Headlines News :
முகப்பு » , » சிங்களப் பண்பாட்டிலிருந்து (அணிந்துரை) - தில்லைநாதன் கோபிநாத்

சிங்களப் பண்பாட்டிலிருந்து (அணிந்துரை) - தில்லைநாதன் கோபிநாத்


வரலாறு கடந்த காலம் பற்றியது மட்டும் என்றால் மீண்டும் மீண்டும் எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால் வரலாற்றைக் கொண்டே நாம் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்கிறோம். எதிர்காலத்தைத் திட்டமிடுகிறோம். அவ்வகையில் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்த நிகழ்காலத்தில் கடந்தகால வரலாறு அதிகாரங்களால் கட்டமைக்கப்படுகிறது.

இவ்வாறாக அதிகாரங்களால் கட்டமைக்கப்படுகின்ற எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு மாற்று வரலாறுகள் அவசியமாகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் எவற்றைக் கட்டமைக்கிறார்கள், எவற்றைக் கொண்டாடுகிறார்கள், எவற்றை மறைக்கிறார்கள், எவற்றைத் தவிர்க்கிறார்கள், எவற்றை அழிக்கிறார்கள் என்ற புரிதலும் அதற்கு மாற்றாக நாம் முன்வைப்பவை வேறு என்னவகையான அதிகாரங்களை உருவாக்கிவிடக்கூடும் என்ற கவனமும் மாற்று வரலாற்றுச் செயற்பாட்டாளர்களுக்கு அவசியமானவை.

வரலாறு ஒற்றைப் பரிமாணமுள்ளதல்ல. புதிய அறிதலுக்கும் அனுபவத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவகையில் வரலாறு தொடர்பான புரிதல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. ஒரு நூல், ஒரு பக்கம் அல்லது ஒரு வசனம் கூட இதுவரை நாம் புரிந்து கொண்டவற்றை முற்றிலும் மாற்றியமைப்பவையாக இருக்கலாம். அதனை ஏற்பதற்கான ஆய்வுநேர்மை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதேவேளை ஒன்றுக்கு மேற்பட்ட வரலாறுகள் நேர்மையானவையாக இருக்கலாம். ஏற்கனவே எழுதப்பட்டவை வேறொரு கோணத்தில் முற்றிலும் புதிய அர்த்தங்களைத் தரலாம்.

வரலாறு என்பது அடிப்படையில் நாம் அறிந்துள்ள தகவல்கள், அவற்றுக்கான ஆதாரங்கள், தகவல்களிலுள்ள இடைவெளிகள், அந்த இடைவெளிகளில் நாம் இட்டு நிரப்பும் தகவல்கள் அல்லது கற்பனைகள், அவ்வாறு தொகுத்துக் கொள்ளும் தகவல்களை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பதாக விரிவடைந்து செல்கிறது.

பல்வேறு ஒடுக்குமுறைகளையும் அகச்சிக்கல்களையும் எதிர்காலந் தொடர்பான தடுமாற்றங்களையும் எதிர்கொண்டு நிற்கும் ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்கள் தமது வரலாறுகளக் காய்த்தல் உவத்தலின்றிப் புரிந்துகொள்வதே அவர்களது எதிர்காலத்தைச் செதுக்குவதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.


இந்த நிலையிலேயே ஈழத்துத் தமிழ்ச் சமூகங்கள் தொடர்பான மாற்று வரலாற்றாசிரியர் எனும் பெரிய பொறுப்பினைத் தன்மேற் சுமத்திக் கொண்ட இடையறாத செயற்பாட்டளாரகச் என். சரவணன் மேலெழுகிறார்.

ஒரு வரலாற்றாசிரியராகச் சரவணன் தவிர்க்க முடியாத ஆளுமையாக அமைவதற்குப் பின்வருவன முக்கிய காரணங்கள் ஆகின்றன.
1. அவர் மாக்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ்த் தேசியம் தொடர்பான தீவிர எழுத்துச் செயற்பாட்டாளர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்போராலேயே ஒடுக்கப்படும் குரல்களை அவர் முன்வைத்து வருகிறார். அவ்வகையில் ஒரு மாற்று வரலாற்றாசிரியருக்குத் தேவையான சிந்தனை முறை அவருடையது.

2. தீராத விடாயுடன் தேடலே வாழ்க்கையாகத் தகவல்களைத் தேடும் ஓர் ஆவணக ஆய்வாளராக அவர் இருக்கிறார். ஓர் ஆய்வுக்கு அல்லது கட்டுரைக்குத் தேவையான தகவற் சேகரிப்புடன் அவர் நின்றுவிடுவதில்லை. ஒரு தகவலை நிறுவுவதற்குப் பல்வேறு ஆதாரங்களைச் சளைக்காமல் தேடி அவற்றை முன்வைப்பவராக இருக்கிறார். அவ்வகையில் தவறுகளைத் திருத்தவும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சவும் அவரால் முடிகிறது.


3. முன்முடிவுகளுடன் தகவல்களை அணுகாமல் மாற்றுச் சாத்தியங்களையும் கவனிக்கும் நேர்மை அவரது அணுகுமுறையாக இருக்கிறது. அவ்வகையில் அவர் எந்தத் தரப்புக்கும் விசுவாசியாக இல்லை. தான் எடுத்துக் கொண்ட பணிக்கே நேர்மையானவராக இருக்கிறார்.

4. தமிழையும் ஐரோப்பிய மொழிகளை மட்டுமில்லாமல் சிங்களத்தையும் நன்கறிந்தவராக இருக்கிறார். அவ்வகையில் பெரும்பாலான தமிழ் வரலாற்றாசிரியர்களுக்குக் கிடைக்காத தகவல் வளங்களை ஆராய்ந்து தம் முடிவுகளை அவரால் முன்வைக்க முடிகிறது.

5. சளைக்காத செயற்பாட்டாளராக இருக்கிறார். வாரந் தவறாமல் அவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு பெரிய பணியினை எடுத்து நிறைவுசெய்வதற்கான ஓர்மத்தைக் கொண்டிருக்கிறார்.
இத்தனை தகுதிகளுடன் அவர் வந்தாலும் அவர் நினைக்கும் துறைகளில் நினைக்கும் வேகத்தில் இயங்குவதற்கான புலமைத்துவச் சூழல் இதுவரை உருவாகவில்லை. ஏனெனில் அவர் எதிர்கொள்வது ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளை அல்ல; வரலாறே இல்லாத வெற்றிடங்களை. ஈழத்துத் தமிழ்ச் சமூகங்கள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள், திருப்பங்கள், நிகழ்வுகள் தொடர்பில் தமிழில் ஓரிரு கட்டுரைகளுக்கு மேல் எதுவுமே இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. அவ்வகையில் பல சமயங்களில் பாதைவெட்டிப் பயணம் செய்யும் நிலையையே அவர் எதிர்கொள்கிறார்.

சரவணனின் அடிப்படை ஆர்வமாக ஈழத்தின் அரசியல் வரலாறே அமைகிறது என நான் நினைக்கிறேன். காலனித்துவம், கொட்டாஞ்சேனைக் கலவரம், கண்டிக் கலவரம், நூற்றாண்டுத் துரோகம், சிங்களம் மட்டும் சட்டம், ஈழப்போருக்குக் காரணமாக அமைந்த இனவன்முறைகள் என்பதாக அவரது தேடலும் எழுத்துக்களும் விரிவடைகின்றன. இந்த எழுத்துப் பணியினை அவர் தொடர்ந்து சென்றால் காலனித்துவக் காலம் முதல் ஈழப்போரின் முடிவு வரையான முழுமையான வரலாறு ஒன்றினை அவரால் கட்டமைக்க முடியும்.

ஆயினும் அரசியல் வரலாற்று வெளியேயும் ஆழமான ஆய்வுகளை அவர் செய்தே வருகிறார். அவ்வகையில் சமூக, பண்பாட்டு வரலாற்றாசிரியராகவும் அவரது பங்களிப்பு விரிவடைந்திருக்கிறது.

”சிங்களப் பண்பாட்டிலிருந்து” என்ற இந்த நூல் அவ்வகையில் சரவணனின் எழுத்துச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக அமைகிறது. இக்கட்டுரைகளில் சிங்களச் சமூகங்களில் சாதியத்தின் தாக்கம், பெண்களின் நிலை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், இசை, திருமணச் சடங்குகள், பாலியல் வழக்குகள், அதிகாரப் போட்டிகள், பொருளாதாரம், இலக்கியம் எனப் பல்வேறு சமூக, பண்பாட்டுக் கூறுகள் ஆராயப்படுகின்றன.

சிங்களத் தேசியம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனைப் புரிந்துகொள்வதற்குச் சரவணனின் இந்த எழுத்துக்கள் முக்கிய பங்களிப்புச் செய்யும் என நான் நம்புகிறேன். அத்துடன் அவர் செய்ய வேண்டிய பெரும் பணியொன்றின் தொடக்கமாக மட்டுமே இந்தத் தொகுப்பு அமைகிறது. அவர் தொடர்ந்து எழுதவேண்டும். தகவல் இடைவெளிகளை நிரப்ப வேண்டும். எழுதியவற்றை நூல்களாகத் தொகுத்துத் தொடர்ந்து வெளியிட வேண்டும்.

சரவணனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

நூல்: சிங்களப் பண்பாட்டிலிருந்து
ஆசிரியர்: என். சரவணன்
பதிப்பகம்: குமரன் புத்தக இல்லம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates