Headlines News :
முகப்பு » , , » “வயோதிபர்கள்” - கொரோனா டயரீஸ் - ஏப்ரல் 2 | என்.சரவணன் (ஒஸ்லோ)

“வயோதிபர்கள்” - கொரோனா டயரீஸ் - ஏப்ரல் 2 | என்.சரவணன் (ஒஸ்லோ)


1.5 மில்லியன் மக்கள் நோர்வேயில் கொரோனாவினால் பாதிக்கக் கூடியவர்களாக கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த 1.5 மில்லியன் மக்களில் யார் அடங்குகிறார்கள். இருதய நோய் உள்ளவர்கள், சுவாச நோயுள்ளவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் என ஒரு அந்தப் பட்டியல் தொடர்கிறது. இத்தகைய பிரச்சினைகள் அதிகம் உள்ளவர்கள் வயோதிபர்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே இயல்பாகவே அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரையான இறப்புச் செய்திகளும் அந்தக் கணிப்பை உறுதி செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் மேற்படி உடல் உபாதைகள் உள்ள வயோதிபர்கள் அல்லாதவர்களும் இதற்கு இலக்காகி வருகிறார்கள் என்பது உண்மை.

இந்த நாட்களில் எனக்கும் இருதயம், சுவாசம், நீரிழிவு இந்த மூன்று சிக்கலும் உள்ளதால் என்னை அதிகம் கவனமாக இருக்கும்படி டொக்டரும், நெருக்கமான நண்பர்களும் என்னை எச்சரித்து வருகிறார்கள். கடந்த மாதம் எனக்கு ஒரு இருதய சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் டொக்டர் தொலைபேசியின் மூலம் அழைத்து எனக்கு மீண்டும் ஒரு ஒப்பரேசனை செய்ய வேண்டும் என்றார். இருதயத் துடிப்பு குறைவாக இருப்பதை கடந்த சத்திரசிகிச்சையின் போது இனங்கண்டதாகவும் எனவே pacemaker மெசினை பொருத்தியாக வேண்டும் என்று அறிவித்தார். அடுத்த நான்காவது நாளே அதைச் செய்யப்போவதாகவும் நாள் குறித்துத் தந்தார். ஆனால் கொரோனா நிலைமைகள் காரணமாக நாட்டின் பல சத்திரசிகிச்சைகள் ஒத்திப்போடப்பட்டதால் இதுவும் ஏப்ரல் மாத இறுதிக்கு ஒத்தி வைப்பதாக மீண்டும் எனக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த கொரோனா காலத்தில்; கொரோனாவுக்கு அகப்படாமலேயே கொரோனா ஏற்படுத்திய பக்க விளைவுகளுக்கு பலியாவோர் தொகை கணக்கில் வருவதில்லை.
--0--

இன்று நானும் துணைவியும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்த்தோம். திரைப்படத்தின் பெயர் “பாரம்”. மிகவும் துடிதுடித்துப் போனோம். தமிழ்நாட்டு கிராமங்களில் முதியவர்களை பிள்ளைகளே “தலைக்குத்து” என்கிற முறையின் மூலம் கொன்றுவிடுகிற மகா அவலத்தைத் பற்றிய திரைப்படம். தமது வீட்டில் தாய், தகப்பன் அல்லது தாத்தா, பாட்டி அல்லது வேறும் உறவினர்கள் முதியவர்களான பின் இயலாமல் போகிற காலத்தில் அவர்களை வைத்து பராமரிப்பது சுமை என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். கொலைக் குற்றத்துக்கு அகப்படாமல் அவர்களை வேறு வழிகளில் கொன்று விடுகின்றனர். "எண்ணெய் வைத்து, இளநீர் கொடுத்து, தலையில் தண்ணீர் ஊற்றி கொல்லும் “தலைக்குத்து” என்கிற வடிவம் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை செய்வதற்காகவே கிராமங்களில் நிபுணர்கள் இருக்கிறார்கள்.

“தலைக்குத்து” மட்டுமன்றி இப்படி கொலை செய்வதற்கு 26 வகைகள் இருப்பதாக அந்தத் திரைப்படத்தில் ஒரு சம்பாசனை வருகிறது. இந்தத் திரைப்படத்தில் வயோதிபத்திலும் வைராக்கியத்துடன் செக்கியூரிட்டி தொழிலை செய்துகொண்டிருகிறார் திடகாத்திரமான தகப்பனார். அவர் வேலை முடிந்து, பேத்தியின் பிறந்தநாளுக்கு பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு மகனின் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். வரும் வழியில் ஒரு மோட்டார் சைக்கிள் அவரை மோதிவிட்டு கடந்து விடுகிறது. விழுந்தவர் முதுகெலும்பு முறிந்து துடிக்கிறார். அவருக்கு சத்திர சிகிச்சை செய்தால் சுகப்படுத்தலாம் என்று டொக்டர்கள் கூறுகிறார்கள். அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்கிறான் மகன். தாசில்தாரிடம் கடிதம் வாங்கிக் கொண்டு போய் அரசாங்கத்திடம் கொடுத்து சிகிச்சைக்கான பண உதவியைப் பெறலாம் என்றும் அறிவுரை கூறுகிறார் டாக்டர். ஆனால் நான்கு நாட்கள் அலைந்துவிட்டு வந்து அவர்களுக்கெல்லாம் வரிசையாக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது நான் ஊரிலேயே பார்த்துக்கொள்கிறேன் என்று தகப்பனாரை அழைத்துக் சென்று விடுகிறான்.

இத்தனைக்கும் மகன் நல்ல தொழிலில் இருக்கும் நடுத்தர வாழ்க்கையை அனுபவிக்கும் ஒருவன். ஊரில் மருமகளின் வெறுப்புக்கும், கொடுமைக்கும் மத்தியில் துவண்டு போகிறார் கட்டிலில் கிடக்கும் தகப்பன். தனக்கு ஒப்பரேசனை செய்யுமாறும், மீண்டதும் அதற்கான பணத்தைக் கூட திருப்பித் தந்துவிடுவதாக தகப்பன் கெஞ்சுகிறார். ஆனால் இப்படியான கொலைகளைச் செய்யக்கூடிய ஒரு கும்பல் மகனை அணுகி சாகடித்துவிடலாம் என்று பேரம் பேசுகிறது. மகனின் ஏற்பாட்டுடன் தகப்பன் கொல்லப்பட்டுவிடுகிறார்.

அவரின் மருமகன் நியாயம் கோரி; இதற்குப் பின்னால் உள்ள மாபெரும் சதிகளை அறிவதற்கு புறப்படுகிறார். அங்கே அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்களை அறிகிறான். இறுதியில் இது ஒரு பாரம்பரிய நிகழ்வு என்றும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க முடியாது என்று அரசியல் தலைவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனர். போலீசார் நீதிமன்றத்துக்கு வழக்கைக் கொண்டு போகாமல் விசாரணையைக் கைவிடுகின்றனர். நிறுவனமயப்பட்ட அந்த பாரம்பரியச் சடங்கை எவரும் சவாலிட முடியாது என்பதாக கதை முடிகிறது.

விஜயகாந்த் நடித்த ஒரு திரைப்படத்தில் மனோரமாவை வில்லன் இப்படி “தலைக்குத்து” முறையில் கொல்வதாக ஒரு காட்சியை பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். அதுபோல இரு மாதங்களுக்கு முன்னர் “கே.டி என்கிற கருப்பு துரை” என்கிற ஒரு திரைப்படத்தையும் பார்த்தேன்.

அதில் கருப்புத்துரை தாத்தா கொலை முயற்சியில் இருந்து தப்பிப் போய் இன்னொரு அனாதைச் சிறுவனை சந்திக்கிறார். சொத்தை எழுதிக் கொடுக்காமல் தப்பிச் சென்று விட்ட தந்தையை தேடி கையெழுத்தை பெற்றுவிட்டு கொன்றுவிடுவதற்காக கூலிக்கு ஆளமர்த்துகிறார்கள் பிள்ளைகள். அவர்களிடமிருந்து ஒவ்வொருமுறையும் தப்பிச் சென்று அவர் வாழ் நாளில் அனுபவிக்க ஆசைப்பட்டவற்றை எப்படி அனுபவிக்கிறார் என்பது கதை. இறுதியில் தானாகவே மகனிடம் சென்றடைகிறார். சொத்தை எழுதிக்கொடுத்துவிட்டு அவர்கள் கொல்வதற்கு முன்னர் தப்பிச் சென்று விடுவதாக கதை முடியும்.

இப்போது மீண்டும் கொரோனா விடயத்துக்கு வருகிறேன்.

பாரம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தப்பி வந்து தொழில் செய்து தன்னை தானே பார்த்துக்கொள்ளும் ஒரு முதிய தாய் கூறுவார்.
“என் மகன் ஒரு தினக்கூலிக்காரன் இனி அவனால் பார்க்க முடியாது. அவன் கையால் சாவதற்குப் பதில் நானே வெளியில் வந்து விட்டேன்.” என்பார்.

இன்னொரு இடத்தில் ஒரு முதியவர் “சில நேரங்களில் இருமவும் பயமாயிருக்கு, தும்மவும் பயமாயிருக்குப்பா... இனி இவர்களால் முடியாது என்று நினைத்து கொன்று விடுவார்கள் என்பதால் சாதாரண விசயங்களையும் ஒளித்து மறைக்க வேண்டியிருக்கிறது.” என்பார்.

இந்த நிலை தான் இப்போது ஏறத்தாள கொரோனா விடயத்திலும் காண முடிகிறது. முதியவர்களிடம் இருந்து தள்ளியே நில்லுங்கள் என்று உலகம் முழுவதும் ஆங்காங்கு பகிரங்கமாக எச்சரிக்கின்றனர். தமது பிள்ளைகளே பெற்றோர்களை கொலைஞர்களாக நடத்தும் நிலைமை இனியும் நிகழக் கூடாது. தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டோ, அல்லது பிள்ளைகளால் தனிமைப்படுத்தப்பட்டோ பலர் இருக்கின்றனர். தமக்கு நேரும் சிறு சிறு உபாதைகளின் போதும்; கொரோனா தொற்றி விட்டதோ என்கிற பீதிக்கு உள்ளாகி கொரோனாவை விட மோசமாக சாகடிக்கும் உளவியல் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சென்ற வாரம் பெல்ஜியத்தைச் சேர்ந்த Suzanne selflessly என்கிற ஒரு வயோதிபப் பெண் தனக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ வசதியை (ventilator) மறுத்துவிட்டார். தான் வாழ்ந்து அனுபவித்த வயது, அதனால் வசதிகளும் பற்றாக்குறையும் நிலவும் இந்தக் காலத்தில் தன்னை விட இளமையானவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும்படி கூறி விட்டு மூச்சுத்திணறலை ஏற்றுக்கொண்டு இறப்பைத் தழுவிக்கொண்ட செய்தி நெஞ்சை நோகடித்தது.

வயோதிபர்களுக்கு முன்னெப்போதையும் விட அதிகமாக பராமரிப்பையும் அன்பையும் கொடுக்க வேண்டிய காலம் இது தான். இன்றைய வயோதிபர்களின் இடத்தில் நாளை நாங்கள். இன்றைய நமது பிள்ளைகள் நாளை நமது இடத்தில்.

இன்றைய கொரோனா : மொத்த தொற்றும் மரணமும்

உலகம் – 1,013,156 (52,982), நோர்வே -5160 (60), இலங்கை 151 (3)
"கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதி ஒன்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன"
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates