கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து இன்று ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் மொத்தம் 24 ஊடக அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் திணைக்களத்தால் மூன்று மொழிகளிலும் இவை வெளியிடப்படுவதாக கூறப்பட்டபோதும் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் சகல ஊடக அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ள போதும் தமிழில் அத்தனையும் வெளியிடப்படுவதில்லை. இது மிகப் பெரும் அநீதி.
இது வரை வெளியான ஊடக அறிக்கைகளில் 5 அறிக்கைகள் இது வரை தமிழில் இல்லை.ஊடக அறிக்கைகளின் இலக்கங்கள் MR/25, MR/23, MR/16, MR/09, MR/02 ஆகியனவே அந்த அறிக்கைகள். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் கூட தரவிறக்கும் இணைப்பில் தமிழ் மொழி அறிவித்தல்களுக்குப் பதிலாக சிங்களத்திலும், ஆங்கிலத்திலுமே அந்த ஐந்து அறிக்கைகளும் உள்ளன. இதில் நேற்று ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்மனுத் தாக்கல் செய்தவர்களின் பட்டியல் கூட தமிழில் மட்டும் கிடையாது.
நேற்று தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். அதில் இனப் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும் அடங்கும். ஆனால் தேர்தல் ஆணைக்குழுவே இது போன்ற மொழிப் பாரபட்சங்களை மீறி வருகிறது. இதை எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள், எவரும் முறையிட மாட்டார்கள், ஊடகங்கள் கூட கண்டுகொள்ளாது என்கிற அலாதி நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இவை.
தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவித்தல்கள், செய்திகள், ஆவணங்களில் உள்ள மொழிப் பாரபட்சங்கள் பலவற்றை அவதானிக்க முடிகிறது. அரசகரும மொழிகள் அமைச்சும் அதற்கென்று ஒரு தமிழ் அமைச்சரும் இருந்தும் கூட இது போன்ற மொழிப் பாரபட்சங்களை கண்காணித்து சரிசெய்யும் பொறிமுறை இல்லாதது நாட்டின் அவலம்.
நாட்டு மக்கள் தம்மை ஆள்பவர்களைத் தீர்மானிக்கின்ற தேர்தல்கள் பற்றி கூட பாரபட்சமன்றி விபரங்களை அறியும் உரிமை மறுக்கப்படுவது என்பது மிகப்பெரும் ஜனநாயகக் கோளாறு.
இவற்றைப் பற்றி எந்த தமிழ் ஊடகங்களும் உரிமைப் பிரச்சினையை எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து அறிக்கைகளும், அறிவித்தல்களும், செய்திகளும் தமிழிலும் கிடைப்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவும், அரசகரும மொழிகள் அமைச்சும், அரச நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...