பெருந்தோட்ட கல்வி வரலாறானது தாமதித்த நிலையில் தான் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுகின்றது. 1972ஆம் ஆண்டு தோட்டப்பாடசாலைகளாக காணப்பட்டவை அரச பாடசாலைகளாக உள்ளீர்க்கப்பட்டன. அதன் பின்னர் ஒரு நிறுவன கட்டமைப்புக்கு உட்படும் தோட்டப் பாடசாலைகள் இன்றுவரை பெரும்பாலும் ஒரு மந்த நிலையான வளர்ச்சியையேக் கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்கள் அடைந்துள்ள கல்வி அடைவுமட்டமானது மலையக பாடசாலைகளை விட அதிகமானது. குறிப்பிட்ட ஒரு சில பெருந்தோட்ட தமிழ்ப் பாடசாலைகள் வளர்ச்சிப்போக்கை கொண்டிருந்தாலும் அவை நகரங்களை மையப்படுத்தி இருப்பதால் முழுமையாக தோட்டப்பகுதிகளுக்கு வளப்பகிர்வை வழங்க முடியாது. பெருந்தோட்டங்களை மையப்படுத்தி காணப்படும் பாடசாலைகள் ஒரு அறிவுச்சூழல் இன்மையால் தனிமைப்பட்ட நிலையில் உள்ளது.
பெருந்தோட்டங்களை அண்டிய பாடசாலைகள் தமக்கான மாணவர் உள்வருகையை பெரும்பாலும் பெருந்தோட்ட மக்களிடமிருந்தேப் பெறுகின்றன. எனவே பெருந்தோட்ட முன்பள்ளிக்கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது. தோட்டப்பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றாலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இன்றுவரை தோட்ட நிர்வாகங்களிடமே இருக்கின்றன. ஆரம்பத்தில் கொழுந்து மடுவங்களைப் போல பிள்ளை மடுவங்கள் (பிள்ளைக்காம்பரா) காணப்பட்டன. படிப்படியாக பெயரளவில் வளர்ச்சி அடைந்து இன்று முன்பிள்ளை அபிவிருத்தி நிலையம் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளன.
பெருந்தோட்ட கம்பனிகளின் சுரண்டலுடன் கூடிய ஏதேச்சையதிகார போக்குக் காரணமாக பறிக்கப்பட்ட தொழிலாளர் நலன்சார் விடயங்களில் குழந்தை பராமரிப்பு நிலையங்களும் அடங்குகின்றன. தோட்ட நிர்வாகத்தின் மூலம் முகாமைத்துவம் செய்யப்படும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இன்றுவரை எவ்வித பண்புசார் அபிவிருத்தி இலக்குகளும் எட்டப்படவில்லை. வேலைக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகளை பராமரிக்கும் அடிப்படை தேவையை மட்டுமே இவை பூர்த்திச் செய்கின்றன.
பாலூட்டப்படும் குழந்தைகள் முதல் வயது 5 வருடங்கள் வரையுள்ள சிறுவர்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றனர். அந்தந்த வயதுப்பிரிவுக்கு அவசியமான வழிக்காட்டல்கள் பிரத்தியேகமாக வழங்கப்படாமல் வெறுமனே ஒரு பராமரிப்பகமாக மட்டுமே சிறுவர் நிலையங்கள் இருந்து வருகின்றன. இங்குள்ள ஆளணி, பௌதீக வசதிகள் என்பவற்றுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்பு என்ற ரீதியில் தரக்குறைவான ஒரு சேவையே வழங்கப்படுகின்றது. 5 தொடக்கம் 25 வரையான பல்வேறு வயதுடைய பிள்ளைகளைப் பராமரிக்க வெறும் இரண்டு பேர் மட்டுமே நியமிக்கப்படுள்ளனர். பிள்ளை பராமரிப்பில் எவ்வித தேர்ச்சியும் இன்றியே இவர்களில் பெரும்பாலானோர் உள்ளனர்.
தோட்ட சுகாதார துறையை எடுத்துக் கொண்டால், தோட்ட வைத்திய உதவியாளரின் (நுஆயு) தலைமையில் இயங்குகின்றது. எனினும் முறையாக பயிற்றப்பட்ட தோட்ட வைத்திய அதிகாரிகள் பெரும்பாலும் குறைவாகவே உள்ளனர். காலத்துக்கேற்ற பயிற்சி நெறிகளோ, தகுதிகாண் தடைத்தாண்டல்களோ இவர்களுக்கு இல்லை. எனவே விடயஞானம் இன்றி தமக்கு தெரிந்த சுகாதார சேவைகளை வழங்குகின்றனர். அவர்களுக்கு கீழ் உள்ள கட்டமைப்பான குடும்பநல உத்தியோகத்தர், மருத்துவிச்சி, சேமநல உத்தியோகத்தர், சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர்கள் ஆகியோரும் திறனடிப்படையில் தேர்ச்சி அடையில்லை.
பெருந்தோட்டங்களின் நலன்புரி விடயங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமே (Pர்னுவு) Pடயவெயவழைn ர்ரஅயn னுநஎநடழிஅநவெ வுசரளவ பொறுப்பு. அந்தவகையில் பெருந்தோட்ட சுகாதாரத்துக்கெனவும் ஏனைய நலன்புரி விடயங்களுக்கும் அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் மனிதவள நிதியத்துக்கு பங்களிப்புத் தொகையை செலுத்துகின்றன. அண்மையில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களுக்கும் ட்ரஸ்ட் நிறுவனமே பொறுப்பாகச் செயற்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர்களுக்கான டிப்ளோமா பயிற்சிநெறி ஒன்று மனிதவள நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டது. இதன்மூலம் 415 பேர் இலவசமாக முன்பிள்ளை அபிவிருத்தியில் டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இவர்களுக்கூடாக இத்துறையை அபிவிருத்திச் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனினும் இங்கு காணப்படும் பௌதீக வசதிகளின் போதாமை அதற்கு சவாலாக உள்ளது.
தற்போது பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாரம்பரியமாக காணப்படும் பராமரிப்பு முறைகளே காணப்படுகின்றன. தொட்டில் வசதிகள், சிறுவர் நிலையத்துக்கான கற்றல் உபகரணங்கள், பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், உணவுப்பாண்டங்கள் என்பன தன்னிறைவாக பூர்த்திச் செய்யப்படவில்லை. ஒரு சில சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மிகவும் பழைய கட்டிடங்களிலேயே அமையப்பெற்றுள்ளன. போதிய பாதுகாப்பு, மின்சாரம், சுத்தமான குடிநீர் என்பனவும் அனேகமாகக் கிடைப்பதில்லை.
நிலைய பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தப்படும் நபர்களும் போதிய விடயஞானம் இன்றி குழந்தை பராமரிப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தரமற்று காணப்படும் நிலையங்களில் விபத்துச் சம்பவங்களும் அதிகமாகப் பதிவாகியுள்ளன. குழந்தைகள் நோய்வாய்ப்படல் அல்லது விபத்துக்களின் போது தோட்ட வைத்திய நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கான வசதிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. இதன்காரணமாக ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவர்களை நகரங்களுக்கு கொண்டு செல்லவேண்டிய தேவையே உள்ளது.
அவசர சிகிச்சைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகளும் பெருந்தோட்டங்களில் இல்லை. கர்ப்பிணி பெண்களையும் வயதான நோயாளிகளையும் தோட்ட லொறிகளிலும் பாதுகாப்பு வாகனங்களிலுமே பெரும்பாலான இடங்களில் கொண்டு செல்கின்றனர். இதன்மூலம் இடைவழியில் இறப்புச்சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. இன்று நாடுமுழுவதும் “சுவசெரிய” அம்புலன்ஸ் சேவை இடம்பெறுகின்றது. இச்சேவையை பெற்றுக்கொள்ளும் வசதி எம்மவர்களுக்கு உண்டு. எனினும் நகரங்களிலிருந்து கரடுமுரடான பாதையூடாக தோட்டங்களை அடைவதற்கு பெறும் சிரமப்படவேண்டியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில தோட்டங்களை மையப்படுத்தி பிரதேச வைத்தியசாலைகளில் இவ்வாறான அம்புலன்ஸ் சேவைகளை தயார் நிலையில் வைப்பதன் மூலம் குறைந்த நேரத்தில் நோயாளிகளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கலாம். இவ்வாறான அரச சேவைகள் பெருந்தோட்டத்துக்குள் வரும்போது பண்புசார் அபிவிருத்திகளை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் இந்நாட்டில் சராசரி பிரஜை ஒருவர் அனுபவிக்கக்கூடிய அனைத்து வரப்பிரசாதங்களையும் எம்மவர்களும் நுகரலாம்.
பெருந்தோட்ட சுகாதாரத்துறை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படுமானால் சிறுவர் நிலையங்கள் முதல் தனிநபர் சுகாதாரம் வரை அனைத்தும் ஒரு அபிவிருத்தியை எட்டக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. அதேப்போல் ஆரம்ப சிகிச்சை மையம்இ நோயாளர் விடுதி (றயசன), பொது சுகாதார பரிசோதகர் சேவை (Pர்ஐ), மாதாந்த சிகிச்சை முகாம்கள் (உடiniஉ) என்பனவும் அவசியமாகும். தோட்ட சுகாதாரத்துறை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும் சந்தர்ப்பத்தில் இவை அனைத்தையும் படிப்படியாக பெற்றுக்கொள்ள முடியும்.
உள்ளுராட்சி மன்றங்களின் சேவையும் தோட்டங்களை முழுமையாக சென்றடையாத சூழல் நிலவுகின்றது. தோட்ட கம்பனிகளும் ஊழியர் நலன்புரி விடயங்களை பெரிதாக கவனத்திலெடுப்பதில்லை. எனவே பெருந்தோட்ட மக்கள் எவ்வித சேவைகளையும் இலகுவில் அணுகமுடியாத நிலைமை காணப்படுகின்றது. இதற்கான நிரந்தரத் தீர்வாக பெருந்தோட்ட சுகாதாரத்துறையும் சிறுவர் நிலையங்களும் அரசால் பொறுப்பேற்கப்பட வேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...