இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வர்த்தக பெருந்தோட்ட பயிர்களில் இறப்பரும் அடங்குகின்றது. இலங்கையில் இறப்பர் 1876 ஆம் ஆண்டு முதன் முதலில் பிரித்தானியரால் களுத்துறை மாவட்டத்தில் பயிரிடப்பட்டது. தேயிலைப்பயிர்ச்செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் கூடுதலாக பெண் தொழிலாளர்கள் இணைந்திருப்பது போன்று இறப்பர் பால் வெட்டும் பணிகளிலும் பெண்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் இறப்பர் பால் வெட்டும் பெண்களின் வாழ்க்கைக் குறித்து அதிகமாக பேசப்படுவதில்லை. அந்த வகையில் மொனராகலை மாவட்டத்தின் மரகலை குமாரவத்தை பிரதேச இறப்பர் தோட்டத்தொழிலாளி ஒருவர் தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
அதிகாலை 4 மணிக்கு பணி
எனது பெயர் குகனேஸ்வரி. நான் பணி புரியும் இறப்பர் தோட்டம் அரசாங்கத்தின் கீழ்“ஜனவச” எனும் நிறுவனத்தால் கொண்டு நடத்தப்படுவதாகும். நான் தினமும் அதிகாலை 4 மணியளவில் எழுந்து ஒரு கோப்பை தேநீர் அருந்தி விட்டு டோர்ச் லைட்டை எடுத்துக்கொண்டு இறப்பர் பால் வெட்டச்சென்று விடுவேன். பின்னர் 2 மணியளவில் பால் ஏற்றிச்செல்லும் வாகனத்தில் சேகரித்த இறப்பர் பாலை ஊற்றி விட்டு வரவை பதிந்த பின்னரே வீட்டுக்குச் செல்ல முடியும். உணவினை சமைத்து பரிமாறியதன் பின் இரவு துயிலும் தருணத்தில் கடன் தொல்லையையும் குடும்ப வறுமையையும் நினைத்து தூக்கம் வர விழிகள் மறுத்தாலும் இந்நிலையைப் போக்க “நாளைக்கும் வேலைக்குப்போக வேண்டும்” எனும் மன உறுதியோடு துயில் கொள்ளும் சாதாரண தோட்டத்தொழிலாளி தான் நானும்.
எனது குடும்பத்தில் 8 உறுப்பினர்கள். எனது கணவரும் ஒரு தோட்டத்தொழிலாளியே. அத்தோடு நோயாளியும் கூட. எனக்கு 6 பிள்ளைகள். இவர்களுள் இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் திருமணம் முடித்து தனியாக வாழ்கிறார்கள். ஏனையவர்களில் ஒரு பெண் பிள்ளை படிப்பை முடித்து வீட்டில் உள்ளார். மற்ற இரு ஆண்பிள்ளைகளில் ஒருவர் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். மற்றவர் 9 ஆம் தரத்தில் படிக்கிறார். எமது வீடு மிகச் சிறியது. மழை வெள்ளம் நிரம்பி வழிகின்ற கூரையின் கீழ் வாழ்ந்து வருகிறோம். அரசாங்கத்தின் பார்வையில் எனது குடிசை வீடு தென்படுமா?எனும் ஏக்கத்தில் குடும்ப சுமையை சுமந்து வருகிறேன்.
ஆபத்துகள் நிறைந்த பணி
அதிகாலை தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர் ‘‘இறப்பர் மரத்தை உளிகொண்டு வெட்டும் போது கைகளில் எவ்வித காயமும் ஏற்படாமல் இக்காட்டுப்பகுதியில் விஷஜீவராசிகளின் தீண்டலுக்குட் படாமல் இன்றைய தினம் முழுநேர வேலைப்பதிவினை பெற்றுக்கொள்ளும்படி அருள் புரிய வேண்டும்’’ என இறைவனை பிரார்த்தித்துக்கொள்வேன். இறப்பர் தோட்டமானது மேடு பள்ளமாக காணப்படும். ஒருவருக்கு தலா 200 மரங்கள் வீதம் வழங்கப்படுகின்றன. இம்மரங்கள் காட்டுப்பகுதியிலேயே அதிகமாக காணப்படும். அதிகாலையில் டோர்ச் லைட்டின் உதவியுடன் அக்கரடுமுரடான கற்பாறைகளின் நடுவே காணப்படும் இறப்பர் மரங்களைத் தேடி பால் வெட்ட ஆரம்பிப்போம். சில மரங்கள் கைக்கு எட்டிய தூரத்திலும் பல மரங்கள் கைக்கு எட்டாத தூரத்திலும் காணப்படும். அவ்வேளைகளில் நீண்ட பிடிகளுடன் கூடிய உளிகளை பயன்படுத்தி பால் வெட்டப்படும்.
நண்பகல் 12.00 மணியளவில் வெட்டிய மரங்களின் பால்களை சேகரித்துக் கொள்வோம். இதன் போது ஒரு நாளைக்கு 200 மரங்களில் பால் வெட்ட சேகரிக்கவென 400 தடவைகள் நடந்து திரிகிற நிலைமைகளும் உண்டு.
விதிமுறைகள்
இறப்பர் தோட்டங்களின் பாதுகாப்பு அடிப்படையிலான பணிகள் குறித்து விதிமுறைகள் காணப்படுகின்றன. இறப்பர் மரங்களில் காயங்கள் ஏற்படக்கூடாது. குறித்த அடி நீளத்திற்குள் காயம் ஏற்படாது பாதுகாக்க வேண்டும் எனும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பழைய மலை இறப்பர் தோட்டங்களில் இறப்பர் பால் வடியும் ‘பீலி’(தகர வடிவிலான குழாய்) மற்றும் சிரட்டை அல்லது பிளாஸ்ரிக் கோப்பை என்பன தூய்மையாக பேணப்பட வேண்டும். இறப்பர் பாலுடன் நீர் கலக்கக்கூடாது போன்ற விதிமுறைகளும் காணப்படுகின்றன. அத்தோடு, எமது குடும்பத்தில் யாராவது இறப்பர் மரங்களுக்கு கல் எறிந்து காயப்படுத்தினாலோ அல்லது விறகு வெட்டினாலோ சில தினங்கள் வேலை நிறுத்தப்படும்.
ஊதியம் எவ்வளவு ?
ஒரு நாளைக்கு 418 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இறப்பர் தொழிலாளி ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய பாலின் அடிப்படையிலும் வேதனம் வழங்கப்படுகிறது.
ஒருவர் 20 லீற்றர் அல்லது அதற்கு மேலே எடுக்க வேண்டும். குறைவாக எடுப்போர் எச்சரிக்கப்படுவர். அத்தோடு அதிகமாக பால் எடுப்போருக்கு சம்பளம் கூடுதலாக வழங்கப்படும் எனும் கருத்து கருத்தளவில் மாத்திரமே இருந்து வருகிறது.
18 நாட்களுக்கு மேல் வேலை நாட்கள் அதிகரிக்குமாக இருந்தால் மேலதிக சம்பள கொடுப்பனவு எனும் அடிப்படையில் 700ரூபா கொடுக்கப்படும் என கூறப்படும் பொழுதிலும் அவை நடைமுறையில் இல்லை. எனக்கு கிடைக்கும் சம்பளம் மாதத்திற்கு 15 ஆயிரமாக இருக்கும். அதிலும் தீபாவளி , கோயில் நிர்மாணப்பணி, மரண சமுர்த்தி திட்டத்துக்கு என சம்பளம் கழிவு செய்யப்பட்டு இறுதியில் எனது கையில் கிடைக்கும் சம்பளத்தொகை 12 அல்லது 13 ஆயிரமாகவே இருக்கும். நாட்டிலே விலைவாசிகள் அதிகரித்து வருகின்ற இக்காலத்தில் நான் எடுக்கும் சம்பளத்தொகையுடன் எனது குடும்பத்தை கொண்டு செல்வதென்பது சிரமமானதாகும்.
சில சமயங்களில் கடன் வாங்கியே குடும்பச் செலவை ஈடுசெய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அல்லது இறப்பர் தொழில் முடிய பகுதி நேரத்தில் வேறு வேலைக்குச் சென்று வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இல்லாத பட்சத்தில் வீட்டிலிருக்கும் ஓரிரு தங்க நகைகளை அடகு வைத்து காசாக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அண்மைக்காலத்தில் அரசாங்கத்தால் சம்பளம் வழங்க தாமதிக்கப்பட்டது அதன் போது ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வறுமையின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தற்போது இறப்பர் பால் விலை அதிகரிப்பினால் சம்பளம் ஒழுங்குமுறையாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இதனூடாக கிடைக்கிற சம்பளம் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இல்லை
பெண்களே அதிகம்
எங்களது இறப்பர் தோட்டத்தை பொறுத்த வரையில் பெண் தொழிலாளர்களே அதிகம். அந்த வகையில் பெண்களுக்கென விசேட சலுகைகள் இருப்பதாக சொல்ல முடியாது. இருந்தாலும் கர்ப்பிணி பெண்களுக்கென சில சலுகைகள் உள்ளன. ஆரம்ப காலத்தில் பெண்கள் தமது பிரசவ காலம் வரை தொழில் புரிய வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது கர்ப்பிணித்தாய்மார் 07 மாதங்களிலேயே வைத்திய அறிக்கையினை கையளித்து விடுமுறை எடுத்துக்கொள்ளக் கூடிய சலுகைகள் காணப்படுகின்றன. அத்தோடு அவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகளும் வழங்கப்படுகிறது. ஏனைய பெண்களுக்கான சலுகை எனும் போது வேலைத்தளத்தில் காயம் ஏற்படும் பட்சத்தில் விடுமுறையில் வேலைநாட்கள் பதியப்படும். அவ்வாறு குறித்த தொழிலாளிக்கு நோய் ஏற்பட்டால் வைத்திய அறிக்கையினை கையளித்து விடுமுறை எடுத்துக்கொள்ளக் கூடிய சலுகைகள் காணப்படுகின்றன.
எங்களுக்கு மாதம் முழுவதும் வேலை தான். (சனி, ஞாயிறு உட்பட 31 நாட்களும் ) விடுமுறை தினம் எனும் போது மழைக்காலங்களில் இறப்பர் பால் எடுக்க முடியாது. அதனால் தொழிலாளர்களுக்கும் - முதலாளிகளுக்கும் திண்டாட்டம் தான். எனினும் பண்டிகைகள் திருவிழாக் காலங்களில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படுகிறது.
இறப்பர் தோட்டத்தின் சிரமங்கள்
ஆரம்ப காலத்தில் தொழிலாளர்கள் யாவரும் (கர்ப்பிணிப் பெண்கள் உட்பட) 03 மைல் தூரத்திற்கு நடந்து சென்று பால் வாளியை சுமந்து கொண்டு தொழிற்சாலைக்குச் சென்று இறப்பர் பாலினை ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தோடு 350 ரூபா கொடுத்து ஆட்டோவில் செல்லும் நிலையும் இருந்தது.தற்போது பால் ஊற்றும் வாகனம் எமது தோட்டத்திற்கே வந்து பாலினை சேகரிப்பதால் இந்நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. இருப்பினும் என்னை பொறுத்த வரையில் வீட்டிலிருந்து 02 மைல் தூரத்திற்கு இறப்பர் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலையிருப்பதால் போக்குவரத்து செலவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. மேலும் வேலை செய்யும் தளம் கரடுமுரடான கல்லும் முள்ளும் நிறைந்த இடமாகும். இவ்வாறான காட்டுப்பகுதிக்குள் தொழில் புரிய வேண்டியுள்ளதனால் விஷ ஜந்துக்களின் தீண்டல்களும் இருக்கவே செய்கின்றன.
இறப்பர் தொழிற்துறையின் எதிர்காலம்
எதிர்காலத்தில் இறப்பர் தொழிலின் நிலையானது மேலும் வளர்ந்து செல்லும் என நம்புகிறேன். ஏனெனில் மலையகத்தை பொறுத்த வரையில் தற்போது பல இறப்பர் பயிரிடல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அறிகிறோம். அத்தோடு வளர்ந்து வருகின்ற இந்நவீன உலகில் இறப்பர் பயிர்ச்செய்கைக்கான புதிய நெறிமுறைகளினூடாக இயந்திரமயப்படுத்தப்பட்டு அதீத வளர்ச்சியுறும் என நினைக்கிறேன். ஆனால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் . “நாங்கள் பட்ட கஷ்டம் எங்கள் பிள்ளைகள் படக்கூடாது”அவர்கள் படித்து மத்திய தர வர்க்கமாக சமூகத்தில் வலம் வர வேண்டும். அதே வேளை வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் நவீனத்தை நோக்கி பயணிக்கின்ற வேளைகளில் இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே உள்ளன. எதிர்காலத்தில் உளி பிடிக்க தெரியாத சந்ததி உருவாகும் நிலையே காணப்படுகிறது. இளைய தலைமுறையினரை நோக்கி நான் சொல்ல விரும்புவதெல்லாம் -நீங்கள் கையில் எடுத்த பேனா மூலம் எங்களால் எழுத முடியாது நாங்கள் எடுத்த உளியை கொண்டு உங்களால் வெட்ட முடியாது. அவ்வளவுதான்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...