Headlines News :
முகப்பு » , , , , , » சமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்

சமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்

1956 மாற்றத்துக்கான பின்புலக் கதைகளை அறிதல் அவசியம். 1956 மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. புதிய வடிவத்தில் எழுச்சியுற்ற சிங்கள பௌத்த  தேசியவாதத்தை அடுத்த நிலைக்கு உந்தக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாக அதை கருதிக்கொண்டனர்.

இலங்கை தேசிய காங்கிரஸ் என்ன தான் தன்னளவில் தேசிய அமைப்பாகக் கருதிக் கொண்டாலும் அது ஒரு ஆங்கிலம் கற்ற - உயர் வர்க்க – சிங்களக் குணாம்சமுடைய - கரையோரச் சிங்களவர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட – சுதந்திரத்தை விட சீர்திருத்தத்தையே வலியுறுத்திய ஒரு இயக்கமாகத் தான் இருந்தது.

ஆனால் அன்றைய நிலையில் குறைந்தபட்சம் சீர்திருத்தத்தை வலியுறுத்துவதற்காகவாவது பல சக்திகளையும் ஒன்று திரட்டிய ஒரு அமைப்பாக அது தான் இருந்தது.

கண்டியின் தனித்துவ அடையாளம்
இலங்கையில் நெடுங்காலமாக கண்டியச் சிங்களவர்களுக்கும் (மழை நாட்டுச் சிங்களவர் என்றும் அழைக்கலாம்) – கரையோரச் சிங்களவர்களுக்கும் இடையில் பண்பாட்டு ரீதியிலும் சிந்தனா ரீதியிலும் வேறுபட்ட போக்கு வளர்ச்சியுற்று இருந்தது உண்மையே. 1505ஆம் ஆண்டே இலங்கை அந்நிய காலனித்துவத்திடம் பறிபோன போதும் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக கண்டி ராஜ்ஜியத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியவில்லை.

இதன் மறு அர்த்தம் அந்த 300 ஆண்டுகாலமும் இலங்கையில் கரையோரப்பகுதிகளில் சுதேசிய பண்பாடு சிதைக்கப்பட்டு போர்த்துகேய, ஒல்லாந்து பண்பாட்டு செல்வாக்குக்குள் சிக்கி மாற்றங்கள் கண்டிருந்தன. மதம், மொழி, சாதி, உணவு உடை பழக்கங்கள், பெயர்கள் என வரிசையாக கூறிக்கொண்டு போகலாம். இப்பேர்பட்ட சிக்கலுக்குள் அந்த 300 ஆண்டுகளும் சிக்காத தேசமாக இந்தத் தீவுக்குள் கண்டி ராஜ்ஜியம் இருந்தது. இலங்கையில் எஞ்சியிருந்த சுதேசிய பண்பாட்டு அம்சங்களும் பாதுகாக்கப்பட்ட ஒரு பிரதேசமாகவும், அவை போசிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிரதேசமாகவும் கண்டி இருந்தது. 

கண்டி ராஜ்ஜிய காலம் என்பது மொத்தம் 225வருடங்கள் தான். இலங்கையின் கடைசி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிர நரேந்திரசிங்கனின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கட்டிலேறிய விஜய ராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன், ராஜாதி ராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் ஆகிய நால்வரும் தென்னிந்திய நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கண்டியை 1739 - 1815 வரையான 76 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ஆண்டார்கள். இவர்களின் காலப்பகுதியில், பௌத்தம், சிங்களத்துவம் மட்டுமன்றி சாதியமும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் இலங்கையில் அனுபவிக்கப்படும் / கொண்டாடப்படும் சிங்களப் பண்பாட்டின் அம்சங்களாகக் கருதப்படும் பல அம்சங்கள் இந்த தமிழ் நாயக்கர்களால் பாதுகாக்கப்பட்டதும், போசிக்கப்பட்டதும் தான்.

இந்தப் பின்னணியில் கண்டியச் சிங்களவர்கள் தங்களை தனித்துவமான அடையாளத்தை கொண்ட இனமாகவும், பிரதேசமாகவும் தான் வலியுறுத்தி வந்தார்கள்.

ஆங்கிலேயர்களின் காலத்தில் காலனித்துவ செல்வாக்கால் வளர்ந்தெழுந்த; ஆங்கிலம் கற்ற; சுதேசிய குட்டி முதலாளித்துவ வர்க்கமானது கரையோர – மேல்மாகாண – கொழும்பை மையப்படுத்திய சக்திகளாக வலுப்பெற்று வந்தது. இவர்களே அரசியல் செல்வாக்கைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அப்பேர்பட்ட சக்திகளிடம் இலங்கை தேசிய காங்கிரஸ் சிக்கிய போது கண்டியச் சிங்களவர்களின் தனித்துவ அடையாளத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. எனவே தான் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டபோது கண்டியச் சிங்களவர் சார்பில் எவரும் இணைந்துகொள்ளவில்லை. பிற்பகுதியில் தான் அவர்கள் இணைந்துகொண்டார்கள். அந்தவகையில் அது ஒரு பூரணப்படாத அமைப்பாகத் தான் இயங்கத் தொடங்கியது. கண்டியர்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்த அங்கு எவரும் இல்லாதது ஒரு வகையில் கரையோரச் சிங்களவர்கள் எதேச்சதிகாரமாக இயங்க வாய்ப்பாக்கிக் கொண்டனர்/

காலனித்துவத்துக்கு முன்னிருந்த தமிழ் அரசுகளையும், சிங்கள அரசுகளையும் பிற்காலத்தில் காலனித்துவ ஆட்சி ஒன்றுபடுத்தி “இலங்கை” என்கிற ஓரடையாளத்துக்குள் மட்டுப்படுத்திய போது தமிழ் மக்கள் மட்டும் அதில் சிக்கிக்கொள்ளவில்லை. சிங்களவர்களாக இருந்தும் வேறு பண்பாட்டு வழிமுறைகளையும், வாழ்வனுபவங்களையும் கொண்ட அரசுகளும் தான் சிக்கிக்கொண்டன. கண்டியர்களும் தாம் அப்பேர்பட்ட “ஓரடையாளத்தில்” காணாமலாக்கப்படுபவர்களாக உணர்ந்தார்கள்.

இலங்கை தேசிய காங்கிரஸ் செய்த ஏமாற்றத்தால் துவண்டுபோன அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகி யாழ்ப்பாணத்துக்கு சென்றுவிட்டார். கனகசபை, சபாபதி உள்ளிட்ட முக்கிய தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரசிலிருந்து விலகினர். இலங்கை தேசிய காங்கிரஸ் அதன் பின்னர் ஒரு தூய சிங்கள அமைப்பாகவே மிஞ்சியது.

1921இல் தமிழ்த் தலைவர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து கண்டியச் சிங்களவர்களும் (இ.தே.காவினரால்) ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இல் வெளியேறினர். இ.தே.கா இந்த நிலைமைகளை சரிசெய்தால் மாத்திரமே ஒருருமித்து குரல் கொடுத்து ஆங்கிலேயர்களுடன்  கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்கள்.

இவ்விரு தரப்பினருடனும் ஒரு பொது உடன்பாட்டைக் காண வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டுவதற்கான யோசனை இ.தே.கா வின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான கொரயா அவர்களால் 1924 டிசம்பர் 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட போதும் இ.தே.கா.வினருக்கும் கண்டியச் சிங்களத் தலைமைகளுக்குமிடையில் இருந்த முறுகல் நிலை காரணமாக இது உடனடியாகச் சாத்தியப்படவில்லை.

கண்டி சிங்களவர்களும் தம்மை தனித்துவமான மக்கள் பிரிவினராக அங்கீகரித்து தமது உரிமைகள் பாதுகாக்கக்கப்படவேண்டும் என்று கோரினார்கள். கண்டியிலுள்ள 7 தொகுதிகளிலும் கண்டியைச் சேர்ந்தவர்களே போட்டியிடவேண்டும்என்று தேசிய காங்கிரசிடம் கோரினார்கள். தேசிய காங்கிரஸ் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டிருந்த போதும் நான்கு தொகுதிகளில் கரையோர சிங்களவர்களை கண்டியில் போட்டியிடச் செய்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றினார்கள். அதன்மூலம் கண்டியச் சிங்களவர்களையும் கரையோரச் சிங்களவர்களே பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.
1815 இல் கண்டி கைப்பற்றப்பட்டபோது கண்டி ராஜ்ஜியம் எந்தளவு விசாலமாக இருந்தது என்பது பற்றிய வரைபடம் இது. Henry Marshall's Ceylon - Ageneral Discritopn of the Island 1846
சமஷ்டிக் கோரிக்கை
கரையோர சிங்களவர்கள் மீது நம்பிக்கையிழந்த கண்டியச் சிங்களவர்கள் இதன்போது தான் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தார்கள். அதனை ஆதரித்த எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்க இந்தக் காலப்பகுதியில் தான் சமஷ்டி பற்றிய தனது உறுதியான கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.  கண்டியச் சிங்களவர், கரையோர சிங்களவர், தமிழர்களுக்குமாக மூன்று பிரிவுகளைக் கொண்ட சமஷ்டி அமைப்பாக ஆளப்பட வேண்டும் என்றும் “சமஸ்டியே இலங்கைக்கு உகந்த ஒரேயொரு தீர்வு” என்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து 1926 இல் உரையாற்றியிருந்தார். வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் பிரதேசத்தை அவர் அதில் முன்மொழிந்தார். அந்த உரை விரிவான கட்டுரையாக  “த சிலோன் மோர்னிங் லீடர்” பத்திரிகையில் 17.07.1926 அன்று வெளியானது.

இலங்கைக்கு சிறந்த  அரசியல் முறைமை சமஷ்டி தான் என்று பண்டாரநாயக்க தீவிரமாக கருத்து வெளியிட்ட காலம் அது. சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் அவர் 1926 மே மாதம் ஒரு தொடர் கட்டுரைகளை (மொத்தம் 6 கட்டுரைகள் மே The Ceylon Morning Leader, May 19–June 30, 1926) எழுதி அதற்கான காரணங்களை நிறுவினார். அது மட்டுமன்றி இந்தியாவுடன் சேர்ந்து கூட்டாட்சியாகக் இருப்பது கூட இலங்கைக்கு பாதுகாப்பானது என்றார். ஆனால் இந்த கருத்தை தமிழர் தரப்பில் இருந்து ஜேம்ஸ் டீ ரத்னம் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். ஜேம்ஸ் டீ ரத்னம் இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதி. பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட. பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து  அரசியல்  முற்போக்கு தேசியவாதிகள் கட்சி (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தவர். ரத்னம் போன்ற தமிழ் தலைவர்கள் தவிர.  அப்பேர்பட்ட இருவரும் இந்த விடயத்தில் முரண்பட்டு நின்றார்கள். அதுமட்டுமன்றி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்ட டொனமூர் தலைமையிலான ஆணைக்குழு 1927 இல் விசாரணையை தொடங்கியபோது அதன்முன் கண்டி தேசிய சங்கம் (உடரட்ட ஜாதிக சபாவ) அமெரிக்க மாதிரியிலான சமஷ்டி கோரிக்கையை வலியுறுத்தியது. பண்டாரநாயக்கவும் ஆணைக்குழுவின் முன் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்.

டொனமூர் ஆணைக்குழு இக்கோரிக்கைகளை கருத்திற் எடுக்கவில்லை. அதற்கான பிரதான காரணங்கள் மூன்று.
  1. பிரதானமானது தமிழர் தரப்பில் எவரும் சமஷ்டியைக் கோரவில்லை.
  2. சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தவர்கள் சிறு கோஷ்டியே
  3. டீ.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட சிங்களத் தலைவர்கள் பலர் ஓரணியில் தேசிய காங்கிரஸ் என்கிற பலமான அமைப்பின் மூலம் இலங்கைக்கு சுயாட்சியைக் (சுதந்தரம் அல்ல டொமினியன் அந்தஸ்ததை) கோரியிருந்தார்கள்.
சில வேளை தமிழர் தரப்பும் இதையே அன்று வலியுறுத்தியிருந்தால் தமிழ் மக்களுக்கான சுயாட்சியைக் கொண்ட ஒரு சமஷ்டி முறை அன்றே உருவாகியிருக்க வாய்ப்புகள் இருந்தன.

ஒன்றை மீண்டும் உணர்ந்துகொள வேண்டும். இலங்கையில் சமஸ்டிக் கோரிக்கையை முதன் முதல் முன்வைத்தவர்கள் சிங்கள பௌத்தர்களே. அப்போதும் கூட தமிழர் தரப்பில் அதனை ஆதரித்து இருக்கவில்லை. அதுமட்டுமன்றி சமஸ்டியை எதிர்க்கவும் செய்தார்கள். தமக்கு இருக்கின்ற அமைப்பு முறைக்குள் நியாயம் கிட்டும் என்கிற நம்பிக்கையில் தமிழ் மக்கள்  தமது அரசியலை முன்னெடுத்தார்கள் என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.

கண்டியச் சிங்களவர்களின் சமஸ்டிக் கோரிக்கையை இன்று விமர்சிக்கும் சிங்களப் பேரினவாதிகள் கண்டியச் சிங்களவர்களின் கோரிக்கை என்பது கண்டிய “ரதல” மேட்டுக்குடியினரின் கோரிக்கை என்றும், உயர்சாதி கோரிக்கை என்றும் விமர்சிப்பதை காண முடிகிறது. “சமஸ்டிக் கோரிக்கை என்பது இன்றும் தேவையில்லை அன்றும் தேவையிருக்கவில்லை என்றும் அது அன்றும் இன்றும் ஒரு குறுகிய உள்நோக்கம் கொண்ட கோரிக்கையே” என்று திரித்து புனைவதற்கு அவர்களுக்கு இப்படி ஒரு தர்க்கம் தேவைப்படுகிறது.

சமஷ்டி என்றால் அது நாட்டையே பிளவுபடுத்திவிடும் என்கிற பீதியை கிளப்புவோருக்கு அன்றே பண்டாரநாயக்க கூறியதை இங்கு நினைவுக்கு கொண்டு வர வேண்டும். யாழ்ப்பாணத்தில் 27.07.1926 அன்று கலாநிதி ஐசக் தம்பையா தலைமையில் நடந்த கூட்டத்தில் வைத்து எஸ்.டபிள்யு ஆர்.டீ.பண்டாரநாயக்க சமஷ்டி குறித்து இப்படி குறிப்பிடுகிறார்.

“ஆயிரத்தொரு எதிர்ப்புகள் சமஷ்டி முறைக்கு எதிராக எழலாம். ஆனால் அந்த ஆட்சேபனைகள் இல்லாது போகும் ஒரு சந்தர்ப்பத்தில் சமஷ்டி முறையே ஒரே தீர்வு என்பதை நாம் புரிந்து கொள்வோம்.”

இதனால் தான் இலங்கையின் சமஷ்டி கருத்தாக்கத்தின் தந்தை என்று பண்டாரநாயக்கவை இன்றும் பலர் குறிப்படுவது வழக்கம்.

பண்டாவின் கரணம்
ஆனால் சரியாக 30 வருடங்களின் பின் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் அவர் யாழ்ப்பாணத்தில் அன்று வெளியிட்ட சமஸ்டிக் கொள்கையை எஸ்.ஜே.வி செல்வநாயகம் கோரியபோது முற்றாக நிராகரிக்கும் அளவுக்கு மாறியிருந்தார். தமிழரசு கட்சியை ஆங்கிலத்தில் “சமஷ்டி கட்சி”யென்றே (Federal Partry) அழைக்கப்பட்டது. அந்தப் பெயரே சிங்கள சமூகத்தில் கேலிக்குள்ளாக்கப்பட்டது.  சமஷ்டியை மட்டுமல்ல பண்டாரநாயக்க கண்டியச் சிங்களவர் பற்றி கதைப்பதையும் நிறுத்திக்கொண்டார். அவர்களின் தனித்துவ உரிமை குறித்தும், அவர்கள் மீதான புறக்கணிப்பு குறித்தும் அவர் பேசுவதை தவிர்த்துக் கொண்டார். ஒரு தேசிய தலைவராக ஆக வேண்டும் என்றால் “சிங்கள பௌத்த”த் தனத்தின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு தேசியத் தலைவனாக ஆகவேண்டும். அப்படி என்றால் அப்பேர்பட்ட “சிங்கள-பௌத்த தேசிய” நிகழ்ச்சிநிரலுக்கு தலைமை கொடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

இலங்கை தேசிய காங்கிரசில் பண்டாரநாயக்க ஒரு அமைப்பின் பிரதிநிதியாக அவர் சேரவில்லை. ஒரு தனிநபராகத் தான் அவர் அதில் அங்கம் வகித்தார். ஆனால் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து அதிருப்தியுற்று அவர் சிங்கள மகா சபையை தோற்றுவித்தார். 1927 ஆம் ஆண்டு அவர் டொனமூர் ஆணைக்குழுவின் முன் தோன்றி சாட்சியமளிக்கையில் தேசிய காங்கிரஸின் கொள்கைக்கு மாறான கோரிக்கையே அவர் முன்வைத்தார். 1927 ஆம் ஆண்டு அவர் தேசிய காங்கிரசின் செயலாளர் என்பதையும் கவனிக்க வேண்டும். 1927, 1928, 1929, 1930 ஆகிய வருடங்களில் பண்டாரநாயக்க அதன் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 1932 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராகவும் ஆனார் பண்டாரநாயக்க. ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் 1934 இல் அவர் சிங்கள மகா சபையை அமைத்துக் கொண்டார்.

பண்டாரநாயக்கவின் இந்த மாற்றங்கள் ஏற்படுமுன்னமே அவர் தன்னை இலங்கையின் அரசியல் தலைமைக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள அவர் இலங்கைக்கு வந்த நாள் தொடக்கம் மேற்கொண்ட அக-புற மாற்றங்கள் என்ன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates