எனது ஊர் வடமராட்சியில் ஒரு காலத்தில் சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த புலோலி தெற்கில் ஒருபகுதியையும் துன்னாலை வடக்கின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய வல்லிபுரக்குறிச்சி மற்றும் கொத்திய வத்தையாகும். குறிப்பாக சொல்வதானால் இது சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த ஊர்களால் சுற்றிவழைக்கப்பட்டிருந்த ஒரு சிறு கிராமமாகும்.
1974 ல் இந்த இரண்டு ஊர்களுக்கும் பொதுவான பெயராக 'சிங்கை நகர்' என்ற பெயரை பாவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நான் கொண்டுவந்தேன். அப்போது எழுத்துலகிலும் ஊடகத்துறையிலும் பிரவேசித்த 'நான் சிங்கைத் திவாகரன்' என்று எனது புனைபெயரை அமைத்துக்கொண்டேன்.1975 என்று நினைக்கிறேன் இந்தப் பெயரில் நான் எழுதிய 'இலட்சியங்கள் சாவதில்லை' என்ற சிறுகதைக்கு தேசிய இளைஞர் சேவை மன்றம் இலங்கை தழுவிய அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு கிடைத்தது. இது எங்கள் ஊருக்கு கிடைத்த முதல் கௌரவமாக கருதப்பட்டது.இன்று கொத்தியவத்தை என்ற பெயர் எனது அண்ணர் தங்கவேலின் தீவிர முயற்சியால் சிங்கை நகர் என்று சட்டரீதியாக மாற்றம் பெற்றுவிட்டது.
1970 காலகட்டத்தில் எங்களுரில் ஏறக்குறைய 82 குடும்பங்கள் இருந்தன. இதில் ஒரு நான்கு குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் சீவல் தொழிலையே செய்தார்கள். இந்த தொழிலுக்குரிய பனை தென்னைகள் பெரும்பாலும் அயலூரிலுள்ள உயர்சாதியனருக்கு சொந்தமானதாக இருந்தது.அந்தக் காலகட்டத்தில் 20 பேர் வரை தான் ஓஎல் தாண்டிய கல்வியை கற்றிருந்தார்கள். ஏ எல் தாண்டிய கல்வியை கற்றது 5பேர். பட்டப்படிப்பு படித்தது 2 பேர். இதில் அரசு உத்தியோகங்களை பெற்றிருந்தது 12 பேர். அதில் எனது மாமா செல்லத்துரை(தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்)தான் உயர் பதவியில் இருந்தவர்.அவர் கொழும்பு மத்திய தபாலகத்தில் தபாலதிபராக இருந்தார்.
ஏமது ஊரில் முதல் கலப்பு திருமணம் செய்தவர் எனது இன்னொரு மாமா பசுபதி.இவர் கொழும்பு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவரது பிள்ளகைளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு காத்திரமான பங்களிப்பை செய்திருந்தனர்.
.அடுத்து எனது அண்ணா (பெரிப்பாவின் மகன்)சிவபாதம்.ஆசிரியராக இவர் தமிழீழ தேசித்தலைவரின் இரத்த உறவு முறையான பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார்..இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.இறுதி யுத்தத்தின் போது இராணுவத்iதால் கைது செய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்.இவரது மகன் அருண் தமிழீழ சட்டவாளராக இருந்தவர் இறுதியுத்தத்தில் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். எனது அண்ணியும் ஒரு ஆசிரியை.ஒரு மகள் பாதுகாப்பு காரங்களுக்காக அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை நான் இங்கு குறிப்பிடவில்லை.
எனது இன்னொரு அண்ணர் தங்கவேல் அகிம்சைவாதி .தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர்.அறவழி போராட்ட குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். பனம்பொருள் அபவிருத்தி சபையின் மூத்த அதிகாரியாகவும் இருந்தவர்.எமது ஊரின் முன்னேற்றத்துக்கு தனது வழியில் பெரும்பங்காற்றியவர். அவரது மனைவியான எனது மூத்த அண்ணி மந்திகை அரசினர் மருத்துவமனையில் மிக நீண்டகாலம் மருத்துவராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.அவர்களுக்கு மூன்று பெண்கள் மூவரும் பட்டதாரிகள்.
எனது மைத்துணர் ஒருவர் தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையானராக இருந்தவர் தற்போது இறந்துவிட்டார். அவரது மகன் தமிழீழ தேசியத்தலைவரின் மெய் பாதுகாப்பு பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். (பாதுகாப்பு கருதி அவரின் பெயரை நான் இயங்கு குறிப்பிடவில்லை.
எனது அப்பா 1965க்கு முற்பட்ட காலகட்டத்திலும் எனது சித்தப்பா செல்லத்தம்பி 1960-1975 காலகட்டம் வரையிலும் எமது சமூக விடுதலைக்கான காத்திரமான பணிகளை செய்திருக்கிறார்கள்.எனது சித்தப்பாவின் மகன் எம்சி என்று அழைக்கப்படும் லோகநாதன் முதலில் புளொட்டில் இருந்ததவர் பின்னர் தீவிர இடதுசாரி செயற்பாட்டாளராக டென்மாரக்கில் இருந்து இறக்கும் வரை செயற்பட்டவர்.
ரவி நாராயணமூர்த்தி தேவராஜ் பகவத்சிங் இரத்தினமணி செல்லமணி (இன்னும் சிலரது பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் தகவல் தந்தால் இணைத்துக்கொள்கிறேன்) போன்றவர்கள் 1970 களில் எமது ஊர் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தவர்கள்.
சாதியும் தீண்டாமையும்
1960 வரை எமது ஊரவர்கள் மீது தீண்டாமை என்பது மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டது.சேட்டு போட முடியாது தோழில் சால்வை போட முடியாது. செருப்பு போட்டு வீதியில் நடக்க முடியாது.பிற்காலத்தில் தோழில் சால்வை பேட முடியும் என்றாலும் உயர்சாதியினர் வீதியில் வந்தால் அதை கக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு கும்பிடு போட்டு ஒதுங்கிச் செல்லவேண்டும்.பிணம் எரிக்க வேண்டும்.வீடுகளில் முற்றம் கூட்டவேண்டும். ஆடு மாட்டுக்கு ஓலை வெட்டிக் கிழித்துக்கொடுக்க வேண்டும், திருமணங்களில் கா காவவேண்டும். பனை தென்மரங்களில் கள்ளிறக்குவதற்கோ பதநீர் இறக்குவதற்கோ பயன்படுத்த வேண்டும் என்றால் ஒன்றவிட்ட ஒருநாள் வருமானத்தை அதாவது மாதத்தில் சரி அரவாசி நாள் வருமானத்தை 'வாரம்' என்ற பெயரில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.உயர் கல்வி கற்க முடியாது. ஆரம்ப பாடசாலைகளிலும் நேரடியாத தீண்டாமை பார்க்கப்பட்டது.எந்தக் கோவில்களுக்கும் உள்ளே சென்று வழிபட முடியாது. போத்தலில் தான் தண்ணீரும் தேநீரும் தரப்பட்டது. தட்டுவத்தில் தான் சாப்பிட வேண்டி இருந்து.பொது போக்குவரத்தில் ஆசனங்களில் அமரமுடியாது.பொது கிணறுகளிலும் தண்ணீர் அள்ள முடியாது.
1970 களில் எங்களது இளமைக்காலத்தில் இந்த நிலை மாறத் தொடங்கியது பிணம் எரிப்பதில்லை ,முற்றம் கூட்டுவதில்லை.நாங்கள் சேட்டுப் போட்டோம் டவுசர் அணிந்தோம்.கூழைக் கும்பிடு போட மறுத்தோம்.போத்திலில் தண்ணீரும் தேநீரும் குடிக்க மறுத்தோம்.தட்டுவத்தில் சாப்பிட மறுத்தோம்.அடக்குமறைகள் இருந்து கல்வியை கற்றோம்.
'நீங்கள் ஊத்தையங்கள்.நீங்கள் மூடர்கள். நீங்கள் அறிவில்லாதவல்கள். நீங்கள் இன்ன தொழிலைத்தான் செய்ய முடியும் மற்ற தொழிலைச் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. சாதி எண்டது பிறப்பால வருவது அது மாத்தேலாது.சாதி அடிப்படையில் நீங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் உயர்ந்தவர்கள். தாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கின்படி தான் நடக்க வேண்டும்.' என்ற சாதி வெறியர்களின் சமூக உளவியலை நாங்கள் புரிந்துகொண்டோம்.சாதி என்பது ஒரு சாக்கடை அதற்குள் உழலுவது எந்த மாற்றத்தையும் தராது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம்.
தேநீர்கடைகளில் இரட்டை டம்ளர் அல்லது போத்திலில் தண்ணிர் தேநீர் தரும் முறையும் தட்டுவத்தில் அல்லது தாமரை இலையில் வெளியில் இருந்தி சாப்பாடு தரும் முறையும் (1965-70) ஒழிக்கப்பட்டது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சமத்துவத்துவ வழிபாட்டுக்கு அனுதிக்கப்பட்டது.அதன் சுற்றாடலில் இருந்த எல்லா மடங்களுக்குள் செல்லவும் அங்குள்ள எல்லாகிணறுகளிலும் தண்ணீர் அள்ளவும் அனுமதிக்கப்பட்டது.
தீண்டாமைக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டம் 'ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒடுக்கப்படுபவன் மௌனமாக ஏற்றுக்கொண்டிருக்கும் வரை ஒடுக்குபவன் ஒடுக்கிக்கொண்டே இருப்பான். ஒடுக்கப்படுபவன் தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற பொழுதுதான் ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒழிக்க முடியும் என்ற உண்மையை எங்களுக்கு புரிய வைத்தது.அது எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தந்தது.
ஆனால் 70 களின் ஆரம்பத்தில் இடது சாரி இயக்கத்தின் ஒரு பகுதியினர் பௌத்த சிங்கள பேரினவாதிகளுடனனும் குறிப்பாக சிங்கள உழைக்கும் மக்களை ஒடுக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடம் சரணடைந்துவிட, இன்னொரு பகுதியினர் செயலற்று தாங்களாகவே முடங்கிவிட அல்லது தங்களது செயற்பாடுகளை குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்திவிட நாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்ந்தோம்.
1983 க்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய போது அது என்னையொத்த இளைஞர்களுக்கு ஒரு வெளிச்சத்தை தந்தது.ஏனென்றால் பௌத்த சிங்கள பேரினவாதம் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருந்தது.சிங்கள அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதத்தை சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்த்துவிடுவதன் மூலம் தங்களது ஈவிரக்கமற்ற சுரண்டல் அமைப்பையும் சமூக ஒடுக்குமுறையையும் நவீன வடிவத்தில் தக்க வைத்துக்கொண்டது.
இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான தமிழீழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த போது அதில் பங்கெடுத்த அனைத்து இயக்களுமே 'சேசலிசத்தமிழீழம்' என்ற கொள்கையை முன்வைத்தன.இது எங்களை ஈர்த்தது.
எங்கள் ஊரில் இருந்து நானும் எனது தம்பி எம்.சி.லோகநாதனும் புளொட்இயக்கத்தக்கு சென்றோம்.எனது அண்ணா சிவாபாதம் (அருள் மாஸட்டர்) உட்பட பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சென்றார்கள்.பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. இந்த இரண்டு இயக்கத்தையும் தவிர வேறெந்த இயக்கத்தக்கும் எங்கள் ஊரவர்கள் யாரும் செல்லவில்லை.
புளொட் இயக்கம் (1984) எங்களுரில் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்கு நூல் கட்டி அதை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அயலூர் போராளிகளுக்கு கொடுத்ததை தவிர எமது ஊருக்கு எதுவும் செய்யவில்லை. இதை தட்டக் கேட்டதற்காக எனது தம்பி லோகநாதன் புளொட் கனவான்களால் அச்சுறுத்தப்பட்டான்.
எமது ஊரில் மிக முக்கியமான பிரச்சனையாக குழுச்சண்டைகள் இருந்தன.அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சுடுபட்டு இறந்ததும்,ஆளையாள் வெட்டிக்கொலை செய்தததும் தொடர்கதையாக இருந்து வந்தது.இதை தீண்டாமை ஒழிப் போராட்டத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் இதை தடுத்துநிறுத்தியது. வெளியிலிருந்து குழுமோதலை தூண்டியிட்டு எமது ஊரை பிளவு படுத்தி அதில் குளிர்காய்ந்தவர்கள் பச்சை மட்டை அடிவாங்கி தப்பி ஓடினார்கள்.
அதேபோல் பனை தென்னை மரங்களை சீவல் தொழிலுக்கு பயன்படுத்தும் போது அதில் கிடைக்கும் வருவாயின் சரி அரைவாசிப்பகுதியை அந்த மரங்களின் உடைமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எழுதா சட்டம் விடுதலைப்புலிகளால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.மரங்களை குத்தகை அடடிப்படையில் எடுக்கவும் அந்த குத்தகைப்பணம் என்பது அந்த மரங்களின் உற்பத்திப் பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பகுதிக்கு கீழேயே இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதேபோல எமது மக்களின் வாழ்க்கையோடு இணைந்து தொங்கு பனம் பொருள் அபிவிருத்திச் சங்ககங்கள் அந்தக்காலகட்டத்தில் ஊழல் நிறைந்ததாக இருந்தது.ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 20 போத்தல் கள்ளை இறக்கி அந்த சங்கத்துக்கு கொடுத்தால் அந்த கள்ளு விற்கப்படாமல் ஊற்றப்பட்டுவிட்டது என்று கணக்கு காட்டி அரைவாசி கள்ளுக்குரிய பணமே வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பொறுப்பாக இருந்த பலர் அந்த கள்ளை விற்றுவிட்டு எஞ்சிய சொற்ப கள்ளுக்கு தண்ணீர் கலந்து அதன் அளவைக் கூட்டி ஊற்றிட்டு, விற்ற கள்ளின் பெறுமதியை தாங்கள் சுருட்டிக்கொண்டது நீண்டகாலமாக நடந்துவந்தது.இந்த மோசடியை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி எமது மக்களின் உழைப்பு எமது மக்களாலேயே சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தினார்கள்.இதில் கடற்புலிகளின் தளபதி சூசை நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்.
புலம் பெயர்வு
எமது ஊரிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது 1970 களில் ஆரம்பித்துவிட்டாலும் பணப்பிரச்சனை காரணமாக எல்லோராலும் அது முடியமால் இருந்தது.
1983-84 ல் 22 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இதற்கு உதவியவர் அன்று பிரலமான பிரயாண முகவராக இரந்த எனது மாமா திருநாமம்.
சமூக மாற்றம்.
அன்று 82 குடும்பங்களாக இருந்த எமது ஊர் இன்று அங்கு 184 குடும்பங்களும் புலம் பெயர் நாடுகளில் 121 குடும்பங்களுமாக பெருகிவிட்டது.இன்று எமது ஊரில் 4 குடும்பங்களை தவிர மற்ற அனைத்து குடும்பங்களும் புலம்பெயர்நாட்டு தொடர்புடைய குடும்பங்களாக இருக்கின்றன.
முன்பு அயல் கிராமங்களில் நாங்கள் காணி வாங்க முடியாத நிலை இருந்தது.ஆனால் இன்று எமது கிரமத்தை ஒட்டிய எல்லைப்பகுதியில் இருந்த காணிகள் எல்லாம் எம்வர்களால் வாங்கப்பட்டு கிராம எல்லை விரிந்துவிட்டது.
அன்று ஒரு 50 ரூபா பணத்துக்காக உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று மணிக்கணக்கில் தவமிருந்த நிலை இருந்தது.ஆனால் இன்று ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் ரூபா பணத்தை சுலபமாக புரட்டக் கூடிய அளவுக்கு எம்மவர்களின் பொருளாதார நிலை மாறிவிட்டது.இன்று அயலூரிலுள்ள உயர் சாதியனர் எம்மவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவது இயல்பான ஒன்றாக இருக்கிறது.
அன்று நாங்கள் கல்வி கற்க தடை இருந்தது. நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், அவமானப்படுத்தப் பட்டோம்.ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை.பருத்தித்துறை ஹாட்லிக்கல்லாரில் கல்வி கற்ற எங்களுர் சிறுவன் மகேந்திரன் சிவதர்சன் கண்மருத்துவம் மற்றும் எல்இடி தொழில் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பொன்றை செய்து இளம் கண்டுபிடிப்பாளருக்கான விருதை பெற்றதுடன் அமெரிக்காவின் பெல்சில்வேனியாவுக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறான்.
இலங்கையின் பல்வேறு பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றது உயர் கல்வி நிறுவனங்களில் டிப்ளோமே பெற்றது உட்பட 41 பேர் உர் கல்வி கற்றிருக்கிறர்கள்.புலம் பெயர் நாடுகளில் 112 பேர் பட்டப்படிப்பை முடித்திருக்கிறர்கள்.13 மருத்துவர்கள் 16 பொறியிலாளர்கள், 3 மருத்துவ விஞ்ஞானிகள் 6 உயர் நிறுவன அதிகாரிகள், 40 வரையிலான தொழில் நுட்பவிலாளர்கள் கல்வியாளர்கள் வழக்கறிஞர்கள் என்று எமது பிள்ளைகள் புதிய உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
எமது ஊரில் அரச உயரதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் தனியார் நிறுவன அதிகாரிகளாகவும் தொழில் முனைவோராகவும் 120 பேர் இருக்கிறர்கள். 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏஎல் தாண்டியிருக்கிறர்கள். பலர் பல்கலைகழக தெரிவுக்காக காத்திருக்கிறர்கள்.
இதைவிட முக்கியம் இன்று எமது ஊரில் 4 குடும்பங்கள் மட்டும் தான் சீPவல் தொழிலை செய்கின்றன.அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதை செய்கிறார்கள்.
சாதி எவ்வாறு உயிர் வாழ்கிறது.
எமது அயலூரிலுள்ள உயர் சாதி பெண்களையோ இளைஞர்களையோ எமது பெண்களும் இளைஞர்களும் காதலிக்க முடியாது திருமணம் செய்ய முடியாது. ஆனால் பிற ஊர்களை சேர்ந்த 6 பேரை எமது இளையேர் கலப்பு திருமணம் செய்திருக்கிறர்கள். எமது ஊரைச்சுற்றியுள்ள 5 கோவில் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்படவில்லை. அவற்றுக்குள் நமது இளைஞர்கள் சர்வசாதாரணமாக சென்றவருவதை சாதியின் பெயரைச் சொல்லி யாரும் தடுப்பதில்லை. அதிகாலையில் கோலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சுண்டல் வாங்கிச் சாப்பிடும் மனநிலையில் நமது இளைய சமூகம் இல்லை.அவர்களது சிந்தனைதளம் விரிவடைந்துவிட்டது. அவர்களது இலக்குகள் வேறாக இருக்கின்றன. எங்களுரில் எங்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்படவில்லை என்பது ஒரு முக்கியமான விடயம். அதே போல முன்பு எங்களை சோடியம் என்று குறியட்டு பெயர் சொல்லி அழைத்த அதே மனோநிலையில் எங்கள் அயலூர் இளைஞர்கள் இன்று இல்லை. அவர்களில் பலர் எமது இளைஞர்களுடன் நண்பர்களாக இருக்கிறர்கள்.ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று ஒன்றாக இருந்து உணவருந்த முடியாது.
இன்று எமது ஊர் சுற்றுவட்டத்தில் சாதி என்பது கலாச்சாரத்தளத்தில் தான் உயிர் வாழ்கிறது.பொருளாதாரம் மற்றும் சமூக கட்டுமானத்துக்கான பிடியையும் அதிகாரத்தையும் அது இழந்துவிட்டது.
எமது ஊரின் பொருளாதாரமும் அதிகாரமும் எங்கள் சொந்தக்கையிலே இருக்கிறது.எங்களை யாரும் எவரும் சாதியின் பெயரை சொல்லி அடிமைப்படுத்திவிட முடியாது. அரசியல் தளத்தில் கூட எனது அண்ணர் தங்க வேல் தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர். ஏற்கனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறர். பல இளைஞர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்வற்றி செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள்.
இன்றைக்கு கிராமசேவகராக இருக்கும் எனது பெறா மகளை 'உன்னை யாரும் சாதிபார்த்து தொழில் ரீதியாக மட்டம் தட்டுவதில்லையா?' என்று கேட்டேன்.
'நான் என்னை சாதி ரீதியாக அடையாளப்படுத்தவில்லை. கல்வி ரீதியாகவே அடையாளப்படுத்துகிறேன். நான் ஒரு இரண்டை பட்தாரி. சட்டம்படித்தவள். சாதிகடந்து நான் எல்லா மக்களுக்காவும் செயற்படுகிறேன். என்னை மட்டம் தட்டுவதற்கு எதுவும் எல்லை. அப்படி யாராவது மட்டம் தட்டினால் அதை தாண்டிச் செல்லும் அறிவும் துணிச்சலும் எனக்கு இருகிறது'
என்று கூறினாள். இது தான் இன்றைய யதார்த்தம்.
பின்குறிப்பு:- ஏதே இந்திய ரேஞ்சுக்கு ஈழத்தில் தீண்டாமையும் சாதியும் இருக்கிறது என்று நிறுவதற்கு லண்டனிலும் பாரிசிலும் இருந்து கொண்டு பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டிருப்பவர்கள் எமது ஊருக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்யலாம். அப்படி விரும்பினால் அதற்கான தொடர்புகளை நான் ஏற்படுத்தி தருவேன்.
அடுத்து இப்போது இந்த முக நூலில் ஏதோ ஏதெற்கெல்லாம் சலெஞ் வைக்க்pறார்கள, நான் எனது நண்பர்களையும் என்னை நேசிக்கும் இளைய தலைமுறையினரையும் அழைக்கிறேன். வாரம் ஒரு முறை ஒரு ஊர் என்ற அடிப்படையில் உங்கள் ஊரைப்பற்றி எழுதுங்கள்.
எமது வடமராட்சி பிரதேசத்தில் பெரும் பாச்சலுக்கு உள்ளான ஒரு ஊர் கூவில்.அந்த ஊர் தம்பிகளை முதலில் அழைக்கிறேன் அடுத்த வாரம் உங்கள் ஊரைப்பற்றி அது அடைத்திருக்கும் வியத்தகு மாற்றம் பற்றி எழுதுங்கள்.
சிவா சின்னப்பொடி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் பகிரப்படுகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...