Headlines News :
முகப்பு » , , , » பெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்

பெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்

இன்று நோர்வேயின் பிரதான ஏழு கட்சிகளில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் பெண்கள் என்கிற செய்தி வியப்பாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னால் பெண்களின் பெரும் போராட்ட வரலாறு உள்ளார்ந்திருக்கிறது.

2013 ஆம் ஆண்டு “பெண்களுக்கு வாக்குரிமை” அளிக்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கொண்டாடியது. ஆம் ஏறத்தாழ 30 வருட அயராத போராட்டத்தின் விளைவாக நோர்வே பெண்கள் 1913 ஆம் ஆண்டே (20.06.2013) பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமான வாக்குரிமையைப் பெற்றுவிட்டார்கள்.

பெண்கள் வாக்குரிமைச் சங்கம்
தமக்கும் ஆண்களுக்கு நிகராக வாக்குரிமை வேண்டும் என்கிற கோரிக்கையை முதன் முதலில் 1880இலேயே வைத்துவிட்டார்கள் நோர்வே பெண்கள். நோர்வேயின் முதலாவது பெண்கள் அமைப்பு “நோர்வே பெண்கள் சங்கம்” (Norsk kvinnesaksforening - NKF) 1884இல் உருவாக்கப்பட்டது. ஜீனா குரோக் (Gina Krog), ஹாக்பார்ட் பார்னர் (Hagbard Berner), ஆகிய இரு பெண்கள் இதனை ஆரம்பித்தனர். பார்னர் இதன் தலைவராக செயற்பட்டார்.

அதன் விளைவாக 1885ஆம் ஆண்டு பெண்கள் வாக்குரிமைச் சங்கம் (Kvinnestemmerettsforeningen -KSF) நோர்வேயில் தொடக்கப்பட்டது. இதன் தலைவியாக ஜீனா குரோக் (Gina Krog) தெரிவானார். இந்த சங்கத்தில் 1902 ஆம் ஆண்டளவில் மொத்தம் 357 உறுப்பினர்கள் அங்கம் வகித்திருக்கிறார்கள்.

1898ஆம் ஆண்டு 25 வயதுக்கு மேற்பட்ட வசதிபடைத்த ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 1901ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளில் வாக்கிடுவதற்கு பெண்கள் உரிமை பெற்றிருந்தாலும் அது வரி செலுத்தும் பெண்களுக்கும், வரிசெலுத்தும் ஆணை திருமணம் புரிந்தவருக்கும் மட்டுமே வாக்களிப்பதற்கும், வேட்பாளராக போட்டியிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தார்கள்.

வாக்குரிமைப் போராட்டத்தின் வெற்றி
1910 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலிகளில் சர்வஜன வாக்குரிமை சகல பெண்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் 1913 இல் தான் பொதுத் தேர்தலிலும் அனைத்துப் பெண்களும் ஆண்களுக்கு சமமாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். அதன்படி 1915 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் பெண்கள் அனைவரும் முதன் முதலில் வாக்களித்தார்கள்.

நோர்வேஜிய பாராளுமன்றத்தின் முதலாவது பெண் பிரதிநிதியாக அன்னா குரோக் தெரிவானார் (1911இல்).

அன்னா
ஆரம்பத்தில் பெண்கள் வாக்களிப்பதிலும், வாக்குரிமையைப் பெறுவதிலும், அரசியலில் பங்குபெறுவதற்கும் அக்கறை காட்டவில்லை. சில பெண்கள் வாக்குரிமையை எதிர்க்கவும் செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் பெண்களுக்கு வாக்குரிமை ஏன் அவசியம், அரசியலில் பங்குபற்றுவதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி அவர்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பெண்கள் வாக்குரிமைச் சங்கம் முன்னெடுத்தது. ஜீனா குரோக், அன்னா ரோக்ஸ்தாத் (Anna Rogstad) ஆகியோர் பல கூட்டங்களை நடத்தி விரிவுரையாற்றினர்.

1897ஆம் ஆண்டு இந்த சங்கம் பிளவடைந்தது. அதற்கான காரணம் ஆணாதிக்க, தேசியவாத, வலதுசாரிகள் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதை எதிர்த்து நின்றபோது பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் பிரதித் தலைவியாக இருந்த அன்னா ரோக்ஸ்தாத் வரையறுக்கப்பட்ட வாக்குரிமைக்கு இணங்கி சமரசம் செய்துகொண்டார். அதாவது 800 குறோணர்களுக்கு அதிகமான வருமானமாகக் கொண்ட நகர்ப்புறத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், 500 குரோனர்கர்களுக்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிற கிராமப்புற பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கலாம் என்பதற்கு அவர் இணங்கினார்.   இறுதியில் முழு அளவிலான சமத்துவமான வாக்குரிமைக்காக போராடிய அச்சங்கத்தின் தலைவி ஜீனா குரோக் தலைமையிலான குழு வெளியேறியது.
ஜீனா
ஜீனா குரோக் தொடர்ந்தும் “நோர்வே பெண்கள் சங்கத்தின்” தலைவியாக செயற்பட்டுக்கொண்டிருந்தார். அந்த சங்கம் பின்னர் நோர்வே தொழிற் கட்சியின் பெண்கள் பிரிவுடன் சேர்ந்து தொழிற்படத் தொடங்கியது. அச்சங்கம் அன்றைய “வெள்ளையின அடிமை வர்த்தகத்தை” எதிர்த்து காத்திரமான பங்கை ஆற்றியிருந்தது. 1904 இல் “பெண்களின் வாக்குரிமைக்கான தேசிய சங்கம்” (Norske Kvinders Nasjonalråd) என்கிற சங்கத்தை ஆரம்பித்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்தார் ஜீனா குரோக். இந்த அமைப்பு பல்வேறு பெண்கள் அமைப்புகளை இணைத்த ஒரு வலையமைப்பாக இயக்கப்பட்டது.

1890 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை கோரி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டபோது அந்த கோரிக்கை 70க்கு 44 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. குறிப்பாக சக வலதுசாரி தேசியவாத கட்சிகளும் எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்கச் செய்தன. உலகெங்கினும் சகல நாடுகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று விடாப்படியாக எதிர்த்திருப்பவர்கள் வலதுசாரி தேசியவாத சக்திகள் தான். மாறாக வாக்குரிமைக்காக போராடிய சக்திகள் அனைத்தும் இடதுசாரிக் கட்சிகள் தான். இலங்கையிலும் அது தான் நடந்தது என்பதை இந்த இடத்தில் நினைவுகொள்ள வேண்டும்.

நோர்வேயில் வாக்களிக்கும் வயது 18 வயதாக ஆக்கப்பட்டது 1978 இல் தான். அதுபோல மூன்று வருடங்களுக்கு மேல் நோர்வேயில் வாழ்ந்தவர்களுக்கு (அவர்கள் குடியுரிமை பெறாவிட்டாலும்) வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்கிற நடைமுறையை 1983 இல் இருந்து கொண்டுவந்தார்கள்.
நோர்வே பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்தவிதம்
பெண்களின் ஆட்சி
உலகில் முதன் முதலாக 1893இல் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தது நியூசீலாந்து.நோர்வே பெண்கள் வாக்குரிமையைப் போராடிப் பெற்ற காலத்தில் அமெரிக்கா கூட பெண்களுக்கு வாக்குரிமை அளித்திருக்கவில்லை. அமெரிக்காவில் வாழ்ந்த வாழ்ந்த நோர்வேஜியப் பெண்கள்; 1913ஆம் ஆண்டு நோர்வேயில் கிடைத்ததைப் போல அமெரிக்காவிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று பெண்களின் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அமெரிக்காவில் 1920இல் தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

நோர்வேயில் முதலாவது பெண் அமைச்சராக 1945ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டவர் கிறிஸ்டின் ஹன்ஸ்டீன். அவர் நோர்வே கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். முதலாவது தடவையாக 1974 இல் ஒரு கட்சியின் தலைவியாக தெரிவு செய்யப்பட்ட பெண் ஏவா கொல்ஸ்தாத். நோர்வேயின் முதலாவது பெண் பிரதமராக 1981இல் ப்ருன்ட்லாந் (Gro Harlem Brundtland) தெரிவு செய்யபட்டார். மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்தவர் அவர். அவரது ஆட்சியின் போது அமைச்சரவையில் 18பேரில் 8 பேர் பெண் அமைச்சர்களாக இயங்கினார்கள். பின்னர் ப்ருன்ட்லாந் உலக சுகாதார அமைப்பின் தலைவியாக பதவி வகித்தார். 2011 ஆம் ஆண்டு யூலை 22 அன்று வலதுசாரிப் பயங்கரவாத தாக்குதலில் பிரதானமாக குறி வைக்கப்பட்டவர் ப்ருன்ட்லாந். சற்று தாமதமாக வந்ததால் அவர் அந்த படுகொலையில் இருந்து உயிர் தப்பினார்.
புடைசூழ வரும் அமைச்சர்களில் முன்னணியில் வருபவர்கள் : சீவ் ஜான்சன் - நிதி அமைச்சர் (முன்னிலை கட்சியின் தலைவி), ஆர்ன சூல்பார்க் – பிரதமர் (வலது கட்சியின் தலைவி), திரீன ஸ்கை கிரான்ட – கலாசார அமைச்சர் (தாராளவாத கட்சியின் தலைவி)
இன்றைய நோர்வேயில் பிரதமர் ஒரு பெண். தற்போதைய கூட்டரசாங்கத்தின் பிரதான மூன்று கட்சிகளின் தலைவர்களும் பெண்களே. 22 அமைச்சர்களில் 10 அமைச்சர்கள் பெண்கள்.  நிதி அமைச்சு, வெளியுறவு அமைச்சு, கல்வி அமைச்சு, கலாசார அமைச்சு ஆகிய முக்கிய அமைச்சுகள் பெண்களின் கைகளில். தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக் காலம் இது. கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சும் பெண்ணின் கையில் தான் இருந்தது. இன்றைய பாராளுமன்றத்தில் 41.1% வீதம் (69/169)பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பல உள்ளூராட்சி சபைகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். பெண்களுக்கு அரசியல் தலைமையையும், ஆட்சி தலைமை கொடுக்கப்படுவதால் ஒரு நாடு எந்தளவு முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதற்கு உலகின் சிறந்த உதாரணமாக நோர்வே திகழ்கிறது.

நன்றி - தினகரன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates