Headlines News :
முகப்பு » , , , , , » பண்டாரநாயக்கவை கொன்ற பண்டாரநாயக்கவாதிகள் (பண்டாரநாயக்க கொலை - 3) - என்.சரவணன்

பண்டாரநாயக்கவை கொன்ற பண்டாரநாயக்கவாதிகள் (பண்டாரநாயக்க கொலை - 3) - என்.சரவணன்


“காவியுடையணிந்த ஒரு மூட மனிதன் என்னை சுட்டான். அவனைப் பழிவாங்காமல் கருணை காட்டுங்கள்” சோமராம தேரோவால் சுடப்பட்ட பண்டாரநாயக்க இப்படி கேட்டுக்கொண்டார் என்கிறது மகாவம்சம். மகாவம்சத்தின் ஐந்தாம் தொகுதி 1956 தொடக்கம் 1978வரையான காலத்தைப் பதிவு செய்கிறது. 5 ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் எழுதப்பட்ட மகாவம்சம் கி.மு 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையான இலங்கையின் வரலாற்றைப் பதிவு செய்கிறது. ஆனால் பிற்காலத்தில் இலங்கையின் வரலாற்றை தொடர்ச்சியாக பதிவு செய்யும் செயற்திட்டத்தை அரசு முன்னெடுத்தது. மகாவம்சத்தின் தொடர்ச்சியாகவே அதனை பதிவு செய்தது அரசு. அந்த வகையில் மகாவம்சம் இன்றும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஐந்தாம் தொகுதியில் 155-170 க்கு இடைப்பட்ட செய்யுள்களில் பண்டரநாயக்காவின் கொலை பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க வழக்கு விசாரணை நிகழ்ந்துகொண்டிருந்தபோது 1960-1961 ஆம் ஆண்டுகளில் அன்றைய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக அவை வெளிவந்தன.

அந்த .45 துப்பாக்கி
சோமராம தேரர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி .45 Webley Mark VI revolverரகத்தைச் சேர்ந்தது. இந்த கைத்துப்பாகியைக் சோமராம தேரருக்கு கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் W.A.நியூட்டன் பெரேரா 1959 ஒக்டோபர் 21 அன்று கைது செய்யப்பட்டார்.

வழக்கின் சாட்சியங்களின் போது நியூட்டன் களனி பன்சலைக்கு வந்திருந்த போது அவரின் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மேல் ஒரு நாள் புத்தரக்கித்த தேரர் ஆர்வம் காட்டினார். பின்னர் அதனை தனக்கு கொஞ்சநாள் தரும் படி கேட்டார். நியூட்டன் இரண்டு தோட்டாக்களுடன் அதைக் கொடுத்தார். அதில் திருப்தியில்லாத புத்தரக்கித்த தேரர் மேலதிக தோட்டாக்களை கோரினார். அப்படி கொடுக்கப்பட்ட தோட்டாக்களும் பொலிஸ் பயிற்சிகளின் போது கொடுக்கப்படுவது என்று அறிந்ததால் அதுவும் வேண்டாம் என்றும் சரியான தோட்டக்களைத் தரும் படி மீண்டும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தத் தோட்டாக்களை அமைச்சர் விமலா விஜேவர்தனவின் வீட்டில் வைத்து புத்தரக்கித்த தேரரிடம் கையளிப்பட்டிருக்கிறது.

விமலா விஜேவர்தனவின் வீட்டில் புத்தரக்கித்த தேரர் சுதந்திரமாகவும், சர்வசாதாரணமாகவும், வெள்ளைச் சீலை கதிரையில் போர்த்தி பிக்குமாருக்கு மரியாதை செய்யும் எந்த மரபும் அங்கு காணப்படவில்லை என்றும் விசாரணைகளின் போது சோமராம தேரர் தெரிவித்திருக்கிறார்.

ஓகஸ்ட் 15ஆம் திகதி ஜெயவர்த்தன புத்தரக்கித்த தேரோவிடம் இருந்து ஒரு செய்தியை நிவ்டனுக்கு கொண்டுவந்தார். நியூட்டனின் வீடு தெமட்டகொடை பேஸ்லைன் வீதியில் இருந்த பொலிஸ் வீட்டுத் தொகுதியில் இருந்தது. அவரிடம் துப்பாக்கி சரியாக இயங்கவில்லை என்றும் நியூட்டனை அழைத்துவரும்படியும் கேட்டிருக்கிறார். அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு செல்லும் வழியில் பொரல்லையில் ஒரு பிக்குவை காரில் ஏற்றியிருக்கின்றனர். காரில் வைத்து அவரிடம் அத் துப்பாக்கியைக் கொடுத்தார். இதனைக் கண்ட நியூட்டன் வியப்புற்றார். கைகளில் துப்பாக்கியை வாங்கிக்கொண்ட அந்த பிக்கு வேறு யாருமல்ல சோமராம தேரர் தான். 

அந்தத் துப்பாக்கி சரியாக இயங்குமா என்பதில் சந்தேகம் கொண்டிருந்த புத்தரக்கித்த தேரர் களனி விகாரையிலிருந்து அப்பால் சென்று சோதனை செய்யும்படி கேட்டிருக்கிறார். நியூட்டனும் சோமராம தேரரும் முத்துராஜவெவ பகுதியில் ஆளரவமற்ற இடத்தில் வைத்து அந்தக் கைத்துப்பாக்கியை சோதனை செய்தார்கள். இன்ஸ்பெக்டர் நியூட்டன் எப்படி சுடுவது என்பதை சோமராம தேரருக்கு பயிற்சியளித்திருக்கிறார்.

பண்டாரநாயக்கவாதிகளால் கொல்லப்பட்ட பண்டாரநாயக்க
பண்டாரநாயக்க அரசாங்கம் 1956 இல் அமைக்கப்பட்டவுடன் அதிரடியாக கொடுவரப்பட்ட பல்வேறு மாற்றங்களில் மரண தண்டனை ஒழிப்பும் அடங்கும். 09.05.1958 அன்று அவர் “மரண தண்டனையொழிப்பு” சட்டமூலத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனாலும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் மரண தண்டனையை ஒழிப்பது சரியா என்பது குறித்து மேலும் சற்று ஆழமாக ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைக்கும்படி பரிந்துரைத்தது. அதன் பிரகாரம் இலங்கை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட பீடாதிபதி, நியூசீலாந்தின் ஒக்லான்ட் பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட பேராசிரியர் நோர்வல் மொறிஸ் (Norval Morris) ஆகியோரின் தலைமையில் ஒரு குழுவொன்று இதனை ஆராய்வதற்கென்று நியமிக்கப்பட்டது.

முடிவில் அந்தக் குழு வெளியிட்ட பரிந்துரையின் படி; “நாங்கள் மரண தண்டனையை இல்லாது செய்தததை அப்படியே தொடரும்படி பரிந்துரைக்கிறோம்!” ("We recommend that capital punishment should continue to be suspended") என்று அறிக்கை வெளியிட்டார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு வாரத்தில் தான் பண்டாரநாயக்க கொல்லப்பட்டார்.

தன்னை சுட்டவரை மன்னிக்கும்படி கேட்டுவிட்டு பண்டாரநாயக்க இறந்துபோனார். அவரின் இறுதி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற யோசனையை விட, உயிருக்கு உயிர் என்கிற வகையில் பழிதீர்த்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தார்கள் பண்டாரநாயக்கவாதிகள். உலகைக் குலுக்கிய அந்த படுகொலையைப் புரிந்தவர்களுக்கு சட்டம் உயர்ந்தபட்ச மரண தண்டனையை அளித்து பொது அபிலாசையை நிறைவேற்றிவிடவேண்டும் என்கிற முடிவில் அரசாங்கம் இருந்தது. பிரதான குற்றவாளிகள் மூவருக்கும் மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது அதன் விளைவாகத் தான்.

பண்டாரநாயக்கவால் தடை செய்யப்பட்ட மரண தண்டனையை; அதே பண்டாரநாயக்கவுக்காக பழிதீர்க்க அத்தண்டனைக்கு மீண்டும் உயிர் கொடுக்க அரசாங்கம் தீவிரம் காட்டியது. மரணதண்டையை மீண்டும் கொண்டுவருவதற்கான யோசனை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டபோது செனட்சபையில் இருந்த எஸ்.நடேசன் “பாராளுமன்றம் கொண்டிருக்கும் சட்டவாக்க அதிகாரத்தை அரசாங்கம் பழிவாங்குவதற்கு பயன்படுத்துவதானது சட்டவாக்க அதிகாரத்தை விபச்சாரம் செய்வதற்கு ஒப்பாகும். எந்த ஒரு அரசாங்கத்திற்கும் தகுதியற்ற செயல் இது” என்றார். புத்தரக்கித்த தேரருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட போது அமிர்தலிங்கம் அன்று “ஒரு பிக்குவை தூக்கிலிட வேண்டாம்” என்று கோரினார். 
அன்றைய அரசாங்கம் இதெல்லாம் மீறி மரண தண்டனைக்கு உயிர் கொடுத்தது. மரண தண்டனை வழங்குதற்காக, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தினால் மீண்டும் 07.12.1959 அன்று  'முற்காலத்துக்கும் வலுவுள்ள வகையில்' (retrospective effect) மரண தண்டனை சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்டாரநாயக்க இரண்டாவது தடவையும் பண்டாரநாயக்கவாதிகளால் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டின் காரணமாக அதிக உதிரப்போக்கினால் பண்டாரநாயக்கவின் மரணம் சம்பவித்தது என்பதே இன்று வரை பலராலும் நம்பப்படும் செய்தி. ஆனால் அவரின் மரணம் (Cause of death) மாரடைப்பினாலேயே ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதை வெளியில் சொன்னால் அந்த மரணத்தை அன்றைய அரசியல் சூழலில் சந்தைப்படுத்த முடியாது என்பதால் “மாரடைப்பினால் மரணம்” என்கிற தகவல் மூடிமறைக்கப்பட்டது. பண்டாரநாயக்கவின் மரணத்திற்கு நேரடி காரணம் துப்பாக்கிச்சூடு அல்ல என்றால் சோமராம தேரோவுக்கு மரண தண்டனை அளிக்க இடமில்லை. ஆனால் கொலைமுயற்சி குற்றத்திற்காக (2nd-degree murder/ manslaughter) ஆயுள் தண்டனை வரை அளிக்க முடியும். மரண தண்டனையல்ல. ஆனால் சோமராம தேரர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். இதனை ஒரு சட்டவிரோத - அரசியல் செயற்பாடாகவே கொள்ள முடியும்.
ஆணைக்குழு
நீதிமன்றம் தீர்ப்பு அளித்து தண்டனையும் நிறைவேற்றப்பட்ட பின்னர் பண்டாரநாயக்க கொலை சம்பந்தமான அரசியல் பின்னணி மற்றும் சதி சம்பந்தமாக ஆராய்வதற்கு மே 16 அன்று ஒரு அணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச விசாரணைக் கமிஷன் ஒன்று 1963 இல் நியமிக்கப்பட்டது. மூன்று நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளுடன் இலங்கைத் தலைமை நீதிபதியையும் கொண்ட சர்வதேச - நீதிவிசாரணை ஆணைக்குழு இது பற்றி - விசாரணை செய்தது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட இந்த விசாரணை ஆணைக்குழுவில் சர்வதேச அளவில் அறியப்பட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த அப்தெல் யூனிஸ் (Abdel Younis) கானா நாட்டைச் சேர்ந்த மில்ஸ் ஓடாய் (G.C. Mills-Odoi) ஆகியோருடன் இலங்கையைச் சேர்ந்த டீ.எஸ்.பெர்னாண்டோ ஆகிய மூவரும் பணியாற்றினார்கள். அப்தெல் யூனிஸ் ஆணைக்குழுவின் தலைவராக இயங்கினார்.

உள்நாட்டு நீதித்துறைக்குள்; விசாரணையொன்றுக்காக வெளாட்டு நீதிபதியோருவரை நியமித்த முன்னுதாரணம் அது. இப்போதெல்லாம் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது தவறு என்றெல்லாம் வாதிடுகிறார்கள் அல்லவா. இதோ அன்றே அப்படி நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு பண்டாரநாயக்க கொலை விசாரணை சிறந்த முன்னுதாரணம்.

இந்த ஆணைக்குழு அடுத்த ஆண்டே தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. குறிப்பாக இந்த படுகொலையில் விமலா விஜயவர்தனவின் பங்கு இருப்பதை அழுத்திக் கூறியது இந்த ஆணைக்குழு தான்.

சோமராம தேரரின் வாக்குமூலத்தை வைத்துத் தான் அமைச்சர் விமலா விஜேவர்தன கைது செய்யப்பட்டிருந்தார். விமலா விஜேவர்தனவுக்கும் இக்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று 1959 நவம்பர் 2 ஆம் திகதி உதவிப் பொலிஸ் மா அதிபர் சிட்னி டி சில்வா (அன்றைய நிதி அமைச்சர் ஸ்டான்லி டி சொய்சாவின் சகோதரர்) அறிவித்திருந்தார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தீர்ப்பு
இக்கொலை சம்பந்தமாக புத்தரக்கித்த தேரோ, சோமராம தேரோ ஆகிய பௌத்த பிக்குகள் உட்பட ஐந்து பேர் மீதான வழக்கு 22.02.1961 அன்று வழக்கு தொடங்கியது. இவ்வழக்கு மாதக் கணக்கில் தொடர் விசாரணை நடைபெற்றது. 52 நாட்கள் நடந்த இந்த வழக்கில் மொத்தம் 97 பேரிடம் நீதிமன்றத்தில் வாக்குமூலமும் குறுக்குவிசாரனையும் நடந்தது.

இறுதியில் 12.05.1961 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஐவரில் இருவர் அதாவது அனுர டி சில்வா, நிவ்டன் பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். புத்தரக்கித்த தேரர், ஜெயவர்த்தன, சோமராம தேரர் ஆகியோர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 1962ஆம் ஆண்டு யூன் 20 புத்தரக்கித்த தேரரையும், யூன் 21 அன்று எச்.பீ.ஜெயவர்த்தனவையும், யூன் 22 அன்று சோமராம தேரரையும் தூக்கிலிட தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. 1962 ஜனவரி 15ஆம் திகதி அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி புத்தரக்கித்த தேரோவுக்கும் ஜெயவர்த்தனவுக்கும் அளிக்கப்பட மரணதண்டனை கடூழியத்துடன் ஆயுள் கால சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. மீண்டும் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. அங்கும் மே 16ஆம் திகதி அந்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

சோமராம தேரர் (1915–1962)
இசோ ஹாமி, ரத்துகம ராலலாகே டைரிஸ் அப்புஹாமி (Talduwe Ratugama Rallage Deris Singho) ஆகியோருக்கு மகனாக 27.08.1915 அன்று பிறந்தவர் தல்துவே ரத்துகம ராலலாகே வேரிஸ் சிஞ்ஞோ. தனது 14வது வயதில் 20.01.1929 இல் அவர் காவியுடையணிந்து பௌத்தத் துறவியானார். அவரின் 21வது வயதில் (25.06.1936) இல் கண்டியில் பௌத்த தீட்சை பெற்று கண்டி மகாசங்கத்தின் உறுப்பினராக ஆனார்.

பொரல்லையிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் ஆயுர்வேத விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். 

புத்த ரக்கித்த தேரரின் சதியில் தானும் விழுந்ததாகத் தெரிவிக்கும் அவர் நாட்டுக்காகவு, இனத்துக்காகவும், மதத்துக்காகவும் இப்படுகொலையைப் புரிய தான் ஒத்துக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். பண்டா – செல்வா ஒப்பந்தம் குறித்து மிகவும் ஆத்திரப்பட்ட பிக்குவாகவே சோமராம தேரரை இனங்காட்டுகிறார்கள் பலர். ஆனால் நாட்டுத் தலைவர் ஒருவரைக் கொலை செய்யுமளவுக்கு அந்த ஆத்திரம் இருந்ததா என்பது தீராச் சந்தேகமாவே இன்றும் உள்ளது. மேலும் அந்த ஒப்பந்தம் அதே பிக்குமாரால் தோற்கடிப்பட்டிருக்கிறது. கிழத்தெறியச் செய்யப்பட்டிருக்கிறது.

சிறையில் இருக்கும் போது சோமராம தேரர் காவியுடையை முற்றாகத் துறந்தார். அவர் சாதாரண சிறைச்சாலை உடைக்கு மாறினாலும் வழக்கு விசாரணைகளின் போது அவர் காவியுடையை அணிந்து வந்திருக்க முடியும் ஆனால் அவர் வெள்ளை சாரமும், சட்டையும் அணிந்தபடி தான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

புத்தரக்கித்த தேரர் 1967ஆம் ஆண்டு இருதய நோய் காரணமாக தனது 46வது வயதில் வெலிக்கடை சிறையிலேயே மரணமானார். அப்போது அவர் ஏழரை வருடகால தண்டனையை அனுபவித்திருந்தார். எச்.பி.ஜெயவர்த்தன 17ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவித்த பின்னர் 04.08.1977 இல் விடுதலையானார்.

தல்துவே சோமராம தேரர் 22.06.1961 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒரு விண்ணப்பத்தை அனுப்பி அனுமதி கேட்டார். அதில் அவர் கிறிஸ்தவ  மதத்துக்கு மாற விரும்புவதாகவும் அது குறித்து வணக்கத்துக்குரிய மெத்தியு பீரிஸ் பாதிரியாருடன்  தொடர்புகொண்டு ஒழுங்கு செய்துதரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி யூலை 05 அன்று அதாவது அவர் தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் திருமுழுக்கு பெற்று அங்கிலிக்கன் தேவாலயத்தின் உறுப்பினராக ஆகி தனது “தல்துவே சோமராம தேரர்” என்கிற பெயரை மாற்றி “பீட்டர்” என்கிற பெயறை சூட்டிகொண்டு கிறிஸ்தவ மதத்தின் படி பாவமன்னிப்பையும் பெற்றுக்கொண்டார். 

பாவமன்னிப்புக்கு பௌத்தத்தில் இடமில்லை என்பதால் அவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி பாவமன்னிப்பு பெற்றார் அன்று இதற்கு விளக்கம் கூறப்பட்டது. 

சோமராம தேரரை கிறிஸ்துவராக ஆக்கிய பாதிரியார் மெத்தியு பீரிஸ் பிற்காலத்தில் தனது மனைவியையும், காதலியின் கணவனையும் சதிசெய்து கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை அளிக்கப்பட்டவர். பின்னர் அத்தண்டனை ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு அவரும் இதே சிறைச்சாலையில் பல்லாண்டுகள் கழித்தவர் என்பது ஒரு உபகதை. இந்தக் கதை கடந்த 2018இல் திரைப்படமாக வெளிவந்தது.

தல்துவ சோமராம தேரர் 06.07.1962 ஆம் திகதி அதிகாலை 08.30க்கு வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 48.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates