மாபிட்டிகமே புத்தரக்கித்த தேரர் (1921-1967), தல்துவே சோமராம தேரர் (1915-1962) ஆகிய பிக்குமாரே கொலை செய்தார்கள் என்பது வரலாறு. அதன் அடிப்படையில் அன்றைய உள்துறை - வீடமைப்புத்துறை அமைச்சர் விமலா குணவர்தனவின் கூட்டில் இந்த கொலை அரங்கேறியது என்பது மிகப் பிரபலமான வாதம். அதே வேளை இவர்களையும் கொலைச் சதி வலையில் சிக்கவைத்தது அமெரிக்க சீ.ஐ.ஏ என்கிற வாதம் இன்றும் நிலவுகிறது. அதை அப்படியே ஏற்று நம்பும் பலர் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளையும் கூட பலமாக முன்வைக்கப்படுவதை காண முடியும்.
சீ.ஐ.ஏ இக்கொலையை செய்தது என்று கூறுவதற்கான நேரடி ஆதாரங்களைக் காட்ட முடியாத போதும், பண்டாரநாயக்கவை இல்லாமல் செய்வதில் அமெரிக்காவுக்கு அந்த நேரத்தில் இருந்த தேவை என்ன? அமெரிக்கா அதே காலப்பகுதியில் உலகில் தனக்கு இசைவான ஆட்சிகளை நிறுவதற்காகவும், தனக்கு சாதகமில்லாத சக்திகளை களையெடுப்பதற்காகவும் செய்த சதிகள் உலக அளவில் அம்பலப்பட்ட செய்திகளே. கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு கூட 638 தடவைகள் அமெரிக்கா முயற்சி செய்தது என்பது பிரபலமான செய்தி. அப்படிப்பட்ட சதிகள் அனைத்துமே நேரடி ஆதாரங்கள் காட்ட முடியாமல் போனவை தான். ஆனால் உலகின் பலம் வாய்ந்த உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ அந்நிய நாடுகளில் மேற்கொண்ட நாசகார பணிகள் இரகசியமானவை அல்ல. உலக நாடுகளின் அரசியல், பொருளாதார நிகழ்ச்சி நிரலைக் கட்டுபடுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட, மேற்கொண்டு வரும் திகிடுதத்தங்கள் உலகம் அறியாதது அல்ல.
மேட்சனின் நூல்
2012 ஆம் ஆண்டு வேய்ன் மேட்சன் (Wayne Madsen) என்கிற பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளர் சுவாரசியமான ஒரு நூலை வெளியிட்டிருந்தார். “ஜனாதிபதியை உற்பத்தி செய்தல்” (The Manufacturing of a President) அந்த நூலின் தலைப்பு. உலக நாடுகள் பலவற்றில் அமெரிக்க உளவுச் சேவை தமக்கு தேவையான, தமக்கு வசதியான ஆட்சிகளை நிறுவதற்காக செய்த சூழ்ச்சிகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், படுகொலைகள் குறித்து எழுதப்பட்ட நூல் அது. அமெரிக்க இரகசிய ஆவணங்கள், முக்கியஸ்தர்களின் நேர்காணல்கள், சர்வதேச விசாரணைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்து வெளியிடப்பட்ட நூல் அது.
சேர் ஜோன் கொத்தலவலவை பலமடையச் செய்வதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நிதிகளைக் கொடுத்து ஊக்குவித்த போதும் அவை ‘சோஷலிச’ பண்டாரநாயக்கவை தோற்கடிப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை என்றும் பண்டாரநாயக்க கொலையின் பின்னணியில் சீ.ஐ.ஏவின் வகிபாகம் குறித்தும் அதில் எழுதுகிறார்.
இந்தோனேசியாவின் ஆன்மீகத் தலைவராக கொண்டாடப்படும் பாபக் (Bapak அல்லது Pak Subuh என்றும் அழைப்பார்கள்) இந்தோனேசியாவில் கொம்யூனிஸ்டுகளை ஒழிப்பதற்காக அமெரிக்க சீஐஏ வின் ஏஜென்டாக இயங்கியதாக பிற்காலத்தில் அம்பலப்படுத்தப்பட்டவர். அவர் இலங்கைக்கும் வந்திருக்கிறார்.
1958 ஆம் ஆண்டு பாபக் இலங்கை வந்தார். “Subud” என்கிற ஆன்மீக இயக்கத்தை நிறுவ அவர் இலங்கை வந்திருந்தார். (சுபுட் இயக்கம் இன்றும் இலங்கையில் இயங்கி வருகிறது) இலங்கையில் பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இயக்கம் என்று கூறி அவரை 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார் பண்டாரநாயக்க. இந்த கட்டளையை பிறப்பித்த சில நாட்களில் பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் படுகொலையின் பின்னணியில் சீ.ஐ.ஏ இருக்கிறது என்கிற வாதமும் சந்தேகமும் இன்று வரை வலுவாக நிலவிவருகிறது.
இந்த விபரங்களை மேற்படி நூலில் வேய்ன் மேட்சன் விபரித்துச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் Dwight Eisenhower உடன் |
பண்டரநாயக்காவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு
1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியமைத்தபோது சுதேசியம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, கொம்யூனிச ஆதரவு போன்ற நிலைப்பாடுகளை எடுத்தவர். அதுபோல மேற்கு நாடுகளால் வெறுக்கப்பட்ட இலங்கையின் இடதுசாரி கட்சிகளுடன் அவர் கூட்டு சேர்ந்து இயங்கினார். கூட்டு சேர்ந்து ஆட்சியையும் அமைத்தார். இலங்கை சுதந்திரம் அடைந்தும் பிரித்தானியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்தன. பிரித்தானியா தனது பிடியை தொடர்ந்தும் வேறு வடிவங்களில் தக்கவைத்துக்கொண்டிருந்தது. பண்டாரநாயக்க ஆட்சியேறியதும் இலங்கையில் இருந்த பிரித்தானிய படை முகாம்களை அகற்றினார். பற்பல துறைகளை அரசமயமாக்கினார். குறிப்பாக பொதுப்போக்குவரத்துத் துறை, துறைமுகம், பெருந்தோட்டத்துறை, எண்ணெய் கூட்டுத்தாபனம் என்பனவற்றை அவர் அரசமயமாக்கியமை முதலாளித்துவ சக்திகளின் எரிச்சலையும், வெறுப்பையும், எதிர்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.
1956 இல் ஐ.நா தலைமையகத்தில் |
1956இல் பண்டாரநாயக்க ஆட்சி அமைத்ததும் அவரின் அமைச்சரவையில் டீ.பீ.சுபசிங்கவை வெளியுறவு அமைச்சராக்கினார். டீ.பீ.சுபசிங்க அன்றைய பலமான இடதுசாரிக் கட்சியாக இருந்த லங்கா சமசமாஜ கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். பண்டாரநாயக்கவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தளவில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் கைகோர்த்தார். அதற்கு முன்னர் டீ.எஸ்.சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல போன்றோர் மேற்கத்தேய முதலாளித்துவ சார்பு வெளியுறவுக் கொள்கையையே கடைபிடித்துவந்ததுடன் அச்சக்திகளுக்கு இணக்கமாகவே ஆட்சி செலுத்திவந்தார். சுதந்திரம் அளிக்கப்பட்டு எட்டே வருடத்தில் சோஷலிச முகாமுக்கு சாதகமாக இலங்கை தன்னை ஆக்கிக்கொள்வதை அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ முகாம் நல்ல சகுனமாக பார்க்கவில்லை.
இதே காலப்பகுதியில் உலகில் சோசலிசத் தலைவர்களையும், சோசலிச சார்பு கொண்ட தலைவர்களையும் களையெடுக்கும் பணிகளில் அமெரிக்கா தனது சீ.ஐ.ஏ நிறுவனத்தை இயக்கி வந்தது. கொங்கோவில் லுமும்பாவை படுகொலை செய்தமை, இந்தோனேசியாவில் சுகர்னோவை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு செய்து சாகும்வரை சிறையில் வைத்தமை, கியூபாவில் பீடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு பல தடவைகள் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றையும் இந்த வரிசையில் நோக்குவது இங்கு பொருத்தமாகும்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தின் போது |
புத்தரக்கித்த தேரர், சோமராம தேரர் ஆகிய இருவரும் இந்தக் கொலைக்கு தூண்டப்பட்டவர்களேயொழிய; அவர்கள் இருவரும் நேரடியான சூத்திரதாரிகள் இல்லை என்பதே விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் மாப்பிட்டிகம புத்தரக்கித்த தேரர்; பிரதமர் பண்டாரநாயக்கவை கொலை செய்வதற்கான வலுவான நேரடிக் காரணம் இன்று வரை வெளியானதில்லை. புத்த ரக்கித்த தேரர் சிறையிலேயே இறந்துபோனார். அவர் இறக்கும்போது அவரின் வயது 46 மட்டுமே. அவரின் இறப்பும் ஒரு மர்மத்துக்குரியதாகவே பேசப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி கொலையில் தண்டனை பெற்றுவந்த சொலொமன் மிலோசெவிக் சிறையில் மர்மமான முறையில் இறந்ததை சந்தேகிப்பதைப் போல தான் புத்த ரக்கித்த தேரரரின் இறப்பையும் காண்கிறார்கள்.
இந்தக் கட்டுரைக்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்திலிருந்து சீ.ஐ.ஏக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை கண்டெடுக்க முடிந்தது. அதில் 12.10.1959 அன்று சீ.ஐ.ஏ வெளியிட்ட இரகசிய அறிக்கையில் இலங்கையின் உயர் அரசியல் வட்டாரத்தில் பண்டாரநாயக்க கொலை பற்றி அமெரிக்கா மீது சந்தேகம் கொள்வதை குறிப்பிட்டு காட்டுவதுடன் அந்த இரகசிய அறிக்கையின் முக்கிய சில வரிகள் வெள்ளைநிறம் தீட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு அறிக்கையில் அமெரிக்க உளவுத்துறை இக்கொலையின் பின்னணியில் இருப்பதாக என்.எம்.பெரேரா குற்றம் சாட்டியிருப்பதை பதிவு செய்திருக்கிறார்கள். (02.05.1972)
CIA இரகசிய அறிக்கைகள்
27.06.1960 சீ.ஐ.ஏ அனுப்பிய அறிக்கையில்; புதிய அரசாங்கத்தில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்ட இடதுசாரிக் கட்சிகளைப் பற்றியும் அக்கட்சியின் தலைவர்களைப் பற்றியும் விபரங்களையும் பட்டியலிடுகிறது. மேலும் முன்னரை விட அதிகமாக சர்வதேச கொம்யூனிஸ்ட் முகாமுடன் நெருங்கிய உறவை சிறிமா அரசாங்கம் பலப்படுத்திவருதையிட்டு எச்சரிக்கிறது.
இதே வேளை “சீ.ஐ.ஏ. வில் யாரின் யார்?” (Who’s who in the CIA) என்கிற பரபரப்பான நூல் 1968இல் வெளிவந்தது. இதை எழுதியவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் டொக்டர் ஜூலியஸ் மாடெர் (Julius Mader). இந்த நூலில் அமெரிக்க உளவுச் சேவையின் உலகலாவிய வலைப்பின்னலில் 120 நாடுகளில் அப்போது இயங்கிக்கொண்டிருந்த 3000 உளவாளிகளை பெயர்களின் பட்டியல்களையும் அவர்கள் இயங்குகின்ற நாடுகளும் வெளியிடப்பட்ட்டது. அந்தப் பட்டியல் இருந்த பலருக்கு அந்தந்த நாடுகளில் அளிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த விபரங்களும் கூட அதில் இடம்பெற்றன. இதில் இலங்கையில் 15 பேர் இயங்கிக்கொண்டிருந்ததையும் கூட வெளியிட்டிருந்தார். இதில் அப்போதைய மூன்று முக்கிய சம்பவங்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதாக அந்த நூலில் குறிப்படப்பட்டிருந்தது.
- பண்டாரநாயக்க கொலை
- சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சியின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சி
- சிறிமா ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக நிகழ்ந்த கட்சித் தாவல் நடவடிக்கை.
இந்த நூலில் வெளியான விபரங்களைப் பற்றி விபரங்களை “Forward” என்கிற பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையை ஆதாரம் காட்டி சீ.ஐ.ஏ நிறுவனம் ஒரு இரகசிய அறிக்கையை தயாரித்தது.
அந்த அறிக்கையில்; இதே காலப்பகுதியில் அதுவரை எண்ணெய் கொள்வனவை பிரித்தானிய கம்பனியொன்றிடமும், இரு அமெரிக்க கம்பனியிடம் இருந்தும் மேற்கொண்டிருந்த இலங்கை சோவியத் யூனியனிடம் இருந்து கொள்வனவு செய்த்தான் மூலம் அமெரிக்காவை அதிருப்தியடையச் செய்தமை குறித்தும் குறிப்பிட்டிருகிறது.
இலங்கையில் அமரிக்க எதிர்புவாதமும், சோஷலிச சார்பு நிலையும் தலைதூக்கிவருவதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தையே கூட்டு தமக்கு ஒரு இடைஞ்சலாகவும் அச்சுறுத்தலாகவுமே பார்த்தது.
இந்தக் கட்டுரைக்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அன்றைய காலப்பகுதியில் வெளியிட்ட வெளியுறவுத் துரை சார்ந்த ஆவணங்களின் தொகுப்பைத் தேடி இந்த நிலைமைகளுடன் பொருத்திப் பார்க்க முடிந்தது.
1955-1957 தென்னாசியாவுக்கான வெளியுறவுத்துறை அறிக்கையில் 15.03.1957 தினத்தன்று அனுப்பிய குறிப்புகளில் இப்படி காணப்படுகிறது.
“பிரதமர் பண்டாரநாயக்கவின் மார்க்சிய சொல்லாடல்களால் “முற்போக்கு சக்திகளின்” ஒத்துழைப்புக்கு அரைகூவல் விடுத்திருக்கிறது. கொம்யூனிஸ்டுகள் மற்றும் சிங்கள தீவிரவாத சக்திகளின் மேற்கத்தேய எதிர்ப்புக் கருத்துக்களால் பிரதமரின் சிந்தனை விஷமேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டால் மேலும் மோசமான சக்திகளின் கைகளுக்கு ஆட்சி மாறலாம். அப்படி ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு இனக்கலவரங்கள் ஏற்படலாம்.”
15.10.1957 அன்று திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருந்து பிரித்தானியாவிடம் இருந்து மீள பறித்துக்கொண்ட போது |
வெளியுறவுத்துறை 24.07.1957 தினத்தன்று அனுப்பிய குறிப்புகளில் இப்படி காணப்படுகிறது
“6. வாய்ஸ் ஒப் அமெரிக்கா”வுக்கு எதிரான பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க பேராசிரியர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றனர். அரசாங்கத்துக்குள் பலமடைந்துவரும் இடதுசாரித் தீவிரவாதிகள், அதி தீவிர தேசியவாதிகள் போன்றோரின் எதிர்ப்புகளை அமெரிக்க ஒப்பறேசன்கள் எதிர்கொள்ளநேரிட்டுள்ளது...”
8b. இந்தியாவும், இலங்கையும் அமெரிக்க அணுவாயுத பரீட்சைகளை எதிர்த்து வருகின்றன.
8c. ... சீனா, ரஷ்யா போன்ற கொம்யூனிச நாடுகளுடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை இலங்கை தீவிரப்படுத்திவருகிறது.
10b.கடற்படைத்தளம், விமானத் தளம் குறித்து பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தையும், நீர்கொழும்பிலுள்ள விமானப்படைத்தளத்தையும் இலங்கையிடம் மீள கையளிப்பதாக 07.06.1957 அன்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. மீள கைப்பற்றும் நடவடிக்கை 1957 ஒக்டோபர், நவம்பர் அளவில் ஆரம்பித்து மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக அத்தளங்கள் பிரித்தானியா கைவிட்டுவிடும் என்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்த நிலைமையால் பிரித்தானியாவுக்கு மட்டும் பாதகம் ஏற்படப்போவதில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்புத் திட்டத்தையும் பாதிக்கும்.”
10c. ...கொம்யூனிஸ்ட் சீனாவுடம் அரிசி-இறப்பர் பண்டமாற்று ஒப்பந்தத்தை இந்த வருட இறுதியில் இலங்கை மேற்கொள்ளப் போகிறது. கொம்யூனிஸ்ட் சீனாவுடன் இத்தகைய வர்த்தக உறவுகளை எற்படுத்திக்கொள்ளும்பட்சத்தில் அமெரிக்க பொருளாதார உதவிகளை வழங்குவது குறித்து மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும்...
தீபெத்தில் தலாய் லாமா நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் 1998 ஆம் ஆண்டு ஒரு அதிர்ச்சிமிக்க தகவலை வெளியிட்டிருந்தார்கள். அதாவது தமது நிர்வாகம் 1960களில் சீ.ஐ.ஏ மூலம் வருடாந்தம் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று வந்தது என்பது தான் அந்தத் தகவல். இதனை உலகப் பிரபல சஞ்சிகையான நிவ்யோர்க் டைம்ஸ் (02.10.1998) வெளியிட்டிருந்தது. இந்தப் பணம் தீபெத் அரசாங்கத்துக்கு எதிராக போராடிவரும் சீன சார்புக் குழுக்களை ஒடுக்குவதற்காக வழங்கப்பட்ட நிதி என்று தீபெத்திலிருந்து வெளியேறிய முன்னை நாள் நிர்வாகத்தினர் போட்டுடைத்திருந்தனர். 1950களில் சீன அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய தீபெத்தின் தலைவர் தலாய் லாமா அந்த ஆக்கிரமிப்பை தாக்குபிடிக்க இயலாமல் 1959 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். தலாய் லாமாவின் சீனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சீ.ஐ.ஏ அந்த காலப்பகுதியில் நிதியுதவிகளை செய்திருக்கிறது.
பண்டாரநாயக்க கொலையாளிகளும் இந்த நிதிகளின் மூலம் இயக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்கிற கோணத்திலும் இந்த சதியை நோக்குகின்ற ஆய்வாளர்களும் உள்ளார்கள்.
செப்டம்பர் 25ஆம் திகதி காலை அன்றைய அமெரிக்க உயர்ஸ்தானிகர் பேர்னார்ட் கப்லர் (Bernard Gufler உயர்ஸ்தானிகராக பதவியேற்று ஒரு மாதத்தில் நிகழ்ந்த சந்திப்பு இது.) பண்டாரநாயக்கவை அவரது றோஸ்மீட் இல்லத்தில் சந்தித்து உரையாடிவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தான் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
சோமராம தேரர் ஏன் கொள்ள வேண்டும்?
கொலையில் நேரடியாக ஈடுபட்ட புத்த ரக்கித்த, சோமராம ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பௌத்த மதம் குறித்து பண்டாரநாயக்க கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாததே பண்டாரநாயக்காவின் மீது தனக்கு இருந்த கோபம் என்று சோமராம தேரர் கூறியிருக்கிறார். ஆனால் சோமராம தேரர் தூக்கிலிடப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் சோமராம தேரர் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் பெற்று “பீட்டர்” என்கிற பெயரை சூட்டிக்கொண்டு ஒரு கத்தோலிக்கனாக மாறித் தான் தூக்குமேடை ஏறினார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். பௌத்தத்தின் மீது இருந்த தீவிர அபிமானத்தால் தான் பண்டாரநாயக்கவை வெறுத்ததாகக் கூறப்பட்ட கருத்தின் நம்பகத் தன்மை என்ன என்கிற கேள்வி நமக்கு எழுகின்றது. அப்படியென்றால் இந்தக் கொலையின் உண்மையான உள்நோக்கம் என்ன என்கிற கேள்வி நமக்கு எப்படி எழாமல் இருக்க முடியும்.
சுதந்திரம் கிடைத்து 6 வருடங்கள் ஐ.நா உறுப்புரிமைக்கு இலங்கை காத்திருக்க வேண்டியிருந்தது. 1955 டிசம்பரில் தான் இலங்கைக்கு ஐ.நா உறுப்புரிமை கிடைத்திருந்து. அமெரிக்காவில் நியுயோர்க்கில் நடக்கவிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே பண்டாரநாயக்க செப்டம்பர் 28 அன்று புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தார். ஆனால் அதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டார்.
பண்டாரநாயக்க கொல்லப்படுகிற காலகட்டத்தில் அவரோடு இருந்த இடதுசாரி அணிகள் பெரும்பாலும் வெளியேறியிருந்தார்கள். அந்த ஆட்சியில் இருந்த பலமான தலைவர்களில் ஒருவரான பிலிப் குனவர்தனாவின் அமைச்சுப் பதவியையும் பறித்து அவரும் வெளியேற்றப்பட்டார். அவரோடு எஞ்சியிருந்த சக்திகள் சிங்கள பௌத்த வலதுசாரி தேசியவாதிகள் தான். அவை தற்செயலான அரசியல் நிகழ்சிகள் அல்ல என்று சந்தேகிக்கவும் முடியும்.
பண்டாரநாயக்கவை பஞ்சமகா சக்திகள் ஒன்று சேர்ந்து பதவியிலமர்த்தினர் என்பார்கள். அதாவது “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என்கிற ஐந்து சக்திகள். பண்டாரநாயக்கவை கொலை செய்ய திட்டம் தீட்டிய புத்தரக்கித்த தேரர் ஒரு பௌத்த மதகுரு, கொலை செய்த சோமராம தேரர் ஒரு ஆயுர்வேத வைத்தியர். அதிலும் அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு தற்செயல் நிகழ்வு தானா?
தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கத் தவறியதற்காகவே பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார் என்கிற கருத்து பலமாக இருக்கிறது. வலதுசாரி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு பொருந்தக் கூடியவர் இல்லை அவர் என்கிற கருத்தும் மறுப்பதற்கில்லை.
பண்டாரநாயக்கவின் கொலை சுதந்திரத்தின் பின் தொடக்கிவைக்கப்பட்ட முதல் அரசியல் படுகொலை. அதற்கடுத்ததாக வரப்போகிற பல அரசியல் படுகொலைகளை ஆரம்பித்துவைத்த கொலை அது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...