Headlines News :
முகப்பு » , , , , , » முதலாவது சிங்கள - தமிழ் இனக்கலவரமும், சிங்கள மகா சபையும் 1956: (9) - என்.சரவணன்

முதலாவது சிங்கள - தமிழ் இனக்கலவரமும், சிங்கள மகா சபையும் 1956: (9) - என்.சரவணன்

பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான்  1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம்.

முதலாவது தமிழ் சிங்கள கலவரம்
1939ம் ஆண்டு மே 30 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில் 'முஸ்லீம் இளைஞர் சங்கம்' (Y.M.M.A) கூட்டம் நடைபெற்ற பொது சிறப்பு விருந்தினராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கவர்ச்சிகரமான உரையில் "சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல் என்றும் விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே என்றும் தமிழர்கள் நெடுங்காலமாக சிங்களவர்களை ஆண்டிருக்கிறார்கள் என்றும் அவர் அந்த உரையில் கூறியிருந்தார்.

இது சிங்கள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் தூண்டிவிட்டது அது இறுதியில் இனக்கலவரத்திற்கு இட்டுச் சென்றது. இதன் காரணமாக இந்திய மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளான 'பசறை, நாவலப்பிட்டி, மஸ்கெலியா, நுவரெலியா பகுதிகளில் வாழும் அப்பாவி இந்திய வம்சாவளிகள் தாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் வரை கலவரம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் நாலவலப்பிட்டியில் மகாவம்சத்தை தாக்கிப் பேசிய உரையே அக்கலவரத்துக்கு காரணம் என்று பல ஆய்வாளர்களும் பதிவு செய்து வந்திருக்கின்றனர். அவரது உரை குறித்த அந்த மூன்றாந்தரப்பு பலரும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பல ஆய்வாளர்களும் நாவலப்பிட்டி கூட்டம நிகழ்ந்த இரண்டாவது நாளான 01.06.1939 அன்று வெளியான The Hindu Organ பத்திரிகையையே ஆதாரம் காட்டி வந்திருக்கின்றனர். இத்தொடருக்காக அப்  பத்திரிகையின் மூலப் பிரதியை எடுத்துப் பார்த்ததில் பொன்னம்பலம் சிங்கள வரலாற்று புனைவுகளை சாடுகிறார். ஆனால் மகாவம்சம் குறித்து அவர் எங்கும் தாக்கவில்லை என்று உறுதிசெய்துகொள்ள முடிகிறது.

யூன் 2ஆம் திகதி அனுராதபுரத்தில் நடந்த சிங்கள மகா சபையின் கூட்டத்தில் பண்டாரநாயக்க ஆற்றிய உரையில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உரையை கடுமையாக சாடி அங்கு கூடியிருந்த சிங்கள மக்களின் உணர்சிகளைத் தூண்டினார். “சிங்கள பௌத்தர்களை மட்டுமல்ல சிங்கள கத்தோலிக்கர்களையும் “சிங்களவர்கள்” என்கிற அடையாளத்தின் கீழ் அணிதிரட்ட வேண்டும் என்றார். இதையும்  The Hindu Organ பத்திரிகை யூன் 5 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

இந்த விவாதம் அத்தோடு நிற்கவில்லை. அப்பத்திரிகையில் 8 ஆம் திகதி “முருகர் அம்மான்” என்கிற பெயரில் வாசகர் ஒருவர் அனுப்பியிருந்த “யார் இந்த சிங்களவர்?” (Who are the Sinhalese?)  என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியாகியிருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உரையின் உள்ளடக்கத்தை மேலும் ஆதாரங்களுடன் நிறுவும் தர்க்கங்களுடன் கூடிய கட்டுரையாக அக்கட்டுரை இருந்தது.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் நாவலப்பிட்டி உரைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதாவது 1939 மார்ச் 15 அன்று அவர் அரசாங்க சபையில் ஆற்றிய சர்ச்சைக்குரிய “50க்கு 50” உரையால் நாடளாவிய ரீதியில் அவருக்கு எதிரான இனவாத பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம், பறங்கி போன்ற இனங்களுக்கு 50 உம் பெரும்பான்மை இனத்துக்கு 50 உம் என்கிற அடிப்படையிலான சமபல அதிகாரத்தை வலியுறுத்தி ஆற்றிய உரை அது.
அநகாரிக்க தர்மபாலவுக்குப் பின்னர் சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிநிரலை கையேற்றிருந்த சிங்கள மகா சபையும் அதன் ஆதரவு சக்திகளும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உரையை இனவாத ரீதியில் பிரச்சாராம் செய்து சிறுபான்மை இனங்களுக்கு எதிரான ஒரு பதட்ட நிலையை தோற்றுவித்து வந்தனர்.

நாவலப்பிட்டி உரை அந்த பதட்ட நிலையை ஒரு கலவரமாக மாற்றியது என்றே கூறவேண்டும். 

தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக தன்னை பலப்படுத்துவதற்கு வழி தேடிக்கொண்டிருந்த பண்டாரநாயக்கவுக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உரை ஒருவகையில் வாய்ப்பாக அமைந்தது. இதன் விளைவாக நாவலபிட்டிய கலவரம் நிகழ்ந்து. கலவரம் நடந்த அதே சூட்டோடு அதே மாதம் பண்டாரநாயக்க கலவரம் நிகழ்ந்த நாவலப்பிட்டி உட்பட பிரதான இடங்களில் சிங்கள மகா சபையின் கிளைகலைத் திறந்து பீதி கிளப்பினார். அதை ஒரு துணிகரச் செயலாக சிங்கள மகா சபை பிரச்சாரப்படுத்தியது.

ஆனால் “தமிழர்களுக்கு எதிராக பேசுவது எனது நோக்கமல்ல. பொன்னம்பலத்துக்கு பதிலளிப்பதே எனது ஒரே நோக்கம்.” என்றார் பண்டாரநாயக்க.

இன்னொரு கூட்டத்தில் பேசும் போது
"நாவலப்பிட்டி சிங்கள மகா சபை பொன்னம்பலத்திற்கு ஒரு சிலை எடுக்க வேண்டும். நாவலப்பிட்டியில் சிங்கள மகாசபையின் கிளையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் பொன்னம்பலத்திற்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்... இலங்கையை தமிழர்களுக்கு உரிமை கொண்டாடவே பொன்னம்பலம் முயல்கிறார். இந்த நாடு சிங்களவர்களுடையது என்பதையும், தமிழ் மற்றும் இதர சக்திகளின் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிக்க போராடிய வரலாற்றை கொண்டவர்கள் சிங்களவர்கள் என்பதையும் அவர் மறக்ககூடாது" என்றார்.
ஆனால் இதே காலப்பகுதியில் பலன்கோடாவில் 1942 ஓகஸ்ட் 1943 செப்டெம்பர் ஆகிய காலப்பகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் சிங்கள மகா சபையின் சார்பில் போட்டியிட்ட பண்டாரநாயக்கவின் மாமனாருக்கு வாக்களிக்கச் சொல்லி ஜீ.ஜீ.பொன்னம்பலம் தோட்டத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். ஜேம்ஸ் மேனர் எழுதிய “The Expedient Utopian: Bandaranaike and Ceylon” (சந்தர்ப்பவாத கற்பனாவாதம்: பண்டாரநாயக்கவும் இலங்கையும்) என்கிற நூலில் இது குறித்து விபரிக்கிறார். இது எப்படி சாத்தியப்பட்டது, எதிர்முகாமில் இருந்த ஒருவருக்கு வாக்களிக்கக் கோரியதன் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து அறிய முடியவில்லை.

இந்தக் காலப்பகுதியில் தான் சிங்களத் தேசியவாதத்தை ஊதிப்பெருப்பிக்க பண்டாரநாயக்கவும், தமிழ்த்தேசியவாதத்துக்கு தலைமை தாங்கும் சக்தியாக ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ஆனார்கள். இருவருமே இரு இனங்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக தலையெடுத்தார்கள். இருவருமே சிறந்த பேச்சாளர்களாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் அரசாங்க சபையிலும், அதற்கு வெளியிலும் தமது பேச்சுகளின் போது தாக்கிக்கொண்டார்கள். 

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பட வேண்டும். மேற்படி நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தபோது தமிழ் காங்கிரஸ் என்கிற ஒரு கட்சி தோற்றம் பெற்றிருக்கவில்லை. 1944 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பதன் தோற்றம் சிங்கள மகா சபை என்கிற இனத்துவ அமைப்பின் பிரதிபலனே என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதையே இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த ஜோர்ஜ் ஈ டீ சில்வா 1946 ஆம் ஆண்டு நிகழ்ந்த 27 ஆவது மாநாட்டு உரையில் குறிப்பிட்டுமிருக்கிறார். 

இந்தக் காலப்பகுதியில் பண்டாரநாயக்கவுடனேயே எப்போதும் ஒன்றாக  இருந்த ஹென்றி அபேவிக்கிரம தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“பண்டாரநாயக்க அவர்கள் எப்போதுமே ஒரு விடயத்தைக் கூறிக்கொண்டிருந்தார், அதாவது இந்நாட்டின்  பெரும்பான்மையினமான சிங்களவர்களின் உரிமைகள் படிப்படியாக இல்லாமல் செய்யப்பட்டுக்கொண்டு வந்திருக்கிறது. வர்த்தகம் அனைத்தும் அன்னியர் கைகளில் சென்றடைந்துள்ளது, உயர் உத்தியோகங்கள் ஐரோப்பியர்கள் இந்தியர்கள் போன்ற அந்நிய இனத்தவர்களிடம் கைகளை சென்றடைந்துள்ளது. குறிப்பிட்டளவு ஏராளமான தேயிலைத தோட்டங்கள், இறப்பர் தோட்டங்கள், நகரங்கள், கட்டிடங்கள் என்பவற்றை அவர்கள் தமது உரிமையாக்கிக்கொண்டு இலங்கைக்குள் வர்த்தக ஏகபோகத்தை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில காலத்தில் சிங்களவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். நாம் நமது சிங்களத்தனத்தை பாதுகாக்கவேண்டுமாயின் விவசாயத்தை நாடு பூராவும் விரிவாக்கவேண்டும்.”

பண்டாரநாயக்க இவ்வாறு இலங்கை குறித்த எதிர்கால கனவைக் காணும் போதும், திட்டமிட்டபோதும் இலங்கையர்கள் என்றார் அது சிங்களவர்களே என்கிற மனநிலையில் இருந்து தான் இயங்கினார் என்பதையே இத்தகைய விபரங்களில் இருந்து அறிய முடிகிறது.

சிங்கள மகா சபை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வளர்ந்த ஆரம்பக்காலத்தில் அன்றைய பெரும் பிரமுகர்களாக இருந்த சேர் ஜோன் கொத்தலாவலம் டீ.எஸ்.சேனநாயக்கவின் மகன் டட்லி சேனநாயக்க போன்றோரும் அவர்கள் அமைச்சர்களாக இருந்த காலத்திலேயே சிங்கள மகா சபையில் அங்கத்துவம் வகித்தது மட்டுமன்றி அதில் உப தலைவர் போன்ற பதவிகளையும் வகித்திருக்கிறார்கள். 

சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்ட போது கோட்டை பௌத்த மந்திரயவில் ஒரு விசேட கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் 

“இலங்கை தேசிய சங்கம் பொதுவாக சகல இனத்தவர்களுக்குமாக இயங்குகிறது. நீங்கள் சிங்களவர்களை மட்டும் தனியாக பிரித்து செய்யும் இந்த வேலைத்திட்டம் இனவாதம் இல்லையா?” 

அதற்கு பதிலளித்த பண்டாரநாயக்க 
“நண்பரே அந்தக் கேள்விக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இப்படியான கேள்வியை யாரும் கேட்கமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பில் நான் இருந்தேன். சரி... இலங்கை தேசிய காங்கிரசில் இன ஐக்கியம் இருக்கிறதா? இப்போது அதில் இருப்பவர்களும் கரையோரச் சிங்களவர்கள் தான். இந்த வகுப்புவாத, கட்சிவாத ரீதியில் பிளவுற்றிருக்கிற சிங்களவர்களை ஒன்றிணைப்பது தான் எனது தேவை. அப்படி இணைத்துக்கொண்டு அதன்பின்னர் யினைய இனகளோடு கைகோர்த்துக்கொண்டு முன்னேறலாம். இதற்கு ஒரு நல்லதொரு உதாரணத்தைக் கூறுகிறேன். ஒரு செப்புப் பாத்திரத்தில் நீரைச் சேருங்கள். பின்னர்  அதில் கொஞ்சம் எண்ணையையும் சேருங்கள். விரல்களை இட்டு நன்றாக கலக்குங்கள். கலந்துவிட்டது என்று நீங்கள் நம்பியிருந்தால் நிறுத்திவிட்டு பாத்திரத்தைப் பாருங்கள். அதிக நேரம் செல்லுமுன் மீண்டும் நீர தனியாகவும், எண்ணெய் தனியாகவும் பழையபடி விலகிவிடும். அதற்காகத் தான் சொல்லுகிறேன் இந்த இனத்தை அவ்வளவு எளிதாக ஒன்று சேர்த்துவிட முடியாது. சில காலத்துக்குப் பின்னர் மெதுமெதுவாக ஒன்றாகக்கூடும்...”
1943 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட சிங்கள மகா சபையின் வருடாந்த கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் பலரும் கலந்துகொண்டு பண்டாரநாயக்கவை மாலையிட்டு வெற்றிலை வழங்கி வரவேற்பளித்தார்கள் என்கிறார் ஹென்றி அபேவிக்கிரம.

இப்பேற்பட்ட பின்னணியில் தான் ஐக்கிய தேசியக் கட்சியிந பிரதான அங்கமாக இருந்த சிங்கள மகா சபையை டீ.எஸ். சேனநாயக்க மெதுமெதுவாக ஓரங்கட்டி பாரபட்சம் காட்டப்படுவதை பண்டாரநாயக்க உணர்ந்தார். ஜோன் கொத்தலாவல, டட்லி சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன  போன்றோருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதற்கூடாக பண்டாரநாயக்கவின் செல்வாக்கை குறைக்க டீ.எஸ்.சேனநாயக்க எடுத்த முயற்சியை பண்டாரநாயக்கவால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இதனால் பண்டாரநாயக்க சிங்கள மகா சபையை தனித்து பலப்படுத்தும நிலைக்கு தள்ளப்பட்டார். சிங்கள மகா சபை; ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரண்டறக் கலந்துவிடுவதன் மூலம் அதன் தனித்தன்மை அழிந்துவிடகூடிய ஆபத்து இருப்பதை அவர் உணர்ந்தார். அதன் தனித்துவத்தை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்தார். 

பௌத்த நிறுவனங்களே சிங்கள மகா சபையை பின்புலத்தில் இருந்து இயக்கிவந்தன என்கிற கருத்தை கே.எம்.டீ.சில்வா மறுக்கிறார். மாறாக அன்று இயங்கிவந்த பௌத்த அமைப்புகள் சிங்கள மகா சபையின் பிடியில் இருந்தது என்கிறார் அவர். 

மாதம்பே மாநாடு
1951 ஆம் ஆண்டு யூலை 09 அன்று சிங்கள மகா சபையின் 13வது வருடாந்த மாநாடு மாதம்பேயில் நடத்தப்பட்டது.

அரசாங்கத்தில் இருந்த காலப்பகுதிக்குள் பல்வேறு யோசனைகளை பண்டாரநாயக்க கொண்டுவந்தார். இவை ஒன்றும் கணக்கில் எடுக்கப்படாத நிலையில் 1951 ஆம் ஆண்டு யூலை 09 அன்று சிங்கள மகா சபையின் 13வது வருடாந்த மாநாடு மாதம்பேயில் நடத்தப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த மாதம்பே மாநாட்டில் பல்வேறு பரிந்துரைகளை நிறைவேற்றினார்கள்.

இதில் இருந்து தான் பகிரங்கமாக தனிச் சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற தீர்மானத்தையும் எடுக்கிறார்கள். 

டீ.எஸ்.சேனநாயக்க அரசாங்கம் சிங்கள மகா சபையினரின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. ஐ.தே.க.வின் அரசியலமைப்பின் மூன்றாவது உறுப்புரையின் பிரகாரம் தமது பரிந்துரைகளை ஏற்று நிறைவேற்றுவது ஐ.தே.க.வின் கடமை என்று சிங்கள மகா சபை அறிவித்தது. மாதம்பே மாநாட்டு தீர்மானங்களை ஐ.தே.க.விடம் முன்வைத்தது சிங்கள மகா சபை. ஆனால் டீ.எஸ்.சேனநாயக்க இந்த யோசனைகளை நிராகரித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஜனநாயக சமத்துவக் கட்சியாக வளர்ந்தெழும் என்கிற நம்பிக்கையை நான் கொண்டிருந்தேன். ஆனால் அது சாத்தியப்படவில்லை என்று பண்டாரநாயக்க கூறினார்.

 அரசாங்கத்திடம் சமர்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்தது. 12.யூலை 1951 அன்று வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது பண்டாரநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்தும், சபைத் தலைவர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து விட்டு எதிர்க்கட்சியில் போய் அமர்ந்துகொண்டார். அவரோடு சிங்கள மகா சபையைச் சேர்ந்த

ஹொரான தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு துணை அமைச்சருமான ஏ.பீ.ஜெயசூரிய
 • பலங்கொட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவீர குருப்பு,
 • பெலிஅத்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டீ. ஏ.ராஜபக்ச
 • உடுகம தொகுதி பாராளுமன்ற உறுப்பினர டீ.எஸ்.குணசேகர
 • நீதித்துறை துணை அமைச்சர்  ஜோர்ஜ் ஆர் டி சில்வா
ஆகியோர் பண்டாரநாயக்கவுடன் ஒன்றாக சேர்ந்து வந்து எதிர்க்கட்சியில் அமர்ந்தனர். அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிங்கள மகா சபை நிரந்தரமாக விலக்கிக் கொண்டது.

ஐதேக வின் முதல் பிளவு ஏற்படவும், இலங்கையின் இன்னொரு பிரதான கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாகவும் வழிவகுத்த மாநாடு மாதம்பே மாநாடு. அந்த மாநாட்டின் தீர்மானங்கள் தான் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவானபோது அதன் அடிப்படைக் கொள்கைகளாகின.

இதற்குப் பின்னால் வேறொரு முக்கிய காரணமும் இருக்கவே செய்தது. அதாவது ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபர்களில் ஒருவராக பண்டாரநாயக்க அதன் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவராக அவர் இருந்தார். ஆனால் டீ.எஸ். சேனநாயக்க பண்டாரநாயக்கவை அடுத்த தலைமையாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக டட்லி சேனநாயக்கவை கொண்டுவர பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தார்.

சேனநாயக்க தனக்குப் பின் சேனநாயக்க குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கட்சியை வைத்துக்கொள்ளவே ஆர்வப்பட்டிருந்தார் என்பது வெளிப்படை.

பண்டாரநாயக்க சிங்கள மகா சபையை ஆரம்பித்து அதில் தலைமை வகித்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த வேளை அவர் இலங்கை தேசிய காங்கிரசிலும் முக்கியஸ்தராக இருந்துகொண்டு தான் இருந்தார். இரண்டு அமைப்பும் பல்வேறு விடயங்களிலும் நேரெதிரான கொள்கைகளையும் செயல் முறைகளையும் கொண்ட அமைப்புகள். இத்தனைக்கும் சிங்கள மகா சபையின் தேவை பண்டாரநாயக்கவுக்கு தேவைப்பட்டதன் நோக்கமே அன்று பலமாக இருந்த இலங்கை தேசிய காங்கிரஸ் போதுமானது இல்லை என்கிற காரணத்தால் தான். அப்படியிருக்க அவர் ஏன் முரண்பாடான இரண்டு அமைப்புகளில் ஏக காலத்தில் அங்கம் வகித்தார்? அது ஒரு முரண்நகையில்லையா? என்கிற கேள்வியும் விமர்சனமும் அப்போது எழவே செய்தது.

இலங்கை தேசிய காங்கிரஸ் குறைபாடோடும் ஏனைய தேசிய இனங்களை இணைத்துக் கொண்ட அமைப்பாக இருந்தது. ஆனால் “சிங்கள மகா சபை” தனிச் சிங்கள – பௌத்தர்களை அணிதிரட்டும் அமைப்பாகவும், சிங்கள அபிலாஷைகளை நிகழ்ச்சிநிரலாகக் கொண்ட அமைப்பாகவும் இயங்கியது. அது மட்டுமன்றி சிங்கள பௌத்த தேசியவாதத்தைத் தூண்டும் வகையில் சிங்கள மகா சபையின் சிங்கள பௌத்தயா, சிங்களே போன்ற தலைப்புகளை பத்திரிகைகளுக்கு பெயர் வைத்தார்.

அதைத் தவிர சிங்கள மகா சபைத் தோற்றுவித்ததன் காரணம் பண்டாரநாயக்க நாட்டின் ஆட்சித் தலைமையைக் கைப்பற்ற எடுக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டமே என்கிற விமர்சனமும் எழுந்தது. அதற்கு சிங்கள பௌத்த தேசிய வாத சிந்தனையை ஒரு குறுக்கு வழியாக அவர் பயன்படுத்திகொண்டார் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

1951 இல் எதிர்க்கட்சியில் போய் அமர்ந்த பண்டாரநாயக்க தரப்பு சிங்கள மகா சபையைக் கலைத்துவிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தனர். 1946இல் ஐக்கிய தேசியக் கட்சியில் ஐக்கியமானபோது கலைக்காத சிங்கள மகா சபையை சுதந்திரக் கட்சியை அமைத்ததுமே கலைத்துவிட்டதன் பிரதான காரணம் பண்டாரநாயக்கவின் முழுகே கட்டுபாட்டில் சுதந்திரக் கட்சி தொடங்கப்பட்டதாள் தான்.
மாதம்பே மாநாட்டுத் தீர்மானம்
 1. உடனடியாக சிங்கள மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வேண்டும்.  தமிழ் மொழி பேசுபவர்களிடம் இருந்து நிர்ப்பந்தங்கள் இருக்குமாயின் அதையும் ஒரு அரச மொழியாக அறிவித்தல்.
 2. இலங்கையின் காலனித்துவ ஆட்சியின் போது அந்நியரால் மோசமான சீரழிவுக்கு ஆளான பௌத்த மதத்துக்கு புத்துயிர்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது சபையின் பரிந்துரை.   புத்த சாசனத்தின் நாசத்துக்கும்அதிகாரத்துவத்துக்கும் காரணமென மகா சங்கத்தினர் குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஆதரவு, உதவிகளை வழங்காதிருக்கக் கூடாது என சபை எண்ணுகிறது. மேலும் நம் நாட்டில் உள்ள பிற மதங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் செயல்படுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
 3. பொருளாதார நிலைமையை சீர்திருத்தவும், முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனால் நமது பொருளாதார பிரச்சினைகள் உணரப்பட முடியும், குறிப்பாக மக்களின் வறுமை, வேலையின்மை, மோசமான வாழ்க்கைத் தரங்களை எதிர்கொள்ளும்போது. பின்வரும் பரிந்துரைகளை நாங்கள் முன்வைக்கிறோம்.
 • நிலமற்ற மக்களின் நிலப் பற்றாக்குறையைப் போக்க கிராமப்புற அபிவிருத்தி இயக்கத்தின் பணிகளையும் தற்போதுள்ள குடியேற்றத் திட்டங்களையும் விரைவுபடுத்துதல்.
 • அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்கள் மற்றும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட வேண்டிய மற்றும் தனியார் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டிய தொழில்கள் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் தெளிவான தொழில் கொள்கையை நிறுவுதல்.
 • மேற்கண்ட இரண்டு நோக்கங்களை செயல்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க ஒரு ஆணைக்குழுவை நியமித்தல்.
 • ஆண்டுக்கு ரூ 50,000 க்கு மேற்பட்ட வருமானமுடயவர்களிடம் வருமானவரி அறவிடல்.
 • அத்தியாவசியமற்ற பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் என்பவற்றின் கொள்வனவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விநியோகித்தல். வேகமாக உயரும் பொருட்களின் விலைகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் குறைத்தல்.
 • சமூக சேவகர் ஆணைக்குழுவின் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துதல்.
 • சம்பளங்களில் மொழிப் பாரபட்சத்தால் ஏற்படும் வேறுபாட்டை உடனடியாக நீக்குதல்.
 • பொதுமக்களின் நலனுக்காக தேவையான எந்தவொரு சேவையையும் அரசாங்கம் கையகப்படுத்துவதை கவனமாகப் பரிசீலித்தல்.
 1. ஆயுர்வேதம் பொதுமக்களின் உள்ளூர் ஆயுர்வேத முறையின் ஆதரவை நாடுவதால், அரசாங்க சுகாதாரத் துறையின் கீழ் உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
 2. பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியும் விரக்தியும் இருப்பதானது அரசாங்க நிர்வாகத்துக்கு இது தடைக்கல்லாக இருந்து வருவதால் அதற்கான காரணங்களை விசாரிக்க பொருத்தமான ஆணைக்குழுவை நியமித்தல். 
 3. மது அருந்துவதால் ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்தவும், ஐந்தாண்டு காலத்திற்குள் இலங்கையில் குதிரைப் பந்தய சூதாட்டத்தை நடத்துவதை நிறுத்தவும் சட்டம் இயற்றவும் வேண்டும்.
 4. சர்வதேச நிலை வளர்ந்து வரும் அபாயகரமான சர்வதேச சூழ்நிலையை எதிர்கொள்வதில் முடிந்தவரை ஒன்றுபடுவதற்கு இலங்கை தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் உடனடியாக நட்புரீதியான உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சபை நம்புகிறது. 
உசாத்துணை:
 • K. M. De Silva - A History of Sri Lanka - Oxford University Press, 1981
 • Times of Ceylon Editorial, 14 January, 1946: "A National Party” - Documents of the Ceylon National Congress and nationalist politics in Ceylon, 1929-1950 Volume 2 – 1977 by Michael Roberts – p- 1625
 • සෝමදාස අබේවික්‍රම - හෙන්රි අබේවික්‍රම දුටු බණ්ඩාරනායක පරිවර්තන යුගය - S.Godage Brothers – Colombo - 1973
 • K.M.De.Silva - Nationalism and its Impact - The Ceylon Journal of Historical and Social Studies 1974
 • William Howard Wriggins - Ceylon: Dilemmas of a New Nation - Princeton University Press, 1960
 • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைத் திட்டமிடலுக்கு வழிகாட்டிய சிங்கள மகா சபையின் மாதம்பே பரிந்துரைகள் திவயின – 07.07.2014

Share this post :

+ comments + 2 comments

9:34 AM

அருமை...
மேலும் வளரட்டும்.

9:36 AM

அருமை...

மேலும் வளரட்டும்...
வாழ்த்துக்கள்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates