நெருக்கடி காலங்களில் முதலாவது பாதிக்கப்படுபவர்களும் பெண்களே, இரண்டாவது பாதிப்பக்கப்படுபவர்களும் பெண்களே என்று ஒரு பழமொழி உண்டு.
இயற்கை அனர்த்தங்கள், போர்க் காலங்கள் மட்டுமன்றி வீடுகளில், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் வரை இது தான் நிலைமை. அதிக சுமைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாபவர்கள் அவர்கள் பெண்கள் தான். இது பண்டைய பெண்வழிச் சமூகமல்ல. இது ஆணாதிக்க சமூக அமைப்பு. ஆண் குடும்பத் தலைவனாகவும், சகலவற்றுக்கும் தலைமை ஏற்க தகுதியுள்ளவனாகவும் கற்பிதம் செய்யப்பட்ட சமூக அமைப்பு இது. ஆண்கள் பண்டைய பெண்வழிச் சமூக அமைப்பிடம் இருந்து இதை எப்படி கைப்பற்றிக்கொண்டது என்பது தனியான பெரிய கதை.
குடும்பத் தலைவனாக ஆண் நிறுத்தப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கும் பொறுப்பை பெண்களே சுமந்து வருகிறார்கள். முதியவர்களும், நோயாளிகளுமே கொரொனோ தொற்றுக்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக கணிக்கப்பட்டுள்ளார்கள். இத்தகையவர்களை வீடுகளில் பராமரிப்பவர்கள் ஆண்களல்ல பெண்களே.
வீடுகளில் அனைவரும் அடைந்து கிடக்கும் இந்த நாட்களில் வீட்டில் மூத்தவர்களை மட்டுமன்றி, வீடுகளில் தற்போது இருக்கும் குழந்தைகளையும், கணவரையும் பராமரிக்கும் பொறுப்பை அவர்களே சுமக்கிறார்கள். சாதாரண மத்திய தர வர்க்க, மற்றும் ஏழைக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் உணவுத் தட்டுப்பாடு, பணத்தட்டுப்பாடு என்பவற்றை சமாளித்துக்கொண்டு சிக்கனமாகவும், பட்டினியின்றியும், ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் கடமைகளை பெண்களே ஆற்றுகின்றனர்.
தமது குழந்தைகளையும் மூட்டைகளையும் சுமந்துகொண்டு, காலில் செருப்பு கூட இன்றி பல மைல்களாக நடந்து ஊருக்குத் திரும்பும் தாய்மார் பற்றிய செய்திகளை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள்.
கொரொனோ ஆபத்திலிருந்து இன்று உலகையே இரவு பகலாக தமது உயிரை பணயம் வைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் மருத்துவ சேவையில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் பெண்களே. குறிப்பாக பெருமளவு தாதிமார்கள் பெண்களே. உலக மருத்துவ சேவையாளர்களில் 70 வீதமானோர் பெண்கள். சீனாவில் கொரோனா தொற்றை நீக்குவதற்கான பணிகளில் ஈடுபட்ட மருத்துவ சேவையாளர்களில் 90 வீதமானோர் பெண்கள். இதுவே இன்றைய அமெரிக்காவில் 78 வீதம் பெண்கள்.
2003ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் நோய் தோற்றி பலர் மடிந்தார்கள். அப்படி மடிந்தவர்களில் அதிகமானோர் பெண்களே. அதிலும் 21 வீதமானோர் பெண் சுகாதார சேவை பணியாளர்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம். சில வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் எபோலா (Ebola) வைரஸ் தோற்றால் மடிந்தவர்களில் அதிகமானோரும் பெண்கள் தான். அங்கு வீடுகளில் நோயாளர்களை பராமரிப்பவர்களாக பெண்களே இருந்தார்கள். அதுபோல ஆப்பிரிக்காவில் பெண்கள் தான் இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தி இறுதிக் கடமைகளை செய்யும் பொறுப்பை வகித்திருந்தார்கள்.
அதே வேளை இம்முறை கொரோனாவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஆண்களே என்பது இன்னொரு செய்தி. சீனா, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் தரவுகளில் இருந்து இது துல்லியமாகத் தெரிகிறது. மார்ச் 20 ஆம் திகதி தரவுகளின் படி ஆண்களின் இறப்பு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 70 வீதமாக காணப்படுகிறது. ஆனால் மருத்துவ கடமையின் போது கொரோனா நோயாளர்களிடம் இருந்த நோய் தொற்றி தாமும் பாதிப்புக்குள்ளாகி இறந்துகொண்டிருக்கும் மருத்துவ சேவையாளர்களில் பலரும் கூட பெண்களே.
இன்றைய நிலை; உலகில் இதுவரை காணாத பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் இந்தளவு நெருக்கடியை இப்போது தான் எதிர்நோக்கியிருக்கிறது. சாதாரண எந்தக் கண்களுக்கும் புலப்படாத எதிரி பேரழிவை செய்துகொண்டிருக்கிறது. அருகில் வரும் யாரோடு அந்த எதிரி மறைந்திருக்கிறார் என்பதை அறியாமல் மனிதரை மனிதர் சந்தேகிக்கும் ஒரு துயரத்தை எதிர்கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களை பத்திரமாக பாதுகாக்க தலைப்படுவது போல அவர்களை சில நேரங்களில் ஆளையாள் சந்தேகிக்கும் நிலைக்கும் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு கொடுமையான காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நெருக்கடிகளின் வடிவம் தனித்துவமானது. அவை இந்தப் பெருங்கதையாடல்கள் மத்தியில் பேசுபோருளாவதில்லை.
இதே வேளை இந்த ஊரடங்கு கால கட்டத்தில் அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நிகழ்வதாக பல செய்திகளையும் காண முடிகிறது. கடந்த வாரம் இலங்கை செய்திகளில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலும் இதே எச்சரிக்கையைத் தரும் செய்திகள் பதிவானது.
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் பெண்களின் நலன்களை பாதுகாக்கும் முக்கிய கடமையும் பொறுப்பும் ஆண்களுக்கு இருக்கிறது. பெண்களின் நலனில் தான் ஆண்களின் நலன்களும் தங்கியிருக்கின்றன என்பதை உணர்ந்தாவது ஆண்கள் தமது கடமைகளை சரிவர ஆற்ற வேண்டிய நெருக்கடியான காலம் இது. அவர்களை உடல் - உள ரீதியில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யவேண்டியது ஆண்களின் கடமை. வேலைப்பகிர்வை மட்டுமன்றி, பொறுப்புப் பகிர்வுக்கும் தம்மைப் பழக்கிக் கொள்ள ஆண்கள் இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஒரு புறம் பெண்கள் உலகையும் காத்து மறுபுறம் தம்மையும் தற்காத்து, தம் வீட்டு பெண்களையும், சிறுமிகளையும் தற்காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மானுட அவலம்.
இன்றைய கொரோனா : மொத்த தொற்றும் மரணமும்
உலகம் – 1,095,930 (58,786), நோர்வே -5366 (60), இலங்கை 151 (3)
“பெண் விடுதலையே சமூக விடுதலையின் அறிகுறி” – ரோசா லக்சம்பேர்க்
(இக்கட்டுரை 5.4.2020 ஞாயிறு தினகரன் பத்திரிகையில் “கொரோனாவுக்கு பெரும் விலை கொடுப்பவர்கள் பெண்கள்” என்கிற தலைப்பில் வெளிவந்தது.)
+ comments + 1 comments
“கொரோனாவுக்கும் சரஸ்வதிக்கும் என்ன தொடர்பு விளக்கம் தரமுடியுமா?
சரஸ்வதி அம்மனின் முகத்தில் காயம் இருந்ததாக வரலாறுகள் இல்லை எதற்காக இந்தப்படம் வரையப்பட்டது ? அரேபிய ஏபிரகாமிய ஜீசஸ் தான் சிலுவையில் தலை கீழாக கோவணம் இன்றி தொங்க விடப்பட்டு எங்கும் ஆனிகள் அறைந்த பொழுது கத்தி குளறியவர் அந்த படத்தை போட்டு இருக்க வேண்டுமே ஏன் போடவில்லை விளக்கம் தரமுடியுமா?
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...