட்டு வரும் புத்தகத்தி லிருந்து ஓர் அத்தியாயத்தை வெளியிடுகின்றோம் . இந்த அத்தியா யம், இந்திய இலங்கை உறவுகளில் நீண்ட காலம் பிரச்சினையாக இருந்துவந்த நாடற்ற இந்தியத் தோட்டத் தொழிலபளர்களின் சிக் கல்களில் பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா கையாண்ட தந்திரோபாயங்கள் பற் றிக் கூறுகின்றது. இந்த எழுத் தாளர் தற்போது ‘எயர்லங்காவின்' தலைவராக இருந்து வருகின்றார்.
'ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார் . அந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதம மந்திரியாக அவர் பொறுப் பேற்றபோது, 1954 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆறு ஆண்டுக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையிலுள்ள இந்தியக் குடியேற்றவாசிகளின் குடியுரிமை பற்றியும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவது பற்றியும் பேச்சுவார்த்தைகளை நடத்த, அது தான் உகந்த நேரமாக இருந்தது.
இந்தக் குடியேற்றவாசிகள், இன்னமும் இந்திய நாட்டவரல்லர் என்ற இந்தியாவின் வாதத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வில்லை . 1953 ஆம் ஆண்டில் இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த திரு. தேசாய் அவர்கள், இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களுக்கும், இந்தப் பிரச்சினை பற்றி ஆர்வம் கொண்டிருந்த இலங்கையர் அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் முதன் முதலாக இந்தக் கருத்தை வெளி யிட்டார்கள். 1945 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டையைத் தவிர்ப்பதற்காக சேர் ஜோன் கொத்தலாவல அவர்களும் பிரதமமந்திரி நேரு அவர்களும், குடியுரிமை வழங்குதல், பதிவு செய்தல் ஆகிய இரு நடை முறைகளையும் இயன்றளவில் துரிதப்படுத்துவதற்கும், இந்தச் சிக்கலான விடயம்பற்றி மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பின்தள்ளிப் போடுவதற்கும் உடன்பட்டனர்.
இந்தியர், பாகிஸ்தானியர் குடியுரிமைச் (பிரசாவுரிமை) சட்டத்தின் கீழ் இலங்கைக் குடியுரிமை அளிப்பது இப்போது பெரும்பாலும் முடிவுற்று இருந்த அதேவேளை, அந்தச் சட் டத்தின்கீழ் குடியுரிமை வழங்கப்படாத இந்தியர்கள் 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையின்கீழ் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்தில் தங்களை இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்துகொள்ள, ஆறு ஆண்டுக்காலம் இருந்தது .
குடியேற்ற நாட்டு அரசாங்கத்தால் தோட்டங்களில் வேலை செய்வதற்கென இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியக் குடிறேற்றவாசிகளின் பிரச்சினை பற்றி மேலும், பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தயார் செய்வதற்கும், அதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும் அது தான் உகந்த நேரமாகவிருந்தது . அந்த நேரம், இலங்கைக்கு உகந்ததாகவிருக்கவில்லை என்பதைத் திருமதி பண்டாரநாயக்க உணர்ந்தார். தற்போது கிட்டத்தட்ட பத்து லட்சம் இந்தியர்கள் இலங்கை மண்ணில் இருந்து பாதுகாப்பாகத் தொழில் செய்து வந்ததுடன், அவர்கள் விரைவாகத் தங்கள் இந்தியத் தொடர்புகளையும் இழந்து வந்தனர்.
சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இலங்கைப் பிரதமர் திரு. டி எஸ். சேனநாயக்கா அவர்களைப்போன்று, இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று ஈடுபாடு கொண்டார். கண்டி இராச்சியத்தின் மத்தியில் பிறந்து வளர்ந்த அவர், நிலமின்மையால் பிழைப்பதற்கு வெளியே வழி தேடுகின்ற. பிழைப்பாதாரத்துக்கு மேல் வாழ்க்கை நடத்துவதற்கு வாய்ப்பு 'இன்றியிருந்த கண்டிப் பாமரமக்களினது நெருக்கடி நிலையைக் கூர்மையாக உணர்ந்திருந்தார்.
கண்டிப் பாமரமக்கள் ஆணைக்குழு (Kandyan Peasantry Commission) வினால், கண்டியர்களது - வறுமையை இல்லா தொழிக்க எதுவும் செய்யமுடியவில்லை. தோட்டங்களிலுள்ள கணிசமான இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பு வார்களானால், அவர்களது இடங்களை இலங்கைத் தொழிலாளர்கள் பிடித்துக்கொள்ள முடியும். இந்தியாவிற்குள் நுழை வதற்கு அனுமதியும், கடவுச்சீட்டும் அவர்கள் வைத்திருக்க வேண்டும் என இந்தியா வற்புறுத்தியபடியால் 1954 ஆம் ஆண்டு முதல் அத்தொழிலாளர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட் டிருந்தனர்.
தொடக்கத்தில், அவர்கள் அனுமதியின்றியே தோட்டத்திலுள்ள அதிகாரியினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை யுடன் இந்தியாவிற்குப் பயணம் செய்து வந்தார்கள். அதுவன்றியும், கண்டிய விவசாயிகளை அரசாங்கம் உஷ்ணவலயப் பகுதி களிலுள்ள குடியேற்றத் திட்டங்களில் மீளக் குடியமர்த்த வேண் டியிருந்தது. இந்தக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவதற்கு நீண்டகாலம் எடுத்ததுடன், அதிகளவு நிதியும் தேவைப்பட்டது.
பிரதம மந்திரி, சம்பந்தப்பட்ட விடயங்களில் அறிவுபடைத்தவராய் இருந்ததோடு, பேச்சுவார்த்தை மேசைகளில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய தந்திரோபாயங்களுக்குப் புதியவராகவும் இருக்கவில்லை. 1940ஆம், 1941ஆம், 1945ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் டில்லியிலும் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளின்போது அவரது கணவரான திரு. பண்டாரநாயக்கா முக்கிய பங்கு வகித்துள்ளார். 1957ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பிரதம மந்திரி என்ற ரீதியில் புதுடில்லி சென்றபோது அவர் பண்டித நேரு அவர்களுடன் இந்த விடயம் பற்றிக் கலந்துரையாடியதுடன், தன்னுடன் அடிக்கடி டில்லிக்குப் பயணம் செய்த மாணவியான சிறிமாவோ பண்டாரநாயக்காவுடனும் தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் பங்கிட்டுள்ளார். 1945இல் டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர், எப்படி, காலஞ்சென்ற தனது கணவர் 1945ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளியிடவிருந்த அறிக்கையைத் தயாரிப்பதில் நடுநிசிவரை வேலைசெய்து சோர்வுற்றுப்போன அதிகாரிகளுக்கு உதவினார் என்பதை, அவர் எனக்கு நினைவுபடுத்தினார்..
மனிதனின் விலக்க முடியாத முடிவின் வளர்ச்சியில், எதிர் பாராதவற்றினதும் தற்செயல் நிகழ்ச்சியினதும் பங்கை, வர லாறு கற்கும் ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் இனங்கண்டு கொள்ளவேண்டும் என எச். ஏ. எல். பிஷர் என்பவர் • ஐரோப்பாவின் வரலாறு,' என்ற நூலுக்கு எழுதிய தனது புகழ்சார்ந்த முன்னுரையிற் கூறியுள்ளார். நாடுகளுக்கிடையிலான பிணக்க களை அல்லது சிக்கல்களைத் தீர்ப்பதில் தலைவர்களினது தகுதியும், அவர்களிடையே இருந்துவரும் உறவும், முடிவாக வரவிருக்கும் முடிவில் தீர்க்கமான பங்கை வகிக்கின்றது.
1964ஆம் ஆண்டில் உருவான இந்திய-இலங்கை உடன் படிக்கைக்கான பல கலந்துரையாடல்களின்போதும், செய்திப் பரிமாற்றங்களின்போதும் இது காணப்பட்டது . இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கடலெல்லையை வரையறை செய் வது பற்றியும், கச்சதீவுப் பிரச்சினை பற்றியும் 1974/75 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வீறாப்பு மிக்க பிரதம மந்திரியான இந்திரா காந்தியுடன் திருமதி. பண்டாரநாயக்கா கலந்துரையாடியபோதும், தகுதியும் நட்பும் பெரும் பங்கு வகித்தது .
ஒத்துழைப்பு
பண்டாரநாயக்கா குடும்பம் நேரு குடும்பத்துடன் நட்புறவு வைத்திருந்தது. திருமதி. பண்டாரநாயக்கா பிரதம மந்திரி யாக வந்தபின், நேரு விடுத்த அழைப்பை ஏற்று அவர் தனது குழந்தைகளுடன் இந்தியாவில் உள்ள புத்தக் கோயில்களுக்குப் புனித யாத்திரை செய்த போது, அவர்களது உறவு புதுப்க்கப்பி பட்டது. பிரதம மந்திரியாக வந்த பின்னர் அவர் வெளிநாடு சென்றமை இதுவே முதற்தடவையாகும்.
1960களில் திருமதி. பண்டாரநாயக்கர் ஓர் உலக அரசி சியல் மேதையாகக் கணிக்கப்பட்டபோது, இந்தியத் தலை வர்களுடனான அவரது மதிப்பு உச்சமடைந்திருந்தது . 1961ஆம் ஆண்டில் பெல்கிரேட் (Belgrade) நகரில் நடைபெற்ற முதலா வது அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது அணுஆயு தத்தைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்ததின் மூலம், அவர் முதன் முறையாக மேடையில் தோன்றினார். நான், பிரதம மந்திரி என்ற முறையில் வேண்டவில்லை ஒரு தாயென்ற முறை யில் வேண்டிக்கொள்கிறேன் என அவர் விடுத்த இந்த வேண்டுகோள், அனைத்துலக மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1962ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவிற்கு மிடையிலான சிக்கலில் நடுவராகப் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டபோது, இவரைப்பற்றிய எண்ணம் மேலும் உச்ச மடைந்தது.
திருமதி. பண்டாரநாயக்கா தனது பதவியை ஏற்றவுட னேயே, தனக்கு முன்னுள்ள பெரும் பணியினை எதிர்கொள்வதற்குத் தீர்மானித்துக் கொண்டார். இந்தியாவின் கண்களில் நாடற்றவர்களாகியுள்ள இந்தியக் குடியேற்றவாசிகளின் பிரச்சினையை இனங்கண்டு கொண்டு, அவர் அதற்கு முன்னுரிமை கொடுத்தார். பாராளுமன்றத் திறப்புவிழாவின்போது 12. 08. 1960 அன்று ஆற்றிய (சிம்மாசன) அரசியாரின் பேச் சில், அந்தப் பிரச்சினையை அரசாங்கம் தனது திட்டத்தில் சேர்த்துக்கொண்டது. “இந்தப் பிரச்சினைக்கு ஒரு திருப்திகரமான தீர்வை எட்டும் நோக்கில். இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழிப் பிரசைகளின் விடயத்தை எனது பிரதம மந்திரி தனது கவனத்துக்கு எடுத்துக்கொள்வார்'' எனத் தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ கூறினார்.
தனது தந்திரோபாயத்தின்படி பரந்தளவில் தீர்மானங்களை எடுக்கும் வகையில், பிரதம மந்திரி பல்வேறு விடயங்கள் பற்றிய உண்மையான நிலையைத் தயார்ப்படுத்தி வைத்துக் கொண்டார்.
பேச்சுவார்த்தைகளின்போது அவருடன் இணைந்து பணி யாற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட குழு, திறமையும், அதற்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியதாகவுமிருந்தது . அவரது பாராளுமன்றச் செயலாளர் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டார நாயக்கா, நிரந்தரச் செயலாளர் என். கியூ. டயஸ், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சேர் றிச்சர்ட் அலுவிகார, அவரின் பின்னர் இலங்கைத் தூதுவராகப் பதவியேற்ற எச். எஸ் . அமர சிங்க ஆகியோரே அந்தத் திறமைசாலிகளாவர்.
நாட்டினது அரசியற் சக்திகளின் சமநிலையில் ஏற்படும் இடர்களை உணராமல், இலங்கை ஏற்கனவே இயன்றளவு இந்தியக் குடியேற்ற வாசிகளை ஏற்றுக்கொண்டுள்ளது என்று கண்டியர்களது நலன்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்புக்களும், மலை நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொண்டிருந்த உணர்வை திருமதி. பண்டாரநாயக்கா தனது மனதில் வைத்துக் கொண்டார். அதேநேரம், தோட்டப் பகுதிகளில் கணிசமானளவு அரசியல் மற்றும் பொருண்மிய ஆற்றல் பெற்றிருந்த ஒரேயொரு பெரிய தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாலர் கொங்கிறஸ், அவர்களெல்லோரையும் இலங்கைக் குடிமக்களாக ஏற்கவேண்டும் எனப் போராடியது. இன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம்போல், தொடக்கத்திலிருந்தே இவ்விடயமும் உணர்ச்சியைத் தூண்டுவதா யிருந்தது.
அரசியலுக்குப் புதியவராக இருந்தபோதும், இந்த விடயம், கட்சி அரசியலுக்கப்பால் ஒரு தேசியச் சிக்கல் என்ற ரீதியில் கையாளப்பட வேண்டும் என்ற துணிவான, சரியான தீர்மானத்தை அவர் எடுத்தார். அத்துடன் இந்த விடயத்தில் இலங்கையில் பரந்தளவிலான இணக்கம் ஏற்படுவது, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் அவரது கரத்தைப் பலப்படுத்துவதாக இருக்கும். இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் திரு. டட்லி சேனநாயக்கா அவர்கள் இருந்துவந்தமை இலங்கையின் அதிர்ஷ்டமாகும். அத்துடன், அவர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினது தலைவருமாவார்.
திரு. டட்லி சேனநாயக்கா, சம்பந்தப்பட்ட விடயங்களில் மட்டும் அறிவு படைத்தவராக இருக்கவில்லை. ஆனால், இந்த விடயங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் கூட, அதிகளவில் பிரதம மந்திரியின் கருத்துக்களுடன் ஒத்திருந்தன. 1953 ஆம் ஆண்டு லண்டனில் திரு. நேரு அவர்களுடன் நடத்திய பேசுச் வார்த்தைகளின்போது ஓர் உடன்பாட்டுக்கு வரத்தவறிய அவர், தற்போது, புதிய பிரதம மந்திரி பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்குத் தனது முழு ஒத்துழைப்பையும் நல்கினார்.
பேச்சுவார்த்தைகளின் போது கைக்கொள்ளவேண்டிய தந்திரோபாயங்கள் பற்றி பிரதமமந்திரி அவர்கள் சிந்தித்து வகுத்துக் கொண்டிருந்த அதேவேளை, இந்திய - பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்காதோரின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, ஓர் ஆண்டுக்குள் குடியுரிமை வழங்கி முடிக்கப்படவேண்டும் எனவும் பணிப்புரை விடுத்தார். குடியுரிமை வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டத்தின்கீழ் அதற்குரிமையுள்ளோர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கான இலங்கையின் பணி முடிந்து விடும். அதன் பின்னர், நாடற்றவர்களாக இருப்போரின் எண்ணிக்கை தெரியவரும் . இது. பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பெரிதும் உதவியாகவிருக்கும்.
இந்தியக் குடியேற்றவாசிகளின் குடியுரிமைத் தகுதிபற்றி மூன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவர் கைக் கொண்ட கொள்கையற்ற நிலையிலிருந்து இலங்கை வழுவக் கூடாது எனத் திருமதி. பண்டாரநாயக்கா மிக முக்கியமாகத் தீர்மானித்துக்கொண்டார். இந்தியக் குடியேற்றவாசிகள் அனைவரும் இந்தியக் குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இலங்கையில் நிரந்தரமான அழியாத அக்கறையுண்டு என்ற நோக்கில், குடியுரிமை வழங்குவதற்காகத் திரு. டி. எஸ். சேனநாயக்கா 1949 ஆம் ஆண்டில் இந்திய - பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றினார். உண்மையில், அவர்கள் இலங்கைக் குடியுரிமை பெறும்போது, இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிடவேண்டுமெனப் பண்டிதர் நேரு கூறியிருந்தார். ஆனால் இந்தப் பிரச்சினையின் கடைசித் தீர்வுக்கான நடவடிக்கை எனப் புதிய சட்டத்தின்கீழ் இலங்கை தானாகவே குடியுரிமை வழங்கவிருந்ததை 1953 ஆம் ஆண்டு இந்தியா முற்றாகத் தகர்த்துவிட்டது .
அவர்கள் முன்னர் இந்தியக் குடிமக்களாகவிருந்தாலும், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாளிலிருந்து நடை முறைக்கு வந்த புதிய அரசியல் யாப்பின் பிரகாரம், அவர்கள் பிறப்பினால் இந்தியப் பிரசைகளாகக் கருதப்படுவர் என இந்தியா வாதிட்டது. அதன்படி, அவர்கள் இந்தியாவுக்கு வெளியே சாதாரணமாக வசித்துவருகின்றமையால் , இந்திய அரசியல் யாப்பின் 8வது விதியின்கீழ் இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்யப்படுவதற்கு அவர்கள் இப்போது விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
திட்டம்
இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு, 55 வயதை அடையும் வரை அவர்களுக்கு இலங்கையில் வேலைவாய்ப்புண்டு என உறுதி செய்யப்பட வேண்டும் போன்ற பல முன் நிபந்தனைகளை இந்தியா விதித்தது. தனது குடிமக்களின் உரிமையை மறுக்கும் இந்த முயற்சி, இந்தச் சிக்கலுக்கு முற்றிலும் புதிய, எதிர்பாராத பரிணாமத்தைக் கொடுத்ததோடு, முட்டுக்கட்டை நிலை ஒன்றையும் உருவாக்கியது.
இந்தக் குடியேற்றவாசிகள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாதாரணமாக இந்தியாவில் வசித்து வந்தார்கள் எனக் கணிக்கப்படாவிட்டாலும், அவர்கள் இந்தியாவிலுள்ள தங்களது சொந்த இருப்பிடங்கனை இழக்கவில்லை. ஆகவே அது, இந்தியாவின் புதிய அரசியல் யாப்பின் கீழும் அவர்கள் இந்தக் குடிமக்களே என இலங்கை வாதாடியது.
பிரித்தானியாவில், குடியுரிமை விடயத்திலும் சர்வதேசச். சட்டங்களிலும் சிறந்து விளங்கும் அதிகாரிகளுடன் ஆலோசிப் பதற்குப் பிரதம மந்திரி முடிவு செய்தார். இந்த நடவடிக்கை, பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கு வலுவூட்டும். அத்துடன், சர்வதேச நீதிமன்றத்தினாலோ அல்லது சபையினாலோ இந்த விடயத்தைத் தீர்த்துவைக்கும் சாத்தியங்கள் பற்றியும் கவனத்தில் எடுக்க, பிரதம மந்திரி விருப்பமில்லாமல் இருக்க வில்லை .
அதேவேளை நாட்டில் நடைபெறுபவற்றையும் திருமதி பண்டாரநாயக்கா கடுமையாக நோக்கினார். 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் இந்தியத் தூதரகத்தினால் இந் தியக் குடிமக்களாகப் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உற்சாகமூட்டுவதாகவில்லை. 40, 000 பேரே பதிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்களும் தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இந்தப்பிரச்சினை பற்றி, தொட்டுக்கூடப் பார்க்கப்படாமல் இருந்தது .
1954ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்தைகளின்போது, இந்தியக் குடிமக்களாகப் பதிவுசெய்யப்பட்டவர்களில் தொழில் பார்ப்பவர்கள் 55 வயதுவரை அதாவது ஓய்வு பெறும்வரை வேலை செய்வதற்கும், அதன் பின்னர் அவர்கள் நாட்டை... விட்டு வெளியேறும்போது நட்டஈடு வழங்குவதற்கும் ஒரு திட் டத்தைக் கொண்டுவர உத்தேசித்துள்ள தாகவும் இலங்கை குறிப்பிட்டது. பதிவுசெய்வதை ஊக்குவிப்பதற்கு, கூடுதல் தூண்டு தல் அளித்தால் அதிகமானோர் பதிவு செயவர் எனக் பிரதம மந்திரி நினைத்தார். அந்த விடயம்பற்றி ஆராய்வதற்கு அவர் ஒரு குழுவையும் நியமித்தார்.
தொழிலாளர் ஓய்வு பெற்று, தாய் நாட்டுக்குத் திரும்பும் போது ஓர் ஊக்குவிப்புப்படி வழங்குமாறு அக்குழு விதந்துரைத்தது. அந்தத் தொழிலாளி, தன்னுடன் பதிவு செய்த வயது குறைந்த தன்னுடைய குழந்தைகளையும் தான் போகும்போது அமைத்துச் செல்ல முடியும். அதனால் தோட்டத்தில் ஏற்படும் வெற்றிடத்தை இலங்கைத் தொழிலாளரைக்கொண்டு நிரப்பி விட முடியும்.
தந்திரோபாயம்
இந்த ஊக்குவிப்புடன், தோட்டங்களில் இலங்கையர்கள் வேலை செய்வதற்கான ஆக்கபூர்வமான துரித நடவடிக்கைகளைப் பிரதம மந்திரி மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டவரல்லாதோர் தோட்டங்களில் வேலை செய்வதைக் கட்டுப்படுத்தும் ஒரு மசோதா 23, 05. 02 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தோட்டங்களில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தொழிலாளர்களின் எண்ணிக்கையை அமைச்சர் குறிப்பிடுவார். கிராமப்புறத் தொழிலாளர்கள் தோட்டவேலைகளை ஏற்பதற்கு வசதிகள் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெறுவதற்காக இந்த மசோதா வைக்கப்பட்டது .
பிரதம மந்திரி அதற்கப்பாலும் ஒரு படி சென்றார் . தோட்டங்களை உருவாக்குவதற்காக, குடியேற்ற நாட்டு அரசாங்கம் நிலத்தினை அபகரித்ததை மனதிற் கொண்ட பிரதம மந்திரி, இலங்கையரல்லாதோர் இலங்கையரின் காணிகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தை இயற்றும்படி பணித்தார்.
இந்த விடயத்திற் காணப்பட்ட சிக்கல் காரணமாக, சட்ட நகலைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இலங்கையரல்லாதோரின் சொத்துக்களைச் சுவீகரிப்பதற்கான ஒரு சட்டம் 09. 07. 64 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், நிதிச் சட்டங்களுக்கமையத் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காக அது மீண்டும் பெறப்பட்டது .
திருமதி. பண்டாரநாயக்காவின் தந்திரோபாயங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டன? ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியாவினுடைய எதிர் நடவடிக்கைகள் எப்படி அமைந்தன? என்பவை பற்றி அடுத்த அத்தியாயங்களிற் கூறப்படும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...