கடந்த அக்டோபர் 3 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு அதிகாலை 5 மணிக்கு மருத்துவ பரிசோதனைக்கு வருகைத்தந்த நோயாளியொருவர் பரிசோதனைக்கு காத்திருந்தவேளை அவ்விடத்திலேயே விழுந்து உயிரிழந்திருந்தார். அதேவேளை 9.15 மணிவரையும் மருந்து வழங்குபவரும் வருகை தராமையால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வாறு ஒரு முகப்புத்தகப் பதிவினை அண்மையில் காணக்கூடியதாகவிருந்தது. மஸ்கெலியா பிரதேச பெருந்தோட்ட மக்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு பாரிய பங்களிப்புச் செய்ததில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு முக்கிய பங்குண்டு. மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட மக்கள் தூர பிரதேசங்களுக்குச் சென்று சிகிச்சை பெறும் சிரமத்தையும் இவ் வைத்தியசாலை போக்கியது. ஆனால் சமீப காலமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறை, ஆளணிப் பற்றாக்குறை, பராமரிப்பின்மை, ஊழியர்களின் அசமந்தப்போக்கு, நோயாளர்களை கவனிக்காமை போன்ற காரணங்களினால் தனக்குரிய தனித்துவத்தை இழந்து வருவதுடன் இவ் வைத்தியசாலையை நம்பியிருந்த மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளனர்.
பழைய மஸ்கெலியா நகரத்தில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட வைத்தியசாலை நீர்த்தேக்கத்தின் உருவாக்கம் காரணமாக இல்லாமல்போன நிலையில் மஸ்கெலியா புதிய நகர உருவாக்கத்தின் பின்னர் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் விஜேசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க மஸ்கெலியா பிரதேச மக்களுக்காக 165 படுக்கை வசதிகளையும் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கென தனியான படுக்கை வசதிகளை கொண்ட 6 அறைகளையும் கொண்ட ஆதார வைத்திய சாலை உருவாக்கப்பட்டிருந்தது.
1972 ஆம் ஆண்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரியதிலக மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் ஆரியதாச ஆகியோரினால் கையளிக்கப்பட்டது. அப்போது அவ்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகூடம், பல் லைத்தியர் கூடம், மருந்தகம், வெளிநோயாளர் பிரிவு, 24 மணித்தியால சேவைக்கென வைத்திய பிரிவு, மாவட்ட வைத்திய அதிகாரி காரியாலயம், வைத்தியசாலை காரியாலயம், தேநீர்சாலை, அம்பியூலன்ஸ் வண்டி, வாகன தரிப்பிடம், சவச்சாலை, ஆய்வுகூடம், வைத்தியர்கள் வீடுதிகள், தாதியர் விடுதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் காணப்பட்டன.
ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாற்றம் கண்டுள்ளது. 10 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை முறையான பராமரிப்பின்றிய நிலையில் காடு மண்டிய நிலையில் காணப்படுவதுடன் சிகிச்சைபெற செல்லும் மக்கள் அமர்வதற்குகூட ஆசனங்கள் இல்லாத நிலையிலும் காகங்கள், குருவிகள், புறாக்களின் வாழ்விடமாகவும் மாற்றம் கண்டுள்ளது. தற்போது மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் முக்கிய பிரச்சினையாக ஆளணி பற்றாக்குறையே காணப்படுகின்றது. மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய நிலைதொடர்பில் அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் மூலம் பெற்றுக்கொண்ட (CPC/MH/RTI/1) தகவல்களின் அடிப்படையில் அட்டவணை 01 இல் தற்போது வைத்தியசாலையில் கடமைபுரியும் உத்தியோகத்தர் எண்ணிக்கையும் வெற்றிடம் நிலவும் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் 2015 ஆம் ஆண்டு 4471 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் 2016 இல் 5042 பேரும், 2017 இல் 4553 பேரும், 2018 இல் 3969 பேரும், 2019.08.01 ஆம் திகதி வரை 2063 பேரும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை 2015 இல் 36767 பேர் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 2016 இல் 30184 பேரும், 2017 இல் 40480 பேரும், 2018 இல் 40498 பேரும், 2019.08.01 வரை 23498 பேரும் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறவரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் அசமந்த போக்குடனும் நோயாளர்களை தரக்குறைவுடனும் நடத்தும் சூழல் காணப்படுகின்றது.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக், கர்ப்பகால கிளினிக், நோய்தடுப்பு கிளினிக், N.ஊ.வு. கிளினிக், மனநல கிளினிக், பல்சிகிச்சை கிளினிக், வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் வார்ட் 2, பெண்கள் வார்ட் 2, மகப்பேற்று வார்ட் 1, குழந்தைகள் வார்ட் 1 போன்ற பல்வேறு சிகிச்சைகள் காணப்படுவதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கும் நிலையிலும் காலை 7 12 மணி வரையிலுமே கர்ப்பிணித் தாய்மார்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களுடைய சொந்த கிளினிக்குகளிலேயே கடமையாற்றுகின்றனர். அத்துடன் கர்ப்பிணிப்பெண்கள் அனைவரும் மருத்துவ அதிகாரியின் சொந்த கிளினிக்கிலேயே பணம் செலுத்தி கர்ப்பகால சிகிச்சைகளை பெற வேண்டும். வேறு எங்கும் செல்ல முடியாது என்ற கட்டுப்பாடும் காணப்படுகின்றது. தற்போது மகப்பேற்றுப் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன் கர்ப்பிணி பெண்கள் மகப்பேற்றுக்காக கிளங்கன் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் கிளங்கள் வைத்திய சாலையில் நோயாளர்கள் துன்புறுத்தப்படுவதாக அண்மையில் கொட்டகலை பிரதேசசபை தலைவரினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு பல் சிகிச்சைக்கான கிளினிக்குகள் காணப்படுவதாக கூறப்பட்டாலும் வாரத்தில் இரண்டு நாட்களே பற் சிகிச்சை நிபுணர்கள் வருகைத்தருகின்றனர்.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு 2015 ஆம் ஆண்டு 0.9 மில்லியன் ரூபா நிதி மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2016 இல் 3.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2017 - 2019 வரையான காலப்பகுதியில் வைத்தியசாலையின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையினை அட்டவணை 02 காண முடியும்.
தற்போதுள்ள வளங்களின் மூலம் மக்களுக்கு சேவையற்றக்கூடியளவான நிதியொதுக்கீடுகள் மாகாண சுகாதார அமைச்சால் வழங்கப்படுகின்ற போதும் மக்களுடைய தேவைகள் கருத்தில் கொள்ளப்படாமல் ஊழியர்களும் வைத்திய அதிகாரிகளும் செயற்படுகின்றமையானது, நோயாளர்களை சிரமத்துக்குள்ளாக்குவதுடன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் மீது களங்கத்தையும் ஏற்படுத்துகின்றது.
அதேவேளை மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சுற்றாடல் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றிய நிலையில் காணப்படுகின்றது. இதனால் ஆபத்தான காட்டு விலங்குகள் ஊடுறுவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் போதியளவான சிகிச்சைகள் காணப்படாத நிலையில் கிளங்கன், நாவலப்பிட்டி, நுவரெலியா, கண்டி போன்ற வைத்திய சாலைகளுக்குச் செல்ல வேண்டி ஏற்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே இவை தொடர்பாக மத்திய மாகாண சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை மத்திய மாகாணத்துக்குச் சொந்தமானது அதனால் ஏனைய அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. மத்திய மாகாணத்துக்குச் சொந்தமான வீதிகளை புனரமைக்க உரிமையுள்ளபோது மக்களுக்கு மிகவும் அவசியமான வைத்தியசாலை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். தோட்ட வைத்தியசாலைகள் தேசிய கட்டமைப்புக்குள் வரும்வரையிலாவது, இவற்றின் சேவைகள் தொடர வேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...