Headlines News :
முகப்பு » , , » தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன்

தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன்

ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று அதிகமான கவனிப்பு கிடைக்கிறது செய்தியை அறியவிரும்பும் ஆர்வத்தை அது தூண்டுகிறது. அந்தப் பகுதி மக்களின் கவனத்தை இது நிச்சியமாக ஈர்க்கும். இந்தச் செய்தி 'புனர்வாழ்வுக்கான மானியம் வழங்கப்பட்டபோது' என்று சேர்கையில் அது அந்தப் பிரதேசத்தின் அக்கறைக்குள்ளானதாக மாறுகிறது. இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 'விநியோகத்தின் போது நடந்த குழறுபடிகளால் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்புக்கு இட்டுச் சென்றது' என்று சேரும்போது அது நாடு முழுவதுக்குமான செய்தியாகிவிடுகிறது. செய்தி ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக திரட்டப்படும் தகவல்களால் உருவாக்கப்படுகிறது. அந்தச் செய்தியை உருவாக்குபவருக்குள்ள நோக்கம், பார்வை என்பவற்றைப் பொறுத்து அந்தச் செய்தியின் தன்மை அல்லது தொனி வேறுபடுகிறது. சேர்க்கப்படும் அல்லது தவிர்க்கப்படும் தகவல்களைப் பொறுத்து அந்தச் செய்தியின் அர்த்த பரிமாணங்கள் வேறுபடுகின்றன. இதன்போது நடந்த சம்பவத்தைவிட அதற்கு கற்பிக்கப்படும் அர்த்தங்கள் முக்கியமாகிவிடுகின்றன.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் முகநூல் 'வாதப் பிரதிவாத' குறிப்புக்கள் யாழில் நடந்த ஒரு சம்பவம் பற்றிய தகவல்கள் குறித்துத் தொடங்கியிருப்பது எனக்கு ஒருவகையில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். ஏனென்றால் தமிழ் ஊடகங்களில் வரும் தகவல்கள் சரிபார்க்கப் படாமலே பிரதிசெய்யப்படுதல் இலங்கைத் தமிழ் சூழலில் வெகு சாதாரணம் அல்லது வழமை. அப்படியிருக்க இந்தத் தகவல்கள் இப்போது கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன என்றால் அது வரவேற்கப் படவேண்டியதுதான். ஆனால் தகவல்களுக்கு அரசியல் பரிமாணம் கொடுத்து அர்த்தப்படுத்தும் வேலையயும் அவை செய்யும் போது அவை தகவல்களென்பதற்கு மேலாக, ஒரு செய்தி என்பதற்கு மேலாக ஒரு கருத்துருவாக்கம் என்ற மட்டத்தை நோக்கிச் சென்றுவிடுகிறது.

கருத்துருவாக்கத்தின் போது திட்டவட்டமாக தெரிந்த ஆதாரங்கள் போதியளவு இல்லாதபோது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துருவாக்கங்கள் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது. நடந்துகொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட சர்ச்சையில் நடப்பது இதுதான். நூலகம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டபின் திறந்து வைக்கப்பட என மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்ட திகதியில் அதைத் திறக்க வேண்டாம் என புலிகள் யாழ் மேயரிடம் கூறினார்கள் அல்லது மிரட்டினார்கள் என்பதுதான் தகவல். எதற்காக அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தார்கள் அல்லது மிரட்டினார்கள் என்ற முக்கியமான தகவல் எந்த ஊடகத்தாலும் பதிவு செய்யப்படவில்லை அல்லது அத்தகைய பதிவு எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

ஆனால் சம்பந்தப்பட்ட நிகழ்வின்போது நேரடியாக களத்தில் நின்ற ஊடகவியலாளர் சோமீதரனும் மாநகரசபை உறுப்பினர் தங்கமுகுந்தனும் புலிகளுக்கு நூலகத்தைத் திறந்துவைப்பதில் உடன்பாடு இல்லை என்று கூறுகிறார்கள். புலிகள் திறக்கக் கூடாது என்று மிரட்டிய்தை எதிர்த்து மேயர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் தமது பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். அந்த அறிக்கையில் மாநகரசபை ஊழியர்கள், மேயர் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் புலிகளின் அரசியற் பிரிவால் தாம் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்கள். அந்த அறிக்கையில் சாதி தொடர்பான எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதேவேளை இந்த அறிக்கை வெளியான அதே தினமுரசு இதழில் மேயர் அவர்கள் அளித்த பேட்டியில் தனது சாதி காரணமாக தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே புலிகள் திறப்பு விழா நிகழ்வைத் தடை செய்ததற்கான காரணம் என்று கூறுகிறார். அதேவேளை அந்த காரணத்தை புலிகள் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாக அவர் பேட்டியில் வேறெந்த இடத்திலோ, பெரும் இழப்புகள் நடக்குமென இளம்பருதி மிரட்டியதை விபரித்தபோதோ தெரிவிக்கவில்லை.

எது எப்படி இருப்பினும் இந்தத் தகவலின் அடிப்படையில் இப்போது நடக்கும் விவாதங்கள் இரண்டு விதமான அரசியல் நிலைப்பாடுகள் அல்லது மதிப்பீடுகளிலிருந்து முவைக்கப் படுகின்றன. இரண்டுமே புலிகளின் அரசியல், சாதீயம் பற்றிய கருத்துக்கள் எப்படி இருந்தன என்பதை தத்தம் பின்னணியிலிருந்து விளக்கம் தருபவையாக அமைந்திருக்கின்றன.

ஆனால் இங்கு முக்கியமானது, எந்தக் காரணத்துக்காகவெனினும் நூலகம் திறக்கப்படுவது தடைசெய்ய்ப்பட்டது என்பதே. அது எந்தக் காரணத்துக்காகச் செய்யப்பட்டிருந்தாலும் மிக மோசமான ஒரு தவறென்றே சொல்லவேண்டும்.

நடக்கும் விவாதத்தில் அந்தவிடயம் கணக்கில் எடுக்கப்படவில்லை அல்லது இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விடயம்.

அதேவேளை இது சாதியக் காரணத்துக்காக தான் நடந்தது என்று கூறும் தரப்பினர் இதற்கு வேறும் ஒரு பக்கம் இருப்பதாகக் கூறுவதை கணக்கிலெடுக்கக் கூடத் தயாராக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தகவல்களைப் பதிவிடும் ஊடகங்களின் செய்தியாக்கல் பற்றிய பொறுப்பற்ற போக்கு அப்போது இரண்டு விடயங்களைச் செய்திருக்கிறது. ஒன்று முழுக்கமுழுக்க இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்தது. மற்றையது கிடைத்த தகவலை முழுமைப்படுத்தாமல் அப்படியே பதிவுசெய்தது. ஆங்கில ஊடகங்கள் சிலவும் இந்தச் செய்தியை வேறு சரிபார்ப்புக்களெதும் செய்யாமல் அப்படியே வெளியிட்டன. இதுவே இன்றைய நிலமையை இவ்வளவு வாதப்பிரதிவாதங்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

எவ்வாறாயினும் நமது நாட்டின் கட்சிகள், அரசாங்கங்கள், அரசியல் சூழல், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டு முறைமை என்பவை பற்றிய தொடர்ச்சியான அவதானிப்பும் புரிதலும் உள்ள எவருக்கும் என்ன நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதை ஊகிக்க முடியும்.

புலிகள் எந்த அரசியல் ரீதியான முடிபுகளையும் சரி, நிர்வாகரீதியான முடிவுகளையும் சரி ஜனநாயக ரீதியான முறையில் மக்களை வென்றெடுத்து நடைமுறைப் படுத்தியவர்கள் அல்ல. அவர்களது முடிவுகள் சரியானவை, நியாயமானவை, தவறானவை, மிக மோசமானவை என எந்த வகைப்பட்டவையாக இருந்தபோதும் அவர்களது வழிமுறை இப்படித்தான் இருந்தது. ஒரு கதவடைப்புப் போராட்டம் கூட மக்கள் மத்தியில் ஜனநாயபூர்வமான வழியில் பங்கேற்கவைத்துச் செய்யப்பட்டதில்லை. ஜனநாயக வழிமுறைகளைப் புறக்கணித்தமை, அதிகாரத்துவ நடைமுறையை வலியுறுத்தியமை, தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை எதிர் நிலையில் அணுகியமை, அமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகளைக் கூட நியாயபடுத்தியமை என்று பல தவறான பக்கங்களை புலிகள் கொண்டிருந்தனர். அதேவேளை அவர்களிடம் தமிழ் மக்களின் அரசியற்கோரிக்கை சார்ந்து விட்டுக்கொடுக்காத போராடும் இயல்பும் இருந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும். ஆனால் துயரம் என்னவென்றால் முடிவு வழிமுறையை நியாயப்படுத்தும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் வழிமுறையே தனக்கேயுரிய விதத்தில் முடிவையும் மாற்றிவிடும் என்பதை அவர்கள் இறுதிவரை தெரிந்து கொள்ளவில்லை. அல்லது அப்படி ஆகும் என நம்பத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. இதனால் அவர்கள் இந்தச் சர்ச்சையைப் போல் பல அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

அநுராதபுரப் படுகொலைகள்,முஸ்லீம் பள்ளிவாசற் படுகொலைகள், யாழிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது, ரஜிவ் காந்தி படுகொலை, மாற்று இயக்கங்களையும் அவற்றின் உறுப்பினர்களையும் அழித்தது அல்லது இயங்குவதை ஆயுத பலத்தால் தடை செய்தது போன்ற சில உதாரணங்கள் அவர்களது அரசியல் இருப்புக்கு எவ்வளவு பெரும் நெருக்கடிகளைத் தந்தன என்பது வரலாறு.

இத்தகைய தவறான போக்குகளால் அவர்கள் செய்யாத செயல்களுக்கும் சேர்த்து அநுபவிக்க வேண்டிய நிலை உருவானது. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சாதி காரணமாகவே திறப்புவிழா தடுக்கப்பட்டது என்றகுற்றச்சாட்டும் கூட. உண்மை முக்கியம் என்பதை விட, அவர்கள் செய்திருக்கலாம் என்று மக்கள் மத்தியில் அபிப்பிராயம் எழுவதற்கான ஒரு நிலை இருக்கவே செய்தது என்பதே, இது பற்றி அந்தக் காலத்தில் யாருமே அலட்டிக் கொள்ளவில்லை என்பதற்கான காரணமும் கூட. அதைப்பற்றிப் பேசியவர்களுக்கும் ஆதாரங்களை விட அனுமானங்களே போதுமாக இருந்தது. கூடவே இந்தத் தகவலைத் தவறென்று அடித்துச் சொல்லவும் யாரும் அக்கறைப்படவுமில்லை, புலிகள் உட்பட.

இப்போது ஊடகவியலாளராக எனக்கு மிகநெருக்கமான நண்பர் சோமீதரன் இந்த நூலகத் திறப்புவிழாபற்றி எழுதப்போக ஊக அடிப்படையில் வரலாறு எழுதியவர்களுக்கு அது ஒரு பெரும் சிக்கலாக வந்திருக்கிறது. அப்படி ஒரு பக்கம் இருக்கிறதா என்று கேட்டு உரையாடும் அளவுக்குக் கூட அவர்களுக்கு பொறுமை இல்லாதிருக்கிறது. தமிழ் சூழலில் இன்றெல்லாம் இப்படி எத்தனையோ கற்பிதமான கதைகள் அரைகுறையாகக் கேள்விப்படும் தகவலை வைத்துக்கொண்டே கட்டியெழுப்பப் படுவது மிகச் சாதாரணமாக நடக்கிறது. அன்மையில் சுமந்திரனின் சிங்கள மொழிப் பேட்டி ஒன்றுக்கு எழுந்த எதிர்வினை இதற்கு நல்லதொரு உதாரணம். இப்போது நடக்கும் சர்ச்சையில் ஆளையாள் தனிப்பட்ட முறையில் குரோதத்துடன் தாக்குவதுப்தொடர்கிறது

தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு காரணமுமில்லாமல் ஒருசில அரசியல்வாதிகளின் சதிகார நோக்கத்தால் நடந்த ஒன்று என்று முடிவுரை எழுதும் அளவுக்கு வன்மமும், இலங்கையின் சோசலிசப் புரட்சியை அதுவே பின்னோக்கித் தள்ளி விட்டதென்ற கடுங்கோபத்துடன் தமது இன்றைய நிலையை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தச் சர்ச்சை ஒரு கொண்டாட்ட மனோநிலையை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.

ஆனால் சமயங்களில் வரலாறு கற்பிதங்களாலும் புனைவுகளாலும் கட்டப்படுவது அவ்வப்போது நடந்து வந்தாலும் நின்று நிலைப்பதில்லை. உண்மைகள நீண்டகாலத்துக்குப் புனைவுகளால் மறைத்து வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதையும் அது வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறது.

அந்தவகையில் நடந்துகொண்டிருக்கும் இச் சர்ச்சை ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல பலவீனமான தகவல்களால் பின்னப்பட்ட கருத்துருவாக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சர்ச்சை என்பதில் மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தக்கதே. ஆனால் சர்ச்சை, தகவல்கள் வரலாறு தொடர்பான விவாதங்கள் என்பவற்றுடன் தொடர்வதற்குப் பதில் தனிமனித தாக்குதல்களாக அமைவது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல, எத்தகைய பயன்விளைவையும் தரப்போவதில்லை.

உரையாடல்களும் விவாதங்களும் தெளிவுபெறுவதாக அமையட்டும்!

எஸ்.கே.விக்னேஸ்வரன் தனது முகநூலில் எழுதிய பதிவை நன்றியுடன் பகிர்கிறோம்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates