Headlines News :
முகப்பு » , , » யாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்

யாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்


1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிருந்தனர். சுன்னாகத்திலிருந்தும் அயற் கிராமங்களிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புங்குடுதீவு போன்ற தொலைவிலிருந்த கிராமங்களில் இருந்தும்  கூட சிலர் வந்திருந்தனர். அவர்களில் குறித்த பிரதேசங்களின் ஊர்ப் பெரியவர்களும் பிரமுகர்களும் இருந்தனர்.

கந்தரோடை ஆங்கிலப் பாடசாலை முகாமையாளரும் கிராம நீதிமன்ற நீதிபதியுமாகிய கந்தையாபிள்ளை கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். தேவாரத்துடன் கூட்டம் ஆரம்பமானது.

கூட்டத்தின் நோக்கம் பற்றிப் பேசத்தொடங்கிய கந்தையாபிள்ளை ”பஞ்சமர்களை முன்னேற்றமடைய விடாவிட்டால் மற்றத் தமிழ்மக்கள் முன்னேற்றமடைய ஏதுவில்லை” எனும் கருத்தைச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சிவதொண்டு குறித்து வழக்கறிஞர் எம். எஸ். இராசரத்தினம் விரிவாக உரையாற்றினார். சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் மகாத்மா காந்தி தீண்டாமையைக் கண்டிக்கிறார் என்றும் அவர் உரைத்தார். மேலும் ”எங்களுடைய மதத்தினர் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பலம் பெற்றால்தான் நாங்கள் சுய ஆட்சி அடைவதற்கு வழியாகும்” என்றும் குறிப்பிட்டார். மேலும் சைவ புராணங்களையும் அறுபத்து மூன்று நாயன்மார் கதைகளையும் எடுத்துக்கூறி நாயன்மாரில் சாதி வித்தியாசமில்லை என்றும் நந்தன், கண்ணப்பர் முதலிய நாயன்மார் பற்றியும் நாயன்மாரில் வண்ணார் போன்ற சாதியினரும் இருந்தனர் என்றும் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி இராசரத்தினம் உரையாற்றி அமர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து தெல்லிப்பழை துரையப்பாபிள்ளை, மானிப்பாய் ஆண்டி, புங்குடுதீவு பசுபதிப்பிள்ளை, நாகையா, அருளானந்தசிவம் ஆகியோரும் சிற்றுரைகள் ஆற்றினர். ”யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்” எனச் சங்கத்தின் பெயர் தெரிவானது. சங்கத்தின் தலைவராக எம். எஸ். இராசரத்தினமும் உபதலைவர்களாக ரி. எஸ். நாகலிங்கம், கே. முருகப்பர், எம். மண்டலம் ஆகியோரும் செயலாளர்களாக பி. கிருஷ்ணசாமி முதலியார், வி. எஸ். பூதப்பிள்ளை ஆகியோரும் பொருளாளர்களாக வி. எம். கந்தையா, கே. மூத்தர் ஆகியோரும் தெரிவாகினர். சங்க அங்கத்தவர்களாகவும் மேலும் பலர் தெரிவாகினர்.

அத்துடன் சுன்னாகம், மயிலணி, மல்லாகம், உடுவில், கோட்டைக்காடு, மயிலங்காடு, மாகையப்பிட்டி, சங்குவேலி, நாவாலி, தெல்லிப்பழை, பழை, பருத்தித்துறை, வதிரி போன்ற ஊர்கள் சார்பான உறுப்பினர்களும் தெரிவாகினர். இரவு பத்து மணியளவில் கூட்டம் கலைந்தது.

சங்கத்தின் கூட்டங்களை நடத்தவும் வாசிகசாலை ஒன்றைத் திறக்கவும் என ஓர் அலுவலகம் சுன்னாகம் சந்தைக்கு வடக்கில் அமைக்கப்பட்டது. 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் உயர்ந்த சாதியென்று சொல்லப் படுவோரால் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்வோர் கரையேற வேண்டுமென்றும் எங்களவர்களுக்கிடையில் ஒற்றுமையை அதிகரிக்க வேண்டுமென்றும் ஆங்கிலமும் தமிழும் கற்க ஆங்கிலப் பள்ளி வேண்டுமென்றும் பிறசமய நிந்தனைக்குள் இருந்து மீளவும் எல்லா இடங்களிலும் பரவியுள்ள எம்மவர் இணைந்து முன்னேற உதவவும் இச்சங்கம் தொடங்கப்பட்டதென்று திராவிடன் குறிப்பிடுகிறது.

”இந்து மதம் பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் இவர்களுக்கும் உண்டு” எனவும் “இந்து மதத்தில் இருக்கும்போது இழிவாக நடத்தி இவர்களே கிறிஸ்து மத்ததில் சேர்ந்து விட்டால் சம மரியாதை அடைகிறார்கள்” என்றும் ”நாம் நம்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதியாரை மனிதரைப் போல தக்க அன்போடும் மரியாதையோடும் நடத்தும் காலமும் தங்களுடைய சமயத்தினை விட்டு அகலாதிருக்கும் பொருட்டு போதுமான கல்வியையும் போதிக்க வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது” என்றும் முதலாவது திராவிடன் இதழின் ஆசிரியத் தலையங்கம் குறிப்பிடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் சாதிக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்காகச் சைவ சமயத்தினைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதைத் தடுக்கும் முயற்சியாக இச்சங்கம் உருவாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் சம மரியாதையும் கிடைப்பதே அவர்கள் சைவ சமயத்தில் தொடர்ந்தும் இருக்க அவசியமானது எனக் கருதியே இச்சங்கம் உருவானது எனலாம்.

ஆனாலும் சைவ ஆதிக்க சாதியினரிடமிருந்து பெரிய அளவிலான ஆதரவு இச்சங்கத்துக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதுவரை எழுதப்பட்டுள்ள சாதியத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இச்சங்கம் பற்றிய குறிப்பே இப்போது இல்லை. இச்சங்கத்துக்குப் பிறகு தொடங்கிய சங்கம் ஒன்றே முதலாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கான சங்கம் என வரலாறு எழுதப்பட்டுள்ளது.

சாதிமான்களான வேறு தமிழ்த் தலைவர்கள் அவர்களது ஏனைய செயற்பாடுகளுக்கான இப்போதும் நினைவு கூரப்படுகிறார்கள். ஆனால் எம். எஸ். இராசரத்தினம் போன்ற சைவத்துக்கும் தமிழுக்கும் உழைத்த தலைவர்கள் இப்போது நினைவுகூரப்படுவது கூட இல்லை.

அண்மைய காலச் சம்பவங்களை அவதானிக்கும் போது ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூடச் சைவ சமய நிறுவனங்கள் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தமது சமயத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலை பெறுவதற்கான குறிப்பிடத்தக்க செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்காத அல்லது முன்னெடுக்க விரும்பாத மனநிலையிலேயே இருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகின்றது.

நன்றி - உதயன் : சஞ்சீவி
Share this post :

+ comments + 1 comments

It's a great article. It's pleasure to get to know about such a legend. Hats off for the service that he rendered in order maintain equality and respectability among unprivileged people in the society which was influenced with different caste, religions and ethnic groups. My heartfelt appreciation for writing such inspirational article.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates