Headlines News :
முகப்பு » , , , , » இலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - (பண்டாரநாயக்க கொலை 4) என்.சரவணன்

இலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - (பண்டாரநாயக்க கொலை 4) என்.சரவணன்

பண்டாரநாயக்க கொலைவழக்கில் 6வது சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் விமலா விஜேவர்தன ((1908–1994). இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்கிற வரலாற்றுப் பதிவு அவருக்குரியது. பண்டாரநாயக்கவின் கொலையில் அவர் வலிந்து இழுக்கப்பட்டவர்.

பெருந்தோட்டத்துறையில் பெரும் செல்வாக்கு மிக்க செல்வந்தரான கட்டானை கரோலிஸ் த சில்வாவின் மகள் அவர். பெரும் பிரமுகராக அறியப்பட்ட டீ.சீ.விஜேவர்தன (Don Charles Wijewardene) தனது மனைவியின் இறப்பை அடுத்து மனைவியின் தங்கையான அழகான 16 வயதுடைய விமலாவை திருமணம் முடித்துக்கொண்டார்.

விஜேவர்தன பரம்பரை இலங்கையின் அரசியலிலும், ஊடகத்துறையிலும், செல்வந்தத்திலும் இன்று வரை பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தி வரும் பரம்பரை. விஜேவர்தன குடும்பத்தினர் தான் கடந்த ஒரு நூற்றாண்டாக இலங்கையின் மைய அரசியலைத் தீர்மானிப்பவர்களாக இருந்து வருகிறார்கள் என்றால் அது மிகையில்லை.

டீ.சீ.விஜேவர்தன 1953இல் எழுதி வெளியிட்ட “பன்சலையில் கிளர்ச்சி” (The Revolt in the Temple) என்கிற நூல் இன்றளவிலும் இலங்கையின் முக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிங்கள இனத்துக்கும் களனி விகாரைக்கும் இருக்கின்ற பாரம்பரிய முதுசம் என்ன என்பது பற்றியும், நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதில் களனி விகாரையின் வகிபாகம் என்ன என்பது குறித்தும் அந்த விகாரையை பாதுகாத்து வந்த பரம்பரை பற்றியும் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம் பலமான அரசியல் விவாதங்களுக்கு இட்டுச் சென்றது.

1956 சிங்கள பௌத்த எழுச்சியைப் பற்றி பேசுபவர்கள் இந்த நூலின் அன்றைய வகிபாகத்தைப் பற்றிப் பேசத் தவறுவதில்லை.
இந்தப் படத்தை அழுத்தி பெரிதாகப் பாருங்கள்.

இலங்கையை கோலோச்சும் விஜேவர்தன குடும்பம்
களனி பன்சலையின் வருவாய்க்குப் பொறுப்பான தர்மகர்த்தாவாக விஜேவர்தனவின் தாயார் ஹெலனா நீண்ட காலம் இருந்து வந்தார். 1575 இல் போர்த்துகேயரால் நாசப்படுத்தப்பட்ட களனி விகாரையை பெரும்செலவில் புதுப்பித்தவர் ஹெலனா விஜேவர்தன. 1937 ஆம் ஆண்டு தமது பரம்பரைச் சொத்தில் ஏராளமானவற்றை களனி பன்சலைக்கு எழுதிக் கொடுத்து அந்த விகாரையை மகா சங்கத்திடம் ஒப்படைத்தார் ஹெலனா.  களனி பன்சலையின் நிதிநிலைமை ஸ்திரமாக இருப்பதற்காக தனது 250 ஏக்கர் வயல் காணியைக் கொடுத்ததுடன் தனக்குப் பின் தனது நகைகள் அனைத்தும் களனி பன்சலைக்கு சேரும் வண்ணம் உயில் எழுதிவைத்துவிட்டுப் போனார் ஹெலனா. ஹெலனாவுக்கு 9 பிள்ளைகள் இரண்டாவது மகள் அக்னஸ் ஹெலன். அக்னஸ்ஸின் மகன் தான் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்தன.
ஹெலனா களனி விகாரைக்கு கொடுத்த சொத்துக்கள் குறித்து களனி விகாரையில் உள்ள ஓவியம்.
ஹெலெனாவின் ஏழாவது மகன் தான் டீ.சீ.விஜேவர்தன. புத்தரக்கித்த தேரரை களனி விகாரையின் பிரதான விகாராதிபதியாக நியமிப்பதில் முக்கிய பாத்திரம் ஏற்று இருந்தவர் டீ.சீ.விஜேவர்தன. ஹெலனாவின் நான்காவது மகன் தான் இலங்கை பத்திரிகைத் துறையில் ஜாம்பவனாக இருந்த டீ.ஆர்.விஜேவர்தன. டீ,ஆர்,விஜேவர்தனவின் பேரன் தான் (மகள் நளினி விஜேவர்தனவின் மகன்) இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ரணில் – மைத்திரி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த ருவன் விஜேவர்தன டீ.ஆர்.விஜேவர்தனவின் பேரன். இன்னும் சொல்லப்போனால் ரணில் விக்கிரமசிங்கவின் மைத்துனர் ருவன்.

டீ.ஆர்.விஜேவர்தன இலங்கை பத்திரிகைத்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர். அது போல இலங்கையின் பிரதான சிங்கள தனியார் பத்திரிகை நிறுவனங்களாக கோலோச்சுக் கொண்டிருக்கும் உபாலி நிறுவனத்தின் (The Island, திவயின உள்ளிட்ட பல பத்திரிகைகள்) நிறுவனர் உபாலி, Sunday Times, Daily Mirror, Lankadeepa, Tamil Mirror உள்ளிட்ட பல பத்திரிகைகளை வெளியிட்டுவரும் விஜய பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித் விஜேவர்தன. ரணிலின் அண்ணன் ஷான் விக்கிரமசிங்க இலங்கையின் முதலாவதுதொலைக்காட்சி சேவையை (ITN) அறிமுகப்படுத்தியவர்.

இவர்கள் அனைவரும் இந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அதுபோல சேனநாயக்க குடும்பம், (சிறிமா) ரத்வத்த குடும்பம் அனைவருமே இந்தக் பரம்பரையின் நெருங்கிய திருமணங்களால் இணக்கப்பட்ட பரம்பரை. மேலே உள்ள மர வடிவிலான படத்தில் விஜேவர்தன குடும்பத்தைப் பற்றிய நேரடியானவர்களை மாத்திரம் குறிப்பிட்டிருக்கிறேன். இதன் விரிவாக்கத்தை வேறு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.

விஜேவர்தன குடும்பம் பௌத்தர்களாக பிற்காலத்தில் தான் மதம் மாறினார்கள். அதற்கு முன்னர் போர்த்துகேயர் காலத்தில் கத்தோலிக்க மதத்தவர்களாகவும், ஒல்லாந்தர் காலத்தில் கிறிஸ்தவ புரட்டஸ்தாந்து மதப் பிரிவான கால்வின் மதத்தவராகவும், ஆங்கிலேயர் காலத்தில் அங்கிலிக்கன் மதத்தவராகவும் மதம் மாறியிருந்தவர்கள். பௌத்தர்களாக ஆனதும் தீவிர சிங்கள பௌத்தர்களாக மாறி சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கே தலைமை கொடுக்கும் சக்தியாக விஜேவர்தன குடும்பத்தினர் ஆனார்கள்.

ரணிலும் களனி விகாரையும்
களனி விகாரையை தமது பரம்பரை சொத்தாக மாற்றிகொண்டிருந்த விஜேவர்தன குடும்பத்தினரின் “பரம்பரை செல்வாக்கு” குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அதன் பின்னர் ஜே.ஆர். தொடங்கி இன்றைய ரணில் விக்ரமசிங்க வரைக்கும் அந்த செல்வாக்கு நீண்டது. களனி விகாரையின் நிறைவேற்று சபையின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 01.09.2019 நீக்கி விட்டதாக அதன் நிர்வாகம் அறிவித்தது. அத்தோடு விஜேவர்தன குடும்பத்துக்கு அதுவரை இருந்த உறவு முடிவுக்கு வருவதாக ஊடகங்களில் பேசப்பட்டதையும் இங்கு நினைவுக்கு கொண்டு வரவேண்டும். 

களனி விகாரையை மீட்டெடுத்த ஹெலனாவின் பேரன் ஜே.ஆர். ஜே.ஆரின் மருமகன் தான் ரணில் விக்கிரமசிங்க. இன்னும் சொல்லப்போனால் ஹெலனாவின் கொள்ளுப்பேரன் தான் ரணில் விக்கிரமசிங்க.

சந்திரிகா ஆட்சியின் போது 24.08.1994 அன்று எதிர்கட்சித் தலைவரை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடந்தபோது ரணில் இரண்டு வாக்குகளால் தோல்வியுற்றார். காமினி வென்றார். அப்போது ரணில்; தனக்கு எது இல்லாமல் போனாலும் களனியின் தலைமைப் பதவி இருக்கிறது என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். அன்று எதிர்க்கட்சி பதவி கூட இழந்தபோது களனியின் தலைமையை பெற்றிருந்த ரணில், இன்று நாட்டின் பிரதமராக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் காலத்தில் களனி கைவிட்டுப்போனமை வரலாற்று முரண்நகை.

D.A.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்), பண்டாரநாயக்க, பிலிப் குணவர்தன ஆகியோருடன் விமலா விஜேவர்தன - 1958இல் சந்திரிகா குளத்தைத் திறப்பதற்கான நிகழ்வின் போது
ஜே.ஆருக்கு எதிராக விமலா களத்தில்
ஆரம்பத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்த டீ.சீ.விஜேவர்தன பின்னர் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதியாக தன்னை ஆக்கிக்கொண்டவர். அதுபோல விமலா விஜேவர்தனவும் கொம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளராக நெடுங்காலம் இருந்து வந்தார். அவர் கொம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் முன்னணியில் தீவிரமாக இயங்கிவந்தவர்.  பிற்காலத்தில் பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி பிக்குமார் ஊர்வலமாக வந்து ரோஸ்மீட் இல்லத்தின் முன்னால் ஒப்பந்தத்தைக் கைவிடும்படி ஆர்ப்பாட்டம் நடத்திய போது அந்த ஒப்பந்தத்தை உள்ளே இருந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவர் விமலா விஜேவர்தன.

விமலாவை ஜயவர்தன - சேனநாயக்கக்களுக்கு எதிராக தேர்தலில் களமிறக்கியது புத்தரக்கித்த தேரர் தான். புத்தரக்கித்த தேரரின் இரகசிய காதலியாக இருந்த விமலாவை அரசியலில் இறக்கி தனது வியாபார வர்த்தக நலன்களை சாதித்துக்கொள்ள புத்தரக்கித்த தேரர் திட்டமிட்டார்.

மாமன் ஜே.ஆருடன் மருமகன் ரணில் விக்கிரமசிங்க
ஜே.ஆரை விட வயதில் குறைந்தவராக இருந்தார் அவரது மாமியார் விமலா. 1952இல் இலங்கையின் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்த போது ஜே.ஆருக்கு எதிராக அவரின் மாமியார் விமலாவை களனி தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட வைத்தார் புத்தரக்கித்த தேரர். அத் தேர்தலுக்கு சுதந்திரக் கட்சிக்காக லட்சக்கணக்கான பணத்தை செலவளித்திருந்தார் விமலா. அத் தேர்தலில் 6235 வாக்குகளால் தோல்வியடைந்தார் விமலா. ஜே.ஆர் ஏற்கெனவே களனி தொகுதியில் செல்வாக்கு பெற்ற இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக வளர்ந்து கொண்டிருந்தவர். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் விமலா களனியில் போட்டியிடவில்லை ஆனால் அதற்கருகில் உள்ள மீரிகம தொகுதியில் போட்டியிட வைத்தார் புத்தரக்கித்த தேரர். விமலா விஜேவர்தன 36,193 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அது அத்தொகுதியின் மொத்த வாக்குகளில் 72.25% வீதமான வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைச் சதியில் விமலா
யூன் மாதம் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டபோது முதலில் விமலா விஜயவர்தனவுக்கு சுகாதார அமைச்சு தான் வழங்கப்பட்டது. அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் இருந்தும் கூட அரசியலுக்கு புதியவரான விமலாவுக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படுவதற்கு புத்தரக்கித்த தேரரின் நிர்ப்பந்தம் முக்கிய காரணம். அமைச்சுக்களைப் பகிர்வதற்கான உராயாடல் நிகழ்ந்துகொண்டிருந்தபோது தாமதமாக வந்து சேர்ந்த சிரேஷ்ட அரசியல் தலைவர் I.M.R.A.ஈரியக்கொல்லைக்கு உள்துறை பிரதி அமைச்சு பதவியைக் கொடுத்துவிட்டு, பின்னர் அமைச்சுக்களை மாற்றும்போது அமைச்சுப்பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் ஈரியக்கொல்லை அந்த பிரதி அமைச்சையும் தூக்கியெறிந்துவிட்டு சாதாரண உறுப்பினராக ஒதுங்கிக்கொண்டார்.

புத்த ராக்கித்த தேரர் தனது கப்பல் கொம்பனியின் வியாபார நடவடிக்கையிலும் விமலாவை இணைத்துக் கொண்டிருந்தார். உணவு தானிய இறக்குமதிக்கான அனுமதியை தமக்கு வழங்கும்படி புத்தரக்கித்த தேரர் பண்டாரநாயக்கவை அணுகியபோது; அத்தகைய நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் பண்டாரநாயக்க.

அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட பிளவுகளைத் தொடர்ந்து 1959 யூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது விமலா விஜேவர்தனவிடம் இருந்த சுகாதார அமைச்சுப் பதவி மீளப்பெறப்பட்டு அதற்குப் பதில் அவருக்கு உள்துறை மற்றும் வீடமைப்புத்துரை அமைச்சு வழங்கபட்டது. விமலா விஜேவர்தனஅமைச்சரவை அந்தஸ்து பெற்ற இலங்கையின் முதலாவது இலங்கைப் பெண்.

புத்தரக்கித்த தேரர் சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்களைக் கொண்டு பண்டாரநாயக்கவை தலைமையிலிருந்து நீக்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தார். 1959 இல் திட்டமிடப்பட்டிருந்த கட்சியின் சம்மேளனத்தில் அவரை நீக்குவதற்காக ஆதரவாளர்களையும் ஏற்பாடாக்கியிருந்தார். இந்த சதிகளை அறிந்த பண்டாரநாயக்க அந்த மாநாட்டு உரையில் ”நான் மாக்ஸியத்தையும், ஏகாதிபத்தியத்தையும், கொம்யூனிசத்தையும் எதிர்க்கிறேன்” என்று முழக்கமிட்டார். பிலிப் குணவர்தனவையும் அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். தனது நோக்கம் திட்டமிட்டவகையில் நிறைவேறாத புத்தரக்கித்த தேரர் பண்டாரநாயக்கவை தீர்த்துக்கட்டுவது என்கிற முடிவுக்கு வந்தார் என்பதே வழக்கிலும் வெளிவந்த முடிவு.

டீ.சீ.விஜேவர்தன 1956 ஆம் ஆண்டே இறந்தும் போனார். அதன் பின்னர் புத்தரக்கித்த தேரர் அதிகமாக வாசம் செய்தது விமலாவின் ‘புல்லர்ஸ் லேன்’ வீட்டில் தான். அங்கு தான் பண்டாரநாயக்க கொலைக்கான திட்டங்களும் திட்டப்பட்டன.

ஒரு முறை இத்தாலியில் நிகழ்ந்த சர்வதேச சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விமலா பயணமானபோது அவரை வளியனுப்ப பண்டாரநாயக்கவும் சென்றிருந்தார். அந்தப் பயணத்தில் விமலாவுடன் புத்தரக்கித்த தேரரும் சேர்ந்து தான் பயணமானார்கள்.

பண்டாரநாயக்க 26.09.1959 இல் கொலை செய்யப்பட்ட பின்னர் ஒக்டோபர் 21 அன்று கைது செய்யப்பட்டார். கூடவே அவரின் அமைச்சுப் பதவியும் பறிக்கப்பட்டது.

பௌத்தம் துறந்து கிறிஸ்தவர் ஆனார்
15.07.1960 இல் விமலா நிரபராதி என விடுவிக்கப்பட்டபோதும் அவர் தனது அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டினார்.

வழக்கில் 6வது சந்தேகநபராக இருந்த விமலா முதற்கட்டவிசாரணையின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டபோதும், சகல மேன்முறையீட்டு விசாரணைகளின் போதும் வழக்குகளுக்கு அழக்கப்பட்டுக்கொண்டே இருந்தார். அந்த விசாரணைகளின் போது அவருக்கும் புத்தரக்கித்த தேரருக்கும் இடையில் இருந்த காதல் உறவு திரும்பத் திரும்ப வெளியானது.

விமலாவை நீதிமன்றங்கள் நிரபராதி என்று தீர்ப்பளித்தாலும் பண்டாரநாயக்க கொலையை விசாரணை செய்த ஆணைக்குழு விமலாவுக்கு அக்கொலையுடன் நெருங்கிய தொடர்புண்டு என்று அறிக்கையிட்டது.

விமலா விஜேவர்தன இறுதியில் பௌத்த மதத்தைக் கைவிட்டு புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிக்கொண்டார். எந்த பௌத்ததனத்துக்காக வாழ்க்கையில் பெரும் விலை கொடுத்தாரோ அதே பௌத்தத்தை கைவிட நேர்ந்ததன் உளவியல் நிர்பந்தம் என்பது அரசியல் விளைவு என்று தான் கூற முடியும். பண்டாரநாயக்கவை சுட்டுக் கொன்ற சோம ராம தேரோவும் தூக்கில் தொங்குவதற்கு முதல் நாள் தனது பெயரை பீட்டர் என்று மாற்றிக்கொண்டு ஆங்கிலிக்கன் மதத்தை தழுவியதைஅறிந்திருப்பீர்கள்.

ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்த அவர் விஜேவர்தன குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக இருந்த ஹப்புத்தளை எடிசன் பங்களா (50க்கும் மேற்பட்ட அறைகளுடன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்டமான பங்களா) உள்ளிட்ட பல சொத்துக்களை அந்த புரட்டஸ்தாந்து மத நிறுவனத்துக்கே எழுதிக் கொடுத்தார் விமலா. பொது வெளியில் பகிரங்கமாக உலவுவதைத் தவிர்த்துக்கொண்ட விமலா ஊடகங்களைக் கூட சந்திப்பதை தவிர்த்தார்.

ஆரம்பத்தில் மிகுந்த ஆதரவையும் வரவேற்பைப் பெற்றிருந்த விமலா இறுதியில் அவப்பெயருடன் வாழ்ந்து 27.01.1994 அன்று மரணமானார்.


Share this post :

+ comments + 1 comments

9:35 AM

மிக்க நன்றி நண்பரே, மேற்படி அரசியல் சார்ந்த கால ஓட்டங்களையும் அரிய கடந்தகால குறிப்புக்களையும் வெளிக்கொணர்ந்தமைக்கு.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates