Headlines News :
முகப்பு » » செக்கு மாடாகும் பெருந்தோட்டத் தொழிற்துறை - சதீஸ் செல்வராஜ்

செக்கு மாடாகும் பெருந்தோட்டத் தொழிற்துறை - சதீஸ் செல்வராஜ்

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலில் உருவாக்கப்பட்டு, உலக அரங்கில் ஆச்சரியக் குறியாய் நிமிர்ந்து நின்ற இலங்கைப் பெருந்தோட்டங்கள்; இன்று வலு விழந்து வளைந்து கூனிக்குறுகி கேள்விக் குறியாய் நிற்கின்றன. தேயிலைப் பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கட்டம் படிப்படியாக வளர்ந்து பிரமாண்ட வளர்ச்சியைக் காட்டி, பெருந்தோட்ட கம்பனி பண முதலைகளுக்கு இலாபத்தை அள்ளிக் கொட்டுவதாகவும், தோட்டச் சிறையில் அடைக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு வறுமையையும் ஏழ்மையையும் பரிசாக வழங்குவதாகவும் அமைந்திருந்தது.

1871ம் ஆண்டில் இருந்த 995 பெருந்தோட்டங்கள் 1901 இல் 1857 ஆகின. 1921ம் ஆண்டாகியபோது 2367 ஆக உயர்ந்தன. 10 வருடங்களின் பின்னர் அவ்வெண்ணிக்கை 3288 ஆக அதிகரித்துப் போயின. பெருந்தோட்டம். என்றாலே, பணப் பயிர்களில் இருந்து செல்வத்தை அறுவடை செய்யக்கூடிய நிலை உருவாகியிருந்தது. வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அறுவடை செய்தவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் ஆயினும், அறுவடையின் பலாபலன்கள் அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இன்று வரையிலும் அந்தக் கனி கைக்குக் கிட்டாமலேயே இருக்கின்றது.

வர்க்க எழுச்சிகளும், உரிமைப் போராட்டங்களும் கால ஓட்டத் திசையினை தீர்மானித்திட, அதில் அகப்பட்ட பெருந்தோட்டங்கள் ஒரு கட்டத்தில் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால், அன்றைய ஆட்சியாளர்களால் தேயிலைத் தேசத்து மக்கள் நாடற்றவர்களாகினர். குடியுரிமை இழந்து போயினர். இரத்தச் சொந்தங்களைப் பிரிந்து வாடினர்.

இலங்கை அரசியலிலும், பொருளாதார கொள்கையிலும் பிரிக்க முடியாத இடத்தைப் பிடித்திருந்த பெருந்தோட்டங்கள் 1992ம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச இருந்தசமயம், தோட்டத் தொழிற்சங்கங்களினதும், மலையக அரசியற் தலைமைகளினதும் பூரண அனுசரணையுடனும், ஒத்தாசையுடனும் 22 பல்தேசியக் கம்பனிகளுக்கு 55 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன. உண்மையில் அதை ''தாரைவார்த்தனர்" என்று கூறுவதே பொருத்தமானதாகும். குத்தகைப் பணமாக 609.5 மில்லியன் ரூபாவை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டது. பெற்றுக் கொண்ட இப்பணத்தில் அன்று தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதிய எந்தவொரு வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை.

அரச தோட்டங்கள் தனியார் தோட்டங்களாகின. அதே நேரம், பல்தேசிய கம்பனிகள் தங்களது சொந்தப் பெயர்களை மறைத்து போலியாக உள்ள பெயர்களை வைத்துக் கொண்டன. குறிப்பிட்டுச் சொன்னால், மஸ்கெலியா பிளான்டேஷனானது, போபர்ஸ் என்ட் வர்க்ஸ் கம்பனிக்கு உரித்தானது. மல்வத்த வெளிபிளான்டேஷனானது, மெஸ்கவ் கம்பனிக்கு உரித்தானது. இந்த இரு கம்பனிகளும் அமெரிக்காவிற்கு சொந்தமானது. அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் துணையோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏகாதிபத்திய நிறுவன வர்க்கம் மலையகம் வரை ஊடுருவியிருந்தது. அன்றைய மலையக இடது சாரிகளின் எழுச்சியையூம் நசுக்கிக் கொண்டிருந்தது. இப்பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டங்களைக் கவனிக்காது கைவிட்டனர். பெருந்தோட்டங்கள் தந்த இலாபத்தினை பிறநாடுகளில் முதலீடு செய்து வேறு வகையிலும் இலாபத்தைத் தேடினர். இன்று வரையிலும் இந்த நிலைமையில் மாற்றமில்லை.

தற்போது பல்தேசிய கம்பனி தனது கொழும்புத் தலைமையகத்தின் காரியாலயத்திற்கு 100 மில்லியன் ரூபாயை ஒதுக்குகிறது. கிரிக்கட் விளம்பரத்திற்காக மாத்திரம் வருடமொன்றிற்கு 25 மில்லியன் ரூபாயை ஒதுக்குகிறது. இங்கு தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்ன? அதுதான் நான் எழுத்துச் சமரின் ஆரம்பத்திலேயே கேள்விக்குறியில் தொடங்கினேன்.

பல்தேசியக் கம்பனிகள் உடன்பட்டிருந்த உடன்படிக்கைகளை தற்போது மறந்துள்ளன. உதாரணமாக, ''கட்டாயமாவே 3 சதவீதம் மீள்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும்." என்ற நிபந்தனை இருக்கின்ற பொழுது, ஆரம்பத்தில் மாத்திரம் (1992 - 1994) 0.3 சதவீதம் மீள்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டது.

அது மட்டுமல்லாது, பெருந்தோட்டங்களில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், நீரை சேமிக்கும் வாகை மரங்கள், நம் நாட்டு தேசிய மரங்களை அழித்து விற்பனை செய்ததோடு, வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட தேப்பன்டைன், கம் ட்ரீஸ் போன்ற வர்த்தக மரங்களை நாட்டியதன் மூலம் பெருந்தோட்டம் பாலை நிலமாகிக் கொண்டிருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை (1999 இற்கு பின்னர்) நிபந்தனைகள் அடிப்படையில், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற் சங்கங்களுக்கிடையில் கூட்டமைத்து நாட் கூலி சம்பள முறையைக் கொண்டு வந்து, தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமையையும் பறித்தெடுத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை அதிகரிக்க இரு வருடத்திற்கு ஒருமுறை அவர்களே ஒன்று கூடி அவர்களே முடிவெடுத்தும் கொள்கின்றனர். இதுதான் உறுதியும் அறுதியும் இறுதி முடிவாகிறது. அண்மையில் கூட்டு உடன்படிக்கை ஒன்றுகூடலில், பெருந்தோட்டம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி இலங்கை அரசாங்கம், மலையக தலைமைகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றின் அரவணைப்புடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்சம்பளத்தை கம்பனி மட்டுப்படுத்தியது.

2006 இற்கு பின்னர், இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாரிய நட்டம் ஏற்பட்டபோது, தேயிலைத் தொழிற்றுறையும், இலங்கை அரசும் அதனை மீளக் கட்டி யெழுப்ப வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாததன் காரணத்தால் ''சிலோன் டீ'' யால் உலகச் சந்தையில் பிரகாசிக்க முடியாமல் போனது.

1999ம் ஆண்டு, கூட்டு உடன்படிக்iயின் பிரகாரம் ஒரு தோட்டத் தொழிலாளியின் நாட்சம்பளம் 101 ரூபாயாக காணப்பட்டது. தற்போது அதாவது, 2019 இல் நாட் சம்பளம் 700 ரூபாயாகக் காணப்படுகிறது. ஆக, 20 வருடங்களில் 599 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 ரூபாய் மாத்திரமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரி, வாழ்க்கைச் செலவு மற்றும் இதர செலவு என அனைத்தும் சம்பள உயர்வை விடபல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 1 சதம் சம்பள உயர்வாக அதிகரிக்கப்பட்டதே இதுவரையில் மலையகத் தலைமைகளினதும், தொழிற் சங்கங்களினதும் பெரும் சாதனையாக இருக்கின்றது. இதற்கு வழிசமைத்துச் சென்றவர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ரணசிங்க பிரேமதாச ஆவார்.

இன்று பெருந்தோட்டக் கம்பனிகளானது தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகிறது. அத்தோட்டங்களை அரசாங்கத்திடம் மீளவழங்க கம்பனிகள் தயாரில்லை. அதற்கு பதிலாக ஆணைக்கொய்யா, கறுவா, கோப்பி, இறப்பர், செம்பனை, பழப்பயிர்கள், மரக்கறிகள், பூஞ்செடிகள் போன்ற மாற்றுப் பயிர்களை பயிரிட தயாராகி வருகின்றனர். ''கோப்பி அடிமைக்காலம் முடிந்தது! தேயிலை அடிமைக் காலம் முடியப் போகிறது! மீளவும் இந்தக் கொத்தடிமைக் காலத்துக்கே போகப் போகிறோமா? அல்லது எதிர்காலத்தை திருத்தி எழுதப் போகிறோமா?" என்ற கேள்வியை பெருந்தோட்டமக்களிடமே விட்டு விடுகிறேன்.

மாற்று பயிர்ச் செய்கையோடு இணைந்த மற்றொருமாற்றுத் திட்டத்தையும் பல்தேசியக் கம்பனிகள் ஆரம்பிக்க 'ஸ்கெட்ச்' போட்டுள்ளது. அதாவது, மலை
நாட்டு நீர் வளங்களை சுவீகரித்து இலாபம் பார்த்தல் ஆகும்.

இது இவ்வாறிருக்க, இலங்கைப் பெருந்தோட்டத்தை நிர்வகிக்கும் முன்னணி நிறுவனமான அக்கரைப் பத்தனை மற்றும் கொட்டகலை பிளான்டேசன்கள் (நிஜப் பெயர் லென்கெம் நிறுவனம்) நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு, தோட்டங்களை இனி பராமரிக்க முடியாது என்ற நொண்டி சாட்டை முன்வைக்கிறது. அதன் எதிர் விளைவாக, அக்கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை குறிப்பிட்ட நேரத்தில் வைப்பில் இடாமல் இருக்கிறது. சம்பள அதிகரிப்பின் 40 சதவீதத்தை வழங்காமல் நட்டத்தைக் காட்டுகிறது.

ஆனால், அக்கம்பனிகள் காட்டும் நட்டம் உள்ளூர் பெருந்தோட்டங்களில் ஏற்பட்ட நட்டமல்ல! இலங்கைப் பெருந்தோட்டத்தில் பெற்ற இலாபத்தில் லென்கம் கம்பனி வியட்நாமில் பாரிய செம்பனை (Palm oil) திட்டத்தை ஆரம்பித்தது. அதில் லென்கம் கம்பனி பாரிய நட்டத்தையும், பின்னடைவையும் அடைந்தது. இந்த நட்டத்தையே அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகலை பிளான்டேசன்கள் தோட்டத் தொழிலாளர்களின் தலையில் போட்டுள்ளது.

இன்று அந்த தோட்டத்தின் மக்கள் நடுத் தெருவுக்குவரும் நிலை ஏற்பட்டுள்ளது. E P.F , E .T .F கிடைக்காத நிலைமையும் காணப்படுகிறது. ரணசிங்க பிரேமதாச முதல் அதன் பின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி - ரணில் அரசாங்கம் அனைவரும் பெருந்தோட்டங்களின் மக்களுக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அவர்களைக் கைவிட்டனர்.

ஆக, எதிர்வரும் காலங்களில் அனைத்து பெருந்தோட்டங்களுக்கும் இந்த நிலைமை தோன்றலாம். தோட்டத் தொழிலாளர்கள் நடுத் தெருவில் நிறுத்தப்படலாம். இதற்கெதிராக குரலெழுப்பவேண்டிய கட்டாயம் மலையக புத்திஜீவிகள், கலைஞர்கள், இளைஞர் யுவதிகள், சமூக நலன் விரும்பிகள் உட்பட எம் அனைவரிடமும் உண்டு. இதுவரை பயணித்த அதிகார வர்க்கத்தின் ஆட்சிப் பாதைக்கு பதிலாக மாற்று வழியை தேர்ந்தெடுக்க வேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் உண்டு.

இவ்விடத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து சிந்தித்து செயற்படு வார்களாயின், மலையகம் நமதே! மலையகம் உழைக்கும் மக்களினதே! நம் அடுத்தடுத்த நகர்வுசரியாக அமைந்தால் முழு இலங்கை தேசமும் பாட்டாளிகளினதே!

நன்றி - தேசம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates