இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இன்றுடன் மூன்று வாரங்களுக்கு மேலாக நாங்கள் நால்வரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறோம். இன்றிலிருந்து இந்த நாட்குறிப்பை பதிவு செய்வது என்கிற முடிவுக்கு வந்ததற்குக் காரணம் நான் மட்டுமல்ல சில நண்பர்களின் வேண்டுகோளும் தான்.
எங்கள் வீட்டு கதவுகளும், ஜன்னல்களும் வெளியில் இருந்து காற்று கூட உட்புகாதபடி இறுக்கி மூடப்பட்டிக்கின்றன. குளிர் நாடென்கிறபடியால் பொதுவாகவே குளிரிலிருந்து பாதுகாக்க இப்படி குளிர் வராத அளவுக்கு மூடியிருப்பது எங்களுக்கு புதிதில்லை. ஆனால் இப்போது கொரோனா பீதியும் சேர்ந்து அந்தத் தேவையை இரட்டிப்பாக்கியிருக்கிறது.
உணவு
உணவின் சிக்கனத்தையும், உற்பத்தியையும், தன்னிறைவையும், அதன் தரத்தையும், பற்றி உலகமே உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு காலத்தை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கிற காலத்தில் மலிவாகவும், வீட்டிலேயே இலகுவாக தானிய முளைப்பயிர் உற்பத்தி செய்வது குறித்த எனது அனுபவத்தை இன்று ஒரு காணொளியாக செய்து Youtube இல் ஏற்றி முகநூலின் மூலம் பகிர்ந்துகொண்டேன்.
ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, செரிமானத்துக்கு உதவக் கூடிய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய, இதய நோயுள்ளவர்களுக்கு உதவக் கூடிய ஒரு உணவு வகை இது. எளிமையான செலவு குறைந்த ஒரு உணவும் கூட. அதன் முக்கியத்துவத்தை சிலர் மெச்சினாலும் அந்தக் காணொளி பகிரப்படாதது சற்று வியப்பை அளித்தது.
குழந்தைகள்
சுறுசுறுப்பாக எப்போதும் ஓடியாடி விளையாடும் என் குழந்தைகள் இருவரும் கூட வீட்டுக்குள்ளேயே சைக்கில் ஒட்டி விளையாடுகிறார்கள். இன்று 6 வயது ஜென்னியும் 3 வயது சோபியாவும் வீட்டுக்குள்ளேயே துணிகளை விரித்து அதில் பிளாஸ்டிக் உணவுப் பண்டங்களையும், விளையாட்டுப் பொருட்களையும் வைத்து பிக்னிக் போவதாக விளையாடுகிறார்கள்.
ஜென்னி பாடசாலையில் முதலாம் ஆண்டு வகுப்பை கடந்த ஓகஸ்ட் மாதம் தொடங்கினாள். கடந்த மார்ச் 13ஆம் திகதியிலிருந்து நோர்வேயில் பள்ளிகூடங்கள் மூடப்பட்டுவிட்டன. முதலில் இரு வாரங்களுக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அது ஏப்ரல் 13 வரை என்று நீடிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டிலேயே இங்கு Ipadஐ கொடுத்து விடுகிறார்கள். ஆரம்பத்தில் நான் கூட இதனை ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை. குழந்தைகளின் எழுதும் ஆற்றலை பலவீனப்படுத்தப் போகிறது, Ipad க்கு அடிமையாகப் (addict) போகிறார்கள், விளையாட்டுகளிலும், அவர்கள் விரும்பிய App களை நுழைத்து வீணாகப் போகிறார்கள் என்றெல்லாம் பயம் இருந்தது.
ஆனால் இதன் பயன்கள் நம் எண்ணத்தை தலைகீழாக மாற்றியிருக்கிறது. மிகவும் வினைத்திறன் மிக்க வகையில் அவர்களுக்கான பாடங்கள் அதில் உள்ளன. நோர்வேஜிய, ஆங்கில மொழிகள், கணக்கு, ஓவியம், இயற்கை உள்ளிட்ட பல வீட்டுப்பாடங்களையும் அவர்களுக்கு அதில் அனுப்பி விடுகிறார்கள் வீட்டில் இருந்து அதைச் செய்து முடித்ததும் நட்சத்திர அடையாளம் இட்டுவிட்டால் அது வகுப்பாசிரியருக்கு கிடைத்து விடுகிறது.
குழந்தைகள் வீட்டிலிருக்கும் இந்த நாட்களில் பாடசாலை இயங்குகிறது என்று தான் கூறவேண்டும். நாளாந்தம் குழந்தைகளுக்கான பாடங்கள் அனுப்பப்படுகின்றன. முடித்தவற்றை உடனடியாகவே பார்த்து ஆசிரியர் பதிலளித்துவிடுகிறார். அது மட்டுமன்றி அவர்களுக்கான உடல் பயிற்சிக்குரிய பாடங்களும் உண்டு. ஆசிரியர் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு வீடியோ பதிவில் பகிர்கிறார். மாணவர் அதனை அப்படியே செய்து மீண்டும் வீடியோ பதிவாக திருப்பி அனுப்ப வேண்டும். இன்று Toilet Paper சுருளை வாளி ஒன்றில் மூன்றடி தள்ளியிருந்து பாதங்களில் வைத்து சரியாக வீசி இடுவதை செய்து அனுப்பியிருந்தார். ஜென்னியும் அதை அப்படியே செய்வதை வீடியோவாக எடுத்து அனுப்பினேன். கொடுக்கப்பட்ட பயிற்சிகள் உரிய நேரத்துக்குள் பாடங்கள் கிடைக்காவிட்டால் பெற்றோருடன் தொடர்புகொள்கிறார் ஆசிரியர்.
அரச தொலைக்காட்சியை தினசரி 9 -11 வரை பார்க்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு இந்த கொரோனா நாட்களில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் ஒன்று. தொலைக்காட்சியில் முதலாம், இரண்டாம் ஆண்டு கற்கும் குழந்தைகளுக்கு பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. கதைகள், பாடல்கள், கேள்வி பதில்கள், கைப்பணிகள் செய்வது, சில எளிமையான விஞ்ஞான முயற்சிகள் எல்லாம் அதில் அடங்குகின்றன. இன்று ஆடுவதற்கான சில ஸ்டெப்களும் அதில் உள்ளடங்கியிருந்தது.
வகுப்பாசிரியர் புதன் கிழமைகளில் பெற்றோரோடு உரையாடுகிறார். வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு மாணவர்கள் அனைவருடனும் சேர்ந்து குழுவாக வீடியோ சம்பாசணை செய்கிறார்.
வகுப்பாசிரியருக்குப் பதிலாக பெற்றோர்களே பிள்ளைகளுக்கு வகுப்பாசிரியர்களின் இடத்தில் இருந்து கவனிப்பதால் பெற்றோர்களின் நேரமும் அதில் கடந்து விடுகிறது. சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு இப்படி நேரம் போக்க வழி கிடைத்திருப்பது அவர்களை சோர்வில் இருந்தும் மீட்கிறது. குழந்தைகளுடன் இருக்கும் நேரம், அவர்களுடனான தொடர்பாடலை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு எல்லாம் நிறைவேறுகிறது.
நானும் துணைவியும் மாறி மாறி கற்பித்தல் உதவியை செய்து வருறோம். அதன் பின்னர் தான் சமையல். பெரும்பாலும் இந்த நாட்களில் கூட்டுச் சமையல் தான்.
சுயவதை நாடி...
ஆனால் செய்திகளை அடிக்கடி ஓடிச்சென்று பார்த்துவிட்டு மன உளைச்சலை ஏற்படுத்திக்கொள்வது விரும்பாமலே நடக்கும் கட்டாயப் பணி. ஒரு வகையில் சுயவதை தான். நிதமும் செய்திகளைப் பார்த்து உங்களை உளவியல் நோயாளியாக ஆக்கிக்கொள்ளாதீர்கள் என்கிற எச்சரிக்கையை அடிக்கடி பலரும் சொல்லத்தான் செய்கிறார்கள்.
எந்த நேரமும் இருக்கும் நாட்டின் நிலைமை குறித்து தேடச் செய்கிறது. கொரோனா எந்தளவு எங்களை அண்மித்துக் கொண்டிருக்கிறது என்கிற பீதியை கணக்கிட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.அடுத்தது உலக நிலையை அறிவது. அடுத்தது நம் சொந்த நாட்டின் நிலையை அறிந்து கொள்வது. உடல் இங்கிருந்தாலும் உயிர் நம் தேசத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறது. பின்னெப்படி ஆபத்தின் அளவையும், வடிவத்தையும், அளவிடாமல் இருப்பது. எனவே இந்த சுயவதையை தெரிந்தே செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இன்றைய கொரோனா: மொத்த தொற்றும் மரணமும்
உலகம் - 932,613 (46,809), நோர்வே -4878 (44), இலங்கை 146 (2)
“நம்பிக்கையில் தான் ஒவ்வொரு அடுத்த கனமும் நகர்கிறோம்! நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்”
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...