கொரோனா பீடிப்பை கவனமாக கையாண்டு வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக நோர்வே திகழ்கிறது. மார்ச் 26 ஆம் திகதியன்று நோர்வேயில் முதல் தொற்று நோர்வேயின் வடபகுதி பிரதேசமான ட்ரொம்சோவில் அடையாளம் காணப்பட்டது . ஏப்ரல் 3ஆம் திகதியாகும் போது மொத்த தொற்று 5295 ஆகவும் இறப்புத் தொகை 56 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
சகல விமான நிறுவனங்களும், பயணிகள் கப்பற் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளாக இயங்கிவந்த நோர்வேயின் புகழ் பெற்ற பயணிகள் உல்லாச கப்பல் நிறுவனமான “Stena Line” அந்த சேவையையே நிரந்தரமாக நிறுத்திவிட்டது. விசா இன்றி, அல்லது வீசா காலாவதியாகி இருப்பவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்திருக்கிறது. வெலிநாஉகலில் இயங்கும் நோர்வேகிய தூதுவரகங்கள் அனைத்தும் விசா விநியோகிப்பதை நிறுத்தி வைத்துள்ளன. அத்துடன் உள்நாட்டுக்குள் நோர்வேஜியர்களும், நோர்வேயில் பணிபுரிய அனுமதிபெற்றவர்களும் மாத்திரமே மீண்டும் நாட்டுக்குள் நுழைய முடியும். அப்படி நாட்டுக்குள் வந்தவர்கள் முதல் 14 நாட்களுக்கு வீட்டுக்குள் தம்மை சுயதனிமைக்கு உள்ளாக்கி கண்காணிக்கவேண்டும். எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் கடமையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனா தோற்று சிறிய அளவில் இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் அவர்களை வீட்டிலேயே இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படியானவர்கள் 51,000 பேரைத் தாண்டியிருக்கிறது. அவர்களை தொலைபேசியில் வீடியோ மூலம் அடிக்கடி உரையாடி அவர்களின் நிலையைக் கண்காணித்து ஆலோசனைகளையும், சிகிச்சை முறைகளையும் வழிகாட்டி வருகிறார்கள். அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாக எண்ணினால் அவர்களை கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்துவந்துவிடுகிறார்கள்.
முதல் இரு வாரங்கள் நடந்ததும் நோர்வே சுதாகரித்துக் கொண்டது. மார்ச் 13 அன்று அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. அன்றைய தினம் தான் முதலாவது நபரின் இறப்புச் செய்தியும் வெளியானது. அன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 996ஆக ஆகியிருந்தது. உலக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிலைமைகளை கணித்து நோர்வேயைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை அன்று விரைந்து எடுத்தது. ஆனால் இன்று வரை நோர்வே ஊரடங்குச் சட்டம் போன்ற எதையும் பிரகடனப்படுத்தவில்லை.
மாறாக முக்கிய பொது இடங்கள் அத்தனையையும் மூடியது. பாடசாலைகள், நாட்டின் அனைத்து தரத்திலான பாடசாலைகள், சிறுவர் நலக் காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், மட்டுமன்றி சினிமா தியேட்டர்கள், அனைத்துவித கலை கலாச்சார நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. தலை முடி திருத்தும் சலூன்கள், மசாஜ் நிலையங்கள், சலூன்கள், நீச்சல் தடாகங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன.
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும், கொரோனாவிளிருந்து பாதுகாப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் தரப்படுத்தியிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நோர்வேயிலும் பிரகடனப்படுத்தியது. எங்கெங்கும் மக்களே சுய கட்டுப்பாட்டுடனும், சுய பாதுகாப்புடனும் தங்களை வீடுகளுக்குள் சுருக்கிக் கொண்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் நோர்வே எதிர்கொள்ளும் மாபெரும் அவசர நிலை இதுதான்.
இதே வேளை நோர்வேயின் முக்கிய பல பெருநிறுவனங்கள் வீழ்ச்சிகண்டன. ஒரு லட்சம் பேர் வரை தற்காலிகமாக வேலை நிறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு நோர்வே நிவாரணமளிப்பதாக அறிவித்தது. வேலை இழந்தவர்களுக்கும், தற்காலிகமாக வேலையின்றி வீடுகளில் முடக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கமே சம்பளப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. நோர்வேயின் “இறையாண்மை செல்வ நிதி” (sovereign wealth fund) என்று அழைக்கப்படும் எண்ணெய் நிதியம் (Oil Fund) இலிருந்து பெருந்தொகையை கொரோனா நிலைமைகளை சமாளிப்பதற்கான கொரோனா பொதி “Korona-Pakke” ஒன்றை அறிமுகப்படுத்தியது. நோர்வே தனது எதிர்காலத்துக்காக பெருந்தொகை பணத்தை இந்த நிதியத்தில் சேகரித்துக்கொண்டு வந்தது. நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் உற்பத்தியில் சம்பாதித்துவந்த பெருந்தொகை பணம் இந்த நிதியத்தில் இட்டு வந்தது.
ஒரு புறம் கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகவும், சமூக நிவாரணத்துக்காகவும் பில்லியன் கணக்கான பணத்தை இறைத்துக் கொண்டிருக்கும் அதே வேளை எண்ணெய் விலையின் வீழ்ச்சியால் மேலும் மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. சென்ற வருடம் ஒரு அமெரிக்க டொலர் 7.5 குரோனர்களாக இருந்த பண மதிப்பு இந்த மாதம் 12 குறோணர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நோர்வேயின் பணப்பெறுமதியின் வரலாறு காணாத வீழ்ச்சியின் மத்தியிலும் பெருந்தொகையை செலவிட்டு நாட்டு மக்களின் நிவாரணத்துக்காக பெரும் விலை கொடுத்துக் கொண்டு வருகிறது நோர்வே. சிறிய, மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் இழப்பீட்டை சரி செய்வதற்காக மாத்திரம் 100 பில்லியன் குறோணர்களை (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கியிருப்பதாக பிரதமர் ஆர்ன சூல்பேர்க் கடந்த மாதம் 15 திகதி அறிவித்தார்.
ஆனால் இத்தனை பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் நோர்வே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக பல மில்லியன் குறோணர்களை உலக சுகாதார அமைப்புக்கு வழங்கியது.இந்த ஆண்டு மாத்திரம் நோர்வேயின் வரவு செலவுத் திட்டத்தில் 5.5 பில்லியன் குரோனர்களை சர்வேதேச உதவிகளுக்காக ஒதுக்கியிருக்கிறது.
மக்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக வருமானம் அவர்களுக்கு தடைபடாது. அது போல போதியஅளவு திட்டமிடப்பட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகள், மக்களின் சு கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி என்பவை எல்லாமே சேர்ந்து கொரோனா பரவலையும், நோயாளிகளின் தொகையையும், இறப்பு எண்ணிக்கையும் குறைத்திருகிறது. இதுவே நாட்டு மக்களின் கொரோனா பீதியை தனித்திருக்கிறது என்று கூறவேண்டும். பெருமளவான நாடுகளோடு ஒப்பிடும் போது உளவியல் ஆரோக்கியம் இதனால் பேணப்பட்டிருக்கிறது. ஆனால் பரவும் வேகத்தையும், தாக்கத்தையும் இதை வைத்து கணித்து விட முடியாது. இனி வரும் நாட்கள் தான் அதிக ஆபத்தான நாட்கள் என்று எச்சரிக்கப்படிக்கின்றன.
இன்றைய கொரோனா : மொத்த தொற்றும் மரணமும்
உலகம் – 1,173,660 (63,943), நோர்வே -5553 (62), இலங்கை 166 (5)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...