Headlines News :
முகப்பு » , , , , , » ஜே.வி.பி.யின் சுயவிமர்சன மரபு! - தோழர் சந்திரசேகருக்கு ஓர் எதிர்வினை - என்.சரவணன்

ஜே.வி.பி.யின் சுயவிமர்சன மரபு! - தோழர் சந்திரசேகருக்கு ஓர் எதிர்வினை - என்.சரவணன்

“ஜே.வி.பியும் பிக்கு அரசியலும்” என்கிற தலைப்பில் சென்றவாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சந்திரசேகர் எனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார்.

“நன்றி சரா.... உங்களது கட்டுரை வலதுசாரிகளுக்கு என்று கூறி இடதுசாரிகள் மீதான விமர்சனமே மேலோங்கியுள்ளது தொடர்ச்சியாக பல வருடங்களாக நான் உங்களை அவதானித்து வருகிறேன் உங்களது கட்டுரை எந்தவகையிலும் ஜே.வி.வியின் வளாச்சிக்கு உதவப்போவதில்லை. என்பதே எனது நிலைப்பாடு. ஏனென்றால் உங்களை பற்றியும் உங்களின் அரசியல் சித்தாந்தம் பற்றியும் எனக்கு ஓரளவு தெரியும். அது உங்களுக்கும் நன்குத் தெரியும். அதாவது ஜே.வி.பி ஏதோ ஒரு வகையில் மகக்ள் மத்தியில் தனது நம்பிக்கையை கட்டியெழுப்பி வருகின்றபோது உங்களை போன்றவர்களின் இவ்வகையான கட்டுரைகள் (நீங்கள் மட்டுமல்ல) அந்த நம்பிக்கையை சிதைப்பதற்கே உதவியிருக்கின்றன. மக்களின் நம்பிக்கைகயை சிதைப்பதற்காகவே எழுதப்படுகிறதா? என்பதே உங்களை போன்றவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதே எனது கருத்து... நன்றி உங்களின் விமர்சனப் பணிகள் தொடரட்டும்...”
என்கிறார் அவர். இந்த நேரத்தில் இப்படியானதொரு விவாதத்துக்கு நான் இழுக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்.

இன்றைய அரசியல் களத்தில் ஜே.வி.பி “பிரதான – மரபான – தேசிய கட்சிகளுக்கு” சிறந்த மாற்றாக இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்துகொண்டு இதற்கான தார்மீக பதிலை அளிப்பது நமது கடமை. ஜே.வி.பி.யை ஆதரிப்பவர்களை விமர்சனமின்றி ஆதரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை எதிர்பார்ப்பது மார்க்சிய தார்மீகம் அல்ல.

என்னை விளிக்கும் போது “சரா” என்று விளித்தத்தைக் கவனித்தேன். உங்களை முதன் முதல் 90களின் நடுப்பகுதியில் அன்றைய “கம்லத் தோழர்” (இன்றைய விமல் வீரன்ச) கொழும்பு பொது நூலகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்தபோது உங்களை "ரமேஸ்" என்றே அறிமுகப்படுத்தியது இன்றும் ஞாபகம். அதன் பின்னர் நாம் இருவரும் நமக்கு இடையில் தனிப்பட்ட நண்பர்களாகவும், நெருங்கிய குடும்ப நண்பர்களாகவும் ஆனோம். தோழர் என்றே பரஸ்பரம் நாம் ஒருவரையொருவர் விளித்துக்கொள்வோம். ஆனால் எப்போதெல்லாம் நாம் அரசியல் விவாதம் செய்கிறோமோ; அந்த விவாதம் சூடு பிடிக்கும்போது உங்களுக்கு நான் “சரா”வாக ஆக்கப்பட்டுவிருகிறேன். நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களை மாக்சிய திரிபு என்று வியாக்கியானப்படுத்தி “ரமேஸ்” என்று தொடர்ந்து அழைத்திருக்க முடியும். ஆனால் எனக்கு அரசியல் சகிப்புத் தன்மை உண்டு தோழர். விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ளாமல் போகுமளவுக்கு நான் அரசியல் வரட்சியடையவில்லை. அதனால் தான் இந்த பதிலும்.

ஆனால் நீங்களோ “உங்களைப் பற்றி எனக்குத் தெரியும்” என்கிற பாணியில் ஒரு சதிகாரனை சுட்டுவது போல கருத்து கூறியிருக்கிறீர்கள். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கும் எனக்கும் இடையிலான அரசியல் உரையாடல் கடும் விவாதமாக மாறியிருக்கின்றன. ஆனால் நாகரிகமாகவே நடந்திருக்கிறது என்பது ஆறுதல்.

என்னால் அன்று தொடக்கம் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உரிய பதில் கிடைப்பதற்குப் பதில் வெறும் அர்த்தமற்ற இழுபறி விளக்கங்களாகத் தான் அவை இருந்திருக்கின்றன. தேவைப்பட்டால் நாம் விவாதித்த விடயங்கள் குறித்து எனது நினைவில் உள்ளவற்றை வேறு ஒரு பதிவில் விளக்க முடியும். எனது சிக்கல் என்னவென்றால் அன்று நான் முன்வைத்த அந்த விமர்சனங்கள் இன்றும் செல்லுபடியானவை. என்பது தான்.

தேசிய இனப்பிரச்சினையை அணுகும் விதம் குறித்த அடிப்படை விவாதங்கள் அவை.

இடதுசாரிய விமர்சன மரபு
90களில் நான் புதிய ஜனநாயக கட்சியினரை சில இடங்களில் விமர்சித்ததற்காக அவர்கள் என்னை ஜே.வி.பி காரன் என்று முத்திரைகுத்தியதுடன், விமர்சனமாக பார்க்காது தமது “புதிய பூமி” பத்திரிகையில் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கினர். போதாதற்கு சரிநிகரில் நான் பாதுகாப்புக்காக பயன்படுத்திவந்த எனது புனைபெயர்களை பத்திரிகையில் வெளியிட்டு அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுத்தார்கள்.

நான்காம் அகில “தொழிலாளர் பாதை” கட்சியினர் (இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி) என்னை அவர்களின் மருதானையிலிருந்த கட்சி அலுவலகத்துக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நிதானமிழந்து என்னை சீ.ஐ.ஏ காரன் என்றார்கள். சரிநிகர் பத்திரிகை அப்போது அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதியில் வெளியிடப்பட்டது தான் அவர்கள் அந்த அவதூறுக்கு கிடைத்த பெரும் சாட்சியம்.

இலங்கையின் வரலாற்றில் இதுவரை பிரதான தேசிய வலதுசாரிக் கட்சிகள் காலம் நெடுகிலும் சந்தித்த பிளவுகளை விட அளவில் அதிகமானவை இடதுசாரிக் கட்சிகள் கண்ட பிளவுகள். வலதுசாரிக் கட்சிகள் பெரும்பாலும் கோட்பாடுகளிலும், விதிகளிலும் தங்கியிருப்பதில்லை. இடதுசாரிக்கட்சிகள் அப்படியல்ல; கட்சியின் முழு நடத்தையும் தத்துவங்களிலும் கோட்பாட்டிலும் தங்கியிருப்பவை. எனவே கோட்பாட்டு விவாதம் எனும் பேரில் பிளவுகளையேஅளவுக்கு அதிகமாக சந்தித்து இன்று பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் சின்னாபின்னமாகி, அழிந்து நாசமாகப் போய் விட்டன.

ஜனநாயக மத்தியத்துவத்துக்கும், விமர்சனம் – சுயவிமர்சனத்துக்கு போதிய வாய்ப்புகளும் இக்கட்சிகளில் இடம் இருந்திருந்தால் பெரும்பாலான பிளவுகளை தவிர்த்திருக்க முடியும். பல சந்தர்ப்பங்களில் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களில் போய் முடிந்திருக்கின்றன.

90களின் ஆரம்பத்தில் ஜே.வி.பி மீள உயிர்க்க காரணமாக இருந்தவர்கள் ஹிரு குழுவினர். தேசிய இனப்பிரச்சினை, சுயநிர்ணய உரிமை குறித்த விவாதம் மீண்டும் கட்சிக்குள் தலைதூக்கியபோது கட்சிக்குள் இனவாதத்தின் செல்வாக்கும் மேலெழுந்தது. அப்போது ஹிரு பத்திரிகையின் முக்கிய ஆசிரியராக இருந்த ரோஹித்த பாஷன “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின்” அவசியத்தை வலியுறுத்தியதற்காக அவரை “பொம்பிள பக்கத்துக்கு இழுக்கிறான்” என்று தனிப்பட்ட ரீதியில் அசிங்கப்படுத்தப்பட்டார். (அவரின் காதலி ஒரு தமிழ் பின்னணியைக் கொண்டவர்.). 90களின் நடுப்பகுதியில் ஜே.வி.பியை விட்டு வெளியேறியோர் வெளியில் இருந்து தோழமைபூர்வமான விமர்சனங்களை வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகித்தர்வகளை ஜே.வி.பி வன்முறையால் தான் எதிர்கொண்டது. அதற்கு நானும் சாட்சியாக இருக்கிறேன்.

சுனிலா அபேசேகர (மகளிர் பிரிவு செயற்பாட்டாளரும், “விடுதலை கீதம்” குழுவின் பாடகியும்), கெலி சேனநாயக்க (அன்றைய பொதுச்செயலாளர்) போன்றோர் கட்சிக்குள் கோட்பாட்டுப் விவாதத்தில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட காதலை அசிங்கப்படுத்தி அரசியல் விவாதத்தை காயடித்ததன் விளைவு அவர்கள் இறுதியில் கட்சியை விட்டு வெளியேறினார்கள். பின்னர் வெளியேற்றப்பட்டதாகக் ஜே.வி.பி கூறிக்கொண்டது. 

முக்கியமாக ஜே.வி.பி.யின் வரலாற்றில் சகிப்பற்றதன்மைக்கும், சுவிமர்சனங்களை அவதூறுகளாலும், வன்முறைகளாலும் பதில் கொடுத்த மரபுக்கும் ஒரு தொகை சம்பவங்களைப் பட்டியலிட முடியும்.

புரட்சிகர கட்சியொன்று விமர்சனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும். மாஓ சேதுங் நமக்கு இப்படி கூறுகிறார்
“உணர்வுபூர்மாக சுய விமர்சனம் செய்துகொள்வது, மற்றக் கட்சிகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும் மற்றொரு அம்சமாகும். நாம் வழக்கமாகச் சொல்வது போல, அறையைத் தொடர்ந்து சுத்தம் செய்யாமல் இருந்தால் தூசு சேர்ந்துபோகும். நாம் முகம் கழுவும் பழக்கத்தை விட்டுவிட்டால் நமது முகம் அழுக்காகத்தான் இருக்கும். அதுபோல, நமது தோழர்களின் மூளையிலும், கட்சி வேலையிலும் கூடக் குப்பைகள் சேர்ந்துபோகலாம். நாம் அங்கும்கூட கூட்டுவதையும் கழுவுவதையும் செய்ய வேண்டும்... நமது வேலையைத் தொடர்ந்து சரிபார்த்துக்கொள்வதற்காக, அந்த நிகழ்வுப் போக்கில் ஜனநாயக வேலைநடை முறையை உருவாக்கிக்கொள்வதற்காக, விமர்சனத்தையோ அல்லது சுய விமர்சனத்தையோ கண்டு அஞ்சாதிருத்தல் அவசியம். “பேசியது யார் என்பதல்ல, பேசியது என்ன என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டும்”, “தப்பு செய்திருந்தால் திருத்திக்கொள்ளுங்கள், இன்னும் செய்யவில்லையென்றால் எச்சரிக்கையாக இருங்கள்...”
மாஓ சேதுங் -"On Coalition Government" (24, ஏப்ரல் 1945), தெரிவு நூல், Vol. III, பக்கம். 316-17.
“விமர்சனத்தைப் பொறுத்தவரை அதனை உரிய சமயத்தில் செய்யுங்கள். எல்லாம் முடிந்த பின்னர் விமர்சிக்கும் போக்கைக் கைவிடுங்கள்.”
மாஓ சேதுங் - On the Question of Agricultural Co-operation (July 31, 1955), 3rd ed., p. 25.

லெனின் இப்படி விளக்குகிறார்.
“ஒரு தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது அதைச் செய்வதற்குக் காரணமாக இருந்த நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்வது, அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளைத் தீர ஆராய்வது – இவையெல்லாம் ஒரு தீவிரமான கட்சிக்குரிய அடையாளமாகும் (லெ. தொ. நூ. 31.57)
சிங்கள இடதுசாரிக் கட்சிகளாக
இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள்  இலங்கையில் சிங்கள மொழியில் தான் இயங்கியிருகின்றன. விதிவிலக்குகளை தவிர்த்துப் பார்த்தால். கூட்டப் பேச்சுகள், உட் கட்சி விவாதங்கள் செயற்பாடுகள், போஸ்டர்கள், பிரசுரங்கள், வெளியீடுகள், ஊடகங்கள், இன்றைய இணையத்தளங்கள் வரை அனைத்துமே சிங்களத்தில் மட்டும் தான் வெளியிடப்படுவந்திருகின்றன. விதிவிலக்காக சிலவற்றை காண்பித்து தமிழில் இதோ வெளியிட்டிருக்கிறோமே என்று வாதிடலாம். இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் அப்படித்தான் பதிலளித்து வந்துள்ளன. ஒரு ‘பாட்டாளி வர்க்கக் கட்சி” எப்படி “சிங்களப் பாட்டாளிவர்க்க கட்சி”யாக சுருங்க முடியும் என்கிற கேள்விக்கு எவரும் பதிலளிப்பதில்லை. பதிலளித்ததுமில்லை.

அப்படியிருக்கும்போது அக்கட்சிகளை அறிவதற்கும், கணிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான வாய்ப்புகள் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியதில்லை என்று தான் நான் கூற முடியும். ஜே.வி.பி.யும் இதில் விதிவிலக்கில்லை.

சிங்களமும் தெரிந்த, இடது சாரி இயக்கங்களோடு செயற்பட்ட, அந்த அரசியலை விளங்கிக்கொண்ட என் போன்றோர் மட்டுமே இதனை அணுக எஞ்சியிருக்கிறோம். எனவே தான் ஜே.வி.பியையும் பல சந்தர்ப்பங்களில் ஆதரித்து இயங்கினாலும் தேவையான இடங்களில் தமிழில் விமர்சனங்களையும் செய்ய பின் நின்றதில்லை. சிங்களச் சூழலில் ஜே.விபி.யின் மீதான இடதுசாரி அணுகுமுறையுடனான விமர்சனங்கள் பல நூல்களாகவே வெளிவந்துள்ளன. தமிழில் இத்தகையை விமர்சனங்கள் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். எனவே எனது விமர்சனங்களையும் எதிரிகளின் விமர்சனங்களைப் போல எதிர்கொள்ளப் பார்க்கிறீர்கள் என்பதே எனது விமர்சனம். ஜே.வி.பி.யை விமர்சிக்க எதிரியின் முகாமில் இருந்தால் தான் செய்ய முடியுமா? அப்படி விமர்சிக்க எதிரியின் முகாமுக்கே போகத்தான் வேண்டுமா? விமர்சிப்பவர்கள் எல்லோரும் வலதுசாரி முகாமுக்குப் போய்  தான் ஆகவேண்டுமா? அதைத்தான் ஜே.வி.பி முன்மொழிகிறதா?

வலதுசாரி, முதலாளித்துவக் கட்சிகள் குறித்து வினையாற்றும் போது நாம் அவற்றை அம்பலப்படுத்துகிறோம் எதிர்க்கிறோம். ஆனால் இடதுசாரி முகாமை அணுகும் போது நாம் நேசபூர்வமான விமர்சனங்களையே முன்வைக்கிறோம். அதற்கான அடிப்படைக் காரணமே மார்க்சிய விமர்சன – சுயவிமர்சன மரபின் மீதுள்ள நம்பிக்கை தான்.  அவ்விமர்சனங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு வினையாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் தான். ஆனால் பெரும்பாலும் இது நிகழ்வதில்லை. விமர்சனம் ஒன்று வந்தவுடன் எடுத்த எடுப்பில் அவ்விமர்சனத்தை சதியாகவும், எதிராகவும் கருதும் மரபை மறுபக்கம் வளர்த்துவைத்திருக்கிறோம். அதுவே பல ஆரோக்கியமான தோழமை சக்திகளை புறந்தள்ளி, ஓரங்கட்டி, அந்நியப்படுத்தி, தூரவிலத்தி வைக்க காரணமாகியிருக்கிறது. ஜே.விபியும் தமது சுயவிமர்சனத்தின் சுயமரபைப் பற்றியாவது முதலில் சுயவிமர்சனம் செய்துகொள்ளும்படி பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. ஜே.வபி.பி.யின் சுயவிமர்சன மரபு குறித்து ஏராளமான விமர்சனங்கள் சிங்களத்தில் வெளிவந்துள்ளன. தமிழில் அப்படி ஒரு நூல் கூட இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.

ஜே.வி.பி.யின் அரசியல் நடத்தையில் நல்ல மாற்றங்கள் காணப்பட்டாலும் கூட முன்னைய அரசியல் நடத்தை குறித்த விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. முதலாவது விடயம் அந்த வரலாறு விமர்சன ரீதியில் தமிழிலும் பதிவு செய்யப்படவேண்டியை அவை. அடுத்தது ஜே.வி.பி. அதனை முறையாகவும் முழுமையாகயும் பகிரங்க சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி கடக்க வேண்டும். இதை அவர்களாக செய்ய முன்வராத வரை வெளிவிமர்சனங்கள் ஓயப்போவதில்லை.

ஜே.வி.பியை நிராகரிக்க, அல்லது எதிர்க்க மேற்படி விமர்சனங்கள் எமக்கு போதுமானவை அல்ல. எனவே ஜேவி.பிக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதுமில்லை.

நன்றி  - அரங்கம் 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates