Headlines News :

மலபார் தமிழர் - என்.சரவணன்

இலங்கைத் தமிழர்களை “மலபாரிகள்” என்று தான் மேற்கத்தேய உலகம் 16-18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ காலத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் அறிந்தும் வைத்திருந்தார்கள். அவர்களின் ஆவணங்கள், அறிக்கைகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் மட்டுமன்றி அவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் ஆதாரம் காட்டி இலங்கைத் தமிழர்கள் அனைவருமே கேரள மலபாரிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் என்று நிறுவ முனைகிற பல்வேறு சிங்கள எழுத்துக்களையும், ஆய்வுகளும் இன்றும் தொடர்கின்றன.

இப்படி திட்டமிட்டே புனைந்து பரப்புகின்ற கதையாடல்களைத் திருப்பித் திருப்பி சிங்களவர்களிடம் கொண்டு சேர்த்து வருகின்ற காரணத்தினால் அதை சிங்கள சாதாரண மக்கள் நம்பவும் செய்கிறார்கள்.

இந்த ‘மலபார் தமிழர்’ என்கிற அடையாளம் எப்படி வந்தது. அதன் பூர்வீகம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையைத் தேட வேண்டியிருக்கிறது.

தென்னிந்திய மூவேந்தர் ஆட்சிகளாக சேர, சோழ, பாண்டிய அரசுகளைக் குறிப்பிடுவோம். இந்த மூன்றும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிரதேசமாகவே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. இவற்றில் சேர நாடே பிற்காலத்தில் கேரளமாக ஆகியது. 

மலபார் என்கிற பெயரானது அன்று அப்பகுதியுடன் வணிகத் தொடர்பைக் கொண்டிருந்த அரேபியர்களால்  வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. சேர் பொன்னம்பலம் இராமநாதன் இப்படி விளக்குகிறார்.
“மலபார் என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 'மலைவாரம்' (மலைப்பகுதி) பகுதியாகும். மேற்கு இந்தியாவுக்குச் வந்து சேர்ந்த டச்சுக்காரர்கள் இலங்கைக்கு வந்த போது இங்குள்ள தமிழர்கள் மலபார் கரையோரப்பகுதியில் வாழ்ந்த அதே இந்துக்களை ஒத்திருப்பதைக் கண்டனர். இந்தியாவின் மலபார் கரையோரத்தில் அவர்கள் கண்ட தமிழர்களை “மலபார் குடியேறிகள்” (Malabar Inhabitants) என்றே அழைத்தனர். அதாவது மலபார் கடற்கரையில் இருந்து குடியேறியவர்கள் என்று பொருள். ஆனால் இலங்கையின் தமிழர்கள் கிழக்கு கடற்கரையிலிருந்து வந்தவர்கள் (டச்சுக்காரர்களால் கோரமண்டல கடற்கரை என்று அழைக்கப்படுகிறார்கள்) மற்றும் மலையாள மலைவார மக்களிடமிருந்து இவர்கள் மொழியாலும் சமூக அமைப்பாலும் வேறுபட்டவர்கள். எனவே, தமிழர்களை “மலபார்ஸ்” (Malabars) என்று அழைப்பது  பிழையாகும் . ஆனால், ‘மலபாரிகள்’ பண்டைய காலங்களில் தமிழர்களிடமிருந்து ஒரு தனித்துவமான இனமாக கருதப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” (1)

“மலபார்” பூர்வீகம்
மலபார் மாவட்டம் (Malabar District) இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது சென்னை மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டமானது சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் சென்னை மாநிலத்திற்குட்பட்ட ஒரு மாநிலமாக இருந்தது. இம்மாவட்டமானது மேற்கே அரபிக்கடலையும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலையையும் வடக்கே தென்கனரா மாவட்டத்தையும் தெற்கே கொச்சி சமஸ்தானத்தையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. மலபார் என்பதற்கு மலைநாடு என்று பொருள்.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இந்தியாவின் தென் மேற்கு கரையோரப் பிரதேசமான கேரளாவில் தற்செயலாக வந்திறங்கினார்கள். மலபார் துறைமுகம் அப்போது முஸ்லிம் வணிகர்கள் வந்து போகும் பிரதான துறைமுகப் பட்டினமாக இருந்தது. அரேபியரின் கடலாதிக்கத்தை முறித்து மலபாரைத் தன்வசப்படுத்தும் முயற்சியில் போர்த்துக்கேயர் இறங்கினர். அப்போது மலபாரை ஆண்டு வந்த இந்து மன்னன் சமுத்ரி முஸ்லிம் இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு போர்த்துகேயரை விரட்டி விட்டான். 1498ல் போர்த்துக்கேயர் கலிகட்டுக்கும் 1502ல் கொச்சியை வந்தடைந்தார்கள். ஆட்சியை கைப்பற்றியபின் கேரளா மலபார் அரசு, கொச்சி அரசு, திருவாங்கூர் அரசு என மூன்றாக பிரிந்தது.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்தது 1505இல். மலபாரில் பேசப்பட்ட அதே தமிழ் மொழி யாழ்ப்பாணப் பட்டினத்திலும் பேசப்பட்டதால் அவர்கள் தமிழ் மக்களை “மலபாரிகள்” என்றும், அவர்கள் பேசும் மொழியை “மலாபார் மொழி” என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். அதையே சகல நிர்வாகப்பதிவு செய்தார்கள். அதையே அடுத்தடுத்து வந்த மேற்கத்தேய காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களான ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களும் பின் பற்றினார்கள். இதே காலப்பகுதியில் நூல்களை எழுதிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மதகுருமார் என்போரும் கூட “மலபார்”, “மலபார் மொழி” என்றே பதிவு செய்தார்கள்.

போர்த்துக்கேயர் தமிழையும், மலையாளத்தையும் மலபார் மொழியென்றே அழைத்தார்கள்.  (2)

யாழ்ப்பாணத்தில் சேரர்களினதும், மலையாளிகளினதும் குடியேற்றம் பற்றிய விளக்கமான விபரங்களை கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை எழுதிய  “யாழ்ப்பாணக் குடியேற்றம்” என்கிற நூலில் காணப்படுகிறது. அவர்களின் பழக்க வழக்கங்கள், ஊர் பெயர்கள், சாதிகள், சட்டங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில்  எப்படி கலந்திருக்கின்றன என்பது குறித்த பல விபரங்கள் அதில் உள்ளன. அதில் உள்ள ஒரு பகுதியை அப்படியே இங்கு தருகிறேன்.
“சேரநாட்டுக் குடியேற்றம்”முதலில் யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் சேர நாட்டினராகிய மலையாளிகள் என்பது நீலகண்ட சாஸ்திரியார் கருத்து, கிறீஸ்த சகாப்தத்திற்கு முன் மலையாளிகள் இங்கு வந்து குடியேறினர் என்னும் பாரம்பரியச் கூற்றுத் தமிழ் மக்களுள் இருந்து வருகிறதாகச் சேர். எமேசன் ரெனென்ற் (Sir Emerson Tennent) கூறுகிறார். மலையாளத்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்று லிபிறோஸ் (Libeyros) என்னும் சரித்திராசிரியர் கூறுகிறார். மலையாளத்திற் பரசுலராமராற் குடியேற்றப்பட்ட நம்பூதிரிப் பிராமணர்கள் மலையாளிகளை நாட்டைவிட்டு வெளியேற்றினர் என்று மலையாள சரித்திர நூலாசிரிய கேரளோற்பத்தி என்றும் நூல் கூறுகின்றது. இதே கருத்தைப் பேராசிரியர் வி. ரங்காசாரியரும் கூறியிருக்கிறார். நாட்டை விட்டு வெளியேறிய மலையாளிகளுட் சிலர் இருபது மைல் அகலமுள்ள பாலைக்காட்டுக் கணவாய்க்குள்ளால் வந்து வியாபாரப் பாதை வழியாகச் சென்று யாழ்ப்பாணம் வந்து குடியேறினர். சிலர் அதே கணவாயாற் சென்று கொல்லிமலை, பச்சைமலை, சவ்வாது மலைகளில் மறைமுகமாகக் குடியேறி வாழ்கின்றனர். வேறு சிலர் கடல் மார்க்கமாகக் கன்னியாகுமரி, காயல்பட்டினம் இராமேஸ்வரம், மரந்தை வழியாக வந்து யாழ்ப்பாணத்திலும். தென்னிலங்கையிலும் குடியேறினர்.
மலையாள நாடு களப்பியர் (கி.பி. 3-9, சாளுக்கியர் (கி.பி. 6). பாண்டியர், மகமதியர் (கி.பி. 1768-1793), விக்கிரமாதித்தன் முதலிய வேற்றரசர் ஆளுகைக்குட்பட்டபோது, மலையாளிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். சிங்கள அரசர் வைத்திருந்த மலையாளக் கூலிப்படையைச் சேர்ந்த பலர் சம்பளம் ஒழுங்காகக் கொடுபடாமையாலும், வேறு காரணங்களாலும் படையைவிட்டு விலகி யாழ்ப்பாணம் வந்து குடியேறினர். அநேக மலையாளிகள் இங்குவந்து குடியேறினர் என்பதை M.D.இராகவன் தமது நாகர்கோயில் வரலாற்றாய்வில் விளக்கியுள்ளார். மலையாளத்தில் வேலைவாய்ப்பின்மையும் மலையாளக் குடியேற்றத்திற்குக் காரணமாகும்.
மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத்தேழுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்திற் குடியேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதிவைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது. தோம்புகளின் (3)  அடிப்படையில் இங்குவந்து குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம். மலையாளிகள் வந்து குடியேறிய இடங்களுக்குத் தங்கள் ஊரின் பெயரையோ, தங்கள் நாட்டின் பெயரையோ அல்லது அரசன் பெயரையா ஏதாவதொன்றை வைத்துள்ளனர். (4)
ஆங்கிலேயர்கள் இலங்கையில் ஆட்சி நிர்வாக முறையை அறிமுகப்படுத்துவதற்கான அமைத்த கோல்புறூக் – கமரூன் சீர்திருத்த ஆணைக்குழு அறிக்கையில் கூட யாழ்ப்பாணத்தை “மலபார் மாவட்டம்” (Malabar District) என்று தான் குறிப்பிடப்படுகிறது. அந்த அறிக்கையில்
"Slaves in. the Malabar Districts were first registered in 1806, and in 1818 provision was made for annulling all joint ownership in slaves, and for enabling all slaves to redeem their freedom by purchase...”
யாழ்ப்பாண மாவட்டத்தில் (மலபார் மாவட்டம்) அன்று கோவியர், பள்ளர், நளவர் சாதிகளைச் சேர்ந்த அடிமைகள் குறித்தெல்லாம் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மலையாளபுரம் என்கிற ஒரு கிராமமே இருக்கிறது.

மலையாளம் எனும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
 • மலையாளன் காடு – அராலி, கோப்பாய்
 • மலையாளன் சீமா – அச்சுவேலி, நீர்வேலி
 • மலையாளன் ஒல்லை – உடுவில்.
 • மலையாளன் பிட்டி – கள பூமி
 • மலையாளன் தோட்டம் - சங்காணை , சுழிபுரம், சுதுமலை
 • மலையாளன் வளவு – அத்தியடி, அச்செழு 
 • மலையாளன் புரியல் – களபூமி (5)
“தேசவழமை” எனும் “மலபார் சட்டம்”
டச்சு அரசாங்க காலத்தில் 1707 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட “தேசவழமைச் சட்டம்” முதன் முதலில் “The Tesawalamai; Or the Laws and Customs of the Malabars of Jaffna” என்று தான் அழைக்கப்பட்டது. (6)  அதாவது “யாழ்ப்பாண மலபாரிகளின் தேசவழமை அல்லது வரி, சட்டம்” என்றே அழைக்கப்பட்டதையும் கவனிக்க வேண்டும்.

இந்தத் தேசவழமைச் சட்டத்தின் மூலம் என்பது மலபார் பகுதியில் இருந்து வந்தது என்பது நிதர்சனமானது. “மருமக்கட்டாயம்” எனப்படுகிற விதிகளும் இலங்கையில் குடியேறிய மலபார் மக்களிடம் இருந்து வந்ததே என்கிறார் டீ.இராமநாதன்.(7) மலையாளத்தில் ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய உடன்பிறந்தாளின் ஆண்மக்கள் அடையும் உரிமைமுறை.

காலனித்துவத்தின் பெரும்பகுதி காலத்தில் இலங்கை வாழ் தமிழர்களை ஒட்டுமொத்தமாக “மலபாரிகள்” (Malabars) என்றே அழைத்தார்கள். ஆண்டுதோறும் இலங்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுவந்த “தி ப்ளூ புக்” (The Blue books of Ceylon) 1880 வரை தமிழர்களை அப்படித்தான் குறிப்பட்டது. இந்தியாவிலிருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்த காலத்தில் அவர்களை அடையாளப்படுத்தவும் “மலபார் கூலிகள்” (Malabar Coolies) என்று அழைத்தார்கள். (8) தோட்டத் தொழிலைத் தவிர துறைமுகம், இரயில் சேவை, சுத்திகரிப்புத் தொழில் போன்ற பணிகளுக்கும் இந்தியர்கள் வரவழைக்கப்படதனால் “இந்தியக் கூலிகள்” என்றே பொதுவாக இந்தியா வம்சாவளியினரை பின்னர் அழைத்தார்கள்.

முஸ்லிம்கள் குறித்து இராமநாதன்
முஸ்லிம்கள் குறித்த சேர் பொன் இராமநாதனின் அன்றைய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி நினைவிருக்கலாம். கோல்புறூக் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் முஸ்லிம்களையும் தமிழ் தலைவர்களே பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். முஸ்லிம்களும் தமிழைப் பேசுவதனால் அவர்கள் இஸ்லாமியத் தமிழர்கள் என்று சேர் பொன். இராமநாதன் கருத்துக்களை முன் வைத்தார். 

“முஸ்லிம்கள் தனியொரு இனம் அல்ல, தமிழர்களின் வழித்தோன்றல், அவர்களுக்கு பிரத்தியேகமான பிரதிநிதித்துவம் அவசியமில்லை, அவர்கள் “இஸ்லாமிய தமிழர்கள்” என்று குறிப்பிடலாம்” என பிரித்தானிய அரசாங்கத்திடம் அறிக்கையிட்டார். இதனை எதிர்த்த ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம் மற்றும் பாரம்பரியத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து இராமநாதனின் கருத்தை மறுத்தனர்.

1888இல் “இலங்கைச் சோனகர் இன வரலாறு” (Ethnology of the moors) என்கிற தலைப்பில் இராமநாதன் எழுதிய கட்டுரையும், அதில் முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள், மதத்தால் முஸ்லிம்கள் என்கிற வாதமும். அந்தக் கட்டுரைக்கு எதிரான கருத்துக்களை அன்றே அறிஞர் சித்திலெப்பை மற்றும் ஐ.எல்.எம்.அப்துல் அசீஸ் போன்றோர் தகுந்த அளவு எதிர்வினையாற்றியுள்ளனர். 

இந்த விவாதத்துக்காக இராமநாதன் எழுதிய ஆரம்பக் கட்டுரையில்
“அரபிகள் இந்நாட்டில் குடியேறியது எட்டாம் நூற்றாண்டெனக் கூறினும் அவர்கள் அதற்கு முன்னரும் பன்னெடுங்காலமாக இத்தீவுக்கு வந்துபோகலாயினர். அவ்விதம் குடியேறிய அரபிகளில் சிலர் தம்முடன் தம் அரபு மனைவியரை அழைத்து வந்தனர். ஏனையோர் தமிழ்ப் பெண்களை மதம் மாற்றி மனைவியராகக் கொண்டனர். ஏனெனில், அப்போது மலபாரிகள் என அழைக்கப்பட்ட தமிழர்களுடனேயே அரபிகள் தொடர்புகொண்டவர்களாக இருந்தனர்...”
“அரபிகளின் சமூக உறவால் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்ட ஓர் இழிந்த, வெறுத்தொதுக்கப்பட்ட மலபார்ச் சாதியின் சந்ததியினர்...” 
போன்ற கருத்துக்களை அதில் கூறியிருக்கிறார். (9)

ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் முஸ்லிம் கார்டியன் பத்திரிகையில் அதற்கு நீண்டதொரு எதிர்வினையை ஆற்றியிருந்தார். (10)

அந்த எதிர்வினையில் தென்னிந்திய மலபாரிகளின் குடியேற்றம் பல காலப்பகுதிகளில் வெவ்வேறு காரணிகளால் நிகழ்ந்தது என்றும் முஸ்லிம்களும் அவர்களின் வந்த பூர்வீகக் குடிகளே என்றும், இலங்கைக்கு வந்த அரபிகள் மலபாரிகளோடு தான் கலந்தார்கள் என்றும் தமது மனைவிமாரின் மலபார் மொழியைத் தான் அவர்கள் பேசி தம்மை நிலைநிறுத்த்திக் கொண்டார்கள் என்கிற வாதத்தை முன்வைத்துச் செல்கிறார்.

புகழ்வாய்ந்த அரேபியக் கடலோடியான சிந்த்பாத், இலங்கையை அடைந்தபொழுது மலபாரிகளே அவரை முதன்முதலாக வரவேற்றனர் என்பது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது என்று டெனண்ட் கூறுகிறார். அந்த மலபாரிகள் தாமே என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார் அஸீஸ். 

இந்த விவாதங்களின் பின்னர் தான் 1889ஆம் ஆண்டு சட்ட நிருபண சபைக்கு எம்.சீ.அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டார்.

கண்டி இராச்சியத்தில் “மலபார்”
ஆங்கிலேயர்கள் இலங்கையை கைப்பற்றிய இந்த ஆரம்பக் காலப்பகுதியில் ஆங்கிலேயர்களும் தமிழர்களை மலபாரிகள் என்றே அழைத்தனர் என்பதையும் கவனிக்க வேண்டும். 

இதற்கு முக்கிய ஆதாரமாக நாம் கண்டி ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆராயலாம். 

கண்டி ஒப்பந்தத்தின் முதல் மூன்று பகுதிகளும் கவனிக்கத்தக்கது. “மலபார்” அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனிடமிருந்து அரச ஆசனம் பறிக்கப்படுகிறது என்றும் அவரது (தமிழ்) பரம்பரையைச் சேர்ந்த எவரும் இனிமேல் ஆட்சியமர முடியாது என்றும், அவர்களின் சகல ஆண் உறவினர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும் என்றும் இருக்கிறது. ஆனால் “தமிழர்” என்பதை “மலபார் இனத்தவர்” என்று தான் பதிவு செய்கிறது.

கண்டி ஒப்பந்தத்தின் இரண்டாவது, மூன்றாவது பிரிவுகளில் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கும், அவரது குடும்பத்துக்கும், அவரின் சகல உறவினர்களுக்கும் உள்ள அதிகாரத்தைப் பறிக்கும் விபரங்கள் அடங்கியுள்ளன.
இரண்டாவது: மன்னன் ஸ்ரீ விக்கிரம இராசசிங்கன் ஒரு மன்னனுக்குரிய முக்கிய திருமிகு கடமைகளைச் செய்ய என்றும் தவறியதால் அப்பட்டத்திற்கோ, அதனோடு சார்ந்த அதிகாரங்களுக்கோ உரிய உரிமைகளை இழந்தவனாகிவிட்டான்; இதனால் அவன் அரசுப் பதத்திலிருந்து வீழ்ந்தவனானான் என்றும் அப்பதத்தினின்றும் அகற்றப்பட்டானென்றும் அறிவிக்கப்படுகின்றது. அவன் குடும்பத்தாரும் குருதிமுறை, அல்லது இனமுறையால் அவன் குலத்தின் முந்திய வழி, பிந்திய வழி, பக்க வழி, எந்த வழியைச் சார்ந்தவரும் என்றும் அரசணையினின்று விலத்தப்பட்டவராவர். கண்டி மாநில ஆள்புலத்திற்கு மலபார் இனத்தவர் (Malabar race) கொண்ட சகல உரிமையும் பட்டமும் இதனால் விலக்கி அழிக்கப்பட்டன.
மூன்றாவது: குருதிமுறையாலோ, இனவழியாலோ குலத்தின் முந்திய வழி, பிந்திய வழி, பக்கவழி காலஞ்சென்ற மன்னன் சிறீ விக்கிரம இராசசிங்ககனின் உறவினராயிருக்கின்ற, அல்லது அவ்வாறு நடிக்கின்ற எல்லா ஆண் மக்களும் கண்டி மாநிலங்களின் அரசிற்குப் பகைவரென இத்தால் அறிவித்தல் செய்யப்படுகின்றது. இவர்கள் எக்காரணங்கொண்டும் பிரிட்டிசு அரசாங்கத்தின் அதிகாரத்தாலன்றி இந்நாட்டுப் பகுதியுள் வரலாகாதென்று தடை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவ்வாறு வருவாராகில் இதற்கென விதிக்கப்பட்ட போர்வினைச் சட்டத்தின் துன்ப தண்டனைகளுக்கு ஆளாவர். இப்பொழுது இந்நாட்டினின்றும் வெளியகற்றப்பட்ட எல்லா மலபார்ச் சாதி (Malabar caste) ஆண்மக்களும் மேற்கூறிய அதிகாரத்திலிருந்து இசைவு பெற்றாலன்றி நாட்டுக்குள் வரலாகாதென்று தடை செய்யப்பட்டுளர்; இதை மீறுவோர் மேற்கூறிய தண்டனைக்காளாவர். (11)
இந்த ஒப்பந்தத்தில் மன்னனை தமிழன் என்றோ, வடுகன் என்றோ, நாயக்கன் என்றோ, தெலுங்கன் என்றோ குறிப்பிடாது “மலபார்” காரராக பதிவு செய்திருப்பதை கவனிக்க வேண்டும்.

கண்டியைக் கைப்பற்றுவதற்கு பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட ஜோன் டொயிலி எழுதிய டயரிக் குறிப்பில் ஒரு பகுதி பிற்காலத்தில் நூலாக வெளியானது. 1810-1815 காலப்பகுதில் எழுதிய டயரிக் குறிப்பில் 80 இடங்களில் “மலபார் இனத்தவர்” என்றே குறிப்பிடுகிறார். ஒரு இடத்தில் கூட தமிழர் என்று குறிப்பிடவில்லை. (12)

1800 களில் கண்டியில் மலபார் பாடசாலை (Kandy Malabar School) எனும் பேரில் பாடசாலை இயங்கியிருக்கிறது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் பதிவுகளில் அறியமுடிகிறது. (13)

நாயக்கர் வம்ச அரசர்களின் குடும்பங்கள் அரசரின் மாளிகைக்கு அருகாமையிலேயே வாழ்ந்து வந்தனர். அந்தத் தெருவுக்கு ஆரம்பத்தில் “குமாரப்பு வீதி” என்று அழைக்கப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் அதை “மலபார் வீதி” (Malabar street) என்று அழைத்தார்கள்.  குமாரப்பு வீதியிலிருந்து பூவெலிகட வீதி வரையான பாதையிலும், தலதா வீதி வரையிலான பாதை வரையிலும் அருகருகாமையில் இவர்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. “மலபார் வீதி” இன்று பெயர் மாற்றப்பட்டு இலங்கையின் சிங்கள பௌத்த இனவாதத்தின் ஞானத்தந்தையாக (God father) நாம் அறிந்த “அநகாரிக்க தர்மபால” வின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

“மலபார் நேயோ” சிங்கள நாவல்
“மலபார் நேயோ” (மலபார் உறவினர்கள்) என்கிற பேரில் 2018 இல் ஒரு சிங்கள மொழியில் ஒரு நாவல் வெளிவந்தது. இந்த நாவலின் கதையில் கண்டி ஒப்பந்தத்தின் படி அரசனின் ஒட்டுமொத்த பரம்பரையும் விரட்டியடிக்கப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், கைதுக்குள்ளாக்கியும் வருகிறார்கள். மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவியான அரசி வேங்கட ரங்கஜெம்மாள் மலபார் வீதியில் வசித்து வந்த தனது உறவினர்களைப் பாதுகாப்பதற்காக அரச குடும்பத்துக்கு உடுதுணி துவைத்த சலவைத் தொழிலாள சாதியான “ஹேன” சாதியைச் (வண்ணார்) சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கிறார். அந்தக் குழுவின் பாதுகாப்புடன் உயிர்தப்பிப் பிழைக்கும் அரச வம்சத்தவர்களுக்கு என்ன நேருகிறது என்பது பற்றிய கதை தான் அது. இன்றும் கண்டியில் சலவைத் தொழிலாளர்களாக இருக்கும் கூட்டம் ஒன்று தெலுங்கைப் பேசி வருகிறார்கள். 

இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது உண்மை. ஆனால் அவர்களுக்கு என்ன ஆகியிருக்கலாம் என்று விரிக்கிறார் அதன் ஆசிரியர் பிரேமகீர்த்தி ரணதுங்க. இந்த நாவல். உயிர்பிழைத்து, தலைமறைவாக வாழ்ந்து பின்னர் உண்பதற்கும், உறைவிடத்துக்கும் வழியின்றி பிள்ளைகளுடன் அவர்கள் படும் சீரழிவும், சலவைத் தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்களும் அச்சமூகத்தினருடன் காலப்போக்கில் ஒன்று கலந்து வாழத் தொடங்கிவிடுகிறார்கள். 

மகாவம்சம் சொல்வது
இன்றைய கேரளா பிரதேசம் அன்றைய சேரர்கள் ஆண்ட பிரதேசம். இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்ஸத்தில் கூட  தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களாக சோழர்களையும், பாண்டியர்களையும் தான் குறிப்பிடுகிறது. சேரர்களைக் குறிப்பிடுவதில்லை. அதாவது சேரர்கள் இலங்கையின் மீது ஆக்கிரமிப்பு நடத்தியதாகவோ, பௌத்த ஸ்தலங்களை அழித்ததாகவோ குறிப்புகள் இல்லை. (14) மாறாக பல்வேறு காலகட்டங்ககளில் பாண்டியர்களுடனும், சோழர்களுடனுமான போர்களில் சேரர்கள் இலங்கை அரசர்களுக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள் என்று சூலவம்சத்தில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக இலங்காவுக்கும் (கி.பி 34-44), அபயநாகனுக்கும் (236 244) விஜயபாகுவுக்கும் (1055-1110), பராக்கிரமபாகுவுக்கும் (1153-1186) உதவியதாக சூலவம்சம் குறிப்பிடுகிறது. (15) குறிப்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை அரசர்களின் படைகளில் கூலிப் படைகளாக கேரளப் பிரதேசங்களில் இருந்து வந்தவர் இருந்திருக்கிறார்கள். இவர்களை “வேளைக்காரர்” (16) என்று அழைத்திருக்கிறார்கள். அரசனைப் பாதுகாக்கும் நம்பகமான முதன் நிலையில் இவர்கள் இருந்திருக்கிறார்கள்.

தென்னிந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து பராக்கிரமபாகு பல அரசுகளையும் ஒன்றிணைக்கும் போரில் ஈடுபட்டிருந்தபோது கூலிக்கு அமர்த்தப்பட்ட கேரளப் படைகளே உதவியுள்ளன. புத்தரின் தாதுப் பல்லைப் பாதுகாப்பதற்கான நெடிய போராட்டத்தைப் பற்றி அறிந்திருப்போம். சிங்கள மன்னர்கள் அதைப் பாதுகாப்பதற்கு பல சந்தர்ப்பங்களில் இந்த வேளைக்காரப்படைகளே முன்னின்றுள்ளன. (17)  இதைப்பற்றிய விரிவான தகவல்களை Epigraphia Zeylanica என்கிற நூலின் இரண்டாவது தொகுதியில் காணலாம். அதில் கல்வெட்டின் பிரதியும் விளக்கமும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. (18)
பொலநறுவை வேளைக்காரர் கல்வெட்டு
மகாவம்சத்திலும் இல்லாத ஆனால் சூலவம்சத்தில் காணக்கிடைக்கிற இன்னொரு தகவல் 12ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தமபதேனிய இராச்சியத்தில் நிகழ்த்த போர் பற்றியது. கேரளாவிலிருந்து இலங்கையை ஆக்கிரமிக்க வந்த பெரும் கூலிப்படையை எதிர்த்து பராக்கிரமபாகுவின் அமைச்சர் தேவபத்திராஜ தலைமையிலான படை போரிட்டு கேரளப்படையை அழித்து நசுக்கியது என்றும் அப்படையில் இருந்த எஞ்சியோருக்கு பௌத்த முறைப்படி  “அபய தானய” (19) எனப்படும் உயர் பிச்சை/உயிர் மீட்பு அளிக்கப்பட்டதாம்.  அவர்கள் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இரண்டறக் கலந்து இலங்கையின் தேரவாத பௌத்த கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்தார்கள் என்கிறது சூளவம்சம்.

இலங்கையின் முதலாவது தமிழ் நூல்
சிங்களத்தில் வெளிவந்த முதலாவது நூல் 1737இல் வெளிவந்தது. இருந்தபோதும் சிங்களத்தில் வெளிவந்த அதே காலத்தில் தமிழிலும் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள் என்று ஆளுனர் குஸ்தாப் 1737இல் எழுதிய குறிப்புகளில் காண முடிகிறது.

“...எனது ஆட்சிக் காலத்தில் மிகப் பிரியோனசமிக்க அந்த கருவி இயக்கப்பட்டது. “சிங்களப் பிரார்த்தனை நூல்” வெளியிடப்பட்டுவிட்டது. மலபார் மொழியிலும் (தமிழில்) வேத புத்தகத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்கிறார்.

அப்போதெல்லாம் தமிழ் பிரதேசங்களை மலபார் என்றும், தமிழர்களை மலபாரிகள் என்றும், தமிழ் மொழியை “மலபார் மொழி” என்றும் பல ஆவணங்களிலும் நூல்களிலும் பதிவாகியுள்ளன.

இலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் கூட “மலபாரிகளின் பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) என்று தான் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். இந்தக் காலப்பகுதியில் தமிழ், தமிழர் குறித்து விபரங்களைத் தேடுவதாயின் malabar என்று பதியப்பட்டுள்ளவற்றை தேடியே ஆகவேண்டும். 

அதை விட இலங்கையில் அன்றைய ஆளுநர் அடொல்ஃப் கிராமர் என்பவரை சேவையில் அமர்த்துவதற்கு முன்னர் 1706 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு மலபார் மொழி (தமிழ்) கற்கும்படி ஆணையிட்டதுடன் உடனடியாகவே அவரை அனுப்பியதாக குறிப்பிடுகிறார். (20)
Adolf Kramer of Cramer, ook Craemer, was reeds prop., toen hij in 1706 op Ceijlon kwam. Hem werd al aanstonds opgelegd, zich in de Malabaarsche (Tamulsche) taal te oefenen; en bij heeft dan ook vercheidene jaren, van 1711 af, zich te Jaffanapatnam beziggehouden met de studie daarvan en hielp tevens de predikanten, met name in 1715 den zwakken Ds. Jan Bruining, in hun predikwerk.
அவர் அங்கு 1711 வரையான ஐந்து வருடங்கள் இருந்து தமிழ் கற்று  பின்னர் மத போதனைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.  (21)

பிலிப்பு பால்டேஸ்
பிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus) ஒரு டச்சு நாட்டு அமைச்சர். பின்னர் அவர் பாதிரியாராக ஆனவர். டச்சு ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மீதான டச்சு ஆக்கிரமிப்புப் மும்முரமாக இருந்த காலத்தில் அவர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். ஆபிரஹாம் ரொஜேரியசுக்குப் (Abraham Rogerius) பின்னர் யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய குறிப்புகளை ஆங்கிலத்தில் பதிவு செய்த இரண்டாவது நபராக பிலிப்பு பால்டேஸ் அறியப்படுகிறார். அவர் பதிவு செய்த தகவல்களும், வரைபடங்களும் அன்றைய இலங்கையையும், குறிப்பாக வடக்கு பகுதியையும் தமிழர்களையும் அறிவதற்காக இன்று வரை பல ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படும் ஆவணங்கள். இலங்கையில் பைபிளை மொழிபெயர்க்கத் தொடங்கிய முதலாவது நபர் இவர் தான். அதன் பின்னர் தான் பைபிளின் மொழிபெயர்ப்பு பல கத்தோலிக்க மதகுருமார்களால் வளர்ச்சி கண்டது.

அவர் இலங்கை பற்றி டச்சு மொழியில் எழுதிய முக்கிய நூலான “மலபார், கோரமண்டலம், இலங்கைத் தீவு பற்றிய உண்மைத் தகவல்” (Description of East India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon) 1671 இல் ஒல்லாந்தில் வெளியிட்டார். பிரபல ஆய்வாளர் புரோஹியரின் பாட்டனார் பீட்டர் ஐசாக் ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்தார். இலங்கை வரலாற்றாய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பயன்படக்கூடிய முக்கிய நூல் அது.

இந்த நூலில் எங்கேயும் ‘தமிழர்”, “தமிழ் மொழி” என்பது பற்றி எந்த இடத்திலும் குறிப்படவில்லை. ஆனால் அவர் கற்ற தமிழ் மொழியை மலமார் மொழியென்று தான் அழைக்கிறார். “மலபார் மொழி இலக்கணம்” என்று ஒரு தனி அத்தியாயத்தையே இந்த நூலில் எழுதியிருக்கிறார். இந்த நூலில் தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி அதனை உச்சரிக்கும் விதத்தையும் சொல்லிக்கொடுக்கிறார். இந்தளவு தமிழ் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கப்பட்ட இதற்கு முந்திய வேறு ஏதும் நூல்கள் உண்டா என்பது தெரியவில்லை. இலங்கையில் 1739 இல் வெளியான முதலாவது நூலான “மலபாரிகளின் பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) நூலில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்கள் இதே எழுத்து உருவத்துக்கு ஒப்பானதாக இருப்பதையும் காண முடிகிறது.

அதில் தமிழ்ச்சொற்கள் உச்சரிப்பு, பெயர்ச்சொற்களின் வேற்றுமைப் பாகுபாடுகள், வினைச்சொற்களின் வினை விகற்ப வாய்ப்பாடுகள், ஆகியவற்றைப்பற்றிச் சொல்லியுள்ளார். இதில் தமிழ்ச்சொற்கள் டச்சு நெடுங்கணக்கில் எழுதப்பட்டுள்ளன.

அன்றைய கேரளா, தமிழ்நாடு மற்றும் யாழ்ப்பாண பட்டினம் (Jaffnapatnam என்று தான் சகல இடங்களிலும் அழைக்கிறார்) பகுதிகளில் பேசப்பட்ட தமிழ் மொழியை மலபார் மொழி என்று தான் அவர் அறிந்து வைத்திருந்திருக்கிறார். ஆனால் அவர் இங்கெல்லாம் வாழ்ந்த 11 ஆண்டுகளில் தமிழ், தமிழர் என்பது குறித்து எதுவும் அறியவில்லையா என்பது ஆச்சரியமான விடயமாகவே உள்ளது. இதே காலத்தைப் பதிவு செய்த ரொபர்ட் நொக்ஸ்சும் கூட “மலபாரிகள்” என்றே அழைக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழர் பூர்வீக வரலாற்றை மறுக்கும் இன்றைய சிங்கள இனவாத சக்திகளும் கூட இந்த விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை காண முடிகிறது.

பால்டேஸ் ஒரு இடத்தில்  “இலங்கையில் சிங்களம் மட்டும் பேசப்படவில்லை மலபார் மொழியும் பேசப்படுகிறது என்று ஆரம்பித்து இப்படி குறிப்பிடுகிறார். 
“It is to be observed that in Ceylon they not only speak the Cinghalesche but also the Malabaarsche languages, the former from Negombo to Colombo, Caleture, Berbering, Alican, Gale, Belligamme, Matura, Donders etc. But in all other parts of the Island which are contiguous to the Coromandel coast, Malabaarsche is the prevailing language. I have heard it often asserted by the inhabitants of Jafna patnam that, that part of the country was times past peopled from the Coromandel coast and hence the dialect of their fatherland (which is situated so close to Ceylon); the probable accuracy of this account is borne out by the circumstance, that in the interior of the country as Candy, Vintane, Ballaney etc, the Cinghalesche is the only language generally spoken”
(Description of East India.... P.287)
இலங்கையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் துறைமுகப் பணிகளுக்காகவும், வீதி அமைப்பதற்காகவும் கொண்டு வரப்பட்ட பணியாளர்களின் வம்சாவளியாக இருக்கின்ற கொச்சி பிரதேசத்தில் இருந்து வந்த “கொச்சி” என்று அழைக்கப்படுவோரும் மலையாளிகள் தான். 

கொழும்பு “கொச்சிக்கடை” என்பது அங்கே மலையாளத் துறைமுகத் தொழிலாளர்கள் குடியேறியபின்னர் வைக்கப்பட்ட பெயர். (22)  மலையாள சங்கங்கள் இன்றும் பலமாக இயங்குகின்றன. ஆமர்வீதியிலுள்ள நாராயணகுரு மண்டபம் ஒரு பாரம்பரிய மலையாள அடையாளமாகத் திகழ்கிறது.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் அரசியல் பிரதிநிதி ஆயேஷா ரவுப் மலையாள முஸ்லிம் பின்னணியைச் சேர்ந்தவர். பகுத்தறிவுவாதியான டொக்டர் கோவூர், இலங்கையில் கண்டியில் பிறந்து பிற்காலத்தில் பிரபல நடிகராகவும் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கூட மலையாளப் பின்னணியையுடையவர் தான்.

சிங்களவர்களின் புனைவு
இலங்கையில் அதிகளவு விற்பனையாகும் பத்திரிகை “திவயின” என்கிற சிங்களப் பத்திரிகை. (23) இலங்கையில் அதி தீவிர இனவாதத்தைப் பரப்பும் பிரதான பத்திரிகையும் இதுதான். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் டிக்கம மகிந்த குமார என்பவர் ஒரு கட்டுரைத் தொடரைத் எழுதினார். அத்தொடர் தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைத்து நொறுக்கும் நோக்குடன் ஆராய்ச்சிக் கட்டுரை என்கிற பேரில் அதி மோசமான புனைவுகளைக் கொண்ட ஒரு தொடர்.

ஒக்டோபர் 22 அன்று வெளியான கட்டுரையின் தலைப்பு “தமிழ் மலபார் அடிமை வெள்ளாள வழிகாட்டிகள்”. இக்கட்டுரையில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த உலகநாதரின் மகன் உலகநாதர் மாதர் கதிர்காம கணக்கர் தனது உறவினர்களோடு 1780 இல் ஒல்லாந்தரின் அடிமைகளாக கேரளாவிலிருந்து யாழ்ப்பாண மானிப்பாய் பகுதியில் வந்து குடியேறியதாகவும், அவரின் மகன் தில்லையம்பலம் அருணாச்சலம். அவரின் மகன் அருணாச்சலம் பொன்னம்பலம் கத்தோலிக்க பாடசாலையில் பயின்று கேட் முதலியாராக ஆனார் என்கிறார். வெள்ளாளர்கள் எனப்படுவோர் 1780 காலப்பகுதியில் மலபாரிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்களே என்று அவர் அடித்துக் கூறுவதற்கு எந்த சான்றுகளும் அவர் கொடுக்கவில்லை.

இந்தத் தகவல்களுக்கு அவர் “A Genology of the residents of manipay” என்கிற நூலை ஆதாரம் காட்டுகிறார். அந்த நூலில் மேற்படி பெயர்களின் வழித்தோன்றல் குறித்த விபரங்கள் உள்ளது உண்மை. ஆனால் அந்த நூலில் எங்குமே இவர்களின் பூர்வீகம் கேரளா என்றோ, அடிமைப் பின்னணி குறித்தோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.  (24)

மேலும் அவர் “மேற்படி பரம்பரையில் இருந்து வந்த சேர் பொன் இராமநாதன் ஆங்கிலேய அரசில் ஒரு பதிவாளர் நாயகமாக (Registrar general) பதவி வகித்தபோது இந்த தென்னிந்திய தமிழ் மலபார் அடிமைகளை (வெள்ளாளர்களை) 1878ஆம் ஆண்டு “இலங்கைத் தமிழர்” என்கிற நாமத்தைக் கொடுத்து சட்ட ரீதியாக நிரந்தரமாக பதிவு செய்துவிட்டார். இதன் மூலம் தமிழர் தமது தாயக உரிமையை புனையக் கூடிய வகையில் 1911 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் “இலங்கைத் தமிழர்” எனச் சேர்த்துக்கொண்டார்.” என்கிறார் டிக்கம மகிந்த. (25)

இந்த மலபார் அடிமைகளுக்கு மிஷனரிமாருக்கு ஊடாக கல்வியைக் கொடுத்து ஒரு அதிகாரிகளாக்கி அதிகார வர்க்கமொன்றை உருவாக்கி முழு இலங்கையின் அதிகாரத்தையும் சிங்களவர்களிடம் பறித்து “மலபார் தமிழர் அதிகாரி”களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தகவலும் பிழை, அதற்கான மூலமும் பிழை, பின்னெப்படி அதிலிருந்து பிறக்கும் தர்க்கம் மட்டும் நியாயமாகும். எனவே தர்க்கமும் குரூரமான பிழை. ஆனால் இப்படியான கட்டுரைகளுக்கு சிங்களத்தில் பஞ்சமே கிடையாது. இது ஒரு சிறு உதாரணம் தான். டிக்கம மகிந்த போன்ற பலர் உள்ளார்கள். இது போன்ற பல்வேறு கட்டுரைகளை டிக்கம மகிந்த பல வருடங்களாக பல ஊடகங்களுக்கு எழுதிவருகிறார். அவரோடு எவரும் சிங்களத்தில் தர்க்கம் செய்வதில்லை. தமிழ் ஆய்வாளர்களின் கண்களுக்கும் இவை எட்டுவதில்லை. சிங்கள பேரினவாத சக்திகள் இவற்றை வரவேற்று மேலும் பரப்பவே செய்கிறார்கள். சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு இப்படிப்பட்டவர்கள் எல்லாக் காலத்துக்கும் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை மலபாரிகள் என்றே பதிவு செய்துவிட்டதால் சிங்கள பேரினவாதத் தரப்பு இன்று தமிழர் எல்லோரும் மலபாரில் இருந்து வந்து வடக்கில் குடியேறிய வந்தேறிகள் என்றே பல இடங்களில் தர்க்கம் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட வந்தேறிகளுக்கு இந்த நாட்டில் என்ன உரித்து இருக்கிறது? எப்படி தமது தாயகம் என்று இவர்கள் உரிமை கொண்டாடலாம்? எப்படி தனிநாடு கேட்கலாம்? தமிழ் ஈழம் கோரலாம்? என்று சிங்கள இனவாத சக்திகள் கேள்வி எழுப்ப சாதகமாக்கியிருகிறது. துரதிருஷ்டவசமாக கடந்த நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் பேரினவாதத்தின் வரலாற்று மோசடிகளை எதிர்த்து எதிர்வினையாற்றும் தமிழ் தரப்பு அழிந்தே போய்விட்டது என்று தான் கூறவேண்டும்.

எதிர்வினை இன்மையால் துணிச்சலுடன் சாதாரண சிங்கள பாமர மக்களிடம் திரிபுகளையும், பொய்மைகளையும், ஐதீகமாக நிறுவி மோசமான இனவாத சந்ததியை உருவாக்கி பலப்படுத்தி வருகின்றனர். இதுவே தமிழ் மக்களின் சாதாரண அடிப்படை அபிலாசைகளைக் கூட அடையமுடியாத நிலைக்கு தள்ளி விட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்
 1. Dr. H. W. Tambiah - The laws and customs of the Tamils of Jaffna - Published by Women's Education & Research Centre – 2004.
 2. "Ethnologue report for language code: mal". Ethnologue.com. Archived from the original on 28 June 2013. Retrieved 20 February 2012.
 3. தோம்பு என்பது ஊர்களிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடையவன் பெயரும், சாதியும், அரசிறை வரியும், கடமைகளும், ஊழியமும் குறிக்கப்பட்ட ஏட்டின் பெயராகும். இது கி.பி.1623 இல் எழுதப்பட்டது.
 4. கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை - யாழ்ப்பாணக் குடியேற்றம் - ஆதிகாலம் தொடக்கம் ஒல்லாந்தர் காலம் முடியும்வரை" - புலவரக வெளியீடு - 1982
 5. கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை - யாழ்ப்பாணக் குடியேற்றம் – சுன்னாகம் - 1982
 6. A catalogue of the Tamil books in the library of the British Museum, Dept. of Oriental Printed Books and Manuscripts; Barnett, Lionel D. (Lionel David), 1871-1960; Pope, George Uglow, 1820-1908, printed  1909
 7. T. Sri Ramanathan- Tesawalamai the laws & customs of the inhabitants of the province of Jaffna, The Nadaraja Pres . Colombo - 1962
 8. The plantation Tamils of Ceylon - Patrick Peebles - London : Leicester University Press, 2001. (Page 8-12)
 9. P. Ramanathan, "The Ethnology of the Moors of Ceylon", Journal of the Royal Asiatic Society (Ceylon Branch), vol. 10, no. 36, 1888.
 10. I.L.M. Abdul Azeez, A Criticism of Mr. Ramanathan's Ethnology of the Moors of Ceylon, Colombo, 1957 (reprint).
 11. தொனமூர் அறிக்கை – யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை – 1967 – இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிக்கப்பெற்றது – அரச கருமமொழி வெளியீட்டுக்கிளைப் பிரசுரம்
 12. Diary Of Mr. John D’oyly - Special publication issued by the Ceylon Branch of the Royal Asiatic  Society Volume – XXV, No 69, 1917
 13. The Missionary Register for MDCCCXXVII - containing the principal transactions of the various Institutions for propagating the Gospel: with the Proceedings, at large, of the Church Missionary Society, 1827 – P.108
 14. இலங்கையின் வரலாற்று மூலத்துக்காக பயன்படுத்தப்படும் முக்கிய பிரதான மூன்று நூல்களாக “மகாவம்சம்”, ‘ராஜாவலிய”வோடு “ரஜரட்டகாரி” (Rajaratnacari) என்கிற மூன்றையும் கவனத்திற்கொள்வதுண்டு. இதில் “ரஜரட்டகாரி” யில் மாத்திரம் சேரர்கள் இலங்கையை ஆண்டிருப்பதை குறிப்பிடுகிறது. 1023 இல் சோழர்கள் இலங்கையை ஆக்கிரமித்து இலங்கை அரசனை கைது செய்து இந்தியாவுக்கு கடத்திச்சென்று அங்கேயே அவ்வரசன் இறந்ததாகவும் அதனைத் தொடர்ந்து பொலன்னறுவையில் மலபார் அரசனாக  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக வெளிநாட்டுப் படையின் ஆதரவில் ஆட்சி செய்தான் என்றும் கூறுகிறது.  தொடர்ந்து “பத்தொன்பது அரசர்களின்” ஆட்சி முழுவதும், எண்பத்தி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மலபாரிகளுடன் சிங்களவர்கள் தொடர்ச்சியான போரைத் தொடர்ந்தனர்” என்று “ரஜரட்டகாரி கூறுவதாக SIR James Emerson Tennent எழுதிய Ceylon - An Account Of The Island Physical,  Historical, And Topographical. 1860 நூலில் குறிப்பிடுகிறார்.
 15. A. Liyanagamage - Keralas in Medieval Sri Lankan history: A study of two contrasting roles – Aocial Science Review - Social Scientist’s Association - Sri Lanka. January 1988 
 16. வேளைக்காரர்(பெ) : அரசர்க்கு வேளைப்படி உரிய பணியைத் தாம் செய்ய இயலாதபோது தம் உயிரை மாய்த்துக்கொள்வதாக விரதம் பூண்ட பணியாளர்.
 17. புத்தரின் தாதுப்பல்லை வேளைக்காரர்கள் பாதுகாத்தது பற்றி வேளைக்காரர்களால் வெட்டுவிக்கப்பட்டதாக நம்பப்படும் கல்வெட்டு பொலன்னறுவையில் H.C.P.Bell ஆள் கண்டுபிடிக்கப்பட்டது . 49 வரிகளைக் கொண்ட இந்தக் கல்வெட்டில் முதல் 5 வரிகள் சமஸ்கிருதத்திலும், 44 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் வெட்டப்பட்டிருக்கிற முதல் ஐந்து வரிகளில் புத்தரின் தாதுப்பல்லை பாதுகாத்தது குறித்து விபரிக்கிறது.
 18. Don Martino de Zilva Wickremasinghe - Archaeological survey of Ceylon  - Epigraphia Zeylanica Volume II London - 1928
 19. மாடுகள் வெட்டப்படுவதை தடுத்து அவற்றை மீட்டு சுதந்திரமாக விடும் பணிகளும் “அபய தானய” என்கிற பேரால் தான் இலங்கையில் அழைக்கப்படுகிறது.
 20. Caspar Adam Laurens van Troostenburg de Bruijn P.J. Milborn, - “Biographisch woordenboek van Oost-Indische predikanten” - 1893
 21. அடொல்ஃப் கிறாமரின் தலைமயின் கீல் பல போதகர்கள் பயிற்சியெடுத்து பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்றும் யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, மன்னார், கொழும்பு போன்ற இடங்களில் அவர் சேவையாற்றியதாகவும் மேற்படி நூலில் காணப்படுகிறது. 
 22. People of Sri Lanka - “Sri Lankan” - Our Identity “Diversity” - Our Strength - Ministry of National Coexistence, Dialogue and Official Languages - 2017
 23. தினசரி பத்திரிகை அண்ணளவாக ஒன்றரை லட்சம் பிரதிகளும், ஞாயிறு வார இறுதிப் பத்திரிகை மூன்று லட்சத்துக்கும் அதிகாமாக விற்பனையாகிறது.
 24. Srimath T. Vinasithamby "A genealogy of the residents of Manipay and related inhabitancies"  1901
 25. உண்மையில் இராமநாதன் தமிழர்களை மலபாரிகள் என்று அழைப்பதை மறுத்து அதனை அப்போது வெளியிட்டுவந்த “The New Law Reports” இன் 1911 ஆம் ஆண்டு பதிப்பில் இருந்து “மலபார்” என்கிற அடையாளத்தை நீக்கியவர் தான். 
நன்றி - காக்கைச் சிறகினிலே - ஜனவரி,  2020

Share this post :

+ comments + 3 comments

சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள் தோழர்... தொடர்ந்து எழுதுங்கள்...

ஐயா! நீங்கள் காலனித்துவர்கள எழுதியவற்றை மாத்திரம் பேசியுள்ளீர்கள். யாழ் குடாவிலும், வடக்கிலும் பல வகையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் செது, கந், மற்றும் ஆ எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவைகள் தமிழ் எழுத்துக்களே! மலபாரி, கேரள எழுத்துக்கள் அல்ல. உங்களது ஆய்வில் இவைகள் ஏன் ஆராயப்படவில்லை? இந்த நாணயங்கள் போர்த்துக்கேயர் காலத்திற்கு முற்பட்டவையாகும். இவைகளைவிட, இலங்கையில் பல கல்வெட்டுக்கள் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. காலியில் தமிழ், பாரசீகம், சீன மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல.இவைகள் எல்லாம் போர்த்துக்கேயர் வருகைக்கு முற்பட்டவையாகும். இந்தத் தொல்பொருட்கள் இலங்கையில் தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டினை நிறுவவில்லையா? சிங்களத் தூது இலக்கியங்களில் தமிழ் மொழி பற்றியும்,தமிழர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளனவே? அவற்றில் மலைபார மொழி பற்றிக் குறிப்பிடவில்லையே? இலங்கையில் தமிழ், மற்றும் பல மொழிகள் தெரிந்த புலவர்கள் இருந்துள்ளதாகச் சிங்கள இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதே. இவைகளை ஏன் ஆராய்ந்துகட்டுரையில் சேர்க்கவில்லை?

கி. பி. 1307, 1310, 1320களில் நடைபெற்ற டெல்கி சுல்தானியரின் தென் நொக்கிய படையெடுப்புக்களால் 3 தடவைகள் தெனடனந்தியாவழிலிருந்து பெருமெண்ணிக்கையானோர் இலங்கை, மற்றும் கட்லினைத் தொடும் நாடுகளில் ஜப்பான் வரையும், அவுஸ்திரேலியாவிலும் குடியேறியிருறந்தனர். இவற்றைவிட காலனித்துவவாதிகள் காலத்திலும் குடியேற்றம்கள் நடைபெற்றதன. 1692ஆம் அண்டுமுதல் அடிமை வியாபாரமும் யாழ் குடாவில் பெருமளவில் நடைபெற்றது. இவைகளை ஏன் ஆராயவில்லை?.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates