பேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று பாகங்களில் டாக்டர் புரூஸ் எய்ல்வாட்டின் (Dr.bruce aylward) நேர்காணலை பதிவிடுகிறார்.
நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள இந்த நேர்காணல் சீனா எவ்வாறு இந்த கொடிய நோயை இத்தனை விரைவாகச் சமாளித்தது என்பதைச் சொல்கிறது. இது பிற முதலாளிய நாடுகளில் எந்த அளவு சாத்தியம் என்பது சிந்திக்கத் தக்கது. பெரிய அளவு மருத்துவம் தனியார் மயப்படுத்தப்பட்ட இந்தியாவில் இது சாத்தியமா என்கிற கேள்விக்குறி நம்முன் பெரிதாக எழுகிறது.
டாக்டர் புரூஸ் எய்ல்வாட் உலக நல நிறுவனத்தின் சார்பாக சீனாவுக்கு கொரானா தாக்குதலை அந்நாடு எவ்வாறு சமளிக்கிறது என்பதை நேரில் கண்டறிய அனுப்பப்பட்ட குழுவின் தலைவர். இரண்டு வார காலங்கள் அங்கு தன் குழுவுடன் தங்கி சீனா எவ்வாறு வியக்கத்தக்க முறையில் அந்தக் கொடுந்த் தாக்குதலைச் சமாளிக்கிறது என்பதை நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
சீன அரசின் உடனடித் தீவிர நடவடிக்கைகளின் ஊடாக பிப்ரவரி தொடக்கத்தில் தினம்தோறும் 3,000 கொரோனா நோயாளிகள் வருகை என்பது இரண்டே வாரங்களில் வெறும் 200 என்பதாகக் குறைக்கப்பட்டதை அவர் வியந்து இந்த நேர்காணலில் பேசுவது நம் கவனத்த்குக்குரியது. நோய்த்தாக்குதல் எண்ணிக்கை இப்படிக் குறைந்தவுடன் சீனாவின் தேங்கிக் கிடந்த பொருளாதாரம் உயிர் பெறும்போது மீண்டும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போதைக்கு அதிக எண்ணிக்கையில் உலகின் வேறுபகுதிகளில்தான் மக்கள் இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
இன்றைய தாக்குதல் உலகளாவிய தாக்குதல் அல்ல. மாறாக உலக அளவில் ஆங்காங்கு நடக்கும் தாக்குதல் என்பதால் நாம் இதனை ஓரளவு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்கிறார் எய்ல்வார்ட்
சீனாவின் இந்த அனுபவம் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படலாம். ஆனால் அது அதி வேகம், பொருட் செலவு, அரசியல் துணிவு, கற்பனைத் திறன் ஆகியவற்றைக் கோரும் ஒரு நடவடிக்கையாக அமையும் என்கிறார் நியூயார்க் டைம்ஸ் சார்பாக இந்த நேர்காணலைச் செய்தவர். போலியோ, எபோலா முதலான உலக அளவிலான நலம் சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அனுபவம் மிக்கவர் டாக்டர் எய்ல்வார்ட் என்பது குறிப்பிடத் தக்கது.
நோய்க்குறிகளைத் தொடக்கத்தில் வெளிப்படுத்தாத ஒருவகையான நோய் இது. சோதிக்கும்போது பலருக்கு இந்தத் தாக்குதலுள்ளது தெரியாது. ஓரிரண்டு நாட்களில் அது வெளிப்படத் தொடங்கும். அதேபோல நாட்டில் ஒரு மிகப் பெரிய நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பதும் முதலில் தெரியாது. பனிமலை ஒன்றின் மேல் நுனியைத்தான் நாம் பார்த்துக் கொண்டுள்ளோம் என்பது முதலில் தெரியாது.
பாதிக்கப்படும் பகுதியில் உள்ள எல்லோரும் முதலில் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கைகழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், வாய்க்கு மூடி அணிதல், கைகுலுக்காது இருத்தல் முதலியன. எல்ல்லா இடங்களிலும் மக்களை நிறுத்தி காய்ச்சல் உள்ளதா எனப் பரிசோதித்தல். அவசியம்.
இவை அனைத்தும் முறையாக சீனாவில் மேற்கொள்ளப்பட்டன.
கொத்துக் கொத்தாக நோய்த்தாக்குதல்கள் இருப்பது ஒரு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட உடன் பள்ளிகள், தியேட்டர்கள், ஓட்டல்கள் மூடப்பட்டன வுஹான் மற்றும் அதற்கு அருகில் உள்ல நகரங்கள்தான் முழுமையாக 'லாக் டவுன்' செய்யப்பட்டன.
மொத்த மருத்துவ அமைப்பில் 50 சதத்தை சீன அர்சு 'ஆன்லைன்' தொடர்புக்கு மாற்றியது. மக்கள் நேரடியாக வந்து நோய்ப் பரம்பலைச் செய்வது இவ்வாறு தடுக்கப்பட்டது. உங்களுக்கு இன்சுலின் அல்லது இதய நோய் மருந்துகள் என எது தேவையோ அது அவர்கள் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டன.
ஒருவருக்குக் கொரோனா தாக்குதல் இருப்பதாக அவர் கருதினாரானால் அவர் காய்ச்சலுக்கான கிளினிக்கிற்கு அனுப்பட்டார். காய்ச்சல் அளவு, பிற நோய்க்குறிகள் ஆகியவற்றை அவர்கள் சோதிப்பார்கள். உங்கள் மருத்துவ வரலாற்றைக் கேட்பார்கள். நீங்கள் சமீபத்தில் எங்கேனும் பயணம் செய்தீர்களா, வைரஸ் தாக்குதல் உள்ள யாருடனாவது உங்களுக்கு ஏதும் தொடர்பு இருந்ததா என்றெல்லாம் கேட்பார்கள். பிறகு முழுமையாக உங்கள் உடலை 'ஸ்கான்' செய்து பார்ப்பார்கள், ஒவ்வொரு ஸ்கான் எந்திரமும் நாளொன்றுக்கு 200 ஸ்கான்களைச் செய்தன. ஒரு ஸ்கானுக்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தான்!. சில நேரங்களில் பகுதி ஸ்கான்கள் மட்டும் செய்யப்பட்டன. மேலைத் தேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு ஸ்கான் எந்திரம் ஒரு மணி நேரத்தில் ஒன்று அல்லது இரு ஸ்கான்களைத்தான் செய்ய இயலும். ஸ்காந்தான் செய்தாக வேண்டும். எக்ஸ்ரேக்கள் போதாது. பாதிப்புகள் அதில் தெரியாது. நாம் தேடும் குறிகள் உள்ளனவா இல்லையா என்பதை சிடி ஸ்கான்கள்தான் தெளிவாகக் காட்டும்.
நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டதாக ஐயம் உண்டானால். உங்கள் உடலிலிருந்து சோதனைக்குத் தேவையானவை சுரண்டி எடுக்கப்படும். சளி (ஜலதோஷம்), ஃப்ளூ, மூக்குச்சளி ஆகியவற்றுடன் மக்கள் வருவார்கள். ஆனால அவை கோவிட் அல்ல. உடல் குறிகளை வைத்துப் பார்த்தால் 90% காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்; சளி இல்லாத வரட்டு இருமல் உடையவர்களில் 70%, மூச்சுத் திணரல் அல்லது ஏதோ ஒரு சோர்வு என வந்தவர்களில் 30%, மூக்கு ஒழுகலுடன் வந்தவர்களில் வெறும் 4% மக்கள்தான் கோவிட் பாதிப்பு உடையவர்களாக இருந்தனர்.
சுரண்டி எடுக்கப்பட்டது சோதனை செய்து ரிசல்ட் நான்கு மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. சமீப காலம்வரை அமெரிக்காவில் கூட அது அட்லான்டா வுக்கு அனுப்பித்தான் சோதனை முடிவுகள் அறியப்பட்டு வந்தன என்பது நினைவுக்குரியது.
அதுவரை மக்கள் வீட்டுக்கு அனுப்படவில்லை. ரிசல்ட் வரும் வரை அவர்கள் அங்குதான் காத்திருக்க வேண்டும். அலைந்து திரிந்து அவர்கள் நோயைப் பிறருக்குக் கடத்துவது இவ்வாறு தடுக்கப்பட்டது.
சோதனை முடிவு 'பாசிட்டிவ்' ஆக இருந்தால் அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்பாதிப்பிலிருந்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்குத் தொடக்கத்தில் 15 நாட்கள் பிடித்தன. குறிகள் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டே நாட்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது எனும் நிலை விரைவில் ஏற்படுத்தப்பட்டது. இது மிக முக்கியமான ஒன்று. நோய்த்தாக்குதல் எளிமையாக ஏற்படக் கூடியவர்களுக்கு நோய் கடத்தப்படுவது இவ்வாறு தடுக்கப்பட்டது.
வைரஸ் தாக்குதல் உறுதியானால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். ஆரம்பத்தில் நோய்த் தொடக்கத்திற்கும் அவர்கள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் தொடங்குவதற்கும் 15 நாட்கள் இடைவெளி இருந்தது. விரைவில் அது வெறும் இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நோய் பரவுதல் இதன் மூலம் பெரிய அளவில் தடுக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்படல் என்பதற்கும் மருத்துவமனை சிகிச்சை என்பதற்கும் என்ன வேறுபாடு? நோய்க்குறிகள் கடுமையாக இல்லாத நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு (isolation centres) அனுப்பப்பட்டனர். 'ஜிம்நாசியம்கள்', 'ஸ்டேடியம்கள்' முதலியன 1000 படுக்கைகள் வரை அமைக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது அவர்கள் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அவ்வாறே நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தாக்குதல் மெலிதானது (Mild) என்றால் சோதனையில் நோய்த் தொற்று தெரியும். காய்ச்சல், இருமல் இருக்கும். நிமோனியாவாகக் கூட அது இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஆக்சிஜன் புகட்டுவது தேவைப்படாது. கடுமையான தாக்குதல் (Severe) என்றால் மூச்சு இழுத்து விடும் வீதம் மிக அதிகமாக இருக்கும். ஆக்சிஜன் 'சேசுரேஷன்' அளவு குறையும். அவர்களுக்கு உடன் ஆக்சிஜன் அளிக்கப்பட வேண்டும் அல்லது வென்டிலேடர் பொருத்தப்பட வேண்டும்.
ஆபத்தான நிலை (Critical) என்றால் சுவாசம் சாத்தியமற்றுப் போகும் நிலை மற்றும் பல உறுப்புக்கள் செயலிழக்கும் (respiratory failure or multi-organ failure) நிலை. இப்படியானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
மருத்துவமனைகளும் பலதரமாகப் பிரிக்கப்பட்டன. தலைசிறந்த மருத்துவமனைகள் அனைத்தும் 'கோவிட் 19' தாக்குதல் சிக்கிச்சைக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டன. உடனடி அறுவை சிகிச்சை தேவையில்லாதவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மற்ற மறுத்துவ மனைகள் வழக்கமான சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டன. பெண்கள் பிரசவத்துக்கு வருவார்கள், வேறு நோய்களால் நெருக்கடியான நிலையில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மருத்துவமனைகளில் தடங்கலின்று மருத்துவ சேவை தொடர்ந்தது.
புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த மருத்துவ மனைகள் கோவிட் தாக்குடல் சிகிச்சைக்காகச் சீர்திருத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்படுவதற்கான போதிய வசதிகள் இல்லாதபோது நீளமான சிகிச்சைக் கூடங்கள் சுவர்கள் எழுப்பிப் பிரிக்கப்பட்டு சன்னல்கள் பொருத்தப்பட்டன. இப்படியாக "அழுக்கான" மற்றும் "தூய" பகுதிகள் உருவாக்கப்பட்டன. மருத்துவர்கள் உள்ளே நுழைந்தவுடன் உடலை மறைக்கும் 'கவுனை" அணிந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். பின்னர் மாற்றுவழி மூலமாக வெளியே வந்து போட்டிருந்த 'கவுனை" களைந்துவிட்டுச் செல்லலாம்.
எபோலா வைரஸ் சிகிச்சை போலத்தான் இதுவும். ஆனால் உடல் திரவக் கசிவுகள் இல்லை என்பதால் அந்த அளவு கிருமி நீக்கம் இங்கு தேவையில்லை.
தீவிர சிகிச்சை எந்த அளவிற்குத் தரமாக இருந்தது எனும் கேள்விக்கு டாக்டர் எய்ல்வர்ட் சொல்வது: "மக்களின் உயிரைக் காப்பது என்பதில் சீனா மிகவும் அக்கறையுள்ள அருமையான நாடு. நமது ஊர்களில், சுவிச்சர்லாந்த் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளைக் காட்டிலும் சீனாவில் மருத்துவ மனைகள் சிறப்பாக உள்ளன. எத்தனை 'வென்டிலேட்டர்கள்' இங்கே உள்ளன என நாம் கேட்டால் "50" என்பார்கள். அம்மாடி! வியப்போம். எத்தனை ECMO (extracorporeal membrane oxygenation machines) உங்களிடம் உள்ளன என்றால் "ஐந்து" என்பார்கள். எங்கள் குழுவில் ஒருவர் புகழ்பெற்ற 'ராபர்ட் கோச்' நிறுவனத்தில் இருந்து வந்தவர். "ஐந்தா? ஜெர்மனியில் மூன்று இருந்தாலே அதிகம்!" என்றார் அவர்.
சரி, இந்த சிகிச்சைக்கெல்லாம் யார் பணம் செலுத்தினார்கள்? அரசு இது குறித்துத் தெளிவாக இருந்தது. சோதனைகள் இலவசம். கோவிட் 19 என்பது உறுதியானால் உங்கள் காப்பீட்டுத் திட்டம் முடியும்போது அரசு எல்லாப் பொறுப்பையும் உடன் ஏற்றுக் கொள்ளும்.
ஆனால் அமெரிக்காவில் இந்த காப்பீடுத் தொகை பெறுவது முதலான பிரச்சினைகளில் சிகிச்சை தாமதமாகும். மக்களுக்குக் கவலை ஏற்படும். "நான் மருத்துவரைச் சென்று பார்த்தால் அதற்கு 100 டாலர் ஆகும். நான் I.C.U வுக்கு அனுப்பப்பட்டால் ஐயோ அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" - இந்த சிந்தனையே ஒருவரைக் கொன்றுவிடும். அழிவிற்கு இட்டுச் சென்றுவிடும். 'முழுமையான நலப் பாதுகாப்பு' என இவர்கள் முழக்குவதும் உயிர் காப்பும் மோதிக்கொள்ளும் புள்ளி இது. அமெரிக்கா இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்."
மருத்துவத் துறை அல்லாதவர்கள் இதை எப்படி எதிர்கொண்டனர்?
தேசிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்றனர். "பாதிக்கப்பட்ட வுகான் மக்களுக்கு நாம் உதவ வேண்டும்" என்கிற எண்னம்தான் அவர்களிடம் வெளிப்பட்டது, ,"அட இந்த வூகான் நம்மை இந்த ஆபத்தில் சிக்க வைத்ததே" என அவர்கள் யாரும் நினைக்கவில்லை, பிறமாநிலங்களிலிருந்து வூகானுக்கு 40,000 வாலண்டியர்கள் வந்தனர். இவர்களில் பலர் பணி நிமித்தமாக அல்லாமல் தொண்டுள்ளத்துடன் பங்கேற்றனர்.
ஒரு நள்ளிரவில் வூகானை எங்கள் ரயில் அடைந்தது. நாங்கள் இரங்கத் தயாரானோம். இன்னொரு குழுவும் அதில் வந்திருந்தது. அது உதவி புரிய வந்த ஒரு மருத்துவக் குழாம். வூகானில் முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு எப்படி உணவு கிடைத்தது?
15 மில்லியன் - ஒன்றரைகோடி மக்கள். அவர்கள் அனைவரும் 'ஆன் லைனில்' உணவு ஆர்டர் பண்ணினார்கள். அத்தனை பேர்களுக்கும் சரியாக உணவு கொண்டுவந்து சேர்க்கப்பட்டது.
"சில நேரங்களில் வரும் உணவில் ஏதாவது ஒரு 'ஐட்டம்' குறையும். ஆனால் எனக்கொன்றும் எடை குறையவில்லை." - என்றார் ஒரு பெண்.
அரசு ஊழியர்கள் அவர்களது பணி தவிர மற்ற வேலைகளையும் செய்தனர். ஒரு நெடுஞ்சாலை ஊழியர் காய்ச்சல் இருக்கிறதா எனச் சோதிப்பார். அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொண்டு வந்து தருவார். ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் எவ்வாறு பாதுகாப்பு 'கவுனை' அணிந்துகொள்வது என மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்கள் என்ன தொற்றுத் தடுப்பு குறித்துப் படித்தவரா?" எனக் கேட்டேன். "இல்லை. நான் இங்கே 'ரிசப்ஷனிஸ்ட்'. இதை நானாகக் கற்றுக் கொண்டேன்" என்றார்,
தரவுகளைக் கையாளவது பெரிய பிரச்சினை. 70,000 நோயாளிகள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன என்றால் பள்ளிக் கட்டிடங்கள் மூடப்பட்டன என்பதுதான். மற்றபடி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடந்தன.
சிசுவான் எனும் பகுதிக்குப் போனோம். மிகப் பெரிய பரப்பு. கிராமப்புறம். ஆனால் 5G தொடர்புகள் இருந்தன. நாங்கள் தலைநகரில் இருந்தோம். ஒரு அவசர உதவி மையம் அது. மிகப் பெரிய ஒளித் திரை அங்கு அமைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ளும் பிரச்சினை அவர்களுக்கு. தலைநகர அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டும் பிரச்சினை தீரவில்லை. எனவே அவர்கள் அந்தக் குழுவின் தலைமைக்கு தொலை பேசினர், அவர் 500 கி.மீ தொலைவில் இருந்தார். தொலைபேசியில் வீடியோ காலில் பேசினார். அவர்தான் ஆளுநர்.
Weibo, Tencent, WeChat முதலான செயலிகளின் ஊடாக துல்லியமான தகவல்கள் அவ்வப்போது கேட்பவர்களுக்குத் தரப்பட்டன. கூடவந்த நமது ஊடகவியலாளர்கள், "இதெல்லாம் நம்ம நாட்டில் நடக்காது" என அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தனர்.
சில பத்திரிகையாளர்கள், "இது ஒரு சர்வாதிகார நாடு. மக்கள் பயந்து கொண்டு வேலை செய்கிறார்கள்". அபத்தம். அமைப்புக்கு அப்பாற்பட்ட பலரிடமும் பேசினேன். ஓட்டல்கள், ரயில்கள் இங்கெல்லாம் சந்திப்பவர்களிடம் பேசினேன். ஒரு போர்க்கால நடவடிக்கையைப் போல செயல்பட அவர்கள் திரண்டிருந்தனர். தாங்கள் முன்னணியாளர்கள். மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்கள் என்கிற உணர்வுடன் அவர்கள் செயல்பட்டனர். சீனர்களை மட்டும் பாதுகாப்பது என்பதல்ல. உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் கடப்பாட்டுடன் அவர்கள் இருந்தனர். வைரஸ் அச்சம்தான் அவர்களின் தூண்டு சக்தியாக இருந்தது.
படிப்படியாக ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி அவர்கள் மீண்டும் வாழ்வைத் தொடங்கிக் கொண்டுள்ளார்கள். சில இடங்களில் பள்ளிகள் இன்னும் மூடிக் கிடக்கின்றன. சில இடங்களில் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் உற்ற்பத்தி செய்யப்படுகின்றன. செங்டு வில் 5 மில்லியன் புலம் பெயர் தொழிலாளிகள் உள்ளனர். வேலைக்கு வருபவர்கள் ஒரு மருத்துவரிடம். 'ரிஸ்க்' இல்லை என ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். அது 3 நாட்களுக்குச் செல்லும். பின் ஒரு ரயிலைப் பிடித்து நீங்கள் வேலை செய்யும் இடத்திற்குப் போக வேண்டும். அங்கே இரண்டுவாரம் நீங்களாக குவாரண்டைனில் இருக்க வேண்டும். உங்கள் உடல் வெப்பம் முதலியன் ஃபோன் மூலமே நேரடியாகவோ தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
பாரம்பரிய மருந்துகளும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை சில எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில கலவைகள்தான். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் என அவர்கள் அநினைக்கிறார்கள்.அவை வைரல் எதிர்ப்பு மருந்துகள் அல்ல. ஆனால் அது அவர்களுக்குப் பழக்கமான மருந்து. அவர்கள் அதன் மூலம் நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள்.
கைகளைக் கிருமிநீக்கம் செய்யப்பயன்படுபவை குவிந்து கிடக்கின்றன. முகமூடியை நாமும் அணிந்துகொள்ள வேண்டும். அது அவர்கள் அரசின் கொளகை. நாங்கள் நோயாளிகளைச் சந்திப்பதில்லை. மருத்துவமனைகளின் ஆபத்தான பகுதிகளுக்கும் (hospital dirty zones) செல்வதில்லை.
சமூக ரீதியாகவும் நாம் அவர்களுக்குத் தொலவாக உள்ளவர்கள். பேருந்துகளில் வரிசைக்கு ஒருவர் என அமர்ந்து கொள்கிறோம். ஓட்டல் அறைகளுக்குச் சாப்பாடு வந்துவிடுகிறது. இல்லாவிட்டால் ஒரு மேசையில் ஒருவர் மட்டும் அமர்ந்து சாப்பிட வேண்டும். கருத்தரங்க அறைகளிலும் அப்படித்தான். ஒரு மேசையில் ஒருவர். மைக் மூலம் பேசிக் கொள்ளலாம். அல்லது குரலை உயர்த்தி சத்தம் போட்டுப் பேசலாம்.
அதனால்தான் நான் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறேன். ஆனால் என்னை சோதித்துக் கொண்டேன். எனக்கு கோவிட் இல்லை. சோதித்துப் பார்த்துவிட்டேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...