Headlines News :
முகப்பு » , , , , , » 1948 நவம்பர் 15ல் : நாடற்றவரானோம் - (ஈரோஸ் 1985 வெளியீடு)

1948 நவம்பர் 15ல் : நாடற்றவரானோம் - (ஈரோஸ் 1985 வெளியீடு)

மலைகளில் உரமானோம் தேநீரில் இரத்தமானோம் ஆனாலும் இந்த மண்ணில்  அந்நியராக்கி விட்டார் ஆதலால் எமது மண்ணை உடைமையாய் மாற்றுவோம் போராடுவோம்
ஈழப்புரட்சி அமைப்பு EROS 
சற்று என்னைக் கவனியுங்கள். முதுகில் கனக்கும் கூடையுடனும் கையில் பூட்டிய விலங்குடனும் உங்கள் முன்னால் வந்து நிற்கும் என்னைக் கவனி யுங்கள். எனது எதிரிகள் நான் பேசக்கூடாது என்பதற்காக முப்பத்தேழு வருடங்களுக்கு முன் எனது வாய்க்குப் பூட்டிய பூட்டையும் கவனித்திருப்பீர்கள். ஆயினும் என்னால் உங்களுடன் பேசமுடியும். எனது உணர்வுகளை நான் ஓசையின்றிப் பேசப் போகி றேன், எனது கதையை, எனது எதிர்காலத்தைப் பற்றியே நான் சொல்லப் போகிறேன். 

நாள் தோறும் நீங்கள் பருகும் தேநீரில் எங்கள் உழைப்புத்தான் ஊறிப்போயிருக்கின்றது. நாங்கள் வருந்தி உழைத்தது வருடாவருடம் இலங்கைத் தீவின் தேசியவருமானத்தில் 400 கோடி ரூபாவென பதிவாகி வருகின்றது. ஆனால் எங்களில் பலருக்கு மாதமொருமுறை ஊதியமாய்க் கிடைத்து வருவது 100 ரூபாய் மட்டுந்தான் இந்தத் தொகையின் எங்கள் இருப்பிடங்களின் இலட்சனாமோ நூறு சதுர அடி விஸ்தீரணத்தில் தான் அடங்கி இருக்கிறது. இதற்குள் தான் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றேம். 

நாங்கள் தொழில் செய்யும் தோட்டத்திலிருந்து வெளியே செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு சிங்கள அதிகாரி கள் தான் எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நமது உறவினர் கூட எம்மைத் தேடி வருவதாயிருந்தால் இந்த நிர்வாகிகளே சம்மதம் கொடுக்க வேண்டும். ஆட்சியதிகாரம் எம்மீது மேற்கொள்ளும் எந்தவித மிலேச்சத்தனத்துக்கும் எதிராக நாங்கள் வேலை நிறுத்தம் செய்வதோ, ஊர்வலம் எடுப்பதோ தேசத்துரோகமெனச் சட்டமியற்றப்பட்டுள்ளது. 

எங்கள் பிள்ளைகள் படிப்பதற்கென்று பாடசாலைகள் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவற்றில் படிப்பு என்பது மருந்திற்கும் இல்லை. "கூலிக்கு வந்த உங்களுக்கு படிப்பெதற்கு'' என்பது தான் பாடவிதானமாய் அமைந்துள்ளது. எங்கள் மத்தியில் 60 சதவீதமானோர் கையெழுத்திடவும் முடியாதவர்களாய் காணப்படுகின்றனர். 

எங்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. சங்கத் தலைவர்கள் மாதமொருமுறை 10/- ரூபாயை சந்தாப்பணமாக வசூலிக்க எங்களிடம் வந்து போவர். எங்களது சந்தாப்பணத்தில் சுகமாக வாழும் இவர்களால் எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு, எங்களில் எவரும் இறந்து போய்விட்டால் சவப்பெட்டிக்கும் அன்றைய செலவுக்கும் இவர்கள் செய்யும் பண உதவி ஒன்றுதான். 

வருடாவருடம் 400 கோடி ரூபாயை வருமானமாக நாட்டுக்கு உழைத்துக் கொடுக்கும் நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளல்லவென்று சட்டக்காகிதத்தில் எழுதிவைத்துள்ளனர். நாங்கள் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் உரியவர்களல்ல. நாங் கள் நாடற்றவர்கள் என்று நாமமிடப்பட்டவர்கள். 

எமக்கிழைக்கும் தீமைகளை எடுத்துச் சொல்ல அரசியல் அரங்கில் வாக்குரிமையும் எமக்கியே, மொத்தத்தில் நாங்கள் நடமாடும் பிணங்களாய் இனவெறியாளரால் மாற்றப்பட்டிருக்கிறோம். 

எமது வருகை 
நாங்கள் இங்கு வந்த கதையையும், மேலும் எமக்கு நேர்ந்த கதியையும் அடுத்து நான் சொல்ல விரும்புகிறேன். 

இலங்கைத் தீவின் மலைப்பகுதியில் சிங்கப்பிட்டியா என்றொரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 1823 இல் கோப்பிச் செடியை பரீட்சார்த்தமாக வளர்ப் பதற்கு விரும்பியிருந்தார் ''ஹென்றி போட்'' என்ற பிரித்தானியர். இவர் தனது விருப்பத்தைச் செவ்வனே செய்ய எங்களில் 14 பேரை தமிழகத்திலிருந்து கொண்டு வந்திருந்தார். இதுவே எமது ஆரம்ப வருகையாய் அமைந்திருந்தது. இங்கு வந்து நாங்கள்பட்ட துன்பத்தில் 600 பவுண்கள் அவருக்கு இலாபமாய்க் கிடைத்திருந்ததாம். 

இவரது முயற்சி மேலும் பலரைக் கவர வைத்தது. பலதனியாரும் உயர் அதிகாரிகளும் கோப்பிச் செய்கை யில் கவனம் செலுத்தினர். கிழக்கிந்திய கம்பெனியும் இம் முயற்சியில் விரும்பி இறங்கியது. இவர்கள் தமது இலாபத்துக்காக எங்களில் பலரையும் தமிழகத்திலி ருந்து இறக்குமதி செய்தனர். 1850 வரை எங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் உடலுழைப்பிற்காகக் கடத்தி வரப்பட்டனர். கோப்பிச்செய்கை, தும்பறை, கம்பளை, பேரதெனியா பகுதிகளில் வேகமாகப் பரவியது. நாங்கள் சிந்திய வியர்வை 1880 இல் 100 கோடி ரூபாய் வருமானமாக வியாபித்திருந்தது. 

கோப்பிச் செய்கை செழித்து வளர்ந்த இந்தக் காலத்தில்தான் இச்செடி மீது நோய் ஒன்று தொற்றிக் கொண்டது. இது விரைவாகப் பரவி கோப்பிச் செய்கைக்கே ஆபத்தைக்கொடுத்தது. இதனால் 1880 இல் கோப்பி யுகம் முடிவுக்கு வந்தது. 

இந்தக் காலத்தில்தான் கோப்பிக்குப் பதில் தேயிலையை நாட்ட பலரும் ஆர்வம் கொண்டனர். ஜேம்ஸ் டெய்லர்'' என்பவர் 1867 இல் 50 ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிர் செய்து வெற்றியீட்டியிருந்ததே கோப்பிக்குப் பதில் தேயிலையைப் பயன்படுத்த பலரையும் தூண்டி விட்டது. இச்செய்கை ஹற்றன், நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, இரத்தினபுரி  முதலான இடங்களுக்குப் படர்ந்தது. சில இடங்களில் இரப்பர் செய்கையும் ஆரம்பமானது. 

இவற்றிற்கெல்லாம் தொழிலாளர் தேவை அதிகரிக்கவே எங்களில் மேலும் பலரை ஆசைவார்த்தை சொல்லி அழைத்து வந்தனர் பிரித்தானியர். 1939 இந்தியாவில் பயிற்றப்படாத தொழிலாளர் வெளியேறத் தடை விதிக்கும் வரை நாங்க இங்கு கொண்டு வரப்பட்டோம். இந்த ஆண்டில் மலையகம் முழுவதுமாக எங்களில் 10 இலட்சம் பேர் இருந்ததாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தக் காலத்தில் நாங்கள் செய்த அயராத உழைப்பு நாட்டு வருமானத்தில் 80% ஆக உயர்ந்திருந்தது. 

எமது உரிமைகள் பறிபோயின 
நாட்டு வருமானத்தில் 80% ஐ ஈட்டிக் கொடுத்து வந்த நாங்கள் நாளை இந்த நாட்டையே ஆட்டிப் படைத்து விடுவோம் என அஞ்சிய, சிங்கள இனவெறியர் எமது உரிமைகளை மெல்ல மெல்ல பறிக்க முயன்றனர். 1936 இல் அமைக்கப்பட்ட தனிச்சிங்கள மந்திரிசபையை எமக்கெதிராக முதலில் பிரயோகிக்க முனைந்தனர். இந்தச்சபையை அமைத்த அடுத்த ஆண்டே, உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களித்து வந்த எமது உரிமை பறிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், 1948 இல் பிரித்தானியர் சுதந்திரம்' கொடுத்தபோது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட டி. எஸ். சேனநாயகா, அதே ஆண்டு நவம்பர் 15 இல் எமது பிரஜா உரிமையையும் பிடுங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் இலங்கை முழுவதிலும் 30 இலட்சமாக இருந்த தமிழ் பேசும் மக்களில் 10 இலட்சம் பேரான எமக்கு இந்தக் கதி ஏற்பட்டது. நாடற்றவரான எங்களுக்கு வாக்குரிமையும் கிடையாதென்று அடுத்த ஆண்டே இன்னொரு சட்டமும் இயற்றப்பட்டது. 

எமது அடிப்படை உரிமையும், அரசியல் உரிமையும் முற்றாக களையப்பட்ட கையோடு, வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த எம்மினத்தின் மீது இனவெரியானது தனது கவனத்தை திசை திருப்பி இருந்தது. 56 இல் அமுலுக்கு வந்த சிங்களம் மட்டும்'' சட்டத்தைப் பற்றியே இங்கு நான் சொல்ல வருகிறேன். இந்தச் சட்டம் அரசசேவையில் - பட்டிருந்த ஏராளமான தமிழ் மக்களை வேலை இழக்கச் செய்திருந்தது. அதை அடுத்து 70 களில் உயர் கல்வி யில் இனரீதியான தரப்படுத்தல் திணிக்கப்பட்டது. இந்தத் திணிப்பு மாணவர் மத்தியில் தமது எதிர்காலத்தைச் சூனியமாக்கியது. 

நிலங்களும் சுவீகரிக்கப்பட்டன 
இவ்விதமாக, எம்மினத்தின் உரிமைகளை பறித் தெடுத்தவண்ணம், எமது வாழ் நிலங்கள் மீது கவனம் செலுத்தினர். அபிவிருத்தி என்ற பெயரில் எமது நிலங்களை படிப்படியாக அபகரிக்க ஆரம்பித் தனர். முதன் முதலில் (1944 இல்) முல்லோயா தோட்டத்தில் தொழிலாளரை விரட்டி சிங்களவரை குடியிருத்த முயற்சி செய்தனர். இந்த முயற்சி முதலில் தோல்வியில் முடிந்திருந்தாலும் 72இல் மாற்றுப்பயிர் செய்கை "நட்சா'' என்ற போர்வையில் தோட்டங் களில் புகுந்த போது இது சாத்தியமாயிற்று. இந்தத் திட்டங்களினூடாக தோட்டங்களை சுவீகரித்து எங்களை விரட்டியடித்து சிங்களவர்களை குடியமர்த்தினர். நாங்கள் இருந்த இருப்பிடங்களைச் சுற்றியே சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்போது எங் களில் பலருக்கு நகரவீதிகளே வசிப்பிடங்களாய் மாறின. பிச்சை எடுப்பதே எங்கள் தொழிலாய் மாற்றமடைந் தது. சிறிமா ஆட்சியில், எமக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஜே. ஆர். வந்ததும் ' நட்சா' திட்டமூடு மீண்டும் தொடர்ந்தது. 

“யுனெஸ்கோ” நிறுவனத்தின் நிதியுதவியில் வளர்ந்து சென்ற '' நட்சா'' திட்டம் எங்களில் பலரை மேலும் விரட்டியது. 

எங்களுக்கிவ்விதம் நடந்து வருகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையும், அம்பாறையும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வந்தது. இந்த இடங்களில் சிங்களக் காடையரை குடும்பங்களாக இருத்தி ஆக்கிரமிப்புகளை நிறைவேற்றி வந்தனர்.

இந்தக் கூட்டம் 58 இலும், 77 இலும் 81 இலும், 83 இலும், எங்கள் மீது சீறிப்பாய்ந்தது. எண்கள் வீடுகள் தீயிடப்பட்டன, ஏராளமானோர்  கொலையுண்டனர், பல பெண்கள் மானமிழந்தனர். ஆட்சியாளரே முன்னின்று நடத்திய இந்தக் கொடுமையை “கலவரம்” என்று கூறி மூடிமறைத்தனர்.

நாட்டை விட்டு விரட்டப்பட்டோம் 
இவ்வாறு நாங்கள் குடியுரிமையும் வாக்குரிமையும், நிலவுரிமையும் மொழியுரிமையும் இழந்த நிலையிலேயே நாட்டை விட்டும் விரட்டப்பட்டோம்.

இலங்கைப் பிரதமர் சிறிமாவும் இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் 1964இல் சந்தித்துப் பேசிய பேச்சுக்களின் விளைவாக எங்களை நடைப்பிணங்களாக நாடுகடத்தும் ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகி இருந்தது. சிறியா. சாஸ்திரி ஒப்பந்தமானது எங்களில் 9,75,000 பேரை பங்கு போடுவது பற்றித் தீர்மானித்திருந்தது. இதன் படி எங்களில் 3,00,000 பேரை இலங்கை ஏற்பதென் றும் 5,25,000 பேரை இந்தியா ஏற்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மீதியாயுள்ள 1,50,000 மக்களையும் பற்றி 74இல் தீர்மானிப்பதெனவும் இங்கு பேசப்பட் டது. 74இல் இந்திராகாந்தியும், சிறிமாவும் செய்து கொண்ட சந்திப்பில் மீதி மக்களை பாதிப்பாதியாகப் பிரித்தெடுப்பதென ஒப்பந்தம் செய்தனர். 

ஒப்பந்தமாகிய பின்னர் எங்களிடம் ஒரு விண்ணப்பப்படிவத்தைக் கொடுத்திருந்தனர். அதில் எங்கள் விருப்பம் இந்தியா செல்வதா அல்லது இலங்கையிலி ருப்பதா எனக்கேட்கப்பட்டிருந்தது. எங்களில் 7 இலட்சம் பேர் இலங்கையில் இருப்பதையே விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர். இது ஆட்சியாளரின் திட்டங்க ளுக்கு மாறாக வரவே எங்கள் மீது சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கினர். 

இந்தியாவில் எங்களுக்கு சுகமான வாழ்க்கை கிடைப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தபடியே எமது வாழ்விடங்களைப் பறித்து சிங்களக் குடியேற்றங்களைச் செய்யத் தொடங்கினர். இதனால் நாங்கள் இருப்பிடங்களை விட்டு ஓடவேண்டியதாயிற்று. 

1981 இல் ஜெயவர்த்தனா தலைமையில் நடந்த படுகொலைகள் இவர்களது சதி நடவடிக்கைகளின் உச்சமாய் அமைந்திருந்தது. அந்த நேரத்தில் சிறிமா = சாஸ்திரி முப்பந்தம் காலாவதியாகி இருந்தது. இதனே நீடிக்க வேண்டுமென்பது ஜெயவர்த்தனாவின் எண்ண மாய் உருவெடுத்தது - இந்தியாவிற்கு ' தப்பி ஓடுங்கள்' என்ற கோசமுடன் ஆட்சியாளர்களின் காடையர்கள் தோட்டங்களுக்குள் புகுந்தனர். 150 பேருக்கு மேற் பட்டவர்களைக் கொன்று குவித்தனர். 2 கோடி ரூபா பொருட்கள் நாசமாக்கப்பட்டன. பெண்களின் கற்பைச் சூறையாடினர். இந்தக் கலவரத்தால் 40,000 த்திற்கும் அதிகமானவர்கள் அகதிகளாகிப் பரிதவித்தனர்.

இவ்விதமாகக் கொலைவெறியாடிய ஜெயவர்த்தனா சூடுதணியுமுன்பே இந்தியா சென்று பிரதமர் இந்திரா வைச் சந்தித்து ' மக்கள் இந்தியா வர விரும்புகின்றார் கள்; 81 உடன் முடிவடைந்த ஒப்பந்தத்தை நீடிப்போமென' ' வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு பாரதப் பிரதமர் மறுக்கவே அதிருப்தியுற்றவராய் நாடு திரும் பினார் ஜெயவர்த்தனா. 

ஒப்பந்தப்படி எங்களில் சுமார் 4 இலட்சம் பேர் இந்தியாவிற்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர். இப்போது இலங்கையில் தொழிலாளராயிருக்கின்ற 6,37,000 பேரில் சுமார் 2 இலட்சம் பேருக்கே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எமது மக்களில் மலையகத்தைச் சார்ந்தவர்களை நாடுகடத்தியது ஒரு புறமிருக்க வடபகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களில் 1 லட்சம் பேரை ராணுவத்தை ஏவிவிட்டு இந்தியக் கரைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். 

இத்தனையும் அடுக்கடுக்காய் நிகழ்ந்துவந்த போது நாங்கள் காட்டிய எதிர்ப்புகள் சிலவற்றை இங்கு நான் சொல்ல விரும்புகின்றேன். 
* எமது நிலங்களைச் சிங்கள மயமாக்க முல்லோயாவில் முயன்றபோது கூட்டமாய்ச் சென்று கடுமை யாய் எதிர்த்தோம். அந்த இடத்தில் பொலிசார் சுட்டதில் கோவிந்தனை இழந்த போதும் நாங்கள் எமது மண்ணைக்காக்கத் தயங்காது நின்றோம். எமது உறு தியைக் கண்டு கலங்கிப் போன அன்றைய ஆட் சியாளர்கள் தமது முயற்சிகளை கைவிட்டு பின்வாங்கிக் கொண்டனர்.

* மொழி உரிமையை இழந்த நிலையில் 58 இல் 'ஸ்ரீ'' சட்டம் வந்தபோது, பொகவந்தலாவையில் நாங்கள் காட்டிய எதிர்ப்புகள் காலத்தால் அழியாத வை, அப்போது நாங்கள் செய்த எதிர்ப்பைத் தாங்க முடியாது பிரான்சிஸ் , ஐயாவு ஆகிய இருவரையும் பொலிசார் சுட்டு வீழ்த்தினர். இந்த ஈனச் செயலைக் கண்டு எங்களில் 5,000 பேர் கையில் அகப்பட்ட கருவி களுடன் பொலிசாரையும், இராணுவத்தினரையும் சுற்றி வளைத்தனர். எமது ஆத்திரத்தைக் கண்டு அஞ்சிய இராணுவத்தினர் இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர்.

* 76இல் டெவன் தோட்டத்தைச் சுவீகரிக்க ஆட்சி யாளர் வந்தபோது அதைத் தடுத்து நிறுத்த நாங்கள் திரண்டோம். அப்போதும் பொலிசார் சுட ஆரம்பித் தார்கள். சிவனுலட்சுமணன் அந்த மண்ணிலேயே உயிர் துறந்தான்.

* இராகலைத் தோட்டத்தில் 83 இல் எம்மை விரட்ட சிங்களவர் கூட்டம் திரண்டு வந்தபோது அதை எதிர்த்து நின்றேம். பின்வாங்கிச் சென்ற இனவெறிக் கூட்டம் மறு நாள் எங்கள் குணசீலனை அடித்துக் கொன்றது.

* எங்களுக்கிழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து கடந்த ஆண்டு ஏழு லட்சம் தொழிலாளர் பத்து நாட் களாய் வேலை நிறுத்தம் செய்து வந்திருந்தனர். ஆட் சியாளர்களிடம் சம்பள உயர்வு கோரியும், பாரபட்சங்களை நீக்கும்படியும் நாங்கள் கோரிக்கைகளை விடுத்திருந்தோம். மலையகம் முழுவதும் ஒன்று திரண்டு செய்த இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகக் கணிக் கப்பட்டிருந்தது. இங்கு எமது கோரிக்கைகள் முற் நாக நிறைவேற்றப்படாத போதும் எங்கள் ஒற்றுமை ஒருவகை மிரட்டலாய் அமைந்திருந்தது.
ஒரு இனத்தின் இரு தலைமைகள் என்ன செய்தன?
இவ்வாறு நாங்கள் எமது மண்ணுக்காக-இழந்த உரிமைக்காக எமது உயிரையும் துறந்து போராட முன்வந்த போதெல்லாம் எமது தலைமை என்ன செய்தது என்பதை இனி நான் சொல்ல விரும்புகின்றேன். 

ஆட்சியாளர்கள் தமிழ் பேசுவோர்' என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே அடக்குமுறைகளில் இறங்கி இருந்தனர். இவர்களின் இறுதித் தீர்வில் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதமே கிடையாது. ஆனால் இந்த மக்களை இணைய விடாது தடுத்து வைத்து அழித்து வந்தது இவர்கள் தந்திரம். இந்த சூழ்ச்சிக்குப் பலியானவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியாகி 76 இல் தமிழீழம்' கோரி தனித்து நின்றனர். வடக்கையும் கிழக் கையும் மாத்திரம் இணைத்து மலையக பண்ணை முற்குக ஒதுக்கிய இவர்களின் கோஷத்தை பின்னால் வந்த விடுதலை இயக்கங்கள் பின்பற்றி நின்றன. இவர்கள் பார்வையில் மலையக மண்ணின் குத்தகைக்காரர் தொண் டமானாக பதிந்திருந்தது. 

இவ்வாறாக ஒரே இனத்தின் இரண்டு தலைமைகள் வெவ் வேறு திசைகளில் தமது இயலாமையை வெளிக்காட்டி உள்ளன. இவர்கள் இருவரும் எமது உணர்வுகளைத் திசைதிருப்புவதிலும் மழுங்கடிப்பதிலுமே கவனம் செலுத்தினர். ஆட்சியாளருடன் நட்புப்பூண்டு எமது எதிர்காலத்தை சுபீட்சமாக்கலாமென இவர்கள் எமக்குப் போதித்து வந்தனர். இவர்கள் போதனையின் போலித்தனங்களையும் இவர்கள் இயலாமையின் வெளிப்பாடுகளையும் இப்போது நாங்கள் இனங்கண்டு விட் டோம். இனியும் இவர்களின் பின்னால் செல்வது எமக்கே அபாயமாகும். 

எங்கள் பிரகடனம் 
இதனால் இப்போது நாங்கள் வடக்கும், கிழக்கும், மலையகமும் இணைந்த வாழ்வையே எமது எதிர்கால மாய் ஏற்று நிற்கிறோம். வடக்கும், கிழக்கும், மலையகமும் இணைந்த எமது வாழ்வை நாம் 'ஈழம்'' என்கி றோம். இதை மீட்பதே எமது பணியாய் பிரகடனம் செய்கிறோம்.

  • நாம் ஈழவர்
  •  நமது மொழி தமிழ் 
  • நம் நாடு ஈழம் 
இப்பிரசுரமானது 15 நவம்பர் 1985 அன்று ஈழமெங்கும் நடைபெறும் ஹர்த்தாலையொட்டி வெளியிடப்படுகிறது.
ஈழத்தில் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முழு அடைப்பு நடைப்பெற்றதை ஒட்டி வெளியிடப் பட்ட சிறு வெளியீட்டின் ஒளியச்சு. இச்சிறு வெளியீட்டைத் தயாரிக்க அமைக்கப் பட்டக் குழுவில் முக்கிய பங்கு வகித்து எழுதியவர் கி.பி.அரவிந்தன். இவ்வெளியீட்டில் இடம் பெற்றுள்ள ஓவியத்தை வரைந்தவர் ஓவியர் அரஸ். இவ்வோவியம் சுவரொட்டியாக அச்சிடப்பட்டு ஈழம் முழுவதும் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தககது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates