இது கொரொனா காலம். இந்த கொரொனா காலத்தில் மலையக மக்கள் நோக்கிய கவனம் அதிகம் திரும்பியுள்ளது. அதற்கு பிரதான காரணமாக சொல்லப்படுவது அவர்கள் நாட்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது. உண்மைதான். ஆனால் சாதாரணமான “நாட்கூலி” எனும்போது ஒரு உழைப்பாளர் தனது உழைப்பை வழங்கிய அன்றைய நாள்முடிவில் அதற்கான சன்மானமான கூலியைப் பெற்றுக்கொள்ளும் நிலை. ஆனால் தொட்டத்தொழிலாளர்கள் நிலை மாறானது. குறித்த மாதத்துக்கான தனது முதலாவது நாட்கூலியை நாற்பதாவது நாளே பெறும் முறைமை. ஒவ்வொரு மாத சம்பளமும் அடுத்த மாதம் 10 ம் திகதியே அவர்கள் கைக்கு வந்து சேரும். அத்தகையதொரு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறைமை நூறாண்டு காலத்திற்கு மேல் அங்கு நடைமுறையில் உள்ளது. இடையில் குறித்த மாதத்தின் 20 ஆம் நாள் ஒரு முற்பணம் வழங்கப்படும். அதில்தான் சம்பளம் கிடைக்கும் நாள்வரையான செலவுகளை சமாளிக்க வேண்டும். எனவே வழமையான சொல்லாடலில் மாதச்சம்ளக்காரர்களின் பொருளாதார கையறு நிலையைக் குறிக்கும் “மாதக்கடைசி” தோட்டத் தொழிலாளர் விடயத்தில் “மாதத்தின் முதல்வாரம்” என்பதே உண்மை. 1 முதல் 10 ம் திகதி வரையான அந்த நாட்கள் கடுமையானதாக இருக்கும்.
இந்த கொரொனா காலத்தில் அத்தகைய நாட்களை நெருங்கப்போகும் தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இந்த வாரம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. கடந்த மார்ச் 19 முதல் ஊரடங்கு அமுலுக்கு வந்த நாள் என்பது அவர்கள் “அட்வான்ஸ்” ( முற்பணம்) பெறும் காலகட்டம். அப்போதே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்ற புரிதலோடு ஆங்காங்கே நிவாரண விநியோகம் ஆரம்பித்தாயிற்று. அவை தொண்டு நிறுவனங்கள் செய்யும் அரசியலாகவும் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் தனிநபர்கள் செய்யும் தொண்டாகவும் இருந்திருக்கலாம். எதுவானாலும் அவர்களது எண்ணம், முயற்சி பாராட்டுக்குரியது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அந்த உதவிகளுக்கு “மலையக மக்களுக்கு உதவி” எனும் மகுடம் வரும்போது மட்டுமே சில கேள்விகளைத் தோற்றுவிக்கிறது. எந்தவொரு தொண்டுநிறுவனமும் அல்லது அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தனி நபர்களோ இந்த மலையகம் முழுவதற்குமான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கும் வல்லமை கொண்டனவா? எனும் கேள்வி, அவர்களது நல்லெண்ண முயற்சிகளுக்கு அப்பால் ஒரு விமர்சனப் பார்வையோடு இதனை அணுக வேண்டியதன் அவசியம் குறித்தே இந்த பார்வையே தவிர அவர்கள் செய்வது தவறான செயல் என்பதல்ல.
இதில் தொண்டு நிறுவனங்களையும் பரோபகாரிகளையும் ஒரு புறம் வைப்போம். அவர்களது எல்லை அவர்களது பார்வை சார்ந்த பிரதேசம். அவை ஏதேனும் காரணங்களால் தெரிவுக்குள்ளாகி இருக்கலாம்.அந்த பிரதேசத்துக்கு செய்வதன் ஊடாக அவர்கள் ஆத்ம திருப்தி அடையலாம்.
ஆனால், அரசியல் யந்திரம் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் அத்தகைய அரசியல் கட்சிகளைச் சார்ந்த அரசியல் தனிநபர்கள் அல்லது அமைச்சு அல்லது அரசினால் அதிகாரம் கொண்டவர்களாக நியமணம் பெற்றவர்கள் குறிப்பிட்ட எல்லைப் பிரதேசத்தைச் சார்ந்து மட்டும் நிவாரணம் வழங்குவது அந்த மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போர் என்ற வகையில் அதன் தார்மீகத்துக்கு உரியதா எனும் பெரும் கேள்வியை ஏற்படுத்துகிறது.
அரசியல் கட்சிகள் ஆளும் கட்சியோ எதிர்கட்சியோ அரசுடன் செயற்படும் வல்லமை கொண்டன. ஆளுந்தரப்பாக இருந்தால் அரச இயந்திர பொறி முறைகளையும் நிதி வளத்தையும் கொண்டு சேர்க்கும் வல்லமையும், அதுவே எதிர்கட்சியாயின் அவற்றைக் கேட்டு குரல் எழுப்பும் வல்லமையும் கொண்டிருத்தல் வேண்டும்.
மலையகப் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை இந்த அரச இயந்திர பொறிமுறை – நிதிவளம் நீக்கப்பட்டு தோட்டக் கம்பனிகளிடம் தங்கியிருக்கும் நிலை அதன் வரலாறு தொட்டே இருந்து வருவது. குறிப்பாக சுதந்திர இலங்கையில் 1948 ஆம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்டதோடு சட்டம் ஊடாகவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் தொழில் செய்யும் தோட்ட நிறுவனங்களே அதன் சமூக யந்திரமும் என்ற நிலை. அரிசி – மா- மண்ணெண்ணை – மாசி – பருப்பு முதல் வீட்டிற்கு வெள்ளையடிக்கும் சுண்ணாம்பு மற்றும் கல்வி சுகாதாரம் வரை. அவற்றை எல்லாம் தோட்ட நிர்வாகத்திடம் பெற்றுக்கொடுக்கப் போராடுவது தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இந்த மக்களுக்கு “தொழிற்சங்கங்களே” துணை. அந்த பழக்கம் பண்பாடுதான் இன்றுவரை.
எனினும் காலத்தின் போக்கில் பறிக்கப்பட்ட வாக்குரிமை கிடைக்கப்பெற்றதோடு பாராளுமன்ற பிரதிநிதிகளாகி அமைச்சர்களாகி அரச யந்திர பொறிமுறையை நிதி வளத்தை அந்த மக்களுக்காககப் பெற்றுக் கொடுக்கும் வல்லமை பெற்று இன்று நாற்பது வருடங்களாகின்றன. கிராமிய கைத்தொழில், உல்லாசப்பயணம், புடவைக்கைத்தொழில், வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, தபால், கைத்தொழில் பயிற்சி, நீதி, சமூக அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, புதிய, அரச கரும மொழிகள், இந்து கலாசாரம் என இன்னோரன்ன அமைச்சுப் பதவிகளையெல்லாம் அமைச்சர் அந்தஸ்துடனோ அல்லது அரை குறையாக ராஜாங்கம், பிரதியாகவோ அந்த மக்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டு நான்கு தசாப்தங்கள் ஆகின்றன. ஆனாலும் இன்னும் தொண்டு நிறுவனங்கள் துணையோடு தான் அவசர நிவாரணங்கள், தோட்டத்துரையோடு பேசித்தான் அமுலாக்கல் படிமுறைகள் என்றால் அவர்களின் அரசியல் கேள்விக்குரியதாக அமைவது வாஸ்தவமே.
இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்ட அரசியல் அணியாக அடையாளம் காணப்பட்டதே தமிழ் முற்போக்கு கூட்டணி. நாற்பதாண்டு கால அமைச்சுப்பதவிசார் அரசியலில் நான்கு வருடங்களே கூட்டணிக்குச் சொந்தம். இந்த நான்காண்டுகள் என்பது அரச யந்திர பொறிமுறையை பெருந்தோட்டப் பகுதிகளுக்கு கொண்டு செல்லுவதற்கு தடையாக இருந்த பிரதேச சபைச் சட்டத்தை திருத்தத்தை கொண்டுவந்ததும், பெருந்தோட்டப் பகுதிகளில் புதிய கிராமங்களை அமைப்பதற்கான அதிகாரசபை சட்டத்தை நிறைவேற்றியதும் மாபெரும் வெற்றியே. இந்த இரண்டு தவிர்ந்த ஏனைய பல அடைவுகள் உண்டெனினும் இந்த அவசர நிலையில் இந்த இரண்டையும் எடுத்துக் கொள்வோம்.
பிரதேச சபைச் சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர் தோட்டப்பகுதிக்கும் சேவையாற்றவேண்டிய பிரதேச சபைகள் அனைத்தும் அதனை உள்வாங்கிக்கொண்டனவா? அல்லது அதற்கு போதுமான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றனவா? நோர்வூட், கொட்டகலை பிரதேச சபைகள் பெருந்தோட்டப் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது போன்று மாத்தளை மாவட்டத்தில், மொனராகலை ( உதாரணமாக) மாவட்டத்தில் ஏன் குறைந்தபட்சம் நுவரஎலியா மாவட்டத்தின் ஹங்குராங்கத்தை பிரதேச சபையைக் கொண்டு அதனைச் செய்வதற்கான அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்த முடிகின்றதா?
அதிகார சபை சட்டத்தைக் கொண்டு வந்தமை பெரும் வெற்றி என்றால் இந்த இக்கட்டான கொரொனா இடர் காலத்தில் அந்த அதிகார சபையைக் கொண்டு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் என்ன? . உடனே ஒரு பதில் வரலாம். அது இன்னும் நிறுவப்படவில்லை. அதன் கிளைகள் இல்லை. அதன் நிர்வாகம் முறைமைப்படுத்தப்படவில்லை. இத்யாதி காரணங்கள். அப்படி இல்லை. தற்போதைய சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் வர்த்தமானி ஊடாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரகாரம் அந்த நிறுவனத்தை இயக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அதிகார சபை இயக்கம் பெறுவதற்கு மிகப் பொருத்தமான காலகட்டம் இதுவேயாகும். காரணம், இத்தகைய இடர் என்றவுடன் எல்லோரும் கவலைப்படும் அந்த “மலையகம்” அல்லது “பெருந்தோட்டப் பிராந்தியம்” எதுவென அதிகார சபை சட்டத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.( 2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்கச்சட்டம்)
“ பெருந்தோட்டப் பிராந்தியம் என்பது, தேயிலை, றப்பர்,தெங்கு மற்றும் பாம்ஒயில் எந்தத் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றனவோ அந்தத் தோட்டங்களில் வதிவுள்ள தொழிலாளிகள் வாழ்கின்ற , மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு, மேற்கு, வடமத்தி மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் அடங்குகின்றவையுமான இடப்பரப்புகள் என்று பொருளாகும்”.
இந்த வரைவிலக்கணம் மூலம் “மலையகம்” எனும் பகுதி எது என சட்டத்தினால் அடையாளப்படுத்தப்படுவதோடு மலையகம் என உணரும் பிரதேசங்களில் அரச பொது நிர்வாகப் பொறிமுறையைக் கொண்டு வருவதற்கு அதிகார சபைச் சட்டம் இடம் அளிக்கிறது.
இந்த அதிகார சபையின் இரண்டு குறிக்கோள்கள் இங்கு பிரதானமாக சுட்டிக்காட்டப்படவேண்டியது.
1.பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் குறித்த இடத்தில் ( தோட்டத்தில் ) உள்ள பெருந்தோட்ட சமுதாயத்தினரை சமூக நீரோட்டத்தில் சேர்ப்பதனை உறுதி செய்தல் .
குறித்த இடத்தில் ( தோட்டத்தில் ) உள்ள பெருந்தோட்ட சமுதாயத்தினர் தேசிய அபிவிருத்தி செயல்முறைக்கு பங்களிப்புச் செய்வதனை இயலச்செய்யும் பொருட்டு சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்கு அதிகாரமளித்தல்.( Empower)
இத்தகைய குறிக்கோள்கள் கொண்ட அதிகார சபையின் நிர்வாகக்கட்டமைப்பு பின்வருமாறு அமைகிறது
- விடயதானம் குறித்து ஒதுக்கப்படும் அமைச்சின் செயலாளர்( தற்போது சமூக வலுவூட்டல் அமைச்சு ) இந்த அமைச்சரினால் நிதி மற்றும் மாகாண நிர்வாக அனுபவம் கொண்ட நிபுணர்கள் அறுவரில் ஒருவர் பெருந்தோட்டத்துறை கம்பனிகள் சார்ந்தவையாகவும் இருப்பார். இந்த அறுவரில் ஒருவரே நிர்வாக சபைத் தலைவராகவும் இருப்பார்.
- நிதி அமைச்சின் செயலாளர்
- பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர்
- அரச பொது தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளர்
- மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
- வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர்
- காணி அமைச்சின் செயலாளர்.
மேற்படி அமைச்சு செயலாளர்களை அமைச்சுக்களுக்கு நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியது. எனவே அதிகார சபையின் நிர்வாக சபையைக் கூட்டினால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சு செயலாளர்கள் அல்லது அவரது பிரதிநிதி தீர்மானம் எடுக்கும் நிலை அங்கு உள்ளது. அவர்கள் ஜனாதிபதிக்கு நேரடியாக அறிக்கையிடும் சூழல் உருவாகலாம். அதிகார சபையின் செயற்பாட்டுப் பிரதேசம் எதுவென்றும் சட்டத்தில் குறிப்பிடப்படுவதால்,
இன்றைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு கீழ் நேரடியாக இயங்கக்கூடிய சட்டரீதியான நிறுவனமாக “மலையக அதிகார சபை “ இருக்கின்ற பொது முழு மலையகத்துக்கும் ( சட்ட வரைவிலக்கணப்படி) நிவாரணம் வழங்க வேறு ஒரு பொறிமுறை இல்லை என்பதே உண்மை.
அதிகார சபையின் நிதி அதிகாரங்களைப் பொறுத்தமட்டில் “அதிகார சபையானது தனது சொந்த நிதியத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நிதியையும், அதிகார சபையின் அதிகாரத்தைக் கொண்டு திரட்டக்கூடிய நிதிகளும், எம்மூலத்தில் இருந்தும் கிடைக்கக்கூடிய கடன்கள், நன்கொடைகள், மற்றும் மானியக் கொடைகள் போன்றவற்றை அதிகார சபையின் நிதியாகக் கொள்ள முடியும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு கொடை வழங்க முன்வரும் யாரிடமும் அதனைப் பெற்று அரச யந்திரப் பொறிமுறையையும் நிதிவளத்தையும் கூட கையாண்டு பிரதேச செயலகங்கள் ஊடாக பெருந்தோட்டத்துறை சமுதாயத்துக்கு (அவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும்) கொரொனா காலத்தில் உதவக்கூடிய வழிமுறை, அதிகார சபையை முறையாக கையில் எடுப்பதே.
இந்த ஏப்ரல் மாதமும் அடுத்துவரும் மே மாதமும் கொரொனாவின் தாக்கம் மலையகப் பகுதிகளில் பெரும் வாழ்வாதார தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். அப்போது, இப்போது கொடை வழங்கும் தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட அரசியல் நபர்களும் தமது பணி நிறைவுபெற்றுவிட்ட உணர்வோடும் பெருமிதத்துடனும் இருக்கக் கூடும். ஆனால் உண்மை அதுவாக இருக்காது. மார்ச் மாதம் “அட்வான்ஸ்” பணத்தில் ஓடியவர்கள் கொரொனா அச்சத்தில் குறைவாக வேலை செய்தவர்கள் பொருளாதார ரீதியாக பெருஞ்சிரமங்களை எதிர்கொள்ளும் நாட்கள் நம்முன்னே.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
பரந்துபட்ட மலையகத்துக்கு ஒரு வரைவிலக்கணமும் அதன் எல்லைப் பிரதேசமும் சட்ட முறைப்படி எழுதப்பட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு, அதுவே அரசாங்கத்தின் அமைச்சு செயலாளர்களுடன் இணைக்கப்பட்ட ( நிதி அமைச்சு உட்பட) நிர்வாக கட்டமைப்பையும் கொண்ட அதிகார சபையாகவும் உருவாக்கப்பட்ட பின்னரும் அதனைப் பயன்படுத்த ஆளும் அரசாங்கத்தில் அதிகாரம் கொண்ட மலையகத் தரப்பு முன்வராவிட்டால், அதற்கு போதுமான அழுத்தத்தை தற்போதைய (மலையக) எதிர்கட்சிகள் வழங்காமல் விட்டால் வரலாறு ஒரு போதும் இந்த மக்களின் அரசியல் தலைமைகளை மன்னிக்காது.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...